ரகுராம் தள்ளியிருந்த பார்சல்களை காட்டி, “எல்லாம் ஆன்லைன் ஆர்டர்” என்றான்.
“தெரியும். பாப்பா நிறைய ஆர்டர் போடுவா” என்றார் பாரதி.
ரகுராம் விரல்கள் ஒரு நொடி நின்று வேலை செய்ய, “வீட்ல எல்லோருக்கும் எடுத்துட்டு போகணும்” என்று பாரதி சொல்ல, ரகுராமே பார்த்து எடுத்து கொண்டான்.
பாரதி நூறு ரூபாய் மட்டும் கொடுத்து எடுத்து கொண்டார். காரை வரவைத்து பார்சல்களை வைக்க, பாரதி மருமகனுடனே பைக்கில் வந்தார்.
எவ்வளவு பட்டாலும் இன்னும் இந்த ஆசை மட்டும் விடவில்லை. ரகுராம் மருமகனாக வர வேண்டும் என்பது. மகளுடன் சேர்ந்து அவரும் தான் போராடுகின்றார்.
மகள் மனதில் ரகுராம் இருப்பது தெரிந்த நாளில் இருந்து பாரதி மகள் பக்கம் தான். அவளின் விருப்பம் தான் என் முடிவு என்பதை தீவிரமாக பின் பற்றுகிறார்.
பாரதி மாலை போல் கிளம்பவும், ரகுராமும் சென்னை கிளம்பினான். பாரதி அவனை பஸ் ஸ்டாப்பில் விட கேட்க, “இல்லை. நான் சித்தப்பா கூட போறேன்” என்று மறுத்துவிட்டான் ரகுராம்.
அவர்கள் காரில் ஏற கூட அவன் விரும்பவில்லை என்று புரிய பாரதிக்கு முகம் வாடியது. சமாளித்து கிளம்பினார். மகள் மனது இவனிடம் உள்ளது. அதற்கு நான் தான் முக்கிய காரணம். எப்படி இதை சரி செய்ய?
தணிகைவேல் மூலம் தான் ரகுராம் அவரிடம் பேசியதே பாரதிக்கு தெரிந்தது. அதுவும் அப்பா, மகள் வாக்குவாதத்தில்.
ப்ரவீன் திருமணம் முடிந்த மூன்றாம் நாள் ஜனக்நந்தினி சென்னை செல்ல நின்றாள். “இன்னும் நாம பேசி முடிக்கலை பாப்பா. முடிவு தெரியாம நீ கிளம்பினா என்ன அர்த்தம்?” என்று அப்பா கேட்க,
“எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்ப்பா. இது தான் என் முடிவு” என்றாள் மகள்.
“இப்போ கல்யாணம் வேணாமா, இல்லை இந்த மாப்பிள்ளை வேண்டாமா?
“இரண்டும் தான்”
“பாப்பா. என்னை உன்கிட்ட கோவப்பட வைக்காத. ஒரு பொண்ணுன்னு உனக்கு செல்லம் கொடுத்தா நீ என்னையே கஷ்டப்படுத்துற”
“நீங்க மட்டும் என்னப்பா? என்மேல இவ்வளவு பாசம் வைச்சிருந்தும் என்னை புரிஞ்சுக்கலை தானே”
“நீ சொல்றதை கேட்டா நாளைக்கு நீ தான் கஷ்டப்படணும் பாப்பா”
“நான் எதுவும் சொல்லலியேப்பா”
“எனக்கு தெரியும் நீ சொல்லணும்ன்னு இல்லை. அது மட்டும் கண்டிப்பா நடக்காது. ரகுராம்க்கு நான் இதை புரிய வைச்சுட்டேன். நீ தான் தேவையில்லாம பிடிவாதம் பிடிக்கிற”
“அவருக்கு புரிஞ்சா அது அவரோட, நான் எப்படின்னு நீங்களும், அவரும் முடிவெடுப்பீங்களாப்பா”
“நான் உன் அப்பா. நான் உனக்காக முடிவெடுக்காம?”
“அப்பான்றது உங்களுக்கு ஒரு கீ கார்ட் மாதிரி இல்லை. என்னை உங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க”
“உனக்கு என்கிட்ட பயம் இல்லை பாப்பா. அதான் இப்படி எல்லாம் பேசுற” என்று தந்தை தளர,
“பாசம் நிறைய வைச்சிருக்கேன்ப்பா. ஆனா நீங்க பயத்தை தான் கேட்கிறீங்க இல்லை” மகள் குரல் கமறியது.
பாரதி தான் இருவரையும் சமாளிக்க, “நீ தான். நீ மட்டும் தான் இதுக்கெல்லாம் காரணம்” என்று மனைவியை குற்றம் சாட்டினார்.
“இதை தான் நான் முதல்ல இருந்து சொல்லிட்டிருக்கேன். இவ சுயநலத்துக்காக என் குடும்ப நிம்மதியை கெடுத்துட்டா” என்று ராஜேஸ்வரி பேச,
“ம்மா.. போதும்.. போதும். அவளை பேசுறேன்னு எந்தளவு இழுத்து விட்டிருக்கீங்கன்னு பாருங்க. இனியும் நீங்க அமைதியா இல்லைன்னா நான் தான் எங்கேயாவது ஓடிடணும்” என்றார் தணிகைவேல் குரல் உயர்த்தி.
“உன் பொண்டாட்டி பண்ணதை கேட்க முடியலன்னு என்னை தப்பு சொல்வியா வேலா” என்று ராஜேஸ்வரி மூக்கை உறிஞ்ச, நல்லவேளை வீட்டில் வேறு யாரும் இல்லை. ப்ரவீன் மனைவியுடன் வெளியே சென்றிருந்தான்.
ராஜேஸ்வரி பேத்தி கை பிடித்து கண்ணீர் வடிக்க, தணிகைவேல் முகம் தூக்கி வைத்திருந்தார். ஜனக்நந்தினியோ பாட்டியை சமாளித்து, சென்னை கிளம்பியும்விட்டாள்.
ஆயிற்று எட்டு மாதங்கள். யார் இறங்கி வருவது என்பதில் தான் போராட்டம்.
மகள் வருங்காலத்தில் கஷ்டப்பட கூடாது என்று மகளிடமே போராடுகிறார் தந்தை!
மகளுக்கோ அவளின் மனது ஒருவனிடம் இருக்க, வேறொருவனை கரம் பிடிப்பதா என்ற கேள்வி!
ஆரம்பித்து வைத்த பாரதி, தான் செய்ததை தானே சரி செய்ய போராடி கொண்டிருக்கின்றார். மகளுக்கு துணை நின்று கணவனின் மனஸ்தாபத்தை சம்பாதித்து கொண்டார்.
இன்னும் தான் சிக்கலை இழுத்து கொண்டார். டிரைவருக்கு தெரியாமல் வழிந்த கண்ணீரை துடைக்க, மகள் அழைத்து, அவரின் நலம் விசாரித்தவள், “பங்க்ஷன் எப்படி போச்சு?” என்று கேட்டாள்.
“நல்லா இருந்தது கண்ணு. வீடு அருமையா இருக்கு” என்றார்.
“ம்ம்”
“உன்னை எல்லாம் கேட்டாங்க கண்ணு. எப்போ ஊருக்கு வர நீ”
“எல்லாம் கேட்டாங்கன்னு சொல்லாதீங்கம்மா”
“ஊருக்கு வா கண்ணு. என்னால இனி சென்னை வர முடியுமா தெரியல”
“ஏன் ஏன் வர முடியாது”
“வளைகாப்பு வேலை. அடுத்து ஹாஸ்பிடல்ன்னு நாள் ஆகும் இல்லை”