Advertisement

ஆள வந்தாள் -16

அத்தியாயம் -16(1)

சேரன் வீடு வந்து சேர்வதற்குள் ‘காளியப்பன் கடையில் வைத்து வனராஜனோடு சேரனுக்கு தகராறு’ எனும் செய்தி கந்தசாமியை வந்தடைந்து விட்டது.

மதிய உணவு முடித்து விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர் சின்ன மகனை அழைத்து சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த மதுரா கலவரமடைந்து விட்டாள்.

இதற்கும் மருமகள்தான் காரணம் என குறை பாட ஆரம்பித்து விட்டார் கனகா.

“அட ஏம்மா, தலையும் புரியாம காலும் புரியாம அண்ணிய எதுக்கு வையுற? அவ்வோளும் நம்மள மாதிரிதான வீட்டுல இருக்காவோ? அப்புறம் அவ்வோ எப்படி காரணம் ஆவாவோ?” எனக் கேட்டான் சரவணன்.

“இவ வந்த அன்னிலேருந்து ஒரு நா ஒரு பொழுது நிம்மதியா கழிஞ்சிருக்கா? அப்ப இவளும் இவ வந்த ராசியும்தான காரணம்?” எனக் கேட்டார் கனகா.

சரவணன் சலித்துக் கொள்ள, “இந்தாடி வாய மூடிக்கிட்டு உள்ளுக்கு போ. காது அவியுது” என சத்தம் போட்ட கந்தசாமி, “அவன் எங்குட்டு இருக்கான்னு கேளுடா” என மகனிடம் கூறினார்.

சரவணன் அழைப்பதற்குள் சேரனின் பைக் வாசலில் வந்து நின்றது. கோவமாக உள்ளே வந்தவனிடம், என்ன என விசாரித்தார் கந்தசாமி.

அனைவரையும் விழிகளால் வட்டமிட்டு பார்த்தவனின் பார்வை மதுராவின் மீது நிலை கொண்டது. கணவனின் கூரிய பார்வையை சந்திக்க இயலாமல் அவளது கண்கள் அலைப்புற்று இருந்தன.

“கேட்டா ஏதும் சொல்றியாடா? உன் முசுட்டு கோவத்தை மத்திசம் பண்ணிட்டு இருக்கிறது ஒன்னுதான் எனக்கு வேலைன்னு நினைச்சுபுட்டீன்ன? வாய தொறடா” சத்தமிட்டார் கந்தசாமி.

என்னவென சொல்வான்? என் மனைவி பிறந்த வீட்டில் சீர் கேட்டாள், அவளின் அண்ணன் என்னை பார்த்து ஆம்பளையா நீ என சொல்லாமல் சொல்லி விட்டான் என்றா?

 எதனால் வனராஜனோடு பிரச்சனை என சொன்னால் இப்போது மதுராவை தவறாக பார்ப்பார்களே, ஆகவே, “அவனுக்கென்னப்பா வேலை, எப்பவும் போல பேசினான், என்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டான்” என்றான் சேரன்.

“போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்திட்ட, அறிவில்லடா உனக்கு?” என்றார் கந்தசாமி.

தாடைகள் இறுக பார்வையை தழைத்துக் கொண்டு நின்றவன், “இனிமே பிரச்சனை வராது” என்றான்.

“அடுத்த வாரம் உன் தம்பி நிச்சயம். உனக்கு எப்படா பொறுப்பு வந்து தொலையும்? உன் கூட பொறந்தவன்தானே இவன்? இது நாள் வரைக்கும் ஏதாவது வம்பு தும்புன்னு போயிருக்கானான்ன?” எனக் கேட்டார் கந்தசாமி.

அப்பாவை சுள் என ஒரு பார்வை பார்த்தவன் விருட் என அறைக்கு சென்று விட்டான்.

“என்னப்பா நீங்க?” அப்பாவிடம் கண்டனமாக கேட்டான் சரவணன்.

“பொறவு என்னடா? கல்யாணம் ஆயிட்டா குடும்பஸ்தனா பொறுப்பா இருக்க வேணாம்? இன்னும் அடிதடி பிரச்சனைன்னு… அடுத்த முறை எலெக்ஷன்ல நின்னா ரவுடி பயன்னு ஒரு பய ஓட்டு போட மாட்டான். தும்பத்த கண்டா இவன்ல்லடா ஒதுங்கி போகணும்?” எரிச்சலாக சொன்னவர் மீண்டும் அறைக்கு சென்று படுத்து விட்டார்.

 “மதுரா…” என கடினமான குரலில் அழைத்தான் சேரன்.

அவனது கோவத்தை எதிர்கொள்ள பயந்த மதுரா அங்கேயே நிற்க, “அண்ணன் கூப்பிடுது பாருங்க அண்ணி, போங்க” என்றான் சரவணன்.

இன்னொரு முறையும் சேரன் அழைக்க, தவிர்க்க முடியாமல் தயங்கி தயங்கி அறைக்கு சென்றாள்.

அவளை கடுங்கோவத்தோடு பார்த்துக் கொண்டே கதவை அடைத்தவன், “நல்லா முச்சந்தியில வச்சு மூக்கறுத்துப்புட்டன்ன? சந்தோஷமாடி இப்போ?” என கடினமான குரலில் கேட்டான்.

என்ன நடந்தது என சரியாக தெரியா விட்டாலும் இதை வைத்து அண்ணன் கணவனை ஏதோ சொல்லி அவமான படுத்தி விட்டான் என்பதாக புரிந்து கொண்டவள், “சாரிங்க, நான் இப்படி ஆகும்னு நினைக்கல, அண்ணன் என்ன சொல்லுச்சு?” எனக் கேட்டாள்.

“அவன் சொன்னது இருக்கட்டும், மொத உன்ன யாருடி சீரு கேட்க சொன்னது? அத எதிர்பார்த்துதான் உன்னை கட்டிக்கிட்டேனா?” என சீறினான்.

“உங்கள தப்பா எல்லாம் சொல்லலையேங்கே நான். சீர் பத்தியும் எதுவும் பேசல. ரெண்டு குடும்பத்தையும் ராசி பண்ண சொல்லித்தான் சித்திகிட்ட சொன்னேன்”

“ராசியாவனும்… ஹ்ம்ம்…” என்றவன் வேஷ்டியை மடித்துக் கட்டி அவனது இடது காலில் இருந்த வெட்டுக் காயத்தின் வடுவை காட்டினான். திருமணம் ஆனதிலிருந்து அடிக்கடி அவள் பார்க்க நேரிடும் வடுதான் என்ற போதும் இப்போதும் அவளின் மனம் பதறியது.

அவளின் அருகே நெருங்கியவன் அவனது வலது புருவத்தில் இருக்கும் தழும்பை சுட்டிக் காண்பித்தான்.

அவள் பேச்சற்று நிற்க, அவனது கழுத்தில் வெட்டு விழுவது போல செய்கையில் காட்டியவன், “இங்க வுழுந்திருக்க வேண்டியது வெட்டு. என்னை கொல்ல பார்த்தவன் கூட ராசியாவனுமா உனக்கு?” என ஆத்திரமாக கேட்டான்.

“எனக்கும் எதுவும் மறக்கலங்க” என்றவளுக்கு மூன்று வருடங்களுக்கு முந்தைய கலவரத்தில் அண்ணனின் செயலை நியாயப்படுத்த முடியவில்லை. வனராஜன் திட்டமிட்டு நடக்காதவை அவை. சேரனை விட அதிக முன் கோபியான அவன் அந்த நேர கோவத்தில் பெரியப்பாவின் தூண்டுதலில் வன்முறையை கையில் எடுத்து விட்டான்.

“நடந்தத பத்தி பேசல. இப்பவும் அண்ணன் அப்படி உங்களை எதுவும் செய்ய பார்க்கும்னு நினைக்குறீங்களா? மாறி நம்மள ஏத்துக்கும்னு எனக்கு தோணிச்சு, சமாதானமா போவலாம்னு நினைச்சேன்” என்றாள்.

 “அதுக்கென்னடி அர்த்தம் ஆவுது? நீ இங்குட்டு கொடுமை அனுபவிக்கிறேன்னு வேற சொல்லி வச்சிருக்க”

“உங்கம்மா எப்படில்லாம் பேசுறாங்க, எனக்கு தெரியும் மாமா கூட நீங்க ஏதோ பணம் கேட்டு தர மாட்டேன்னு சொல்லியிருக்காரு” என மதுரா சொல்ல, முகம் சுருக்கி பார்த்தான்.

“செல்வி சொல்லிச்சு” என்றாள்.

செழியன்தான் செல்விக்கு சொல்லியிருப்பான் என்பதில் அவன் மீதும் கோவம் வர அப்படியே நின்றிருந்தான்.

“ப்ச்… நீங்க கோவமா இருக்கீங்க… சொல்ல வர்றத சரியா புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க. சாப்பிடுங்க, அப்புறமா பேசலாம்”

“மூணு வருஷம் முன்னாடியே உன்னை கூப்பிட என் அப்பா வந்தாருதான்ன? என்னடி பண்ணின நீ? அப்பவும் எம்மேல நம்பிக்கை இல்லம்தான் தாலிய கழட்டி கொடுத்த. ரோஷம் மானத்த உதித்துபுட்டு திரும்ப உன் காலடில வந்துதான் விழுந்தேன். காத்திருந்து கட்டிகிட்டவன் இங்குட்டு நடக்கிறதையும் சரி பண்ணுவேன்னு நம்பிக்கை இல்லாம போயிட்டுன்னடி உனக்கு?”

“உங்கள நம்பாம யாரை நம்ப போறேன்? என்னாலதான எனக்காகதான கஷ்ட படுறீங்க. அம்மா வீட்ல உறவு சரியானா உங்களுக்கு உதவியா இருக்குமேன்னும்தான்…” என்றவள் ‘யாருக்கு யாரின் உதவி வேண்டும்?’ என்ற அவனின் பார்வையில் வாயடைத்து போனாள்.

“உன்னை நல்லா வச்சுக்கணும்னு அந்த பாடு படுறேன் டி நான். சொந்த வீட்டுல அந்நியப் பட்டு நிக்கும் போது எனக்குன்னு என் பொண்டாட்டி இருக்கான்னு உன்னை நினைச்சு தெம்பா ஓடினேன். எனக்கு நல்லா கைமாறு செஞ்சிட்ட டி”

“என்னென்னவோ பேசாதீங்க. நான் ஒன்னு நினைச்சு செஞ்சா அது வேற மாதிரி என் தலையில விடிஞ்சிட்டு”

“உன் சித்திகிட்ட எது கேக்கறதுக்கு முன்னாடியும் என்கிட்ட ரோசனை கேக்கணும்னு தோணலைன்ன உனக்கு? கூடை நெருப்ப அள்ளி என் தலையில கொட்டிட்டியே!”

“யாரு! நான் நெருப்பள்ளி கொட்டினேனா? பொறுமையா இல்லாம ஓடி வந்தவன்னு பேரு வாங்கி கொடுத்து எனக்கு பொறந்த வீடே இல்லாம செஞ்சு இங்கேயும் மரியாதை இல்லாம செஞ்சது நீங்கதான்” என்றாள்.

“என்னடி பெரிய பொறந்த வூடு? இதான் உன் வூடுன்னு இன்னும் பதியலைன்ன உனக்கு?”

“எப்படிங்க பதியும்? நீங்க வெளி கிளம்பினா சுதந்திரமா நடமாட முடியலை இங்க. சமைக்க போனா அளந்து அளந்து தர்றாங்க உங்கம்மா. என்ன நடந்தாலும் ஈஸியா என் பக்கம் விரல் நீட்டி நான்தான் காரணம்னு திட்டுறாங்க. இது என் வீடா?” அழுகையும் ஆத்திரமுமாக கேட்டாள்.

“காலம் முழுக்க கஷ்ட பட்ட மாதிரி பேசாத, எல்லாத்தையும்தான் மெதுவா சரி பண்றேன்னு சொன்னேன்லடி? இதான் உன் வீடு”

“சரி பண்ணிட்டு வந்து பேசுங்க” என மதுரா சொல்ல, சேரன் அழுத்தமாக அமைதியாக அவளை பார்த்தான்.

“முடியாதுல்ல, உங்கம்மாவை என்ன செஞ்சும் சரி பண்ண முடியாதுல்ல? அதனாலதான் என் பொறந்த வீட்டுல சமாதானம் ஆக பார்த்தேன். எனக்கு கேக்க நாதி இல்லைன்னுதானே உங்கம்மா என்ன வேணா என்னை பேசுறாங்க. நாளைக்கு உங்க தம்பி பொண்டாட்டிய இப்படி பேசிட முடியுமா? அந்த பொண்ணோட அப்பா வந்து தொலைச்சி கட்டிட மாட்டாரு?” எனக் கேட்டாள் மதுரா.

என் மனைவியை எங்கும் விடாமல் தாங்கதானே பார்த்தேன், எப்போது எந்த சமயம் நான் இவளை விட்டு கொடுத்தேன், இப்போதும் என்னை நம்பாமல் பிறந்த வீட்டு உறவுகளை வேண்டும் என்கிறாளே என மனம் விட்டு போய் நின்றிருந்தான் சேரன்.

 “ஏன் இதோ பக்கத்து தெருவுல இருக்காங்களே உங்கக்கா, அவங்களை அவங்க வீட்ல இப்படி நடத்தினா நீங்க உங்கப்பாலாம் பார்த்திட்டு சும்மா இருப்பீங்களா? அந்த பயத்துலதான் அவங்க மாமியா அடக்கி வாசிக்கிறாங்க? உங்க மாமாவுக்கு பணத்தேவைன்னா ஓடிப் போய் உதவ மாட்டீங்க? எல்லாரும் இருந்தும் நான் மட்டும் அனாதை ஆகிட்டேன். அதான் என்னைய மட்டும் இப்படி இளக்காரமா நடத்துறாங்க. என்னை வச்சு உங்களையும் மதிப்பு குறைவா பேசுறாங்க. இது என் நிம்மதிக்காக…” மதுரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அறையை விட்டு வெளியேறி விட்டான் சேரன்.

‘என் நிம்மதி உங்க நிம்மதியிலதான் இருக்கு, நம்ம நிம்மதிக்காகத்தான் இப்படி சித்தியிடம் பேசினேன்’ என அடுத்து அவள் சொல்ல வந்ததை கேட்பதற்கு அங்கு அவனில்லை.

அவனது அம்மா, அப்பா என அவன் பக்க உறவுகளை என்ன நடந்தாலும் உதறி தள்ளுவானா? அனுசரித்து போகத்தானே பார்ப்பான்? இவன் ஒரு வார்த்தை சொல்லி விட்டான் என்பதால் பின்னர் பேசிக் கொள் இவன் அனுமதி கொடுத்திருந்த போதிலும் அவளது அம்மாவிடம் இப்போது வரை பேசியிருக்கவில்லை. இந்த சமாதான படலம் கூட இவனை முன்னிறுத்தி மட்டும்தான்.

 உலகமே இவன்தான் என இவள் வாழ, புரிந்து கொள்ளாமல் செல்பவனை நினைத்து ஓய்ந்து போன மதுரா அழுது அழுது குமைந்தாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement