கரூரில் உள்ள கிராமத்து வீடு பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. பந்தல் போட, சீரியல் மாட்ட, ரேடியோ செட் வைக்க என்று ஆட்கள் வேகமாக வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
“அண்ணே சீக்கிரம் முடிச்சிடுங்க. சொந்தக்காரங்க வர ஆரம்பிச்சிடுவாங்க..” என்ற ரகுராம், போன் எடுத்து தந்தைக்கு அழைத்தான்.
தறியில் இருந்த அவரின் போனை வேலை செய்பவர் எடுக்க, “அப்பா இல்லையா..?” என்று கேட்டான் ரகுராம்.
“இப்போ தான் கிளம்பி வெளியே போனார் தம்பி. போன் தறியில் நின்னுடுச்சு..” அவர் சொல்ல,
“சரிண்ணே.. அப்பா வந்தா எனக்கு கூப்பிட சொல்லுங்க..” என்று போன் வைத்தான் ரகுராம்.
நேரம் ஆகிவிட்டது. நாளை நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தத்திற்கு செலவு வாங்க செல்ல வேண்டும்.
“அப்பா இன்னும் வரலையா? எங்க இருக்காராம்?” அவனின் அம்மா பத்மா வந்தார்.
“வந்துடுவார்ம்மா. நீங்க அக்காக்கு தேவையான லிஸ்ட் வாங்கிட்டு வாங்க” என்றான் ரகுராம்.
“அவ எடுத்த போனை கீழே வைக்கவே இல்லை. ஓரடியா மாப்பிள்ளைக்கிட்ட பேசிட்டிருக்கா, அவருக்கு அங்க வேலையே இருக்காது போல” பத்மா புலம்பி மகளை தேடி செல்ல, ரகுராம் சிரித்துக்கொண்டான்.
சில நிமிடங்களில் அவன் அப்பா அழைத்துவிட்டார். “நீ நேரா தறிக்கு வந்துடு தம்பி, நாம இங்கிருந்து போயிடலாம்” என்றார் அருணகிரி
சரியென்று வைத்தவன், “ம்மா.. லிஸ்ட் எங்க?” என்று அம்மாவிற்கு குரல் கொடுத்தான்.
அவரோ, “உனக்கு நாலு போடணும். எவ்வளவு நேரம் போன் பேசுறது?” என்று ஆரம்பித்தார்.
ரகுராம் அக்கா கையில் பேப்பரை திணிக்க, அவள் வேறு வழி இல்லாமல் தனக்கு தேவையானதை எழுதி தந்தாள். இரண்டு பக்கம் நிரம்ப வழிந்தது.
“ம்மா.. இங்க உன் மகளை பாரு. ஒரு வருஷத்துக்கு கேட்கிறா” ரகுராம் அதிர்ந்து போனான்.
“ஒரு அக்கா தானேடா. வாங்கி கொடுத்தா குறைஞ்சா போயிடுவ, அப்புறம் தம்பி அப்பாகிட்ட காமிச்சிடாத, உன் சம்பள பணத்துலே நீயே வாங்கி கொடு” என்று போனுடன் ஓடிவிட்டாள்.
ரகுராம் லிஸ்டை பத்திரப்படுத்தி கொண்டு பைக் எடுத்து கிளம்பினான். அருணகிரி தறியில் இருக்க, அவரை ஏற்றிக்கொண்டு டவுன் சென்றான். மளிகை, காய்கறி எல்லாம் வாங்கினர்.
அருணகிரி குட்டி யானையில் வாங்கிய செலவுகளை ஏற்றியவர், “நான் இதுலே போயிடுறேன். நீ பூ வந்ததும் வாங்கிட்டு வந்திடுப்பா” என்று கிளம்பிவிட்டார்.
ரகுராம் அக்காவிற்கு தேவையான அலங்கார பொருட்கள் எல்லாம் வாங்கியவன், பூ வந்ததும் பண்டல்கள் சில வாங்கி கொண்டான்.
மதியத்திற்கு மேல் உறவுகள் வர ஆரம்பித்திருந்தனர். வீடு களை கட்ட தொடங்கியது. கரூர் தான் அருணகிரி வீட்டினர் வாசம். பத்மா அருணகிரி தம்பதிக்கு அனுஷா, ரகுராம் என்று இரு பிள்ளைகள்.
மூத்தவள் அனுஷாவின் நிச்சயம் நாளை. இரண்டு டிகிரி முடித்து, டீச்சராக பணிபுரிந்து கொண்டிருந்தாள். கங்கண முகூர்த்தம் கூடி வர இருபத்தி ஐந்து வயது ஆகிவிட்டது.
இருபத்தி மூன்று வயதான ரகுராம் MBA முடித்து சென்னையில் வேலை பார்த்து கொண்டிருக்கிறான்.
அருணகிரியின் ஒரே தம்பியான ராமமூர்த்தியின் குடும்பம் மாலை போல் வந்திறங்கினர். “இப்போதான் வரதா?” பத்மா உரிமையாக கேட்க, ராமமூர்த்தி முகத்தில் ஒரு மெல்லிய சங்கடம்.
பின் தன்னை திருத்தி கொண்டவர், இழுத்து போட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவரின் மனைவி மஞ்சுளாவும் இணைந்து கொள்ள, பத்மாவிற்கு வேலைகள் வெகுவாக குறைந்து போனது.
அடுத்தநாள் காலையில் நல்ல நேரத்தில் மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிட்டனர். தோட்டத்திலே பந்தல் ஏற்பாடாகி இருந்தது. ஆட்கள் மூலம் சமையல் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது.
மாப்பிள்ளை சுகுமார் வேலைக்காக சென்னையில் இருப்பவன். குடும்பம் மட்டும் கரூரில்.
குறிப்பிட்ட நேரத்தில் நிச்சய தட்டை மாற்றி கொண்டனர். அனுஷாவை சபைக்கு அழைத்து வந்து புடவை கொடுத்தனர். அவள் உடுத்தி வர, மாப்பிள்ளையின் அம்மா மருமகளுக்கு ஆரம் அணிவித்தார்.
ரகுராம் மாப்பிள்ளைக்கு கழுத்து செயின் அணிவித்தான். தொடர்ந்த சடங்குகள் முடிய பந்தி ஆரம்பித்தது. அனுஷாவும், சுகுமாரும் சில நிமிடங்கள் தனிமையில் பேசி வந்தனர்.
“அப்படி என்ன தான் பேச இருக்கோ, எப்போ பார்த்தாலும் பேச்சு பேச்சு தான்” பத்மா சலித்து கொண்டார்.
மஞ்சுளா சிரித்தவர், “இது எல்லாம் ஒரு காலம்க்கா, நமக்கு கொடுத்து வைக்கலை” என்றார்.
“ஆஹ்ன்.. பெரிய மாமாக்கு என்ன குறையாம்” மஞ்சுளா ரோஷத்துடன் கேட்க,
“கொழுந்தன் பொண்டாட்டிகிட்ட சொல்ல முடியுமா அதை” என்று பத்மா காலை வாரிவிட்டார்.
“ரொம்பத்தான்” மஞ்சுளா கழுத்தை வெட்டி கொண்டு சென்றார்.
மாப்பிள்ளை வீட்டினர் சாப்பிட்டு கிளம்ப, அருணகிரி குடும்பம் ஓய்வுடன் அமர்ந்தனர். முக்கிய உறவுகள் மட்டும் இருக்க, காபி கொடுத்தார் பத்மா.
மஞ்சுளா வேண்டாம் என்று மறுத்துவிட, “ஏன் சித்தி” என்று வந்தான் ரகுராம்.
“சும்மா தான் சாமி. சாப்பிட்டதே நெஞ்சுல இருக்கு” மஞ்சுளா அவன் கை பிடித்து கொண்டார். பெரியவர் மகன் மீது கொள்ளை பாசம்.
“சுடுதண்ணீ எடுத்து வரவா சித்தி” ரகுராம் கேட்க,
“வேணாம் சாமி. நீ பக்கத்துல உட்காரு. உன்கிட்ட நிதானமா பேச முடியல” என்று பக்கத்தில் அமர வைத்து கொண்டவர், “வேலை எல்லாம் எப்படி போகுது, சாப்பாடு என்ன பண்ற, ரூம் எடுத்திருக்கியா, கூட யார் இருக்கா” என்று கேள்விகளை அடுக்கினார்.
“சித்தி.. ரூம் எடுத்து தான் இருக்கேன். கூட இரண்டு பேர் இருக்காங்க. சாப்பாடு நாங்களே சமைக்க நினைச்சிருக்கோம். வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகலையே. கொஞ்சம் கவனமா தான் இருக்க வேண்டியிருக்கு” என்றான்.
“ஆமா கண்ணு. வெளியிடத்துல இருக்கிறது உஷாரா இருந்துக்கோ. பழக பழக உனக்கே எல்லாம் புரிஞ்சிடும்” என்றார் மஞ்சுளா.
“ம்ம்.. ஏன் சித்தப்பா உடனே கிளம்பிட்டார்” ரகுராம் கேட்க,
“அது.. அது ஏதோ வேலைன்னு. நீ சுடு தண்ணீர் கொடேன்” என்றார்.
ரகுராம் எடுத்து வந்து கொடுக்க, மஞ்சுளா அமைதியாகிவிட்டார். ரகுராம் போன் பார்த்து அமர்ந்திருக்க, வாசலிலே இருந்தது மஞ்சுளா கண்கள்.
“யாரை பார்க்கிற மஞ்சுளா. சின்னவர் வரேன் சொன்னாரா?” பத்மா கேட்டபடி வந்தார்.
“ஆஹ்.. ஆமா ஆமா. அவர் தான் வரேன் சொன்னார்” மஞ்சுளா சொல்ல, ரகுராம் சித்தியை கண்கள் சுருக்கி பார்த்தான்.
என்னாச்சி இவங்களுக்கு என்று அம்மாவை பார்க்க, அவரும் தெரியல என்பதாய் தலையசைத்தார்.
“மஞ்சளா. எல்லாம் சரிதானேமா. உனக்கு ஒப்புச்சா” அருணகிரி தம்பி மனைவியிடம் கேட்டார்.
சொந்த அத்தை பெண் தான் மஞ்சுளா என்பதால் இருவருக்கும் பேச்சு சரளமாக வரும். “நீங்க செய்றதுல போய் குறை இருக்குமா மாமா. எல்லாம் நல்லா அமைஞ்சிருக்கு” என்றார் மஞ்சுளா.
“ஒப்புனா சரி.. எங்க சின்னவன். பட்டுன்னு கிளம்பிட்டான்” என்று அருணகிரி கேட்க, மஞ்சுளா வேலை என்று சொன்னார்.
“இன்னைக்கு என்ன வேலை அவனுக்கு. EB ஆபிஸ் லீவ் தானே?” என்று கேட்க,
“ஏதோ போன் வந்ததுன்னு போயிருக்கார்” என்றார்.
“அவனுக்கு தான் நேரம் காலம் இல்லாமல் போன் வருமே. என்ன வேலையோ” அருணகிரி சலித்து வேறு ஏதோ பேச, திடீரென வாசலில் ஒரு சலசலப்பு.
வெளியில் இருந்து ஒரு குரல், “உங்களுக்கு நோட்டீஸ் வந்திருக்கு” என்று.
அருணகிரி குடும்பத்திற்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. என்ன நோட்டீஸ். எங்களுக்கு யார் அனுப்புறா என்று வர, அவர் கையில் கொடுத்தனர்.
“இப்போ நீங்க வியாபாரம் முடிச்சு அட்வான்ஸ் வாங்கின இடத்து மேல தான் நோட்டீஸ்” என்றனர் வந்தவர்கள்.
“என் இடத்தை தானே நான் வியாபாரம் பண்ணேன். அதுக்கு யார் நோட்டீஸ் கொடுத்தது?” அருணகிரி கோவமாக கேட்க,
“பாரதி.. உங்க தங்கச்சி..” என்றனர்.
“அவளா” இருந்தவர்கள் தங்களுக்குள் பேச ஆரம்பித்துவிட, அருணகிரிக்கு அதிர்ச்சியே.
நான் மறுத்ததும் இந்தளவு போய்விட்டாளா?
போன் ஒலிக்க, இடத்தை வாங்கியவர் தான். “வில்லங்க சொத்தை எங்க தலையில கட்ட பார்க்கிறீங்களா” என்று எடுத்ததும் பாய்ந்தனர்.
“கொடுத்த அட்வான்ஸை திருப்பி கொடுத்திடுங்க. இது சரிபட்டு வராது..”
“நாங்களே தொழில் ஆரம்பிக்க தான் மெயின்ல இருக்கிறதை அவ்வளவு காசு கொடுத்து வாங்கினோம். இப்போ நோட்டீஸ் அது இதுன்னா. எங்களுக்கு வேணாம்பா. வியாபாரத்தை முறிச்சுக்கலாம்..” என்று வைத்தனர்.
அந்த இடத்தை விற்று தான் மகளுக்கு கல்யாணம் பேசியிருந்தார் அருணகிரி. மீதம் வர வேண்டிய பணத்தில் தான் மகளின் திருமணத்தை முடித்தாக வேண்டும். அது இல்லையென்றால்? நினைக்கவே தந்தைக்கு நெஞ்சு பதறியது.
பாரதியின் வைராக்கியம் இரு குடும்பங்களை மட்டுமில்லை, இருவரின் வாழ்க்கையையும் கையிலெடுக்க தயாரானது!