Advertisement

அத்தியாயம் -15(2)

 மூவரும் இணைந்து கொண்டு சேரனை திட்ட பொதுவாக முறைத்தவன், “என்னங்கடா வாயி ரொம்பத்தான் நீளுது? நானென்ன வயசு பொண்ணா இல்ல பச்ச குழந்தையா? யாரு உங்களை தேடியார சொன்னதுங்கிறேன்?” என கோவப்பட்டான்.

“எங்குட்டுத்தான் போயி தொலைஞ்ச?” என மதனும் சத்தம் போட்டான்.

“முத்துப்பேட்டைக்குடா” என்றவன் சாப்பாட்டு பார்சலை எடுத்து காண்பித்தான்.

அருகில் சென்று பார்சலை நுகர்ந்து பார்த்த மதன், “ஒப்புறானா இடியாப்பம் பாயாடா” என்றான்.

சரவணனை சேரனின் நண்பர்கள் முறைக்க, அவன் அவர்களை பாவமாக பார்த்து விட்டு அண்ணனை முறைத்தான்.

“வாழை இலையில சூடா சோத்த போட்டு மணக்க மணக்க கறிக்கொழம்ப எடுத்து ஊத்தினாடா என் பொண்டாட்டி. ஒரு வா திங்கங்காட்டிலும் வூட்டுல சண்டை சேரனை காணோம்னு இவன் ஓலை வுட்டுட்டான். மாமனார் வந்தாருன்னு நாலு மாசம் கழிச்சு இன்னிக்குத்தான் கறிய கண்ணுல காட்டினா, அத நிம்மதியா திங்க வுடுறியளாடா?” என்றான் செழியன்.

“கறிக்கு செத்த பயலே… இப்ப போய் நல்லா கொட்டிக்கேயன்டா” என்ற சேரனை முறைத்துக் கொண்டே பைக் எடுத்துக் கொண்டு புறப்பட்டான் செழியன். மதனும் சென்று விட என்ன நடந்தது என அண்ணனிடம் விசாரித்தான் சரவணன்.

நடந்ததை சொல்லாமல், “ஏன் நான் போனதும் வீட்ல அம்மா ஒன்னுமே சொல்லலியா?” எனக் கேட்டான் சேரன்.

அம்மா புலம்பியதை சொன்ன சரவணன், “எங்களுக்கு எதுவும் புரியலை, அண்ணியும் எதுவும் சொல்லலை. ஆனா அவ்வோ நல்லா பயந்து போயிட்டாவோ ண்ணா” என்றான்.

பெருமூச்சு விட்ட சேரன் தம்பியிடம் “நேரமாச்சு, வா வீட்டுக்கு” என மட்டும் சொல்லி பைக்கை எடுத்தான்.

இந்த உணவு பிரச்சனையை சொல்லவே சேரனுக்கு அவமானமாக இருந்தது. பெற்ற தாயை பற்றி தம்பியிடத்தில் கூட கீழிறக்கி சொல்ல மனம் வரவில்லை. அத்தோடு விரைவில் அவனது நிச்சயம் நடக்க இருக்க எதையும் சொல்லி அவனது மகிழ்ச்சியை குறைக்கவும் விருப்பமில்லை.

சேரன் வீடு வரும் போது வாசலில்தான் காத்துக் கொண்டு நின்றிருந்தாள் மதுரா. திருமணத்தின் முன்பு தன்னுடைய கூடாக பார்த்த இந்த வீடு இப்போது சேரனுக்கு அந்நியமாக பட்டது. கிராமத்தில் சொந்த பந்தங்களின் அருமை, குடும்பத்தின் மரியாதை என உணர்ந்து வளர்ந்தவனுக்கு தனிக் குடித்தனம் என்ற நினைப்பெல்லாம் வரவே இல்லை.

தனக்கான தேடலை கண்களில் சுமந்து கொண்டு தன்னை கண்டதும் விழி ஓரம் துளிர்த்த கண்ணீர் துளியோடு, அவளிடம் சொல்லாமல் விட்டு சென்ற கோவமும் இப்போது தன்னை கண்டு விட்ட மகிழ்ச்சியுமாக நின்றிருந்த மனைவி மனக் கிலேசங்களை விலக்கி பலம் தந்தாள்.

“ஃபோன மறந்திட்டேன்டி, போனவன் திரும்ப வர மாட்டேனா? எதுக்கு சரவணன் பயல படுத்தி அனுப்பி வச்சிருக்க?” எனக் கேட்டுக் கொண்டே உணவு பார்சலை நீட்டினான்.

உணவையும் அவனையும் மாறி மாறி கண்டனமாக பார்த்தவள், “உங்ககிட்ட கேட்டேனா? ஏங்க இப்படி பண்றீங்க? கோவத்துல பைக் எடுத்திட்டு போனா வீட்ல உள்ளவங்களுக்கு பயம் வராதா? இனிமே இப்படி செய்யாதீங்க” என்றாள்.

“சரியான பயந்தாங்குலிடி நீ. சூடா இருக்கு பாரு, சட்டுன்னு சாப்பிடு” என சேரன் சொல்லிக் கொண்டிருக்க சரவணன் வந்தான்.

சரவணனை தொந்தரவு செய்து விட்டேன் என மன்னிப்பு கேட்டாள் மதுரா.

“சாரியெல்லாம் நீங்களே வச்சுக்கங்க அண்ணி. என் அண்ணனை பத்திரமா உங்ககிட்ட ஒப்படைச்சிட்டேன். கண் கலங்காம வச்சுக்க வேண்டியது உங்க பொறுப்பு. அப்படியே கோவத்துல கவுன்சிலர் துரை எங்குட்டும் கிளிம்பி போயிடாம கயித்துல கட்டி போட்டு உங்க காலடில வச்சுக்கோங்க அண்ணி” என சொல்லி அண்ணனின் கையை பிடித்து அண்ணியின் கையில் கொடுத்தான் சரவணன்.

மதுரா புன்னகைக்க, சேரன் தம்பியை பொய்யாக முறைத்து, பின் சிரித்து வைத்தான்.

அண்ணன் வாய் திறந்து சொல்லா விட்டாலும் அம்மாதான் காரணம் என சரவணனுக்கும் மனைவிதான் ஏதோ வில்லங்கம் செய்திருக்கிறாள் என கந்தசாமிக்கும் தெரியத்தான் செய்தது.

வீட்டில் நல்ல விஷேஷம் சமீபத்தில் இருக்க கனகாவிடம் வாயை கொடுக்க கந்தசாமி விரும்பவில்லை. அம்மாவிடம் பேச ஆயாசமாக இருக்க சரவணனும் ஏதும் சொல்லவில்லை.

கூடத்தை கூட்டி பெருக்கி அப்போதே சுத்தம் செய்து உணவையும் எடுத்து வைத்திருந்தாள் மதுரா.

ஆண்கள் மூவரும் சாப்பிட அமர, தாங்களே பரிமாறிக் கொள்கிறோம் என சொல்லி மதுராவை சாப்பிட சொன்னான் சேரன். எதுவும் மறுத்து பேசி பேச்சை வளர்க்க விரும்பாமல் உணவை எடுத்துக் கொண்டு அறைக்கு சென்று விட்டாள் மதுரா.

தன்னை யாராவது சமாதானம் செய்தால் தான் ஆகிற்று என பின் வாசல் படியில்தான் இன்னும் அமர்ந்திருந்தார் கனகா.

 சேரன் தன் தம்பிக்கு கண் காட்ட, “ம்மா வாம்மா. பசிக்குதுன்ன? வாறியா என்ன? அண்ணன் திரும்பி போயிட போறான், வாம்மா” என்றான் சரவணன்.

தவறு தன் மீதுதான் என்பதால் அதிகம் முறுக்கிக் கொள்ளாமல் வந்து விட்டார் கனகா. இப்படியாக இரவு உணவு முடிந்தது.

படுக்கைக்கு வந்த பின் நடந்து முடிந்தது பற்றி எதுவுமே பேசவில்லை மதுரா. இதற்கு என்னதான் தீர்வு என சேரன்தான் யோசித்துக் கொண்டிருந்தான்.

 கணவனின் கழுத்தை கட்டிக் கொண்ட மதுரா அவனது வெற்று மார்பில் முத்தங்களாக வைக்க சேரனின் மன நிலை குளிர்ச்சியாக மாற ஆரம்பித்து விட்டது. வெட்கம் துறந்து அவளாக ஆரம்பித்ததில் முதலில் வியந்தவன் பின் உல்லாச மன நிலைக்கு சென்றான்.

அவளிடம் விளையாட எண்ணியவன் அவளை தடை செய்யாமலும் அதே சமயம் அவனாக எதுவும் செய்யாமலும் இருந்தான். ஒரு நிலைக்கு மேல் நாணமும் தயக்கமும் அவளை கட்டிப் போட திணறலும் பாவமுமாக கணவனை பார்த்தாள்.

அவனது முகத்தின் அருகே கண்களால் கெஞ்சலும் கொஞ்சலுமாக பேசிக் கொண்டிருந்த மனைவியின் முகம். சேரனின் மனம் மொத்தமாக அவளிடம் கொள்ளை போனது.

அவளின் அந்த அழகிய முகத்தை கைகளில் தாங்கிக் கொண்டவன் எண்ணற்ற முத்தங்களிட்டு இதழ்களில் புதைந்து கொஞ்சம் கொஞ்சமாக அவளை தனக்குள் சுருட்டிக் கொண்டான்.

அடுத்த நாள் வழக்கமான வேலைகளை பார்த்த சேரன் அப்பா சொன்ன வேலை சம்பந்தமாக திருத்துறைப் பூண்டியில் இருக்கும் கட்சி அலுவலகம் வரை சென்றிருந்தான். அங்கேயே மதியத்திற்கு மேலாகி விட்டது.

பசி வயிற்றை கிள்ளினாலும் வீட்டிற்கு சென்றே சாப்பிட்டு கொள்ளலாம் என நினைத்து ஊரை நோக்கி வண்டியை விட்டான்.

வெறும் வயிற்றோடு சமாளிக்க முடியாமல் வருகிற வழியில் இருந்த காளியப்பன் தேநீர் கடையில் வண்டியை நிறுத்தி விட்டான். தேநீருக்கு சொல்லி விட்டு அவன் காத்திருக்க வனராஜனும் அவனது ஆட்கள் இருவரோடு அங்கு வந்தான்.

பார்வையால் மோதிக் கொண்டனர் மச்சானும் மாப்பிள்ளையும். பாய்லரின் கொதி நிலையில் இருந்தது அந்த இடம்.

‘என் கடைக்கு மட்டும் எதுவும் ஆகிடக் கூடாது ஐயனாரப்பா, சாயந்தரம் பத்து ரூபாக்கு சூடம் ஏத்துறேன்’ என மானசீகமாக வேண்டிக் கொண்டே நெஞ்சு பட படக்க தேநீர் கலந்து விநியோகம் செய்தான் காளியப்பன்.

“எலேய் சவுடாலா கல்யாணம் பண்ணுறதா பெரிய விஷயம்? சொத்து கேட்டு தூது விட்ருக்கான்டா என் தங்கச்சிய கட்டிக்கிட்ட ஆம்பள!” கேலியும் இளக்காரமுமாக சொன்னான் வனராஜன்.

சேரனின் இரத்தம் கொதிப்படைய தேநீரை அருந்தாமல் முறைத்தவன் எதுவும் பிரச்சனை செய்து கொள்ளக் கூடாது என தனக்கு தானே சொல்லி அமைதியாக இருந்தான்.

“அண்ணே! திட்டமே அதானே ண்ணே. நல்ல பச உள்ள இடமா பார்த்து அந்தூட்டு பொண்ணுகிட்ட ஈரோ கணக்கா வசனம் பேசி கல்யாணம் பண்ணிக்கிறது, பொறவு சொத்து கொண்டு வான்னு கேட்டு கொடுமை பண்றது. என்ன இருந்தாலும் நம்மூட்டு பொண்ணு கண்ண கசக்கலாமா? பிச்சையா நெனச்சு கொடுத்து வுடுங்க ண்ணே” என்றான் வனராஜனுடன் வந்த ஆள்.

“ம்ம்… நாளைக்கு காலைல எல்லாத்தையும் இவன் வீட்டடில கொண்டு போய் இறக்கிறேன்னு சொல்லுடா. அதுக்குள்ள எம்மூட்டு தங்கச்சி கண்ணு கலங்கினான்னு வச்சுக்க… நடக்கிற சேதியே வேற” எச்சரித்தான் வனராஜன்.

“எதுவும் செய்வாப்டி… எங்க செய்ய சொல்லுங்க, நம்ம கை என்ன பூ பறிக்குமாங்குறேன்? நடு ரோட்ல வச்சு வெள்ள வேட்டிய உருவி விட்ர மாட்டோமான்ன?” என இன்னொருவன் சொல்ல, கையிலிருந்த சூடான தேநீரை அவன் மீது ஊற்றிய சேரன் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவன் மீது பாய்ந்தான்.

தன் புகுந்த வீட்டில் நடப்பது குறித்து மதுரா தன் சித்தியிடம் மேலோட்டமாக சொல்லியிருந்தாள். மாமியார் நடத்தை பற்றியும் மாமனார் கணவனை பேசி விட்டதையும் கூட சொல்லி மன பாரத்தை குறைத்துக் கொண்டவள், “ரெண்டு வீட்டுக்கும் பேசி சரி பண்ணி விடுங்க சித்தி. அப்போதான் நிம்மதியா நாங்க வாழ முடியும்” என சொல்லியிருந்தாள்.

உடனடியாக தன் அக்கா அஞ்சலைக்கு அழைத்து பேசி விட்டார் மதுராவின் சித்தி. அஞ்சலை தன் மகனிடம் அழுது புலம்பி மகளுக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என சண்டை பிடித்தார்.

“கல்யாணமாகி ரெண்டு வருஷமாகியும் நம்மளுக்கு புள்ள இல்ல. இந்தூட்டுல பொறந்த பொண்ண அழுவ விட்டா நம்ம வம்சம் விளங்காமலே போயிடும்னு பயமா இருக்குங்க. கோவத்தை விட்டுட்டு மதுராவுக்கு முறையா எல்லாத்தையும் செஞ்சிடுங்க” என சரஸ்வதியும் எடுத்து சொன்னாள்.

வனராஜனுக்கு இன்னுமே மனதில் வறட்டு பிடிவாதமும் கோவமும் புகைந்து கொண்டுதான் இருந்தது. ஆனாலும் தங்கையின் மீது பாசமே இல்லாதவன் இல்லை. ஆகவே சம்மதித்து விட்டான்.

இன்று சேரனை வழியில் பார்க்கவும் அமைதியாக கடக்க முடியாமல் அவனை சீண்டி விட்டான்.

சுற்றி இருந்தவர்கள் பெரிய அடிதடி ஆகி விடாமல் சேரனையும் வனராஜனையும் பிடித்துக்கொண்டனர். அவர்கள் வனராஜனையும் அவனுடன் இருந்த ஆட்களையும்தான் குற்றம் சொன்னார்கள்.

“நல்லா சொல்றீயளே நியாயம்! இந்த பய வீட்டுல என் தங்கச்சி சுகமா ஒன்னும் வாழல. போன் போட்டு சொத்து கேட்ருக்கா. நான் எப்பேர்ப்பட்ட இடம் பார்த்தேன் எந்தங்கச்சிக்கு, என்ன இதுக்கு என் வூட்டு பொண்ணை கடத்தி கட்டிக்கிட்டு போய் கொடுமை பண்றான்னு இவனை கேளுங்கய்யா” என சீறினான் வனராஜன்.

அங்கிருந்தவர்கள் சேரனை பார்க்க, “வாய்க்கு வந்தத சொல்லுறான். என் பொண்டாட்டி என்கூட நல்லாத்தான் வாழுறா” என்றான் சேரன்.

“அப்படியா? எங்க அவகிட்ட போன் போட்டு என் சித்திகிட்ட பேசினாளா இல்லையான்னு கேட்க சொல்லுங்களேன்” என சவால் விட்டான் வனராஜன்.

ஆத்திரமடைந்த சேரன் மனைவி மீதுள்ள நம்பிக்கையில் உடனே அவளது கைப்பேசிக்கு அழைத்து, “ஏட்டி நேத்து உன் சித்திகிட்ட பேசினியா?” எனக் கேட்டான்.

என்னவோ என துணுக்குற்றாலும் “ஆமாம், எதுக்குங்க கேட்குறீங்க?” என்றாள்.

“என்ன சொன்ன அவ்வோகிட்ட?”

“என்ன விஷயம்னு சொல்லுங்க”

“என்னடி கேட்ட உன் சித்திகிட்ட?” கோவமாக இரைந்தான்.

“வந்து… பொறுமையா கேளுங்க. சித்தி பார்த்துக்குவாங்க எல்லாத்தையும், அப்புறம்… பாருங்க உங்களுக்கு தேவை படறப்போ கொடுத்து உதவ கூட என்கிட்ட நகை நட்டுன்னு எதுவும் இல்லாதானே. நானும் அந்த வீட்டுல பொறந்த பொண்ணுதான்…” மதுரா சொல்லி முடிப்பதற்குள் அழைப்பை துண்டித்தான் சேரன்.

“பேசிப்புட்டீயளா கவுன்சிலரே? வெளில வந்து நல்லவன் வேஷம் போடாதீய” என சேரனிடம் அடி வாங்கியிருந்த வனராஜனின் ஆள் சொல்ல, சேரன் மீண்டும் அவனது கன்னத்தில் விட்டான் ஒரு அறை.

சேரனை நோக்கி வனராஜன் திமிறிக் கொண்டு வர, அவனை பிடித்துக்கொண்டனர்.

“சேரா என்னப்பா இது? வனராஜன் கோவ படுறதிலேயும் அர்த்தம் இருக்குதுன்ன?” என்றார் ஒருவர்.

“கா காசு இவன்கிட்டேருந்து எனக்கு வேணாம். என் பொண்டாட்டி சொத்து கேட்டு இவன் வூட்டு படி ஏறி வந்தாளா? அவ ஏதோ அவ சித்திகிட்ட பேசினத தப்பா திரிச்சி சொல்லி என்னை அசிங்க படுத்த பார்க்குறான். எம் பொண்டாடிய எப்படி வாழ வைக்கிறேன்னு நீங்கெல்லாம் பார்க்கதான போறீய? பொறவு பேசுங்க. அப்படி இவன்கிட்டருந்து நான் எதுவும் சீரு செனத்தி வாங்கிட்டேன்னு வைங்க… ஒத்த பக்க மீசைய எடுத்துக்குறேன்” என கோவம் கொப்பளிக்க சொன்னவன் அதே ஆக்ரோஷத்தோடு வீட்டிற்கு பைக்கை விட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement