*8*

தன் அறையா இது என்ற வியப்புடன் உள்நுழைந்தவன் அப்படியே ஒரு நொடி நின்றுவிட, தலைகுனிந்து அவனை பின்தொடர்ந்து வந்த கீர்த்தனா லேசாக அவன் முதுகில் மோதி தடுமாறி நின்றாள். 

“பார்த்து கண்ணு…” என்று இயல்பாய் சொன்னவன் புன்முறுவலுடன் கதவை தாழிட்டு வர, படபடப்புடன் தன் சேலை நுனியை பிடித்தபடி நின்றாள் கீர்த்தி.

அவளின் தயக்கத்தை கண்டவன் வெட்கச் சிரிப்புடன் லேசாய் தலைசிலுப்பி அங்கு மேசையில் இருந்த சொம்புப் பாலை அப்படியே குடித்து மீதியை அவளிடம் நீட்டினான். அவள் வாங்காது விழி விரிக்க,

“இதெல்லாம் நீ செய்யணும் கண்ணு… நாஞ் செஞ்சிட்டு இருக்கேன்… குடி.” என்று அவள் கையில் திணிக்க, அதை அவனிடமே தள்ளியவள்,

“எனக்கு வேண்டாம். புடிக்காது.”

நெற்றி சுருக்கியவன் மீதம் பாலை தானே குடித்துவிட்டு மெத்தையில் சென்று அமர்ந்து கொண்டு, “இங்கன வா கண்ணு…” என்று கை நீட்டி அழைத்தான். 

தன்னை நோக்கி நீண்டிருக்கும் கரத்தையும் அதிலிருக்கும் அழைப்பையும் திகிலுடன் பார்த்தவள் தவித்தபடி நிற்க, அந்த தவிப்பில் தள்ளாடிய பாவையின் விழிகளை தயக்கம் என்றெண்ணிய கணவன் அவ்விழிகளை சிறைப்பிடிக்க விழைந்து அவளை நெருங்க, அதை விடுத்து வா வாவென்று அழைத்த அவள் கன்னத்தை கைகளில் ஏந்திக்கொண்டான்.

அவன் தொடுகையில் இருந்த மென்சூடு அவளுக்கு தீயாய் தகிக்க, பட்டென்று பின் சென்றாள். அவளின் விலகல் மோகத்தின் வாயிலில் இருந்தவனுக்கு புரியாது போக, இரண்டடி முன் சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தான் அஞ்சன். அவன் செயலில் அவளது உடல் நடுங்க, உதடுகள் துடிக்க, விதிர்விதிர்த்து போனாள் கீர்த்தனா. அவள் அதிர்ந்து நின்றதை கவனியாத அஞ்சன்,

“இது… இது ஒரு மாதிரி நல்லா இருக்குல்ல… அப்படியே எதோ ஜிவ்வுனு ஏறுது…” முதல் தீண்டலில் சிலாகித்தவன் மீண்டும் அவளை நெருங்கி அவள் கழுத்தில் முகம் புதைத்து, கரங்களை இடையில் கொடுத்து இடை வளைத்து கிடைத்த இடத்தில் மீண்டுமொரு முத்தம் அழுத்தமாய் இட, நெருஞ்சி முள்ளாய் குத்திய அந்த இதழ் ஒற்றலை சகிக்க முடியாது அவனை உதறித் தள்ளி அப்படியே மடிந்து அமர்ந்தாள் கீர்த்தனா.

அவன் உரசிய இடமெல்லாம் உப்பிட்ட காயமென எரிச்சல் உண்டாக்க, அடிவயிற்றிலிருந்து கேவல் வெடித்துக் கிளம்பியது. கால்களை குறுக்கி மடித்து அமர்ந்தவள் முட்டியில் முகம் புதைத்து விசும்ப, தன் எதிரே உடல் குலுங்கி அழுபவளைக் கண்டதும் மோகம் கலைந்து பதறி அவளை நெருங்கினான் அஞ்சன்.

“என்னாச்சு கண்ணு? அழாத… ஏன்? நான்… நான்…” அதற்கு மேல் வார்த்தை தர்க்கம் செய்தது அவனுக்கு.

என்ற மேல தான் தப்பு. அம்மணி விருப்பம் கேட்காம உரிமை எடுத்துக்கிட்டேனா? அம்மணிக்கு பிடிக்கலையோ? பொண்டாடியாவே இருந்தாலும் அம்மணி என்ன நினைக்குதுனு கேக்காம அவளை புரிஞ்சிக்காம என்ன செய்ய இருந்தேன்? என்ன மடத்தனம் செஞ்சி வச்சிருக்கேன்? குற்றவுணர்ச்சி மெல்ல அவனை சூழ்ந்துக்கொள்ள தவிப்புடன் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

“மன்னிச்சிடு கண்ணு… நான் அப்புடி பண்ணி இருக்க கூடாது…” என்று அவன் பலமுறை வேண்டியும் அவளது கண்ணீர் நிற்காது வழிந்தது.

“இனிமே இப்புடி பண்ண மாட்டேன் கண்ணு…” என்று இறுதியில் கெஞ்ச அதுவும் வேலை செய்யவில்லை காதல் தோல்வியில் துவண்டிருந்த பாவையிடம்.

“பேசு கண்ணு… இப்படி அழுதா மனசுக்கு கஷ்டமா இருக்கு.” மணமான அன்றே அவளை அழ வைத்துவிட்ட குற்றவுணர்ச்சி மெல்ல குறைந்து கடுப்பு எட்டிப்பார்த்தது.

“என்ற பொண்டாடினு உரிமை எடுத்துகிட்டேன் அதுக்கு இப்போ என்ன பண்ணனும்னு சொல்ற?” பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் பொறுமை காற்றில் கரைந்துவிட கனிவும் தவிப்பும் மறைந்து அவன் குரல் உயர்ந்தது.

திடுமென உயர்ந்த அவன் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்த கீர்த்தனா மிரட்சியுடன் அஞ்சனை ஏறிட்டாள்.

“கண்ணாலம்னா எல்லாமும்தானு தெரியாம கண்ணாலம் பண்ணியா என்ன?” என்று அஞ்சனும் விடாமல் எகிற, துடித்த உதடுகளை அடக்கி கேவலை விழுங்கி விசும்பினாள் கீர்த்தனா.

அவளின் இதயத்துடிப்பு பன்மடங்கு பெருகி அவனுக்கு கேட்டு விடுமோ என்ற ஐயத்தை அவளுள் எழுப்ப, விசும்பல் வெளியே வராதபடி வாய்பொத்தி அமர்ந்த வாக்கிலேயே பின் நகர, அவள் மடியில் கை வைத்து தடுத்தான் அவன்.

அவள் விழியிலும் உடல்மொழியிலும் வெளிப்பட்ட மிரட்சியும் தயக்கமும் அவனை உருக்க சட்டென சாந்தமானவன், “நான் உன்ற கூட எப்புடி எப்புடியோ வாழணும்னு கனவு கண்டிருக்கேன் கண்ணு… அதெல்லாம் புரியலையா உனக்கு? இல்லை என்னை உனக்கு புரிய வைக்க தெரியலையான்னு தெரில…” வருத்தம் மேலிட விழுந்த அவனது சொற்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு,

“புடவை எடுக்க வரும் போது குடுக்கலாம்னு உனக்காக வாங்குனேன்.” என்று ஒரு பை எடுத்து வந்து நீட்டினான். கொஞ்சம் இலகுவாள் என்று நினைத்து அவன் பரிசை நீட்ட, அதை வாங்கக்கூட தோன்றாது கண்ணில் தேங்கிய நீருடன் கீர்த்தி அவனையேக் கண்டாள். 

அஞ்சன் விரல் தானாக உயர்ந்து அதை துடைக்கப் போக முகத்தை பின் இழுத்துக் கொண்டாள் அவள். வெளிப்படையாய் அவன் முகம் தொங்கி, ஏமாற்றம் வந்து அமர்ந்துகொண்டது.

“என்.. ன… புடிக்…. புடிக்கலையா?” ஒவ்வொரு முறை மனதை நெருங்க முயற்சிக்கும் போதும் அவள் எவ்வளவு விலகிச் சென்றாலும் இந்த கேள்வியை அவளிடம் கேட்டிடவே கூடாது என்ற நோக்கில் தான் என்னை பிடிச்சிருக்கா என்ற வினாவை கூட இதுவரை அவன் வினவியதே இல்லை. அவள் பிடிகொடுக்காது பேசிய போதும் அவளுக்கு அவகாசம் கொடுத்தான்.

ஆனால் இன்று அவளின் உணர்வுகள் வெளிப்படும் விதம் அவனை ஐயம் கொள்ளவே செய்தது. மனது வலித்தாலும் அக்கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. 

பிடித்திருக்கிறது என்று சொல்ல வில்லையென்றாலும் பரவாயில்லை பிடிக்கவில்லை என்று மட்டும் சொல்லி விடாதே என்று அவன் மனம் இலட்சம் வேண்டல் வைத்தது தன் இஷ்ட தெய்வத்திடம். 

அவனின் எக்கேள்விக்கும் வாய் திறவாதவள் இதற்கு மட்டும் உடனே நா மலர்ந்து பதில் அளித்துவிடுவாளா என்ன?

அறையை நிறைத்திருக்கும் மலர்களின் மணமும் நாவை சீண்டிப்பார்க்க தூண்டும் பழங்களும் இனிப்புகளும் அவ்வறையில் இருப்போரின் நிலையை சிறிதும் மாற்றவில்லை. அவனின் பொறுமை கரைய அவளின் அமைதியும் நிலைக்க,

“கீர்த்தி…” அழுத்தமாய் வந்த அழைப்பு இனி கொஞ்சிக் கொண்டு இருக்க மாட்டேன் என்றது. 

“என்ற வாழ்க்கையில நான் ஆசைப்பட்டபடி நடந்த முத விஷயம் நம்ம கண்ணாலம் தான். அதை இப்புடி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அனுபவிக்க வுடாம பண்ணாத.” என்றவன் விரல்கள் அவளது கன்னத்தை இறுகப் பற்றியது.

‘ஆனா நான் ஆசைப்பட்ட விஷயம் என்னை ஏமாத்திடுச்சே.’ ஏமாற்றத்தின் வலியை கடக்க முடியாது தவித்த பாவையின் விழிகளில் குளம் கட்டிய கண்ணீர் கீழே விழ விழ வற்றாது மீண்டும் ஊறி ஊறி அவனை எரிச்சல் படுத்த, பற்றியிருந்த கன்னத்தை அருகே இழுத்தவன் தானும் நெருங்கி மூக்கோடு மூக்குரசினான்.

“எனக்கு சொந்தமானதை கொண்டாடனும்னு நினைச்சேன். அது உனக்கும் புடிக்கணும்னு நினைச்சேன். புடிக்காட்டியும் பரவாயில்லைன்னு இப்போ தோணுது.” 

‘என்ன சொல்கிறான் இவன்?’ என்ற அவளது சிந்தையின் கேள்விக்கு பதிலாய் இருந்தது அவனின் அடுத்தடுத்த செயல். அவளது அதரங்களை அங்கங்களை அவனது இதழ்களும் கரங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆக்கிரமிக்க தன்னால் இருவரும் தரையில் விழுந்திருந்தனர். 

எழ முயற்சித்தவளை தன் உடல் கொண்டு தரையில் அமிழ்த்தி அவன் முன்னேறிக்கொண்டே செல்ல, தன் முழு பலம் கொண்டு காலால் அவனை எட்டி உதைத்தாள் கீர்த்தனா. ஆசை மோகத்திலும் மீயுடைமையிலும் தறிகெட்டு ஓடிய அவனது செயல்கள் யாவும் அதிர்ந்து அப்படியே அமிழ்ந்தது அவள் உதைத்ததில். 

அவனது முரட்டு பிடியில் இருந்து விடுபட்டு ஆசுவாசப்பட்டவள் தடுமாறி எழுந்து சீறும் பாம்பாய், “மனுஷனாடா நீ? கட்டின பொண்டாடிகிட்ட இப்பிடியா நடந்துப்ப? ச்சீ…” என்றிட, அஞ்சனின் குருதி கொதித்து நாளங்களில் வேகமெடுத்தது.

“யாருடி பொண்டாட்டி? நீயா… நீயா?” என்று பாய்ந்து அவள் கரத்தை பிடித்து அழுத்தினான் அஞ்சன்.

அவன் பிடியிலிருந்து கையை உருவ முயற்சித்துக் கொண்டே “விடு கையை…” என்று அவள் விடுபட முயல அவன் அவளை இன்னும் நெருங்கி வந்தான். 

பஞ்சும் நெருப்பும் பற்றிக்கொள்ள தயாராய் இருக்க, முரணாய் கணவன் ஆசையில் பற்றிக்கொள்ள சந்தர்ப்பம் பார்த்து நிற்க, மனைவி கணவனை அந்த நெருப்பில் அவனை சாம்பலாக்கும் துவேஷத்தில் இருந்தாள்.

“உன்ற மனசுல என்ன இருக்குன்னு எங்கிட்ட சொல்ல மாட்ட… என்ற கூட பழக மாட்ட… ஆனா ஊர் ஒரம்புற முன்னாடி தாலி வாங்கி கிட்டு பொண்டாட்டின்னு வாய்கிழிய சொன்னா ஆச்சா? நீ முதல்ல புருஷனுக்கு பொண்டாட்டியா இரு அப்புறம் எடுக்கலாம் பாடம் நான் எப்படி உங்கிட்ட நடந்துகணும்னு…” 

கோபமாய் வார்த்தைகளை துப்பியவன் மேல்சட்டையை கழட்டி தூக்கி எறிந்துவிட்டு அவ்வறையில் போடப்பட்டிருந்த புது கட்டிலில் சென்று பொத்தென்று கவிழ்ந்துவிட்டான். 

இத்தனை வருட ஏக்கத்திற்கு விடையாய் தனக்கே தனக்கென மனைவி என்ற உறவு வந்துவிட்டாள் என்ற உணர்வை மனதில் நிறைத்து உணரக்கூட முடியாமல் செய்தவளை உடலால் நெருங்கவும் பிடிக்கவில்லை அவனுக்கு. அவள் மனதில் இருப்பதை எப்படியாது வெளிக்கொணர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் யோசியாமல் சற்று சறுக்கி வரம்பு மீறியிருந்தாலும் கீர்த்தனா மீதிருந்த ஆசை ஆவல் இன்னும் குறையாது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அதை அணைக்க முடியாது தவிப்புடன் புது மெத்தையில் முகம் புதைத்து படுத்திருந்தான்.

அவனுக்கு சற்றும் குறையாத தவிப்புடன் நிலைகுலைந்து இருந்தாள் கீர்த்தனாவும். கலைந்திருந்த உடையை சரி செய்தவள் முடியை காதுக்கு பின் ஒதுக்கி பொத்தென அப்படியே தரையில் அமர்ந்தாள்.

அஞ்சன் அவளிடம் நடந்துகொண்ட விதம் அவள் கிஞ்சித்தும் எதிர்பாராதது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னிடம் பேச விழைபவன் இன்று இப்படி செய்துவிட்டான் என்பதை செமிக்கவே முடியவில்லை. 

இத்தனை நாள் எப்படியோ இன்று அவன் பேசிய விதமும் வன்மையாய் நெருங்க முயற்சித்ததையும் பார்த்து அனுபவித்த பின் எதிர்காலம் பூதாகாரமாய் அவளை பயமுறுத்தி நின்றது. 

அருண் பின் சென்று அஞ்சன் வந்து அமர்ந்துகொண்டான் நினைவு அடுக்குகளில். அவனை எப்படி எதிர்கொள்வது. அவன் நெருக்கங்களை எப்படி தவிர்ப்பது. அவனது கேள்விகளை எப்படி சமாளிப்பது என்று அகம் முழுதும் ஆக்கிரமித்து அவள் தூக்கத்தையும் திருடினான் அஞ்சன். 

இத்தனை களேபரத்திற்கும் தன் அமைதியே சும்மா இருந்தவனை உசுப்பிவிட்டது என்பது மட்டும் அவளுக்கு விளங்கவே இல்லை. அவனது கேள்விகளுக்கு ஒழுங்காய் வாய் திறந்திருந்தாலே அவ்விரவில் இருவருக்கும் ஏற்பட்ட மனஉளைச்சல்களை தடுத்திருக்கலாம். யார் கண்டது அவனே அவளுக்கு ஆதரவாய் கூட இருந்திருக்கலாம்… 

காதல் கொண்ட மனது கரை சேரத் துடிக்க, காதலை இழந்த மனது யாருமற்ற மோனத்தை நாட, இருவரின் அவாவும் நிராசையுடன் கைகோர்த்து சேர்ந்து கொண்டது.