ஆள வந்தாள் -10

அத்தியாயம் -10

“இத்தனை நாள் திருவிசாவ வம்பு சண்டை இல்லாத பயலுவோ நடத்தி காட்டிப்புட்டானுவளேன்னு காலைலதான் எமூட்டுல சொல்லிட்டிருந்தா. அப்படிலாம் சும்மா விட மாட்டோம்னு இந்தா ப்ரூ பண்ணிப்புட்டானுவளேப்பா!” என்றார் வயதானவர் ஒருவர். 

“ஆமாங்கிறேன், எப்பவும் ராத்திரிலதான் சண்டை கச்சேரி நடக்கும். இந்த தவணை பகல்லேயே சரவெடி வெடிச்சிப்புட்டாய்ங்கன்ன?” என்றார் இன்னொருவர். 

ஆமாம் சற்று முன்னர் இந்த இடம் அப்படித்தான் களேபரமாக இருந்தது. 

மதுராவுடன் பேசிக் கொண்டிருந்த தாயையும் மனைவியையும் கண்டுவிட்டு கோவமாக அவர்களை நெருங்கினான் வனராஜன். பேச்சு மும்முரத்தில் சேரனும் மோகனும் அவனை கவனிக்கவே இல்லை. 

வனராஜனுக்கு வீட்டு பெண்கள் மீதிருந்த கோவம் அர்ச்சனாவுடன் மதன் இருப்பதை கண்டதும் அவர்கள் பக்கம் திசை திரும்பி விட்டது. மதனை வெளுத்து வாங்க சரியான சந்தர்ப்பம் எதிர் பார்த்துக் கொண்டிருந்தவன் அதை சரியாக பயன் படுத்திக் கொண்டான். 

சத்தம் கேட்டு திரும்பிய சேரனும் மோகனும் மதன் அடிவாங்குவதை கண்டு பொங்கி விட்டனர். அடிபட்டிருந்த மதனை தனியே இழுத்து நிறுத்திய மோகன் அவனை ஆராய்ந்து கொண்டிருக்க வனராஜனுக்கும் சேரனுக்கும் சண்டையாகிப் போனது. 

சண்டையை பார்த்து விட்டு பெண்களால் அழதான் முடிந்தது. யாரையும் நெருங்க முடியவில்லை. 

பதறிப் போன பூங்கொடியும் மகனிடம் என்னவென விசாரிக்க, “அத்தை அவங்க அம்மா கூட பேச போனாங்க, நாங்க இங்குட்டுத்தான் நின்னுட்டு இருந்தோம். அந்த மாமா எப்ப வந்தாருன்னு தெரியலை, மதன் மாமாவை அடிச்சிட்டு இருந்தார், இப்ப நம்ம மாமாவும் அடிக்கிறார்” என்றான். 

மதுரா அவளது அம்மாவுடன் பேசப் போய் சண்டையாகி விட்டது என நினைத்துக் கொண்டாள் பூங்கொடி. 

அர்ச்சனா அங்கு எப்படி வந்தாள் என மதுரா விசாரிக்கவும் அவளிடம் மட்டும், “மதன் அத்தானை பார்க்க வந்தேன்,  அண்ணன் எங்களை பார்த்திட்டு, அதனாலதான் அத்தானை அடிச்சிட்டுது” என்றாள். 

“அத்தானை ஏன் தனியா பார்க்க வந்த நீ?” என்ற கேள்விக்கு அர்ச்சனா விழிக்க, விஷயத்தை ஊகித்துக் கொண்டாள் மதுரா. 

இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை அஞ்சலையும் சரஸ்வதியும் கவனிக்கவில்லை. அர்ச்சனாவும் திருவிழாவுக்கு வந்தவள் சண்டையை பார்த்து விட்டு இங்கு வந்திருக்கிறாள் என நினைத்துக்கொண்டனர். 

எப்படி சிதம்பரத்துக்கு செய்தி போனது என தெரியவில்லை. திருவாரூரில் இருந்தவர் ஆட்களை மட்டும் கோயிலுக்கு அனுப்பி வைத்து விட்டார். 

மோகன் கைப்பேசி வாயிலாக மாமனாருக்கும் செழியனுக்கும் தகவல் தந்திருக்க கந்தசாமிக்கு முன் ஆட்களோடு வந்து விட்டான் செழியன். 

இரவு அலங்காரத்துக்காக அமைக்க பட்டிருந்த விளக்குகள், டியூப் லைட்டுக்கள்,  நாடகம் போட அமைக்க பட்டிருந்த மேடை என எல்லாம் அடித்து துவம்சம் செய்யப் பட்டு விட்டன. 

பந்தோபஸ்துக்கு நின்றிருந்த நான்கு கான்ஸ்டபிள்களில் ஒருவர் வயதானவர், ஒருவர் பெண், மற்ற இருவர் புதிதாக பணியில் சேர்ந்தவர்கள். இந்த பெரிய கூட்டதுக்குள் நாம் நுழைந்தால் தங்களுக்குதான் பலத்த அடி படும் என பயந்து எஸ் ஐ க்கு தகவல் சொல்லி விட்டு தள்ளியே நின்றனர் காவலர்கள். 

மாற்றலாகி வந்திருந்த எஸ் ஐ’க்கு அந்த பகுதியை பற்றி அதிகம் தெரியாது. வரும் போதே போலீஸ் வேன் மற்றும் பத்து காவலர்களோடு வந்தவர் பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் அழைத்து சென்று விட்டார். 

அரசியல்வாதிகள் என்பது பின்னர்தான் எஸ் ஐ க்கு தெரிந்தது. பொதுவாக இது போன்ற சமயங்களில் கல்யாண மண்டபம், பள்ளிக்கூடம் போன்ற பொது இடத்தில் கூட்டத்தினரை வைத்திருந்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்து விடுவது வழக்கம். 

இந்த பகுதியில் பெரிய ஆட்கள் என்பதால் என்ன செய்யலாம் என எஸ் பி யிடம் கேட்டார் எஸ் ஐ. அடிக்கடி இவர்களுக்குள் இப்படி ஏதாவது முட்டிக் கொண்டே இருப்பதால் தான் திருத்துறைப்பூண்டி வருவதாகவும் அங்குள்ள காவல் நிலையத்துக்கு  அழைத்து வரும் படியும் சொல்லி விட்டார் எஸ்பி. 

போலீஸ் வேன் திருத்துறைப் பூண்டி  காவல் நிலையத்துக்கு புறப்பட்டு சென்று விட்டது.

கந்தசாமி சரவணனுடன் அங்கு வந்து சேர்ந்த போது மதம் கொண்ட யானை புகுந்த இடம் போல தென்பட்டது அவ்விடம். 

மதுராவுடன் அம்மா பேசிக் கொண்டிருந்ததை வனராஜன் கண்டதில் கோவத்தில் ஏதாவது திட்டி அம்மாவையும் மனைவியையும் இழுத்து சென்றிருக்க கூடும், அர்ச்சனாவுடன் மதன் இருந்ததை கண்டுதான் அடிதடி ஆகி விட்டது.

 இது மதுராவுக்கு புரிந்தாலும் திருமணம் ஆகாத அர்ச்சனா பற்றி எதுவும் சொல்வது சரியாக இருக்காது என்பதால் சண்டைக்கான காரணத்தை அவள் சொல்லவில்லை. 

“இப்பதான சண்டை ஓஞ்சது, அதுக்குள்ள இவளுக்கு என்ன உறவு கொண்டாட வேண்டி கெடக்குதுங்கிறேன்? இவளை கோவமா ஏதோ பேசின அந்த சண்டாளப் பயல நம்ம மதன் தடுக்க போய் அந்த குடி கெடுத்தவன் மதனை போட்டு அடிச்சிருக்கான். சேரன் தடுக்க போய் அவங்களுக்குள்ள சண்டையாகி போயிட்டு. எங்கேருந்துன்னு தெரியாம ஆள் அம்பு படைனு வந்து சேர்ந்துட்டானுவோ. நம்ம செழியனும் ஆள் திரட்டிகிட்டு வரலைன்னா இந்நேரத்துக்கு நாம மோசம் போயிருப்போம் ப்பா” அழுகையும் ஆங்காரமுமாக சொல்லி முடித்தாள் பூங்கொடி. 

“இந்தா நீ பாட்டுக்கு எம்புருஷனை சண்டாளன் குடி கெடுத்தவன்னு எல்லாம் பேசுற, மரியாதையா இருந்துக்க, இல்லைனா ஆஞ்சிபுடுவேன் ஆஞ்சி…” என அலறினாள் சரஸ்வதி. 

அஞ்சலை தன் மருமகளை அடக்க, எதிர்த்து பேசப் போன பூங்கொடியை அடக்கினார் கந்தசாமி. 

மகள், மருமகள் மற்றும் பேரப் பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி வைத்த கந்தசாமி சின்ன மகனோடு திருத்துறைப்பூண்டி கிளம்பினார். 

மோகனையும் காவலர்கள் அழைத்து சென்றதால் அவனது அப்பா கந்தசாமியோடு சென்றிருக்க அவனது அம்மா சேரனின் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்த குடும்பத்தில் பெண் எடுத்ததால்தான் என் மகனுக்கு இப்படி அவமானம் ஆகி விட்டது என மோகனின் அம்மா சத்தம் போட்டவர் பேரப் பிள்ளைகளை தன்னோடு அழைத்து சென்று விட்டார். 

 கனகாவை பற்றி கேட்கவே வேண்டாம். அனைத்திற்கும் காரணம் மதுராதான் என பேசி பேசியே அவளை ஒருவழி செய்து விட்டார். போதாத குறைக்கு பூங்கொடியும் சேர்ந்து கொண்டாள். 

இவர்கள் பேசுவதை எல்லாம் மதுரா பொருள் செய்யவே இல்லை. எந்த பிரச்சனையும் இல்லாமல் காவல் நிலையம் சென்றவர்கள் அனைவரும் நல்ல படியாக வீடு திரும்ப வேண்டுமே என்ற கவலைதான் அவளுக்கு. 

வேன் காவல்நிலையம் சென்ற போது எஸ் பி அங்கு இல்லை. எப்படியும் கேஸ் எதுவும் போட முடியாத படி செய்து விடுவார்கள், போலீஸ் மீது பயமே இல்லை, சற்று நேரமாவது திண்டாட வைக்க வேண்டும் என முடிவு செய்த எஸ் பி வேண்டுமென்றே இங்கு வருவதை தாமதப் படுத்தினார். 

எஸ் பி வந்த பிறகுதான் எதுவாக இருந்தாலும் முடிவு செய்யப் படும் என கூறி காவல் நிலைய வளாகத்தின் உள்ளே வேனை நிறுத்தி வேனுக்குள்ளேயே அனைவரையும் வைத்து விட்டனர். 

கந்தசாமி அவருடன் சின்ன மகன், சம்பந்தி, பிரஸிடெண்ட் சின்னையன், மதனின் அப்பா, செழியனின் அப்பா இன்னும் ஊர்க்காரர்கள் சிலர் என அழைத்து வந்திருக்க சிதம்பரமும் அவரது படையோடு வந்து நின்றார். 

ஆக மொத்தத்தில் திருத்துறைப்பூண்டி அன்றைய தினம் பர பரப்பாக இருந்தது. இத்தனை நபர்கள் இருந்தும் காவல் நிலையத்தில் யார் பேச்சும் எடுபடவில்லை. 

கந்தசாமி, சரவணன் போன்றவர்கள் வீட்டினரின் கைப்பேசி அழைப்புக்கு சரியான பதில் தராமல் எரிந்து விழுந்தனர். 

இரு தரப்பிலும் துணைக்கு வந்த ஆண்களின் வீட்டிலிருக்கும் பெண்கள் அவர்களிடம் கைப்பேசியில் அழைத்து விவரம் கேட்க “சும்மா சும்மா இப்படியே பண்ணிட்டு இருந்தா நையாண்டியா போயிட்டுதான்னு உள்ள தூக்கி வச்சிட்டாய்ங்க” எனவும், “இந்த தவணை களி திங்க வேண்டியதுதான், அப்போதான் இவனுங்களுக்கு புத்தி வரும்” எனவும் ஆளுக்கு ஒன்று அடித்து விட்டார்கள். 

இப்படியாக ‘சேரன் தம்பி அவன் கூட்டாளி பயலுவோ அவன் மாமான்னு கூண்டோடு ஜெயிலுக்கு போயிட்டானுவோ, லாக்கப்ல அடி வெளுத்து வுட்டாய்ங்களாம்’ என்ற வதந்தி ஊருக்குள் பரவியது. 

மதுரா, கனகா, பூங்கொடி என அனைவரும் அடி வயிறு கலங்கிப் போய் இருந்தனர்.

 அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள் துக்கம் விசாரிப்பது போல வந்து பேசி விட்டு வெளியில் போய், “ஆம்பளைங்க செயிலுக்கு போன வருத்தம் இத்துனூண்டு கூட இல்லங்றேன், நல்லா அம்மிக் கொழவியும் ஆட்டுக் கொழவியும் கணக்கா திம்மு திம்முன்னு உட்கார்ந்து கெடக்காளுவோ!” என புறணி பேசி சிரித்துக்கொண்டனர். 

“சும்மாவான்ன? இந்த பூங்கொடி கழுதை போன வருஷம் தீவுளி வரிசைலேருந்து அர கவுளி வெத்தல கேட்டதுக்கு இல்லேன்னு என்கிட்ட புளுவுனா, இந்தா ஆண்டவன் கூலி கொடுத்துப்புட்டான்ன?” என வாய்க்கு வந்ததை சொன்னார் ஒரு வயதான பாட்டி. 

“இந்த மதுரா குட்டிய சேரன் பய இழுத்திட்டு வந்ததிலேருந்து அந்தூட்ட ஆட்டித்தான் படைக்கிறா, சாதகத்துல என்ன தோஷமோ தும்பமோ?” என மதுராவை காரணமாக்கினார் ஒரு பெண். 

இப்படி ஒரு பக்கம் என்றால், “அடடா! சேரன் நல்ல புள்ளையாச்சே, அதுக்கா இப்படி ஒரு சோதனை?” என நிஜமாகவே வருந்தியவர்களும் இருந்தனர்.

மதியத்துக்கு மேல்தான் எஸ் பி வந்தார். அர்ச்சனாவின் பெயரை எடுக்கவில்லை வனராஜன், இன்னும் சேரனுக்கும் அவள் பற்றி தெரியாது, தெரிந்தாலும் சொல்லியிருக்க மாட்டான். மதன் அங்கு வர அவனை வனராஜன் அடித்து விட்டான் என்பதுதான் அவனது நினைப்பும். 

மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த பிரச்சனையின் போதே இப்போது இருக்கும் எஸ் பிதான் இந்த சரகத்தில் பணியில் இருந்தார். 

இப்போது தன் மனைவியை தன்னுடன் அழைத்து வந்து விட்டதால் ஆத்திரத்தில் தன் நண்பனை வனராஜன் அடிக்க தான் பதிலுக்கு தாக்க என பிரச்சனை வலுத்து விட்டதாக சொன்னான் சேரன்.