இத்தனை வருடம் கழித்து இப்போது தான் பாட்டி வீடு சொந்தம் என்று ஒன்று கிடைக்க, ஆர்வம் தான். மகிழ்ச்சியுடனே அம்மாவின் ஊரை பார்த்தாள் பெண்.
“இங்க என்ன ஸ்பெஷல்ன்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டு போகணும்” என்று நினைக்க, எதிரில் ரகுராம்.
யாரிடமோ பேசி கொண்டிருந்தவனை இப்போது தான் வெளிச்சத்தில் நன்கு பார்த்தாள். அவன் தானே! நெடு நெடுவென அரும்பு மீசையுடன் இருந்தவனின் பளிச் சிரிப்பு அவனை கொஞ்சம் பார்க்க வைத்தது.
விசித்திரமான சூழ்நிலை. இது எப்படி, தொடருமா, நடக்குமா, பலிக்குமா என்று ஒன்றும் தெரியவில்லை. அண்ணா சொல்வதை பார்த்தால் வாய்ப்பில்லை.
ப்ரவீன் அளவு இல்லையென்றாலும் அவளுக்கும் வீட்டில் நடப்பது ஓரளவு தெரியும். தன்னை இளவரசியாக நடத்தும் பாட்டிக்கு அம்மாவை பிடிக்காது என்று.
அம்மாவின் பின்புலம் பாட்டிக்கு பிடிக்கவில்லை. தங்களுக்கு சம்மமான குடும்பத்தில் இருந்து வந்தவள் இல்லை என்பதை அவரின் பேச்சை வைத்து உணர்ந்திருந்தாள் மகள்.
அதனாலே என்னமோ பாரதி அண்ணன் மகனுக்கு தன்னை பேசியிருக்கிறார் என்று தெரிந்த போது முழுமனதாக மறுக்க முடியவில்லை. பண்டிகை நாட்களில் தனியே கண்ணீர் சிந்தும் அம்மாவின் கண்ணீர் இவளை கட்டுப்படுத்தி வைக்கிறதோ? அவளுக்கே புரியவில்லை.
என்னவா இருந்தாலும் என்ன, இன்னைக்கு ஒரு நாள் அம்மா சொன்னதுக்காக! பெண் மூச்சை இழுத்துவிட, ரகுராம் இவள் பக்கம் திரும்புவது தெரிந்த்து.
ஜன்னல் வழி நிலா போன்று நின்றிருந்த பெண்ணை ரகுராம் நொடி பார்த்து விலகி சென்றான்.
அழகி! யப்பா கைன்ட் ஆப் அழகி!
இவளுக்கு ஏன் அத்தை இவ்வளவு அவசரப்படுறாங்க?
“நிச்சயம் பண்ணாலும் இது ஒர்க் அவுட் ஆகுமா?”
தனக்கான பெண் என்று தெரிந்தும் அவளை ரசிக்க ஏதோ தடை. என்ன என்று யோசித்தபடி சபைக்கு வந்தான்.
எல்லாம் தயாராக இருந்தது. பாரதி பக்கம் மாமா வீட்டு ஆட்களே இருந்தனர். ப்ரவீன் அவர்களுடன் அமர்ந்தான். எதிரில் அருணகிரி நிர்மலமான முகத்துடன் அமர்ந்திருந்தார்.
பாரதி படக்படக்கென எகிறும் குதிக்கும் மனதுடன் நின்றிருந்தார். முதல் முறை தனியே இவ்வளவு பெரிய முடிவை எடுத்து செயல்படுத்தி கொண்டிருக்கிறார்.
கணவனுக்கு தெரியாமல் செய்வதில் அவ்வளவு வருத்தம். ஆனால் என்னை இந்தளவு கொண்டு வந்ததும் இவர்கள் எல்லாம் தானே. மனதை தேற்றி நிமிர்ந்து நின்றார்.
நிச்சயப்பத்திரிக்கை வாசித்தனர். முதலில் பெரியவர்கள் பெயர் சொல்லி, அருணகிரி, பத்மாவின் இளையமகன் ரகுராமுக்கும்.. தணிகைவேல், பாரதியின் இளயமகள் ஜனக்நந்தினிக்கும் திருமண உறுதி செய்யப்படுகிறது என்றனர்.
ரகுராம் நெஞ்சும், உள்ளே இருந்தவளின் நெஞ்சும் தடக்கென்றது. இணைந்த பெயர்கள், எடுக்கப்பட்ட திருமண நிச்சயம் இருவர் மனதிலும் ஒரு அழுத்தத்தை ஏற்றி வைத்தது.
பெண்ணை சபைக்கு அழைத்து வர, புடவை கொடுத்தனர். வாங்கி வைத்து கொண்டதுடன், ஜோடியாக நிற்க வைக்கபட்டனர்.
இடைவெளி விட்டு நின்றவர்களை சபையில் விழுந்து வணங்க சொன்னார்கள். இருவரும் ஜோடியாக வணங்கி நிற்க, “மாத்த மோதிரம் வாங்க கூட நேரம் இல்லை” என்றனர்.
“அதான் மாப்பிள்ளை கழுத்துல செயின் இருக்கு இல்லை. கழட்டி போட்டு விடுப்பா” என்றார் மாமா.
ரகுராம் அமைதியாகவே நின்றான். என்னமோ செய்ய தோணவில்லை.
“என்னப்பா போட்டுவிடு” திரும்ப குரல் வந்தது.
ரகுராம் திரும்பி கேள்வியாக அவளை பார்க்க, பெண் புருவம் உயர்த்தினாள்.
“கஞ்ச மாமா ஒரு செயினுக்கு இவ்வளவு யோசிக்கிறார்”
ஒருபவுன் செயின் மெலிதாகவே இருந்தது. பக்குவமாக கழட்டி அவள் கையில் கொடுக்க, “நீயே போட்டுவிடுப்பான்னா கையில் கொடுக்கிற” என சுற்றிலும் சிரிப்பு சத்தம்.
“எதே..” என்ற ப்ரவீன் அலறல் சத்தம் அதில் அடங்கி போனது. பெண்ணுக்கும் அதிர்வு தான்.
“அட என்னப்பா போட்டுவிடு” என்றார் பெரியப்பா.
ரகுராம் மூச்சை இழுத்துவிட்டு அவள் அருகில் சென்றான். தன் நெஞ்சுக்கே இருந்தாள் பெண். அவளின் கழுத்தை சுற்றி செயின் கொண்டு சென்றவன், மெல்லிய குரலில் “என்னோட சம்பளத்துல சேர்த்து வைச்சு வாங்கினது. பத்திரம்..” என்றவன் பின்னால் கொக்கியை மாட்டினான்.
காதோரம் ஒலித்த அவன் குரலை பெண் கிரகிக்க முயன்றபடி செயினை சரியாக இழுத்துவிட்டாள். ரகுராம் அவனின் செயின் அமரும் இடம் பார்த்து, அவளையும் பார்த்து கொண்டான்.
பாரதிக்கு பரிபூரண திருப்தி. கண்கள் கலங்கி போக, “என்ன நடக்குது இங்க?” என்ற அலறல்.
எல்லாம் திரும்பி பார்க்க, ராஜேஸ்வரியும், தணிகைவேலும் உச்சகட்ட அதிர்ச்சியில் நின்றிருந்தனர். பாரதிக்கு அவர்கள் வருவது தெரியும் என்பதால் அமைதியாகவே இருந்தார்.
ப்ரவீன் முன் சென்று, “பாட்டி” என, “என்னடா இதெல்லாம்” என்று தணிகைவேல் மகனிடம் கொதிப்பாக கேட்டார்.
ராஜேஸ்வரி மருமகளை தேடி ஆங்காரமாக பார்த்தவர், ரகுராம், ஜனக்நந்தினிக்கு இடையில் சென்று நின்றவர், பேத்தி கையை தன்னுடன் பிணைத்து கொண்டார்.
ரகுராம் அவரை பார்க்க, ராஜேஸ்வரி மருமகளை தான் பார்வையால் எரித்து கொண்டிருந்தார்.
ரகுராம் முதல் முறையாக அவரை பார்த்தவன், தானே பாரதி பக்கம் நின்றான். “அடடே வாங்க சம்மந்தியம்மா நல்ல நேரத்துல தான் வந்திருக்கீங்க. உட்காருங்க. மாப்பிள்ளை நீங்களும் உட்காருங்க” பெரியப்பா அவர்களை வரவேற்க, ராஜேஸ்வரிக்கு பற்றி கொண்டது.
“யாருக்கு யார் சம்மந்தியம்மா?” என்றார்.
“நீங்க தான் எங்களுக்கு சம்மந்தியம்மா. எங்க பொண்ணு உங்க மகன் கையால் தாலி வாங்கி உங்க வீட்ல தானே குடித்தனம் பண்ணுது” என்றார் பெரியப்பா அழுத்தமாக.
“முதல்ல இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு கொஞ்சம் சொல்றீங்களா?” தணிகைவேல் பொறுக்க முடியாமல் கோவமாக கேட்டார்.
“என்னை கேட்காம என் மகளுக்கு நிச்சயமா?” தணிகைவேல் கத்தவே செய்தார்.
தன் குடும்பம் தனக்கு தெரியாமல் கரூர் வந்திருக்க, என்னவோ ஏதோ என்று தான் அம்மாவுடன் கிளம்பி வந்தார் தணிகைவேல். ஆனால் இங்கு நிச்சயம் அல்லவா முடிந்திருக்கிறது. பாரதியை நம்ப முடியாமல் பார்த்தார் கணவர்.
ப்ரவீன் எப்படி சமாளிக்க என்று திகைக்க, ஜனக்நந்தினியோ பாட்டியின் கைபிடியில் சிக்கியிருந்தாள்.
“யாரை கேட்டு என் பேத்திக்கு நிச்சயம் பண்ணீங்க?” ராஜேஸ்வரி குரல் உயர்ந்து ஒலித்தது.
“பெத்தவ சொல்லி தான்” என்றார் மாமா.
“அப்போ பெத்தவன், வீட்டுக்கு பெரியவ எல்லாம் தேவையில்லையா?” ராஜேஸ்வரி கேட்டு வைத்தார்.
“தேவை தான் சம்மந்தியம்மா. ஆனா பாரதி ஆசைப்பட்டதுன்னு”
“அவளுக்கு எப்போவும் தகுதியில்லாத இடத்துல தான் ஆசை முளைக்கும்” ராஜேஸ்வரி சொல்ல, பாரதி முகம் இறுகியது.
“நிச்சயம் முடிஞ்சது சம்மந்தியம்மா. நீங்களும் சபையில ஒரு வார்த்தை பேசிட்டா முடிச்சுக்கலாம். கல்யாணம் உங்க வசதிக்கு ஏத்தது போல”
“அதை நாங்க பார்த்துகிறோம். இப்போ கிளம்பலாமா?” என்றார் ராஜேஸ்வரி. பேத்தியை இங்கிருந்து உடனே அழைத்து சென்றுவிட வேண்டும் என்பதில் திண்ணமாக இருந்தார்.
தணிகைவேலுக்கு அங்கு நிற்கவே பிடிக்கவில்லை. அப்போ நான் யாரு? என்ற கேள்வி அவருள் சுனாமியாய் சுழன்று கொண்டே இருந்தது.
பாரதிக்கு இப்போதே கிளம்ப வேண்டுமா என்றிருந்தது. ராஜேஸ்வரி பேத்தி கை பிடித்து நடக்க, “இருங்க சம்மந்தியம்மா சாப்பிட்டு போங்க” என்றார் மாமா.
“இல்லை. நாங்க கிளம்பனும்”
“நிச்சயம் முடிச்ச புள்ளைங்க கை நனைக்காம எப்படி சம்மந்தியம்மா?” என எல்லாம் நிற்க, ராஜேஸ்வரி பல்லை கடித்தார்.
சுற்றி உறவுகளாக நிற்க, அவர்களை மீறி கிளம்ப முடியாது என்பது போல இருந்தனர். “மஞ்சுளா பந்தி போடு” என்றார் அருணகிரி வீட்டு பெரியவராக. ராஜேஸ்வரி திரும்பி அவரை முறைப்பாய் பார்க்க, “போ மருமக கூட உட்காருபா” என்றார் மகனிடம்.
ரகுராம்க்கு அதிசய ஆச்சரியம். ஜனக்நந்தினியை பார்க்க, அவளுடன் ராஜேஸ்வரியும் வந்தவர் இருவருக்கும் இடையில் அமர்ந்தார். “நீயும் உட்காரும்மா” என்று பாரதியை அழைத்து அமர வைத்தார் பத்மா.
பாரதி மறுக்காமல் அமர்ந்து மனதார உண்டார். நிச்சய ஜோடியும் சாப்பிட்டு முடிக்க, ராஜேஸ்வரி தொட கூட இல்லை.
ப்ரவீன் அப்பாவுடன் வெளியே நின்றான். பாரதி எல்லோருக்கும் சொல்லி கொண்டார். உறவுகள் அவருக்கு துணை நின்றது குறித்து நெகிழ்ச்சியான கண்ணீர் அவரிடம்.
ஜனக்நந்தினியும் அம்மாவை பின்பற்றி எல்லோருக்கும் சொல்லி கொள்ள, பத்மா, அனுஷா, மஞ்சுளா எல்லாம் அவள் கை பிடித்து கொண்டனர். உறவுகளை கிளம்பும் நேரம் தெரிந்து கொண்டாள் பெண்.
ராஜேஸ்வரி பேத்தி கை பிடித்து காருக்கு அழைத்து வர, ஏறும் முன் ரகுராம் பக்கம் அவள் பார்வை சென்றது.
“இனி இவளை பார்ப்போமா?” அவளையே பார்த்திருந்தவன் மனதில் அந்த நேரம் அது தான் தோன்றியது.