அவளை பார்க்கவென ஒரு ஆர்வத்தில் நேர்த்தியாய் சட்டை பேண்ட் உடுத்தி கிளம்பி வந்தவன் திருப்பூர் நுழைந்தவுடன் வழி தெரியாது தயங்கி ரோட்டின் ஓரத்தில் வண்டியை நிறுத்தி நின்றான். பெண் பார்க்க சென்ற போது வேனில் வந்ததால் அவள் வீடு செல்லும் பாதையை கவனித்திருக்கவில்லை. இப்போது யாரை கேட்பது? எப்படி தெரிந்துகொள்வது என்ற கேள்விக்கு விடையாய் வந்தது அருணின் நினைவு. உடனே அவனுக்கு அழைத்துவிட்டான்.
“என்ற வூட்டுக்கு போன் போட்டு என்ற அம்மணி வூட்டு விலாசம் வாங்கிக்கொடு.” என்று அஞ்சன் கேட்க, சட்டென அவன் யாரைக் கேட்கிறான் என்று புரியாமல் முழித்தான் அருண்.
“யாரோட விலாசம் வேணும்?”
“என்ற அம்மணி கீர்த்தனா வூட்டு விலாசம்டா… அம்மணியை பாக்க வந்தேன். விலாசம் தெரியல நான் கேட்டா என்ற அப்பா கற்காலத்துக்கு போயிடுவாரு… நீ ஏதாவது பேசி வாங்கிக்கொடு நான் காத்திருக்கேன்.” அஞ்சன் அழைப்பை துண்டிக்க, அருணுக்கு தொண்டை அடைத்தது. கண்கள் கரித்துக்கொண்டு வந்தது. அந்நொடி முடிவெடுத்தவனாய் தன்னிடம் இருந்த கீர்த்தனா வீட்டு முகவரியை அஞ்சனுக்கு அனுப்பிவிட்டு வேலை செய்யும் ஆலையில் இருந்து கிளம்பினான்.
இங்கு விலாசம் கிடைத்தவுடன் அதை கூகிள் மேப்பில் போட்டு அவள் வீட்டுக்கு தயங்காமல் சென்று நின்றான். என்ன ஒன்று அவனைப்போல அவளும் வேலைக்குச் செல்கிறாள் என்பதை மறந்திருந்தான்.
வீட்டுன் அழைப்புமணி ஒலிக்க கதவை திறந்துவிட்ட கமலமோ அஞ்சனைக் கண்டு திகைத்து பின் உள்ளே அழைத்து உபசரித்தார்.
“அண்ணன் வீட்டுல கலந்து பேசிட்டு தேதி உறுதி பண்ணிடலாம்னு இருந்தோம். அப்பா எதுவும் கேட்டாங்களா?” என்ன விஷயமாய் அவன் வந்திருப்பான் என்ற யூகம் இல்லாததால் திருமணத் தேதியைப் பற்றி அவர் பேச,
காபியை மெதுவாய் அருந்தியபடி விழிகளை வீட்டினுள் படரவிட்டு கீர்த்தியை தேடியவன் அவள் தரிசனம் கிடைக்காது போக ஓய்ந்து, “திருப்பூருக்கு ஒரு சோலியா வந்தேன். அப்படியே பார்த்துபுட்டு போகலாம்னு… கீர்த்தனா இல்லைங்களா?”
“வேலைக்கு போயிருக்கா மாப்பிள்ளை. வர ஏழகாகிடும்.” என்று பதில் வர, அவள் வேலையை பற்றி மறந்த தன் மடத்தனத்தை ஓரங்கட்டி விட்டு, இவரிடம் கீர்த்தி நம்பரை வாங்கலாமா என்று எழுந்த யோசனையையும் புறந்தள்ளி,
“கார்மெண்ட்ஸ்ல வேலைன்னு சொன்னாங்க எந்த கார்மெண்ட்ல வேலை பாக்குறாங்க?” என்று கேட்டபின் மாமியாரிடம் இக்கேள்வி அதிகப்படியோ என்று தோன்ற, “நாங்களும் இங்குட்டு இருக்குற கார்மெண்ட்ஸ்லேந்து தான் லோட் எடுக்குறோம். மாச கடைசி எப்போதும் இங்குட்டு இருக்குற கார்மெண்ட்ஸ்கு கணக்கு பாக்க வருவேன். அடுத்து அங்குட்டு தான் போறேன் அங்குட்டே இருந்தா அப்டியே பார்த்துபுட்டு போயிடுவேன்.” என்று தான் வந்த வேலையை விளக்கிக் கூறினான்.
துணிகளை திருப்பூர் கார்மெண்ட்சில் இருந்து நேரடி கொள்முதல் செய்து கோவையில் இருக்கும் சிறு குறு கடைகளுக்கு விநியோகிக்கும் ஏஜன்டாய் இருக்கிறான் அவன். மாத இறுதியில் எந்தெந்த இடத்திலிருந்து கொள்முதல் செய்வார்களோ அங்கு கணக்கு பார்த்து செட்டில் செய்வதும் அவன் வேலையே. மாதம் பதினைந்து முதல் பதினெட்டு ஆயிரங்கள் வரை கையில் நிற்கும். ஊதியத்தை வீட்டில் கொடுக்கத் தேவை இல்லை. வீட்டு செலவுகளும் பழனியுடைதே என்பதால் குடும்பத்திற்கு செலவு செய்வதை பற்றிய எண்ணங்கள் எதுவுமின்றி தனக்கான பாதையை உருவாக்கும் பொருட்டு சேமித்துக் கொண்டிருக்கிறான்.
கமலம் தயக்கத்துடன் கீர்த்தனா வேலை செய்யும் இடத்தைச் சொல்ல, உல்லாசமாய் அவளைக் காண கிளம்பினான் அஞ்சன். அவன் கிளம்பவும் மகளுக்கு உடனே அழைத்துவிட்டார். திடுமென வந்து நிற்பவனைக் கண்டு தானே திகைத்திருக்க மகள் இருக்கும் மனநிலைக்கு அதிர்ச்சி எல்லாம் தாளமுடியாது என்ற எண்ணத்தில் அஞ்சன் அவளை பார்க்க வந்தாலும் வருவான் என்று எச்சரிக்க,
உருவமில்லா பயஉருண்டை ஒன்று அவள் தொண்டைக்குழியை அடைத்தது. காரணம் அவனின் உருவம். அது அவள் மனதில் பதியவே இல்லையே. தன் முன் வந்து நின்றால் கூட அவளுக்கு அவனை அடையாளம் தெரியாது என்ற அளவில் தான் இருந்தது அவள் நினைவு. அடையாளமே தெரியாத போது என்ன பேச? எப்படி அவனை எப்படி எதிர்கொள்ள? இருக்கும் மனநிலையில் இன்னொரு வாழ்க்கையை இன்னொரு துணையை ஏற்கும் பக்குவமும் தைரியமும் இன்னுமே அவளுக்கு வந்திருக்கவில்லை.
துரோகத்தால் வெந்து துவண்டு துடிக்கும் மனம் அதிலிருந்து விடுபட போதுமான அவகாசம் கூட கிடைக்கா நிலையில், கல்யாண தேதி அதுஇதுவென்று முளைக்கும் சிக்கல்களை எப்படி சமாளிக்க? என்ற எண்ணங்களே அருண் மீது கோபத்தை தூண்டியது.
எல்லாம் அவனால்தானே? அவன் மட்டும் காதலை விட்டுக்கொடுக்காமல் போராடி இருந்தால் தனக்கு இந்த நிலை வந்திருக்குமா? என்று அவன் மீது குரோதம் வளர்த்த மனது அஞ்சனை ஏற்க மறுக்க, விருப்பமே இல்லை என்றாலும் அஞ்சனின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்.
ஓரிரு நொடிகள் கழித்து அவன் எடுக்க, “நான் கீர்த்தனா பேசுறேன். நீங்க வீட்டுக்கு வந்தீங்கன்னு அம்மா சொன்னாங்க…” என்ற போதே,
“உன்னை பாக்க தான் வந்துட்டு இருக்கேன் அம்மணி. இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்.” என்று அவன் ஆர்வமாய் சொல்ல, திக்கென்றது இவளுக்கு.
“இல்லை இல்லை… விசிட்டர்ஸ் அலோ பண்ண மாட்டாங்க. அப்படியே நீங்க உள்ள வந்தாலும் என்னை பாக்க முடியாது. வேலை அதிகமா இருக்கு, பிரேக் குடுக்க மாட்டாங்க.” என்றாள் அவசரமாய். எப்படியாவது இந்த சந்திப்பை நடக்கவிடக்கூடாது என்ற முனைப்பு அவளிடம்.
அவளின் மறுப்பை எறும்பாய் கடந்தவன், “எனக்கும் அங்க வேலை இருக்கு அப்படியெல்லாம் என்னை யாரும் உள்ள விடமாட்டேன்னு சொல்ல முடியாது கண்ணு.” என்ற நொடி அவள் திடத்தையும் மீறி வழிந்தது கண்ணீர் அவனின் கண்ணு என்ற அழைப்பில்.
பிரத்யேகமாய் அருண் மட்டுமே அவளை காதலாய் அழைக்கும் அந்த ‘கண்ணு’ இன்று அஞ்சனின் வாயிலிருந்து வரும்போது தேவையில்லாத நினைவுகளையும் கூட கூட்டிவந்து சுட்டது. நெஞ்சு அடைக்க அழைப்பை அப்படியே துண்டித்தாள் கீர்த்தனா.
மெளனமாய் வழிந்த கண்ணீர் மெல்ல கேவலாய் மாற, வேலை செய்யும் இடத்தில் ஓசை எழுப்பி அனைவர் கவனத்தையும் ஈர்த்துவிடாதே என்ற சிந்தையின் எச்சரிக்கையை கருத்தில் பதிய வைத்து, கண்ணீரை உள்இழுத்து கண்களை துடைத்துக்கொண்டே அலைபேசியுடன் மேலாளர் அறைக்குச் சென்றாள்.
“உடம்பு முடியல சார்.. தலை பாரமா இருக்கு இன்னைக்கு மட்டும் லீவ் வேணும்.” என்று மேலாளரிடம் கேட்டு நிற்க, அவள் முகத்தை பார்த்தவர் என்ன நினைத்தாரோ உடனே விடுப்பு கொடுத்துவிட்டார். வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் அவள் அதிகம் விடுப்பு எடுக்காததால் கேள்விகள் எதுவுமின்றி உடனே விடுப்பு கிடைக்க தாமதிக்காமல் அங்கிருந்து கிளம்பினாள்.
அஞ்சன் இங்கு வரும்முன் கிளம்பிவிட வேண்டும் என்ற வேகத்தில் அவள் பாதங்களை எட்ட வீசி நடக்க, அவளை பார்த்துவிட வேண்டும் என்ற உந்துதலில் வண்டியை முறுக்கி பத்தே நிமிடத்தில் அங்கு வந்திருந்தான் அஞ்சன். அவள் வெளியேறவும் அவன் உள் நுழையவும் சரியாய் இருக்க, வண்டியை அவளருகே நிறுத்தி பற்கள் அனைத்தும் பளிச்சிடும் வண்ணம் புன்னகைக்க, அதிலேயே அவனை கண்டுகொண்டு அதிர்ந்து நின்றாள் பெண்.
“நாந்தான் வந்துடுவேன்னு சொன்னேன்ல பொறவும் ஏன் கண்ணு இப்படி வாசல்ல வந்து நிக்குற? வேலை செய்யுற இடத்துக்கு வந்து நான் தொந்தரவு பண்ணிடுவேன்னு நீயே வெளிய வந்துட்டியா?” அவனாய் ஏதோ யூகித்து உரிமையெடுத்து கேட்க, அனைத்தும் மரத்த நிலையில் நின்றாள் கீர்த்தனா.
சொற்கள் மரணித்துவிட என்ன செய்ய என்ற சிந்தை கூட அவளிடமில்லை. ஆனால் அவன் மனதில் எக்கச்செக்க எண்ணங்கள். விவரிக்க முடியா ஆவல்கள். பகிர ஆயிரம் சொற்கள் என அனைத்தும் வரிசைகட்டி நின்றது. எங்கு எப்படி தொடர்வது என்று சில நொடிகள் அவனுமே தடுமாறினாலும் சமாளித்துக் கொண்டான்.
“இங்குட்டு பேசலாமா இல்லை வேலைக்கு பர்மிஷன் போட்டு வெளில எங்குட்டாவது போயி பேசலாமா?” முடிவை அவளிடம் விட்டு அவளைக் காண, அவனைக் காணவே கூடாது என்ற எண்ணத்தில் இருந்தவள் என்னவென சொல்லுவாள்?
“இங்குட்டு இப்புடி ஒட்டுக்கா நின்னா எல்லாரும் என்னனு கேப்பாங்க… உனக்கு ஓகேன்னா வெளில போய் பேசுவாமா கண்ணு? உள்ளார சொல்லிட்டு வரியா?” அவள் அமைதியாய் நிற்கவும் அவனே முடிவெடுத்து கேட்க, இதற்கு மேல் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல்,
‘என்னடா இது என்னை அம்போனு விட்டுட்டு போறாங்க?’ மனதிற்குள் நினைத்தவன் அவசரமாய் வண்டியை அவள் முன் சென்று நிறுத்தினான்.
“ஜூஸ் கடையெல்லாம் கூட்டமா இருக்கும் பேச வசதியா இருக்காது.” அஞ்சன் மறுக்க, அந்த காரணத்திற்காக தானே அவள் அக்கடையை தேர்ந்தெடுத்தது. தனிமையில் உன்னுடன் இருப்பதை தவிர்க்க நினைத்தால் அதை நீ மறுப்பாயா என்ற கடுப்பில் கீர்த்தி அவனை முறைக்க,
“ஏதாவது பார்க் மாதிரி இருந்தா சொல்லு கண்ணு அங்குட்டு போகலாம்.” என்றான் அவன்.
மணியைப் பார்த்தவள் பத்தரை என்று காட்டவும் ‘இந்த நேரத்துக்கு பார்க்கா? கூட்டமே இருக்காதே!’ என்ற எண்ணத்துடன், “இங்க பக்கத்துல பார்க் எதுவும் இல்லை..” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கூகிள் மேப்பில் பூங்கா எங்கிருக்கிறது எப்படி செல்ல வேண்டும் என்று பார்த்துவிட்டான்.
“இங்குட்டிருந்து ரெண்டு கிலோமீட்டர்ல ஒரு பார்க் இருக்கு. அங்குட்டு போயி பேசலாம் கண்ணு. வண்டியில ஏறு.” என்று உரிமையாய் அவளை அழைத்தான்.
இன்னும் எத்தனை அதிர்வை அடாவடியை தாங்க வேண்டும் என்ற கழிவிரக்கத்தில் அத்தனை நேரம் இல்லாத சோர்வு அவள் உடலையும் மனதையும் ஆக்கிரமித்தது.
“நீங்க போங்க நான் வரேன்.”
“அதெப்புடி உன்னை தனியா வுடுறது?” என்று அவன் கவலை கொள்ளவும் எரிச்சல் மண்டியது கீர்த்தியிடம்.
“பொறந்ததுலேந்து இங்கதான் இருக்கேன். தினம் தனியாத்தான் வேலைக்கு வந்துட்டு போறேன்.”
அவள் அப்படி பட்டென்று சொல்லவும் அஞ்சன் முகம் சுருங்கி தெளிந்தது, “இதுவரைக்கும் அப்படி இருந்திருக்கும். இப்பதான் நான் இருக்கேனே கண்ணு. தயங்காம என்ற வண்டியில ஏறு கண்ணு பத்திரமா கூட்டிட்டு போயி கூட்டியாந்திருவேன்.”
அவனின் ஆர்வத்துக்கு சற்றும் சம்மந்தம் இல்லாமல் கடுப்பு எட்டிப்பார்த்தது அவளிடம், “முதல்ல இந்த கண்ணு கண்ணுனு கூப்பிடுறதை நிறுத்துங்க. எனக்கு ரெண்டு கண்ணும் நல்லாத்தான் இருக்கு. கீர்த்தனானு பேரும் இருக்கு. பேர் சொல்லி கூப்பிடுங்க.”
மீண்டும் சுருங்கியது அஞ்சனின் முகம், ‘என்ன இப்படி வெடுக்குனு பேசுறாங்க? நான் என்ன சொல்லிப்புட்டேன் இப்போ?’
“என்ற ஊருல பாசமா கண்ணுனு கூப்புடுறது வழக்கங்க. எனக்கும் உன்னை அப்புடி கூப்புடுறதுதான் விருப்பம். ஆனா உனக்கு புடிக்கலைனா வேற எப்புடி கூப்புடுறதுன்னு நாம பேசி முடிவுக்கு வரலாமே? அதுக்கு நீ என்கூட பேசணும். என்றக்கூட வாயேன்…” என்று அஞ்சன் தழைந்து செல்ல, இப்படி ரோட்டில் நின்று அவனுடன் வளவளக்க விருப்பமில்லாமல்,
“எனக்கு தலை வலிக்குற மாதிரி இருந்துச்சுன்னு லீவு சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டு இருந்தேன். இப்படி வழி மறிச்சா என் தலையே வெடிச்சிரும் போல இருக்கு.” என்றிட, இப்போது தவிப்பது அவன் முறை.
“முன்னாடியே சொல்ல வேண்டியது தான கண்ணு… நாம பொறவு பேசலாம். நீ வூட்டுக்கு போயி ரெஸ்ட் எடு… எப்புடி வூட்டுக்கு போவ? பஸ்ல எல்லாம் போ வேண்டாம். ஆட்டோல போ…” என்றவன் வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி ரோட்டில் வந்த ஆட்டோவில் கீர்த்தனாவை ஏற்றிவிட்டு பணமும் கொடுத்து தானும் பின்தொடர்த்து அவள் வீடு சென்றுவிட்டாள் என்பதை உறுதி செய்த பின்னே தன் வேலையை பார்க்கக் கிளம்பினான் அஞ்சன்.
எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற ஆவலுடன் தொடங்கிய அவன் பயணம் ஏமாற்றத்தில் முடிந்தாலும் அவளை பத்து நிமிடங்கள் அருகில் நின்று பார்த்துவிட்ட திருப்தியில் அன்றைய நாளை ஓட்டினான் அஞ்சன்.
மறவாது இரவு அவள் தலைவலி எப்படி இருக்கிறது என்று அவன் போன் செய்து கேட்கவும், அவசரத்தில் தன் நம்பரை அவனுக்கு பகிர்ந்து விட்ட மடத்தனத்தை எண்ணி கொட்டிக்கொண்டாள் கீர்த்தனா. வாழ்க்கையையே இன்னும் சில தினங்களில் பகிர்ந்து கொள்ளும் உரிமை வரும்போது அலைபேசி எண்ணெல்லாம் ஒரு பொருட்டா என்பது போல் தினம் இரவு அவனது அழைப்பு வரத்துவங்கியது.