Advertisement

அத்தியாயம் 3

தலைமை ஆசிரியர் சொன்னது போல கையெழுத்துப் போட்டு விட்டுத் தன் வகுப்பறைக்குச் சென்றவள் வெறும் அறிமுகப்படலத்தை மட்டும் முடித்துக் கொண்டு கிளம்பினாள். வகுப்பறைக்குச் செல்லும் போதே செழியன் விழித்திருக்க, அவனுக்கு ஒரு பிஸ்கட் பொட்டலத்தைக் கொடுக்கவும் அவனும் சமர்த்தாக ஓரமாக அமர்ந்து கொண்டான்.

அவள் வெளியே வந்த நேரம் காத்திருந்தாற் போல ராசுவும் வர “உங்களுக்கு வேலை நேரம் இல்லையா ராசண்ணா?”

அந்த அண்ணாவில் ஒரு கணம் உச்சி குளிர்ந்தது அவனுக்கு…

“இல்லம்மா…இல்ல டீச்சர்…”

“இல்லம்மான்னே சொல்லுங்க அண்ணா!”

“சரிம்மா! ஆனா மத்தவக முன்னால டீச்சர்னே சொல்லுதேன்” சம்மதமாக அவள் தலையசைக்கவும்,

“ரெண்டு மணி நேரம் பெர்மிஷன் போட்டிருக்கேம்மா…உன் கூட வந்து வீடெல்லாம் காட்டிட்டு இன்னும் ஏதாவது உதவி வேணும்னாலும் செய்துட்டு வாரேன்…அது வரை கேம்ஸ் ரூம் சந்தானத்தைப் பார்த்துக்கிடச் சொல்லி இருக்கேன்.”

பள்ளியிலிருந்து வெளியே வந்ததும் முதலில் குமரனின் ஒரு வீட்டைப் பார்த்தார்கள். பார்த்து முடித்ததும் மனதிற்குள் செய்து கொண்ட முடிவின்படி “அடுத்த வீட்டிற்குப் போகலாம்” என்றாள்.

அடுத்து மூன்று வீடுகளைப் பார்த்ததில் ஒரு வீடு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஊருக்குள் இல்லாமல் கொஞ்சம் வெளிப்புறத்தில் அமைந்திருந்த அந்த வீட்டில்  நடை,முற்றம், தாழ்வாரம், புறக்கடை என, பெரிய வீடாக இருந்தது.

செழியனுக்கு ஓடியாடி விளையாட நன்றாக இருக்கும் என மனதில் பட்டாலும் காட்டிக் கொள்ளாமல் “ராசண்ணா! இந்த ஊர்ல வேற வீடுகள் ஏதாவது காலியிருக்கா?”

“வேற ஏதாவதுன்னா…குமரன் ஐயாவோடது இல்லாம வேற கேக்குதியாம்மா?”

கொஞ்சம் தயக்கத்துடன் “ஆமாண்ணா!” என்றாள்.

இந்த வீடுகள் பிடிக்கவில்லை போலும்… சொல்வதற்கு சங்கோஜப்படுகிறாள் என நினைத்தவன் குமரன் கொடுத்த இருநூறு ரூபாய் சட்டைப் பையில் உறுத்தினாலும் அண்ணன் என்று அழைப்பவளுக்குத் தான் கடமைப்பட்டுள்ளதாகக் கருதி அந்த ஊரில் காலியிருந்த மற்ற வீடுகளையும் பார்க்க அவளை அழைத்துச் சென்றான். ஆனால் குமரனுக்குச் சொந்தமான அந்த விசாலமான வீட்டைப் பார்த்து விட்டதாலோ என்னவோ அவள் பார்த்த மற்ற மூன்று வீடுகளிலும் குறைகளே அவள் கண்ணுக்குப் பெரிதாகத் தெரிந்தன.

ஒரு வீடு கொஞ்சம் அங்கங்கே காரை பெயர்ந்து காணப்பட்டது…செழியன் தலையில் ஏதாவது விழுந்து விட்டால் என்ன செய்வதென அதை ஒதுக்கினாள். மற்றொரு வீட்டில் குளியலறை, கழிவறைக்கு சிறிது தள்ளித்தான் போக வேண்டி இருந்தது…அதுவும் மேலே எதுவும் மறைப்பில்லாமல் திறந்த வாக்கில் இருந்ததும் அவளுக்குப் பிடிக்கவில்லை. வீட்டுக்குள்ளேயே குளித்துக் கொள்ளும் ஏற்பாடும் செய்ய முடியாததாக இருந்தது அந்த வீடு.

இன்னொரு வீட்டின் சொந்தக்காரப் பெண்மணி அவளைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்களைத் தெரிந்து கொள்ள முற்பட்டு வார்த்தைகளால் துருவியதும் அவளுக்குப் பிடிக்காமல் போயிற்று.

இப்படியாக ரெண்டு மணி நேரம் அலைந்தும் அவளால் ஒரு முடிவுக்கும் வர இயலாமல் போயிற்று. மதிய உணவு நேரம் வேறு நெருங்கிக் கொண்டு இருந்தது.

இறுதியில் தனக்குப் பிடித்தமானதாக இருந்த குமரனின் வீட்டையே முடிவு செய்து விடத் தீர்மானித்தாள் சுந்தரவடிவழகி. அவனைப் பற்றிய முழு விவரம் தெரிந்திருந்தால் இந்த முடிவை எடுத்திருப்பாளோ என்னவோ… அவன் சுயரூபம் தெரியாததால் அவள் எண்ண ஓட்டம் வேறு மாதிரியாக இருந்தது.

‘அவன் வீட்டில் வாடகை கொடுத்துக் குடியிருக்கப் போகிறோம்… இலவசமாகத் தங்கப் போவது இல்லையே! பின் ஏன் அச்சப்பட வேண்டும்? காலையில் தான் பார்த்ததற்காக அவன் விளையாட்டாகக் கூடக் கேலி பேசி இருக்கலாம்…அதை ஏன் தான் பெரிதுபடுத்த வேண்டும்?அப்படியே ஏதாவது கேட்டால் கூட விளக்கம் கொடுத்து விட்டால் போகிறது’

‘மேலும் குமரன் மட்டுமே முன்பணம் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறான்… மற்ற எல்லா வீடுகளிலும் குறைந்தது ஐந்து மாத வாடகையாவது முன்பணமாகக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள்…ஓரளவு பணம் கையிருப்பு இருக்கிறது என்றாலும் மொத்தத்தையும் கொடுத்து விட்டுப் பின் அவசரத்துக்கு மற்றவரிடம் கேட்கும் நிலையும் வந்து விடக் கூடாதே’ எனப் பலதும் யோசித்து முடித்தவள் ராசுவிடம்,

“அந்த… ஊருக்கு வெளிய ஒரு வீடு பார்த்தோம்லண்ணா.. அது எனக்குப் பிடிச்சுருந்துச்சு…அங்கேயே தங்கிக்கிறேன்”

ராசுவுக்கும் அப்பாடா என்று இருந்தது. பின்னே இவள் வேறு யாரோ ஒருவரின் வீட்டை முடிவு செய்து அந்தச் செய்தியைக் குமரனிடம் தெரிவிக்கும் போது ‘இதுக்கா உனக்கு இருநூறு கொடுத்தேன்’ என அவன் பார்க்கும் ஏளனப் பார்வையைத் தாங்கியாக வேண்டுமே! நல்லவேளையாக அவன் வீட்டையே முடிவு செய்து விட்டாள் என நினைத்துக் கொண்டவன் “சரிம்மா! உனக்கு வேற என்ன உதவி வேணும்னு சொன்னியானா மதியச் சாப்பாட்டை முடிச்சுட்டுப் பார்த்துக்கிடலாம்”

“அச்சோ! நீங்க  ரெண்டு மணி நேரம்தான் பெர்மிஷன் போட்டிருக்கேன்னு சொன்னத மறந்தே போனேனே!”

“நான் ஸ்கூலுக்குப் பேசி இன்னிக்கு முழுசும் லீவு சொல்லிட்டேம்மா!” என்று அலைபேசியைக் காட்டியவன் “உனக்கு வேண்டியது செய்து கொடுத்த பின்னால போறேன்”

“ரொம்ப நன்றிண்ணா!”

“அட என்னம்மா நீயி…வாய்க்கு வாய் அண்ணேன்னு கூப்பிடுத! என் ஒடம்பொறந்தவன்னாச் செய்ய மாட்டேனா? சரி! முதல்ல சாப்பிட்டு முடிச்சுடலாம்”

“மதிய சாப்பாட்டுக்கு இங்க கடை ஏதாவது இருக்கா அண்ணா?”

“பெரிய கடைன்னெல்லாம் சொல்ல முடியாது தாயி…வகை வகையாச் சாப்பாடும் இருக்காது…ஆனா ருசி இருக்கும்… ஒரு நா, ரெண்டு நா சாப்பிட்டுகிடலாம்” என்றவன் ஒரு சிறிய வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

வீடு போல் இருந்த பகுதியிலேயே சிறிய மேஜைகள் போடப்பட்டு உணவு பரிமாறப்பட்டது. அக்கம்பக்கம் உண்டு கொண்டிருந்தவர்களின் ஆர்வப் பார்வைக்கு பதிலாக “நம்ம ஸ்கூலுக்குப் புதுசா வந்துருக்கிற டீச்சரம்மா… வீடு பிடிச்சுத் தர வந்தேன்” என்று பதில் சொல்லிக் கொண்டான்.

உணவு உண்ணும் போதே அவள் தேவையான பொருட்கள் வாங்க வேண்டும் எனச் சொல்லி இருந்ததால் உணவுக்குப் பின் கடைத்தெருவுக்குக் கூட்டிச் சென்றான்.

தன் கையிலிருந்த பட்டியலைப் பார்த்து ஒரு பிள்ளையார் படம், விளக்கு, எண்ணெய், மண்ணெண்ணை அடுப்பு, ஒரு பாட்டில் மண்ணெண்ணை, சில பாத்திரங்கள்,காகிதக் குவளைகள், மிக அவசியமான மளிகைப் பொருட்கள், கூட்ட, துடைத்து சுத்தம் செய்யத் தேவையான பொருட்கள் என்று வாங்கிக் கொண்டாள்.

“இங்க பால் எங்க கிடைக்கும்ணா?”

“இந்நேரம் திறந்துருக்காதும்மா…அஞ்சு மணிக்கு மேல பால் கறந்து விப்பாங்க… தூக்கு வாளி கொண்டு  போய் வாங்கிக்கலாம்… சொல்லி வச்சுட்டாக் காலை, சாயந்திரம் வீட்டுக்கு வந்தும் ஊத்துவாங்க”

“அப்போ வேலைலாம் முடிச்சுட்டுக் கடைசியா வாங்கிக்கலாம்”

நடுவில் அவள் பொருட்கள் வாங்கிக் கொண்டு இருந்த போது அலைபேசியில் குமரனுக்கு அழைத்து விவரம் தெரிவித்தவன் அவன் கட்டளைகளையும் கேட்டுக் கொண்டான்.

அவர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்ற போது பூட்டியிருந்த வீட்டின்  வாசலில் குத்துக்காலிட்டு ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.

அவள் யாரென்பது போல் பார்க்க “நாந்தாம்மா வரச் சொன்னேன்… கொஞ்சம் கூட்டிக் கழுவி விட… அதோ அதுதான் அவ வீடு… வாரியல்(துடைப்பம்), முறம் எல்லாம் அவகிட்டக் கொடுங்க…வேலையை முடிச்சுடுவா”

ராசு சொன்னது போலவே கொஞ்ச நேரத்திலேயே வீடு மொத்தமும் சுத்தமாகி முடிந்திருந்தது.

தேவையான ஏற்பாடுகளை அவள் செய்ய ஐந்து மணிக்கு ராசு சென்று பால் வாங்கி வந்தான்.

சரியாகப் பால் காய்ச்சும் நேரம் குமரவேலழகன் வந்து நிற்க, அவள் உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. புன்னகை முகமாகவே “வாங்க குமரன் சார்!” என்று வரவேற்றாள்.

கொஞ்சம் தள்ளி இருந்த வீடுகளில் இருப்பவர்களையும் சுத்தம் செய்ய வந்த பெண்ணுடன் சென்று பால் காய்ச்ச அவள் அழைத்திருக்க கிட்டத்தட்டப் பத்து, பன்னிரண்டு பேர் வந்திருந்தார்கள்.

காய்ச்சி இனிப்பிட்ட பாலைத் தட்டில் வைத்து அனைவருக்கும் கொடுக்க, வாசலுக்குக் கொஞ்சம் தள்ளி நின்று அவர்கள் அதை அருந்திக் கொண்டிருந்தனர்.

குமரன் திண்ணையில் கையில் பாலுடன் அமர்ந்திருக்க அவள் வாசல் நிலையில் சாய்ந்து நின்றிருந்தாள்.

அவன் பாலைப் பருகுவதுடன் ஓரக்கண்ணால் அவளையும் பருக முயல அதை உணர்ந்தவள் போல் தொண்டையை “க்கும்” எனக் கனைத்தாள்.

என்ன என்பது போல் முகம் நிமிர்த்தி அவன் பார்க்க

“வந்து…ஸ்கூல்ல…”

“ஸ்கூல்ல?”

“ஸ்கூல்ல உங்களைப் பார்த்தப்போ எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் மாதிரி இருந்துச்சு… அதான் சிரிச்சேன்” அவன் முகம் பார்க்காமல் ஒரு வேகத்துடன் அவள் கூறி முடிக்க,

“ஆஹான்…” என்ற அவன் குரல் நம்பாமையைக் காட்டியது. குடித்து முடித்த காகிதக் குவளையைக் கொஞ்சம் தள்ளி ஓரமாக வைத்தவன் எழுந்து அவளருகில் வந்தான்.

“உனக்குப் பொய்யே சொல்லத் தெரியல சுந்தரி” என மெல்லிய குரலில் கூறியவன், அவனது ஒருமைப் பேச்சிலும் ‘சுந்தரி’ என்ற அழைப்பிலும் அவள் அதிர்ந்து நிற்க, சத்தமாக “அப்புறம் டீச்சரம்மா! வீடெல்லாம் வசதியா இருக்குதுங்களா? குழந்தையைப் பார்த்துக்கிட ஆள் வேணும்னு கேட்டிருந்தேயளாம் ராசுகிட்ட…அதுக்கும் நான் ஏற்பாடு பண்ணுதேன்… வேற ஏதாவது ஒதவி வேணும்னாலும் சங்கோசப்படாமக் கேளுங்க” என்று விட்டு, நடந்து தன் வண்டியின் அருகில் சென்று நின்று கொண்டு தன் குளிர்கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டே அவளைப் பார்த்தான்.

“இங்க சுத்தி முத்தி இருக்கிறவக எல்லாம் நம்ம வீட்டுல, காட்டுல, மண்டிலன்னு வேலை பார்க்குறவகதான்… அதுனால உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் நீங்க கேக்கலாம்…செய்வாவ…அப்போ நான் கிளம்பட்டா” என்றவன் தன் வண்டியில் ஏறிப் பறந்து விட்டான்.

பேஸ்து அடித்தது போல் நின்றிருந்தவள், மற்றவர்கள் “அப்போ நாங்களும் கிளம்புதோம்மா…புது ஊருன்னு மயங்காதீய…இதோ கூப்பிடு தூரத்துலதான் இருக்கோம்…ஒரு கொரல் கொடுத்தியன்னா ஓடியாந்துருவோம்” என சொல்லிக் கொண்டு கிளம்பவும்தான் தன்னுணர்வு பெற்றாள்.

அவர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பி வைத்தவள் கிளம்பிக் கொண்டிருந்த ராசுவை நிறுத்தி அவன் கையில் ஒரு இருநூறைத் திணிக்கவும் “எதுக்கும்மா?” என்றவனை “வச்சுக்கோங்கண்ணா! காலையில இருந்து எங்கூட வெய்யில்ல அலைஞ்சுருக்கீங்க…” என்றாள்.

அவன் நாணிக் கோணிக் கொண்டே பெற்றுக் கொண்டான். பின், மனைவி, மூன்று பெண்பிள்ளைகளைக் கொண்ட அவன் குடும்பத்துக்கு அரசாங்க வருமானம் போகவும் இந்த மாதிரி மேல்வரும்படி இல்லாமல் முடியாதே!

கதவைப் பூட்டி விட்டுத் தன் மகனை நாடிச் சென்றாள். சாமிப் படம் வைத்திருந்த அறையில் ஒரு ஓரமாக அவள் கடைவீதியில் வாங்கிக் கொடுத்திருந்த சிறிய கார் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தவனைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டாள்.

“செழியன் குட்டிக்கு புது வீடு பிடிச்சிருக்குதா?”

“ஒம்ப (ரொம்பப்) பிச்சிருக்கு”

அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

உள்ளம் அன்று நடந்தவைகளை அசை போட ஆரம்பித்தது.

குமரன் அவள் சொன்ன பொய்யை நம்பவில்லை…அது அவன் சீண்டலிலேயே தெரிந்தது.

ஆண்களின் சீண்டல்கள், கேலிப்பேச்சுக்கள் அவள் அறியாதது…சிறு வயதில் இருந்து பெண்கள் பள்ளியில் படித்தவள்…ஊருக்குள்ளும் பெரிய மனிதர் பெண் என்பதால் யாரும் அவளிடம் வந்து பேசியோ, கேலி செய்தோ, சீண்டியோ அவளுக்குப் பழக்கம் இல்லை… பிறகு படித்த ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் பெண்களுக்கானதே!

இப்படியிருக்க, குமரனின் பார்வையும் பேச்சும் அவளுக்குக் குறுகுறுப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான்… ஆனாலும் அதற்காக அவன் பேசுவதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? இனி என்ன செய்வானோ…

என்ன செய்து விட முடியும், அவள் விருப்பம் இல்லாமல்… என்ற எண்ணம் தோன்ற நிமிர்ந்து உட்கார்ந்தாள். எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தவள் செழியனை விளையாட விட்டு, சென்று குளித்து இரவு உடைக்கு மாறி வந்தாள்.

வாங்கி வந்திருந்த அரிசியில் கொஞ்சம் சோறு வடித்து, பாலைக் கலந்து அவனுக்குப் பால் சோறு ஊட்டி விட்டவள் தானும் மீதமிருந்ததை உண்டு முடித்துப் பின் மதர் கேத்தரீனை அலைபேசியில் அழைத்தாள்.

அன்றைய நாளின் நிகழ்வுகளை அவருடன் பகிர்ந்து கொண்டவள் மதர் அனாவசியமாகக் கவலைப்படுவார்களே என்ற எண்ணத்தினால்…தனக்கு எந்தத் தொந்தரவும் இல்லையென்ற உறுதிமொழியைக் கொஞ்சம் மனது உறுத்தலுடனே என்றாலும் கொடுத்து விட்டே வைத்தாள்.

ரயில் பயணத்திற்காகக் கொண்டு வந்திருந்த போர்வையை விரித்து காற்றடைத்த தலையணையையும் வைத்துக் கொண்டு மகனை அணைத்தபடியே உறங்கி விட்டாள்.

பகலில் அவளைச் சீண்டி மகிழ்ந்தவனோ இரவில் அவனில்லத்தில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.

சுந்தரவடிவழகியின் வீட்டிலிருந்து நேராக வழக்கம் போல் மதுக்கடைக்குச் சென்றவன் சுருதி ஏற்றிக் கொண்டு வனஜாவின் வீட்டுக்குக் கிளம்பினான். ஆனால் படுக்கையில் வனஜா அவனருகில் நெருங்கிய போது அவள் கண்கள் மறைந்து, அந்த இடத்தில், அவனைக் கண்டதும் மலர்ந்த பங்கய விழிகளைக் கண்டவனுக்கு முதலில் ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை.

அவன் கண்களைக் கசக்கி விட்டுக் கொள்ளவும் “ஏன் என்னாச்சு…உடம்பு கிடம்பு சரியில்லையா…கண்ணை அப்பிடிக் கசக்குறீயளே?” என வனஜா கேட்கவும்தான் இருக்குமிடம் நினைவு வர ஏனோ அதற்கு மேல் வனஜாவின் அண்மையை அனுபவிக்க முடியவில்லை அவனால்…அவள் சொன்னதையே பிடித்துக் கொண்டு “ஆமா! கொஞ்சம் உடம்பெல்லாம் வலிக்கிற மாதிரி இருக்கு”

“நான் பிடிச்சு விடுதேன்”

அவன் கைகளை இதமாக அமுக்கியவள் “உடம்பு கூடக் கொஞ்சம் சுடுத மாதிரிதான் இருக்கு”

“ம்ம்ம்…கண்ணெல்லாம் கூட எரியுத மாதிரிதான் இருக்குது…ஏதாவது வைரஸ் காய்ச்சலா இருக்குமோ என்னவோ! சரி நான் கிளம்புதேன்… ரொம்பப் பக்கத்துல வந்து உனக்கும் ஏதாச்சும் வந்துறப் போவுது” என்று அவன் கூறியவுடன் அவள் ஏமாற்றமாகப் பார்த்தாலும் அவனைத் தடுக்க முயற்சிக்கவில்லை.

அன்று வீட்டிற்கு வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவே வந்து விட்டவனை ஆச்சர்யமாகப் பார்த்தாலும் எதுவும் கேட்காமல் உணவு பரிமாறினார் பொன்னி.

உண்டு முடித்து உடம்பு கழுவி வந்து படுக்கையில் விழுந்தவனுக்கு உறக்கம் சாமானியத்தில் வருவதாக இல்லை.

சுந்தரவடிவழகியை நினைத்துக் கொண்டே படுத்திருந்தான்.

மெல்லிய மேனிதான்…ஆனாலும் ஒரு நிமிர்வு தெரிந்தது அவளிடம்… வெறும் பருத்திச் சேலையிலும் நூல் போல் நகையிலுமே கண்ணைப் பறிக்கிறாள். இன்னும் பட்டுச் சேலை அலங்காரமெல்லாம் செய்தால் என நினைத்தவன் மனதில் அவளை அலங்கரித்துப் பார்த்தான்.

கணவனில்லாமல் குழந்தையுடன் தனியாக வசிப்பவள்… அவளுக்கும் தன் மீது விருப்பம் இருக்கிறது… கொஞ்சம் முயற்சி செய்தால் போதும்…மடிந்து விடுவாள்… எனத் தனக்குள் முடிவு செய்து கொண்டவன் அவளைப் பக்கத்தில் வைத்துப் பார்க்கும் நாளைக் கற்பனையில் கண்டபடியே கண்ணயர்ந்தான்.

ஒன்னோட சுந்தர ரூபம் வர்ணிக்க ஓர் கவி வேணும்
மோஹன ராகம் நின் தேகம் கீர்த்தனமாக்கி ஞான் பாடும்
உஞ்சிரிப்பால் என் உள்ளம் கவர்ந்நு
கண்ணான கண்ணே என் சொந்தம் அல்லோ
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திரு ஓணம்

Advertisement