ஆயுள் கைதி 11
விழி விரித்து பார்த்தவளை நோக்கி என்னவென அவன் ஒற்றை புருவம் உயர்த்த, பதட்டத்துடன் தலையசைத்து விட்டு குனிந்து கொண்டாள். மேலும் அவன் இரண்டு அடி வைத்ததில் பிடிமானம் இல்லாமல் தடுமாறியவள் அவன் கழுத்தில் கைகோர்த்து பிடித்து கொண்டாள்.
ஒவ்வொரு அடியையும் மெதுவாய் வைத்து குடிலை அடைந்தவன், உள்ளே சென்றதும் பின்னங்காலால் கதவை அடைக்க, ஆட்டோமெட்டிக் லாக் அடைத்து கொண்டது. முன்னை விட மெதுவாய் அடி எடுத்து வைத்து முன்னேறியவன் கட்டிலில் அவளை விட்டுவிட்டு முகம் பார்க்க, கண்களை இறுக்கி மூடி இருந்தாள்! மென்மையாய் அவள் இரு கன்னத்தையும் கைகளால் ஏந்த
, விழி திறந்து பார்த்தவளிடம், கண்களால் அவன் சம்மதம் கேட்க, அந்த ஒரு நொடி
அவன் செயலில் மொத்தமாய் அவனிடம் வீழ்ந்து விட்டாள் சாகித்தியா. வெட்கம் வந்தாலும் சமாளித்தவளாய் அவன் கண்களை நேராய் பார்த்து சம்மதமாய் தலையாட்டினாள்.
அதன்பின் அவளது சிந்தனையை தடை செய்து மொத்தமாய் அவள் சிந்தையை நிறைத்தான் அவள் கணவன்! விருப்பத்துடன் தன்னை அவளிடம் இழந்தவன் அவளை தன்னவளாய் ஆக்கிக் கொண்டான்.
கண்கள் கூச மெதுவாய் கண்விழித்தாள் சாகித்தியா. காற்றாடி ஓடும் சத்தம் மட்டுமே அவ்வறையில்! கண்களை மெதுவாய் தேய்த்தபடி அறையை சுற்றி பார்வையை சுழல விட்டாள். அங்கிருந்த சோபாவில் அமர்ந்து எதிரே இருந்த டீபாயில் காலை வைத்தபடி ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தான் ஈஸ்வரன். அவன் அமர்ந்திருந்த தோரணை சிக்கென்று மனதில் ஒட்டிக்கொண்டது. அவனை ரசித்தவாறே சிறிது நேரம் படுத்திருந்தவள் மெல்ல எழுந்தாள். அரவம் கேட்டு நிமிர்ந்தவனும் அவள் விழிகளை சந்திக்க, உயிர் வரை ஊடுருவிய பார்வையில் உடல் சிலிர்க்க மனதிற்குள் செல்ல சிணுங்கலுடன் பார்வையை விலக்கி கொண்டவள் எழுந்து தன் உடையை எடுத்து கொண்டு குளிக்க சென்றாள்.
அவள் கிளம்பி வரும்பொழுது குடிலுக்கு வந்திருந்த உணவை தட்டுகளில் பரிமாறியபடி இருந்தான் ஈஸ்வரன். பழக்கப்பட்ட மௌனம் இருவரிடத்திலும்! அமைதியாய் உண்டு முடித்ததும் அவனுக்கு இங்கே வேலையிருக்கும் என்பது அவளுக்கு தெரியும் கூடவே அவள் இங்கிருந்து ஒன்றும் செய்யப் போவதில்லை. எனவே,
“நான் வீட்டுக்கு கிளம்பறேன்…” என்றாள் உண்டு முடித்ததும்..
சரி என்றவன் அவள் கிளம்ப தயாரான பொழுது மேஜையில் இருந்த அவளது கார் சாவியை எடுத்து கொள்ள,
கேள்வியாய் பார்த்தவளிடம்,
“வீட்டில ஒரு பைல் எடுக்கணும்…” என்று விட்டு முன்னே நடந்தான்.
வீட்டுவாசலில் கார் நின்றதும் இறங்கியவள், விடைபெறும் விதமாய் தலையசைக்க, ஈஸ்வரின் கண்கள் சரியென மூடித் திறந்தன. இரண்டடி முன்னே வைத்தவள் சட்டென்று திரும்பி,
“பைல்….” என்றாள் அவன் மறந்துவிட்டானோ என்ற நினைப்பில்,
அவளது விழிகளை நேராய் ஒரு நொடிக்கும் மேலாய் பார்த்தவன், ஒன்றும் பேசாமல் கூலர்ஸை கண்ணில் மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
கார் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்து நின்றவள், வீட்டின் உள் வந்ததும் நேராய் அறைக்கு சென்றாள். கதவை சாத்திவிட்டு நிமிர்ந்தவளுக்கு அதற்கு மேல் இயல்பாக இருப்பதை போல காட்ட முடியவில்லை. முகம் முழுவதும் வெக்கமும் புன்னகையும் போட்டி போட ஓடிச்சென்று கட்டிலில் அவன் தலையணையை இறுக்கி கட்டிக்கொண்டு அதில் முகம் புதைத்து கொண்டாள்.
ஈஸ்வரன் மாலை வீடு திரும்பி தன்னிடம் இருந்த சாவியில் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்லும் பொழுது வீடு மொத்தமும் இருளில் மூழ்கி இருந்தது. ஹாலின் லைட்டை போட்டவன் மேலே பார்க்க, அவர்களது அறையிலும் விளக்கு எரியவில்லை. யோசனையுடன் படியேறியவன் ஓரளவிற்கு நிலைமையை யூகித்தவனாய் அறையின் விடிவிளக்கை போட்டான். அங்கே அவன் படுக்கும் பக்கம் அவனது தலையனையை நெஞ்சோடு அணைத்தபடி தூங்கி கொண்டிருந்தாள் அவன் மனைவி! அந்த விடிவிளக்கில் அவளை சரியாக காண முடியவில்லை என்று நினைத்தானோ! பெரிய விளக்கையே போட்டவன் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான். சிறிது நேரம் சென்ற பிறகே அவள் இருக்கும் நிலை பார்த்தால் மதியமும் சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று தோன்ற, வேகமாய் கீழே சென்றவன் ஒருமுட்டையை உடைத்து மஞ்சள், மிளகு தூள்,உப்பு மட்டும் போட்டு எளிய ஆம்லெட் ஆக்கினான்.பின் பாலையும் சூடு பண்ணி ஒரு பெரிய கிளாசில் ஊற்றிக்கொண்டு அறைக்கு எடுத்து வந்தான். அவள் தூக்கத்திற்கு அழைத்தாள் எழுந்துகொள்ள மாட்டாள் என்று புரிய, தட்டை மேஜையில் வைத்து விட்டு அருகில் வந்து தட்டி எழுப்ப, அசையவே இல்லை அவள். அருகில் அமர்ந்து கன்னத்தை தட்டியவாறே,
“சகி…..”என்று அழைக்க பயங்கர தூக்க கலக்கத்தோடு கஷ்டப்பட்டு இமைகளை பிரிக்க முயன்று தோற்றாள்.
“சாப்பிட்டு படுக்கலாம் சகி…” என்றபடி அவளை மேலும் தூங்க விடாமல் எழுப்பியவன், அவளிடம் தட்டை கொடுக்க முற்பட, அவளோ தூங்கி வழிந்தாள். இது சரிப்படாது என உணர்ந்தவனாய் அவனே ஊட்ட ஆரம்பித்திருந்தான். தூக்கத்திலேயே வாங்கி கொண்டவள் கடைசியில் பாலையும் அப்படியே குடித்து முடித்தாள். தட்டையும் கிளாசையும் வைத்து விட்டு திரும்பி பார்க்க, மெத்தையில் பாதி சாய்ந்து சொருகிய விழிகளோடு அமர்ந்திருந்தவளின் இதழ்களில் பாலின் அடையாளம்.
மென்முறுவலுடன் அவழிதல்களை விரல்களால் துடைத்தான். அவ்வளவு தான் அப்படியே தூக்க கலக்கத்தில் அவன் நெஞ்சில் சரிந்தாள் சாகித்தியா. ஈஸ்வரின் இதழ்கள் விரிய அவளை குனிந்து பார்த்தவன், முகத்தில் விழுந்த முடிகற்றைகளை ஒதுக்கி விட்டு நிமிர்ந்து அவளை சுற்றி கைகளை போட்டு அணைத்தவாறு விழிகளை மூடியபடி அமர்ந்து கொண்டான்.