அத்தியாயம் 25

மறுநாள் காலை அவளை அழைத்துக் கொண்டு அவன் சென்ற இடம் சார்பதிவாளர் அலுவலகம்.

மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றவளை அழைத்துச் சென்று பதிவாளர் முன்னாலிருந்த பதிவேட்டைக் காட்டி அவன் கையெழுத்திடச் சொல்ல அப்போதுதான் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வந்திருக்கிறார்கள் என்பது அவளுக்குப் புரிந்தது.

பதிவே செய்யாத திருமணத்தை ரத்து செய்யப் போகிறானோ எனப் பயந்தது குறித்துத் தனக்குத் தானே வெட்கிப் போனாளவள்.

நான்கு நாட்களாக மனத்திலிருந்த இருள் விலகி திடுமென ஒளி வெள்ளம் பாய அதில் அவள் முகமும் மனமும் ப்ரகாசிக்க அவள் அமுதனைத் திரும்பிப் பார்க்க அவன் அருகில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.

“நீங்க முதல்ல போடுங்கம்மா.அப்புறம் அவர் போடுவாரு.அப்புறம் சாட்சிங்க போடணும்” என்று அந்தப் பதிவாளர் சொல்ல, போட வேண்டிய இடத்தில் கையெழுத்தைப் போட்டு விட்டு நிமிர்ந்தாள்.

அடுத்தடுத்து செய்ய வேண்டிய முறைமைகள் மளமளவென்று நடந்தேற திருமணச் சான்றிதழ் தயாராகி வர சிறிது நேரம் பிடிக்குமென்று அவர்களைக் காத்திருக்கச் சொன்னார்கள்.

அமுதன் யாருடனோ பேசிக் கொண்டிருக்க விழியகற்றாமல் இமைகளைக் கூட சிமிட்டாமல் அவனைப் பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தாள் குமுதா.

அவள் என்னென்ன நினைத்துப் பயந்திருந்தாள். ‘வேதவல்லியைத்தான் எனக்குப் பிடித்திருக்கிறது, நீ என் வாழ்க்கையில் இருந்து போய் விடு’ என்று அமுதன் சொல்லி விட்டானானால் என்ன செய்வது என்பது போன்றதொரு கலவரப் பிசாசு அவளைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்க மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல், சொல்லவும் முடியாமல், சுமக்கவும் முடியாமல் அவள் பட்ட பாடு, அதை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை அவளால்.

இப்போது அவள் மனத்தில் தெளிவு பிறந்திருந்தது. அன்று அவள் பார்த்தது வேதவல்லியாகவே இருந்தாலும் அந்த சந்திப்புக்கு நியாயமான ஏதாவது காரணம் இருக்குமென்று அவளுக்குப் புரிந்தது. கண்ணான கணவனைச் சந்தேகித்த மடத்தனத்தை எண்ணித் தன்னையே நொந்து கொண்டாளவள்.

அவர்களின் திருமணம் முறைப்படிப் பதிவு செய்யப்பட்டிருக்க, விலகிச் செல்ல நினைப்பவன் திருமணத்தை முறைப்படி பதிவு செய்வானா என்று தோன்றி இருந்தது அவளுக்கு.அதுவும் அவள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற தெளிவு கூட இல்லாமலிருந்த நிலையில் அவனே முன்னெடுத்துச் செய்திருக்கும் போது அவனைப் பிரிய வேண்டிய நிலை இனி வராது என்பது மனத்தில் அழுத்தமாய்ப் பதிய அவன் மனைவியாய் சட்ட ரீதியாகவும் மாறியிருந்த அந்த நிமிடங்களை ரசித்த வண்ணம் கணவனையும் கண்ணால் பருகிக் கொண்டு நின்றிருந்தவளைக் கவனித்து விட்ட அமுதனின் நண்பன் அவனிடம் கண்ணைக் காட்டினான்.

“எல, மாறா! சிஸ்டர் ஒன்னையே முழுங்குத மாரிப் பார்க்காகடா”

இதைக் கேட்ட அமுதன் அவள்புறம் திரும்ப அவளோ பார்வையை மாற்றிக் கொள்ளாது அவனையேதான் உரிமையாய்ப் பார்த்திருந்தாள்.

‘வா’ என்பது போல் தலையசைத்து அவளை அழைக்க அருகில் வந்து உரிமையாய் அவனை இடித்துக் கொண்டு நின்றவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவன்,

“இவருதான் டிஎஸ்பி விசாகன்.என் ஸ்கூல் ஃப்ரெண்ட்” என்றவன் இன்னும் கொஞ்சம் அவள் காதருகில் நெருங்கி “சிவா இருக்கிற எடத்தைக் கண்டுபிடிச்சுக் குடுத்தது இவன்தான்” என்றதும் அவளும் கண்களில் நன்றியுடன் அந்த விசாகனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“நன்றி அண்ணாச்சி!” என வாயாலும் சொல்ல அவன் நெகிழ்ந்து போனான்.

“நல்லது தங்கச்சி. மாறன் எப்பவும் உங்க படிப்புப் பத்தித்தான் பேசுவான். நீங்க நல்லாப் படிச்சுப் பெரிய டாக்டராவணும்.அதுதான் அவன் ஆச”

“கண்டிப்பா அண்ணாச்சி! எம் மாமன் ஆசையை நான் நெறவேத்துவேன். தங்கச்சின்னுட்டு வாங்க போங்கன்றீகளே.சும்மா வா போன்னு பேசுங்க அண்ணாச்சி.”

“சரிம்மா!” என நிறைவாகப் புன்னகைத்தவன் அவர்கள் இருவரும் நின்றிருந்ததைப் பார்த்து விட்டு “ஒரு நிமிஷம் மாறா! அப்பிடியே இருங்க! இதா வாரேன்.” என்று விட்டு வேகமாக வெளியே ஓடினான்.

“என்னாச்சு இந்தப் பயலுக்கு? இப்பிடி ஓடுதான்” என வாய் விட்டுச் சொன்னாலும் நண்பனின் கட்டளையை மதித்து அப்படியே நின்றிருந்தான்.

ஐந்து நிமிடங்களில் இரண்டு ரோஜா மாலைகளுடன் வந்தவன் அவற்றை இருவர் கையிலும் கொடுத்து “மாத்திக்கோங்க!” என்று விட்டுக் கொஞ்சம் தள்ளி நின்று அலைபேசியில் புகைப்படம் எடுக்கத் தயாரானான்.

“எலேய்! என்னத்துக்கு இதெல்லாம்?” என்ற மாறனை “ஷ்ஷ்ஷ்!” என அடக்கியவன் “போடுடா தங்கச்சி கழுத்துல” எனவும் மனையாளின் முகம் பார்த்தவன் அவள் உணர்வுகளின் தாக்கத்தால் நெகிழ்ந்து நெக்குருகி நின்றது கண்டு மறுபேச்சுப் பேசாமல் மாலையை அவள் கழுத்தில் அணிவித்தான்.

கலங்கியிருந்த கண்களைச் சிமிட்டிச் சிமிட்டிச் சரி செய்து கொண்டவளுக்கு உள்ளே உணர்வுகள் தளும்பிக் கொண்டிருந்தது. அவர்களின் திருமணம் நடந்திருந்த அழகில் புகைப்படமாவது ஒன்றாவது.ஆனால் இன்று சற்றும் எதிர்பாராத தருணத்தில் மாலையும் கழுத்துமாக நிற்கும் நிலை வரக் கண்டு பேச்சிழந்து போனவளாய்த் தன் மன்னவனுக்குத் தானும் மாலையிட்டாள்.

“ம்ம்ம். இப்போ மொதோ நின்னீகளே… தோள் மேல கையைப் போட்டு… அப்பிடி நில்லுங்க!”

நண்பனின் கட்டளையைச் சிரமேற்கொண்டவனாக மனையாளின் தோளில் கையிட்டுத் தன்னோடு சேர்த்து நெருக்கமாக நிற்க வைத்தான். முகம் முழுக்கப் புன்னகையைப் பூசியபடி இருவரும் நிற்க அந்தப் புகைப்படம் அத்தனை அழகாய் அமைந்திருந்தது.

படங்களை எடுத்து முடிக்கவும் அவர்கள் அழைக்கப்படவும் சரியாக இருந்தது.

எல்லாம் முடிந்து அமுதன் அவளைக் கல்லூரியில் விட்டு விட்டுத் திரும்பியிருந்தான். விசாகனை அவர்களே அழைத்து வந்திருக்க, அவனும் இவர்களுடன் காரில் ஏறியிருக்க, அவளுக்கு அமுதனுடன் உரையாடத் தனிமை கிடைக்காமலே போய் விட்டது.

கல்லூரிக்கு வந்தவளுக்கோ இருப்புக் கொள்ளவில்லை. நேரத்தைப் பார்ப்பதும் தாவணி நுனியைத் திருகுவதுமாக இருந்தவளைக் கண்ட வரலக்ஷ்மி “ஏ மலர்! என்னாச்சு உனக்கு? ப்ரொஃபசர் பார்க்குறாரு பாரு. ஒழுங்கா உக்காரு!” என எச்சரிக்க நெளிந்து கொண்டிருந்தவள் நேராக உட்கார்ந்தாள்.

மதியம் ஒரு முக்கியமான செய்முறை வகுப்பிருக்க அவளால் விடுப்பு எடுத்துக் கொண்டு கிளம்பவும் முடியவில்லை.

மாலை அவள் ஆவலாக வீட்டுக்கு வந்தும் அமுதன் வந்து சேர்ந்திருக்கவில்லை.

இரவு ஒரு வழியாக வந்து சேர்ந்தவனுக்கு உணவு பரிமாறி அவனுடன் மாடியேறி வந்து அவர்கள் அறைக்குள் நுழைந்த மறு வினாடி முன்னே சென்று கொண்டிருந்தவன் மீது புயல் போல் வந்து மோதியவள் அவனை அப்படியே இறுக்கக் கட்டிக் கொண்டிருந்தாள்.

அவள் வந்து மேலே விழுந்த வேகத்தில் தடுமாறியவன் “ஹேய் என்னாச்சு?” எனவும் அவளோ எதுவும் சொல்லாமல் அவனைக் கட்டிக் கொண்டு அவன் முதுகில் முகத்தை வைத்துத் தேய்க்க ஒரு கையைப் பின்னுக்குக் கொண்டு வந்து அவளை முரடாகப் பற்றி முன்னுக்கு இழுத்தான்.

அவன் கையோடு முன்னே வந்தவள் இப்போது முன்னிருந்து அவனைக் கட்டிக் கொள்ள அவனுக்கோ சங்கடமான நிலை.

அவளை மென்மையாய் அணைத்துக் கொண்டவன் அவள் தலையை வருடியபடி “வர வர ஒம் போக்கே எனக்குப் புரிபட மாட்டேக்கு ராசாத்தி. எனக்குத் தெரிஞ்ச என்னோட ராசாத்தி பட்டு பட்டுன்னு மொகத்துக்கு நேராப் பேசிருவா.இப்பிடி மனசுக்குள்ளையே வச்சு அவளும் வெசனப்பட்டு என்னையும் வெசனப்படுத்த மாட்டா” எனவும் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“இல்ல மாமா. இனி உன்ன வெசனப்படுத்த மாட்டேன். எதுன்னாலும் ஒங்கிட்டக் கேட்டுருதேன். இப்ப ஒன்னு கேப்பேன். குடுப்பியா?”

இத்தனை நாட்களில் உணர்ச்சி வசப்பட்டிருக்கும் நேரங்களில் அவள் மரியாதையை மறந்து விடுவதை அறிந்திருந்தவனுக்கு அதுவே பிடித்தும் இருக்க அவளை இறுக்கிக் கொண்டவன்,

“நீ கேட்டு நான் என்ன இல்லைன்னு சொல்லியிருக்கேன். கேளுத்தா” எனவும்,

முகம் லேசாகச் சிவந்தாலும் தன் ஒரு விரலை அவன் இதழ்களில் வைத்துப் பின் தன் நெற்றியில் வைத்து விட்டுக் கண்ணை மூடிக் கொண்டாள்.

காலை வரை அழுது வடிந்ததென்ன, இப்போது இவள் நடந்து கொள்வதென்ன எனத் தோன்றினாலும் அவள் கேட்டதற்காக அவள்  நெற்றியில் அவன் மென்மையாய் இதழ் பதிக்க அவளுடல் சிலிர்த்து அடங்கியது. இப்போது கன்னத்தைத் திருப்பிக் காட்டினாள்.

“ராசாத்தி!” என அவன் குரல் கரகரக்க “ம்ம்ம், குடு மாமா!” என்றாள்.

கொஞ்சம் கொஞ்சமாகத் தன் கட்டுப்பாடுகள் தகர்வதை உணர்ந்தவனோ தயங்கினான். அவளோ நகர்வேனா என அப்படியே நிற்க மொழுமொழுவென்று முன்னே தென்பட்ட மாசு மருவற்ற கன்னத்தில் தன் இதழ்களை மென்மையாகப் பதிக்க அவன் நினைத்தது போலவே அடுத்த கன்னத்தைக் காட்டினாள்.

முற்றும் முழுதாகத் தன் வசமிழந்தவன் அவள் காட்டிய கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தமாகப் பதிக்கப் போக அவன் இதழ் தீண்டிய நொடி கண்களைத் திறந்திருந்தவள் வேலை முடிந்தது என்பது போல் சட்டென விலகி “இது போதும் மாமா! இனி ஒன்ன எப்பவும் கஷ்டப்படுத்தவே மாட்டேன்” என்று விட்டு அவன் முகம் பற்றி அருகில் இழுத்து அவனிரு கன்னங்களிலும் இதழ் பதித்தவள் ஓடிச் சென்று படுக்கையில் படுத்துக் கொண்டாள்.

அவளது அதிரடியில் அதிர்ந்து போய் நின்றவன் தன்னிலைக்கு வர சில நிமிடங்கள் ஆனது.

‘என்ன ஆச்சு இவளுக்கு’ என யோசித்துக் கொண்டே தலையைப் பரபரவெனக் கோதியவன் துவாலையுடன் குளியலறைக்குள் புகுந்தான்.

சில நிமிடங்களில் வெளியே வந்து உடை மாற்றி அவளருகே வந்து படுத்தவன் அந்தப்புறம் திரும்பிப் படுத்திருந்தவளை நோக்கி நீள முயன்ற கையைக் கட்டுப்படுத்தியபடி “ராசாத்தி!” என அழைக்க அவளிடம் பதிலில்லை.

ஒரு பெருமூச்சுடன் அன்று காலை முதல் நடந்த சம்பவங்களை அசை போட்டவன் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான்.

பிடிவாதம் பிடித்து அவள் திருமணம் செய்திருந்ததால் எங்கே அவளை விட்டு விலகி விடுவானோ எனப் பயந்திருந்தவள் அவன் திருமணத்தைப் பதிவு செய்ததில் அவளது பயம் அர்த்தமற்றதாகி விட தெளிவு பெற்றிருந்தாள். அதன் விளைவே இந்த மகிழ்ச்சியும் முத்தங்களும்.

இந்த முடிவுக்கு வந்தவன் ‘எப்பத்தான் இவளுக்கு எம் மேல முழு நம்பிக்கை வருமோ’ என எண்ணியபடியே உறங்கிப் போனான்.

மறுநாளிலிருந்து பழைய குமுதாவாக மாறி இருந்தவள் எப்போதும் போல் துறுதுறுவென வளைய வந்தாள். கணவனிடம் அவ்வப்போது கொஞ்சிக் கொள்வதாகட்டும், மரகதத்திடம் சிரித்துப் பேசி மகிழ்வதாகட்டும், கல்லூரி வேலைகளோடு மல்லுக்கட்டுவதாகட்டும் என அவளது வாழ்க்கை தெளிந்த நீரோடையாய் நகர்ந்தது.

தன் கணவன், தன் குடும்பம் என்ற உரிமை உணர்வு முழுதாய் அவளுள் வந்திருக்க, வேதாவின் நினைவுகள் இறந்த காலமாகியிருக்க, தனக்காகப் பார்த்துப் பார்த்து செய்யும் கணவனுக்கும் மாமியாருக்கும் தானும் பார்த்துப் பார்த்து செய்வதன் மூலமும் தன் பாசத்தை ஒளிவு மறைவில்லாது காட்டுவதன் மூலமும் தன் நன்றிக் கடனைத் தீர்த்து கொள்ள முடிவு செய்து அதனையே செயல்படுத்தியும் வந்தாள்.

கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் நகர நகரப் புதிது புதிதாய்க் கற்றுக் கொள்கையில்தான் குமுதாவுக்கு சில விஷயங்கள் தெளிவாக விளங்க ஆரம்பித்தன.

பள்ளிக் காலங்களில் உயிரியல் பாடத்தில் சில விஷயங்கள் படித்திருந்தாலும் மருத்துவம் படிக்கும் மாணவியாக, புரியாத பல விஷயங்கள் அவளுக்கு இப்போதுதான் புரிபட ஆரம்பித்திருந்தது.

அவளுடன் பள்ளியில் படித்த செல்லக்கிளி ஒரு வழியாக ஆங்கிலத்தில் தேர்வு பெற்று விட அவளுக்குத் திருமணமும் ஆகி இருந்தது. மேற்கொண்டு ஏதாவது படிக்காமல் அவள் திருமணம் செய்து கொண்டதில் குமுதாவுக்கு வருத்தம்தான்.ஆனால் அவளோ,

“எங்க போனாலும் இந்த இங்கிலீசப் படிக்கச் சொல்லுதாக மலரு.அதைக் கண்டாலே வேப்பங்காயாக் கசக்குது எனக்கு.எனக்குப் பார்த்துருக்கிற மாப்பிள்ளை கோவில்பட்டில கடலமிட்டாய் வியாபாரம் பண்ணுதாரு. அங்கன போயிக் குடுத்தனம் நடத்துததுக்கு எதுக்கு இங்கிலீசு? சமையலும் கொஞ்சம் கணக்கும் தெரிஞ்சாப் பத்தாதா? நானும் சேர்ந்து அவர் கூடத் தொழிலப் பார்த்துக்கிடுவேன்.அவரு காலேஜுல படிச்சவருதான்.அவருக்கு ஒத்தாசையா இருக்க இந்தப் படிப்பு போதும்” என்று அவள் சொல்லி விட குமுதாவுக்கும் அது சரியாகவே பட்டது.

திருமணத்தின் பின் அவளுடன் பேசியதில் குமுதாவுக்கு திருமணம், திருமண உறவு குறித்து மீதம் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகங்களையும் அவள் தீர்த்து வைத்திருந்தாள்.

ஆண் பெண் உறவு, அதில் ஆணுக்கு ஏற்படக் கூடிய ப்ரச்சனைகள், பெண்ணுக்கு ஏற்படக் கூடிய ப்ரச்சனைகள், இருவரும் இணைகையில் வரக் கூடிய ப்ரச்சனைகள், அதைத் தீர்க்கக் கூடிய மருத்துவம், உடலுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமல்லாமல் மனநலத்தை சரி செய்ய அளிக்கப்படும் கவுன்செல்லிங் எனப் பல விஷயங்களை அறிந்து கொண்டவளுக்கு அமுதனை நினைத்து ஆதங்கமாகிப் போனது.

‘மாமா எவ்வளவு பாவமில்ல…இயல்பா ஒரு ஆம்பிளை அனுபவிக்கக் கூடிய சந்தோஷத்தை அனுபவிக்க முடியாம அதுக்காக மத்தவங்க ஏசுறதையும் பேசுறதையும் கேட்டுகிட்டு மனசுக்குள்ள எவ்வளவு கஷ்டப்படுவாங்கள்ல’ எனத் தனக்குள் வருந்திக் கொண்டவள் அவனிடம் இது குறித்துக் கேட்கவோ பேசவோ முயலவில்லை.

மரகதம் ஒருமுறை பேச்சு வாக்கில் அவன் மருத்துவம் எடுத்துக் கொண்டும் பயனில்லை என அவளிடம் சொல்லி இருந்தது ஒரு காரணமென்றால் இன்னொரு காரணம் இது குறித்து அவள் அவனிடம் பேசினால் அது அவனைக் காயப்படுத்தும், அவன் குறையைக் குத்திக் காட்டுவது போலாகும் என்றே அமைதியாய் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தாள்.

ஆம்.பதினைந்து வயதில் அமுதனிடம் சென்று உங்களுக்குக் கல்யாணம் ஆகி விட்டதா எனக் கேட்ட குமுதா இல்லை இவள்.கல்லூரி அனுபவமும், நோயாளிகளிடம் பேசும் முறையைக் கற்றுக் கொடுத்திருந்த கல்வியும் அவளை இது குறித்து அமுதனிடம் பேச அனுமதிக்கவில்லை.

அவனுக்கு என்ன ப்ரச்சனை என முழுதாகத் தெரிந்து கொள்ளலாம் என்று வேதவல்லி குறிப்பிட்ட அந்த ‘ரிப்போர்ட்டை’ வீட்டைச் சல்லடையாய் சலித்துத் தேடியும் அது கிடைக்கவில்லை.

ஆனால் அவளைப் பொருத்தவரை இந்த மாதிரியான வாழ்க்கையில் அவளுக்கு எந்தக் குறையும் எழவில்லை. அமுதனுடன் உடன் இருப்பதே, அவனைப் பார்த்துக் கொண்டு, அவன் அண்மையை அனுபவித்துக் கொண்டு, அவ்வப்போது அவனுடன் இழைந்து கொண்டு வாழ்வதே அவளுக்குப் பேரானந்தமாக இருக்க அதற்கு மேல் எது குறித்தும் அவள் சிந்திக்கவில்லை.

கிராமத்துக்குள் அவர்கள் வாழ்க்கை குறித்து அக்கம் பக்கம் பேசத்தான் செய்தார்கள்.விசேஷ வீடுகளுக்குப் போகும் போது அவள் காதுபடவே ‘ஆமா வாழாதவளை எதுக்கு வீட்டு விசேஷத்துக்குக் கூப்பிடுதீக’ எனப் பேசுபவர்கள் பிறகு அவளிடம் வந்து கொஞ்சமும் மன உறுத்தலில்லாமல் ‘நீ போனவாட்டிக் குடுத்த மூட்டுவலிக் களிம்பு நல்லா இருந்துச்சுத்தா. முடிஞ்சா இன்னொன்னு குடேன்’ என்று கேட்டு வாங்கிச் சென்றார்கள்.

இதையெல்லாம் சிரித்துக் கொண்டே கடக்கக் குமுதா கற்றுக் கொண்டு விட்டாள். மரகதம் அவ்வப்போது வருந்தினாலும் அவரையும் ஆறுதல்படுத்த அவள் தவறவில்லை. அவள் படிப்பெல்லாம் முடிந்ததும் இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கச் சொல்லலாம் என எண்ணியிருந்த மரகதமும் தன் கவலையை மகனிடம் காட்டிக் கொண்டது இல்லை.

உண்மையில் குமுதாவுக்கு அவனது குறை குறித்துத் தெரியும் என்பதே அமுதனுக்குத் தெரியாது.பஞ்சாயத்தில் வைத்து ஜாடையாக அவன் பேசி இருந்தாலும் அவளுக்கு முழு விவரமும் தெரியும் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கிடையில் அவர்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்து இதுவரை பேச்சு வந்ததே இல்லை.

மரகதத்துடன் தனி வீட்டில் இருந்த போது அவளை எப்படிப் பார்த்துக் கொண்டானோ அதே போல் இப்போது ஒரே அறையில் வைத்து அவளைப் பார்த்துக் கொள்கிறானே தவிர மற்றபடி சிறு பெண்ணாக அவன் நினைக்கும் அவன் ராசாத்தியிடம் இது குறித்தெல்லாம் பேச வேண்டும் என அவன் நினைக்கக் கூட இல்லை. சலனமற்று இருப்பவள் மனத்தில் கல்லை எறிந்து குழப்புவானேன்,முதலில் அவள் படிப்பை முடிக்கட்டும் என்பதே அவன் எண்ணமாக இருந்தது.

இடையிடையே மனைவி என்ற உரிமையுடன் அவளை அணைப்பதோ முத்தமிடுவதோ செய்தாலும் அவளது பெண்மை உணர்வுகளைத் தூண்டாமல் கவனமாகவே இருந்தான்.

அவளும் படிப்பதில் அவன் எந்தக் குறையும் சொல்ல முடியாதபடிக்கு நடந்து கொண்டாள். ஒவ்வொரு வருட இறுதியில் வரும் பரீட்சை நேரம் மட்டும் அவனைப் பாடாய்ப் படுத்தி எடுத்து விடுவாள்.

‘கொமட்டுது மாமா, பெரட்டுது மாமா, வாந்தி வருது மாமா, சாப்பிட முடியலை மாமா என அவனோடு ஒவ்வொன்றுக்கும் வம்பு செய்பவள் அவன் கொடுக்கும் முத்தத்தைப் பெற்றுக் கொண்டு அமைதியாக உறங்கி விடுவாள்.

அந்த முத்தத்தை வாங்குவதற்காகவே இத்தனை ப்ரச்சனை செய்கிறாளோ என்று கூட சில நேரங்களில் அவன் நினைப்பதுண்டு. ஆனால் அதன் பின் நிச்சலனமாய் உறங்கும் மனைவியின் கூந்தலை, முகத்தை வருடுகையில் அவன் தொடுகையில் கூட அசையாமல் உறங்குபவளைக் காண்கையில் நிஜமாகத்தான் பயந்திருக்கிறாள் போல என்றே தோன்றும் அவனுக்கு.

காலம் வெகு வேகமாகக் கடந்து குமுதாவும் இறுதி ஆண்டுக்கு வந்திருந்தாள்.

அன்று காலை அழகான கஞ்சி மொடமொடப்புடனான பருத்திப் புடைவையில் தயாராகி வந்து நின்றவளைக் கண்டவனுக்குக் கொஞ்சம் மூச்சடைத்துத்தான் போயிற்று.

காலம் இருவரிலுமே பல மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. அதிலும் சிறுபெண்ணாக சுற்றித் திரிந்தவள் இப்போது பொறுப்புள்ள, கம்பீரமான தோற்றத்துடன் கூடிய மருத்துவராக மாறி இருந்தாலும் கணவனிடம் அதே குறும்பும் குழைவுமாகத்தான் திரிவாள்.

அவளையே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டவள் குறும்புச் சிரிப்புடன் அவனருகில் வந்து நின்றாள்.

“என்ன மாமா அப்பிடிப் பார்க்குதீய? நான் அழகா இருக்கனா?”

அவளின் குறும்பைப் புரிந்து கொண்டவன் அவள் இடையில் கையிட்டு அருகில் இழுத்தான். எதுவும் பேசாமல் அவள் பூமுகத்தை மொய்த்த அவன் வண்டு விழிகளின் பார்வையின் வீரியம் தாங்க மாட்டாதவளாய் வஞ்சியவள் விழி தாழ்த்த ஒற்றை விரலால் அவள் நாடி பற்றி நிமிர்த்தியவன் “பரீட்ச எப்ப வருது?” என்று கேட்டிருந்தான்.

“அடுத்த மாசம் மாமா”

பொறுமையிழந்த ஒரு நெடுமூச்சை வெளியேற்றியவன் அவள் நெற்றியில் மென்மையாய் இதழொற்றி விட்டு அப்படியே அவள் நெற்றியில் தன் கன்னத்தைப் பதித்துக் கொண்டான். அவனது மூச்சுக்கள் அனலாக வெளியேறி அவள் நெற்றியில் படர மெல்ல ஒரு கையுயர்த்தி அவன் கன்னம் தாங்கியவள்,

“என்னாச்சு மாமா?” எனவும் கண்களை மூடி சில வினாடிகள் நின்றவன் பின் கண்களைத் திறந்தான். அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் “ஒன்னும் இல்லடா. நீ நல்லபடியாப் பரீட்சைக்குத் தயாராகு” என்று விட்டு அவளை விட்டு விலகினான்.

முன்னால் சென்று கொண்டிருந்தவன் முதுகை வெறித்தவளுக்கு சில மாதங்களாக இதுபோல் நிகழ்வுகள் அடிக்கடி நடப்பது போலத் தோன்றினாலும் அதற்கான காரணம் என்னவென்று புரியவில்லை. அவன் மனதுக்குள் ஏதோ இருக்கிறது.ஆனால் அதை வெளிப்படையாகப் பேச மறுக்கிறான் எனத் தோன்ற “சீக்கிரமே ஒன் ரகசியத்தைக் கண்டுபிடிக்கேன் மாமோவ்” எனத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

அன்றிரவு அமுதன் குளியலறையில் இருக்க அவன் அலைபேசி அடித்தது. படித்துக் கொண்டிருந்தவள் எட்டிப் பார்க்க ‘விவி காலிங்’ என்றிருக்க அவன் வந்து விடுவானா இல்லை எடுத்துப் பேசலாமா எனக் குளியலறை வாசலை ஒரு முறை பார்த்தவள் அதற்குள் அழைப்பு நின்று விட அமைதியானாள்.

சில வினாடிகள் இடைவெளியில் மீண்டும் அலைபேசி அடிக்க, குளியலறை வாசலைப் பார்த்தவள் கணவன் வரும் வழியைக் காணோமே என நினைத்து எழுந்து அலைபேசியை எடுத்துக் காதில் வைத்தாள்.

“ஹலோ மாமா! நான்தான் வேதா பேசுறேன்” என்ற தேன்குரலின் கொஞ்சல் மொழியில் ஒருகணம் உலக இயக்கம் நின்று போனது அவளுக்கு.

மார்கழி மாசத்து பூவு இனி மாலையாகுமே
அது உன் தோளில் ஆடுமே
புது மங்கல புன்னகை பொங்கிட உனக்கு குங்குமம் நானிடுவேன்
ஊர் பார்க்க ஊர்வலம் தான் வருவேன்
அத்திமரம் பூத்திருச்சு தித்திக்குமா பேச்சுக்குள்ளே
கட்டி வச்சேன் ராசா உன்னை கன்னிப் பொண்ணு மூச்சுக்குள்ளே
இனி அமுதம் பொழியும் குமுதம் மலருமே ஹோய் ஹோய்…
நீலக்குயிலே நீலக்குயிலே நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு
உன்னப் பார்க்காம கண்ணு ரெண்டும் தூங்காது
நீ பேசாட்டி என் மனசு தாங்காது ஹோய்