அத்தியாயம் 44

காவியன் அறைக்கதவை திறந்து ரணா உள்ளே செல்ல, பசங்க எல்லாரும் அவளை பார்த்தனர். மிதுன் கண்ணசைக்க, நண்பர்கள் அனைவரும் வெளியேறினர். எழிலன் மட்டும் அமர்ந்திருந்தான். ரணா அவனை பார்க்க, “என்ன?” என்று புருவத்தை உயர்த்தினான்.

“வெளிய போ” என்று ரணா கண்ணசைக்க, எழிலன் “முடியாது” என்று தலையசைத்து காவியனை பார்த்தான். ரணா, என்ன செய்ற? காவியன் கேட்க, உன்னிடம் தனியா பேசணும்.

“நான் இங்க தான் இருப்பேன்” என்றான் எழிலன்.

காவியன் இருவரையும் பார்த்து விட்டு, “சும்மா சொல்லு” என்றான்.

ஹலோ, வெளிய போங்க. நான் தனியா பேசணும் என்றாள் எழிலனிடம். அவன் ரணாவை முறைத்து பார்த்தான்.

அண்ணா, வெளிய இருங்க. பேசிட்டு போயிருவா என்று காவியன் சொல்ல எழிலன் அவளை முறைத்துக் கொண்டே சென்றான்.

சுஜி சொன்னதால் எல்லாரும் எழிலனை “அண்ணன்” என்றே அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

எழிலன் சென்ற பின் காவியன் அருகே நாற்காலியை போட்டு அமர்ந்த ரணா, அவன் கையை பிடித்தாள். அவன் முறைத்து பார்த்தான்.

நான் முதல்ல உன்னிடம் தான் சொல்லி இருக்கணும். நம்ம ப்ரெண்ட்ஸ் எப்படி கண்டுபிடிச்சாங்கன்னு தெரியல? இப்ப என்னோட குடும்பத்தில் அனைவருக்கும் தெரியும். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு என்றாள்.

அவன் பேசத் தொடங்க இருந்த அவன் இதழ்களில் கை வைத்து “பேசாத” என்று அவனை நிறுத்தி விட்டு, நீ என்ன சொன்னாலும் என்னால் கேட்க முடியாது.

என்னோட அப்பா மட்டும் தான் என்னோட காதலை மறுத்தாங்க. இப்ப அவங்களும் ஏத்துக்கிட்டாங்க. நீ என்னோட அப்பா சொன்னது போல் இப்ப எனக்கு பதில் சொல்ல வேண்டாம். படிப்பு முடியுட்டும் என்று அவளது விரலை எடுத்தாள்.

எனக்கு புரியுது ரணா. முதலில் செய்த அதே தவறை இப்பொழுது செய்ய எனக்கு விருப்பமில்லை. நானும் நீயும் ஒன்றாவது நடக்காத காரியம். உன் குடும்பம் உன் பக்கம் இருக்கலாம். நான் ஒரு தோழனாக மட்டும் தான் உன் அருகே நிற்க முடியும். நீ தேவையில்லாமல் ஆசைய வளர்த்துக்காத.

காவியா அந்த வேனில் நான் கடத்தப்பட்ட போது உன் சத்தம் நன்றாக எனக்கு கேட்டது. உன் தோழமையில் பதறல் தான் இருக்கணுமே தவிர கதறல் இருக்கக் கூடாது. அன்று உன்னுடைய கோபம்..என்னால நன்றாக உணர முடிந்தது. நீ கண்டிப்பாக உன்னுடைய காதலை உணருவ என்றாள்.

அப்படியெல்லாம் ஒன்றுமேயில்லை. மாயா மீதுள்ள காதலையே மறக்க முடியாமல் இருக்கிறேன். இதுல நீ வேற என்றான்.

மாயா பெயரை கேட்டவுடன் ரணாவிற்கு ஒருமாதிரி ஆனது. ஆனால் காவியனிடம் காட்டிக் கொள்ளாமல் அதான் இப்ப ரணா வந்துட்டாளே? என்று காவியனை பார்த்து, “ரொம்ப தேங்க்ஸ்டா” எனக்காக எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்க. ரொம்ப பெயினா இருக்கா என்று அவன் முதுகில் கை வைத்தாள்.

அவள் கையை எடுத்து விட்டு, யாரோட வந்த? காவியன் கேட்டான்.

சங்கீதன் தான். இப்ப கிளம்பிட்டான். நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாம்ன்னு தான் வந்தேன் என்று அவனை பார்த்தாள். காவியனும் ரணாவை பார்த்தான்.

உனக்கு எப்படி என் அண்ணாவோட பழக்கம்?

உனக்கெதுக்கு? நாங்க பேசிப்போம். அவ்வளவு தான் என்றான்.

ஓ..அவ்வளவு தானா? என்று குறும்புடன் நகைத்தாள்.

எதுக்கு சிரிக்கிற?

உங்க சீக்ரட் எனக்கு தெரியக் கூடாதா? அண்ணாவும் சொல்ல மாட்டேன்னு சொல்லீட்டான். எனக்கு என்ன தோணுதுன்னா..நீயும் அண்ணாவும் லவ் பண்றீங்களா? அதான் சொல்ல மாட்டேங்கிறீங்களா?

ரணா, என்ன பேச்சு இது? காவியன் சத்தமிட்டான்.

காவியா, இது மட்டும் உண்மையா இருந்தா என் அண்ணாவிடம் சண்டை போட்டாவது உன்னை காதலிக்க வைப்பேன் என்று கண்ணடித்தாள்.

உன்னை என்ன செய்றது? கோபமாக காவியன் கேட்டான்.

ஒன்றுமே வேண்டாம். லவ் மட்டும் பண்ணு போதும் என்று சொல்லி விட்டு, தயவு செய்து அறிவுரையை ஆரம்பித்து விடாத. இங்கேயே தூங்கிடுவேன். நீ உடம்ப பார்த்துக்கோ. நான் இனி தினமும் இங்கே வந்து பார்ப்பேன். பை..என்று “ப்ளையிங் கிஸ்” கொடுத்து விட்டு புன்னகையுடன் வெளியேறினாள்.

சற்று நேரத்தில் சங்கீதன் காவியனுக்கு கால் செய்து, ரணா என்னடா செய்றா? எனக் கேட்டான்.

ரணாவா? அப்பொழுதே கிளம்பி விட்டாள். உன்னிடம் சொல்லவில்லையா? காவியன் கேட்டான்.

அவ தனியாவா போயிருக்கா? சங்கீதன் கேட்க, மிதுன் ரணா தனியாவா போயிருக்கா? எப்ப கிளம்பினா? காவியன் கேட்க, உன்னிடம் பேசியவுடனே கிளம்பிட்டா. எதுவும் பிரச்சனையா? அவன் கேட்டான்.

வீட்டுக்கு போகலையா? காவியன் கேட்டான்.

இல்லடா சங்கீதன் சொல்ல, வெளியே வெண்பா சத்தம் கேட்டது.

கிருஷ்ணன் வெளியே எட்டி பார்த்து, டேய் ரணா மறுபடியும் வந்திருக்காடா? என்று சொல்ல, எழப் போன காவியனை நிறுத்திய அருள், “நீ இரு. நாங்க என்னன்னு பார்த்துட்டு வாரோம்” என்று காவியன் நண்பர்கள் வெளியே வந்தனர்.

பாட்டி பதட்டமாக, என்னாச்சும்மா? அடிபட்டுருக்கு? என்று கேட்க, பாட்டி ஒன்றுமில்லை. நான் கார்ல போய்ட்டு இருந்தேனா. ஒரு லாரிக்காரன் என்னோட காரை இடிச்சுட்டான். காரும் பிரேக் பிடிக்கலை. அப்ப நம்ம தல மாதிரி ஜெட் வேகத்துல கார்ல வந்த ஒருவன் என்னோட கார் கதவை இழுத்து என்னை தூக்கி காப்பாற்றினான்.

“வாவ். பாட்டி செம்ம எக்ஸ்பீரியன்ஸ். வேற லெவல்ல இருந்தது” என்று ரணா ஆர்வமுடனும் க்யூட்டாகவும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“உனக்கு வேறெங்கும் அடிபடலைல்லம்மா” என்று பாட்டி அவளை பார்த்தார். இல்ல பாட்டி, நான் காவியனிடம் சொல்லீட்டு வாரேன் என்று அவள் சொல்ல,

வேண்டாம்..வேண்டாம்..என்று அருள் சொல்ல, ஏன்டா? என்று மிதுன் அவனை இடித்தான். அவனுக்கும் இந்த பொண்ணை பிடிச்சிருக்கு. சொல்ல மாட்டேங்கிறன். இவள் இதை சொல்லி அவன் கோபத்தில் பேசாமல் கூட இருந்துடுவான் என்று அருள் மிதுன் காதில் ஓதினான்.

சரி, அப்புறம் என்ன நடந்தது? வெண்பா ஆர்வமாக கேட்டாள்.

அப்புறம், அவனை பார்த்ததும் லாரிக்காரன் உதவிக்கு ஆள் வந்துட்டான்னு இறங்கி ஓடிட்டான். அவன் எனக்கு மருந்து போட்டு விட்டான் என்று அவளது நெற்றியை காட்டினாள்.

அப்புறம்..என்று வெண்பா கேட்க, அப்புறம் என்ன? அவன் கிளம்பிட்டான். நான் வந்துட்டேன். பாட்டி கொஞ்ச நேரம் நான் இங்கே இருந்துக்கவா? கொஞ்சம் சோர்வா இருக்கு என்றாள்.

வீட்டுக்கு போகலையாம்மா?

அண்ணாவை வர சொல்லி இருக்கேன். அவன் வர ஒரு மணி நேரம் ஆகும். நான்..என்று வெண்பாவை பார்த்து நீங்க எங்க ரெஸ்ட் எடுப்பீங்க? என கேட்டாள்.

அவளது முதலில் இருந்த ஆக்டிவான பேச்சு இப்பொழுது இல்லாதிருக்க எழிலன் ரணாவை சந்தேகமாக பார்த்தான்.

ஏதாவது சாப்பிடுறியாம்மா? பாட்டி கேட்க, “தண்ணீர் மட்டும் போதும் பாட்டி” என்றாள்.

“சரிம்மா, வெண்பா பாப்பாவை அறைக்கு கூட்டிட்டு போ” என்றார்.

பாட்டி, படுக்கை இல்லை. ஏசி இல்லை. அக்கா எங்க அறையில் எப்படி?

அதெல்லாம் பிரச்சனையில்லை. பழகிக்கிறேன் என்று ரணா புன்னகைத்தாள்.

“தேவா, தண்ணீர் எடுத்துக் கொண்டு வா” என்று வெண்பா ரணாவை அறைக்கு அழைத்து சென்றாள்.

நான் கொஞ்ச நேரம் தனியா ஓய்வெடுத்துக்கவா? ப்ளீஸ் என்று புன்னகைத்தாள். தேவா அறைக்கு வெளியே நின்று வெண்பாவை அழைத்தான். வெண்பா நீரை கொடுத்து விட்டு ரணா படுக்க தயார் செய்து விட்டு வந்தாள்.

அனைத்தையும் பார்த்த அருள், டேய் காவியனுக்கு போட்டிக்கு ஒருத்தன் வந்துட்டானா? என்று கேட்க, மிதுன் தோளை குலுக்கி விட்டு சென்றான்.

உள்ளே படுத்திருந்த ரணா கண்ணீருடன், காவியா உன்னிடம் காதலை சொல்லி சிலமணி நேரம் தான் ஆகுது. அதுக்குள்ளவா? அவனிடமிருந்து தப்பி வருவதற்குள் உயிரே போச்சுடா என்று புலம்பினாள் ரணா.

பாட்டியிடம் சொன்ன எல்லாமே அவளாக விட்ட கதை. அந்த லாரி விபத்தில் கூட தப்பினாள் ரணா. ஆனால் அந்த காரிலிருந்து வந்தவன் ரணாவிடம் தவறாக நடக்க முற்பட்டான். கையில் கிடைத்ததை வைத்து அடித்து தள்ளி விட்டு அவனிடமிருந்து காரை விபத்தான இடத்தில் விட்டு தன்னுடைய பர்ஸை எடுத்துக் கொண்டு தப்பி இங்கே வந்தாள். அவள் நிலையத்தின் அருகே வந்தவுடன் அவன் சென்று விட்டான்.

வெளியேயிருந்த குழாயை திறந்து முகத்தை நன்றாக துடைத்து விட்டு, அவளது பர்ஸில் இருந்த மருந்தை எடுத்து அவளாகவே போட்டுக் கொண்டாள். அதீபனிடம் இதே கதையை அளக்கவும் அவனும் சாதாரணமாக எடுத்துக் கொண்டான்.

கதவு திறக்கும் ஓசை கேட்டு, முகத்தை துடைத்து கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு அமைதியாக கண்ணை மூடினாள் ரணா.

அருணா, நீ கால் பண்ணேல்ல மயூரி அருணாவை விரட்டிக் கொண்டு உள்ளே வந்தவள் ரணாவை பார்த்து, ஷ்..தூங்குறாங்க. அமைதியா இரு என்று அருணா சொல்ல, அவளை அணைத்துக் கொண்டு, அவங்க தூங்கிட்டாங்கடி.

அண்ணாவை பார்த்து ஒரு நாள் கூட ஆகலை. பார்க்காமல் இருக்க முடியலையாடி. அதுக்குள்ள கால் பண்ணிட்ட? மயூரி அருணாவை இடித்தாள்.

சும்மா இரு. மாயா காதலை போல பரப்பி விட்றாத. மாயாவா? வெண்பாவும் நம்ம அக்காவோட தம்பிய லவ் பண்றா. எல்லாருக்குமே தெரியுமே?

ஏன், நீ தேவாவை காதலிக்கலையா? அருணா கேட்க, யாரிடமும் சொல்லிடாத. அப்புறம் பேச கூட மாட்டான் என்றாள் மயூரி.

சரி..சரி..அருணா சொல்ல, நளன் மாமாவுடன் என்ன பேசுன? மயூரி குறும்புடன் கேட்டாள்.

“அம்மா, தாயை என்னை விடு” என்ற அருணா, ரணா படுத்திருக்கும் தலையணை நனைந்திருப்பதை பார்த்து, யோசனையுடன் அவளை பார்த்தாள்.

என்னாச்சுடி, உன்னோட மாமாவ விட்டு அக்காவை சைட் அடிக்கிறியா? என மயூரி கேட்டுக் கொண்டே கதவை திறந்தாள்.

“மயூ, நீ போ. நான் வாரேன்” என்று அருணா சொல்ல, அவள் கிளம்பினாள்.

“அக்கா, எழுந்திருங்க. நீங்க தூங்கலைன்னு தெரியும்” என்றாள் அருணா.

ரணா விழித்து, தூக்கம் வரலை. அதான் கண்ணை மூடி படுத்திருந்தேன் என்றாள்.

எதுக்குக்கா அழுதீங்க?

அழுதேனா? இல்லையே? என்று ரணா மழுப்ப, நீங்க சொன்ன விபத்திலிருந்து உண்மையிலே தப்பிச்சுட்டீங்களா? அவள் கேட்க, ஆமா அதான் அவன் காப்பாற்றினானே? என நடிக்க, பொய் சொல்லாதீங்கக்கா. இப்ப நீங்க விசயத்தை சொல்லைன்னா காவியன் அண்ணாவிடம் சொல்லிடுவேன் என்றாள்.

இல்ல..இல்ல..வேண்டாம். சொல்லாத. நான் சொல்றேன். ஆனால் நீ யாரிடமும் சொல்ல மாட்டேன்னு என் மேல சத்தியம் செய் என்று அருணா கையை எடுத்து தலையில் வைத்தாள் ரணா. அருணா தலையாட்டினாள்.

நடந்ததை சொல்லி விட்டு ரணா அருணாவை அணைத்து அழுதாள்.

அக்கா, இதை பெரியவங்க யாரிடமாவது சொல்றது தானக்கா சரி?

எல்லாருமே அந்த கொலைகாரன் மேலுள்ள பயத்தில் அவனை தேடிட்டு இருக்காங்க. ஒரு வேலை இவனை பற்றி சொன்னால் இவன் யாரென பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க என்ற ரணாவிற்கு அவர்கள் தேடுவது ரணா பார்த்தவனை என்று அவளுக்கு தெரியவில்லை. ரணா நடந்ததை சொல்லி இருந்தால் அவனும் மாட்டி இருக்க வாய்ப்புள்ளது. நம் ரணாவிற்கு நடக்கும் ஏதும் முழுதாக தெரியவில்லை.

“காவியனோட இந்த நிலைக்கும் அவன் தான் காரணமாம்” என்று மீண்டும் ரணா அழுதாள்.

“அக்கா, உங்களுக்கு காவியன் அண்ணா பற்றி முழுசா தெரியல” என்றாள் அருணா.

எனக்கா தெரியல. இதை பாரு என கல்லூரி பிரஸ்ஸர்ஸ் நிகழ்ச்சியில் “லியோ” படத்தின் “நா ரெடி தான வரவா?” பாடலுக்கு நடனமாடியதை காட்டினாள்.

வாவ், நம்ம காவியன் அண்ணனா இது? என்று அருணா முழுவதுமாக புன்னகையுடன் பார்த்து விட்டு ரணாவை பார்த்து எழுந்து, அக்கா சாரி என்று அவளது அலைபேசியை பிடுங்கி ஓடினாள்.

“ஏய், அதை கொடுத்திரு. அவனுக்கு மட்டும் தெரிஞ்சது கொன்றுவான்” என்று ரணா அவளை விரட்ட, எழிலனும் காவியன் நண்பர்களும் அவளை பார்த்துக் கொண்டே சென்றனர்.

அருணா நேராக பாட்டியிடம் வந்து, அனைவர் பெயரையும் கூவி அழைத்து அதை காட்ட, அனைவரும் வியந்து பார்த்தனர். எழிலனும் காவியன் நண்பர்களும் சாப்பிட வந்தனர். அவர்களிடமும் காட்டினர். அந்நேரம் ரணாவை அழைத்து செல்ல அதீபனும் வந்து அதை பார்த்து, அதிரதன் நிதினுக்கும் ஷேர் செய்தான்.

“டேய், என்னடா பண்றீங்க? சும்மாவே கோபப்படுவான். இது மட்டும் தெரிஞ்சது செத்தேன்” என்று ரணா அழ ஆரம்பித்தாள். இதை யாரும் எதிர்பார்க்கலை.

இதுக்கெல்லாம்மா அழுவீங்க? என்று வெண்பா கேட்க, யாரும் இதை பற்றி காவியனிடம் வாயை திறக்கக்கூடாது. புரியுதா? அதீபன் கேட்க, அனைவரையும் விலக்கி விட்டு வந்த யுவனை பார்த்து அழுகையை நிறுத்தீட்டு, “யுவி நீ நல்லா இருக்கேல்ல” என்று ரணா அவனை தூக்கினாள்.

உங்களுக்கு யுவனை தெரியுமா? அருணா கேட்க, தெரியுமே? என்று இது உனக்கு நான் தான் போட்டு விட்டேன். இதை பத்திரமா வச்சுக்கோ என்று யுவியிடம் சொன்ன ரணாவை அனைவரும் விழிவிரிக்க பார்த்தனர்.

“பாட்டி, நாங்க போயிட்டு வாரோம்” என்று அதீபன் சொல்ல, ரணா யுவியிடமும் மற்றவர்களிடமும் சொல்லி விட்டு காவியனிடம் சொல்லீடு என்று எழிலனிடம் சொல்லி சென்றாள். காவியன் நண்பர்களிடம் நாளை காலை தயாராக இருங்க. நான் பிராக்டிஸூக்கு அழைச்சிட்டு போறேன். சரி என்று அனைவரும் சொன்னார்கள்.

காவியனிடம் ரணா சொன்ன கதையை சொல்ல அவனும் நம்பி விட்டான். எழிலன் மட்டும் அவனை யோசனையுடன் பார்த்தான்.

காரில் ஏறவும் ரணா அதீபனிடம், அண்ணா..சில பொருட்கள் வாங்கணும்.

என்ன வாங்கப் போற?

ஏதோ வாங்குறேன். வாங்கணும் ப்ளீஸ் என்று சொல்ல, சரி அவளது பர்சனல் தேவைக்காக இருக்கும் என நினைத்து அவளை ஓர் கடை முன் நிறுத்தினான்.

நீ இரு. போனவுடன் வாரேன் என்று கூரான சில பொருட்கள், ஷாக் வைக்கும் கருவி, மிளகாய்ப்பொடி அனைத்துடன் நாப்கினையும் வாங்கி வந்தாள். அவனும் இது தானே? என கவனிக்காமல் விட்டான்.

காவியனுக்கு, “ரணாவை காப்பாற்றியது யார்?” அவனுக்கு இவளை பிடித்திருக்குமோ? மீண்டும் இருவரும் சந்தித்தால் காதல்ன்னு ஏதும் ஆரம்பித்து விடுவானோ? என்ற கேள்விகளால் தூங்காமல் அல்லாடினான். எழிலன் அவனை பார்த்து, இப்ப தூங்கப் போறியா? இல்லையா? என கேட்டான்.

தூங்க முடியலையே? காவியன் சொல்ல, ஏன் உனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கோ?

ச்சே..நீங்க வேற. அதெல்லாம் ஒன்றுமேயில்லை. அவள் சரியான மெண்டல் கேஸ் என்றான் காவியன். எழிலனும் படுத்துக் கொண்டான்.

மறுநாளிலிருந்து காலை கல்லூரி சென்று நேராக நண்பர்களுடன் ரணா இங்கே வருவதும் அதீபன் அவளை அழைத்து செல்வதுமாக இரண்டு நாட்கள் சென்றது.

அக்கா..என்று ரணா முன் வந்த நிவி, படம் வரையலாமா? என கேட்க, அவளை மடியில் அமர்த்தி ரணா அவள் கையை பிடித்து வரைய கற்றுக் கொடுத்தாள். காவியன் மெதுவாக நடந்தான். அறைக்குள் நடந்தவன் இப்பொழுது வெளியே வந்தான். அவனை தாங்கியபடி அருளும் சுபிர்தனும் வந்தனர்.

ரணாவை பார்த்து காவியன் நின்றான். இரு நாளில் அனைவருடன் ஜாலியாக பழக ஆரம்பித்து இருப்பாள்.

ரணா, வீட்டுக்கு போகலையா? சத்தம் கேட்டு, ஹே காவியா, நடக்குறியா? வா..என்று சுபிர்தனை நகர்த்தி விட்டு அவன் கையை அவள் தோளில் இழுத்து போட்டாள்.

ரணா விடு, என்னோட ப்ரெண்ட்ஸ் இருக்காங்க என்றான்.

இதெல்லாம் விசயமா? நாம நடக்கலாம் என்று அவள் சொல்ல, கையை எடுன்னு சொன்னேன்னு காவியன் சத்தமிட்டான். அவளுக்கு கஷ்டமானது.

டேய், எதுக்கு சத்தம் போடுற? உதவ தான வர்றா? மிதுன் கேட்க, இவளோட உதவி எனக்கு தேவையில்லை. அவள முதல்ல கிளம்ப சொல்லு என்றான்.

“நான் இங்க தான் இருப்பேன்” என்றாள் கோபமாக.

போன்னு சொன்னேன். உனக்கு புரியலையா?

“போக முடியாது” என்று அவள் தோளில் இருந்து கையை எடுத்து மிதுனை அழைத்து அவன் தோளில் போட்டு மீண்டும் நிவியை தூக்கி மடியில் அமர்த்தினாள்.

இதை பார்த்த அருணா காவியனை முறைத்துக் கொண்டு, அக்கா..வெளிய வாங்க. உங்களுக்கு யாரோ பூச்செண்டு அனுப்பி இருக்காங்க என்றாள்.

எனக்கா? என்றவளுக்கு அவன் நினைவு வந்தது. அருணாவை பாவமாக ரணா பார்க்க, கண்ணை மூடி திறந்தாள். நிஜமாகவே பூச்செண்டு ஒன்று வந்தது. அதில் “மை ஸ்வீட் கார்ட்” பிரணவி “ஐ லவ் யூ” என இருந்தது. அவள் அதை தவற விட்டாள். அந்த நோட் காவியனிடம் வந்தது. அவன் அதை பார்த்து விட்டு முகம் சுளித்தான்.

அவன் முகம் சுளிப்பதை பார்த்த ரணாவிற்கு ஒருமாதிரி ஆனது. அருணா அவளிடம் பேசி தேற்றினாள்

என்னக்கா லவ் நோட்டா? மயூரி கேட்க, ப்ளீஸ்..அவங்க இப்படி அனுப்புவாங்கன்னு எனக்கு தெரியாது என்றாள் பாவமாக. காவியன் கோபமா “உள்ள போகலாம்டா” என்று அவன் சென்றான். செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதிரதனிடம் முன்னதாகவே பரத் ராஜ்ஜை பற்றி சொன்ன நேத்ரா, அவளுக்கு தெரிந்ததை அதிரதனிடம் சொன்னாள். அதில் முக்கியமானது கார்த்திக் தழும்பு போல் இவனிடமுள்ள தழும்பு.

பேருந்தில் நடந்த விபத்தின் போது என்னை காப்பாற்ற சென்று அவனுக்கு ஏற்பட்ட தழும்பு என்றாள் நேத்ரா. அதிரதன் அவனை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். ஆனால் ஒரு சின்ன ஆதாரம் கூட அவனிடம் சிக்கலை.

அப்படியே ஒரு வாரம் கழிந்தது. காவியனுக்கு ரணா மீதான சொல்ல முடியாத காதல் அதிகமானது. பசங்களுக்கு படிக்க உதவுவது, அவர்களுடன் விளையாடுவது, பின் அவளும் படிப்பது என இருந்தாள். காவியன், மாயா, கார்டு ஜீவாவிற்கு முழுதாக உடல் சீரானது. நேத்ராவிற்கும் அதிரதன் மீது இனம் புரியாத அன்பு காதலாக மலர்ந்தது.

அனைவரும் சந்தோசமாக இருந்தனர்.

பாஸ், நான் உங்க வீட்டிற்கு வாரேன் என்று கார்டு ஜீவா சொல்ல, வேண்டாம்டா இரு நாள் போகட்டும். அதுவரை அவங்களுக்கு துணையா இரு. உன்னோட அப்பா, தம்பியை பார்த்துக்கோ என்று அலைபேசியை வைத்தான்

கொலைகாரனை பற்றிய சில தகவல்களையும் அதிரதன் சேகரித்து வைத்திருந்தான். சொல்லப் போனால் கண்டுபிடிக்கும் அளவிற்கு நெருங்கி விட்டான். அவர் நிதின், தன் குடும்பத்துடன் நெருக்கமானவர் என தெரிய வந்தது. அவன் இன்னும் தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு பரத் பற்றி மட்டும் ஏதும் கிடைக்கவில்லை.

அதிரதன் வீட்டிலிருந்த நேத்ரா அவளது அறையிலிருந்து வெளியே வந்தாள். ஹாலில் அமர்ந்து அதிரதன் லேப்பில் அவனது ஆபிஸ் வேலையில் மூழ்கி இருந்தான். ஏதும் பேசாமல் அவன் முன் அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரா.

உணர்ந்த அதிரதன், இப்படி என்னையே பார்த்துட்டு இருந்தால் எனக்கு டிஸ்டர்ப் ஆகுது? திடீர்ன்னு எதுக்கு இப்படி பாக்குறீங்க? என்னோட மூடு மாறுது என்றான்.

சார், பொருட்கள் வாங்கணும். அப்புறம் நாம ஒப்பந்தப்படி எனக்கு பர்சனல் இடைவெளி வேணும்ன்னு சொன்னேன்ல்ல சார்.

லேப்பை மூடி விட்டு அதுக்கு? என அதிரதன் கேட்டான்.

அதுக்கு, நான் வெளிய போயிட்டு வாரேன் சார்.

வா, நானும் வாரேன் என்றான்.

நோ சார், நானே போயிட்டு வாரேன் என்றாள்.

“இப்ப இருக்கும் நிலையில் தனியாவெல்லாம் விட முடியாது” என்றான் அதிரதன்.

வேணும்ன்னா பொருட்கள் வாங்கும் வரை உங்களுடன் வாரேன். நான் வாங்கியவுடன் நீங்க வீட்டுக்கு வந்துருங்க. நான் ஓர் இடத்திற்கு போகணும் என்றாள்.

எங்க? உன்னோட தம்பிய பார்க்கணுமா? அதிரதன் கேட்க, சார் அது உங்களுக்கு தேவையில்லை. கிளம்பலாமா? நேரமாகுது.

எனக்கு தேவையில்லையா? எழுந்த அதிரதன் அவளிடம் நெருங்கினான்.

ப்ளீஸ் சார், நேரமாகுது. சீக்கிரம் கிளம்பணும் என்றாள்.

“எங்க போனாலும் என்னையும் நீ அழைச்சிட்டு போகணும்” என்றான் அதிரதன்.

என்னோட எல்லா இடத்திற்கும் உங்களால் வர முடியாது. புரிஞ்சுக்கோங்க சார் என்றாள் கண்ணீருடன்.

அவளை விட்டு விலகி, கிளம்பு என்றான்.

“தேங்க்யூ சார்” என்று புன்னகையுடன் நேத்ரா அறைக்கு சென்று தயாராகி கைப்பையுடன் வெளியே வந்தாள்.

இவள் தனியா எங்க போகணும்ன்னு சொல்றா? என்று அதிரதன் அவளை பார்த்துக் கொண்டு நின்றான்.

சார், போகலாமா? என அவள் கேட்க, போகலாம் என்ற அதிரதன், “உன்னை தனியே விடுவேனா என்ன?” என்று எண்ணிக் கொண்டே அவளுடன் சென்றான்.

வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கி விட்டு, சார் கிளம்புங்க என்றாள்.

நீ போ. நான் போரேன் என்றான் அதிரதன்.

அவளும் பொருட்களை அவனது காரில் வைத்து விட்டு கைப்பையுடன் நடந்தாள். அதிரதன் காரில் நேத்ராவை பின் தொடர்ந்தான்.

அவன் பின்னே வருவதை பார்த்து அவன் கார் ஜன்னலை தட்டி, சார் என்ன செய்றீங்க? எனக் கேட்டாள்.

அவன் எங்கோ பார்ப்பது போல், நீ இன்னும் போகலையா? என்று அதிரதன் கேட்க, சார் ரொம்ப நடிக்காதீங்க? பச்சையா தெரியுது என்றாள்.

அப்படியே தெரியுதா? அவன் கேட்க, ஆமா சார் தெளிவா தெரியுது. கிளம்புறீங்களா?

வினு, இங்க வாயேன் என்று அதிரதன் அழைக்க, எதுக்கு சார்? நேத்ரா கேட்டாள்.

வா, சொல்றேன் என்றான் அதிரதன். அவளும் அவனிடம் நெருங்கி முகத்தை காட்டினான். அங்க பாரேன் என்று கையை வெளியே காட்டினான்.

எங்க சார்? என்று அவள் அவன் கை காட்டிய இடத்தை பார்த்தாள். நச்சென ஒரு முத்தத்தை நேத்ரா கன்னத்தில் கொடுத்தான் அதிரதன்.

சார் என்று அவள் திரும்ப இருவருக்கும் இதழ் முத்தமானது. வினு, இன்னொன்று கொடேன் அதிரதன் கேட்க, சார் நீங்க செய்யும் எல்லாத்துக்கும் வருத்தப்பட போறீங்க என்றாள்.

முத்தம் இனிப்பாக தான இருக்கு. வருத்தப்பட கசப்பாக இல்லையே?

கிளம்புங்க சார் என்று அவள் சத்தமிட, ஓ.கே போகிறேன் என்று காரை திருப்பி அவன் செல்ல, நேத்ரா அவள் இதழ்களில் கை வைத்துக் கொண்டே கண்ணீருடன் அதிரதன் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளறியாது அதிரதனும் அவளை பார்த்துக் கொண்டே, உன் கண்ணீரை மகிழ்ச்சியாக்குவேன் என்று அவள் கண்களில் அவன் கண்ட ஏக்கத்தை எண்ணிக் கொண்டே விரைந்து சென்று காரை ஓரிடத்தில் நிறுத்தி ஓடி வந்தான். நேத்ரா நடந்து செல்ல, அதிரதனும் மறைந்து மறைந்து அவளை பின் தொடர்ந்தான். அவள் செக் அப்பிற்காக ஹாஸ்பிட்டலுக்கு சென்று கொண்டிருந்தாள்.

சிக்னலை கடந்து சென்றால் ஹாஸ்பிட்டல் வந்துரும். ரோட்டை கடக்க நின்று கொண்டிருந்தாள் நேத்ரா. அங்கே ஆட்கள் யாரும் தென்படவில்லை. ஹாஸ்பிட்டலுக்கு வெளியேயும் உள்ளேயும் தான் ஆட்கள் இருந்தனர்.

அவளருகே கார் ஒன்று வந்து நின்றது. நேத்ரா பயந்து விலகினாள். காரிலிருந்து அஷ்வினி வெளியே வந்தாள்.

நீயா? என்று பதட்டமாக வினு நடக்க, ஹேய் எங்கடி போற? என்று அஷ்வினி அவள் கையை பிடித்து இழுத்தாள்.

“ச்சீ, விடு. உன்னை பார்த்தாலே அசிங்கமா இருக்கு” என்று நேத்ரா சொல்ல, ஹே அவள என்ன சொன்ன? என்று நேத்ராவிற்கு தாலி கட்டிய செள்ளியன் காரிலிருந்து இறங்கி கோபமாக வந்தான்.

“டியர், அவள விடுங்க” என்று செள்ளியன் கையை பிடித்துக் கொண்டு குலைந்தாள் அஷ்வினி. அவனும் அப்படியே நின்றான். தூரத்தில் இருந்து அதிரதன் இவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

அசு, விடு. இவளை என்று அஷ்வினி கையை விடுத்து அவன் நகர, அவனை இழுத்த அஷ்வினி அவள் பக்கமே போக மாட்டேன்னு சொன்னீங்கல்ல டியர்.

டார்லிங். நான் என்ன ஆசையுடனா போனேன்? அவள் நம் முன் வந்து தொந்தரவு செய்கிறாளே? என்று அந்த நடுரோட்டில் அவளது இடையை இறுக்க அஷ்வினி நேத்ராவை பார்த்துக் கொண்டே அவனிடம் இதழ் குவிக்க, அருவருக்கும் விதமாக இருவரும் நடந்து கொண்டனர்.

ச்சீ..என்ற நேத்ரா விலக, செள்ளியனை விடுத்து அஷ்வினி நேத்ராவை நகர விடாமல் தடுத்தாள்.

வழிய விடு. ரோட்ல வச்சி என்ன கேவலமா நடந்துக்கிறீங்க? என்று நேத்ரா கோபமாக சத்தமிட்டாள்.

“என்னடி கத்துற? என்னிடமிருந்து அவரை திருட பார்த்தேலடி” என்று அஷ்வினி நேத்ரா முடியை பிடித்தாள்.

விடுடி, என்னோட புருசனை நீ தான்டி திருடிட்ட? என்று கத்திக் கொண்டே நேத்ரா அஷ்வினையை தள்ள, அவளை விழாமல் பிடித்த செள்ளியன் ஆக்ரோசமாக நேத்ராவை தள்ளினான். அவன் தள்ளியதில் நேத்ரா பயத்தில் அவளது வயிற்றில் கையை வைத்துக் கொண்டே இரும்பு போஸ்ட்டில் மோதி கீழே விழுந்தாள்.

அம்மா…என்று கத்திய நேத்ராவை பார்த்து துடித்து, “வினு” என்று சத்தமிட்டுக் கொண்டே அதிரதன் ஓடி வந்தான். அவன் சத்தத்தில் ஹாஸ்பிட்டலில் இருந்து வெளியே வந்த எழிலன், நளன், மிதுன் அதிரதனை பார்த்து கீழே தன் அக்காவை பார்த்தனர்.

எழிலன் கண்ணில் செள்ளியன் பட, வேகமாக ஓடி வந்தனர். மற்றவர்கள் நேத்ரா அருகே செல்ல, எழிலன் கோபமாக செள்ளியனை அடித்தான்.

நேத்ராவிற்காக வந்த அதிரதனை பார்த்து செள்ளியனும் அஷ்வினியும் அதிர்ந்து நின்றனர். அவர்களை முறைத்து விட்டு நேத்ரா அருகே சென்ற அதிரதன், “வினு ஒன்றுமில்லைல்ல?” என்று கேட்டான்.

“தாங்க முடியல சார். ரொம்ப வலிக்குது. சாரி சார், நான் உங்களிடம் மறைச்சுட்டேன். வலி தாங்க முடியல சார்” என்று அவனது சட்டையை இறுக பற்றினாள்.

அவள் இடையிலிருந்து கையை எடுத்த அதிரதன் கை முழுவதும் இரத்தம். வினு..இரத்தமா? உனக்கு ஒன்றுமாகாது என்று அவளை தூக்கும் சமயத்தில் தான் எழிலன் ஓடி வந்து செள்ளியனை அடித்தான்.

இரத்தமா? என்று செள்ளியனும் அஷ்வினியும் பயந்து நின்றனர். எழிலன் அடிக்கு மறுஅடி கொடுக்காமல் நேத்ராவை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் செள்ளியன்.

நேத்ராவின் ஆடையிலும் இரத்தமாக இருக்க, எழிலா என்ன பண்ற? என்று அதிரதன் சத்தத்தில் நேத்ராவை பார்த்து அவளிடம் ஓடி வந்தான்.

“போச்சு எல்லாம் போச்சு” என்று மிதுன் புலம்பிக் கொண்டே அழுதான். “வாய மூடுடா” என்ற அதிரதன் நேத்ராவை தூக்கிக் கொண்டு ரோட்டை கடந்து ஹாஸ்பிட்டலுக்கு ஓடினான். எழிலனும் நளனும் அவன் பின் ஓடினர். மிதுன் அவளது கைப்பையை எடுத்துக் கொண்டு அவன் பின் ஓடினான்.

நேத்ராவை ஹாஸ்பிட்டலில் சேர்க்க, அதிரதன் கையிலிருந்த இரத்தத்தை பார்த்து “அவளுக்கு ஏதோ ஆகி விட்டது” என கதறி அழுது கொண்டிருந்தான்.

எழிலன் தன் நண்பன் நளனை அணைத்து அழுது கொண்டிருந்தான். அவனை பார்த்த மிதுன் அழுது கொண்டே நேத்ராவின் கைப்பையிலிருந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்து அதிரதன் முன் மண்டியிட்டு, “உங்களிடம் மறைச்சிட்டோம். சாரி சார்” என்று ரிப்போர்ட்டை நீட்டினான்.

“அவளும் இதே தான் சொன்னாள்” என்று அதிரதன் சொல்லிக் கொண்டே வாங்கினான். எழிலனும் நளனும் அதிரதனிடம் வந்து பார்த்தனர்.

அந்த ரிப்போர்ட்டை மூவரும் பார்த்து அதிர்ந்து மிதுனை பார்த்தனர். அதிரதன் கோபமாக அதை தூக்கி எறிந்தான்.

எழிலன் மிதுனை பார்த்து, ஏன்டா சொல்லலை? எனக் கத்தினான்.

இது ஹாஸ்பிட்டல் எதுக்கு கத்துறீங்க? ஒரு நர்ஸ் சத்தமிட்டு சென்றார்.

யுவிக்கு சார் ட்ரீட்மென்ட் பண்ணனுன்னு தான் அக்கா சொல்லலை. “குழந்தையை பற்றி சொல்லி அவர் உதவ மாட்டேன்னு சொல்லிடுவாரோன்னு தான் நாங்க மறைத்தோம்” என்றான் மிதுன்.

எவ்வளவு பெரிய விசயத்தை மறைச்சிருக்கீங்க? அதிரதன் சத்தமிட்டான். எல்லாரும் இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சாருவுக்கு தெரியும்ல. அதான் அன்று வினு கருவுற்றாலும் ஏத்துப்பாயான்னு கேட்டாளா? அன்றே சின்னதா சந்தேகம் தான். எல்லாரும் இதுக்காக தான வினுவை தாங்கி தாங்கி பேசுனீங்களா? சீற்றமானான் அதிரதன்.

எழிலனும் கோபமாக மிதுனிடம், முதல்ல தான் சொல்லலை. என்னோட அக்கா இவருடன் தான் இருக்கான்னு எனக்கு தெரிந்த பின்னாவது சொல்லி இருக்கலாம்ல்ல என்று அவனை முறைத்து பார்த்தான்.

சரி, போதும். எல்லாரும் கிளம்புங்க. “என்னோட அக்காவை பார்த்துக்க எனக்கு தெரியும்” என்றான் எழிலன்.

என்ன பார்த்துப்ப? அதிரதன் கோபமாக கேட்க, நேத்ராவை வைத்திருந்த அறையிலிருந்து ஒரு நர்ஸ் வெளியே வந்தார்.

சார், இது அவங்களுடையது என தட்டில் அவளது இரத்தக்கறையுடனான புடவை, அவளுடைய அலைபேசி, சில பொத்தான்கள் இருந்தது.

அவங்க நல்லா இருக்காங்களா? ஒன்றும் ஆகாதுல்ல சிஸ்டர்? என்று நளன் கேட்டான்.

சாரி சார், அவங்க கரு கலைந்து விட்டது. அவங்களுக்கு ஒன்றுமில்லை என்று அவர் அதிரதன் கையில் கொடுத்து விட்டு மீண்டும் உள்ளே சென்றார்.

பேசிக் கொண்டே வலியில் அதிரதன் சட்டை பொத்தான்களை பிய்த்து எடுத்திருப்பாள் நேத்ரா. அதிரதன் அவன் சட்டையை பார்த்தான். மற்றவர்களும் பார்த்தனர். எழிலன் அவனிடம் வந்து நேத்ராவின் அலைபேசியை எடுத்தான். நால்வரும் அமர்ந்தனர். அதிரதன் அவள் புடவையை கீழே வைக்க மனமில்லாமல் கையை ஏந்தியவாறு எழிலனை பார்த்தான்.

எழிலன் நேத்ரா அலைபேசியை ஆன் செய்தான். திரையில் நேத்ராவும் எழிலனும் அழகாக சிரிக்கும் புகைப்படம் இருந்தது. அதை பார்த்து எழிலன் கதறி அழுதான். பின் உள்ளே சென்று அவளது வீடியோவை பார்க்க, தொண்ணூற்றைந்து சதவீதம் முழுவதும் நேத்ராவின் அப்பாவும், எழிலனுமே இருந்தனர். அதிரதன் முகம் மாறியது. அவன் எண்ணம் மாற, மனதை கட்டுப்படுத்தி நேத்ராவை மனதில் நினைத்து கோபத்தை ஆற்றிக் கொண்டான் அதிரதன். ஆனால் எழிலன் அதை பார்த்து அழுது கொண்டிருந்தான்.

கடைசியாக இருந்த மூன்று வீடியோவை ஆன் செய்த எழிலனுக்கு மனம் உடைந்தே போனது. அதிரதன் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். மிதுன் அழுது கொண்டிருந்தான்.

தன் வயிற்றில் கை வைத்து ரிப்போட்டில் இருந்த கருவை பார்த்து புன்னகையுடன் அழகாக பேசிக் கொண்டும், பாடல் பாடிக் கொண்டிருந்தாள் நேத்ரா.

“மிதுன் சுஜி அக்காவுக்கு கால் பண்ணு” என்றான் நளன்.

இன்னும் இரு நாட்களில் அவங்களுக்கு நிச்சயம் இருக்கு. இந்த நேரத்துல எதுக்கு தொந்தரவு செய்றீங்க? நானே அக்காவை பார்த்துப்பேன் என்றான் எழிலன்.

அக்காவால இதை தாங்கிக்க முடியாது. குழந்தை இல்லன்னா உடைஞ்சு போயிடுவாங்க. பாட்டியும் சுஜி அக்காவும் முதல்லவே இந்த குழந்தை வேண்டாம்ன்னு சொன்ன போது, அக்கா ஏத்துக்கவேயில்லை. “மூச்சுக்கு மூச்சு என் குழந்தை என் குழந்தைன்னு தான் சொன்னாங்க. நம்மால கண்டிப்பாக அக்காவை சமாளிக்க முடியாது” என்றான் மிதுன்.

வினுவோட கருவை பற்றி எல்லாருக்கும் தெரியுமா? அதிரதன் மனம் சோர்ந்து கேட்டான்.

எங்க நிலையத்துல இருக்கிறவங்களுக்கு தான் தெரியும். நாங்க விஷ்வா சாருக்கே முதல்ல சொல்லல. உங்க வீட்ல வச்சு அவங்க தொந்தரவால தான் அக்கா கோபத்துல சொல்லீட்டாங்க. அதனால் தான் சுஜி அக்காவுக்கும் தெரிய வந்தது. பாட்டி, வேலை பார்க்கும் அக்கா, அண்ணா, பெரிய பசங்க, பொண்ணுகளுக்கு மட்டும் தான் தெரியும். வேற யாருக்கும் தெரியாது என்றான் மிதுன்.

அப்ப நிதுவுக்கு? எழிலன் கேட்க, அவருக்கும் தெரியாது என்றான் மிதுன்.

“சார், நீங்க கிளம்புங்க. நாங்க பார்த்துக்கிறோம்” என்றான் எழிலன்.

அதிரதனை கையிலிருந்ததை எழிலன் வாங்க, இது என்னிடமே இருக்கட்டும். நான் எங்கேயும் போகப் போறதில்லை என்றான் அதிரதன்.

“சார், ஏற்கனவே உங்க அப்பா கோபத்துல இருக்கார். அவருக்கு மட்டும் இது தெரிந்தால் அவ்வளவு தான். நீங்க போயிடுங்க” என்றான் எழிலன்.

எனக்கு யாரும் ஆர்டர் போடுறது பிடிக்காது. நான் இங்கே வினு அருகே தான் இருப்பேன்.

சார், உங்களுக்கென்ன பிரச்சனை? எழிலன் கோபமானான்.

இங்க பாரு. ஏற்கனவே சாரு இதை பத்தி சொன்னா? நான் கூட அவளோட சிந்தனைன்னு தான் நினைச்சேன் என்று சாருவிற்கு அதிரதன் கொடுத்த பதிலை இவர்களிடம் சொன்னான்.

உங்களுக்கு ஓ.கேன்னா உங்க குடும்பத்துல என்னோட அக்காவை தப்பா பேசுவாங்களே? அதுக்கு என்ன சொல்றீங்க? எழிலன் சினமுடன் கேட்டான்.

“ஆமா சார், இது சரிவராது” என்றான் மிதுன். எழிலன் அவனை பார்க்க, “சாரி சீனியர், அக்கா தான் உங்களிடம் ஏதும்  சொல்லக் கூடாதுன்னு சொன்னாங்க”

“சரி விடு. முதல்ல அவள் எழட்டும். அப்புறம் பேசிக்கலாம்” என்று அமைதியாக அம்ர்ந்திருந்தனர்.

டாக்டர் வெளியே வந்தார். நால்வரும் எழுந்தனர்.

அதிரதனை பார்த்தவர், யார் சார்? தெரிஞ்ச பொண்ணா? கேட்டார் டாக்டர்.

அதிரதன் அவர் கேட்டதற்கு பதிலளிக்கவில்லை. நல்லா இருக்காலா சார்? பிரச்சனை இல்லையே? என்று கேட்டான்.

சார், அவங்க இரு நாட்கள் இருக்கட்டும். அந்த பொண்ணோட சொந்தக்கார பெரியவங்க பொம்பளைங்க யாராவது இருக்காங்களா? என்று நால்வரையும் பார்த்தார்.

“சார், பாட்டி” என்றான் நளன்.

“சார், சுஜிக்கா” என்றான் மிதுன். யாரிடம் உதவிக்கு செல்வது? என்று எழிலன் அசையாது நின்றான்.

“நான் வரச் சொல்றேன்” என்ற அதிரதன் அலைபேசியை எடுத்து, நான் ஹாஸ்பிட்டலில் இருக்கேன் என்று அவன் இருக்கும் ஹாஸ்பிட்டலை சொன்னான் அதிரதன்.

அந்த பக்கமோ..புரியாதவாறு ஹா..என்று சத்தம் கேட்டது.

நான் உங்க பப்பூ பேசுறேம்மா. சீக்கிரம் பாட்டியை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் வாங்க என்று அலைபேசியை வைத்தான்.

சார், எதுக்கு உங்க அம்மாவை அழைத்தீர்கள்? எழிலன் கோபப்பட, உனக்கு வேற யாராவது தெரியுமா? அதிரதன் கேட்க, எழிலன் அமைதியானான்.

சுஜி, பாட்டி யாரையும் அழைக்க முடியாது. ஏற்கனவே இப்ப தான் பிரச்சனை நகர்ந்து இருப்பது போல் இருக்கு. மறுபடியும் ஆரம்பிக்க வேண்டாம். எல்லாரும் பத்திரமாக நிலையத்திலே இருக்கட்டும். என்னோட அம்மா, பாட்டி தான் வருவாங்க. துணைக்கும் கார்ட்ஸ் வருவாங்க. அவங்க லீடர் ஏற்கனவே அவங்க கார்ட்ஸில் அதிக நம்பிக்கை உடையவர்களை தான் அனுப்பி இருக்காங்க. குட்டிம்மா விசயம் போல் ஏதும் இனி நடக்காது என்றான் அதிரதன்.

வீட்டில் சிவநந்தினிக்கு கை கால்கள் ஓடவேயில்லை. இத்தனை வருடங்களுக்கு பின் தன் மகன் தன்னை “அம்மா” என அழைத்திருக்கிறான். அவன் வரச் சொல்லி இருக்கான் என்று பாட்டியுடம் சொல்ல, இதை யசோதா, ஆத்வி, தாட்சாயிணியும் கேட்டனர்.

“ஆத்வி, நாமும் போய் என்ன நடக்குதுன்னு பார்க்கணும்” என்று சிவநந்தினி, பாட்டி காரின் பின்னே இவர்களும் பாதுகாப்பு ஆட்களுடன் சென்றனர். இவர்கள் மறைந்து செல்வதை பார்த்த ரணாவும் அவர்கள் பின் செல்ல, செழியன், அதீபன், நிதின், ரவிக்குமார் ரணா போகும் வேகத்தை பார்த்து அவளை இவர்களும் பின் தொடர்ந்தனர். ஆக குடும்பம் மொத்தமும் ஹாஸ்பிட்டல் கிளம்பினர்.

என்ன யாரையும் காணோம்? என்று ரேவதி தன் மகளை அழைக்க, அவள் விசயத்தை சொல்ல அவரும் அதே ரூட்டை கேட்டுக் கொண்டே சென்றார்.