அத்தியாயம் 27

அவன் கேட்ட கேள்வியில் அவனைக் குழப்பமாகப் பார்த்தவளிடம் தன் திட்டத்தை விவரிக்கலானான்.

“இதுனால உங்க பேரு கெட்டுடாதா?”

“என் பேரு கெட்டா என்ன? என்னை எவ்வளவுக்கு கெட்டவனாக் காட்டுதோமோ அவ்வளவுக்கு ஒன் அண்ணனுகளால ஒனக்குப் ப்ரச்சனை வராது.”

“அதெல்லாம் வேணாம். என்னை மட்டும் வில்லியம் கூட அனுப்பிருங்க. நான் ஓடிப் போனவளாக் கெட்டவளா இருந்துட்டுப் போறேன். உங்க பேரை நீங்க எதுக்காகக் கெடுத்துக்கணும்?”

“நீ ஓடிப் போனா உன் அண்ணனுங்க உன்னை சும்மா விட்டுருவானுங்கன்னு நினைக்குதியா வேதா? நீ கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிப் போனாலும் கண்டுபிடிச்சுக் கண்டந்துண்டமா வெட்டுவானுங்க. அவனுங்களுக்கு ஒம் மேல பரிதாபம் ஏற்பட்டாத்தான் அவனுங்களோட தேடுற முயற்சி குறையும். அப்பமும் தேடுவானுங்க. ஆனா நீ ஓடிப் போயிட்டன்னு தெரிஞ்சாக் குடும்ப கௌரவத்தக் குலைச்சுட்டேன்னு வெறியோட தேடுவானுங்க”

அவன் சொன்ன பிறகும் அதை ஒத்துக் கொள்ளாமல் பல விதமாக விவாதம் செய்து இறுதியில் வேறு வழியில்லாமல் அவன் திட்டத்துக்குச் சம்மதித்தாள் வேதவல்லி.

அதன்படி இருவரும் சேர்ந்து நாடகத்தை நன்றாகவே நடத்தி மற்றவர்கள் அதை நம்பும்படி நடிக்கவும் ஆரம்பித்தனர்.

வில்லியமைப் பற்றி நம்பத் தகுந்த ஆட்களை வைத்து விசாரிக்க அவன் அவனைப் பற்றிக் கொடுத்த தகவல்கள் அனைத்தும் உண்மையே என்று தெரியவர வில்லியமுடன் பேசி அவள் மும்பை செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனித்தவன் சரியாக ஒரு வாரத்தில் எல்லாவற்றையும் முடித்து விட்டு அவளிடம் வந்தான்.

“நாள வெடிய முன்ன கெளம்பணும் வேதா.ரொம்ப அவசியமா இருக்கிற உடுப்பு, உன் நகைங்க, ஒன் சர்டிஃபிகேட்டு இதெல்லாம் மட்டும் எடுத்து வச்சுக்கோ” என்றவன் மறுநாள் காலை அவர்கள் அறையில் இருந்த ரகசிய வழியின் வழியாக அவளை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று பேருந்து நிறுத்தத்தில் காத்து நின்ற வில்லியமிடம் ஒப்படைத்தான்.

இருவரும் கைகுலுக்கிக் கொள்ள,

“கார் ஏற்பாடு பண்ணுதேன்னா வேணாம்னுட்டிய.பஸ்ஸுல எத்தனை பேர் பார்க்கானோ!”

“அதெல்லாம் கவனமா இருந்துக்கிறோம் மாமா.ஏற்கனவே மும்பைக்கு ஃப்ளைட் டிக்கட், அங்க தங்க அது இதுன்னு பல செலவு” என்றவள் கண்கள் கலங்கின.

“ஏற்கனவே என்னால உங்களுக்கு வரப் போற கெட்ட பேருக்கும் இனி நீங்க அனுபவிக்கப் போற கஷ்டத்துக்கும் நான் காரணமாகப் போறேனோன்னு குற்ற உணர்ச்சி என்னைக் கொல்லுது. இதுல நீங்க மேலும் மேலும் உதவி செய்து என்னை நன்றி கெட்டவளாக்காதீங்க மாமா!”

“வேத்தாளா நெனக்காதத்தா.உன் அத்தை பையனா என்னை நெனச்சுக்கோ. உறவிருக்கிற உரிமையோட செய்றதா நெனச்சுக்கிறேன் நான்” என்றவனுக்கு நிஜமாகவே அவள் மீது சிறிதும் கோபமோ வெறுப்போ எழவில்லை. மாறாக இப்படி ஒரு கிராமத்தில் பிறந்தாலும் தன் கனவுகளைத் தெளிவாகத் திட்டமிட்டு முடிந்தவரை அதை நிறைவேற்றிக் கொள்ளப் போராடும் அவள் குணம் கண்டு பிரமிப்பே ஏற்பட்டிருந்தது.

வில்லியமிடம் திரும்பியவன் “உங்களை நம்பித்தான் அனுப்புதேன். அவளுக்கு வேற ஆருமில்லைன்னு நெனச்சுக்காதீக. நல்ல நண்பனா நானிருக்கேன் எப்பமும்” என்றான்.

அவன் கைகளைப் பற்றிக் கொண்ட வில்லியம் “எனக்கு நெருங்கிய உறவுன்னு சொல்லிக்கப் பெருசா யாருமில்ல. வேதாகிட்ட நல்ல திறமை இருக்கு. அது இந்த கிராமத்துல கிடந்து வீணாக வேண்டாமேன்னுதான் நான் கூட்டிட்டுப் போறேன். எனக்கு உங்க அளவு வசதி இல்லை. இல்லைன்னா அவ நகைகளைக் கூடக் கொண்டு வர வேணாம்னு சொல்லி இருப்பேன். இந்த நகைகள்ல கடைசிக் குந்துமணி வரைக்கும் அவ படிப்புக்கும் வசதிக்கும்தான் செலவு செய்வேன். கண்டிப்பா என்னை நீங்க நம்பலாம்” எனவும் அவனை அணைத்துக் கொண்டான் அமுதன். அந்நேரம் தூத்துக்குடி செல்லும் பேருந்து வந்து விடவும் இருவரும் கிளம்பினர்.

மறுநாள் அவன் சொல்லி அவள் எழுதி வைத்து விட்டுப் போயிருந்த கடிதத்தை வைத்து நாடகத்தை வெற்றிகரமாக முடித்தும் விட்டான்.

பழைய நினைவுகளில் இருந்து மீண்டு, நடந்ததை விவரித்துக் கொண்டிருந்த வேதவல்லியிடம் கவனம் திருப்பினான் அவன்.

“அதுக்கப்புறம் வில்லியமோட உதவியால மும்பையிலேயே படிச்சு வேலை பார்த்து நான் ஆசப்பட்டபடியே வெளிநாடு போய் இதோ இன்னிக்கு ஒரு பெரிய ஃபேஷன் டிசைனரா உங்க முன்னால நிக்கிறேன்”

“கிட்டத்தட்ட ஒன்பது வருஷம் முன்னால இந்த ஊரை விட்டுப் போன நான் இப்போ திரும்பி தைரியமா வந்துருக்கேன்னா அதுக்கு என் படிப்பும், அதன் மூலம் கிடைத்த தொழிலும், என் சம்பாத்தியமும், என் சொந்தக் கால்ல நான் நிக்கிறேங்கிற துணிவும்தான் காரணம்”

“இந்த அளவுக்கு வளருறதுக்கு முன்னால நான் எங்க இருக்கேன்னெல்லாம் வெளிப்படுத்திகிட்டா என் அண்ணனுங்களால ஆபத்துன்னுதான் இவ்வளவு நாள் நான் இங்க வரல.”

“மும்பையில இருந்து ஃபாரின் போறப்போத் தனியாப் போறதை விடக் கணவன் மனைவியாப் போறது நல்லதுன்னு பட்டனால முழுக்க முழுக்க எனக்காகவே என் முன்னேற்றத்துக்காகவே பாடுபட்ட வில்லியமையே கல்யாணம் செய்துகிட்டேன்.” என்றவள் தன் அலைபேசியை எடுத்து அழைக்க அங்கே ஓரமாக நின்றிருந்த இரண்டு கார்களில் ஒன்றிலிருந்து வில்லியம் அவர்களின் இரண்டரை வயது மகன் முகிலமுதனைத் தூக்கியபடியே இறங்கி வந்தான்.

அவ்வளவு நேரம் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி நின்றிருந்த வேதவல்லியின் அண்ணன் சீறிக் கொண்டு முன்னால் வந்தான்.

“ஏண்டி, கன்னாலம் கட்டி வச்ச புருசன் படுத்துத கொடும தாங்க மாட்டாம ஓடிப் போனவ என்ன செய்யுதியோ என்னவோன்னு நாங்கல்லாம் வெசனப்பட்டுகிட்டுக் கெடக்க, நீயி வேத்து சாதி கூட இல்லாம, வேத்து மதத்தானோட குடும்பம் நடத்திக் கொழந்தையோட வந்து நிக்குதியோ? ஒன்ன வெட்டிப் போட்டாத்தாண்டி எம் மனசு ஆறும்”

அவன் கை வேதவல்லியின் மீது படும் முன்னே இடையில் சென்றிருந்தான் அமுதன்.

“மச்சான்! என்னவே இப்பிடிப் பச்சப் புள்ளை கணக்காப் பேசுதீரு! நீரு வெட்டுத வரை எங்கையி பூப்பறிக்குமோ?”

தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்தவன் அழுத்தமான குரலில்,

“வேதா எங்க வீட்டுப் பொண்ணு. அவ இன்னிக்கு இருக்கிற நெலமைக்கு அவ கண்ணசைச்சா என்ன நடக்குமுன்னு தெரியுமா?” என்று விட்டு வேதாவைப் பார்த்து கண்ணைக் காட்ட, அவள் அலைபேசியை எடுத்துப் பேச, பின்னால் நின்றிருந்த காரில் இருந்து இரண்டு பவுன்சர்கள் கிங்கரர்களாக இறங்கி நின்றிருந்தனர்.

“இங்கன என்னை மீறி உம்மால வேதா மேல கையை வச்சிக்கிட முடியாது. இங்கன இருந்து கெளம்பினப்புறம் அவளையோ அவ குடும்பத்தையோ ஏதாவது செய்யலாம்னு கனவு காணாதீரும்.அவளை நெருங்கிக்கிடக் கூட முடியாது உம்மால”

“அவ என்னை விட்டுப் போனப்புறம் ஊர் பூராம் அவளை நீங்க அண்ணந்தம்பிங்க தேடுனதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நெனக்கீகளோ? அவ இங்கன இருக்கா அங்கன இருக்கான்னு ஒங்களுக்குத் தகவல் குடுத்துத் தெச திருப்பி விட்டு இங்கனயே சுத்த விட்டதெல்லாம் ஆருன்னு நெனக்கீக? எல்லாம் ஐயாவோட வேலதான்”

சட்டைக் காலரைத் தூக்கி விட்டு பாவனை காட்டியவன் “அவ நல்ல நெலமைக்கு வருத மட்டும் அவ இருக்குத எடம் யாருக்கும் தெரிய வர வேணாமேன்னுதான் நானும் அமைதியா ஏச்சுப் பேச்சையெல்லாம் கேட்டுகிட்டு இருந்தேன். இப்ப என் முன்னாலயே அவ மேல கைய வைக்கப் போறீரோ? கைய வச்சுப் பாரும்வே. என்ன நடக்குன்னு…” என்றவன் ஓரமாய் வைக்கப்பட்டிருந்த அறுவாளைக் குறிப்பாகப் பார்க்க வேதாவின் அண்ணன் அடங்கினான்.

“பொறவென்னப்பா? அம்புட்டுத்தான் பஞ்சாயத்து.நம்ம மாறன் தம்பி அப்பப் போலவே இப்பயும் சொக்கத் தங்கம்னு எல்லாத்துக்கும் புரிஞ்சிருக்கும். நாமா அவரை ஒதுக்கி வைக்கலன்னாலும் அவரா நல்லது பொல்லதுக்கு மின்ன நிக்காம ஒதுங்கிட்டாரு.இனமே ஊருக் காரியம் எல்லாத்தையும் அவரே மின்ன நின்னு நல்லபடியா நடத்திக் குடுப்பாரு. அப்படித்தான தம்பி?”

“அதுக்கென்னங்கையா.நீங்க பெரியவக சொல்லிட்டா அது போலவே செய்ஞ்சுபிடலாம்” என்று புன்னகையோடு ஆமோதித்தவன் ஓரமாக நின்றிருந்த கண்ணாயிரத்திடம் கண்ணைக் காட்ட அவன் தன் கையிலிருந்த சில பத்திரிக்கைகளைக் கொண்டு வந்து அமுதனிடம் கொடுத்து விட்டுப் போனான்.

“இதெல்லாம் என்ன தெரியுமா? நம்ம வேதா வடிவமைச்ச உடுப்புங்க. இன்னிக்கு அவளோட ஒரு மாச வருமானம் என்ன தெரியுமா? அரைக் கோடியைத் தாண்டும்.அவ மட்டும் வீட்டுல கன்னாலம் ஏற்பாடு பண்ணிட்டாங்கன்னு அமைதியா இருந்துருந்தா இந்நேரம் இந்த வெற்றி கெடச்சிருக்குமா?”

“என் பொண்டாட்டி மட்டும் என்ன? பதினைஞ்சு வயசுல நடக்க இருந்த கன்னாலத்த எதுத்து வெளிய வந்து இன்னிக்கு டாக்டருக்குப் படிக்குதா.இப்பிடிப் பொம்பளைங்க தங்களுக்காகத் தங்களோட ஒறம்பறைகளையே எதுத்துப் போராடத் தேவையில்லாம நாமே அவகளைப் படிக்க வச்சாத்தான் என்ன?”

“எல்லாத்துக்கும் ஒன்னு சொல்லிக்க ஆசைப்படுதேன். வீட்டுல பொம்பளைப் புள்ளைக படிக்க ஆசைப்பட்டாப் படிக்க வையுங்க. படிக்க ஆர்வமோ தெறமையோ இல்லைன்னாலும் ஒரு பத்தாவது வரைக்கும்னாலும் படிக்க வச்சுட்டு ஏதாவது ஒரு கைத்தொழிலைக் கத்துக் குடுங்க”

“பெத்த தகப்பன் கைவிட்டாலும் படிச்ச படிப்பு கைகுடுக்கும். கட்டின புருஷன் கைவிட்டாலும் கத்துகிட்ட கல்வி கைகுடுக்கும். தெறமை இல்லாதவுகன்னு இங்கன ஆருமே கெடையாது.அந்தப் புள்ளைக்கு என்ன ஆசையிருக்கோ என்ன வருதோ அதைக் கத்துக்கிட வையுங்க.”

“அத விட்டுட்டுப் பொறந்த நா மொதலாக் கன்னாலம், புருஷன், கொழந்தைன்னு மாடு செக்கைச் சுத்தி வார மாரி அவுகளைச் சுத்தி வர வைக்காதீக. ஒங்க வீட்டுலயும் ஒரு குமுதாவோ ஒரு வேதாவோ உருவானா வேண்டாம்னா கெடக்கு? பொம்பளைப் புள்ளைகளைப் படிக்க வையுங்க.உங்க வீடும் இந்த நாடும் நல்லாயிருக்கும்”

“அருமையாச் சொன்னீக தம்பி. என்னையா… எல்லாம் கேட்டுகிட்டீகளா? இனி பொம்பளைப் புள்ளைகளைப் படிக்க வைப்பீகளா?”

“நிச்சயமாப் படிக்க வைப்போம் தலைவரே”

“நல்லது. இத்தோட பஞ்சாயத்துக் கலையலாம்”

வேதவல்லியையும் வில்லியமையும் வீட்டுக்கு வருமாறு குமுதாவுடன் சேர்ந்து முறைப்படி அழைத்தவன் வீட்டுக்குத் திரும்பினான்.

அவனுடனே பஞ்சாயத்துக்கு வந்து அவனுக்கு சற்று முன்னரே வீட்டுக்குத் திரும்பி இருந்த மரகதம் கண்களில் கண்ணீர் வழியக் கூடத்து மெத்திருக்கையில் அமர்ந்திருக்கக் கண்டவன் பதறி அடித்துக் கொண்டு அருகே ஓடினான்.

அவர் காலடியில் அமர்ந்தவன் அவர் கைகளைப் பற்றிக் கொண்டு “யம்மோவ்!” என்றபடிக் கண்கலங்க அதே நேரம் வாசலில் கார் வந்து நிற்க வேதவல்லியும் தன் குழந்தையுடனும் வில்லியமுடனும் உள்ளே நுழைந்திருந்தாள்.

வீட்டுக்குள் நுழையவும் அமுதன் “குடிக்கக் கொஞ்சம் தண்ணி எடுத்தா ராசாத்தி” என்றிருக்க கையில் தண்ணீர் செம்புடன் வந்தவள் தாயும் தனயனும் கைகளைப் பற்றியபடி அமர்ந்திருந்த கோலம் கண்டு அப்படியே நின்றிருந்தாள்.

மரகதம் எதுவும் பேசாமல் மகனின் தலையை வருடிக் கொடுக்க ஏதோ புரிந்தவளாக வேதவல்லியும் குழந்தையைக் கணவனிடம் கொடுத்து விட்டு அவர் காலடியில் சென்று அமர்ந்தாள்.

அவள் தலையையும் ஆதூரத்துடன் அவர் வருட,

“உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டோம். இல்லத்த?”

வேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டவர்,

“அப்பிடி எல்லாம் இல்லத்தா. எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுல்ல. எல்லாம் நல்லதுக்குத்தான் விடுங்க” எனவும்,

“இல்லத்த! இன்னொரு விஷயம் பாக்கியிருக்கு” என்றாள் வேதா.

“என்னத்தா?”

அவருக்கு பதில் சொல்லாமல் கண்களைச் சுழற்றியவள் ஆங்காங்கே தென்பட்ட வேலையாட்களின் தலைகளைக் கண்டு திருப்தியுற்றவளாகப் பேச ஆரம்பித்தாள்.

“எங்க கல்யாணம் முடிஞ்ச ரெண்டாம் நாள் மாமா எங்கிட்ட வந்து…”

“வேதா அது என்னத்துக்கு இப்ப?” அமுதன் வேகமாக இடையிட்டான்.

“நீங்க சும்மா இருங்க மாமா.நான் சொல்லணும். மாமா எங்கிட்ட வந்து எனக்கு ஒரு உதவி செய் வேதான்னு கேட்டாங்க”

“நானே அவங்க உதவியை நாடி இருக்கிறப்போ நான் அவங்களுக்கு என்ன உதவி செய்துட முடியும்னு புரியாட்டாலும் சொல்லுங்க மாமான்னேன்”

“அவங்களுக்குக் குடும்பம் நடத்தத் தகுதி இல்ல அப்பிடிங்கிற மாதிரி மத்தவங்க காது பட நான் பேசணும்னு சொன்னாங்க.”

வேதா சொன்னதும் மரகதம் முகம் முழுக்க அதிர்ச்சி நிரம்பியவராக அவனை நிமிர்ந்து பார்த்தார். குமுதா முந்தைய நாள் இரவே ஓரளவு இந்த விஷயத்தை ஊகித்திருந்தாலும் அவளும் ஆர்வமாகவே கேட்கலானாள்.

“மாமா சொன்னதும் நான் முடியவே முடியாதுன்னேன். எதுக்கு மாமா உங்க மேல தேவையில்லாம இப்படி ஒரு பழியைப் போட்டுக்கிறீங்கன்னு கேட்டேன். நாளைக்கு இதுனால உங்களுக்கு இன்னொரு வாழ்க்கை அமையவே வாய்ப்பு இல்லாமப் போய்டும்னு சொன்னேன்.”

“அது இன்னொரு வாழ்க்கை அமையுதப்போ பார்த்துக்கலாம். இப்போ நீ போயிட்டேன்னா எங்கம்மை அடுத்து யாரையாவது கல்யாணம் பண்ணி வைக்கப் பார்க்கும். எங்கம்மை சும்மா இருந்தாலும் ஊருல எவனாவது வந்து புள்ளைக்குக் கன்னாலம் கட்டலையா அது இதுன்னு பேசி அம்மை மனசைக் கலைக்கப் பாப்பானுக. எனக்கு இப்பதைக்குக் கல்யாணத்துல விருப்பமில்ல. அதுனால நீ இந்தப் பொய்யைச் சொல்லுன்னு கட்டாயப்படுத்துனாங்க. நானும் எவ்வளவோ மறுத்துப் பார்த்தேன்.அப்படி உங்க வாழ்க்கையைக் கெடுத்துத்தான் நான் நல்லா இருக்கணும்னா நான் போகவேயில்ல, இங்கயே இருக்கப் போறேன்னு கூட மிரட்டிப் பார்த்தேன். கடைசில பிடிவாதம் பிடிச்சு நினைச்சதை சாதிச்சுக்கிட்டாங்க”

மரகதத்தின் குழப்பமான மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்க முகம் மலர்ந்து விகசிக்க “அப்போ என் பிள்ளைக்குக் குறை ஒன்னும் இல்லையா?” என்றார் அவன் தலையை வருடியபடி.

“அதெல்லாம் ஒரு குறையும் இல்ல.குமுதா படிப்பு முடியக் காத்திருக்கார்னு நினைக்கிறேன்.படிப்பு மட்டும் முடியட்டும். அடுத்த பத்தாவது மாசமே உங்க மடியில உங்க பேரப்பிள்ள இருப்பான். என்ன மாம்ஸ், உங்களை நம்பி நான் கேரன்டீ குடுக்கலாமா?”

“அடிங்க… இதெல்லாம் போய்ச் சொல்ல வேணாம்னாக் கேக்காமச் சொல்லிட்டு கேரன்டீ குடுக்கவான்னா கேக்குத?” என்றவன் எழுந்து அவளை அடிக்கத் துரத்த அவளோ புள்ளி மானாய்த் துள்ளி ஓடிச் சென்று குமுதாவின் பின் நின்று கொண்டாள். இத்தனை வருடங்களில் அவர்களுக்கிடையே துளிர் விட்டிருந்த அழகிய நட்பை அறிந்தவனாதலால் இந்த விளையாட்டைப் புன்னகையுடனே பார்த்திருந்தான் வில்லியம்.

துரத்திக் கொண்டு வந்தவன் மீது மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்ற குமுதாவைத் தள்ளி விடக் கணவனின் நெஞ்சில் மோதி நின்றாள் மலரவள்.

அவள் விழுந்து விடாமல் அணைத்துப் பிடித்தவன் மனம் மனையாளின் அண்மையில் லயிக்க அதைக் கண்ட வேதா கலகலவென நகைத்தபடி மரகதத்தின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அவள் நகைப்பில் சுயநினைவடைந்தவன் குமுதாவை அணைப்பிலிருந்து விடுவித்து விட்டு வேதாவை முறைத்தான்.

அவனைக் கண்டுகொள்ளாமல் “அத்த! உங்களுக்கு விஷயம் தெரியுமா? இன்னிக்குப் பஞ்சாயத்துக்கு எல்லாம் அரேஞ்ஜ் பண்ணிட்டு மாமாகிட்டச் சொல்றதுக்காக நேத்து ராத்திரிக் கால் பண்ணினா, விழுந்துச்சு பாருங்க திட்டு உங்க மருமககிட்ட இருந்து… காதுல ரத்தம் வராத குறைதான்”

காதைத் தேய்த்துக் கொண்டே அவள் சொன்னதைக் கேட்டுக் குமுதாவின் முகம் சிவந்து விட கணவனின் பின்னே மறைந்து கொண்டாள்.

“அப்பிடி எல்லாம் ஒளிஞ்சு தப்பிக்க முடியாது டாக்டரம்மா. சீக்கிரமா ஒரு பிள்ளயைப் பெத்து எங்க மாமா மடியில போடணுமாக்கும்”

இன்னுமே குமுதாவின் முகம் சிவந்து விட மரகதத்துக்கோ மனமெல்லாம் நிறைந்து விட்டது.

படக்கென எழுந்தவர் “வீட்டுக்கு வந்தவுகளுக்கு இன்னும் ஒரு வாத் தண்ணி கூடக் குடுக்கல.ஏ ரத்தினம்! அந்தப் பழத்த எடு. சூசு போடுவோம்” என்றவர் விறுவிறுவெனச் சமையலறைக்குச் செல்ல வேதாவுக்கு அவர்கள் தங்குவதற்கான அறையைக் காட்டி விட்டு மனைவியிடம் கண்ணைக் காட்டி மேலே வருமாறு ஜாடை செய்து விட்டு மாடிக்குப் போனான் அமுதன்.

அவன் மளமளவெனப் படியேறிச் சென்று விட குமுதாவுக்கோ இனம் புரியாத அவஸ்தை. வீட்டில் விருந்தினர்கள் நிறைந்திருக்க, அழையா விருந்தாளியாய் வெட்கம் வந்து சூழ்ந்து கொள்ள, கண்களைச் சுழற்றியவள் அங்கே ஒருவரும் இல்லாதது கண்டு ஆசுவாசமாகி மாடியேற ஆரம்பித்தாள்.

இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க என வெட்கமும் தயக்கமும் போட்டியிட மெல்ல மெல்ல அவள் அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்க அறைக்குள் சென்றிருந்தவனோ ‘இன்னுமென்ன இவளைக் காங்கல’ என மீண்டும் வெளியே வந்திருந்தான்.

அப்போதுதான் மாடிப்படியின் ஆரம்பத்தை அடைந்திருந்தவளைக் கண்டவனுக்குச் சிரிப்பு வந்தாலும் “இவ ஒருத்தி மனுசன் அவஸ்தை புரியாம அன்ன நட நடக்கா” என்று முனங்கி விட்டு விறுவிறுவென அவளருகில் வர அவன் வருவான் என எதிர்பார்க்காதவளாகத் திகைத்து அவள் விழிக்க,

“சீக்கிரமா வாடின்னா என்னமோ பொத்திப் பொத்தி நடக்குதியே” என்றவன் அவளைக் கைகளில் அள்ளிக் கொள்ள “மாமா என்ன பண்ணுதிய?” என்றவள் சிணுங்கச் சிணுங்க அவளைத் தூக்கிக் கொண்டே அறைக்குள் நுழைந்தவன் கதவைச் சாற்றி அவளையும் கதவில் சாய்த்து நிற்க வைத்தான்.

வஞ்சியவளுக்கு அவனை ஏறெடுத்தும் பார்க்க முடியாது வெட்கம் பிடுங்கித் தின்னக் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள்.

தன் கைகளால் அவள் கைகளை விலக்கியவன் அவள் கண்களை மூடியே இருக்கக் கண்டு “ஏய்! கண்ணத் தொறடி!” என்றான்.

“ம்ம்ஹூம்” என்று அவள் மறுப்பாகத் தலையாட்ட, குனிந்தவன் அவள் விழிகளில் தன் இதழ்களைப் பொருத்தினான். அவள் கண்களைத் திறக்காமலேயிருக்க அவனோ இதழ்களை இடம்மாற்றி நெற்றி, நாசி, கன்னங்கள், கழுத்து என முன்னேறத் துடியிடையாள் துவண்டு போனாள்.

கால்கள் அவளைத் தாங்கும் சக்தியற்றதாய் வலுவிழக்க, பிடிப்புக்காக அவன் சட்டைக் காலரைப் பற்ற அவனோ அவளை இடையோடு தூக்கித் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

மேலும் மேலும் அவன் கைகளும் இதழ்களும் கட்டுப்பாட்டை மீறிக் கொண்டிருக்க அந்நேரம் அவன் அலைபேசி ஒலியெழுப்பி மேகங்களில் மிதந்து கொண்டிருந்தவர்களைத் தரையிறக்கியது.

மனமில்லாமல் மனையாளிடமிருந்து இதழ்களைப் பிரித்தவன் அழைப்பது வேதவல்லி எனத் தெரிந்ததும் அலைபேசியைக் காதுக்குக் கொடுத்தான்.

அலைபேசியின் அழைப்பில் குமுதாவும் கொஞ்சம் சுதாரித்திருந்தாலும் கணவனின் கைவளைவிலேயே நின்றிருக்க, செக்கச் சிவந்து கிடந்த அவள் கன்னங்களில் விரல்களால் கோலமிட்டபடி “சொல்லு வேதா!” என்றான்.

“என்ன மாம்ஸ் ரொமான்ஸ்லாம் முடிஞ்சதா?” எனவும் அமுதன் வாய்விட்டுச் சிரித்து விட்டான்.

“ஏங் கேக்க மாட்டே? நாலு வருஷம் மின்னக் கன்னாலம் கட்டிக் கையில ரெண்டரை வயசுப் புள்ளையோட எல்லா சோலியையும் முடிச்சுட்டு இப்பத்தான் ஆரம்பிக்கிற என்னைப் பார்த்து முடிஞ்சதான்னு கேக்குத” எனவும் குமுதா முகம் சிவந்தாள்.

“அதுக்கில்ல மாம்ஸ். இங்க கண்ணாயிரம் அண்ணா குமுதாவுக்கு ஏதோ பரீட்சை இருக்குன்னு சொன்னதா சொல்றாங்க. இன்னும் காலேஜுக்குக் கிளம்பலையான்னு கேட்டாங்க. அதுதான் ஃபோன் பண்ணினேன்”

அமுதனின் அணைப்பில் நின்றிருக்க, வேதவல்லியின் வார்த்தைகள் ஸ்பஷ்டமாய்க் குமுதாவின் செவிகளைச் சென்றடைய, கணவனைப் பிடித்துத் தள்ளி விட்டவள் “ஆத்தி! மத்தியானம் இன்டெர்னல்ஸ் இருக்குததை மறந்துட்டு இந்த மாமாவோட சேர்ந்து என்ன வேலை பார்த்துகிட்டுக் கெடக்கேன்” என முனகியபடி தன் பையையும் மற்ற பொருட்களையும் தேடிச் சேகரிக்க ஆரம்பித்தாள்.

தானும் உணர்ச்சிவசப்பட்டு அவள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லி இருந்ததை மறந்து விட்டிருந்தவன் கையால் கேசத்தைக் கோதிக் கொண்டே “இதோ தயாராயிட்டா வேதா. இப்பம் வந்துருவா” என்று விட்டு அலைபேசியை அணைத்தான்.

முதல் நாளிரவும் போட்டது போட்டபடியே படுத்து விட்டிருக்க, காலையில் பஞ்சாயத்துப் பரபரப்பில் எதையும் எடுத்து வைக்காது சென்றிருக்க, அரக்கப்பரக்கப் பொருட்களைத் தேடிக் கொண்டிருந்தவளுக்குத் தானும் கண்ணில் பட்டதை எடுத்துக் கொடுத்தவன் இறுதியாக அவள் டாக்டர் கோட்டை எடுத்துக் கொண்டு அருகில் வந்தான்.

கோட்டை அவள் தோளில் ஒரு பக்கமாகப் போட்டவன் “பரீட்சை இருக்காத்தா? படிச்சுட்டியா?” என வினவ

“அதெல்லாம் படிச்சுட்டேன் மாமா! இப்பக் கெளம்பட்டுமா?”

அவளை இறுக அணைத்து அவள் இதழ்களில் இதழ் பதித்து மனமே இல்லாமல் விலகியவன் “வா!” என்று அவளையும் அழைத்துக் கொண்டே கீழே வந்தான்.

கட்டி வைத்திருந்த உணவு டப்பாவை வேதவல்லி நீட்ட வாங்கி மனைவியிடம் கொடுத்தவன் காரில் அவள் அமர்ந்ததும் “நானும் வரவா?” என்று கேட்க “மாமா! வீட்டுக்கு விருந்தாடிக வந்துருக்குறப்போ நீங்க இங்கன இருங்க மாமா. நாலு மணிக்கு எக்சாம் முடிஞ்சிரும். நான் அஞ்சு மணிக்கு வீட்டுல இருப்பேன்” என்று விட்டுக் கிளம்பினாள்.

தூதுவளை இலை அரைச்சு
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரஞ் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும் மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடனும்
நான் காத்தாகி ஊத்தாகி மாமனைத் தழுவி கட்டிக்கணும்