அத்தியாயம் -1(2)

“எப்பய்யா வழி வுடுவீங்க? ஆய பஸ் ஏத்தி விடணும்” ஆட்டோவை செல்ல விடாமல் நிறுத்தி வைத்திருந்தவனிடம் சொன்னான் ஆட்டோக்காரன்.

உள்ளே யார் என எட்டிப் பார்த்தவன் அவசரமாக சேரனிடம் ஓடி சென்றான். சேரனின் முகத்தை எல்லாம் கேக்கால் பூசி விட்டிருந்தனர் அவனது நண்பர்கள் படையினர்.

“இந்த முறை கவுன்சிலர், அடுத்த முறை எம் எல் ஏ ஆக போகும் அரசியல் சாணக்கியன் சேரனுக்கு சால்வை அணிவிப்பதில் பெருமை கொள்கிறோம்” மைக்கில் அறிவிப்பு வந்தது.

“அப்படியா ண்ணா? இவர் கவுன்சிலரா?” தன்னை மீறி கேட்டிருந்தாள் மதுரா.

“உனக்கு யாரும் சொல்லலையா ஆயி? எலெக்ஷன்ல ஜெயிச்சதும் வச்சாய்ங்க பாரு வெடி, ஊரே அல்லோலபட்டது. என்னத்த செய்ய போவுது தம்பின்னு நானும் அசால்ட்டாதான் இருந்தேன், ஆனா நல்லா செய்றாப்டி” என்றான் ஆட்டோக்காரன்.

“எது இப்படி வழிய மறிச்சுக்கிட்டு கூட்டம் போடுறதா?”

“தம்பியோட கூட்டாளி பயலுவோ வேலை ஆயி, அதிலேயும் உன் அத்த மகன் செய்ற அலம்பல பார்க்கணுமே” எனும் போதே, “பங்காளி பொறந்த நாளை முன்னிட்டு நாளைக்கு ராட்டினம் சுத்துறது எல்லாம் நான் ஸ்பான்சர் பண்றேன், என்ஜாய்டா” என அறிவிப்பு கொடுத்த மதன் இரவு நேரத்திலும் கூலிங் கிளாஸ் அணிந்திருந்தான்.

“நாங்க போயி எந்த ராட்டினத்தை சுத்த? எங்களுக்கும் ஏதாவது ஸ்பான்ஸர் பண்றது” எவனோ ஒருவன் கேட்க, “காளியப்பன் டீ கடைல நாளைக்கு யார் வடை வாங்கினாலும் ஃப்ரீடா. என் பங்காளி பர்த்டேக்கு இது கூட செய்யலைனா எப்படிங்கிறேன்?” என்றான்.

“ஏன் டா பரதேசிங்களா இப்படி என் மானத்தை வாங்குறீங்க?” சிரிப்பை அடக்கிக் கொண்டு சேரன் கேட்க, “மானம் போவுதா? வுடு மாப்ள, இதான் மொத தடவ போவுதா? கழுதை அந்த மானத்த நாளைக்கு தேடி கண்டு புடிச்சு உன் காலடில போடுறேன், இப்ப மரியாதைய ஏத்துக்க” என்ற செழியன் மஞ்சள் நிற சால்வை ஒன்றை அவனுக்கு அணிவித்தான்.

“என்னாடி இது? டான்ஸ் கீன்ஸ் ஆடுவாவோன்னு வந்து கெடந்தா இவனுங்க கேக்கு வெட்டுறானுவோ? ஒரு துண்டு இங்குட்டும் கொடுத்தா வாய அரைச்சுகிட்டே நாமளும் சைலன்ட்டா இருப்பம்ல?” நடுத்தர வயது பெண்மணி ஒருவர் சொன்னார்.

“இரு அத்தாச்சி, பொங்க சோறு தருவோம்” என ஒருவன் சொல்ல, “போங்கடா போக்கத்தவைங்களா!” என்றார் அந்த பெண்மணி.

மதுராவை பார்த்து விட்டு சேரனிடம் ஓடி வந்தவன் அவனது காதில் கிசு கிசுக்க பட்டென பின்னால் திரும்பினான் சேரன்.

ஆட்டோவுக்கு வெளியில் தலையை நீட்டி எட்டிப் பார்த்த மதுரா கேக் பூசப் பட்ட சேரனின் முகத்தை கண்டு விட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டே தலையை உள் இழுத்துக் கொண்டாள்.

“வருங்கால அமைச்சர், கட்சியின் விடி வெள்ளி, ஏழைகளின் இதய செம்மல்…” மைக்கில் மதனகோபால் கத்திக் கொண்டிருக்க, “இன்னும் ஒரு நிமிஷத்துல ஸ்டேஜ விட்டு அவன் இறங்கல… மவனே… செத்தான்டா அவன்!” கடுப்படித்தான் சேரன்.

“மாப்ளயோட பச்சக்கிளி முன்னாடி அவனை பங்கம் பண்ணாதீங்கடா. ஸ்பீக்கர ஆஃப் பண்ணுங்கடா” என செழியன் சொல்ல உடனே செயல் படுத்த பட்டது.

மதுரா சென்னை செல்கிறாள் என அறிந்து ஆட்டோ செல்வதற்கு நிமிடத்தில் வழியை ஏற்படுத்திக் கொடுத்தான் சேரன்.

“என்ன தம்பி இப்படி ஆகிப் போச்சு? பஸ்ஸ வுட்ருவோம் போல” சேரனை பார்த்து கவலையாக சொல்லிக் கொண்டே ஆட்டோவை ஓட்டி சென்றான் ஆட்டோக்காரன்.

சேரனை கடந்து செல்கையில் ஓரக் கண்ணால் அவனை கண்டு விட்டு காணாதது போல இருந்தாள் மதுரா.

அவசரமாக தன் கன்னத்தை தொட்டு பார்த்த சேரன் கேக்கின் பிசு பிசுப்பை உணர்ந்து கொலை வெறியோடு செழியனை பார்த்தான்.

விசிலடித்து யாரையோ கையால் சைகை காட்டி அழைத்த செழியன், “அர்ஜண்ட்டா ஒரு சொம்பு தண்ணி கொண்டாய்ங்கடா” என ஏவினான்.

வேகமாக குனிந்த சேரன் நண்பனின் பச்சை வேஷ்டியை கீழே இறக்கி விட்டு அதிலேயே அவனது முகத்தை அழுந்த துடைத்து விட்டு தள்ளி நிற்கும் அவனது பைக்கை நோக்கி ஓடினான்.

“அட கிராதகம் புடிச்ச பயலே! பச்ச வேட்டிய வெள்ள வேட்டியாக்கிட்டு ஓடுற பகுமானத்த பாரு, எங்குட்டு போறடா? நீ எந்த ஏழரைய இழுத்து வுட்டாலும் நான்தான் காரணம்னு உங்கொம்மா என்ன போட்டு மிதிக்கும்டா, டேய் டேய் இருடா மாப்ள, நானும் வர்றேன்” என செழியனும் சேரன் பின்னால் ஓடி சென்றான்.

ஆட்டோக்காரன் பீதி அடைந்தவனாக மதுராவை திரும்பி பார்க்க என்ன என்பது போல குழம்பியவள் பின்னால் திரும்பி பார்த்தாள். சேரன் பின் தொடர்வதை கண்டவளுக்கு அச்சமாகிப் போனது.

மதுராவுக்காக காத்திருந்த சென்னை பேருந்து அவள் வராததால் அப்போதுதான் புறப்பட்டு சென்றிருந்தது. சேரனும் செழியனும் அவ்விடம் வந்த போது ஆட்டோக்காரன் கவலையாகவும் மதுரா யோசனையாகவும் நின்றிருந்தனர்.

“பிரைவேட் பஸ்தான மாப்ள, போன் பண்ணியிருப்பாங்களே…” என்றான் செழியன்.

சேரன் கேள்வியாக மதுராவை பார்க்க, “போன் சைலன்ட்ல இருந்திருக்கு” என மெல்லிய குரலில் சொன்னாள்.

பைக்கிலிருந்து இறங்கிய செழியன், “பஸ்ஸுக்கு டைம் ஆச்சுன்னு தெரியும், பஸ் ஆளுங்க கால் பண்ணுவாங்கன்னு ரோசனை இல்லயா உனக்கு? அதெப்படி கரெக்ட்டா சமயம் பார்த்து உன் போன் சைலன்ட் மோட்’க்கு போகும்?” என அதட்டலாக கேட்டான்.

நல்ல மன நிலையிலேயே அவள் இல்லை. எதிர்காலம் வேறு பயப் படுத்திக் கொண்டிருந்தது. இன்று வீட்டில் நடந்த நிகழ்வுகளில் கைப்பேசியை எங்கே கவனித்தாள்?

வனராஜனின் மனைவி சரஸ்வதி ஒரு வகையில் சொந்தம்தான். அண்ணியாவதற்கு முன்பிலிருந்தே மதுராவுக்கு அவளை தெரியும். நல்ல தோழியாக இருந்தவள் இப்போது மாறி விட்டாள். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. அதற்கு தன் நாத்தனார்தான் காரணம் என பேசி விட்டாள்.

“தேவையில்லாம என் பொண்ண இழுத்து பேசாத” என அஞ்சலையும் சீறினார்.

“அப்படித்தான் இழுத்து பேசுவேன். இவளுக்கு எந்த நல்லதும் பண்ணாம காலம் முழுக்க எங்க தலையில கட்டணும்னு கனவு காணுறீங்களோ? எங்களால எல்லாம் இவளை சுமக்க முடியாது, வயசுப் பொண்ணு வாழற எங்கள பார்த்து அழுவுறதும் இவளை நினைச்சு நீங்க அழுவுறதுமா எந்நேரமும் அழுகை. அதனாலதான் இந்த வீட்ல ஒரு நல்லது நடக்க மாட்டேங்குது” என சொல்லி விட்டாள் சரஸ்வதி.

அதன் பின் மனைவியை வனராஜன் கண்டிக்க அவனிடமும் அவள் கோவமாக பேச சண்டையாகிப் போனது. தங்கையின் திகைத்த முகத்தை பார்த்து வனராஜன்தான் மனைவியை அடக்கி சண்டையை வளர்க்காமல் விட்டான்.

அதிலிருந்து இவள் கிளம்பும் வரை அஞ்சலையின் அழுகையும் புலம்பலும் தீர்ந்த பாடாக இல்லை. கிளம்பினால் போதும் என கிளம்பி விட்டாள் மதுரா. வழக்கமாக இரயிலில்தான் செல்வாள். எப்போதாவது டிக்கெட் கிடைக்காத போது பேருந்தில் போவாள். அப்போதெல்லாம் அண்ணன் உடன் வந்து ஏற்றி விடுவது வாடிக்கை.

பயணப் பொதிகள் அதிகம் இருந்தால் கூட பெரியப்பா வீட்டு காரை எடுத்து வந்து விடுவான். முதல் முறையாக இப்படி ஆட்டோவில் பயணிக்கிறாள். இது அஞ்சலையின் ஏற்பாடு.

தங்கை தனியே செல்வதில் வனராஜனுக்கு மிகுந்த வருத்தம் என்ற போதும் பிரச்சனையாக்க விரும்பாமல் அமைதியாக இருந்து விட்டான். அவனுக்குமே தங்கையின் வாழ்க்கையை நினைத்து பயம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

கைப்பேசியை ஏன் கவனிக்கவில்லை என்ற செழியனின் கேள்விக்கு விளக்கமாக எதுவும் சொல்லாமல் அமைதியாகவே நின்றாள் மதுரா.

“சரி ஏறு ஆயி, திருவாரூர் வரைக்கும் போயாவது வேற பஸ் ஏத்தி விடுறேன்” என்றான் ஆட்டோக்காரன்.

“கெளம்புங்க கெளம்புங்க…” என்றான் செழியன்.

“உட்கார சீட் கிடைக்குமா தெரியல, வழிய மறிக்காம இருந்திருந்தா அந்த பஸ்லேயே ஏத்தி விட்ருப்பேன். பாவம் பொம்பள புள்ள தனியா போவுது” என்றான் ஆட்டோக்காரன்.

“யோவ் எட்டு மணிக்கு மேல எவன்யா அந்த ரோட்ல ஆட்டோ ஓட்டிட்டு வருவான்? போற நீ இன்னும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலேயே கெளம்புறதுக்கு என்ன?” எனக் கேட்டான் செழியன்.

இரயில்வே கேட்டில் மாட்டிக் கொண்டதை ஆட்டோக்காரன் சொல்ல, கேட் மூடப் படும் நேரம் முன்பே தெரியாதா, விரைவாக வீட்டிலிருந்து புறப்பட என்ன என மதுராவிடம் செழியன் கேட்க, அதற்கு ஆட்டோக்காரன் ஏதோ பதில் பேச அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம்.

சேரன் மதுராவையே பார்த்திருக்க, அவளுக்கும் அவனது பார்வை தெரிந்தாலும் அவனது பக்கம் திரும்பாமல் நின்றிருந்தாள்.

சட்டென சேரனின் பைக் உறுமியது. செழியனும் ஆட்டோக்காரனும் பேச்சை நிறுத்தி விட்டு சேரனை பார்த்தனர். ஆக்சிலரேட்டரை இன்னும் திருகினான். மதுரா தலை நிமிர்வேனா என வீம்பு பிடித்தாள்.

சாதாரணமாக இருந்த சேரனின் முகம் கோவமாக மாறியது. பயந்து போன ஆட்டோக்காரன் மதுராவை ஆட்டோவில் ஏற சொல்ல, “மாப்ள என்னடா இது, கிளம்பலாம்” என்றான் செழியன்.

ஆட்டோவில் ஏறப் போனவளிடம் “ஏறுடி” என அதட்டல் போட்டான் சேரன்.

கலங்கிய கண்களோடு தன் பேகை எடுத்துக் கொண்டவள் தயங்கி தயங்கி அவன் பைக்கில் ஏறிக் கொள்ள ஆட்டோக்காரன் கலவரமாக பார்த்தான்.

“கிளம்பு மாப்ள, தோழரை நான் பார்த்துக்கிறேன்” என்ற செழியன் ஆட்டோக்காரன் தோளில் கை போட்டு, “அப்புறம் நம்மூர்ல ஆட்டோ ஓட்டணுமா இல்லயா? எங்கள மீறி இந்த விஷயத்தை லீக் பண்ணிடுவியளோ?” எனக் கேட்டுக் கொண்டே அவனை அசைய விடாமல் பிடித்துக்கொண்டான்.

“வேணாம் தம்பி, வனராஜா தம்பிக்கு சேதி தெரிஞ்சா ரகளை ஆகிப் போகும்” என்ற ஆட்டோக்காரனின் பேச்சை மதிக்காமல் பைக்கை கிளப்பியிருந்தான் சேரன்.

மூன்று வருடங்களுக்கு பிறகு அவனது பைக்கில் பயணம் செய்யும் மதுராவுக்குத்தான் அத்தனை பட படப்பாக இருந்தது.