நெற்றியிலிருந்து மணி மணியாய் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டபடி கரண்டியை சுழற்றி அனாசியமாய் உருளை வறுவல் செய்தவள் மற்றொரு அடுப்பில் இட்லி ஊத்தி வைத்தாள். மறுபுறம் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி உணவுப் பையில் திணித்துவிட்டு,
“சஞ்சய்… நேரமாகுது என்ன பண்ணிட்டு இருக்க?” என்று மகனுக்கு குரல் கொடுத்தாள்.
அவளது குரலுக்காகவே காத்திருந்தது போல் அவள் முன் ஆஜராகியவன் பள்ளி சீருடையை அவளிடம் நீட்ட, நீண்டிருந்த அவனின் சிறிய கரத்தை தாண்டி சட்டையுடன் நீண்டது மற்றொரு கரம்.
“நீ இன்னைக்கு தான் முதல்ல வந்த… நான் ஏழு வருஷம் முன்னாடியே வந்தவன்டா.” தோள் குலுக்கி புருவம் உயர்த்தி மகனிடம் மல்லுக்கு நின்றான் அஞ்சன்.
இது தினம் நடக்கும் கூத்து என்றாலும் இருவரில் யார் முதலில் எழுகிறார்களோ அவர்களை தயார் செய்து விடுவாள் கீர்த்தி. சில நாட்கள் இருவரும் ஒரே நேரத்தில் எழுந்து குளித்து அவளை படுத்துவதும் உண்டு இன்று போல.
இருவரையும் மாறி மாறி பார்த்தவள் அவர்களுக்கு முதுகுகாட்டி அமைதியாய் தன் வேலையைத் தொடர, அப்பனும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு கீர்த்தியை இருபுறமும் பிடித்துக்கொண்டனர். சஞ்சய் அவள் வலக்காலை பிடித்துக்கொள்ள அவளது இடப்பக்க கையை பிடித்துக்கொண்டான் அஞ்சன்.
“அடுப்புல வேலை செய்யும் போது தொந்தரவு செய்யக்கூடாதுனு எத்தனை முறை உங்க ரெண்டு பேருக்கும் சொல்றது?” கரண்டியை ஆட்டியபடி அவள் மிரட்ட இருவரும் ஒன்றுபோல மற்றவரை கைகாட்டினர்.
இருவரையும் முறைத்தவள், “ரெண்டு பேரும் உங்களுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வாங்க அப்புறம் பாக்கலாம்.”
“பேசுறதுக்கு என்ன இருக்கு? எப்போதும் நான்தான் முதல்ல உனக்கு. பொறவுதான் ஆரா இருந்தாலும்.” அழுத்தமாய் வந்தது அஞ்சனிடமிருந்து.
“ம்மா நாந்தான் நம்ம வூட்டலையே சின்ன புள்ள… எனக்குத்தான் எல்லாம் செய்யணும்.” சஞ்சையும் உதடு பிதுக்கினான் அப்பனுக்கு தப்பாத புள்ளையாக.
இது வேலைக்காவாது என்று முடிவெடுத்த கீர்த்தி, “இட்லி எடுத்துட்டு வரேன் சாப்பிடலாம் முதல்ல… அப்புறம் வச்சிக்கலாம் இந்த பஞ்சாயத்தை. எனக்கு பசிக்குது.” என்று இட்லியை ஹாட்பாக்ஸ்ல் அடைக்க, அஞ்சனும் சஞ்சையும் ஏமாற்றத்துடன் உண்ண அமர்ந்தனர். இதற்கு மேல் அவளிடம் என்ன மல்லுக்கட்டினாலும் காரியம் நடக்காது என்று இருவருக்குமே புரிந்துவிட்டது.
மூவரும் சேர்ந்தே உண்ண, முதலில் முடித்த அஞ்சன் எழாது அமர்ந்திருந்தான். கீர்த்தி மகன் உண்ணும் வரை காத்திருந்து பொறுமையாய் உண்டு எழுந்தவள் மகனுக்கு சட்டை மாட்டிவிட்டு பள்ளிக்கு கிளப்ப, பொறுமலுடன் அதை பார்த்திருந்தான் அஞ்சன். சற்று நேரத்திற்கு எல்லாம் பள்ளி வேன் சத்தம் கேட்க, அஞ்சனை முறைத்தபடியே துப்பட்டாவை நைட்டி மேல் போட்டபடி வெளியேறினாள். அம்மா கைபிடித்து பள்ளிக்கு கிளம்பிய சஞ்சய் வேண்டுமென்றே தந்தையிடம் பழிப்பு காட்டிச் செல்ல அடிங்க… என்ற சைகை அஞ்சனிடம்.
‘ரொம்ப பண்றான்.’ முணுமுணுத்த அஞ்சன் உண்ணுமிடத்தில் இருந்த பாத்திரங்களை சிங்கிள் போட்டு வந்து அமர்ந்தவன் அலைபேசியில் மூழ்கிவிட சிறிது நேரத்திற்கெல்லாம் மகனை அனுப்பிவிட்டு வந்த கீர்த்தி அலைபேசியை பறித்து தூர வைத்தாள்.
“இப்போ மட்டும் என்னமா நினைக்குறான் உன் புள்ள? போட்டிக்குத்தான் நிக்குறான்.” என்ற நொடி பட்டென அவன் வாயில் அடித்தாள் கீர்த்தி.
“என்ன என் புள்ள? நீங்க இல்லாமத்தான் வந்தானாக்கும் அவன் எனக்கு… நம்ம புள்ளைன்னு சொல்லுங்க.”
“உன் அதட்டல் அடித்தல் எல்லாம் என்றகிட்ட மட்டும்தான் அவனை ஏதாவது சொல்றியா நீ? அவன் என்ன சொன்னாலும் மண்டையை ஆட்டுற.” குறை படித்தல் படலத்தை இனிதே துவங்கி வைத்தான் அஞ்சன்.
“சொன்னாலும் கேட்டுக்குற புள்ளையை பெத்து வச்சிருக்கேன் பாருங்க. உங்களை அச்சடிச்சு பொறந்திருக்கான் எப்படி வேணாம்னு சொல்றதாம் அவங்கிட்ட!” என்று குழைந்த மனைவியை அருகே இழுத்து மடியில் அமர்த்திக்கொண்டவன் அவள் துப்பட்டாவை உருவி வீசிவிட்டு கழுத்தில் முகம் புதைத்து ஆழ மூச்செடுத்தான்.
அவன் சிகைக்குள் விரல்களை நுழைத்தவள் அதை கலைத்து விளையாட, “இன்னைக்கு லீவு போட்டுறவா?” தாபமாய் ஒலித்தது அவன் கேள்வி.
“இப்போவே எல்லா லீவையும் போட்டுட்டா சஞ்சய்க்கு லீவு விடும்போது ஊருக்கெல்லாம் போக முடியாது.” என்றவள் அவனை தன்னிடமிருந்து பிரித்துவிட்டாள்.
அதிருப்தி மூச்சொன்று அவனிடமிருந்து வெளியேற, அறைக்குச் சென்று அவன் சட்டையை எடுத்துவந்து அவனுக்கு மாட்டிவிட்டாள்.
“மூஞ்சை தூக்காதீங்க. பெர்மிஷன் போட்டு சீக்கிரம் வாங்க.” என்று கன்னத்தில் அழுத்தமாய் உதடுகளை ஒற்றி எடுக்க,
“அவனை ஏமாத்துற மாதிரி என்னை ஏமாத்த பாக்குற… பர்மிஷன் போட்டு வர நேரம் சஞ்சய் வந்துடுவான் பொறவு சீக்கிரம் வந்து என்ன பிரயோசனம்?” ஏக்கமாய் மொழிந்தவன் அவளை அணைத்து விடுவித்தான்.
“முக்கியமா பேசணும் அதுக்குத்தான் வரச்சொன்னேன்…”
“பேசுறதா கண்ணு முக்கியம்?” என்று மையலாய் அவன் இழுக்க, அவன் புறங்கையை இடித்தவள்,
“வேற என்ன முக்கியமாம்? ரெண்டாவது புள்ளையும் வேண்டாமாம் அப்புறம் எதுக்கு லீவு போட்டுக்கிட்டு…”
“ம்ச்… நீ எப்படி பேசுனாலும் சஞ்சய் போதும் நமக்கு. அவன் ஒருத்தன் கூட போட்டி போடவே நேரம் போதல எனக்கு…” என்றவன் ஒரு குழந்தை போதும் என்பதில் அத்தனை உறுதியாய் இருந்தான். பாசத்தை புரிதலோடு பகிர்ந்துகொள்ளத் தெரியா தன் அறியாமையில் தன் பிள்ளையும் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்பது அவன் நிலைப்பாடு. அதை கீர்த்தியால் கூட மாற்ற முடியவில்லை. அவன் விருப்பத்திற்கே விட்டுவிட்டாள்.
அவளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியவன் கீர்த்தி வேண்டியபடியே நேரமே வீடு வந்திருந்தான். சஞ்சய்யும் தன் வீட்டுப்பாடம் அனைத்தையும் முடித்துவிட்டு டீவி பார்த்துக்கொண்டிருக்க, டீவியை அணைத்த கீர்த்தி, நேரமே அவர்களுக்கு இரவு உணவு அளித்து,
“மாடிக்குப் போலாமா?” என்று இருவரையும் பார்க்க, உற்சாகமாய் எழுந்தனர் இருவரும்.
இரண்டு தலையணை கையில் எடுத்துக்கொண்ட சஞ்சய் தந்தையைப் பார்க்க, பாய் ஒன்றை எடுத்துக்கொண்டு மாடியேறினான் அஞ்சன். கீர்த்தி வீட்டை பூட்டுவிட்டு வருவதற்குள் தந்தையும் மகனும் பாய் விரித்து படுத்து நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்.
அஞ்சன் மேல் ஒரு கால் போட்டு அவனை ஒருபக்கமாய் அணைத்தபடி படித்திருந்த மகனை ரசித்தபடி அவனருகில் படுத்துக்கொண்டவள் மகனோடு சேர்த்து கணவனை அணைத்தாள். மனைவியை கண்டதும் கனிந்த அஞ்சனது விழிகள் மீண்டும் மகன் சுட்டிக்காட்டிய விண்மீன் மீது பதிந்தது. அவன் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறியபடியே மகனை வாரித்தூக்கி நெஞ்சில் போட்டுக்கொண்டவன் மனைவியை அருகில் இழுத்துக்கொண்டான்.
“ப்பா இன்னைக்குத்தான் தருண் ஸ்கூலுக்கு வந்தான். நேத்திக்கு ஏன் வரலைனு கேட்டேனா அவன் தம்பி பாப்பா இதோ வானத்துல இருக்குற நட்சித்திரமா மாறிட்டான் அதுனாலத்தான் வரலைன்னு சொன்னான். பாப்பா எல்லாம் நட்சத்திரமா மாறிடுவாங்களா ப்பா?” தன் தாடை பிடித்துக்கொண்டு சஞ்சய் கேட்ட கேள்வியில் அதிர்ந்து விழித்தான் அஞ்சன்.
அஞ்சனால் சமாளிக்க முடியாது என்று சடுதியில் புரிந்துகொண்ட கீர்த்தி சஞ்சய் தலையை ஆதுரமாய் தடவிவிட்டு, “எல்லா பாப்பாவும் நட்சத்திரமா மாற மாட்டாங்க தங்கம்… இங்க இருந்தா கஷ்டப்படுன்னு நினைக்குற பாப்பாவையெல்லாம் வானத்துல இருக்குற ஏஞ்சல்ஸ் அவங்ககிட்ட கூப்பிட்டுப்பாங்க. சஞ்சய் குட்டி மாதிரி ஹாப்பியா இருக்குறவங்களை அப்பா அம்மாகிட்டவே விட்டிருவாங்க.” என்றிட, தந்தையையும் தாயையும் ஒருங்கே தன் குட்டிக்கரம் கொண்டு அணைத்தவன், “எஸ்… சஞ்சய் இஸ் அ ஹாப்பி பாய்.” என்று குதூகளித்தான்.
நெகிழ்வுடன் மகன் உச்சியில் அஞ்சன் முத்தமிட கீர்த்தியின் மனமும் உடலும் நெகிழ்ந்தது. கடந்து வந்த பாதை கரடு முரடாய் இருந்தது இவனின் தன்னலமில்லா அன்பை அனுபவிக்கத்தானோ என்ற எண்ணம் தோன்ற, அவர்களை நெருங்கி இறுக அணைத்துக்கொண்டாள் இருவரையும்.
சற்று நேரம் வளவளத்த சஞ்சய் அசதியில் உறங்கிவிட, அஞ்சன் மகனை அப்படியே பக்கத்தில் படுக்க வைக்க, கையுடன் எடுத்துவந்த போர்வையை போர்த்திவிட்டாள் கீர்த்தி. சஞ்சயை தொந்தரவு செய்யாது நகர்ந்து படுத்துக்கொண்டவர்கள் தங்கள் துணையின் அருகாமையை ரசித்து உணர்ந்து அனுபவிக்க, அஞ்சன் முகம் பற்றி தன்னை பார்க்கும்படி திருப்பினாள்.
“இங்குட்டு தான் வேலை கத்துக்க முடியும்னு சொல்லி ஊருல தங்காம இத்தனை வருஷம் அம்மா வீடு பக்கத்துல இங்குட்டே இருந்தாச்சு… இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்குறது?”
“இங்குட்டு இருக்குறதுல என்ன கஷ்டம் உனக்கு? நினைச்ச நேரம் அத்தையை பாத்துட்டு வந்துடலாம். குருவும் குருங்கையும் அப்பா அம்மாகூடவே ஊருக்கு வந்துட்டாங்க. சஞ்சய் பொறந்ததும் அவனோட இருக்கணும்னு வேலையை நீ விட்டப்போ நான் எதுவும் சொல்லலைதானே… பொறவு ஏன் என்னை நோண்டி நோண்டி கேக்குற?”
“அப்படியாவது ஏதாவது முன்னேற்றம் வருதான்னு பாக்கலாம்னு தான்…” என்று நொடித்தாள் கீர்த்தி.
அவளை உலுக்கியவன், “என்ன முன்னேற்றம் இல்ல இப்போ?” என்று பாய,
“உங்களுக்கு சேர வேண்டியதை உங்க அப்பாகிட்ட கேக்குறதுல என்ன பிரச்சனை உங்களுக்கு?”
“நான் கேக்க மாட்டேன்.”
“நாளைக்கு சஞ்சய் இப்படி உங்ககிட்ட முறுக்கிட்டு இருந்தா விட்டுருவீங்களா?”
“அதெப்படி விடுவாங்க… என்ற புள்ளைக்கு இல்லாததா…”
“இதேதான் மாமாவும் நினைப்பாங்க. நீங்க ஆசைப்பட்ட மாதிரி புதுமையா பிளாஸ்டிக் குப்பையை நொறுக்கி உருக்கி செயற்கை நூல் தயாரிச்சு அதிலேந்து ஆடை செஞ்சு ஏற்றுமதி செய்றதெல்லாம் பெரிய விஷயம். நம்மாள அதுமாதிரி புதுசா திறக்க முடியலைன்னாலும் அந்த கார்மெண்ட்ஸ் ஓனர் கேக்குற மாதிரி குறிப்பிட்ட தொகை கொடுத்து பார்ட்னர் ஆகிட்டா போக போக நாமளும் மேல வந்துடலாங்க. புடிவாதம் புடிக்காதீங்க. வாய்ப்பு வரும் போதே புடிச்சிக்கணும். இத்தனை வருஷம் இல்லாம இப்போதான் ஏதோ புதுசா இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. நம்மாள கண்டிப்பா அவங்க கேக்குற தொகையை குடுக்க முடியுங்குறப்போ எதுக்கு இதை தவற விடுறீங்க? முன்னேறுறதை விட வீம்பு தான் பெருசா?” என்று கேட்டிட, அஞ்சன் மெளனமாய் வானை வெறித்தான்.
“ஆரம்பத்துல லாபம் பெருசா வரலைனாலும் இந்த ஐடியாவுக்கு நிறைய வரவேற்பு கிடைக்குங்க. நம்பி இறங்கலாம். நாமளும் எத்தனை வருஷத்துக்கு வாடகை வீட்டுல இருந்துகிட்டு மாச கடைசியில எண்ணி எண்ணி வாழுறது. நமக்காக இல்லைனாலும் சஞ்சய்க்காக யோசிங்க. எல்லாம் கைகூடுனா ஏதோ நம்மால இந்த சுற்றுசூழலுக்கும் நல்லது செஞ்சமாதிரி ஆச்சு.” என்று பேசிக் கரைக்க, யோசிக்கிறேன் என்ற ஒற்றை வார்த்தையே வந்தது.
“இப்போதான் யோசிக்கவே போறீங்களா? கிழிஞ்சிடும்… நீங்க எப்போ யோசிச்சு எப்போ முடிவெடுத்து… ம்ம்…” வேண்டுமென்றே பெருமூச்சொன்றை அவள் இழுத்துவிட அவள் கன்னத்தை அழுந்தப்பற்றி முத்தம் வைத்தவன்,
“ஆரு ஓசனை இது? என்ற மூளையை சலவை செய்யச் சொல்லி உன்ற மாமனார் சொன்னாராக்கும்?” என்று கேட்டு வைக்க, ஆம் என்று பலமாய் தலையாட்டினாள் கீர்த்தி.
“நினைச்சேன்… பெருசு ரொம்ப நாளா அமைதியா இருக்கேனு… இங்க ஸ்க்ரூ போட்டுட்டு இருந்திருக்கு.” என்று கேலி பேச, அவன் இடையை கிள்ளினாள் கீர்த்தி.
“வலிக்கவே இல்லைடி…” என்றவன் அவள் இடையை பட்டென கிள்ளி, “இப்படி கிள்ளனும்…” என்று சீண்ட, அவனது தீண்டலில் துள்ளியவள் அவன் தோளில் கடிக்க பதிலுக்கு அவனும் கடித்து வைக்க, காலங்கள் போனாலும் ஓயாத இவர்களின் சீண்டல் விளையாட்டை கண்டு மதி ஒளிந்துகொண்டது மேகக்கூட்டங்களுக்கு இடையில்.