அத்தியாயம் 22
குமுதாவுக்குத் திருநெல்வேலியிலேயே தேர்வு மையம் அமைந்திருக்க, என்னதான் பக்கம் என்றாலும் காலையில் கோடனூரில் இருந்து கிளம்பிச் செல்வது நேர விரயம் என்று கருதியவன் முதல் நாளே தேர்வு மையத்தின் அருகிலேயே ஒரு தங்கும் விடுதியில் அறை பதிவு செய்து அவளை அழைத்துக் கொண்டு சென்றிருந்தான்.
திருநெல்வேலியில் அவனுக்குச் சொந்தமாக, தங்குவதற்கு வீடுகள் இருந்தாலும் காலைப் போக்குவரத்தில் மாட்டிக் கொள்ளாமல் தேர்வு மையத்தில் இருந்து நடக்கும் தொலைவில் இருந்த அந்தத் தங்கும் விடுதியில் தங்குவது அவனுக்கு உசிதமாகப் பட்டது.
மாலை ஆறு மணிக்கு அங்கு வந்து சேர்ந்திருந்தவர்கள் அறையை அடைந்ததுமே முகத்தைக் கழுவிக் கொண்டு அமர்ந்து படிக்க ஆரம்பித்து விட்டாள் குமுதா.என்னதான் நன்றாகப் படித்திருந்தாலும் கடைசி நேரத் திருப்புதல் பெரிதும் கைகொடுக்கும் என்பதால் இப்படிக் கடைசி நேரம் பார்க்கவெனக் குறித்து வைத்திருந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு நேரம் ஆக ஆக ஏதோ தவிப்பாக இருந்தது. இரவு உணவும் முடிந்த பின் முள்ளின் மேல் நிற்பதைப் போல் தவித்துக் கொண்டிருந்தவளை வினோதமாகப் பார்த்தவன்,
“என்ன செய்யுது ஒனக்கு?” எனக் கேட்டிருந்தான்.
அவனைப் பரிதாபமாகப் பார்த்தவள் “என்னவோ வயத்தைக் கொமட்டிகிட்டு வருது மாமா!”
“கொமட்டுதா? காலையில இருந்து எண்ணெய் கூட அதிகம் வேணாம்னு சாதாரண சாப்பாடுதானே உள்ள போவுது.பொறவென்ன?”
“சாப்பாட்டுனால இல்ல மாமா.வயத்துல ஏதோ பெரட்டுத மாரி…”
பயந்திருக்கிறாள் என்பது புரிபட்டு விட “இங்கன வா!” என்றான்.
தரையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தவள் அருகில் வர அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.
பனிக்கட்டியைத் தொட்டது போல் சில்லிட்டிருந்தது அவள் கரம்.
“இது என்ன மொதப் பரீச்சையா? கோச்சிங்க் சென்டெர்ல இது மாரி எத்தனை எழுதி இருப்பே! அது மாரிதான்னு நெனச்சுகிட்டு தைரியமா இருத்தா”
பேசிக் கொண்டே அவள் கூந்தலை ஒதுக்கி விட்டான்.
அவன் செய்கை ஆறுதலாக இருந்ததுவோ என்னவோ அந்தக் கையிலேயே பூனைக்குட்டியைப் போல் முகத்தைத் தேய்க்க முற்பட்டவள் மெல்லிய எழும்பாத குரலில்,
“நான் வேணும்னா அடுத்த வருஷம் எழுதட்டுமா?” எனக் கேட்க அவளை நம்பாத பார்வை பார்த்தவனுக்குக் கொஞ்சம் கோபமே வந்து விட்டது.
“ஏய் லூசாடி நீ! ஒரு வருஷம் அதும் நல்லாப் படிச்சுட்டு… இப்பம் போய் இப்பிடிச் சொல்லுதே!”
“இல்ல மாமா.இம்புட்டு நாளு படிச்சேந்தான்.ஆனா நாளை லட்சக்கணக்குல எழுதுறவக மத்தியில எழுத என்னமோ பயம்மா இருக்கு. ஒருவேளை சீட்டுக் கெடைக்கலைன்னா… நான் இன்னும் கொஞ்சம் நல்லாப் படிச்சுட்டு அடுத்த வருஷம் எழுதுறேனே”
பொதுவாக எவ்வளவு சிறப்பாகப் படித்திருந்தாலும் தேர்வுக்குப் போகும் முன் எல்லாம் மறந்து விட்டது போலவும் தன்னால் எதையும் நினைவுக்குக் கொண்டு வர முடியாதது போலவும் தோன்றுவது சகஜம்தான்.அங்கே சென்று கேள்வித்தாளைப் பார்த்ததும் கம்பியில் மாட்டியிருக்கும் நூல்கண்டின் முனையை இழுக்க, அது தொடர்ந்து வருவது போல் படித்ததெல்லாம் நினைவுக்கு வந்து விடும் என்பதும் அவனுக்கும் தெரியும்.
ஆனால் இதையெல்லாம் இப்போது இவளிடம் எப்படி விளக்குவது என்று தெரியாமல் தவித்தவனுக்கு ஏதோ தோன்ற, நேரத்தைப் பார்க்க அது ஒன்பதைக் கடந்து பத்து நிமிடங்கள் ஆகி இருந்தது. மந்திரம் போட்டது போல் ஒன்பதுக்கு உறங்குபவள் இன்று அதைக் கூட உணராமல் விழித்திருக்கிறாள் என்றால் அவள் பயம் எப்படிப்பட்டது எனப் புரிந்து போக, வார்த்தைகளில் எல்லாம் அவளைத் தேற்ற முடியாது என முடிவெடுத்தவன் உறங்கி எழுந்தால் சரியாகி விடுவாள் என்று தோன்ற “ராசாத்தி!” என்றான் மென்மையாக.
துப்பட்டாவின் நுனியை ஒரு கையால் திருகியபடி பதற்றமாகக் குனிந்து நின்றிருந்தவள் அவன் குரலில் நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் முகத்தைக் கைகளால் தாங்கியவன் அவள் இதழ்களை மென்மையாகக் கவ்விக் கொண்டான்.
இதை சற்றும் எதிர்பாராதவள் விழிகள் வெண்ணிலாவாய் விரியத் துவங்கியது.
கன்னங்களை அழுத்தமாகப் பற்றியிருந்த அவன் கைகளின் கதகதப்பும் அவளின் மெல்லிய இதழ்களை மென்மையாய்ப் பற்றியிருந்த அவன் இதழ்களின் ஸ்பரிசமும் முதலில் விறைத்து நின்றவளைக் கொஞ்சம் கொஞ்சமாக இளக்கியது. உடலின் மொத்த ரத்தமும் அடிவயிற்றுக்குப் பாய்வது போல் ஏற்பட்ட படபடப்பு அவளை விழிகளை மூட வைத்தது.
முள்ளை முள்ளால் எடுப்பது போல பயத்தால் நடுங்கிய அவளின் நடுக்கத்தைக் குறைத்து அவள் மனத்தை அமைதிப்படுத்த அவன் கொடுத்த அந்த மருத்துவ முத்தம் முதலில் அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் அவள் மன அழுத்தத்தைக் குறைத்தது.
அவள் உடலின் நடுக்கம் குறைந்து நெகிழத் தொடங்க அவனோ இதழ்களில் அழுத்தத்தைக் கூட்டினான்.
கைகளால் முகம் தாங்கி முத்தம் கொடுத்தாலும் உடல்கள் நெருங்காமல் கவனமாகத் தள்ளியே நின்றிருந்தவன் மீது கொஞ்சம் கொஞ்சமாக அவளின் குழைந்து தளர்ந்த உடல் சாய அவள் இதழ்களை விடுத்து அவளை மென்மையாய்த் தாங்கிக் கொண்டான்.
கொஞ்சம் மயக்கமும், கொஞ்சம் கிறக்கமும், கொஞ்சம் உறக்கமுமாகத் தடுமாறியவளை அலுங்காமல் அள்ளியெடுத்தவன் மெத்தையில் அவளைப் படுக்க வைத்து விட்டு விளக்குக்களை அணைத்து விடிவிளக்கைப் போட்டு விட்டு மென்மையாய் அவளை அணைத்துக் கைக்குள் வைத்த வாக்கிலேயே படுத்து விட்டான்.
அந்த நேரம் அவன் மனத்தில் ‘நல்லவேளை திருமணம் முடிந்திருந்தது. இல்லையென்றால் என்னதான் அவள் மீது பிடித்தமிருந்தாலும் இப்படி ஒரே அறையில் தங்கி அவளை ஆறுதல் படுத்தத் தன்னால் முடிந்திருக்காது. நடப்பதெல்லாம் நன்மைக்கே’ எனத் தோன்ற அவனும் உறங்கிப் போனான்.
காலை மூன்று மணிக்கு வழக்கம் போல் விழித்தவள், கணவனின் கைகளில் அடைக்கலமாகி இருப்பது கண்டு புரியாது புருவம் சுருங்க யோசிக்க, முந்தைய நாள் தனது புலம்பலும் அவன் இதழணைப்பும் நினைவில் எழும்ப செக்கர்வானமாகச் சிவந்து போனாள்.
மெல்ல அவன் கைகளில் இருந்து விடுபட முற்பட அவனோ அவள் முதுகை வருடியபடி “இன்னும் செத்த நேரம் ஒறங்குத்தா” எனவும் மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள். ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவளால் படுத்திருக்க முடியவில்லை.உடலில் பரீட்சைக்கான பரபரப்புத் தொற்றிக் கொள்ள கொஞ்சம் முயன்று எழுந்திருந்தாள். அவளது எண்ணம் புரிந்தவன் போல் அவனும் தடுக்கவில்லை அவளை.
முந்தைய நாளின் குழப்பம் இப்போது அவளிடம் இல்லை. எப்படி இருந்தாலும் நன்றாகச் செய்ய முயல்வோம் என்பது போல ஒரு எண்ணம் தோன்றியிருந்தது.முதல் நாள் சிறுபிள்ளை போல்தான் பேசியதை நினைத்துத் தானே வெட்கப்பட்டுக் கொண்டவள் சிறிது நேரம் படித்து விட்டுப் பின் குளித்துத் தயாராக ஆரம்பித்தாள்.
அவனும் குளித்துக் கிளம்பி வர, அறைக்கே அவன் உணவு வரவழைத்திருக்க, உண்டு முடித்துக் கிளம்பியவள் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு தயாரானாள்.
“கிளம்புவோமா?”
“ஒரு நிமிஷம் இப்பிடி வாங்க மாமா”
எதற்குக் கூப்பிடுகிறாள் எனப் புரியாமல் அவள் முன் அவன் வந்து நிற்க, பட்டென அவன் கால்களில் விழுந்தவளைக் கண்டு பதறிப் போனான் அவன்.
“ஹேய் என்னதிது? எழும்புத்தா!” என அவள் தோள்களைப் பிடித்து எழுப்பியவன் அவள் கண்கள் கலங்கி இருக்கக் கண்டு அமைதியானான்.
“நான் நல்லா எழுதணும்னு உங்களை விட அந்த சாமியால கூட ஆசீர்வாதம் பண்ண முடியாது மாமா.என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க”
“எதுக்குத்தா பெரிய வார்த்தையெல்லாம் பேசுத? அந்த நெல்லையப்பரும் காந்திமதி அம்மனும் ஒனக்குத் தொணையிருப்பாக.ஒரு ப்ரச்சனையும் இல்லாம நீ பரீச்சைய நல்லபடியா எழுதி முடிச்சு வருவே.போதுமா?” என்றவன் அவள் அசையாது நிற்க, மெல்ல நெருங்கி அவள் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தான்.
மலர்ந்து சிரித்தவள் “தேங்க்ஸ் மாமா!” எனவும் அவள் தலையைப் பிடித்து ஆட்டி விட்டு “ஒரு நிமிசத்துல மனுசனைப் பதற வச்சுட்டே” என்றவன் அவளையும் அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.
நல்லபடியாகத் தேர்வை எழுதி முடித்து வெளியே வந்தவள் ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டாள். பொதுவிடத்தில் கட்டிக் கொண்டவளைக் கண்டு கொஞ்சம் நெளிந்தாலும் அவனும் அவளை அணைத்துக் கொள்ளத் தயங்கவில்லை. அவளையும் உடன் நடத்திக் கொண்டே கேட்டான்.
“எப்பிடிப் பண்ணினத்தா?”
“நல்லாப் பண்ணி இருக்கேன் மாமா. சில கேள்விக்கெல்லாம் பதில் சரியான்னு தெரியல.இனி போய்த்தான் புக்கை வச்சுப் பார்க்கணும்”
“அப்போ ஊருக்குக் கெளம்பலாமா? இல்ல சினிமா கினிமா போக ஆசப்படுவியோன்னு நெனச்சேன்”
“இல்ல மாமா! வீட்டுக்குப் போய் நல்லா ஒறங்கணும்!”
“ம்ம்ம். சர்த்தான் வா!”
வீட்டு வாசலிலேயே மரகதம் ஆவலாய்க் காத்திருந்தார்.
“யத்தா! நல்லாப் பண்ணுனியா பரீட்சை?”
“ம்ம்ம். பண்ணி இருக்கேன்த்த”
கூடத்தில் மெத்திருக்கையில் அமரவும் அமுதன்,
“யம்மோவ்! ஒம் மருமக நேத்து ராவுல ஏழரையக் கூட்டிட்டா”
“ஏனப்பு? என்னாச்சு?”
“ஐயோ ஏன் கேக்குறே? எனக்கு பயமா இருக்கு மாமா, நான் பரீட்சை எழுத மாட்டேன் மாமான்னு ஒரே ஒப்பாரி”
அவர் ஆச்சர்யமாகக் குமுதாவைப் பார்க்க மெல்லிய குரலில் “கொஞ்சம் பயந்துட்டேன்த்த” எனவும் மென்மையாய்ச் சிரித்தவர்,
“பொறவு எப்பிடித்தான் எழுதினா?”
“எப்பிடியோ சமாளிச்சு… தைரியம் சொல்லி…” என்றவன் சன்னச் சிரிப்புடன் அவளைப் பார்க்க மகன் சிரிப்பதையும் மருமகள் சிவப்பதையும் கண்டவர் அவரும் சிரித்து விட்டு “இரிங்க காப்பி எடுத்தாரேன்” என்று விட்டு உள்ளே சென்றார்.
அன்று நன்றாக உறங்கி எழுந்தவள் அதன் பின்னர் கட்டவிழ்த்து விட்ட கன்றுதான்.படிப்பு படிப்பு என மூன்று வருடங்கள் முழு மூச்சாக இருந்தவள் இப்போதுதான் கொஞ்சம் இலகுவாக இருக்க ஆரம்பித்தாள்.
ஒரு மாதத்தில் நீட் தேர்வு முடிவுகள் வந்து விடும் என்பதால் அதுவரை இஷ்டம் போல் வீட்டில் வளைய வந்தாள்.
மரகதம் அவளைப் புடைவை கட்டச் சொல்ல அமுதனோ ‘வேண்டாம் எப்போதும் போல் இருக்கட்டும்’ என்று சொல்லி விட்டான்.
ஆம்.தேர்வு நாளன்று அவள் ஆறுதலுக்காக அவளை நெருங்கியவன் அதன் பின் கொஞ்சம் விலகித்தான் இருந்தான். ஒரே அறையில் புழங்கினாலும் ஒரே படுக்கையில் படுத்தாலும் அவளிடம் நெருங்காமல்தான் இருந்தான்.
முதலில் குமுதாவுக்கு அது கஷ்டமாக இருந்தது. நடந்து விட்ட நிகழ்வுகளை விளக்கவும் அவனிடம் மன்னிப்புக் கேட்கவும் முயற்சி செய்தாள். ஆனால் ஒரு விரக்திச் சிரிப்புடன் அவன் கடந்து போக காலம் ஆற்றாத காயங்கள் உண்டா என எண்ணியவள் எப்போதும் போல் இருக்கலானாள்.
தினமும் முன்பிருந்த வீட்டிலிருந்து மல்லிகை மலர்களைப் பறித்துக் கட்டி வைக்கச் சொல்லி மரகதம் கோகிலாவிடம் சொல்லி இருக்க கண்ணாயிரம் வாங்கி வந்து குமுதாவிடம் கொடுத்துக் கொண்டிருந்தான்.
முதலில் ஒரு சில நாட்கள் தலையில் பூ வைத்துக் கொண்டவளுக்கு அமுதன் விலகிப் போவது கண்டு ஏனோ பூ வைக்கும் ஆர்வம் போய் விட தினமும் அந்த மல்லிகைச் சரம் பூஜை அறையில் படங்களை அலங்கரிக்க ஆரம்பித்தது.
அவன் வந்து படுக்கும் முன் ஒன்பது மணிக்கே அவள் படுத்து உறங்கி இருந்தாலும் அருகில் படுக்கும் போதே முதல் முதலில் அவளைத் தூக்கிய போது உணர்ந்த அந்த மல்லிகையும் குளியல் பொடியும் கலந்த வாசனையை நுகர்ந்தவாறே உறங்கிப் பழகி இருந்தவனுக்கு சில நாட்களாக ஏதோ குறைவது போலிருக்க அன்றிரவு உறங்க வந்தவன் கட்டிலில் அவளருகில் அமர்ந்து, உறங்கும் மனையாளை ஆராய்ச்சியாய் நோக்கினான்.
நிச்சலனமாய் உறங்குபவளின் தலை முதல் பாதம் வரை பார்வையால் வருடியவன் என்ன குறை எனத் தெரியாமல் மீண்டும் முகத்தைப் பார்க்க என்ன குறைகிறது என்பது அவனுக்குப் பிடிபட்டு விட்டது.
தலையணையில் படர்ந்திருந்த கூந்தலின் நடுவே தெரிந்த அவளது முகம் நல்லிரவின் அடர்த்தியில் அலர்ந்த வெள்ளி நிலவாய் ஜொலித்திருக்க எப்போதும் தலையணையில் அவள் கூந்தல் காட்டுக்கு வேலி கட்டியிருக்கும் மல்லிகையைக் காணாமல் புருவம் சுருக்கினான்.
மறுநாள் கீழே காலை உணவிற்குச் சென்றவன் விழிகளில், அடர்த்தியாகத் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரத்தைக் கத்திரிக்கோலால் படங்களுக்குத் தக்கவாறு வெட்டிக் கொண்டிருந்தவள் விழ “க்கும்!” எனக் கனைத்தவாறு உணவு மேஜையில் சென்று அமர்ந்தான்.
அன்று மதியம் வீடு திரும்புகையில் மரகதம் முன்பிருந்த வீட்டுக்கு வண்டியை விட்டவன் அங்கிருந்த கோகிலாவிடம்,
“பூக்கட்டி வச்சுருக்கியளா?” எனவும்
“இதா ஆச்சுங்கையா.வழக்கமாப் பொழுதாகக் கண்ணாயிரம் வந்து வாங்கிக்கிடுவான்” என்றவாறே வாழையிலையில் சுற்றியிருந்த மல்லிகையைக் கொடுக்க,
“நாளையில இருந்து இந்நேரம் நானே வந்து வாங்கிக்கிடுதேன். அவன் இனி வர வேணாம்” என்று விட்டுக் கிளம்பினான்.
அவன் வந்ததும் பரிமாற வந்தவளின் கையில் பூவைக் கொடுக்க நம்ப மாட்டாதவளாக அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்.
“அம்மை வீட்டுப் பக்கம் ஒரு வேலையாப் போனேன். கோகிலாக்காவுக்குப் பொழுதாக ஏதோ வேலையிருக்காம். அதான் இப்பவே குடுத்து விட்டாக” என்று அவள் முகம் பாராமல் உரைத்து விட்டு உணவுண்ண அமர்ந்தான்.
அவன் என்ன சொன்னாலும் அவன் கையால் பூவைக் கொடுத்ததே மகிழ்ச்சி என்று சொல்பவள் போல் “யத்தே! சாமிக்கு வேற சாமந்தி மால வழக்கமா வாங்குவீயளே. அதைச் சொல்லி விட்டுக்கிடுங்க. இன்னிக்கு மல்லிப் பூவ நான் தலைக்கு வைச்சுக்கிடப் போறேன்” எனச் சத்தமாக அங்கே இல்லாத அத்தையிடம் சொல்லி விட்டுப் பூவை தலை நிறைய வைத்துக் கொண்டு அவனுக்கு உணவு பரிமாற ஆரம்பித்தாள்.
நாட்களும் விரைவாக நகர்ந்து அவளது தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளும் வந்தது.
காலையிலிருந்தே பதற்றமாகத்தான் இருந்தாள் குமுதா. அலைபேசியை அணைத்து வைத்திருந்தவள் வீட்டின் வாசலிலிருந்து புறக்கடை வரை நடையாய் நடந்து வீட்டைத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.
நகத்தைக் கடிப்பதும், துப்பட்டா நுனியைத் திருகுவதும், மெத்திருக்கையில் சில நிமிடங்கள் அமர்வதும், பின் உடனே எழுந்து நடக்க ஆரம்பிப்பதுமாக அவள் அலம்பலைப் பார்த்திருந்த மரகதம் “ஏட்டி! நல்ல மார்க்குதான் வாங்கி இருப்பே.என்னத்துக்கு இப்பிடிக் கால்ரேகை தேயத் தேய நடக்குதே” என்று சொல்லியும் காதில் போட்டுக் கொள்ளவில்லை அவள்.
தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்திருக்க, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட உடனேயே அமுதனுக்கு அழைப்பு வந்து விட்டது. அவளது மதிப்பெண்களைப் பார்த்த மறு நிமிடம் அங்கிருந்து வீட்டுக்குக் கிளம்பி இருந்தான்.
வாசலில் புல்லட் சத்தம் கேட்டதும் அவள் உடல் விறைத்தது. கால்கள் தொய்ந்து துவள, தூணின் அருகே நின்றிருந்தவள் அதன் மேலேயே சாய்ந்து கொண்டாள்.
நுழைந்ததுமே வீட்டை அலசிய அவன் பார்வையில் அகப்பட்டவளை “மேல வா!” என்று விட்டு அவன் படிகளில் ஏற “போச்சு! போச்சு! மார்க்குக் கம்மியா எடுத்துட்டேம் போல. அதாம் மாமாக் கோபமாப் போறாக” எனத் தவித்துத் தடுமாறியவள் தலை நிமிர்ந்து யாரையும் பார்க்கவே இல்லை.
இரும்பெனக் கனத்த கால்களைத் தூக்கி வைத்துப் படிகளில் ஏறி அவள் அவர்கள் அறைக்குள் நுழைய ஜன்னல் வழியாக வெளியே பார்வையை நிலைக்க விட்டிருந்தவன் அவளை நோக்கித் திரும்பினான்.
கண்களைக் கலக்கம் கவ்வியிருக்க, கால்களைத் தயக்கம் தடுமாற வைக்க வாசலிலே நின்றவண்ணம் அவனை நிமிர்ந்து நோக்கியவளைப் பார்த்து இரு கைகளையும் விரித்து “வா!” என அவன் அழைக்க, வில்லினின்று புறப்பட்ட அம்பாகப் பாய்ந்து சென்று அவன் மார்பைத் தைத்தாள் தையலவள்.
அவளை இறுக அணைத்துக் கொண்டவன் சில நிமிடங்கள் எதுவுமே பேசவில்லை.
அவளுக்கு இன்னும் பயந்து போனது.இது ஆனந்தத்தைக் காட்டும் அணைப்பா அல்லது ஆறுதலைக் கொடுக்கும் அணைப்பா என்பது புரிபடாமல் அவனிடமிருந்து மெல்ல விலக முற்பட “ஷ்ஷ்ஷ்” என்றவன் இன்னும் இறுக்கமாகக் காற்றுப் புக இடைவெளியில்லாமல் அவளைக் கட்டிக் கொண்டான்.
ஒரு வருடம் முன்பு அவள் பள்ளித் தேர்வில் முதலிடம் பெற்ற போது அவளை உரிமையாய் அணைத்துக் கொள்ள முடியவில்லையென்ற ஆதங்கத்தை இப்போது தீர்த்துக் கொள்கிறான் என்பது தெரியாதாகையால் “மாமா!” என அவள் ஆரம்பிக்க அவள் காது மடலில் அவன் இதழ்கள் உரச “எழுநூத்தி இருபதுக்கு அறுநூத்தித் தொண்ணூத்தி எட்டு மார்க்கு. தமிழ்நாட்டுல மூணாவது எடம். ஆல் இண்டியா ரேங்க் நாற்பது” எனவும் நம்ப மாட்டாதவளாக சட்டென அவனை விட்டு விலகி அவன் முகம் பார்த்தாள்.
அவன் ‘ஆம்’ என்பது போல் தலையசைக்க “ஹேய்!” எனக் கத்தியவள் இப்போது அவனை அணைத்துக் கொண்டு அவன் முகம் முழுவதும் வெறி கொண்டவள் போல் முத்தமிட ஆரம்பிக்க சில நிமிடங்களில் அவள் செய்கையைத் தனதாக்கியிருந்தவன் அவளை முத்தமிட்டுக் கொண்டிருக்க இப்போது அவன் கைகளில் துவண்டிருந்தாள் பாவை.
நிமிடங்கள் கடந்திருக்க அவளைக் கைகளுக்குள் வைத்திருந்தவன் அருகில் இருந்த மேஜையில் வைத்திருந்த இனிப்பை எடுத்து அவளுக்கு ஊட்ட அவளும் பதிலுக்கு அவனுக்கு ஊட்டினாள்.
மீண்டும் அவளை அணைத்துக் கொண்டவன் “நான் நெனக்கவேயில்ல ராசாத்தி இம்புட்டு மார்க்கு வாங்குவேன்னு. பரீச்சைக்கு முந்தி எத்தனை ப்ரச்சனை. பரீச்சைக்கு மொத நாக் கூட நம்பிக்கை இல்லாமத்தான பேசுன.சீட்டுக் கிடைக்காது, அப்பிடியே கெடச்சாலும் எங்கனயாவது வட நாட்டுப் பக்கம் கெடக்குத மாரி மார்க்குக் கம்மியாத்தான் இருக்கும், அப்படி இருந்தா உன்ன எப்பிடி அங்கல்லாம் அனுப்புறதுன்னு தவியாத் தவிச்சுகிட்டு இருந்தேன் இந்த ஒரு மாசமும்”
அவன் சட்டை பட்டனைத் திருகியபடி இருந்தவள்,
“எம்மேல அம்புட்டு ஆசையா மாமா?” எனக் கேட்டு விட அவனுடல் இறுகிப் போயிற்று.
அவளை விலக்கி நிறுத்தியவன் “ம்ம்ம்.சரி.இதுல இனிப்பு வாங்கிட்டு வந்துருக்கேன்.போய் ஒங்கையால எல்லாத்துக்கும் குடு” என்றான்.
இடுப்பில் கை வைத்து அவனைப் பார்த்து முறைத்தவள் “இன்னும் எத்தன நாளைக்குன்னு பார்க்குதேன்!” என்று விட்டு அவனுக்குப் பழிப்புக் காட்டி விட்டு அவன் கொடுத்த பையையும் எடுத்துக் கொண்டு ஓட அவள் செய்கையில் அவன் வாய் விட்டுச் சிரித்தான்.
அன்றிரவு படுத்துக் கொள்ளத் தயாரானவள் அமுதனின் அலைபேசியின் சத்தம் கேட்டுப் புருவம் சுருக்கினாள்.
“அதுக்குள்ள வீட்டுக்கு வந்து பசியாறிட்டு மேல வந்துட்டாகளா?” தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள் அறைக்கு வெளியே எட்டிப் பார்க்க அவனோ அலைபேசியில்,
“இல்ல செல்லம். இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டேன். இல்லைன்னா ஒன்னைப் பார்க்காம, தொடாம வருவனா?”
…………………………………………………………………….
“ம்ம்ம்.எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. நாளை பொழுதானதும் வாரேன். இப்ப ஒறங்குவயாம்”
……………………………………………………………………………..
“ம்ம்ம்.நானும்…ப்ச்…ப்ச்…ப்ச்” என்று முத்தம் கொடுப்பது போல் ஒலி எழுப்பி விட்டு அலைபேசியை அணைத்தவனை நம்ப முடியாது பார்த்துக் கொண்டிருந்தாள் குமுதா.
ஓட வழி போகையில அவன் ஓடி வந்து வழி மறிச்சான்
கூட வந்து குசும்பு பண்ணி மெல்ல சேலையைத்தான் புடிச்சிழுத்தான்
கட்டிக்கத்தான் போறேன்னுன்னு கட்டி கட்டி தான் புடிச்சான்
கட்டு பட்டு கட்டு பட்டு நான் கிடந்தேன்
கண்ண கொஞ்சம் மூடிக்கிட்டேன் உன் மடியில் சாஞ்சிகிட்டேன்
ரெக்கை கட்டி ரெக்கை கட்டி நான் பறந்தேன்
அட கண்ணு முழிச்சா மாமனத்தான் காணவில்லை
அங்க நடந்த கத அத்தனையும் கனவு குள்ள
ஆச மனச தூண்டி அது மாமன் மனச கூறும்
வாச கதவ சாத்தி மெல்ல மறைஞ்சி பாக்க தோணும்
அடி பேச்சியம்மா மாரியம்மா சேந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு பாட்டு சொல்லியடி