உண்டு உறங்குதல் பற்றிய பேச்சுக்கள் மட்டுமே பிரதானமாய் இருக்க அதற்கு மேல் பேச அவள் இடம் கொடுக்கவில்லை என்பதை உணரவில்லை அஞ்சன். நேரமில்லை என்று நினைத்துக்கொண்டு தனக்கே தனக்கென உறவாக வரப்போவளிடம் நெருங்கி உறவாடமுடியாமல் தவித்தான் அவன்.
“இம்புட்டு வேலை செய்யணுமா கண்ணு? என்கூட பேசவே உனக்கு நேரம் இருக்க மாட்டேங்குது. கிடைக்குற நேரத்துலேயும் நாந்தான் பேசிட்டு இருக்கேன். ஏதாவது கேட்டா ஒருவார்த்தையில் பதில் சொல்ற…” என்ற அவனின் புலம்பலை இந்த இரண்டு நாட்களாய் கேட்டு சலித்திருந்தவள் எப்போதும் போல் அமைதியை கையில் எடுத்தாள்.
அவளின் அமைதிக்கு அவனே காரணம் கற்பித்துக்கொண்டு, “சோர்வா இருக்கா கண்ணு? உன் வேலை நேரத்தை குறைச்சிக்கலாம்ல? இப்போவே இப்புடி இருந்தா கண்ணாலத்துக்கு பொறவு நீ எப்புடி இங்கிருந்து தினம் வேலைக்கு போயிட்டு வருவ? தாங்க மாட்ட கண்ணு… உடம்பு கெட்டுடும். வேலையை விட்டுடுறியா?”
அருணின் நினைவுகளையும் அஞ்சனின் நெருக்கங்களையும் அவள் மறந்து இருக்கும் பொழுதுகள் என்றால் அது வேலை செய்யும் பொழுதுகள் தானே! அதை விடுவதா? வேலையை விட்டுவிட்டு இவனுக்கு சேவகம் செய்ய வேண்டுமோ? என்ற கோபம் அவளிடம் எட்டிப்பார்த்தது.
ஆங்காரமாய் ஒலித்த அவள் குரல் அவனுக்கு உவப்பானதாய் இல்லை, “சாதாரணமா கேட்டேன் அதுக்கு ஏன் இம்புட்டு சீற்றமா பதில் சொல்ற? இப்புடி பேசிட்டு இருந்தா என்ன பண்றது? எனக்கு உன்கிட்ட நிறைய பேசணும் கண்ணு. எனக்கே எனக்குன்னு நிறைய ஆசை இருக்கு அது எல்லாத்தையும் நாஞ் சொல்லணும் கண்ணு. உங்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட நான் எல்லாம் சொல்ல முடியும்? எனக்கும் உன்ற கை கோர்த்துட்டு இந்த வூரை சுத்தி வரணும், வண்டியில ரொம்ப தூரம் போகணும், தோள் சாயணும்னு ஆசையெல்லாம் இருக்கு. உனக்கு எதுவுமே தோணலையா கண்ணு?” என்று அஞ்சன் ஏக்கமாய் கேட்டிட, தோன்றுவதை எல்லாம் சொல்லும் மனநிலையிலா இருக்கிறாள் அவள்?
“என்ற மனசுக்கு என்ன புடிக்கும் என்ன புடிக்காதுனு தெரிஞ்சிக்கணும்னு உனக்கு ஆர்வம் இல்லையா கண்ணு? வீட்டுல பார்த்து முடிவு பண்ணாம நாமளே விரும்பி இருந்தா உனக்கும் இந்த ஆசையெல்லாம் வந்திருக்குமோ? எனக்கு என்னமோ உன்னைவிட்டு நான் தூரமா இருக்குற மாதிரி இருக்கு.”
எப்போதும் பிடிகொடுக்காமல் அவள் பேசும் போதெல்லாம் அமைதி காப்பவன் இன்று அதை துறந்தவனாய் மனதை அரித்துக் கொண்டிருப்பதை வாய்விட்டு கேட்டிட, இன்று என்ன இவன் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று தவித்தாள் கீர்த்தி.
தன் மொத்த பிரியத்தையும் அவளிடம் கொட்டிவிட வேண்டுமென்ற தாபம் மனம் முழுதும் கிளை பரப்பிக்கிடக்க அதை சுமக்கவும் முடியாமல் அவளிடம் காட்டவும் முடியாமல் அரும்பிலிருந்து மொட்டாகிய காதலின் அவஸ்தையை அனுபவித்துக் கொண்டிருந்தான் அஞ்சன்.
அதை புரிந்துகொள்ளாத பாவையோ மெளனத்தையே தன் பதிலாக்கினாள். அவளின் அமைதியில் நொந்து போனவன், “நீ ரெஸ்ட் எடு கண்ணு. நான் நாளைக்கு கூப்பிடுறேன்.” என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.
என்ன செய்வது? திருமணத்திற்கு முன் எல்லாம் இப்படித்தான் இருக்குமா? இல்லை தனக்கு எதுவும் தெரியவில்லையா என்ற புரியாத நிலையில் தன் நண்பனான அருணை அழைக்க அவன் அழைப்பை ஏற்கவே இல்லை. வேறு வழியின்றி தன் குருங்கையை அழைத்தான்.
“என்ன இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கீக கொழுந்தனாரே?”
“எனக்கு எதுவும் புரியல… யாரை கேக்குறதுனு தெரியலை.” என்றான் மொட்டையாய்.
“என்ன புரியல?”
“அம்மணி சரியா பேச மாட்டேங்குறாங்க… முதல்ல வெக்கம், தயக்கம்னு நினைச்சேன் ஆனா இப்போ அப்படி இல்லையோனு தோணுது.” என்று அஞ்சன் நிறுத்த,
“ஏன் என்னாச்சு? தெளிவா சொல்லுங்க…” என்று அவள் விளக்கம் கேட்க, இவன் அவளை நேரில் சந்திக்க சென்றதையும் பின் அலைபேசியில் பேசத் துவங்கியதையும் மேலோட்டமாக சொன்னான்.
“காலைல எட்டு மணிக்கு கிளம்பினா அந்தி ஏழு மணிக்கு தான் வீட்டுக்கு வர முடியுது… ஏன் இப்புடி வருத்திக்கணும் வேலையை விட்டுடலாமேன்னு தான் கேட்டேன்… ரோஷம் வந்து கத்திட்டாங்க அம்மணி. நான் அவங்களை என் கண்ணா நினைக்குற மாதிரி கீர்த்திக்கு தோணல குருங்கை. விலகி போற மாதிரியே இருக்கு…” என்று சோகம் வாசிக்க, குருங்கைக்கும் அந்த சந்தேகம் இருக்கவே செய்தது.
பெண் பார்க்கும் படலத்தின் போதே கீர்த்தியிடம் இருந்த ஆர்வமின்மையை கவனித்திருந்தாளே! அஞ்சனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை கீர்த்தனா. இப்போது அஞ்சனும் அதையே கூற என்ன செய்வது என்ற யோசனை அவளுக்கும்.
“என்ன நீங்களும் அமைதியா இருக்கீங்க? கண்ணாலத்துக்கு இன்னும் ஒரு மாசந்தான் தான் இருக்கு. இன்னும் இப்புடி இருந்தா என்ன பண்றது? நாந்தான் ஏதாவது தப்பு பண்றேனா? எனக்கே எனக்குன்னு என்னை புரிஞ்சிக்குற பொஞ்சாதி வரப்போறானு சந்தோஷமா இருந்தேன் குருங்கை. அந்த சந்தோஷத்தை கீர்த்தி கண்ணுக்கிட்ட காமிக்க கூட முடியல… என்னமோ நான் தனியா இருக்குற மாதிரி இருக்கு. நான் மட்டுமே எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து பேசிட்டு இருக்கேன்.”
அஞ்சன் உதிர்த்த வார்த்தைகளில் கலக்கமும் சோகமும் இழையோட அவை யாவும் குருங்கையை குறுநகை புரிய வைத்தது. ம் என்றால் நொட்டம் சொல்லி சிடுசிடுக்கும் கொழுந்தன் குழந்தையென பெண் மனம் அறியாது புரியாது பேசுவதை கேட்க, திருமண வாழ்வில் கரை சேர்ந்து விடுவான் என்ற நம்பிக்கை வந்தது அவளுக்கு. அதன் பொருட்டு சமாதானமாய்,
“ஆரம்பத்துல அப்புடி இப்புடிதான் இருக்கும் கொழுந்தனாரே! தயக்கமா இருக்கும், சட்டுனு ஏத்துக்க சிலர் கஷ்டப்படுவாங்க… போக போக சரியாகிடும். உங்க அம்மணிக்கு புடிச்சதை தெரிஞ்சிக்கிட்டு அவங்களுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்கோங்க… மனசு நோகுற மாதிரி எதுவும் பேசிபுடாதீங்க… தானா உங்களை புரிஞ்சிக்கிடுவாக.” என்றிட, அஞ்சனின் முகம் தெளிந்தது.
“கண்ணாலத்துக்கு முன்னாடி நீங்களும் இப்புடி தான் என்ற அண்ணனை மண்டைகாய விட்டீங்களா?” கேலியாய் அன்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அவன் கேள்வி கேட்டிட கிளுக்கிச் சிரித்தாள் பெண்.
“உன்ற அண்ணன் தான் என்னை மண்டைகாய விட்டாங்க… போன் பண்ணுவாங்கனு என் போனையே பார்த்துட்டு இருப்பேன் ஆனா ஆடிக்கு ஒருதரம் அமாவாசைக்கு ஒருதரம்னு கூப்பிடுவாக… உங்க விஷயத்துல அப்படியே உல்ட்டா…” என்று நகைத்தவள்,
“இன்னும் ரெண்டு நாள்ல பரிசத்துக்கு புடவை எடுக்க போறோமே அப்போ உங்க அம்மணி வருவாங்க… நேருல பேசி கரெக்ட் பண்ணிடுங்க.” அவர்களின் வழக்கப்படி கூறைப்புடவையே திருமணத்தின் போது அணிவதால் பரிசத்திற்கு புடவை எடுக்க மட்டும் கீர்த்தனா குடும்பத்தை அழைத்திருக்கின்றனர்.
அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தெளிந்தவனாய், “என்ற அம்மணியை அசத்திப்புடுறேன் அன்னைக்கு…” என்று கலகலத்தான் அவனும்.
அக்கணமே மனதில் இன்பச்சாரல். அள்ளித்தெளிக்காமல் தூரலாய் வருடிச் செல்லும் மேகக்கூடங்களின் சிதறல்கள் மனதோடு சேர்த்து அவனின் உடலையும் குளிர்வித்துச் செல்ல, அஞ்சனின் அகம் முழுதும் அவனின் கீர்த்தனையாய் நிறைந்திருந்தாள் கீர்த்தனா.