சேரன் களத்து மேட்டில் இருக்க அவனை காண செழியன், மதன் இருவரும் வந்தனர். ஆட்கள் நெல்லை எடை போட்டு மூட்டைகளில் கட்டிக் கொண்டிருக்க மேற்பார்வை செய்து கொண்டிருந்தான் சேரன்.
“என்ன மாப்ள… நீ செஞ்ச கூத்துல கட்டிலு காலு உடைஞ்சு போச்சுதாம், மாமா புதுக் கட்டிலுக்கு ஆர்டர் கொடுத்திருக்காவோ! பாத்து சூதானமா இரு மாப்ள” கிண்டல் செய்து கொண்டே வந்தான் செழியன்.
“அட கருமம் புடிச்ச பயலே! கல்யாணம் ஆவாத கன்னிபையன் ஒருத்தன் பக்கத்துல இருக்கேன்னு புத்தியில இருக்கா இல்லையாடா உனக்கு” செழியனின் பிடரியில் ஒரு அடி கொடுத்துக் கொண்டே கேட்டான் மதன்.
“நீ ஏன் டா எங்க கக்கத்துலேயே… இந்தா ச்சே… எங்க பக்கத்துலேயே இருந்து தொலையுற? தள்ளிப் போடா பன்னாடை” என்றான் செழியன்.
“எலேய், செல்விக்கு முன்னால நீ பாமாவை ரூட் வுட்டீன்ன? அந்த கதைய அப்படியே செல்விகிட்ட சொல்லிடுவேன், மரியாதையா இருந்துக்க” எச்சரித்தான் மதன்.
“ஆமாம் இவரு பெரிய ஒழுக்க சீலரு. நாலு பொண்ண தானடிதானடா இப்ப எங்களுக்கு கூட தெரியாம கமுக்கமா அர்ச்சனாவுல வந்து நிக்குற, எனக்காவது கல்யாணம் ஆயிட்டு. அடிதடி கேஸ் ஆனாலும் வுட்டுட்டு போவ மாட்டா. உனக்கு அப்படியில்லடி மாப்ள” என்றான் செழியன்.
இவர்கள் இருவரும் இப்படி வாய்த் தகராறில் ஈடுபட்டிருக்க கலந்து கொள்ளாமல் தீவிர முக பாவனையில் இருந்தான் சேரன்.
“நம்மூர்ல கடலு கூட இல்லியேடா உன் கப்ப கவுந்து போக” என்றான் செழியன்.
“கவலையா வுடு மாப்ள, கப்பலு நான் செஞ்சிடுறேன், மழைக்குத்தான் என்ன செய்யன்னு தெரியலை. ஏன் டா இந்த சினிமாவுல வர்ற மாதிரி மழை வரவைக்க என்ன செலவாகும்? உன் வய வரப்ப வித்தாவது மாப்ளயோட வாட்டத்தை போக்கணும் டா” என செழியன் சொல்ல, “உன் தோப்ப வித்து செய்யுடா நாதாரி” என்றான் மதன்.
“அவனுக்கெதுக்கு? கல்யாணம் கட்டி வர்ற புள்ள கட்டிலு மெத்தை பீரோன்னு சீரோட வராதா? இது உனக்குத்தான், விசாரிச்சிட்டேன்” என்றான் செழியன்.
“அவரு வாங்கிக் கொடுத்தா வாங்கிக்குவேனா? எனக்கொன்னும் வேணாம், என் பொண்டாட்டிக்கு வேணுங்கிறத செய்ய நான் இருக்கேன்” என முறுக்காக கூறினான் சேரன்.
உன் அப்பா ஏதோ அவசரத்தில் அப்படி சொல்லி விட்டார், அப்படியெல்லாம் உன்னை விட மாட்டார், ஒரு முறை இப்படி ஆகி விட்டதென தனியாக தோப்பை குத்தகை எடுப்பதெல்லாம் தவறாகி விடும், இன்னொரு முறை மனம் விட்டு அப்பாவிடம் பேசு என எடுத்து சொன்னார்கள் அவனது நண்பர்கள்.
“உங்களுக்கு சொன்னா புரியாதுடா. அப்பாகிட்டேருந்து வாங்கி என்ன செஞ்சாலும் என் அம்மா சொல்லிக் காட்டும்டா. அவ அதெல்லாம் தாங்கிக்க மாட்டா. அவளுக்குன்னு புடவை நகைன்னு வாங்க திண்டாடுறதாலதான் இப்படி செய்றேன்னு நீங்களும் நினைக்காதீயடா. எம் பொண்டாட்டி உண்டானா புள்ளபேறு கூட நான்தான் பாக்கணும். எம்புள்ளைக்கு வேணுங்கிறத குறையில்லாம செய்யணும். சும்மா ஒன்னு ஒன்னுத்துக்கும் போய் அப்பாகிட்ட நிக்க முடியாது” என விளக்கமாக சொன்னான் சேரன்.
“பிரசவ செலவு எவ்ளோ ஆவ போவுதுடா, நாங்க இல்லயா?” என கோவமாக கேட்டான் மதன்.
“நீ ஏன் செய்யணும்? உனக்கு குடும்பம் இல்லயா? இல்ல நாந்தான் வக்கத்து போயிட்டேனா?” என சீறினான் சேரன்.
“கடனா வாங்கிக்கடா” என தணிந்த குரலில் சொன்னான் மதன்.
“உங்கள நம்பி கேட்டது தப்பு. நானே பாத்துக்கிறேன்” என்ற சேரன் முறுக்கிக் கொண்டு திரும்பி செல்ல, அவனது நண்பர்கள் இழுத்து பிடித்து நிறுத்தினர்.
மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் மாற்றி பார்த்துக் கொள்ள, “பொறந்த வீட்டு சீர் இல்லையேன்னு என் பொண்டாட்டி ஒரு நொடி நெனச்சிட்டாலும் நான் அவளை கல்யாணம் பண்ணினதுல அர்த்தமே இல்லடா. சரவணன் சம்சாரம் நல்ல வசதியான வீட்டு பொண்ணு, அவ்வோ வீட்டுல நெறைய செய்வாவோ. இப்ப வரை சம்பாத்தியம் பொதுவாதான் இருக்கு, அதிலேருந்து இவளுக்கு மட்டும் எப்படி தனியா செய்ய முடியும்? ஒருவாட்டி என் அப்பா சொல்லிப்புட்டார் அப்படின்னா இன்னொரு வாட்டி சொல்ல மாட்டாருன்னு என்னடா நிச்சயம்? நேத்து காலையிலேருந்து உள்ளுக்குள்ள நான் வெந்து புளுகுறது உங்களுக்கெல்லாம் புரியாது டா” என வருத்தமாக சொன்னான் சேரன்.
“என்னடா நீயி, இவ்ளோ லென்த்தா பேசுற, நீ அரசியல்வாதின்னு ஒத்துக்குறோம்டா. இப்ப மூச்ச விட்டு தண்ணிய குடி” என்ற மதன் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.
“தென்னந்தோப்பு குத்தகைக்கு எடுத்த கையோட கார் ஒன்னு வாங்கி வாடகைக்கு விடலாம்னு இருக்கேன்” என்றவன் இதற்கெல்லாம் எவ்வளவு பணம் வேண்டும் என்பதையும் கூறினான்.
“சரிடா பங்கு, வட்டிக்கெல்லாம் வாங்கினா பெரியப்பாவுக்கு அவமானம் இல்லயா?” எனக் கேட்டான் மதன்.
“தெரியாத இடத்துல வாங்கி ஏதாவது ஏழரைய இழுத்து வுட்டுக்கவா மாப்ள? நான் கொஞ்சம் ஏற்பாடு பண்ணி தர்றேன்” என செழியன் சொல்ல, உடனே, “ஆமாம் டா, மிச்சத்தை நான் தர்றேன்” என்றான் மதன்.
அவர்கள் வீடுகளிளும் சேரன் வீட்டை போலவே நெல் மற்றும் தென்னை விவசாயம்தான். அவர்களின் வீட்டுக்கு ஒரே ஆண் வாரிசு என்பதால் அவர்களின் அப்பாக்கள் சில வருடங்களுக்கு முன்னரே வரவு செலவுகளை அவர்களின் வசம் ஒப்படைத்து விட்டனர்.
சேரன் யோசனையாக நிற்க, “என்னடா ரோசனை? எங்களுக்கு வேணும்னா நீ செய்ய மாட்டியான்ன?” என அதட்டலாக கேட்டான் செழியன்.
“ஆமாம் டா, இவன் கொள்ளு தாத்தா சமீந்தார் வீட்ல சாணி அள்ளி கொட்டிட்டு இருந்தாரு. அவருக்கு புள்ள பொறக்கவும் சமீந்தார் மேல உள்ள விசுவாசத்துல புள்ளைக்கு சமீந்தாருன்னே பேரு வச்சுப்புட்டாரு. இதான் எங்க செழியன் சமீந்தார் வம்சம் ஆன கதை” என வேடிக்கையாக சொன்னான் மதன்.
“என் தாத்தா அள்ளுன சாணிய திருடிக் கொண்டு போய் வறட்டி சுட்ட ஆளுடா உன் கொள்ளாத்தா, இனி வாய தொறந்த ஒப்புறானா உன் தாடைய பேக்குறேனா இல்லையான்னு மட்டும் பாரு” பொய் கோவத்தோடு சொன்னான் செழியன்.
சேரனின் முகத்தில் முறுவல் அரும்ப, அவனது மீசையை முறுக்கி விட்ட செழியன், “இப்படி நெஞ்ச நிமித்தி வேட்டிய மடிச்சு கட்டுற, நம்மகிட்ட ஒரண்டை இழுத்தவன் எவனாவது கண்ணுக்கு சிக்குனா செவுள்ல நாலு இழுத்து விடுற, வன்முறையை சட்டை பாக்கெட்ல வச்சுகிட்டு நல்ல கெத்தா டெரரா இருடா மாப்ள… அஞ்சு பைசா பொறாத விஷயத்துக்கு போய் சூம்பிப் போன கத்திரிக்கா கணக்கா மூஞ்ச வச்சுகிட்டு…” என்றான்.
“டேய் இவன் கலாய்க்கிறான்டா” என்ற சேரன் அவனது வயிற்றில் செல்லமாக ஒரு குத்து வைத்தான்.
“மதன்…” ஒரு விரல் நீட்டி எச்சரிப்பாக அழைத்தான் சேரன்.
“சிக்னல் கிடைக்காத ரேடியோ பொட்டி கணக்கா கொர்ருன்னு அத்தை சவுண்ட் கொடுக்கும் போதே இப்படி பாசக்காரனா இருக்கானே, இவனுக்கெல்லாம் ஈன்னு பல்லு காட்டிட்டு பதிவிசா இருக்க அம்மா கிடைச்சா என்னடா செய்ய மாட்டான்?” என வம்பிழுத்தான் செழியன்.
“அப்படிங்குற?” என்ற செழியன், சேரனை திருப்பி அவனது முதுகு முடியும் இடத்தில் கை வைத்து ஆராய போனான். சேரன் தடுக்க, விடாமல் பிடித்துக்கொண்டவன் மதனையும் பிடிக்க சொன்னான்.
மதனும் கெட்டியாக பிடித்துக்கொள்ள நண்பர்கள் இருவரிடமிருந்து திமிறி விடுபட்ட சேரனின் முகத்தில் வாய் கொள்ளாத சிரிப்பு.
அப்படியே இன்னும் சற்று நேரம் பேசி, சிரித்து என சேரனை தெம்பாக உணர வைத்து இரண்டு நாட்களில் பணம் தருவதாக உறுதியளித்து விட்டுத்தான் அங்கிருந்து கிளம்பினார்கள் இருவரும்.
விவரம் தெரிந்ததிலிருந்து மூவரும் நண்பர்கள். பள்ளி, கல்லூரி என எப்போதும் ஒன்றாக சுற்றித் திரிந்தவர்கள். எதை வேண்டுமென்றாலும் செய்யத் தயங்காத நட்பு அவர்களுடையது. இவர்களுக்கு ஒன்று என்றால் சேரனும் இப்படித்தான் வரிந்து கட்டிக் கொண்டு போய் நிற்பான். உயிர் நண்பனின் பணத்தேவைக்கு யோசிப்பார்களா?
தோப்பு குத்தகைக்கு எடுக்க போவது பற்றி அப்பாவிடமோ தம்பியிடமோ சொல்லியிருக்கவில்லை சேரன். ஏன் மதுராவுக்கே விவரம் தெரியாது. செய்து விட்டுத்தான் சொல்ல வேண்டும் என இருந்தான்.