Advertisement

அன்புள்ள தவறே ௦1  

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருந்தது அந்த ஐந்து நட்சத்திர விடுதி. அன்றைய தினம் அந்த விடுதி மொத்தத்தையும் நிறைத்திருந்தது தினசரி தீ பத்திரிக்கை குழுமத்தின் பணியாளர்கள் தான்.

பணியாளர்கள் என்றால் உயர்மட்டத்தினர் மட்டும் கிடையாது. அந்த பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை செய்யும் கடைநிலை தொழிலாளர்கள் வரை அத்தனைப் பேருக்கும் சேர்த்து விருந்து அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது அங்கே.

விருந்து கொடுத்தது தினசரி தீ செய்தித்தாள் நிறுவனத்தின் தற்போதைய தலைவன் வருண் ஆதித்யன். நிறுவனம் அவனது தாத்தா தொடங்கியது என்றாலும், அதை திறம்பட நிர்வகித்து, மேம்படுத்தியதில் பெரும் பங்கு வருண் ஆதித்யனையேச் சேரும்.

அவனைப் பொறுத்தவரை அவன் தொழில் அவனுக்கான அடையாளம். இந்த இருபத்தேழு வயதில் தந்தையின் தொழில் மொத்தத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு தனி ஒருவனாக ஆட்சி செய்து கொண்டிருந்தான் அவன்.

தாத்தா, தந்தை என்று இருவரில் யாரையும் பின்பற்ற விருப்பமில்லாமல், வெறும் அச்சுப் பிரதியாக செயல்பட்டு வந்த தினசரி தீ செய்தித்தாளை மின்னணு இதழாக மாற்றியவன் அதோடு நிற்காமல் இன்றைய இளைஞர்கள் விரும்பும் வகையில் பல புதிய அம்சங்களையும் சேர்த்திருந்தான்.

இன்றைய தலைமுறைக்கு ஏற்றபடி இளம் செய்தியாளர்கள், துடிப்பு மிகுந்த கள ஆய்வாளர்கள், செய்தி சேகரிப்பாளர்கள் என்று தன்னை அமைப்பு ரீதியாக கட்டமைத்துக் கொண்டவன் சமுக வலைத்தளங்களிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கி இருந்தான்.

செய்தித்தாள் நிறுவனத்தை தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திகள் என்று இறங்காமல், முற்றிலுமாக இணையத்தை ஆக்கிரமிக்க முடிவு செய்து அதில் வெற்றியும் கண்டிருந்தான் வருண் ஆதித்யன்.

இன்றைய இந்த விருந்து கூட, அவனது செய்தித்தாள் நிறுவனத்தின் அந்த வருடத்திற்கான ஆண்டு நிறைவு விழா தான். தினசரி தீ அந்த ஆண்டு விற்பனையிலும், தரத்திலும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்க, அந்த ஆண்டின் சிறந்த செய்தித்தாள் நிறுவனத்திற்கான விருதையும் பெற்று இருந்தது. 

அதை கொண்டாடும் விதமாக தனது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளத்தை போனசாக அறிவித்து இருந்தான் வருண் ஆதித்யன். இன்றைய இந்த விருந்தும் கூட அவர்களின் வெற்றிக்காக தான்.

பெயரளவில் ஏதோ விருந்துக்கு ஏற்பாடு செய்ததுடன் நின்றுவிடாமல், அவர்களில் ஒருவனாக அவர்களுடனே நின்று கொண்டிருந்தான் வருண் ஆதித்யன். 

உணவு நேரம் முடியவும், அடுத்ததாக ஆட்டம், பாட்டம் என்று விருந்து களைகட்ட, அந்த நிறுவனத்தின் கடை நிலை ஊழியர்களில் ஒருவனான மாரியுடன் சேர்ந்து கொண்டு அவனுக்கு சரியாக ஆடிக் கொண்டிருந்தான் வருண் ஆதித்யன்.

இது எப்போதும் வழக்கம்தான் என்பதுபோல், அவனது தொழிலாளர்களும் வெகு இயல்பாக அவனுடன் உறவாடிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த அத்தனைப்பேரின் பார்வையும் மரியாதையும், வாஞ்சையுமாக பதிந்தது அவன்மீது.

அவர்களின் அந்த அன்புக்கு தகுதியானவன் தான் வருண் ஆதித்யனும். இன்றைய நாகரீக இளைஞர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவன். மது, மாது என்று அத்தனைக்கும் வாய்ப்பிருந்தும் இன்றுவரை எதிலும் சிக்கி கொள்ளாமல் வெகு கவனமாக வாழ்ந்து வருபவன்.

சுய ஒழுக்கம், தனிமனித சுதந்திரம், தனக்கான கட்டுபாடுகள் என்று சற்றே வித்தியாசமானவன் அவன். தொழிலிலும் அவனுக்கென சில கோட்பாடுகளும், சில விதிகளும் வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்து வருபவன் வருண் ஆதித்யன்.

அவனைச் சேர்ந்தவர்களுக்கு எந்த அளவிற்கு அவன் நல்லவனோ, அதே அளவிற்கு கெட்டவன் எதிராளிகளுக்கு. நியாயமான கோபம் தான் என்றாலும், யாராலும் கட்டுபடுத்த முடியாத கோபம் ஒன்றுதான் அவனுடைய பலவீனம்.

இதோ இன்றும் வகை வகையான உணவுகள், கேளிக்கைகள் என்று விருந்து சிறந்தாலும், மதுவுக்கு மட்டும் அங்கே இடமில்லாமல் தான் இருந்தது. அவனைச் சேர்ந்தவர்களுக்கும் அது ஒரு பெரிய குறையாக தோன்றவில்லை போலும்.

மேலும் சிலமணி நேரங்கள் ஆடியும், பாடியும் களைத்துப் போய் அவர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொள்ள, அவர்கள் அத்தனைப் பேரும் கிளம்பிய பின்னர் தனது விருப்பமான ஜாகுவார் காரை தானே இயக்கியபடி அந்த விடுதியில் இருந்து கிளம்பினான் வருண் ஆதித்யன்.

அவன் அந்த விடுதியில் இருந்து வெளியேறும்போதே நேரம் இரவு மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருக்க, அந்த நள்ளிரவு நேரத்தில் ஆளில்லாத கடற்கரைச் சாலையில் பயணிப்பதை ரசித்தபடி வெகு நிதானமாக காரைச் செலுத்திக் கொண்டிருந்தான் அவன்.

அவன் கிழக்கு கடற்கரைச் சாலையை கடந்து சென்னையின் முக்கிய சாலையில் இணைய முற்படும் வேளையில் தான் அந்த விபத்து நேரிட்டது. அவனுக்கு சற்று தள்ளி முன்னே சென்று கொண்டிருந்த கார், கிளைச்சாலையில் இருந்து வெளிப்பட்ட ஒரு கனரக வாகனத்தின் மீது மோதிவிட, காரில் இருந்தவர்களைப் பற்றிய கவலையற்றவனாக வெகு வேகமாக பறந்திருந்தான் அந்த லாரிக்காரன்.

வருணுக்கு காரில் இருந்தவர்களே முக்கியமாகத் தோன்ற, தனது வாகனத்தை ஓரமாக நிறுத்தி, வெகுவேகமாக அந்த காரை நோக்கி ஓடினான் அவன். 

காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தவனுக்கு பலமாக காயம்பட்டிருக்க, வருண் காரின் கதவைத் திறந்து அவனை வெளியே கொண்டுவர முயற்சிக்கும்போது தான் ஏதோ வேறுபாடாக உணர்ந்தான்.

அவன் உள்மனது எதையோ உணர்த்த முற்பட, அவன் நிதானிக்கும் முன்பே அவனது வயிற்றின் இடதுபுறத்தில் ஆழமாக இறங்கியது அந்த கத்தி. “அம்மா…” என்று அலறலுடன் அவன் நிமிர்கையில், அந்த காரில் இருந்து மளமளவென இறங்கிய மற்ற நான்குபேரும் அவனது உடலில் மேலும் சில இடங்களை கத்தியால் குத்தியும், கிழித்தும் காயப்படுத்தி இருந்தனர்.

அவனும் தன்னால் முடிந்தவரை தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே முயன்றாலும், வயிற்றில் இருந்து வெளியேறிய அதிகபடியான ரத்தம் அவனை மெல்ல மெல்ல நிலையிழக்கச் செய்து கொண்டிருந்தது. அதுவும் கொலையை தொழிலாக கொண்ட நால்வருடன் அவன் ஒருவனாக போராடி வெற்றி பெற அவன் திரைப்பட கதாநாயகனும் இல்லையே.

முடிந்தவரை அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள நினைத்து தனது காரை நெருங்கினான் அவன். அவர்களும் விடாமல் அவனைத் தொடர, அவர்களிடம் போராடிக் கொண்டே தனது காரின் கதவைத் திறந்துவிட்டவன் காரை இயக்கும் அளவிற்கு சக்தி இல்லாமல் தொய்ந்து விழ, மொத்தமாக அவனை முடித்துவிடும் நோக்கில் அவனை நெருங்கியது அந்த கும்பல்.

சரியாக அதே நேரம் சாலையின் மறுபக்கத்தில் ஒரு கார் அவர்களை நெருங்குவதைக் கண்டு பதட்டத்துடன் அந்த இடத்தை காலி செய்தது அந்த கும்பல். அவர்கள் இருந்த காரின் ஓட்டுனரும் இப்போது வெகு இயல்பாக காரை உயிர்பிக்க, அந்த மற்றொரு கார் இவர்களை சமீபிப்பதற்கு முன்னதாகவே தப்பித்துச் சென்றிருந்தனர் அவர்கள்.

வருண் அணிந்திருந்த வெள்ளைநிற சட்டையும், அவனது காரின் இருக்கையும் மொத்தமாக சிவப்பு நிறமாக காட்சியளிக்க, சுயநினைவே இல்லாமல் ஸ்டியரிங் வீலின் மீது மயங்கிப் போயிருந்தான் அவன்.

எதிரில் வந்த காரின் ஓட்டுனர் காரின் வேகத்தை குறைத்தபடியே நிலைமையை கிரகித்துக் கொண்டார். தனியாக இருந்திருந்தால் உதவியிருப்பாரோ என்னவோ.

அருகில் அவரது உரிமையாளரின் மகள் உறங்கிக் கொண்டிருக்க, எந்தவித ஆபத்தான முயற்சியிலும் இறங்குவதாக இல்லை அவர். அவர் மெல்ல காரின் வேகத்தை மீண்டும் கூட்டுகையில், “வண்டியை நிறுத்துங்க அண்ணா” என்று கத்தினாள் பின்னால் உறங்கி கொண்டிருந்தவள்.

“இல்ல பாப்பா” என்று அவர் இழுக்க,

“வண்டியை நிறுத்த சொன்னேன்.” என்றாள் அதிகாரமாக.

அந்த குரலில் அவர் வண்டியை நிறுத்தி இறங்கிவிட, அவருக்கு முன்னதாகவே வண்டியை விட்டு இறங்கி அந்த காரை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டாள் அவள்.

“பாப்பா… பாப்பா சொல்றதை கேளுங்க” என்று கத்தியபடியே நாராயணனும் அவள் பின்னே ஓட, அவரைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அடிபட்டவனை நெருங்கி விட்டாள் அவள்.

தன் பலத்தை திரட்டி அவனை நிமிர்த்த முயன்று அவள் தோற்று நிற்க, “வழி விடுங்க” என்று கடிந்தபடியே, வருண் ஆதித்யனை நிமிர்த்தி காரின் சீட்டில் சாய்த்தார் அவர்.

அவனது வயிற்றில் காயம்பட்டிருப்பது புரிய, “நம்ம வண்டியில இருந்து என்னோட பேக் எடுத்து வாங்க” என்றபடியே அவன் சட்டையின் பொத்தான்களை விடுவிக்க முயன்று கொண்டிருந்தாள் அவள்.

வருண் ஆதித்யன் அரைமயக்க நிலையில் இதழசைத்து எதையோ கூற முற்பட, “உங்களால பேச முடியாது. அமைதியா இருங்க. உங்களுக்கு எதுவும் இல்ல. நல்லா இருக்கீங்க” என்று அவனிடம் பேச்சு கொடுத்தபடியே அவன் சட்டையில் இருந்து அவனை விடுவித்தாள் அவள்.

“அவன் பதில் பேசுவானா, இல்லை, தான் சொன்னது அவன் காதில் விழுகிறதா” என்று எதைக் குறித்தும் கவலை கொள்ளாமல் அவள் போக்கிற்கு பேசியபடியே, அவனுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தாள் அவள்.

நாராயணன் கொண்டு வந்து கொடுத்த பெட்டியில் இருந்து தனக்கு தேவையான உபகரணங்களை எடுத்து உபயோகித்துக் கொண்டவள், அவன் காயத்தை துடைத்து தற்காலிகமாக ரத்தத்தை நிறுத்தியபடியே, “இப்படியே விட முடியாது அண்ணா. தூக்குங்க… ஹாஸ்பிடல் போகணும்” என,

“நமக்கு தேவை இல்லாதது பாப்பா. அப்பாவுக்கு தெரிஞ்சா கோபப்படுவாங்க.”

“அவர் கோபத்துக்கு ஒரு உயிரை பலியாக்க முடியாதுண்ணா. தூக்கிட்டு வாங்க, இல்லையா வழி விடுங்க” என்றவள் வருணை அசைக்க முற்பட, 

“சொன்ன பேச்சை கேட்கவே மாட்டிங்க பாப்பா நீங்க.” என்று சலித்தபடியே, “வழியை விடுங்க” என்று வருண் ஆதித்யனை கைகளில் தூக்கிச் சென்று தங்களுடைய காரின் பின்சீட்டில் கிடத்தினார் நாராயணன்.

அவன் வலியில் எதையோ முனக, அவன் அருகில் அமர்ந்து அவனை அசையாமல் பிடித்துக் கொண்டாள் அவள். அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவளுக்கு தெரிந்த மருத்துவமனையில் அவனை அனுமதித்து அவனுக்கான சிகிச்சையை தொடங்கியிருந்தாள் அவள்.

ஆம்… அவள்தான் சிகிச்சை செய்து கொண்டிருந்தாள். அவளது சீனியர் வந்து கொண்டிருக்க, அதுவரை பொறுக்காமல் சிகிச்சையை தொடங்கி இருந்தாள் அவள். பவித்ரா… பெயரைப்போலவே மனதளவில் பவித்ரமானவள் தான் அவளும்.

அறைக்குள் நுழைந்த அவளது சீனியர் சுஜாதா, “என்ன நடந்தது பவி. யார் இது? எப்படி அடிபட்டது” என்று கேட்டபடியே அவனது சிகிச்சையை தான் கையில் எடுத்துக்கொள்ள, அவர் கேள்விக்கு பதில் கூறாமல் அமைதியாக அவருக்கு உதவி செய்ய தொடங்கினாள் பவித்ரா.

அவள் முகம் கவலையைக் காண்பிக்க, அவனை சோதித்த சுஜாதாவும் யோசனையுடன் தலையசைத்துக் கொண்டார். “சியர் கேர்ள். கிரிட்டிக்கல் தான். பட், நம்மால முடியும்” என்று தைரியம் கூறினார்.

அவரைப்போல் நிதானம் இன்னும் கைவரவில்லை என்றாலும், அவர் பேச்சில் கொஞ்சம் திடமாக உணர்ந்து, “நான் தியேட்டர் ரெடி பண்றேன் மேம்.” என்று வேகமாக நகர்ந்தாள் பவித்ரா.

செல்லும் அவள் சுபாவத்தை ரசித்து சிரித்தபடியே, சுஜாதா தனது வேலையைத் தொடர, பதினைந்து நிமிடங்களில் அவன் வயிற்றில் மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சைக்கான அத்தனை ஏற்பாடுகளையும் முடித்து இருந்தாள் பவி.

கடைசி நொடியில், செவிலி அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான காகிதங்களை அவளிடம் நீட்ட, அவளை புரியாமல் பார்த்து வைத்தாள் பவித்ரா.

“ஹாஸ்பிடல் ரூல் பவி. ரிலேடிவ்ஸ் தான் சைன் பண்ண முடியும்.” என்று அந்த செவிலி உரைக்க, 

“நான் பண்றேன் சிஸ்டர்.” என்றாள் பவி.

“என்ன பண்ற பவி. என்ன உறவு சொல்லுவ?”

“அதையெல்லாம் யோசிக்க நேரமில்ல சிஸ்டர். கொடுங்க” என்று அந்த காகிதங்களை கையில் வாங்கிக் கொண்டாள். அதில் மனைவி என்றிருந்த இடத்தில் கையெழுத்திட்டு, “ஓகே வா” என்று மென்மையாக சிரித்து வைக்க, 

“உள்ளே இருக்கவரை உனக்கு தெரியுமா?” என்று சந்தேகித்தார் அந்த செவிலி.

அதற்கும் சிரிப்பையே பதிலாக கொடுத்து அவரைக் கடந்து விட்டவள், அவனுக்கான சிகிச்சையில் இணைந்து கொண்டாள். காலை ஐந்து மணியளவில் அவன் சிகிச்சை முடிந்து அவன் அபாயநிலையைத் தாண்ட, அதன்பிறகே பவித்ராவின் மூச்சு சீரானது.

அவள் கண்கள் உறக்கத்திற்கு கெஞ்ச, அங்கிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடியே மெல்ல உறங்க தொடங்கினாள் அவள். ஒருமணி நேரம் உறங்கி எழுந்து வருணின் உடல்நிலையை சோதித்துப் பார்த்து திருப்தி கொண்ட பிறகே அந்த மருத்துவமனையை விட்டு கிளம்பினாள்.

அவள் வெளியேறும் நேரம், “என்ன உன் புருஷன் பொழைச்சுட்டாரா…”என்று கேட்டபடி நக்கலாக அந்த செவிலியர் சிரித்து வைக்க, 

“ம்ம்ம்.. பிழைச்சுட்டாங்க. உங்களை நம்பி என் உயிரையே ஒப்படைச்சுட்டு போறேன் சிஸ்டர். பத்திரமா பார்த்துக்கோங்க” என்று கண்ணடித்துச் சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாள் அவள்.

அன்றைய தினம் மருத்துவமுகாம் ஒன்று ஏற்பாடாகி இருக்க, எட்டு மணிக்கு அங்கே இருக்கவேண்டும் என்பதால் அவசரமாக கிளம்பிச் சென்றாள் பவித்ரா.

சென்னை மருத்துவ பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படித்து முடித்து, தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவத்தில் மேற்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தாள் அவள். 

மருத்துவக் கல்லூரியின் அருகில் அமைந்திருந்த விடுதியில் தங்கிக்கொண்டு அவள் படித்துவர, தற்போது முகாம் ஏற்பாடு செய்யபட்டிருந்த இடமும் அவள் கல்லூரிக்கு அருகில் தான் என்பதால், விடுதியின் வாயிலில் இறங்கிக்கொண்டு நாராயணனை அனுப்பி வைத்தாள் அவள்.

அவளைப் பற்றி நன்கு உணர்ந்தவரும் அவள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் கிளம்பிச் செல்ல, அன்றைய நாளின் அவசரம் அப்போதே தொற்றிக் கொண்டது பவித்ராவை.

Advertisement