‘இப்போ சரி சொல்லு’ என்று மீண்டும் கிழவி ஆனந்தியை போட்டு குடைந்தெடுக்க கடுப்பில் வெடித்துவிட்டாள் பேத்தி.
“இங்க பாரு அப்பத்தா, நீ போட்டுருக்க லிஸ்ட் எல்லா சரிதான். ஆனா என்னால ஆபிஸ்க்கு லீவ் போட்டு எல்லாம் வரமுடியாது. அதுல நீயே செலவுக்கு அவ்வளவு பணம் ஆகுன்னு போட்டுறக்கல்ல, அந்த பணத்துக்கு எங்க போறது. சும்மா நைநைங்காம போய் வேற வேலை இருந்தா பாரு”
பலநாள் கழித்து புல் ஃபார்மில் கத்திவிட்டு சென்றாள் பேத்தியவள். தன் அப்பத்தாவின் கிறுக்கு புத்தி தெரிந்தும் இப்படி கத்தி சென்றவள், பேசுவதற்கு முன் சற்று யோசித்திருக்கலாம். இதனால் பாட்டி செய்யப்போகும் காரியத்தில் இன்னும் கொஞ்ச நாளில் கதற போவது பேத்தியே.
கிழவி ஆனந்தியிடம் இதை பற்றி பேசி சரியாக ஒருவாரம் கடந்திருந்தது. இதைப்பற்றி மேலும் கிழவி பேசாததால், கிழவி தன் டிரிப் பிளானை முற்று முதலாக கேன்சல் செய்துவிட்டதென எண்ணி சகஜமானாள். ஆனால் கிழவியின் அமைதி ஆபத்தில் கொண்டு விடும் என்பதை அப்போது வசதியாக மறந்து போனாள்.
இன்று இரவு உணவுக்கு மட்டன் பிரியாணி சிக்கன் குழம்பு என வகைத்தொகையாய் கிழவி செய்து வைத்திருக்க, ஆனந்திக்கு ஆச்சரியமாய் போனது. ஏனெனில் காலையில்தான் பாட்டிக்கும் பேத்திக்கும் ஒரு பஞ்சாயத்து ஆகியிருக்க பேத்தியால் நடப்பதை நம்ப முடியவில்லை. காலையில் நடந்தது இதுதான்.
“என்ன அப்பத்தா இன்னைக்கு நீ வேலைக்கு போகலையா”
வேலைக்கு செல்ல ஆரம்பித்த நாளில் இருந்து தினமும் அதிகாலை எழுந்து பரபரப்பாக வேலை செய்யும் கிழவி, இன்று முதல்நாள் கட்டியிருந்த புடவையில் இருக்க குழப்பத்துடன் ஒரே ஒரு கேள்வியைதான் கேட்டு நின்றாள் பேத்தி.
“ஏன்டி நான் வேலைக்கு போகலனா உனக்கு சோறு எறக்காதோ. எதோ ஒருநா மேலுக்கு முடிலனு வூட்டுல இருந்தா நீ என்னையவே கேள்வி கேக்குதியா”
ஆனந்தி கேட்ட ஒற்றை கேள்விக்கு சண்டை வாடா என்று சண்டையை இழுத்திருந்து கிழவி. ‘ஏன் கிளம்பலன்னு கேட்டது ஒரு குத்தமா. சரிதான் இன்னைக்கு நமக்கு நேரம் சரியில்ல போல அப்படியே அமைதியா போயிருவோம்’ என உசாராகி வெளியேறியிருந்தாள் பேத்தி.
அதற்கு முற்றிலும் வேறாக இப்போது கிழவி நடந்துக் கொள்வதைதான் ஆனந்தியால் நம்பமுடியாது போனது. சரி என்னதான் கிழவி செய்யப்போகிறதென பார்ப்போமே என்று நினைத்த ஆனந்தியும் அமைதியாக கிழவி சமைத்த உணவை உள்ளே தள்ளினாள்.
என்றும் இல்லா திருநாளாய் இன்று உணவு வேறு நல்ல சுவையில் இருக்க, பேத்தி ஒரு வெட்டு வெட்டினாள். கடைசியாக அது மட்டுமே அவள் நியாபகத்தில் இருக்க, மயங்கி சரிந்தாள்.
எவ்வளவு நேரம் கடந்ததோ தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்தாள் பேத்தி. தன்னை சுற்றி இருந்தவர்ளை பார்த்தவள் அதிர்ந்து போனாள். தூக்கக் கலக்கத்தில் எல்லாம் வேற மாதிரி தெரிகிறதென எண்ணி கண்களை நன்கு தேய்த்துவிட்டு ஆனந்தி பார்க்க
“கனவெல்லா ஒன்னும் இல்ல நாம நெசமாலுமே ரயிலுலதேன் போறோம்” அவளின் அருமை அப்பத்தாவின் அபத்தமான குரல் அருகில் கேட்டது.
அதற்கு பிறகுதான் புரிந்து அவள் இருப்பது வீடு அல்ல ரயிலில் என்று.
“ஏய் கெழவி என்னதிது. நைட் நாம வீட்டுல தானே இருந்தோம் இப்ப எப்படி டிரைன்ல போறோம் என்னாச்சு”
பதறிபோய் ஆனந்தி கேட்டதற்கு அவளை சிறிதும் சட்டை செய்யாது ரெண்டு வெத்தலையை கிள்ளி வாயில் அதக்கியது. ஆனந்தி இதற்கு மேல் தாங்காதுடாசாமி என அருகில் இருப்பவர்களிடம் ரயில் எங்கே போகிறது என கேட்க, அவர்கள் அது ஜெய்ப்பூர் போகிறது என்றபோது இதயம் வெடித்து புகையாய் வந்தது.
“கெழவி இப்ப எதுக்கு நாம ஜெய்ப்பூர் போறோம். என்ன எங்க நீ கடத்தீட்டு போற” வெறிகொண்டு ஆனந்தி கத்த
“அடியே இவளே அதேன் எங்க போறோம்னுட்டு தெரிஞ்சு போச்சுதுல்ல அப்புறம் என்னத்துக்குடி கத்துறவ. செத்த நேரம் தொனதொனக்காமதேன் வாவேன்” கூலாக பேசியது கிழவி.
ஆனந்தி மீண்டும் எதற்கு அங்கே போகிறோம் என கேட்டு கிழவியை குடைய ஆரம்பிக்க
“இங்க பாரு புள்ள நான் உன்னுட்ட என்னா சொன்னேன். ஊரை சுத்த ஒரு டிரிப் போலாம்னுட்டுதானே. ஆனா நீ என்ன செஞ்ச, நான் சொன்னதை காதுல கூட வாங்காம என்னையே வஞ்சுட்டு போனியல. அதேன் நீ திண்ண சோத்துல என் தூக்க மாத்திரை ரெண்டு போட்டு, அந்த பரசு பையல வச்சு உன்னைய காருல ஏத்தி கூட்டியாந்தேன்”
நடந்த நிகழ்வுகளை கிழவி கோர்வையாக சொல்ல ‘ஆத்தி கெழவி என்ன கிட்னாப் பண்ணிட்டா வந்திருக்கு’ என வாயடைத்து போனாள் பேத்தி.
ஆனால் அதற்கு மேல் எந்தவொரு டீட்டெய்லையும் கிழவி வாயிலிருந்து ஆனந்தியால் வாங்க முடியவில்லை. ஜெய்ப்பூருக்கு ரயில் சென்று சேர்ந்ததும், ஆனந்தியிடம் இரண்டு பெட்டிகளை தந்து எடுத்துவர சொன்னதிலே கிழவி எவ்வளவு டீப்பாக பிளானை போட்டிருக்கிறது என்று புரிந்துபோனது ஆனந்திக்கு.
மொழிதெரியாத ஊரில் இந்த கிழவி அப்படி என்னத்தை கிழிக்கிறது என பார்க்கலாமென பேத்தியவளும் ரயிலிலிருந்து இறங்கி வெளியே வந்தாள்.
வெளியே வந்ததும் டேக்சியை பிடித்து ஒரு ஹோட்டல் அட்ரசை கிழவி தர, அரை மணி நேரத்தில் வாசலிலே போய் இறங்கினர் இருவரும். அந்த ஹோட்டலில் ஏற்கனவே கிழவி புக் செய்திருந்ததால் சுலபமாக அறைக்கு சென்றுவிட்டனர். இருவர் தங்க அந்த அறை போதுமானதாகவே இருந்தது.
கிட்டதட்ட மூன்று வாரங்கள் பாட்டியுன் பேத்தியும் ஜெய்ப்பூர் மற்றும் ராஜஸ்தானில் இருக்கும் வேறு சுற்றுலா தளங்களையும் நன்கு சுற்றி வந்தனர். ஜந்தர் மந்தர், ஹவா மஹால், ராஜஸ்தான் கோட்டை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தின் அழகில் தங்களை தொலைத்தனர் என்றால் மிகையாகாது. தன்னை கடத்தி வந்ததற்காக சண்டை போட்ட ஆனந்தி கூட இங்கு பொழுதை நன்றாக கழித்தாள்.
இரவு நேரத்தில் அந்த ஜல் மஹால் நிலவு ஒளியோடு பலவண்ண மின்விளக்குகளின் ஒளியும் சேர்ந்து நீரில் பிரதிபலித்ததில் பூலோக செர்கமாய் காட்சி அளித்தது.
‘ம்ம் கப்புலா வரவேண்டிய இடத்துக்கு இந்த கெழவியோட வந்து சுத்துரனே’ ஆனந்தி இவ்வாறு மனதிற்குள் நினைத்தாலும், கிழவியால் இந்த இடங்களை பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே என்று மனதிற்குள் மகிழாமலும் இல்லை.
இவர்கள் இங்கே நன்றாக ஊரை சுற்றிக்கொண்டிருக்க, ஊரில் இருக்கும் ஆனந்தியின் வீட்டில் கலவரமே வெடித்திருந்தது. ஊர் சுற்ற போன் தடையாய் இருக்குமென இருவரின் போனையும் கிழவி அமர்த்தி போட்டு வைத்திருக்க, இவர்கள் இருவரையும் தொடர்பு கொள்ள முடியாமல் திணறி விட்டனர்.
சரி நேரிலே சென்று பார்த்து வரலாமென குடும்பமே கிளம்பி இங்கு வந்து பார்த்தால் பாட்டியும் பேத்தியும் எங்கே என்றே தெரியாது அப்ஸ்காண்ட் ஆகியிருந்தனர். எனவே முதலில் போலீசில் புகார் அளித்துவிட்டு குடும்பமே இருவரையும் வலைவீசி தேடிக்கொண்டிருக்கின்றனர்.
அப்படி தேடும்போதுதான் கிழவி வேலைக்கு போவது போன்ற பல அதிர்ச்சிகரமான தகவல்கள் எல்லாம் குடும்பத்தினருக்கு கிடைக்கிறது.
“இந்த கெழவிய என் பொண்ணுகூட அனுப்பாதீங்கன்னு எவ்ளோ தூரம் சொன்னேன் கேட்டீங்களா. இப்ப பாருங்க அது என்ன வேலையெல்லாம் பாத்து வச்சிருக்குன்னு”
ஆனந்தியின் அம்மா ஒருபுறம் அமர்ந்து ஒப்பாரி வைக்க, அதற்கு ஆனந்தியின் அப்பா “என் அம்மாவ குறை சொல்லாத எல்லாம் உன் பொண்ணுதான் எதாவது செஞ்சிருப்பா” மற்றொருபுறம் கத்த, சண்டை கைகலப்பை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.
இப்படி குடும்பம் வெட்டுகுத்து அளவுக்கு இறங்க காரணமான நம் கிழவியோ தன்னுடைய அடுத்த டார்கெட்டான ஆக்ராவை நோக்கி பேத்தியுடன் பயணத்தில் இருந்தது.
அப்படி இவர்கள் சண்டையில் இருக்கும் நேரம் அங்கே ஒருவன் “நீங்க ஆனந்தி அக்காவோட வீட்டு ஆளுங்க தானே” என்றபடி வந்தான். அவர்கள் ஆம் என்று ஒத்துக்கொண்ட பிறகு தொடர்ந்தான் அவன்.
“என் பேரு பரசு, நான் பக்கத்து பிளாக்ல இருக்கேன். நீங்க ஆனந்தி அக்காவையும் பாட்டியையும் தேடிட்டு இருக்கறதா எங்க அம்மா சொன்னாங்க. நான் கொஞ்ச நாள் ஊருல இல்ல, அதான் உங்கள இப்ப பாக்க வந்தேன்”
இவ்வாறு ஆரம்பித்த பரசு கிழவி அன்று தன்னை அழைத்து ஆனந்தியை காரில் ஏத்தியது, அதுபோக கிழவியின் இன்ஸ்டாவில் இருந்த ஊர் சுற்றும் வீடியோவை எல்லாம் காட்டி இப்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என இந்த எண்ணை டிரேஸ் செய்தால் கண்டுபிடித்துவிடலாம் என்று நன்றாக வத்தி வைத்துவிட்டு சென்றான்.
ஏனெனில் இந்த புதிய நம்பரை கிழவி தன் வீட்டில் யாருக்கும் தரவில்லை என்பது வேறு விஷயம். இப்போது இந்த புது நம்பரை கேட்டு வீட்டினருக்கு ஆச்சரியம்.
தங்கள் போனை அவ்வபோது அணைத்து வைத்தாலும் ஆனந்திக்கே தெரியாமல் பலவித போட்டோக்களை கிழவி எடுத்து தன் இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்தது கிழவிக்கே விணையாய் போனது. இத்தனை நாட்கள் கிழவியின் லூட்டியில் வீட்டில் மாட்டி பலமுறை அடிவாங்கிய தாக்கத்தில் போட்டு கொடுத்து சென்றிருந்தான் பரசு.
பரசு கொடுத்த நம்பரை வைத்து கிழவியும் பேத்தியும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீஸ் அதை அப்படியே வீட்டினருக்கு தர, குடும்பம் மொத்தமும் இப்போது ஆக்ராவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.
“ஆனாலும் இந்த கெழவிக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாது. பாரேன் என்னென்ன வீடியேலாம் போட்டிருக்கு”
வீட்டினர் தங்களுக்குள் கிசுகிசுத்துபடி வந்தனர். கிழவியின் அளப்பறையை பார்த்து குடும்பம் மொத்தமும் காண்டில் இருந்தது.
இப்படியே ஒரு ரயிலை பிடித்து குடும்பத்தார் ஆக்ரா வர இரவானது. அங்கே ஆக்ராவில் இருந்த நம் கிழவியும் பேத்தியும் காலையிலிருந்து மாலை வரை ஜம்மா மஸ்ஜித், ஆக்ரா கோட்டை என பல இடங்களை வளைத்து வளைத்து சுற்றிமுடித்தனர்.
மாலை மங்கி இருள் சூழ்ந்த நேரம் சரியாக தாஜ்மஹாலுக்குள் இருவரும் காலடி எடுத்து வைக்க, இரவின் ஒளியில் தாஜ் மஹால் வெள்ளை நிலவாய் பிரகாசித்தது. உள்ளே எல்லாம் சென்று சுற்றி முடித்துவிட்டு ஒருவழியாக வந்து வெளியில் இருந்த மேஜையில் அமர்ந்தனர் இருவரும். கிழவி தாஜ்மஹாலையே உற்று உற்று பார்ப்பதை கண்ட ஆனந்தி
“அப்பத்தா என்ன தாஜ்மஹால இப்புடி உத்து பாக்குற. என்ன செத்துப்போன தாத்தா நியாபகம் வருதா” சற்று கேளியாகதான் கேட்டுவைத்தாள்.
அதற்கு ஒரு பெருமூச்சை வெளியிட்ட கிழவி “அதெல்லாம் ஒன்னுமில்லடி இதுவர என் வாழ்க்கைல கெடச்சத நெனச்சு பாத்தேன்” என்றது.
“என்ன அப்பத்தா பெருசா உன் வாழ்க்கையில இருக்க போகுது. அப்போ என் தாத்தா, அப்பா, சித்தப்பா இப்போ நான் என் அண்ணன் தம்பி. நாங்க எல்லாரும் தானே உன் வாழ்க்கை”
வயதான பிறகு பிள்ளைகள் தானே வாழ்க்கை என்ற எண்ணத்தில் ஆனந்தி கேட்டதில், என்ன நினைத்ததோ கிழவி தன் வாழ்க்கை வரலாறை துவங்கியது.
“அடிபோடி இவளே, நீங்கலாம் என் வாழ்கையில ஒரு பாகம்தேன்டி. ஆனா எனக்குன்னுட்டு ஒரு வாழ்க்கை இருந்துச்சு, இப்பவும் இருக்குது. நான் சின்னதுல பள்ளிக்கூடம் போறப்பலா நான்தேன் மொத மார்க்கு எடுப்பேன். அப்பனு பாத்து ஒருநா என் அப்பன் உன் தாத்தனுக்கு என்னைய கெட்டி வச்சிடாக. ஆனாலும் புடிவாதமா நின்னு அப்பையே பியூசி முடிச்சவடி நானு.
அப்புறம் உங்க அப்பன் சித்தப்பன் வந்தானுங்க. எனக்குன்னுட்டு அவ்வளோ நாலு வாழ்ந்த வாழ்க்கைய விட்டுபுட்டு அவனுங்களுக்காவ வாழ ஆரம்பிச்சேன்.
ஆனா மனசுக்குள்ளார எனக்குன்னுட்டு எதுனா செய்யனுமின்னு எனக்கு நெம்ப ஆசடி. ஆனா உன் தாத்தன் இருந்தான்பாரு சரியான இடிசலுக்கு பொறந்தவன். அவன் அம்மா பேச்ச கேட்டு என்னைய அவ்ளோ பாடாபடுத்துனான்டி. ஆனாலும் என் பிள்ளைகளுக்காவ நான்தேன் இருக்கனுமினுட்டு ஒரு வைராக்கியத்துல வாழ்ந்தவடி நானு”
கிழவியின் பேச்சில் ஒருவித சோகம் இழையோட, ஆனந்தி சற்று இளகிய மனதுடனே கேட்டுக்கொண்டிருந்தாள்.
“பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சு ஒசந்த பதவிக்கு போகனுமின்னு ரொம்ப ஆசப்பட்டேன்டி, ஆனா என்னைய அந்தாளு அந்த சமையகட்ட தாண்டி வரவிடுலடி. அதவிடு ஏன் என் பேரு சுந்தரவடிவழகிடி. அம்புட்டு அழவான பேரு உனக்காவது தெரியுமா. நீயும் என்னைய கெழவினுட்டுதானே கூப்புடுவ.
அதக்கூட நான் பெருசா எடுத்துகலடி. சேரி நம்ம வாழ்க்கதேன் இப்புடி போயிட்டே, நமக்கு வர மருமவ மக்களாவது கொஞ்சம் கெட்டியா பொழக்கட்டுனு நானும் எவ்வளவோ அறிவுரை சொல்லி பாத்தேன்.
எங்க உன் அம்மா சின்னம்மாமாருங்க நான் வாழ்ந்த மாதிரியே ஒரு வாழ்க்கைய வாழுதாக. இவளுக இனி செரிபட்டு வரமாட்டாளுகனுதேன் உன்னைய ஏத்திவிட்டேன்டி.
நீ அப்புடியே என்னைய மாதிரி, சிறுசுல இருந்தே நல்ல சுட்டி. நீ படிச்சு முடிச்சுதும் உனக்கு கல்யாணம் பண்ணுறேன்னு உன் அப்பன் சொன்னப்ப எனக்கு பக்குன்னு போயிட்டது.
விடுவேனா நானு அவன்கிட்ட சண்டைய போட்டு உன்னைய வேலைக்கு அனுப்பி விட்டேன், அதோட நானே உனக்கு தொணைக்கும் வந்தேன்டி”
கிழவி பேசி முடித்த நேரம் ஆனந்தியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துவிட்டது. தன் அப்பத்தாவின் மனதிற்குள் இவ்வளவு இருக்கிறதா என சொல்லொணா அதிர்வுடன் பார்த்திருந்தாள். ஆனால் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத கிழவி தொடர்ந்தது.
“அப்புறம் ஒன்னுடி இந்த வாழ்க்கை உன்னைய பல எடத்துல தொறத்தி அடிக்கும், ஆனா உன் தெகிரியத்தை மட்டும் விட்டுபுடாதடி. அப்புறம் என்னைய மாதிரி பல்லு போன காலத்துல திரும்பி பாத்தா வாழ்கையில சந்தோஷமுனு சொல்லுற அளவுக்கு எதுவும் இருக்காது.
ஆனா ஒன்னு ராசாத்தி, இந்த கெழவி உன்கூட இருந்த இந்த ஒரு வருஷந்தேன் சுந்தரவடிவாவே இருந்தேன்டி கண்ணு. என் வாழ்க்கையில என்னென்ன செய்யனுமின்னு ஆசைப்பட்டேனோ அதையெல்லாம் செஞ்சேன்டி. நான் சுயமா சம்பாதிச்சு அந்த காசுல உன்னைய இப்புடி வெளியூரெல்லாம் கூட்டியாந்திருக்கேன்ல என் மனசு நெறஞ்சு போச்சு ஆத்தா.
நானு அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்டி, இப்ப இங்கனவே என் உசுரு போனாகூட நான் நிம்மதியா போயிருவேன்டி ஆத்தா”
சுந்தரவடிவு கிழவி பேசிமுடிக்கும் நேரம்
“அப்பத்தா பிளீஸ் இப்படியெல்லாம் பேசாத”
“அம்மா”
“அத்தை”
என்று பல குரல்கள் கேட்க அதிர்வுடன் இருவரும் திரும்பி பார்த்தனர். அங்கே சந்தரவடிவின் மொத்த குடும்பமும் நின்றிருந்தது. கிழவியின் போன் சிக்னலை வைத்து தொடர்ந்து வந்த குடும்பத்தார் கிழவி பேசுவதை எல்லாம் கேட்டிருந்தனர்.
ஆனந்தி தன்னை திட்டுவார்களோ என பயந்திருக்க அதற்கு மாறாக மொத்த குடும்பமும் கிழவியை இந்த ஒருவருடம் மகிழ்வுடன் பார்த்துக்கொண்டதற்கு அவளை பாராட்டவே செய்தனர்.
மொத்த குடும்பத்தையும் சேர்த்து பார்த்த கிழவிக்கு அவ்வளவு மகிழ்ச்சி. இரவு ஹோட்டல் அறைக்கு வந்தபின்னும் அவ்வளவு பேச்சு பேசியது கிழவி. பிறந்த பலனை அடைந்த திருப்தியுடன் அன்று இரவு கிழவி தூங்க சென்றது என்றால் மிகையில்லை.
“அப்பத்தா எந்திரி அப்பத்தா பிளீஸ் விளையாடாத”
விடியற்காலையில் ஆனந்தியின் அழுகுரல் எல்லோரையும் எழுப்ப, அனைவரும் பார்த்தது தூக்கத்தில் புன்னகை முகம் மாறாமல் நிரந்தரமாக உறங்கியிருந்த சுந்தரவடிவையே.
இறந்து போயிருந்தாலும் அந்த முகத்தில் தெரிந்த பூரண திருப்தியே இதைவிட ஒரு மகிழ்வான சாவை யாரும் கண்டிருக்கமாட்டனர் என கூறாமல் கூறியது. இந்த வாழ்வில் தன் ஆசை எல்லாம் நிறைவேறிய கலைப்பில் அந்த ஆன்மா நிம்மதியான உறக்கத்தை தழுவியது!