“நான் வரலைமா… என்னால இதெல்லாம் ஏத்துக்க முடியல.” பரிசத்துக்கு புடவை எடுக்க வரமாட்டேன் என்று மறுக்கும் மகளை கட்டாயப்படுத்த விரும்பாது தயங்கி நின்றார் கமலம்.
“இப்படி சொன்னா எப்படி கீர்த்தி? நீ வரலைனா நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்றது?”
“எதாவது சொல்லுமா… ஏதேதோ பண்ணி கல்யாணம் வரைக்கும் கொண்டுவந்துட்டீல்ல இதையும் சமாளி.” மறுப்பிலிருந்து முடிவை மாற்றும் எண்ணமின்றி விட்டேற்றியாய் பேசினாள் கீர்த்தனா.
“அவனையே நினைச்சிட்டு இருந்தா இந்த வாழ்க்கை நரகமாகிடும் கீர்த்தி. மறக்க முயற்சி பண்ணு. இப்புடி மாப்பிள்ளையும் அவங்க வீட்டு ஆளுங்களை பாக்குறதையும் தவிர்த்தா எப்படி மறப்ப? திரும்ப திரும்ப பழசு தான் நியாபகம் வரும்.” அனுபவம் பேச,
அன்னையிடம் தன் காதலை சொல்லாமல் இருந்திருந்தால் திருமணப் பேச்சையே எடுத்திருக்க மாட்டார். அருண் சொன்னது போல் இன்னும் கொஞ்ச நாள் தள்ளிப் போட்டிருந்தால் இது எதுவுமே நடக்காது இருந்திருக்குமோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளால். காலம் கடந்த யோசனை.
“மறந்துடுனு சுலபமா சொல்ற. இவ்வளவு நாள் நான் கனவு கண்டு எதிர்பார்த்து காத்திருந்த வாழ்க்கை நிராசை ஆகிடுச்சுனு இன்னொருத்தரை உடனே அந்த இடத்துல நிறுத்தி எல்லாத்தையும் ஏத்துக்கோன்னா எப்படி முடியும்? உன்னால முடிஞ்சுதா?” பிசிறில்லாமல் அழுத்தமாய் கேள்வி கமலத்தை நோக்கி பாய,
“இன்னொருத்தரை நம்பி திரும்ப ஒரு வாழ்க்கைக்குள்ள நுழையுறதுக்கு எனக்கு தைரியம் இல்லை கீர்த்தி. அப்போ நீயும் இருந்த எனக்கு… உன்னையும் பாக்கணும்ல எப்படி நம்பிக்கை வரும் சொல்லு?” எதிர்கேள்வி எழுப்பினார் கமலம்.
“அப்போ நான் மட்டும் எந்த நம்பிக்கையில கல்யாணம் பண்ணிக்கிறது? நீ நின்ன அதே இடத்துல நானும் நிக்குறேன் இப்போ…” என்கையிலேயே கோடாய் கீழிறங்கி கீர்த்தியின் கன்னத்தை நனைத்தது கண்ணீர்.
காதல் ஏமாற்றிவிட்டது. காதலன் என்று இருந்தவன் துரோகியாகிவிட்டான். இப்போது புதியதாய் அந்த காதலன் இடத்தை நிரப்ப இவர்கள் ஆள் கொண்டு வந்து நிறுத்தினால் நான் அவனைக் கொண்டு அவ்விடத்தை நிரப்ப வேண்டுமா? இதில்லை என்றால் என்ன உடனே இன்னொன்று என்று மாற்ற சட்டையா அது?
“மூழ்க இருந்த எனக்கு துடுப்பா மாறி வாழுறதுக்கு வழி காட்ட நீ இருந்த கீர்த்தி. உனக்கு அப்படி இல்லை. என் காலத்துக்கு அப்புறம் நீ தனியா நிக்கணும். தனியா இருக்குறதோட வலி எனக்கு தெரியும்டா. அதான் மாமா சொன்னதும் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். இப்போ கஷ்டமா இருக்கும் போக போக எல்லாம் சரியாகிடும்.” என்று மகளை சமாதானம் செய்ய முயன்றவர்,
“ரொம்ப நேரம் அங்க இருக்க வேணாம். உனக்கு புடவை எடுத்ததும் வேலைக்கு போகணும்னு சொல்லி உடனே கிளம்பிடலாம்.” என்று சலுகையும் வழங்க,
“இப்போவே கல்யாணம் கண்டிப்பா பண்ணிக்கணுமா? கொஞ்ச நாள் போகட்டுமே!” என்று இறைஞ்சிய மகளைக் காணவும் அவசரப்பட்டு விட்டோமோ என்ற எண்ணமே கமலத்திடம்.
தன் எண்ணத்தை மகளிடம் காட்டிக்கொள்ளாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தவர் தன் அண்ணனுக்கு அழைத்து, “கல்யாணத்தை ஏத்துக்க முடியாம அல்லாடுறா அண்ணா. இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே…” என்று மகளுக்கு பரிந்து பேச விலகல் தன்மையுடன் வந்தது அவர் அண்ணனின் பதில்.
“இதுக்குதான் மாப்பிள்ளை பாக்குறதுக்கு முன்னாடியே தெளிவா சொன்னேன். உறுதியா இருன்னு. மாப்பிள்ளை வீட்டுல கல்யாண வேலை ஆரம்பிச்சிட்டாங்க. இப்போ போயி வேண்டாம்னு சொன்னா உன்னை மாதிரி தான் கீர்த்தியும் ஊர் வாயில அவலா மெல்லுபடுவா…
ஒத்த பொண்ணை தனியா வச்சிட்டு நீ வாங்குன ஏசு பேச்செல்லாம் மறந்து போச்சா? அந்த பேச்செல்லாம் உன் பொண்ணும் கேக்கணும்னு ஆசைப்பட்டீன்னா நான் மாப்பிள்ளை வீட்டுல பேசுறேன். கல்யாணம் நின்னு போச்சுன்னா அவங்களுக்கு எதுவும் இல்லை கீர்த்திக்கு தான் பாதிப்பு. அவ காதல் விவகாரம் வெளில வந்துச்சுனா நாளைக்கு எப்புடி நல்ல வரன் வரும்? எல்லாத்தையும் யோசிச்சிட்டு சொல்லு.” என்று போனை வைத்துவிட, திக்கு தெரியாது விழித்தார் கமலம்.
அதற்குள் ஒருவாராய் தன்னை சீர்படுத்திக்கொண்டு வந்த கீர்த்தியும், “போலாம் மா… நான் ஏமாந்ததுக்கு நீ என்ன பண்ணுவ? கல்யாணம் செய்யணும்னு நான் தானே எல்லாத்தையும் ஆரம்பிச்சேன் ஆரம்பிச்சதை நானே முடிச்சி வைக்குறேன். என் காதல் தோத்துருச்சு உன் முடிவும் மாமா முடிவும் சரிதானானுன்னு பாத்துடுவோம்.” தன் வாழ்க்கையையே பணயம் வைக்க முடிவெடுத்து திருமணத்திற்கு தயாராக சம்மதித்தாள்.
ஆனால் அஞ்சனை அன்று கண்டுவிடக் கூடாது என்று அனைத்து தெய்வங்களையும் வேண்டியபடி செல்ல, அவள் வேண்டுதல் நிறைவேறியது. அன்று வேலைக்கு லீவு எடுக்க முடியாததால் காலை வேலைக்குச் சென்று சிறு வேலைகள் செய்துவிட்டு பர்மிஷன் மட்டும் சொல்லிவிட்டு கிளம்பியவன் கடைக்கு வருவதற்குள் கீர்த்தனா புடவை எடுத்து கிளம்பி இருந்தாள்.
“நாந்தான் வந்துடுவேன்னு சொன்னேன்ல பொறவு ஏன் கீர்த்தியை போக வீட்டீங்க குருங்கை?” ஏமாற்றமும் கோபமுமாய் நின்ற அவனைக் காண பாவமாய் இருந்தது குருங்கைக்கு.
“உங்களை மாதிரி கீர்த்திக்கும் லீவு கிடைக்கலையாம். பெர்மிஷன் போட்டு வந்திருக்காங்க. புடவை எடுத்ததும் கிளம்பிட்டாங்க.”
கோவையில் புடவை எடுப்பதாய் முடிவாகியிருக்க, கீர்த்தியும் கமலமும் திருப்பூரில் இருந்து கோவைக்கு பஸ்ஸில் வந்து திரும்பி விட்டிருந்தனர்.
“வெய்ட் பண்ண சொல்லி இருக்கலாம்ல?” ஏக்கம் ஏகத்திற்கு இருந்தது அவன் சொற்களில்.
“ஏன் அந்த புள்ள உங்ககிட்ட வேலை இருக்குனு சொல்லலையா கொழுந்தனாரே? போன்ல பேசுறீங்கதானே ரெண்டு பேரும்? உங்களை பாக்கணுங்குற ஆர்வம் அங்கிட்டு இல்லை போலவே?” என்று இடை புகுந்த நடுநங்கையிடம் கீர்த்தியை விட்டுக்கொடுக்க விரும்பாத அஞ்சன்,
“என்னவோ சொல்றீங்க நானும் நிசமுன்னு நம்புறேன்… கையில என்ன கொழுந்தனாரே?” என்று எட்டிப் பார்க்க, பையை தன் பின் மறைத்தவன், “வேலை செய்யுற இடத்துல குடுக்க வேண்டியது.” என்றதோடு மெல்ல நழுவி தன் அன்னையிடம் சென்று நின்றுகொண்டான்.
வீட்டில் இருக்கும் அனைவருக்கும் துணி எடுத்துவிட்டு அவர்கள் அந்நாளை முடித்துக்கொள்ள, அதிருப்தியுடன் சுற்றிக்கொண்டிருந்த அஞ்சன் இரவு கீர்த்தியை அழைத்து காய்ந்துவிட்டான்.
“ஏன் நேரமே கிளம்பிட்ட? நான் வரவரைக்கும் இருக்க முடியாதா?” கோபமாய் வந்து விழுந்த அவன் வார்த்தைகளுக்கு ‘உன்னை தவிர்க்கவே கிளம்பிவிட்டேன்’ என்றா சொல்ல முடியும்?
“பதில் சொல்லு கண்ணு. போன் பண்ணா சரியா பேச மாட்டேங்குற நேர்ல பாக்கலாம்னா ஏதாவது காரணம் சொல்லி கிளம்பிடுற… என்ன பிரச்சனை உனக்கு? இத்தினி நாள் சின்ன பொண்ணு தயங்குறேன்னு நினைச்சேன். ஆனா என்னை பாக்க கூட உனக்கு ஆர்வமில்லை.”
“இல்லை எனக்கு வேலை இருந்துச்சு… லீவ் கிடைக்கல…” என்று தயங்கித் தயங்கி பதில் பேசியவள் மென்குரலில்,
“அவங்ககிட்ட சொல்லிட்டா போதுமா? எங்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோனலைல… அப்படி என்ன தயக்கம் உனக்கு? நான் என்ன பண்ணிடுவேன்னு எங்கிட்ட முகம் கொடுத்து பேச மாட்டேங்குற?” நடுநங்கை ஏவிய கேள்வி இவளிடம் நன்றாய் பாய்ந்தது.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.” என்று ஒரு பேச்சுக்காய் அவள் சொன்னாலும் அவன் நிறுத்துவதாய் இல்லை.
“என்ன ஒன்னும் இல்லை? என்ன பிரச்சனைனு சொன்னாதான் தெரியும்.”
“நான் இனிமே பேசுறேன்.” வேறு எப்படி சமாளிக்கவென்று தெரியாது விழி பிதுங்கி நின்றாள் கீர்த்தனா.
அவள் அப்படிச் சொன்னதே அவனுக்கு தேனாய் இனிக்க சட்டென்று இதழில் வந்து ஒட்டிக்கொண்டது புன்னகை. “சரி பேசு கண்ணு.” என்றான் இலகுவாய்.
“என்ன?” திணறல் அவளிடம்.
“பேசுறேன்னு சொன்னியே கண்ணு… நீ பேசு நான் கேக்குறேன்.” என்றபடி நன்றாக அவன் அறை சுவற்றில் சாய்ந்து கதை கேட்கும் பாவனையில் அமர்ந்து கொண்டான்.
ஆனால் அவள் பேச வேண்டுமே! விருட்சமாய் அவளுள் பெருகியிருந்த காதல் வேர் மொத்தமாய் அதன் இடத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்டிருந்தாலும் ஈரம் இன்னும் அதனுடன் உரசிக்கொண்டு இருந்ததே. அந்த ஈரம் அஞ்சன் என்ற தனிப்பட்டவன் மீது எவ்வித நாட்டமும் செல்லாதபடி பார்த்துக்கொண்டது. அதை எங்கனம் அவனுக்கு புரிய வைக்க?
“பேசுறேன்னு சொல்லிட்டு அமைதியாகிட்ட கண்ணு…” நிதானத்தை இழுத்து பிடித்து அவளை அவன் பேச ஊக்க, அது அவளை எரிச்சல்படுத்தியதே மிச்சம்.
“பேசு பேசுன்னு சொன்னா என்ன பேசுறது? எப்படி பேசுறது? சும்மா எப்போ பாத்தாலும் பேசணும் பேசணும்னு தொல்லை பண்றீங்க. என்னால முடிஞ்சா நான் பேச மாட்டேனா?” கீர்த்தனா எகிற,
‘பேச சொன்னது ஒரு குத்தமா? பேசி பழகினால் தானே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியும்’ என்ற எண்ணத்தை அடக்கி, “சரி சரி ரொம்ப கோவப்படுற கண்ணு. அமைதியா இரு நான் எதுவும் சொல்லல. நல்லா தூங்கு. அப்புறம் பேசலாம்.” அஞ்சன் அடங்கிப்போனான்.
அவளும் இதுதான் சாக்கென்று திருமணம் வரையிலும் பிடிகொடுத்து பேசாது ஓட்டிவிட்டாள். திருமணத்திற்கு முந்திய நாள் பெண்ணழைக்கவென அஞ்சன் வீட்டு சார்பில் ஒரு படையே திருப்பூர் சென்று அம்மா, மகள், தாய்மாமன் குடும்பத்தை கையோடு அழைத்து வந்தனர்.
“கொஞ்சம் சிரிச்சாப்புல இருடி…” என்பதே திரும்ப திரும்ப கீர்த்தியின் செவியில் அவள் அன்னையால் ஓதப்பட, இதழோரத்தை சிரமப்பட்டு இழுத்துப் பிடித்து பொம்மை போல் அனைவர் இழுப்புக்கும் இசைந்து நடந்தாள். மனம் ரணமாகியிருக்க மணமகளாய் நிற்க வேண்டிய சூழ்நிலையை எண்ணி எண்ணி மறுகுவதைத் தவிர வேறொன்றும் அவளால் செய்ய இயலவில்லை.
அந்த சுபமுகூர்த்த நன்னாளில் நெருங்கிய அங்காளி பங்காளி என்று குறைந்த எண்ணிக்கையில் அழைப்பு விடுத்திருந்தாலும் அந்த பெரிய மண்டபம் முழுதும் கூட்டம் நிரம்பி இருந்தது. முந்திய தின இரவு இன்னாருக்கு இன்னார் தான் என பெரியோர்கள் முன் மீண்டும் உறுதி செய்து சாங்கியங்கள் நடைபெற, குறித்த நேரத்தில் மணமகள் அறைக்கு நேரெதிராய் பரபரப்பாய் இருந்தது மணமகன் அறை.
“சோத்தாங்கை பக்கம் போடணும்…” அடித்துச் சொன்னான் பெரியவன்.
“என்ற கண்ணாலத்துல லெப்ட்ல தான் போட்டாங்க… டேய் அஞ்சு லெப்ட் சைட் போடுடா…” என்று மறுத்தான் நடுவன்.
“தப்பா போட்டிருக்கேன்னு உன்ற கண்ணாலத்துலேயே அப்பா சொன்னாரு… நீ சோத்தாங்கை பக்கம் போடுடா.”
“எதுக்கு அடுச்சுக்குறீங்க? நான் போய் அப்பாவையே கேட்டுட்டு வரேன்.” என்றான் மற்றொருவன்.
பட்டு வேட்டி சட்டையோடு வரும் துண்டை எந்த பக்கம் போட வேண்டும் என்று அண்ணன்கள் அடித்துக்கொள்ள கடுப்புடன் நின்றான் அஞ்சன்.
‘இந்த அருண் பய இருந்திருந்தா இவனுங்கள விரட்டி வுட்டிருக்கலாம்.’ என்று மனதிற்குள் புகைந்தவன் தன் பெரிய அண்ணனிடம், “என்ற கண்ணால நேரத்துல எதுக்கு அருணை திருப்பூருக்கு அனுப்புன?”
“திருப்பூர்ல புதுசா கடை ஆரம்பிக்க போறோம். நம்பிக்கையான ஆள் அங்க போய் வேலையை பார்த்துக்கிட்டா வசதியா இருக்குமுனு அவனை கேட்டேன். போறேன் சொன்னான். ஆனா கண்ணாலத்துக்கு ஏன் வரலை?” என்று எதிர்கேள்வி கேட்டான் பெரியவன்.
“அவனுக்கு வெளியூருல வேலை கொடுத்து அனுப்பிட்டு அதுக்கு லீவு குடுக்காம அவன் வரலையான்னு என்னைய கேக்கற? அவ்வளவு அக்கறை இருந்தா அவனுக்கு லீவ் குடுத்திருக்க வேண்டியதுதானே?” வாதிடவே செய்தான் அஞ்சன்.
“நான் என்னமோ லீவு குடுக்காத மாதிரி பேசுற… இன்னைக்கு முக்கியமான ஆர்டர் கிடைக்குற மாதிரி இருக்கு நான் பாத்துக்குறேன்னு அவஞ் சொல்லவும் நானும் சரின்னுட்டேன்.”
“இப்போ இதுவா முக்கியம்? மூகூர்த்தத்துக்கு நேரமாகுது.” என்று இன்னொருவன் துரிதப்படுத்த,
இவர்களிடமிருந்து தப்பித்தால் போதுமென மாலையை தானே போட்டுக்கொண்டு அறையை விட்டு விடுவிடுவென அஞ்சன் வெளியேற, அவனின் செயலில் அதிர்ந்து, “தனியா போய் மானத்தை வாங்காதடா அஞ்சு…” கத்திக்கொண்டே அவனை பின்தொடர்ந்து அவனுடன் சேர்ந்துகொண்டனர் அண்ணன்மார்கள்.
மணவறையில் சென்று அமர்ந்தவுடன் எரிச்சல் பின்சென்று ஆவல் பெருக, அஞ்சனின் பார்வை மணமகள் அறை நோக்கி அவ்வப்போது சென்று வந்தது. அவனுக்கு அவள் என்று முடிவாகி மாதங்கள் இரண்டு ஓடியிருக்க அதற்கேற்ப இதுவரை இருமுறை மட்டுமே பார்த்தவளை மணக்கோலத்தில் காண ஆர்வம் ஆர்ப்பாட்டமாய் வந்தமர்ந்தது.
“கொஞ்சம் அடக்கி வாசிடா அஞ்சு… பொண்ணை உன்ற பக்கத்துல தான் வுக்கார வப்பாங்க…” எந்த அண்ணனின் கேலிக்குரல் என்று பிரித்தறிய முடியாத வண்ணம் அஞ்சனின் கவனம் முழுதும் தன்னவள் வருகையை எதிர்நோக்கி இருக்க, அவனின் ஆவல் சற்று குறைந்து யோசனை வந்து ஒட்டிக்கொண்டது அவளைக் கண்டவுடன்.
“முகமே சரியில்லை சோர்வா இருக்க கண்ணு. என்னாச்சு? எல்லாரும் ரொம்ப படுத்திட்டாங்களா?” என்று அவளிடம் மென்குரலில் கேட்டே விட்டான் அஞ்சன்.
“தாலியை கட்டிட்டா காலம் பூரா பேசலாம். இங்க கவனிங்க மாப்பிள்ளை தம்பி.” என்ற ஐயரின் குரலில் அசடு வழிந்த அஞ்சன் கவனத்தை அவர் புறம் செலுத்தி அவர் சொல்வதை செய்ய, இந்த சூழ்நிலையை சாதகமாக்கி குனிந்த தலை நிமிராது அவனை ஏறெடுத்தும் பார்க்காது தாலி வாங்கினாள் கீர்த்தனா.
அடுத்தடுத்து சாங்கியங்கள் வரிசை கட்டி நிற்க அதற்கு மேல் அவளிடம் பேச நேரம் கிடைக்காது அவன் அமைதியாகிவிட, அவளின் இறுக்கத்தை மேலும் இறுக்கிட வந்தது அந்நாளின் அந்திப்பொழுது. உரிமை கிட்டிய உவப்பில் அவன் நெருங்க, உவகை தொலைத்த ஊழ்த்துணை திமிறினாள் அவன் நெருக்கத்தை ஏற்கமுடியாமல்.