இடப்புறம் பின் வலப்புறம் என முடியை சிலுப்பி தலையை உதறும் கொழுந்தனை நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அவனின் குருங்கை.
“இப்புடி சீவி சிங்காரிச்சு இந்த வேகத்துல கிளம்பிட்டு இருந்தீகன்னா அங்கிட்டு போயி நேரா அறுபதாம் கண்ணாலம் தான் பண்ணனும் கொழுந்தனாரே!”
“பொண்ணுதான் பார்க்க போறோம் குருங்கை… பொண்ணை முதல்ல புடிக்கோணும் அந்த பொண்ணுக்கு என்னை புடிக்கோணும், பொறவுதான் கண்ணாலம். அதுக்குள்ள கண்ணாலதை பத்தி கேலி பேசுனா எப்பூடி? கொஞ்சம் பொறுங்க எல்லாம் முடிவானதும் உங்க ஆசைதீர கேலி பேசலாம்.” என்ற அஞ்சன் கண்ணாடி விட்டு அகலும் எண்ணமின்றி வாயடிக்க, குருவின் மங்கை வாய்விட்டு சிரித்தாள்.
“தெளிவாத்தான் இருக்கீக… ஆனா உங்க அண்ணங்க எல்லாரும் நீங்க எப்போ கிளம்பி வருவீகனு இங்க தான் பாத்துட்டு இருக்காக… நீங்க இப்போ விரசா கிளம்பலென்னா நாங்க மட்டும் போயி பொண்ணை பார்த்து முடிவு பண்ணிட்டு வந்துருவோம். பொறவு எங்களை குறை பேசக்கூடாது சொல்லிப்புட்டேன்…” என்று பேசியவளை முறைத்த அஞ்சன்,
“செஞ்சாலும் செய்வீக! நான் இல்லாம என் கண்ணாலத்தை கூட முடிச்சிடுற கூட்டந்தான் நீங்கெல்லாம். அதுவும் உங்க கூட்டத்து தலைவரு என்ற அப்பாரு கண்டிப்பா செஞ்சிபுடுவாரு…” என்று வசவினாலும் உடனே கிளம்பி வெளியே வர,
அவ்வீட்டு மற்ற பெண்கள் ஒவ்வொரும் ஒவ்வொரு திசையில் முகம் தூக்கி நின்றனர்.
‘இது வேறையா?’ என்று மனதில் நினைத்தவன் நிமிர்வாய், “கிளம்புவோமா?” என்று கேட்க,
“புள்ளைங்க வச்சிருக்குற நாங்களே வெள்ளென கிளம்பி வந்துட்டோம். நீங்க கிளம்ப இவ்வளவு நேரம்.” என்று நொடித்தாள் அவனின் சின்ன நங்கை.
“நீங்க என்ன புதுசா கேக்குறீக அக்கா? எது இந்த வீட்டுல விரசா நடந்திருக்கு? எல்லாரும் அவுக விருப்பத்துக்கு ஆடி அசைஞ்சு கிளம்புறத்துக்குள்ள பொழுதாகிடும்…” இம்முறை சிலிர்த்தது அவனின் நடு நங்கை.
இது எதிலும் பங்கெடுக்காது பார்வையாளராய் நின்றது அவன் பெரிய நங்கை. அவனது குருங்கை மட்டுமே தோழி போல் அவனிடம் பழகுவது. நான்கும் நான்கு திசையில் நிற்க, ஐந்தாவது எத்திசையோ என்ற எண்ணம் அவனுக்குமே!
“பேசாம எல்லாரும் வண்டில ஏறுங்க…” சொற்கள் தடித்து சஞ்சலமாய் மாறும்முன் பழனி அனைவரையும் விரட்ட, முணுமுணுப்புடன் அங்கிருந்து கிளம்பினர்.
பெரிய வேன் ஒன்று பிடித்திருக்க, இவர்கள் குடும்பமே திருவிழா கூட்டம் போல் திருப்பூர் சென்று இறங்கி இருந்தனர்.
“என்ன அண்ணா இவ்வளவு பெரிய குடும்பமா இருக்காங்க? நம்ம பொண்ணு சமாளிச்சிடுவாளா?” சிறுசிலிருந்து பெருசுவரை அனைத்து வயதினரும் கலந்து ஒன்றன் பின் ஒன்றாய் இறங்கிய மாப்பிள்ளை குடும்பத்தை கண்டு மிரண்ட கமலம் அண்ணன் காதை மெல்ல கடிக்க,
“ஜனக்கட்டு இருக்குற குடும்பமா வேணும்னு நீதான கேட்ட கமலம்? நாந்தான் எல்லா விவரம் முன்னமே சொன்னேனே. எல்லாரும் தனியாத்தான் இருக்காங்க. விசேஷம்னா ஒண்ணா கொண்டாடுறாங்க. இவ்வளவு பெரிய குடும்பத்தை கட்டி காப்பாத்துறாரு அந்த வீட்டு பெரிய மனுஷன். நம்ம பொண்ணுக்கும் பாதுகாப்பா இருக்கும்.” என்று முணுமுணுத்த அவரின் அண்ணன் வந்தவர்களை வரவேற்க, இன்முகத்துடன் உள் நுழைந்தனர் பழனி குடும்பத்தினர்.
“நம்ம குடும்பம் உக்காரவே இடம் பத்தலையே… இந்த வீட்லையா பொண்ணு எடுக்கணும்?” நடுநங்கை தன் எண்ணத்திற்கு தோதாய் ஒத்துப்போகும் ஓரகத்தியிடம் கிசுகிசுக்க, அஞ்சனின் சின்ன நங்கையோ அதிருப்தியாய் இதழ் வளைத்து,
“வீடும் சின்னது… பொண்ணுக்கு சொந்தம்னு சொல்லிக்க பெருசா யாரும் இல்லை. நாளைக்கு புள்ளை பேறு பொறவு வர எல்லா விசேஷத்துக்கு யாரு எடுத்து செய்வா? மாமா ஏன் இங்கன பொண்ணு பார்த்திருக்காருனு தெரியல…”
“நம்ம சொல்றதை யாரு கேக்கப் போறா? நல்லதுக்கு சொன்னா நம்ம மேலையே பாய்வாங்க…” இரு சகோதரிகளும் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் போதே பெண் பார்க்கும் படலம் துவங்கியிருந்தது.
“பொண்ணை நல்லா பார்த்துக்கோ அஞ்சு… பொறவு இந்த வாய்ப்பு எல்லாம் அமையாது.” தம்பியின் காதில் கிசுகிசுத்த இரண்டாவது அண்ணன் பூமிநாதனை முறைத்த அஞ்சன் எதிர்பார்ப்புடன் நிமிர்ந்து தன் முன் நிற்கும் பெண்ணை ஆர்வமாய் ஆராய்ந்தான்.
மிதமான உயரம் என்றாலும் தன் உயரத்துக்கு தன் கழுத்துவரை தான் இருப்பாள் என்று கணக்கிட்ட அவன் விழிகள் மெல்ல ஊர்ந்து அவள் முகத்தை அளந்தது. அடர்த்தியற்ற புருவங்களுக்கு கீழ் அதற்கேற்றபடி இருந்த விழிகள் தவறியும் மேல்நோக்கி அவனைக் காணவில்லை. அதில் சுணக்கமுற்றவன் தன்னருகில் இருந்த பூமியை சுரண்டினான்,
“அம்மணி என்னை பாத்த மாதிரியே தெரியல…”
“என்ற தம்பியை நல்லா நிமிந்து பாருங்க அம்மணினா சொல்ல முடியும்? நீ வேணும்னா பேசிப் பாக்குறீயா? அப்பாவை கேக்கவா?” என்ற பூமி தம்பியின் வேண்டலை பழனி காதில் போட, அவரோ மகன்களை முறைத்தவர்,
“இதென்ன புது பழக்கம்? உறுதியாகாத பொண்ணுகிட்ட தனியா பேசுறது எல்லாம் முறை கிடையாது.” என்று முணுமுணுத்தார்.
“கல்லு பிசுனஸ் பண்றதால இன்னும் இவரு கற்காலத்துலேயே இருக்காரு…” என்று கடுப்படித்தான் அஞ்சனும்.
“வுடு இங்குட்டு வந்தும் டென்சன் ஆகாத… பாத்துக்கிடலாம்…” பூமி தம்பியை அமைதிப்படுத்த,
கமலம் தயக்கத்துடன் பழனியையும் பரிமளத்தையும் மாற்றி மாற்றி பார்ப்பதுமாய் பின் தன் அண்ணனை பார்ப்பதுமாக இருக்க,
“உங்களுக்கு எங்ககிட்ட ஏதாவது எதிர்பார்ப்பு இருக்குதுங்களா? எதுனாலும் சொல்லிப்புடுங்க பேசிப்புடுவோம்… பொட்டைபுள்ளைங்க இல்லைனாலும் எங்க மருமவ கண்ணுங்க நாலோட உங்க பொண்ணையும் சேர்த்து என்ற குடும்பத்துல அஞ்சு பொண்ணுங்க. கண்ணுக்கு கண்ணா பார்த்துக்குவோம்.” என்று சூழலை இலகுவாக்கினார் பழனிவேல்.
“நீங்க சொந்தமா நிறைய வியாபாரம் பண்றீங்க என் தங்கச்சி துணி மில்லுல வேலை பார்த்து தனியா பொண்ணை வளர்த்திருக்கா அதான் கொஞ்சம் யோசிக்கிறா வேற ஒண்ணுமில்லை…”
இருக்குடும்பத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாத நிதிநிலவரமும் பெண் வீட்டினரை யோசிக்க வைக்க பழனியின் பேச்சு அவர்களை அமைதிப்படுத்தியது.
“என்ற வீட்டுக்கு வர்ற பொண்ணுங்க எந்த கஷ்டமும் இல்லாம சந்தோஷமா இருக்க என்ற மவனுங்க உழைப்பாங்க… உங்களுக்கு தோதுப்பட்டா மேக்கொண்டு பேசிப்புடலாம்… நீங்க யோசிச்சு சொல்லுங்க.”
பெரியவர்கள் கலக்கங்களை களைய, அஞ்சனின் மனதை குளிர்விக்கும் விதமாய் அவனது குருங்கை பெண்ணை நெருங்கி அவள் காதில் எதுவோ சொல்ல கீர்த்தனா ஒருவழியாய் நிமிர்ந்து அஞ்சனைப் பார்த்தாள்.
உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட பாவையின் பார்வை எவ்வுணர்வுமின்றி இருக்க, அவளின் பார்வையே அஞ்சனுக்கு போதுமானதாய் இருந்தது.
‘அப்பாடா பார்த்துட்டா…’ என்றளவே அவனின் எண்ணம். அப்பார்வையில் இருந்த பஞ்சத்தையோ ஆர்வமின்மையோ அவன் கருத்தில் மட்டுமல்ல அங்கிருந்த எவர் கருத்திலும் படவில்லை. அவனின் குருங்கை மட்டும் ஓரிரு நிமிடம் நெற்றி சுருக்கி கீர்த்தனாவை கூர்ந்து பார்த்தாளே ஒழிய ஒன்றும் சொல்லவில்லை.
“எல்லா பொருத்தமும் பொருந்தி இருக்கு… எங்களுக்கு முழு சம்மதம்.” என்று கமலம் வீட்டில் அக்கணமே வாக்கு கொடுக்க, அஞ்சனின் குடும்பத்தினர் ஒவ்வொருவரின் முகத்திலும் ஒவ்வொரு பாவனை.
அண்ணன்கள் தம்பிக்காய் மகிழ, அண்ணிகள் இருவர் கீர்த்தனாவின் நிதிநிலைமை வைத்து எடைபோட்டு முகம் சுழிக்க, அவனின் பெரிய அண்ணி தனக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை என்பது போல் தன் பிள்ளைகளுடன் அமர்ந்திருந்தார். குருங்கையும் பரிமளமும் துடைத்து வைக்கப்பட்டிருந்த கீர்த்தியின் முகத்தில் தங்களின் சிந்தையை பதித்திருந்தனர்.
“எங்களுக்கும் முழு சம்மதம்.” என்றார் பழனியும் முழுமனதாக.
“இதுக்கு கூட என் சம்மதம் கேக்க மாட்டாராமாம்? அவரே சம்மதம்னு என்னை கேக்காம சொல்றாரு.” கடுப்புடன் பூமிநாதனின் காதை கடித்தான் இளையவன்.
“அப்போ இந்த அம்மணி வேண்டாம்னு சொல்லிடுவோமா?” என்று தமையன் கண்ணடிக்க,
“உனக்குத்தான் நாங்க செஞ்சா புடிக்காதே பொறவு இதுக்கு மட்டும் என்ற உதவியை தேடுற…” என்று புருவம் தூக்க, ரோஷம் கொண்டவனாய் கீர்த்தியை பார்த்தான். அவள் பார்த்தால்தானே!
“ரொம்ப வெக்கபடுது… நங்கைகிட்ட சொல்லி நீயே வாங்கிக்கொடேன்…” அண்ணனிடம் முறையிட்டவன் பின் எதற்கு அண்ணன்கள் உதவியை நாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதோ என்னவோ அங்கிருந்து கிளம்பும்முன் அவனின் குருங்கையை சைகையால் அருகில் அழைத்து,
“என்ற போன் நம்பரை அம்மணிகிட்ட குடுங்க குருங்கை. பதிலுக்கு அம்மணி அவங்க நம்பர் கொடுப்பாங்க கோக்குமாக்கு பண்ணாம ஒழுங்கா என்கிட்ட நம்பரை சொல்லிப்புடனும்.” என்று அழுத்தமாய் சொல்ல, கேலிச் சிரிப்புடன் குருவின் நங்கை கீர்த்தியிடம் அவன் அலைபேசி எண்ணை சேர்ப்பிக்க, கீர்த்தியோ மரியாதைக்காக அவன் எண்ணை பதிந்ததோடு சரி. அவளுடையதை பகிரவில்லை. குருங்கையும் அவள் பகிர்வாள் என்று ஓரிரு நிமிடம் முகம் பார்த்து பின் நகர்ந்துவிட்டாள்.
கீர்த்தனா வீட்டு சொந்தங்கள் பெரிதாய் புடைசூழ வந்து சிறப்பிக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து அனைத்து சம்பிரதாயங்களையும் பழனிவேல் அவர்களது முறைப்படி செய்ய வேண்டவும், உடனே ஒப்புக்கொண்டார் கமலம். அதன்படி திருமணத்திற்கு முதல் நாள் பரிசமும் விருந்தும் முடிவாகியிருக்க, அடுத்த இருமாதத்திலேயே இரு தேதிகள் குறித்தார் பழனிவேல்.
அன்றொரு நாள் மாலை தேநீர் அருந்தியபடி பழனி டீவி பார்த்துக்கொண்டிருக்க,
“பொண்ணு வீட்டுல பேசினீங்களா அப்பா? எந்த தேதி தோதுப்படும்னு சொல்லியிருக்காங்க?” என்ற கேள்வியுடன் வந்தமர்ந்தான் அவ்வீட்டின் மூத்த மகன் சுவாமிநாதன்.
மாதத்திற்கு இருமுறை வீடு வரும் மகன் இம்மாதம் மூன்றாம் முறையாய் வீடு வர, அகம் மகிழ்ந்த பரிமளம் மகனுக்கு பிடித்தது போல் காபி கலந்து எடுத்து வந்தார். அதை வாங்கி பருகியவன் பதிலை எதிர்பார்த்து தந்தையை நோக்க,
“பேசிட்டேன் சாமி… கலந்து பேசிபுட்டு சொல்றேன்னு சொல்லி இருக்காக.”
“அந்த குடோன் பத்தி சொன்னேனே என்ன முடிவு பண்ணி இருக்கீங்க? அதை வாங்க ஆளுங்க போட்டி போட்டுட்டு இருக்காங்க… இந்த மாசத்துக்குள்ள வாங்கலைன்னா வேற கைக்கு போயிடும்.” தான் வந்த விஷயத்தை சுவாமிநாதன் முன் வைக்க, நெற்றி சுருக்கிய பழனி,
“உன்ற தம்பி புடிகொடுக்க மாட்டேங்குறான். எதுவும் வோணாம்னு புடிவாதமா இருக்கான்.”
“அதுக்காண்டி அப்படியே விட்டுற முடியுமா? கண்ணாலம் ஆகப்போவுது இன்னும் அவன் பேருல ஒண்ணுமே வாங்கலை பொறவு குடும்பத்துல சச்சரவு வந்துரும்.” பெரிய மகனாய் அவ்வீட்டின் சொத்து விவரங்களை மனதில் வைத்து பேச,
“நானே அதுதான் சொல்லலாம்னு வந்தேன். அன்னைக்கே பொண்ணோட மாமா இவ்வளவு தொழில் இருந்தும் ஏன் மாப்பிள்ளை வெளில மாச சம்பளத்துக்கு வேலைக்கு போறாருனு சூசகமா கேட்டாப்புடி…”
“இவன் இப்புடி நம்ம தொழில் எதையும் பாக்க மாட்டேன்னு கிறுக்குத்தனம் பண்ணிக்கிட்டு திரிஞ்சா என்ன பண்றது கேக்கத்தான் செய்வாங்க. கண்ணாலம் ஆகட்டும் பாத்துக்கலாம்.” என்று இவர்கள் ஒரு திட்டத்தில் இருக்க, அஞ்சன் வேறொரு முடிவில் இருந்தான்.
பேச்சு அதோடு முடிந்தது என்ற எண்ணத்தில் பழனி எழப்போக யோசனையுடன் அவரை நிறுத்தினான் சுவாமிநாதன்.
“ப்பா… நான் சொல்றேன்னு நினைக்காதீக… நீங்க அஞ்சுக்கு இன்னும் நல்ல இடத்துல பார்த்துக்கலாம் ப்பா…”
“இந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்?” சொற்களோடு சேர்ந்து பார்வையும் என் தேர்வை கேள்விக்கூண்டில் நிறுத்துவாயா என்பது போல் இருந்தது.
வசதி வாய்ப்பை மனதில் வைத்தே அவன் கேட்டிட, அதற்கு தந்தை பதில் சொன்ன விதத்தில் சுதாரித்து, “எங்க கிட்டேயும் எதுவும் கேக்க மாட்டான். தள்ளியே இருப்பான். அவங்க வீட்டுல யாராவது இருந்தா அவனுக்கும் பின்னாடி வுதவும்ல?”
“நீங்க எதுக்கு இருக்கீங்க? கூடப்பொறந்தவனை பாக்குறத விட என்ன பொழப்பு இருக்கு?”
“எங்களை தள்ளி நிறுத்துவான்.” என்று இவன் நிறுத்த,
“நிறுத்தினா நிறுத்திட்டு போகோட்டும்னு விடு. யாருக்கு யாருன்னு இருக்கோ அவுங்கதான்… அவனுக்கு அந்த பொண்ணுதான்னு இருக்கு. எது எப்படி இருந்தாலும் அவங்க சமாளிச்சுப்பாங்க. நீ இப்டிலாம் பேசிட்டு திரியாத. தேதி குறிச்சுபுட்டாச்சு. வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.”
ஏற்கனவே மருமகள்கள் இந்த குடும்பத்தில் ஏன் பெண் எடுக்க வேண்டும் என்று சலசலக்க, மகனும் இப்படி பேசித் திரிந்தால் நாளைபின்னே பிரச்சனை வந்துவிடும் என்பதை உணர்ந்து பழனி அப்போதே அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
***
“மாப்பிள்ளை வீட்டுல தேதியும் நேரமும் முடிவு பண்ணி கொடுத்திருக்காங்க. எந்த தேதி உனக்கு சரியா வரும்னு பாரு கீர்த்தி.”
தன்னிடம் நீட்டப்பட்ட காகிதத்தை வாங்காது கமலத்தை ஏறெடுத்து பார்த்த கீர்த்தனா, “எல்லாம் உங்க முடிவுபடி தான நடக்குது. இதையும் நீங்களே முடிவு பண்ணுங்க.”
சுரத்தையின்றி ஒலித்த அவள் குரலில் கலங்கிய கமலம் அவளருகில் அமர்ந்து, “எங்க முடிவை நாங்க உன் மேல திணிச்சோமா? நாங்க உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தோம் அதை நீ…”
“சரியா பயன்படுத்திக்கலைனு சொல்ல வரியா?” பேச்சின் இடையில் கீர்த்தி பேச,
“சரியான ஆள் மேல வைக்கலைனு சொல்றேன்.” என்று கமலம் நிறுத்த கீர்த்தி யோசனையாய் நெற்றி சுருக்கினாள்.
மகளின் சிந்தை உணர்ந்து, “நீ விரும்புன பையனை நான் பார்த்தேன்.” என்று பதில் சொல்ல, கீர்த்தி சட்டென நிமிர்ந்து அமர்ந்தாள்.
மகளின் கண்களில் தெரிந்த தவிப்பை கலக்கத்தை கேள்வியை உணர்ந்தவர், “மாமா வந்துட்டு போன அன்னைக்கு நீ அவன்கூட பேசிட்டு இருந்ததை கேட்டேன். இன்னொரு கமலம் இந்த வீட்டுக்கு வந்துடக்கூடாதுல்ல அதுனால அவன்கிட்ட பேசியே ஆகணும்னு தோணுச்சு… நீ குளிக்க போனப்போ போன்லேந்து அவன் நம்பர் எடுத்து பேசி அவனை நேருல பார்த்தேன்.”
‘லாக் போட்டிருந்தேன் எப்படி எடுத்த?’ என்ற கீர்த்தியின் கேள்விக்கு அவள் சிந்தையே அவள் அன்னை போனுக்கும் இவளதுக்கும் ஒரே பாஸ்வர்ட் என்று நினைவுப்படுத்தியது. கமலத்துக்கு அவ்வளவாய் ஸ்மார்ட்போன் உபயோகிக்க தெரியாததால் பழக்க தோஷத்தில் இவள் தான் இவளுடைய பாஸ்வோர்டையே அவருக்கும் போட்டு வைத்தாள்.
“குடும்பத்தை பத்தி விசாரிச்சேன். அப்பா அம்மா இறந்துட்டாங்க, அவங்க பாட்டிகூட இருக்கிறதா சொன்னான். குடும்பம்னு பெருசா யாருமில்லை என் பொண்ணை நான் யாரை நம்பி குடுக்குறது? நாளைக்கே ஏதாவது பிரச்சனை வந்தா என் பொண்ணுக்கு யாரு நியாயம் செய்வா? என் பொண்ணை பெரிய குடும்பத்துல கட்டிக்கொடுக்கணும்னு தான் ஆசைன்னு சொன்னேன்.” என்று கமலம் நிறுத்த, பாய்ந்து வந்தாள் கீர்த்தி.
“யார் இருந்தா என்ன இல்லைனா என்ன? அருண் பாத்துப்பாரு என்னை. எனக்கு அவரு மட்டும் போதும். அவரோட அன்பு போதும். உன்னால தான் அன்னைக்கு அவரு என்னை வேண்டாம்னு அப்புடி பேசுனாரா? உன்னை நம்பி என் விருப்பத்தை சொன்னதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட. இதுக்கு நான் உன்கிட்ட சொல்லாம அவர்கூட போயிருக்கலாம்.” என்ற கணம், அச்சாய் இறங்கியது கமலத்தின் ஐவிரல்களும் கீர்த்தியின் கன்னத்தில்.
“அவனோட போயிருந்தா என்னை மாதிரி அனாதையா தான் நின்னிருப்ப.” கமலத்தின் குரலும் ஆங்காரமாய் உயர்ந்து ஒலித்தது. அவர் செய்த அதே பிழையை தானும் செய்வேன் என்று சொல்லும் மகளை என்னசெய்தால் தகும் என்று தகித்துக் கொண்டிருந்தார்.
“யார் இருந்தா என்ன இல்லைனா என்னனு நீ சொன்ன மாதிரி அவனும் சொல்லி இருந்தா அவனுக்கே கல்யாணம் பண்ணி கொடுக்குறதை பத்திகூட யோசிச்சிருப்பேன். நான் இருக்கேன் அவளுக்குனு கூட சொல்லல அவன்… குடும்பம்னு யாருமில்லைனு நான் மறுத்து பேசவும் ரெண்டு நிமிஷம் யோசிச்சிட்டு உங்க விருப்பம்னு சொல்லிட்டு போயிட்டான்.
அவ்வளவுதான் அவன் காதல். இந்த காதலை நம்பி அவன்கூட போயி புள்ளை பெத்து அனாதையா நிக்க போறியா? உண்மையா காதலிச்சிருந்தா குடும்பம் இல்லைனா என்ன அவளுக்கு நான் இருக்கேனு சொல்லி இருக்கனும். உங்களுக்கு நம்பிக்கை வர நான் என்ன செய்யணும்னு கேட்டிருக்கணும் இல்லையா நம்பிக்கை வரவரைக்கும் நாங்க காத்திருக்கோம்னு சொல்லி இருக்கனும். இல்லைனா என்னை சமாதானபடுத்துற மாதிரி பேசியதாவது இருக்கனும். ஆனா என்ன செஞ்சான் அவன்? உங்க விருப்பம்னு விட்டுட்டு போயிட்டான். உன் அன்பை உதாசீனப்படுத்தி உன்னை விட்டுட்டான். உன் அப்பன் என்னை விட்ட மாதிரி அவனும் உன்னை விட்டுட்டான்.” ஆடித்தீர்த்துவிட்டார் கமலம்.
அருணே தன் மகளை வேண்டாம் என்று சொல்ல வைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் கமலம் அருணை சந்திக்கச் சென்றார். ஆனால் அவனோ இவருக்கு பெரிதாய் வேலை வைக்காமல் தானே ஒதுங்கிக்கொண்டான்.
அதை தற்போது மகள் முன் போட்டு உடைக்க, அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் இடியாய் கீர்த்தியின் நெஞ்சில் இறங்கி தாக்க, அது படபடத்தது. கால்கள் தள்ளாடியது. தந்தை தன் அம்மாவை விட்டதை போல் அருண் தன்னை விட்டு விட்டான் என்ற எண்ணமே அவள் நெஞ்சை பிழிந்து கசக்கியது.
நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை, “நிஜமா தான் சொல்றியாமா? அருண்… அவரு என்னை விட்டுட்டாரா?” என்று கீர்த்தி திணற,
“நீ போயி பேசுனியே என்ன சொன்னான்? வேண்டாம்னு தான சொன்னான்?” அருணை பார்த்துவிட்டு வந்தபின் கீர்த்தி திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருக்க அதையே மகளுக்கு மீண்டும் நினைவுபடுத்தினார். தொடர்ந்து,
“என்னை மாதிரி பொய்யில் உன் வாழ்க்கை ஆரம்பிச்சிடக்கூடாதுனு தான் இதை இப்போ சொன்னேன். இந்த காதல் போனா போய்ட்டு போகுது, மாப்பிள்ளை நம்பர் அவங்க அண்ணி குடுத்தாங்கள்ல போன் பண்ணி பேசு. பேசி பழகு. இனிமே இதுதான் உன் வாழ்க்கை. மாப்பிள்ளை குடும்பமும் நல்லா பழகுறாங்க. பெரிய குடும்பம், ஒருத்தர் இல்லைனாலும் இன்னொருத்தர் உனக்காக பேசுவாங்க. உன்னை யாரும் விட்டுற மாட்டாங்க.” என்று சொல்லி நகர, கீர்த்தியின் எண்ணம் அருணிடம் நிலைத்தது.
அவன் காதல் பொய்யென்று அவள் அம்மா சொல்லியாகிற்று ஆனால் அவள் காதல்… அவள் வைத்த நேசம்… அதனால் விழைந்த சந்திப்புகள்… அதில் இழையோடிய காதல் வார்த்தைகள்… அதனுடனான நெருக்கங்கள்… அது தந்த கனவுகள்… அனைத்தும் உண்மை தானே! உண்மையை அவ்வளவு எளிதில் மனதிலிருந்து அழிக்க அது என்ன தண்ணீரிலா பதிந்து வைக்கப்பட்டிருக்கிறது?
கீர்த்தி இப்படி இங்கு மருகிக்கொண்டிருக்க, போன் நம்பரும் தெரியாமல் அவளும் தன்னை தொடர்பு கொள்ளாமல் இருப்பதை உணர்ந்து அவளை நேரில் சந்திக்கவென திருப்பூர் கிளம்பினான் அஞ்சன்.