அத்தியாயம் 23

தேர்வெல்லாம் முடிந்து முடிவும் வந்து விட்ட பிறகும் கூட ஒன்பது மணிக்கு உறங்கும் வழக்கத்தைக் குமுதா மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் சீக்கிரமே உண்டு முடித்து வந்து படுத்து விடுபவளுக்கு அவன் எத்தனை மணிக்கு வருகிறான் என்பது கூடத் தெரியாது.

ஒன்பதரைக்கோ, ஒன்பதே முக்காலுக்கோ சில நேரம் பத்து மணிக்கோ கூட வருபவன் மரகதம் உணவைப் பரிமாற உண்டு முடித்து விட்டே மாடிக்கு வருவான். இந்த விஷயத்தில் மரகதத்துக்குக் கொஞ்சம் மனத்தாங்கல் இருந்தாலும் சிறு பெண்தானே, போகப் போகச் சரியாகி விடுவாள் என மனத்தைச் சமாதானம் செய்து கொண்டார்.

அன்றும் அது போல உறங்கப் போன நேரம்தான் அவன் குரலைக் கேட்டு வெளியே வந்திருந்தாள். அலைபேசியை அணைத்து விட்டுத் திரும்பியவன் அறைவாயிலில் குமுதாவைக் கண்டதும் கொஞ்சம் அதிர்ந்து போனவனாக சில வினாடிகள் நின்று விட்டுப் பின் எதுவும் நடவாதது போல் அறைக்குள் நுழைந்தான்.

“ஆரு ஃபோன்ல?”

திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பதில் சொல்லாமல் துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழையப் போனான். பின் நினைவு வந்தவனாக மீண்டும் அறைக்குள் வந்து அலைபேசியை எடுத்து ஏதோ செய்து விட்டு மீண்டும் சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

வந்த அழைப்பை அழைத்தவர் பட்டியலில் இருந்து அழித்திருக்கிறான் எனப் புரிபட தொய்ந்து போனவளாகக் கட்டிலில் சென்று அமர்ந்தாள்.

குளித்து விட்டு வந்தவனோ அந்தப் பக்கமாகத் திரும்பிப் படுத்து சில நிமிடங்களில் உறங்கிப் போனான்.

மறுநாள் இரவோ அலைபேசியுடனே குளியலறைக்குள் நுழைந்தவனைக் கண்டவளுக்கு மனம் விட்டுப் போனது.’என்ன நடக்கிறது? எத்தனை நாட்களாக நடக்கிறது? யாரிடம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறான்?’ யோசித்தவளுக்கு எதுவும் புரியவில்லை.

மறுநாள் கிளம்பிக் கொண்டிருந்தவனை வழிமறித்து அவள் அந்த அலைபேசி அழைப்புக் குறித்துக் கேள்வி எழுப்ப அவனோ அவளை அலட்சியமாகப் பார்த்து விட்டுக் கடந்து சென்றான்.

அன்றிரவும் அதே போல் வெளித் தாழ்வாரத்தில் நின்று யாருடனோ அலைபேசியில் அவன் கொஞ்சிக் கொண்டிருக்க அவளால் தாள முடியாது அருகில் சென்ற நேரம் பேச்சை முடித்துத் திரும்பியவன் வழக்கம் போல் அவளை அலட்சியமாகப் பார்க்க,

“ஏன் மாமா இப்பிடிப் பண்ணுதிய? ஆருகிட்டப் பேசுதீய? ஆராவது கொழந்தையா? அதான் நெதமும் கொஞ்சிப் பேசுதியாளா? எனக்க மண்டையே வெடிச்சுரும் போல இருக்கே!”

அவனோ அசராதவனாக “பொண்டாட்டின்னு வந்துட்டா என் போக்குவரத்தெல்லாம் ஒன்னகிட்டச் சொல்லணும்னு அவசியம் கெடையாது கேட்டியா. எனக்கு ஒறக்கம் வருது” என்று விட்டுச் சென்று விட்டான்.

இப்படியே ஒன்றிரண்டு நாட்கள் கடந்திருக்க, அன்றிரவு அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த மரகதம் “யய்யா! புள்ளைய எதும் திட்டிப் புட்டியா? மொகமே வாடிக் கெடக்கு. என்னன்னு கேட்டாலும் ஒன்னுமில்லத்தன்னு சொல்லுது.துடியாத் திரிஞ்சுகிட்டு இருந்த புள்ள, இப்போ மாடியே கதின்னு கெடக்கு. எதுன்னாலும் புள்ளைய ஏசாதையா. நம்ம நம்பி வந்த புள்ள.”

“சரிம்மா! நான் பார்த்துக்கிடுதேன்”

மாடியேறி வந்தவன் அரவமில்லாமல் வந்து கதவருகே நின்று பார்க்க, கட்டிலில் அவன் வரவை எதிர்பார்த்திருந்தவளாக அமர்ந்திருந்தவள் துப்பட்டா நுனியைத் திருகிக் கொண்டிருந்தாள்.

மெல்லப் பூனைப் பாதம் வைத்துக் கொஞ்சம் தள்ளி வந்தவன் அலைபேசியைக் காதில் வைத்தபடி,

“ம்ம்ம்.அதாம் வந்தேன்ல.நான் எம்புட்டு நேரம் அங்கன இருந்தாலும் ஒனக்குப் போதவே போதாதுடி.இப்ப என்ன பண்ணனும்கே? அதாம் நேர்ல குடுத்தேனே! இன்னும் ஃபோன்ல வேற கேக்கே.”

அவன் குரல் கேட்டதுமே அறை வாசலுக்கு வந்திருந்தவள் அவன் கொஞ்சலைக் கேட்டதும் கொதிநிலைக்கே போயிருந்தாள்.

நிமிஷமாய் அவன் அருகில் வந்தவள் அவன் அலைபேசியைக் கண்ணிமைப்பதற்குள் பறித்திருந்தாள்.

“ஆருடி நீ எம் மாமங்கிட்டக் கொஞ்சுததுக்கு?” என்று ஆவேசமாகக் கேட்டவள் அந்தப் பக்கம் பதிலில்லாது போக அலைபேசியைத் திருப்பி அதன் திரையைப் பார்க்க அங்கே அழைப்பு இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை.

குழப்பமாக அவனைப் பார்த்தவளின் அருகே வந்தவன் அவள் தோள் தொட்டு அணைத்தவாறே அறைக்குள் அழைத்துச் சென்று அங்கிருந்த பெரிய கடிகாரத்தின் முன் நிற்க வைக்க, அப்போதும் விளங்காமல் அவள் விழிக்க, மெல்ல அவள் காதோரமாய் “மணி என்னாச்சு இப்போ?” என்றான். கடிகாரத்தைப் பார்த்தவள் “ஒம்பதே முக்கால்!” எனவும் அவன் இடது புருவத்தை உயர்த்திக் கேள்வியும் கேலியுமாக அவளை நோக்கினான்.

அப்போதுதான் அவளுக்கு விஷயமே புரிந்தது.

அவளை ஒன்பது மணிக்கு மேல் விழித்திருக்க வைப்பதற்காக அவள் மனதில் சந்தேக விதையைத் தூவி இருக்கிறான் அந்த சேட்டைக்காரன் என்பது புரிய, கிட்டத்தட்ட ஒரு வாரமாக அவளைக் கலங்கடித்திருந்தவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாளவள்.

“போ மாமா! ஒனக்கு வெளயாட்டாப் போச்சில்ல? நான் எம்புட்டுக் கலங்கிப் போய்ட்டேன் தெரியுமா?”

அடித்துக் கொண்டேயிருந்தவளின் கரங்கள் இரண்டையும் இறுகப் பற்றித் தன்னைச் சுற்றிப் படர விட்டுக் கொண்டவன் அவளை இறுக அணைத்திருந்தான்.

“இன்னும் கொஞ்ச நாளுல கவுன்செல்லிங் போகணும். அதுக்கப்புறம் காலேஜு தொறந்துரும். இன்னும் பால்வாடிப் புள்ள மாரி ஒம்பது மணிக்கு ஒறங்கிகிட்டு இருந்தா டாக்டராகுறது எப்பிடி? நாளப்பின்ன நைட் டியூட்டி பார்க்குறது எப்பிடி? நான் என்ன சொன்னாலும் நீ கேக்கப் போறது இல்ல. அதான் இப்பிடி ஒரு அதிர்ச்சி வைத்தியம் குடுத்தேன். நேத்தெல்லாம் பத்து பத்தரை வரைக்கும் நீ ஒறங்கலை தெரியுமா?”

“ஆனா வெளையாட்டுக்குக் கூட இனி இப்பிடிப் பண்ணாதிய மாமா. நான் ரொம்ப பயந்து போய்ட்டேன்”

அவள் முகத்தைக் கைகளில் ஏந்தியவன் “ஆக இன்னும் எம் மேல நம்பிக்க வரலைல்ல.அன்னிக்குப் பஞ்சாயத்துல சொன்ன மாரி இன்னும் என்ன நம்பாமத்தான இருக்கே”

“அது…மாமா…நான் அந்த அர்த்தத்துல…”

“நீ எந்த அர்த்தத்துல சொன்னாலும் சொன்னது சொன்னதுதான. இனி அதை மாத்த முடியாது” என்றவன் நெடுமூச்செரிந்தவனாக “போ! போய்ப் படு!” என்றான்.

அன்று முதல், இரவு அமுதன் வரும் வரை கீழேயே மரகதத்துடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பாள். ஒன்பது மணிக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றினாலும் எழுந்து இங்குமங்கும் நடந்து அல்லது குளிர்நீரில் முகம் கழுவி எனக் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பழக்கம் அவளிடம் இருந்து மறையத் துவங்கியது.

கவுன்சிலிங்கில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியே கிடைத்து விட தினமும் வீட்டில் இருந்து சென்று வருவதற்கு பதில் விடுதியில் தங்கிக் கொள்ளச் சொல்லி அமுதன் சொல்ல ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்டாள் குமுதா. மரகதத்துக்குமே அதில் பெரிதாக உடன்பாடில்லை.

“ஒரு வருசமா இங்கன இருந்து போய் வந்துட்டுதானே இருக்காய்யா. என்னத்துக்கு அங்கன போய்த் தங்கி, சாப்பாடெல்லாம் நல்லா இருக்குமோ என்னவோ?”

“புரியாமப் பேசாதம்மா.போன ஒரு வருசம் அங்க சென்டெர்க்குப் போனாப் படிக்குதது தவுத்து வேற சோலி இல்ல.ஆனா இப்பம் காலேஜுன்னா ஆஸ்பத்திரிக்கும் போகணும்.அங்க இங்கன்னு எத்தனை அலைச்சல் இருக்கும்? இதுல நெதமும் ஒன்னரை மணி நேரம் போய் வந்து என்னதுக்குன்னுதான் ஹாஸ்டல்ல சேரச் சொல்லுதேன்.”

“அதெல்லாம் சாப்பாடெல்லாம் நல்லாத்தான் இருக்குமாம். விசாரிச்சுட்டேன். அது மட்டுமில்லாம திங்கள் ஒதயத்துல கெளம்பிப் போன்னான்னா வெள்ளிப் பொழுதாக இங்கன வந்துடலாம்.சனி ஞாயிறு லீவுதான! வாரத்துல நாலு நாளு பார்த்துக்கிடலாம்.எடையில மூணு நாளு பார்க்காம இருக்கப் போறோம் அம்புட்டுதான!”

“அது என்னமோ நீ சொல்லுதே.மத்தியானம் நீ சொல்லிட்டுப் போனதுல இருந்து புள்ள ஒரே முட்டா அழுது கரையுது.ராவு உங்கக் கூட வரல.போ! போய் மொதல்ல அவளைச் சமாதானப்படுத்து.இந்தா அவளுக்குப் பசியாற எடுத்துட்டுப் போ”

“க்கும்.எல்லாம் நீங்க குடுக்கிற செல்லம்.அவ புடிவாதம் புடிக்குதா” என்று அன்னையைக் கடிந்து கொண்டாலும் தட்டை எடுத்துக் கொண்ட பிறகே மாடி ஏறிப் போனான்.

அறைக்குள் நுழைந்தவன் கண்களில் விழுந்தது படுக்கையில் கவிழ்ந்து படுத்திருந்தவளைத்தான்.

நேரம் பத்தாகியும் அவள் உறங்காமல்தானிருந்தாள். இரவு நேரம் என்பதாலும் அறைக் கதவு திறந்தே இருந்ததாலும் கீழே மரகதமும் அமுதனும் பேசிக் கொண்டிருந்ததும் அவள் காதுகளில் விழுந்தேயிருந்தது. அவன் வந்ததை அறிந்தும் அசையாமல் படுத்திருந்தவளின் அருகே சென்றவன் கையைக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்திருந்தான்.

வாங்கிய தாவணி பாவாடை எல்லாம் கெண்டைக்காலுக்கு மேல் ஏறுவதாகச் சொல்லி மரகதம் சொல்லியிருக்க அவ்வப்போது சுடிதாரைத் தவிர்த்து அவைகளையும் உடுத்திக் கொண்டிருந்தாள்.

அன்றும் அது போல இளஞ்சிவப்பு நிறத் தாவணியும் அதே நிறத்தில் ரவிக்கையும் ஆகாய நீல நிறத்தில் பாவாடையும் அணிந்து படுக்கையில் சுருண்டிருந்தவளின் படுத்திருந்த கோணத்தில் தெரிந்த அங்க வனப்புக்களில் அவன் மனம் திணறத்தான் செய்தது.

கேசத்தை அழுத்தமாகக் கோதிக் கொண்டவன் அவளருகில் அமர்ந்து அவள் கூந்தலை வருட அவள் விசும்பினாள். அவளை அள்ளி எடுத்து நெஞ்சின் மீது போட்டுக் கொள்ளவும் அவள்,

“ஆரம்பத்துல இருந்தே என்னத் தள்ளித் தள்ளி வைக்கிறேல்ல மாமா நீ? என்னப் புடிக்கவேயில்ல ஒனக்கு? ஏன் மாமா என்னப் புடிக்கல ஒனக்கு?”

அவன் நெஞ்சில் கிடந்தவள் விழியுயர்த்தி அவனைப் பார்த்துக் கேட்க அதுவரை விளையாட்டுப் பெண்ணாகத் தெரிந்தவளின் கண்களில் தெரிந்த வலியைக் கண்டவனும் கலங்கித்தான் போனான்.

மென்மையாக அவள் கூந்தலை வருடியவன்,

“ஆரு சொன்னா ஒன்னை எனக்குப் புடிக்காதுன்னு?”

சட்டென விலகி அமர்ந்தவள் கண்களைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே,

“ம்ம்ம்.இத ஆராச்சும் சொல்லணுமா என்ன? எல்லாம் எனக்கே தெரியுது”

மீண்டும் அவளை இழுத்து மேலே போட்டுக் கொள்ள நீண்ட கைகளை அடக்கி மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டவன்,

“என்ன தெரியுது?” என்றான்.

“அதான், ஒங்களுக்கு என்னப் புடிக்கல. என்னென்னவோ சொல்லித் தள்ளித் தள்ளி நிறுத்தினிய.என்னக் கட்டிகிடுததுக்குக் கூடப் பிடிக்கல ஒங்களுக்கு. நான் வம்படியாக் கட்டிகிட்டேன்னு கோபம்”

சட்டென எழுந்தவன் ஜன்னலின் அருகே சென்று நின்றான்.

“நான் ஒன்னத் தள்ளி நிறுத்துனேன்றதும் நீ என்ன நகர விடாம நிறுத்திக் கன்னாலம் கட்டிகிட்டேங்கிறதுல கோபம்கிறதும் நெசந்தான்.ஆனா…”

“ஆனா என்ன மாமா?”

“எனக்கு ஒன்னப் புடிக்கும் ராசாத்தி” அவள்புறம் திரும்பிச் சொன்னான்.

“பொறவு ஏன் என்ன ஹாஸ்டலுக்கு அனப்பி விட நெனக்குதிய?”

“ஒன் வசதிக்குத்தான் ராசாத்தி.ஆனா ஒனக்கு இத்தன வெசனம்னா நீ ஹாஸ்டலுக்குப் போகண்டாம்”

அவன் சொன்னதும் பூவாக முகம் மலர்ந்தவள் குதித்தோடி வந்து அவனைக் கட்டிக் கொண்டாள்.

அவள் தலையை ஆதூரமாக தடவிக் கொடுத்தவன் “வா! வந்து பசியாறு!” என்று அழைத்துச் சென்றான்.

அவளுக்குத் துரோகம் செய்த ஜெயக்கொடி அன்று அமுதனின் மிரட்டலிலும் அவள் அன்னை கொடுத்த அறையிலுமாகக் காய்ச்சலில் விழுந்தவள் தேர்வையும் ஒழுங்காகச் செய்யாமல் விட்டிருக்க அவளுக்கு தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் கேரளாவில் இடம் கிடைத்திருக்க அவளை மொத்தமாக அவள் அண்ணனுடன் அங்கேயே அனுப்பி விட்டு விட்டார் நல்லசிவம்.

நாட்கள் மின்னல் வேகத்தில் நகர்ந்து செல்ல குமுதா கல்லூரி செல்லும் நாளும் வந்தது.

அன்று காலை அவன் வாங்கிக் கொடுத்திருந்த அழகிய மெரூன் நிறச் சுடிதாரில் தயாராகி வந்தவள் வாசலின் நின்றிருந்த புத்தம் புதுக் காரையும் அதன் மேல் சாய்ந்து நின்றிருந்த கணவனையும் கண்டு பேச்சிழந்து போனாள்.

அமுதனிடம் புல்லட் இருக்கிறது.வெளி வட்டாரத் தேவைகளுக்கு என்று கிராமத்து சாலைகளில் எளிதாகப் பயணிக்கக் கூடிய வகையில் ஒரு ஜீப்பும் இருக்கிறது. ஆனால் கார் இப்போதுதான் வாங்கி இருக்கிறான். அதுவும் அவளுக்காக.இந்த எண்ணம் தோன்றியதும் கண்கள் பனித்தது அவளுக்கு.

முதல் நாள் மட்டும் தான் கொண்டு வந்து விடுவதாகவும் அதன் பின் அவளே போய்க் கொள்ள வேண்டுமென்றும் சொல்லி இருந்தவன் கார் வாங்கப் போவதைப் பற்றி மூச்சுக் கூட விடவில்லை.

அவளைத் தொடர்ந்து வெளியே வந்த மரகதம் அவள் அதிர்ச்சி கண்டு சிரிக்க அவருக்கு இது புதிய விடயமில்லை எனத் தோன்றியது அவளுக்கு.

“நீங்க கூட என்னட்ட சொல்லலைல்லத்த”

“மாறன்தான் ஒனக்கு ஆச்சர்யமா இருக்கட்டும்னு சொன்னாம்த்தா” 

அவளைத் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றவன் அன்றைய வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளர்களும் கலந்து கொள்ளலாம் என்று சொல்ல அவனும் அவளுடன் கலந்து கொண்டான்.

வந்திருந்த அனைவரையும் வரவேற்று, வாழ்த்துச் சொல்லி, இனிப்பாக அல்வா வழங்கி எனச் சிறப்பாக நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்க, கூட்டத்தில் குமுதாவைக் கவனித்து விட்டவர் அவளை அழைத்துப் பேசியதும் அல்லாமல் அவரது உரையின் போதும் அவளது படிப்புத் திறமையையும் சிறுமை கண்டு பொங்கும் தைரியத்தையும் வெகுவாகப் பாராட்டினார்.

குமுதாவிடம் பேசும் போது அவள் அமுதனை அறிமுகப்படுத்தி வைக்க,

“ஓ…அந்த பிக்கிள் கம்பனி ஓனர், உங்க கம்பனி ஊறுகாய் எங்க வீட்ல எல்லாரோட ஃபேவரைட்” என்று சொல்லிப் பாராட்டி அவனிடமும் நன்றாகப் பேசினார்.

அவனும் அவருக்கு இணையாக ஆங்கிலத்தில் பேசக் கண்டு குமுதாதான் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

வீட்டுக்கு வரும் வழியில்,

“நீங்க என்ன படிச்சிருக்கிய மாமா? ஆரம்பத்துல நான் கேட்டப்போ கம்ப்யூட்டர்ல வேல பார்க்குத அளவுக்குப் படிச்சுருக்கேன்னு சொன்னிய. ஆனா என்ன படிச்சுருக்கியன்னு சொல்லவே இல்லையே”

“கலெக்டர்கிட்டப் பேசுத அளவுக்குப் படிச்சுருக்கேன்” என்று சொல்லி அவன் விளையாட்டாகக் கண்சிமிட்ட “மாமா!” என அவள் சிணுங்கினாள்.

அவள் சிணுங்கலில் அவன் கைகளில் வண்டி தடுமாறினாலும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன்,

“இப்ப என்ன, நான் என்ன படிச்சுருக்கேன்னு தெரியணும். அம்புட்டுத்தான? பிபிஏ படிச்சேன். மேல எம்பிஏ படிக்கணும்னு ஆசை. அதுக்குள்ள தாத்தா எறந்து போகவும் ஏற்கனவே தொழிலுக்குள்ள இருந்தனால படிப்பு அப்பிடியே நின்னு போச்சு”

“இப்பவும் அல்டாப்பா தஸ்ஸு புஸ்ஸுன்னெல்லாம் பேசிக்கிட மாட்டேன். ஆனா கேட்ட கேள்வியைப் புரிஞ்சிக்கிடவும் அதுக்குத் தப்பில்லாம பதில் சொல்லவும் தெரியும்.”

அதற்கடுத்த நாளில் இருந்து அமுதனின் உத்தரவின் பேரில் கண்ணாயிரம் காலையும் மாலையும் குமுதாவைக் கொண்டு விட்டுக் கூட்டிக் கொண்டு வர ஆரம்பித்தான்.

ஆம்.மரகதம் அந்த வீட்டை விட்டு வெளியே போவதற்கு முன்வரை சாதாரண வேலையாளாக இருந்த கண்ணாயிரத்திடம் அதன் பின்னர் எல்லாவற்றையும் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளும் வேலையைக் கொடுத்திருந்தான் அமுதன். இப்போது மரகதம் வந்த பின்னர் பெரும்பாலும் வேலையில்லாமலும் அவன் முன் வரச் சங்கடப்பட்டுக் கொண்டும் சுற்றிக் கொண்டிருந்தவனை இந்த வேலை பார்த்துக் கொள்ளச் சொல்லிப் பணித்து விட அதில் குமுதாவுக்கும் மகிழ்ச்சியே!

குமுதா கல்லூரிக்குப் போக ஆரம்பித்து ஒரு வாரம் கடந்திருந்தது. கல்லூரியில் ஆரம்பத்தில் காணப்பட்ட அலட்டல் ஆங்கிலத்தில் கொஞ்சம் அரண்டு போனவள் அமுதனின் ஆறுதல் மொழியிலும் அவன் அவளுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுப்பதாகக் கொடுத்த வாக்குறுதியிலும் கொஞ்சம் தெளிந்தாள்.

அவன் கொடுத்த தைரியத்தில் கல்லூரியிலும் நன்றாகவே சமாளித்தாள்.

அந்த நாள் வரும் வரை…

குமுதா கல்லூரி செல்ல ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியிருக்க அன்று உடன் பயிலும் விடுதித் தோழி ஒருத்தி கடைக்குப் போக வேண்டுமெனக் குமுதாவைத் துணைக்கழைத்தாள்.

“சாயங்காலம் கார் வரும். அதுல போகலாமே வரா!”

“ம்ஹூம்…ஈவினிங் ஃபைவ் வரை க்ளாஸ் இருக்கு.அப்புறம் கிளம்பிப் போய்த் திரும்ப டைம்குள்ள வர முடியாது.நேரம் கழிச்சு வந்தா வார்டன் வேற திட்டும். இப்ப லஞ்ச் அவர் மட்டுமில்லாம மதியம் ஃபர்ஸ்ட் அவர் வேற ஃப்ரீயாம்.போய் மடமடன்னு வாங்கிட்டு வந்துடலாம்.”

வரலக்ஷ்மி தஞ்சாவூரைச் சேர்ந்தவள்.கல்லூரியில் இவளுடன் நெருக்கமாகப் பழகும் தோழி. விடுதியில் தங்கி இருப்பவள். கல்லூரியில் சேர்ந்தது முதல் இன்னும் சொந்த ஊருக்குச் செல்லவில்லை அவள்.

மறுநாள் தொடங்கி மூன்று நாட்கள் விடுமுறை என்பதாலும் மறுநாள் காலை அவள் கிளம்புவதாக இருந்ததாலும் அன்று ஊரில் உள்ள அனைவருக்கும் அல்வாவும் மேலும் சில பொருட்களும் திருநெல்வேலி பேருந்து நிலையத்துக்குச் (ஜங்க்ஷன்) சென்று வாங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவள் மதியம் முதல் வகுப்பு இல்லையென்றதும் உடனே கிளம்பி விட்டாள்.

மறுக்க முடியாதபடி அவள் காரணங்களை அடுக்க வேறு வழியில்லாமல் குமுதாவும் கிளம்பி விட்டாள். கண்ணாயிரம் மாலைதான் வருவான் என்பதால் பேருந்தில் இருவரும் கிளம்பிச் சென்றனர்.

அமுதன் எந்த இனிப்பு என்றாலும் விரும்பிச் சாப்பிடுவான் என்றாலும் கல்லூரி முதல் நாள் விழாவில் அல்வாவை ரசித்து ருசித்துச் சாப்பிட்டதைப் பார்த்திருந்த காரணத்தால் குமுதாவும் அல்வா வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தாள்.

பேருந்து நிலையத்தில் வந்து இறங்கி இருந்தவர்கள் சாந்தி ஸ்வீட்ஸ் கடையை நோக்கிச் சென்றார்கள்.

“இதை விட டவுன்ல இருக்கிற ஒரிஜினல் இருட்டுக் கடை அல்வா செமையா இருக்கும்.ஆனா பொழுதாகத்தான் கெடைக்கும்”

“ஆமா காலேஜ்ல சொன்னாங்க.இந்த தடவை இங்க வாங்கிட்டுப் போறேன். நெக்ஸ்ட் டைம் யார்கிட்டயாவது சொல்லி வச்சு அங்க வாங்கணும்”

“யார்கிட்டயாவது என்னத்துக்கு? நீ கெளம்ப முன்ன சொல்லு. என் மாமாகிட்டச் சொல்லி நானே வாங்கித் தாரேன்”

“ம்ம்ம்.சொல்றேன் மலர்”

பேசிக் கொண்டே கடையை அடைந்திருக்க, தேவையான அளவு இனிப்புக்களை வாங்கி விட்டு வெளியே வந்த போது எதிரில் ஒரு உணவக வாசலில் அமுதனைப் போல் தெரிய குமுதா மகிழ்ச்சியுடன் ‘மாமா!’ என அழைக்கப் போனாள்.

ஆனால் அதே நேரம் அவன் பின்னால் இருந்து அவன் கைவளைவில் முன்னுக்கு வந்து அவனை நெருங்கி நின்ற பெண்ணைக் கண்டதும் அதிர்ச்சியில் கல்லாய்ச் சமைந்தாள்.

கோவில் உண்டு தீபம் உண்டு தெய்வம் உண்டு மலர்கள் உண்டு
பூஜை மட்டும் காண வரம் இல்லையே
ஓடம் உண்டு நதியும் உண்டு நதியினிலே வெள்ளம் உண்டு
அக்கரைதான் அருகில் வரவில்லையே
இக்கரையில் குருவிக்கென்ன வேலையே
பூவென்றால் தேனை வைத்து பழத்துக்குள்ளே சாறை வைத்து
பிறவிக்கெல்லாம் பெரும் பயனை வைத்தானே
பாழும் அந்த குருவி என்ன பாவங்களை செய்ததென்று
பரிசாக கண்ணீரை தந்தானே
நாள் முழுதும் கண்ணீரை தந்தானே
அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் வேதம்
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை