புது தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை தொடங்கி ஒரு வாரம் ஆகியிருக்க, ஜனக்நந்தினியும் மாமியார் வீட்டில் ஒன்ற ஆரம்பித்தாள். அசைவ விருந்தும், முக்கிய உறவினர்களின் விருந்தும் இந்த நாட்களிலே முடிந்திருந்தது.
“இன்றைக்கு எங்கும் கிடையாது. அவ்வளவுதான் விருந்து முடிஞ்சது” என்று பத்மா சொல்லிவிட, ரகுராம்க்கு ஆசுவாசம்.
அனுஷாவும், ராமமூர்த்தி தம்பதியும் அவர்கள் இருப்பிடத்துக்கு திரும்பினர். பத்மா வழக்கம் போல தறிக்கு சென்றார். நாள் முழுதும் இவர்கள் மட்டும் தான்.
காலை உணவு முடிந்ததும், மனைவியை அறைக்கு இழுத்து வந்துவிட்டான். “யாராவது வந்தா” என்று ஜனக்நந்தினி கேட்க,
“வந்தா திரும்பி போகட்டும்” என்றவன், அவளை மடியில் இருத்தி கொண்டான்.
“எனக்கு தறியை பார்க்கணும். அத்தையோட போக நினைச்சேன்” என்றாள் அவள் சுணக்கத்துடன்.
“அத்தை கூட போறியா? அப்புறம் உன் புருஷன் எதுக்கு இருக்கான்?” அவள் காதை கடித்து வைத்தான்.
“இன்னும் என்ன இருக்கு. எல்லாம் தான் கொடுத்தாச்சு” பெண் முணுமுணுக்க,
“இருக்கு. இதெல்லாம்” என்று அவள் காதில் சொல்ல.
“ச்சீ” என்று வெட்கத்துடன் அவன் நெஞ்சில் அடித்தாள் பெண்.
“ச்சீயா. உனக்கு அந்த டேஸ்ட் தெரியல. அதான். அனுபவிச்சு பாருடி” என்றவன், அவளுக்கு அதை பழக்கியே விட்டான்.
“உங்களோட முடியல. எத்தனை முறை தான் குளிக்கிறது” ஜனக்நந்தினி சோர்வுடன் குளியறைக்குள் நுழைய,
“ரொம்ப டையர்டா இருக்கியே? எனி ஹெல்ப்” என்று கேட்டான் கள்வன்.
“தேவையே இல்லை” பெண் கையெடுத்து கும்பிட,
“அது எப்படி?” என்று அவளுடனே நுழைந்துவிட்டான்.
மதிய உணவுக்கு தான் கீழிறங்கினர். பத்மா உணவு எடுத்து சென்றிருக்க, ஹாலிலே மனைவியுடன் நேரம் செலவழித்தான்.
“தறிக்கு கூட்டிட்டு போங்க” என்று அவன் கன்னம் பிடித்து கெஞ்சுதலாக கேட்டாள்.
“சரி கிளம்பு” என்றவன், பைக்கில் தறிக்கு சென்றான். கணவன் தோளில் கை வைத்து அவன் வாசம் சுவாசிக்க பயணிப்பது பிடித்தது. நெருக்கத்தை கூட்டினாள்.
“வீட்டுக்கு போயிடலாமா” என்றான் அவன் மயக்கத்துடன்.
“நான் தள்ளிட்டேன்” என்று அவள் நகர,
“ஹாஹா” சிரித்தவன், அவள் கை பிடித்திழுத்து தன்னோடு முட்ட வைத்தான்.
“ஸ்ஸ்.. நானே வந்திருப்பேன்” பெண் முகம் சிவக்க, கணவன் கண்ணடித்தான்.
ஊர்ந்து, ஊர்ந்து ஒரு வழியாக தறிக்கு வந்துவிட, ஜனக்நந்தினி ஆர்வமாக பார்த்தாள். “வாம்மா” என்றழைத்த பத்மா, “வீட்லே ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே. ஒரு வாரமா அலைச்சல்” என்று மகனிடம் கேட்டார்.
“நான் தான் கேட்டேன் அத்தை. இங்க வர ஆசையா இருந்தது” மருமகள் சொல்ல,
“சரி போய் பாருங்க” என்று வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
அருணகிரி உள்ளே இருக்க, அவருக்கு கைகாட்டிவிட்டு மனைவியை தறி நெய்யும் இடத்துக்கு அழைத்து வந்தான்.
“இது கைத்தறி” என்று காட்ட,
“எனக்கு செஞ்சு காட்டுங்களேன்” என்று கேட்டாள்.
ரகுராம் அமர, மனைவி ஆர்வத்துடன் அவனை நெருங்கி நின்றாள்.
“கொஞ்சம் தள்ளி நில்லுடி” என்றான் ரகசிய குரலில்.
எல்லாம் இவர்களை தான் பாராமல் பார்த்திருக்க, பெண் உதடு கடித்து அவனை விட்டு தள்ளி நின்றாள்.
“வீட்ல கிட்ட வான்னா ஓடுறது. இங்க உரசுரா” அவன் கடுப்பாக பொரிய, வழக்கம் போல் அவன் கன்னம் பிடித்து கொஞ்ச வந்தாள் பெண்.
“ஹேய்” என்று புரிந்து தலையை பின்னுக்கு இழுத்தான்.
“போங்க.. ரொம்பத்தான்” பெண் உதடு வளைக்க,
“உன்னை ரூம்ல கவனிச்சுக்கிறேன் இரு” என்றவன், நன்றாக நிமிர்ந்து அமர்ந்தான்.
அவளுக்கு ஒவ்வொன்றாக சொல்லி கொண்டே, சிறிய பட்டு துணியை மடமடவென நெய்தான்.
“இது நான் எடுத்துக்கவா?” என்று அதை அவள் எடுத்து கொள்ள,
“அதை வைச்சு என்ன பண்ண போற?” என்று கேட்டான்.
“சும்மா என்கூட இருக்கட்டும்” என்றவள் மடித்து வைத்து கொள்ள, மற்றதை காட்டினான். ஆன்லைன் ஆர்டர் சில வந்திருக்க, அதை கொரியர் அனுப்ப அருணகிரி கிளம்ப, வாங்கி கொண்டான்.
“போற வழி தான் கொடுத்துட்டு போயிடலாம்” என்று மனைவிக்கு சொன்னவன், அந்த அட்டை பெட்டியை பைக்கின் முன்னால் வைத்து கொண்டான்.
மாலை வீட்டுக்கு வந்துவிட, ரகுராம் மனைவிக்கு டீ போட்டு கொடுத்தான். “ரொம்ப நல்லா இருக்கு” ஜனக்நந்தினி ரசித்து குடிக்க, அவன் அவளை ரசித்தான்.
“டீ குடிங்க” என்று அவன் முகத்தை திருப்ப,
“இப்போ கொஞ்சுடி” என்று கன்னம் காட்டினான்.
“மாட்டேன். அப்போ வேணாம் சொன்னீங்க இல்லை”
“அப்புறம் நான் கொஞ்ச ஆரம்பிச்சுடுவேன் பார்த்துக்கோ”
“கொஞ்சிக்கோங்க. யார் வேணாம்ன்னு சொல்றா” என்ற நொடி, அவளை வளைத்திருந்தான் ரகுராம்.
“ஆஆ.. என் டீ” என்று பெண் அலற, அவளை கொஞ்சியே விட்டான்.
“நீங்களே காலி பண்ணிட்டீங்க. எனக்கு டீ வேணும்”
“இந்தா இதை குடி” என்று அவன் கப் கொடுக்க, வாங்கி கொண்டவள், உஷாராக தள்ளி சென்றுவிட்டாள்.
ரகுராம் சிரிக்க, அவனின் போன் ஒலித்தது. “உன் அண்ணா ஏண்டி எனக்கு கூப்பிடுறாங்க” என்று கேட்டபடி எடுக்க, ஜனக்நந்தினியும் கேள்வியாக பார்த்தாள்.
நலம் விசாரித்தவன், தேனிலவு பற்றி பேசினான். “என்னோட கிப்ட் இது. ரொம்ப பெருசா இல்லை. கேரளா போட் அவுஸ் மூணு நாளைக்கு புக் பண்ணியிருக்கேன். போய்ட்டு வாங்க” என்றான்.
ரகுராம் அமைதியாக இருந்தான். அவனுக்கும் செல்ல வேண்டும் தான். ஆனால் இப்போது முடியாது என்பது தான் உண்மை. திருமண செலவே எக்கச்சக்கம். அப்பா, சித்தப்பா, அவன் மூவரும் இணைந்து தான் சமாளித்திருந்தனர்.
இந்த மாதம் முடியட்டும். எங்காவது செல்லலாம் என்று ரகுராம் நினைத்திருக்க, ப்ரவீன் இப்படி என்கிறான்.
“என்ன..? என்கிட்ட கொடுங்க” என்று இவன் முகத்தில் ஜனக்நந்தினி போன் வாங்கி கொண்டாள்.
“வேண்டாம்ன்னு இல்லை. ஆனா இப்போ முடியாது. நானே உன்னை கூட்டிட்டு போறேன்” என்றான்.
ஜனக்நந்தினி தலையசைக்க, “உன் அண்ணாகிட்ட சொல்லிடவா?” என்று போன் எடுத்தான்.
“நானே சொல்லிடுறேன்” என்று தனியே சென்றாள்.
“ஏன்.. ஏன் போகலை? அவரே உன்னை எங்கேயாவது கூட்டிட்டு போவார்ன்னு தான் அமைதியா இருந்தோம். அப்படி ஒன்னு தெரியவே இல்லைன்னு தான் இந்த ஏற்பாடு. இதையும் வேணாம்ன்னு சொன்னா என்ன அர்த்தம்” ப்ரவீன் கேட்டான்.
“ண்ணா.. இதென்ன? போயே ஆகணும்ன்னு ஏதாவது ரூல் இருக்கா என்ன? ஏன் இப்படி பேசுறீங்க?” ஜனக்நந்தினிக்கு கோவம் வர பார்த்தது.
“இது தான் ரைட் டைம் போக, இப்போ விட்டு வேறெப்போ போவீங்க? ரொட்டீன் லைப்க்குள்ள போயிட்டா போக முடியும்னு நினைக்கிறியா?”
“ண்ணா.. ப்ளீஸ். இதை இதோட விடுங்க” என்றாள் தங்கை.
“நீ சொல்லிட்ட? வீட்ல அப்பா, பாட்டிக்கு யார் பதில் சொல்றது”
“அது உங்க பிரச்சனை. அதை வைச்சு எனக்கு பிரஷர் கொடுக்க கூடாது” என்று வைத்துவிட்டாள்.
“என்னாச்சு” என்று ரகுராம் வர, முகத்தை திருத்தி கொண்டாள்.
“நாம சென்னை போறது பத்தி பேசினேன்” என்றாள்.
“எஸ். அது பார்க்கணும். இந்த வீக் நல்ல நாள் பார்த்து கிளம்பிடலாமா? அங்க செட்டில் ஆக டைம் வேணும் தானே” என்று கேட்டான்.
ஜனக்நந்தினிக்கும் சரி என்று தோன்ற, இரவு அருணகிரி, பத்மாவிடம் பேசினர். “சரி தான். நல்ல நாள் பார்த்து சொல்லு பத்மா” என்று அருணகிரி சொல்ல,
“இரண்டு நாள்ல இருக்குங்க. அது விட்டா அடுத்த வாரம் தான்” என்றார்.
“அப்போ சரி.. பாரதிகிட்ட பேசிடு” என, உணவு முடியவும் பத்மா பேசினார்.
பாரதி கேட்டு, வீட்டில் சொல்ல, “எங்க இருக்க போறாங்க” என்று உடனே கேட்டனர் ராஜேஸ்வரி, தணிகைவேல் இருவரும்.
ப்ரவீன் அப்போது தான் தேனிலவு மறுப்பை சொல்லியிருந்தான்.
பாரதி இதென்ன என்று திகைக்க, “நாம நாளைக்கு கரூர் போய் பேசி முடிவு பண்ணலாம்” என்றார் தணிகைவேல்.
இவர் முடிவெடுத்துவிட்டார் என்று தெரிந்தது. மறுநாள் அதிகாலையிலே கிளம்பிவிட்டனர். ஜனக்நந்தினிக்கு பெற்றவர்கள் வருவது மகிழ்ச்சி.
பத்மா அவர்களுக்கு விருந்து தயாரிக்க, அவர்கள் வந்ததும் காலை உணவு முடிந்தது. அருணகிரி இவர்களே சொல்லட்டும் என்று மௌனம் காக்க, பாரதி மகள் எடுத்து வர சொன்ன உடமைகளை மகளின் அறைக்குள் வைக்க அவளுடன் சென்றார்.
“சென்னை போறதை பத்தி பாரதி சொன்னா” என்று ஆரம்பித்தார் தணிகைவேல்.
ரகுராம் அதுல என்ன என்று பார்க்க, “எங்க இருக்க போறாங்கன்னு பேசணும்” என்றார் தொடர்ந்து.
“நான் வீடு பார்த்துட்டேன்” ரகுராம் சொல்ல,
“என் பொண்ணு இப்போ இருக்கிற வீடு சொந்த வீடு. அதோட அவளுக்கு அங்க இருந்து ஆபிஸ் பக்கம்” என்றார் தணிகைவேல்.
“அவளுக்காகவே வாங்கின வீடு அது. அங்கேயே இருக்க முடியுமா பாருங்க” என்றார் மருமகனிடம்.
“என்னோட ஆபிஸ் அங்கிருந்து தூரம். இரண்டு பேருக்கும் இடையில இருக்கிற மாதிரி வீடு பார்த்திருக்கேன்” என்றான் ரகுராம்.
ஜனக்நந்தினியும், பாரதியும் வர, “பாப்பா” என்று மகளை தன்னிடம் அழைத்தார் தணிகைவேல்.
“இப்போ நீ இருக்கிற வீடு, அங்கேயே இருக்கிறீங்களா?” என்று கேட்க,
ஜனக்நந்தினிக்கு ஒன்றே தான் தோன்றியது. அங்கு என்றால் கணவனுக்கு வாடகை இருக்காது என்பது மட்டுமே. “ஓகே தான்ப்பா. நீங்க என்ன சொல்றீங்க?” என்று கணவனிடம் கேட்டாள் பெண்.
ரகுராம் தன்னை இழுத்து பிடித்தான். “என் பொண்ணுக்கு அங்க தான் சரியா இருக்கும். பழக்கமான ஏரியா கூட. புது இடத்துக்கு போய் அவ கஷ்டப்பட கூடாது இல்லை” என்றார் தணிகைவேல்.
அருணகிரி நீயே சொல் என்பது போல் மகனை பார்த்தார். அவனுக்கு மனைவி சொல்லிவிட்ட பின் மறுக்க முடியவில்லை. அதற்காக அவர் வீட்டிலும் இருக்க முடியாது.
தனக்குள் எதோ யோசித்தவன், “சரி” என்றான்.
தணிகைவேல் பேச்சு முடிந்தது என்பது போல் போனுடன் வெளியே செல்ல, ரகுராம் அவருடன் சென்றான். “சொல்லுங்க” என்று மாப்பிள்ளையிடம் கேட்க,
“வாடகை கொடுப்பேன்” என்றான் ரகுராம்.
“என்ன பேசுறீங்க?”
“என் பொண்டாட்டிக்காக தான் அங்க இருக்க ஒத்துக்கிட்டேன். வாடகை கண்டிப்பா கொடுப்பேன். நீங்க வாங்கிக்கணும். இது அவளுக்கு தெரிய வேண்டாம்” என்று வந்துவிட, தணிகைவேல்க்கு கோவமே.