Advertisement

ஆள வந்தாள் – 15

அத்தியாயம் -15(1)

மதுராவுக்கு அழைத்த சேரன், “நைட்டு உனக்குன்னு சமைக்கிறேன்னு சமைய கட்டுல வெந்துகிட்டு நிக்காதடி. நான் வாங்கிட்டு வர்றேன்” என்றான்.

“வாங்கினா எல்லாருக்கும் வாங்கணும், இல்லைனா வேணாம்” என்றாள்.

“நைட்ல யாரும் டிபன் சாப்பிட மாட்டாங்க. சாப்பிடறதா இருந்தாதானே வாங்க முடியும்? வாங்கிட்டு வந்து குப்பையில கொட்டுறதா? எட்டு மணி போல வந்திடுறேன்” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்.

சேரன் மனைவிக்கு தனியாக தோசை ஊற்றிக் கொடுத்த அன்றே மதுராவுக்கு சாப்பாடு விஷயத்தில் கட்டுப்பாடுகள் செய்யாதே என கடுமையாக எச்சரித்திருந்தார் கந்தசாமி. ஆகவே அடுத்த நாளில் இருந்து முறைத்து முறைத்து பார்த்தாலும் எதையும் உனக்காக தனியே செய்து கொள்ளக் கூடாது என சொல்வதில்லை கனகா.

கனகா அவரது வேலையை முடித்துக் கொண்டு சமையலறையை விட்டு சென்ற பின் அவளுக்கு எளிமையாக ஏதாவது செய்து கொள்வாள். சீரியலில் மூழ்கியிருந்த கனகா இன்னுமே மதுரா அவளுக்காக சமைக்க வரவில்லை எனவும் அறையை எட்டிப் பார்த்தார்.

கதவு அடை பட்டிருந்ததால், “கண்ட கண்ட நேரத்துலேயும் தூங்குவா” என புலம்பிக் கொண்டே மீண்டும் சீரியல் பார்த்தார். அதில் வரும் மருமகளுக்காக உச்சு கொட்டி பரிதாப படவும் செய்தார்.

 மனைவிக்காக இடியாப்பம் பாயா வாங்கி வந்திருந்தான் சேரன். சூடாக இருந்ததால் மனைவியை கூட அழைக்காமல் அவனே வேறு பாத்திரம் மாற்றி வைத்தான்.

“அதென்னடா ஒத்த பொட்டலம் வாங்கிட்டு வந்திருக்க? எங்களுக்கெல்லாம் நாக்கு இல்லயா?” எனக் கேட்டார் கனகா.

“முன்னாடி எத்தன தடவ வாங்கிட்டு வரவான்னு கேட்ருக்கேன். நைட்டு சோறு இல்லாம வேற எதுவும் உள்ள இறங்காதுன்னு சொல்லுவ. அதான் அவளுக்கு மட்டும் வாங்கினேன்” என்றான் சேரன்.

“ஒரு தடவ சொல்லிட்டேனா திரும்ப சாப்பிட தோணாம போயிடுமா?” எனக் கேட்டார்.

பேச்சு குரல் கேட்கவுமே அறையை விட்டு வந்த மதுரா ஒரு தட்டில் இடியாப்பங்கள் வைத்து கணவனிடம், “அவங்ககிட்ட கொடுங்க” என்றாள்.

அவளுக்கென எடுத்து வைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் பரிமாறி விட்டவளை முறைத்தாலும் அம்மாவின் முன் கடிந்து கொள்ள இயலாமல் அவனும் அம்மாவிடம் கொடுத்தான்.

“நான் கேட்டு… அத அவ கொடுத்து… அப்படி ஒன்னும் கொறைஞ்சு போயிடல நான்” என நொடிப்பாக சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டார் கனகா.

வேறெந்த விஷயமாக இருந்தாலும் போ என போயிருப்பான். சாப்பாடு விஷயம் என்பதால் சேரனுக்கு மனம் கேட்கவில்லை.

அம்மாவின் அருகில் அமர்ந்து, “உனக்கு புடிக்காதுன்னுதான் வாங்கலம்மா, எம்மேல தப்புதான், பிகு பண்ணிக்காம சாப்பிடு” என்றான்.

தாம் தூம் என குதிப்பவன் இப்படி தன்மையாக சொல்லவும் கனகாவின் மனம் குளிர்ந்து விட்டது. உடனே வாங்கி பாயாவோடு அனைத்து இடியாப்பங்களையும் பிசைந்து சாப்பிட ஆரம்பித்தார்.

நான்கு வாய் சாப்பிட்டவருக்கு அதற்கு மேல் இறங்கவில்லை.

“எந்த கடையிலடா வாங்கி தொலைச்ச, நல்லாவே இல்ல, வேணாம்டா எனக்கு” என்றவர் அப்படியே வைத்து விட்டார்.

சேரனுக்கு சுர் என கோவம் தலைக்கேற, “அறிவிருக்காடி உனக்கு? கேட்டா ஒன்னு வச்சு சாப்பிடுதான்னு பார்க்கணும், பாரு எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணிட்டு” என மனைவியிடம் எரிந்து விழுந்தான்.

‘இப்படி வீணடிப்பார் என எனக்கென்ன தெரியும், நான் என்ன செய்வேன்?’ என நினைத்தவள் கணவனை முறைத்துப் பார்க்க, எழுந்து நின்றவன் அம்மாவை கோவமாக பார்த்தான்.

மகன் தன்னை திட்டுவதற்குள் தப்பித்து விட வேண்டும் என்றெண்ணி, “நெஞ்ச ஏதோ செய்யுதுடா, வெந்நீர் வச்சு குடிச்சாலாவது கேக்குதா பாக்குறேன்” என முடியாதவர் போல எழுந்து சமையலறை சென்று விட்டார் கனகா.

“நீ சாப்பிடுவேன்னு ஆசையா முத்துப்பேட்டைலேருந்து வாங்கிட்டு வர்றேன், போடி!” என ஆதங்கமாக சொன்னவன், “இரு சரவணன்கிட்ட ஏதாவது வாங்கிட்டு வர சொல்றேன்” என சொல்லி கைப்பேசியை எடுத்தான்.

“வேணாங்க. இங்க உள்ளூர்ல இந்த நேரம் என்ன கிடைக்கும்? அவங்க வேற எங்க இருக்காங்கன்னு தெரியலை. நீங்க சொல்லிட்டீங்கன்னு சாப்பாடு வாங்க அலைய போறாங்க. பாயாதான் இருக்கே, தோசை சப்பாத்தி இப்படி வேற ஏதாவது நான் பண்ணிக்கிறேன், விடுங்க” என சமாதானமாக சொன்னாள்.

அம்மா வேண்டுமென்றே இப்படி செய்ததை உணர்ந்திருந்தவனுக்கு அடுத்து என்ன சொல்ல என்றே தெரியவில்லை.

“நேரம் என்ன ஆவுது, போ சீக்கிரம் போய் ஏதாவது செய்” என்றான்.

கனகா இருக்கும் நேரத்தில் சமையலறை பக்கம் நுழைவதில்லையே மதுரா. அப்படி சென்றால் என்ன எடுக்கிறாள் வைக்கிறாள் என குறு குறு என பார்த்துக் கொண்டே இருப்பார். இவளுக்கு இயல்பாகவே இருக்க முடியாது. ஆனால் இப்போது கணவனிடம் இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாதே. சொன்னால் பெரிய சண்டைதான் உருவாகும்.

மாமியாரை காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. கணவனின் மன நிலையை கெடுக்க விருப்பம் இல்லை. ஆகவே எதுவும் சொல்லாமல் சென்றாள்.

சப்பாத்தி செய்து கொள்ளலாம் என இவள் கோதுமை மாவு இருந்த சம்படத்தை எடுத்தாள். வெடுக் என பிடுங்கியவர் அவரே ஒரு பாத்திரத்தில் கைப்பிடி மாவு அளந்து போட்டு கொடுத்து விட்டு சம்படத்தை மூடி அலமாரியில் வைத்து கதவை அடித்து சாத்தி விட்டார்.

மதுராவுக்கு அப்படியே அந்த கைப்பிடி மாவையும் அவரின் முகத்தில் விசிறி எறிந்து விட்டு செல்ல வேண்டும் போலிருந்தது.

கலக்கமாக அமர்ந்திருக்கும் கணவனை எட்டிப் பார்த்தவள் எதுவும் சொல்லாமல் கோவத்தை அடக்கிக் கொண்டு மாவை பிசைய ஆரம்பித்தாள். எண்ணி மூன்று சப்பாத்திகள் வந்தது. அதுவும் அவள் திறமையாக இழுத்து இழுத்து போட்டு வைத்ததால்.

கனகா குரூர திருப்தியோடு வெளியே வந்து விட, அம்மாவின் அருகில் இருந்தால் ஏதாவது பேசி விடுவோம் என நினைத்து மனைவியை காண சென்றான்.

“என்னடி இது? இப்படி அளந்து அளந்து சாப்பிட்டுதான் நடுராத்திரிக்கு பசிக்குதுங்கிறியா?” எனக் கேட்டான் சேரன்.

மதுரா ஒன்றும் சொல்லாமல் இருக்க, “கேட்டா வாய தொறந்து ஏதாவது சொல்லு. இருக்கிற கடுப்புல இவ வேற” என்றான்.

“எனக்கு போதும்” என்றவள் அடுப்பை பற்ற வைக்க, உடனே அணைத்து விட்டான்.

“என்னங்க?”

“என்ன நொன்னங்க? மாவ எடு, எனக்கும் சப்பாத்தி சாப்பிடனும் போல இருக்கு, இன்னும் நாலஞ்சு சப்பாத்தி சேர்த்து போடு” என்றான்.

“நைட்ல உங்களுக்கு டிஃபன் சாப்பிட பிடிக்காது”

“சொன்னதை செய்” என அடமாக நின்றான்.

இதற்கு மேல் அவளாலும் என்ன சொல்ல முடியும்? சோர்ந்து போனவளாக கணவனை பார்த்தவளுக்கு சற்று முன்னர் மாமியார் நடந்ததை நினைத்து பார்க்க பார்க்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

இன்னதென்று எதையும் சேரனால் கணிக்க முடியவில்லை. மனைவியின் சிவந்த முகமும் அழத் தயாரான கண்களுமே வெறி ஏற்றிக் கொண்டிருந்தது.

“என்னடி?” என அதட்டல் போட்டான்.

மறுப்பாக தலையசைத்தவளுக்கு சுய இரக்கத்தில் வார்த்தையே வரவில்லை. அவனது கண்கள் தானாக அலமாரி பக்கம் சென்றது.

வேகமாக கதவை திறந்தவன் மாவு இருக்கும் சம்படத்தை எடுத்துக் கொண்டு போய் கூடத்தில் தூக்கி அடித்தான். சரியாக அந்த நேரம் கந்தசாமி, சரவணன் இருவரும் உள்ளே நுழைய அவர்களின் பாதங்கள் எல்லாம் கோதுமை மாவுதான்.

கனகா தன் பயத்தை வெளிக் காண்பிக்காமல் நிற்க, வெளியில் வந்த மதுரா கணவனின் கோவத்தை தணிக்கும் விதமாக அவனது கையை பிடித்துக்கொண்டாள்.

“என்னடா கூத்து கட்டி அடிக்கிற?” என சத்தம் போட்டார் கந்தசாமி.

இப்போது சேரனுக்கு அப்பாவின் மீது திரும்பியது கோவம். ஆனால் மனைவியின் முன்னிலையில் எதுவும் பேசி அவருக்கு தலையிறக்கத்தை உண்டு செய்ய விரும்பாதவன் எதுவும் சொல்லாமல் மனைவியின் கையை உதறி விட்டு வெளியே சென்று விட்டான்.

“பார்த்துக்கோங்க, பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுறவனை சொல்றதா இல்ல அவனை ஆட்டி படைக்கிறவளை சொல்றதான்னே தெரியலையே… அடியே மாரியாத்தா நீதான்டி எல்லா இம்சையிலிருந்தும் இந்தூட்ட காவந்து பண்ணனும்” என மேலே பார்த்து கைகளை விரித்து புலம்பிய கனகா பின் வாசலில் போய் அமர்ந்து கொண்டார்.

“என்ன ஆயி நடந்துச்சு?” என மருமகளிடம் விசாரித்தார் கந்தசாமி.

மருமகள் ஏதாவது சொல்லி விடுவாளோ என பயந்து போன கனகா, “உழைச்சு களைச்சு வீட்டுக்கு வார ஆம்பளைகளால ரெண்டு வாய் நிம்மதியா தின்னுட்டு தூங்க முடியுதாங்குறேன்? இன்னும் வேணும்னா என்கிட்டல்ல கேக்கணும், கமுக்கமா இருந்திட்டு புருஷன்கிட்ட நாலா திரிச்சி சொல்லி வீடான வீட்டுல அமக்களம் பண்ண வைக்கிறாளே? எனக்குதான் கேக்க நாதி இல்லாம போயிட்டு, எல்லாரும் புதுசா வந்தவளதான தூக்கி வச்சு கொண்டாடுறாவோ….” புலம்ப ஆரம்பித்தவர்தான், நிறுத்தவே இல்லை.

மதுரா வாயே திறக்காமல் கணவன் வாசலில் இருக்கிறானா என பார்க்க சென்று விட்டாள்.

கந்தசாமி குழப்பமும் கலக்கமுமாக சின்ன மகனை பார்த்தார்.

“நீங்க தீர விசாரிச்சு தீர்ப்பு சொல்லிட்டா மட்டும் எல்லாம் தலைகீழா மாறிட போகுதாப்பா? நான் அண்ணனை அழைச்சிட்டு வர்றேன்” என சொல்லி வெளியே சென்றான்.

சுற்று முற்றும் கண்களால் கணவனை தேடிக் கொண்டிருந்தவள் சரவணனை கண்டதும், “நல்ல பசியில வந்திருப்பார். எங்க போனாருன்னு தெரியலை. அவர் போன் கூட ஹால்லேயே இருக்கு” என பரிதவிப்பாக சொன்னாள்.

“இங்கதான் எங்கேயாவது இருக்கும்” என்றான்.

“கொஞ்சம் எங்கன்னு பார்த்து கூட்டிட்டு வர்றீங்களா ப்ளீஸ்…” என்றாள்.

“என்னண்ணி… போன்னா போவ போறேன். இதுக்கு போய் ப்ளீஸ்லாம் சொல்றீய? நான் பாக்குறேன், நீங்க உள்ள போங்க அண்ணி. எனக்குமே நல்ல பசிதான், சாப்பாடு எடுத்து வைங்க அண்ணி, பத்து நிமிஷத்துல அண்ணனோட வந்திடுறேன்” என்றான் சரவணன்.

“போன் வச்சிருக்கீங்கதானே? அவரை பார்த்ததும் எனக்கு சொல்லுங்க” என சொல்லி உள்ளே சென்றாள் மதுரா.

அருகில் எங்காவது அண்ணன் இருப்பான் என சென்ற சரவணனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. செழியன், மதன் இருவருக்கும் அழைத்து அவர்களிடமும் அண்ணன் செல்லவில்லை என உறுதி படுத்திக் கொண்டவனுக்கு மதுராவிடமிருந்து அழைப்பு வந்தது.

“இங்குட்டு காணோம் அண்ணி. சின்ன புள்ளையா அண்ணன்? வந்திடும், செத்த நேரம் பொறுங்க அண்ணி” என சொல்லி வைத்து விட்டான்.

மதுரா புகுந்த வீடு வந்து முழுதாக இரண்டு வாரங்கள் ஆகவில்லை. அதற்குள் ஏன் இப்படி அண்ணியை பயமுறுத்துகிறான் என அண்ணன் மீது சரவணனுக்கு பயங்கர கோவமாக வந்தது. அதற்குள் செழியனும் மதனும் சரவணனை தேடிக் கொண்டு வந்து விட்டனர்.

“என்ன சண்டைனு தெரியலை. அம்மா மேல கோச்சுக்கிட்டு அண்ணன் வெளில போயிட்டு” என மட்டும் சொன்னான் சரவணன்.

“எலேய் என் மாப்ளய சும்மா சும்மா சொறிஞ்சு வுடுது அத்த. என்னிக்கு கடிச்சு குதறி விட போறான்னு தெரியலை. இருக்குடா… தரமான சம்பவம் ஒன்னு உன் வூட்ல காத்துகிட்டு இருக்குடா” என்றான் செழியன்.

“அட ஏன் ண்ணன்? போங்க உங்க ஃப்ரெண்ட் ஸார் எங்குட்டு இருக்காருன்னு பாருங்க” என சரவணன் சொல்ல, ஆளுக்கொரு பக்கமாக தேட சென்றனர்.

அரை மணி நேர தேடலுக்கு பிறகு ஊர் எல்லையில் சேரனை பிடித்து விட்டான் மதன். நண்பனை பார்த்தவன், “நாளைக்கு பேசலாம்டா” என மட்டும் சொல்லி விரைந்து விட்டான்.

கைப்பேசி வாயிலாக சேரனை கண்டு விட்டதை மற்றவர்களுக்கும் அறிவிப்பு கொடுத்தான் மதன். தெரு முக்கத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து சேரனை நிறுத்தி விட்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement