அந்தி சாய்ந்ததும் வருவேன் என்ற கணவன் பின் மாலை துவக்கத்திலேயே வந்து நிற்க, இனிய அதிர்வுடன் கதவை திறந்து நின்றாள் கீர்த்தி.
“உள்ளார வுடுவியா இல்லை வந்த வழியே போய்டவா?” என்ற அவன் கேள்வியில் அதிர்வு நீங்கி பதட்டம் வர, கதவை அடைத்துக்கொண்டு நின்றவள் நகர்ந்து அவனுக்கு வழி விட்டாள்.
உள்ளே நுழைந்தவனுக்கு மனைவியின் பார்வை அச்சு பிசகாது தன்னை பின்தொடர்வது தெரிந்தாலும் அதை கண்டுகொள்ளாது தன்னை சுத்தப்படுத்தி வந்தான். துண்டை எடுத்துக்கொண்டு அவன் குளியலறை நுழைகையிலே அவனுக்கு காபி கலந்தவள் அவன் குடிக்கும் பதத்திற்கு ஏதுவாய் இரண்டு முறை ஆற்றி வைத்திருந்தவள் அவன் ஹாலில் அமரவும் அதை எடுத்துவந்து அவன் முன் நீட்ட, வாங்காது அவளை அழுத்தமாய் பார்த்தான்.
சில நொடிகள் தன் முன் நீண்டிருக்கும் மனைவியின் கரத்தையும் அவனை கெஞ்சலாய் பார்க்கும் அவளது விழிகளையும் மாறி மாறிப் பார்த்தவன் சாவுகாசமாய் காபி டம்ளரை வாங்கி கீழே வைத்தான்.
“என்னமோ அந்யோனியமா இருக்குற மாதிரி என்னை பாத்ததும் கண்ணுல தண்ணி வைக்குற, காபி போட்டு எடுத்துட்டு வர, கண்ணால பேசுற… எதுக்கு இதெல்லாம்? இங்குட்டுதான் ஆரும் இல்லையே?” அந்நியத்தன்மையோடு வந்த அஞ்சனின் குற்றச்சாட்டில் அவளின் கண்கள் முனுக்கென்று நீரை உகுத்தது.
“என்ற பேச்சைக்கூட இப்போ சகிக்க முடியலையோ?” அவளின் கண்ணீரை கண்டு வெம்பலுடன் அவன் முறையிட, தவித்துப்போனவள் மறுப்பாய் தலையசைத்து அவனருகில் மண்டியிட்டாள்.
“உனக்கு என்னை புரியுதா முதல்ல?” அம்பாய் வந்தது அவன் கேள்வி.
முகத்தை சுருக்கியவள் தயங்கி தலைகுனிந்து விட, தன் ஒற்றை கரம் கொண்டு அவள் கன்னத்தை அழுந்த பற்றியவன் அவளை நிமிர்த்தி,
“சிறுசுலேந்து அண்ணங்க யூஸ் பண்ணி கொடுத்த பொருளையே ஏத்துக்க முடியாம இத்தனை வருஷம் நினைவு வச்சி மருகுற எனக்கு என்றகூட பழகுனவனோட காதலி தான் என்ற பொண்டாட்டின்னா எப்படி இருக்கு தெரியுமா? எல்லாரும் வேண்டாம்னு போடுற பொருளை வச்சி வாழ்றவனா ஆகிட்டேன்ல…”
“ப்ளீஸ்…” திணறியவளுக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை. அவன் இறக்கி வைத்த சொற்களின் கணம் அவளைத் தாக்க, நெஞ்சடைத்து அதன் வேலையை தொடரமுடியாமல் விம்மியது.
“எல்லாரும் அவங்களோடதை விட்டுக்கொடுத்து கொடுத்து என்னோடதுனு எதுலையுமே உரிமை கொண்டாட முடியாதபடி ஆக்கிட்டாங்க. நீ கூட அவன் வேணாம்னு தூக்கிப்போட்டவ தானே?” என்றிட, தன் கன்னத்தில் இருந்த அவனது கரத்தை வேகமாய் தட்டிவிட்டவள்,
“ஆமா அவன் வேணாம்னு சொன்னவ தான் இப்போ நீங்க வேணும்னு நிக்குறேன்.” என்றாள் கீர்த்தி சற்று ஆவேசமாய்.
“நான் வேணுமா?” நேசம் வைத்த அஞ்சனின் மனது லேசாய் இளக உடனே தெளிந்தவன், “அவனை மறக்க முடியாம என்னையும் சகிச்சிக்க முடியாம இருந்தவளுக்கு இப்போ நான் வேணுமா?”
அடுத்த கட்டத்திற்கு முன்னேறாமல் சுழல் நீர் போல் மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்திற்குள் பிரச்சனை சுழல அதைவிட்டு வெளியே வர விரும்பிய கீர்த்தி அவன் கரம் மேல் தன் கரம் பதித்து,
“பழசை என்னால மாத்த முடியாது இனிமே எப்படி இருக்கணுங்குறதை என்னால தீர்மானிக்க முடியும். என் மேல கோபம்னா வீட்டுல இருந்து சண்டை போடுங்க இப்படி என்னை விட்டு போகாதீங்க.” மென்மையாய் பேசியவள் கண்களில் நீர் விழத் தயாராய் திரண்டு நின்றது.
அவள் குரலில் இருந்த கெஞ்சலும் கண்களில் திரண்டிருந்த கண்ணீரும் தன்னை பலவீனமாக்குவது புரிய கண்களை இறுக மூடி திறந்தவன் சட்டென குரலை உயர்த்தினான்,
“கண்ணை மூடுனாலே அந்த பயலும் நீயும்தாண்டி நியாபகத்துக்கு வரீங்க.”
இதற்கு என்னதான் தீர்வு? என்று குழப்பமும் கலவரமுமாய் பார்த்தவள் மெளனத்தை ஆயுதமாக்கிக்கொள்ள,
“சட்டுனு அமைதியாகிட்ட? இவ்வளவு நேரம் இனிமே மாத்திக்குறேன் தீர்மானிச்சிக்குறேன் அப்படி இப்படின்னு வியாக்கியானம் பேசுன எங்க இப்போ என் மனசுல இருக்குற உங்களோட பிம்பத்தை மாத்திக்காட்டுடி பாக்கலாம். நான் கண்ணை மூடுனா நீ என்ற பொண்டாட்டியா மட்டும்தான் இருக்கனும். அவனோட முன்னாள் இந்நாள் பின்னாள் எல்லாம் இருக்க கூடாது. உன்னால செய்ய முடியுமா?”
உணர்ச்சிப் பெருக்கில் அதிகரித்த வேக மூச்சுக்களை சமன்படுத்த சில நொடிகள் எடுத்துக்கொண்டவன் தொடர்ந்து, “முடியாதுல்ல? உண்மையை அழிக்க முடியாது. அவன் வேணாம்னு சொன்னதால என்னை சகிச்சிக்க ஆரம்பிச்ச உன்ற மனசுல என்னைக்கும் இந்த அஞ்சன் இரண்டாம்பட்சம்தான். எல்லாத்துலையும் எல்லாருக்கும் இந்த அஞ்சனுக்கு ரெண்டு மூணு நாலுன்னு கடைசி இடம்தான்…”
அவளை விட்டு விலகி இருந்த நாட்களில் அவள் நினைவோடு அருணின் எண்ணங்களும் சேர்ந்துகொண்டு ரணமாகி இருந்த மனதை வலிக்க வலிக்க கிண்டி கிளறி கீறிவிட்டிருக்க, அதை வெளியே கொட்ட முடியாமல் இருந்தவன் கீர்த்தி எதிரில் இருக்கவும் மொத்தமாய் கொட்டினான்.
கணவன் கொட்டிய வார்த்தைகளில் பொதிந்திருந்த உண்மை மனைவியை வெகுவாய் தாக்க, கணவனை நேருக்கு நேராய் பார்த்து ‘நீ இரண்டாம்பட்சம் இல்லை. நீயே என் வாழ்வில் முதன்மையானவன்’ என்று உறுதியாய் அவளால் சொல்ல முடியவில்லை. அப்படியே சொன்னாலும் அதை உண்மை என்று நம்பும் நிலையிலும் கணவன் இல்லை என்று நன்றாகவே புரிந்தது கீர்த்திக்கு.
“என்ன கண்டுக்கிடலைனு இப்படி திரியுறேன்னு தெரில… ரோஷம் வந்தா இப்படித்தான் வுட்டுட்டு போவாங்களா? நீ நினைச்ச மாதிரி அந்த புள்ளை உன்னை விரும்பல சரி… ஆனா விரும்புன நீயே அந்த புள்ளையை வுட்டுட்டு போயிட்டில்ல அப்போ உன்ற விருப்பம் எந்த விதத்துல உசத்தினு இப்படி குதிச்சிட்டு இருக்க?” சட்டென செவியில் விழுந்த குரலில் இருவரும் குரல் வந்த திசை நோக்கி பார்க்க, ருத்திர மூர்த்தியாய் நின்றிருந்தார் பழனிவேல்.
கதவை சாற்றவில்லையா என்று அஞ்சன் மனைவியை குற்றம்சாட்டும் பார்வை பார்க்க, நீ கதவை மூடவில்லையா என்று எதிர் பார்வை பார்த்தாள் கீர்த்தி.
“கதவை ஒழுங்கா சாத்தாம ரெண்டு பேரும் இப்படி அடிச்சிட்டு இருந்தா திருட்டு போனாகூட தெரியாது.” என்று பழனி நன்றாக உள்ளே நுழைந்து குரல் உயர்த்த, பரபரப்புடன் எழுந்த கீர்த்தி,
“எல்லாத்துக்கும் காரணம் சொல்லுங்க.” என்று பொதுவாய் கடிந்தவர் மகனை கண்களில் நிரப்பிக்கொண்டார். மகன் கிடைத்துவிட்டான் இரவு வீட்டிற்கு வருவதாய் வாக்கு கொடுத்திருக்கிறான் என்று கீர்த்தியிடமிருந்து தகவல் வந்தபின் எப்போது மாலை ஆகும் என்று காத்திருந்து வந்திருந்தார் மனிதர்.
புதிதாய் தென்பட்ட அவரின் பார்வையில் சங்கடமாய் தலைகோதிய அஞ்சன் எழுந்து வெளியேற முற்பட, கீர்த்தியிடம் பீதி தொற்றிக்கொண்டது.
“ஓடுனது பத்தாதா? எங்குட்டு ஓடப்பாக்குற திரும்பவும்?” என்ற பழனியின் குரல் அவருக்கு விஷயம் தெரிந்திருக்கிறது என்பதை உணர்த்த, அஞ்சன் அப்படியே நடையை நிறுத்தினான். அமைதியாய் மகன் நிற்கவும் பழனி உள்ளே நுழையும் போது கேட்ட கேள்வியை மீண்டும் முன்வைத்தார்.
‘நீ நினச்சா மாதிரி அந்த புள்ளை உன்னை விரும்பல சரி… ஆனா விரும்புன நீயே அந்த புள்ளையை வுட்டுட்டு போயிட்டில்ல.’ என்ற அவரின் குற்றச்சாட்டு அஞ்சனை தூண்டிவிட்டது.
“என்ற விருப்பத்தை விமர்சனம் பண்றவங்களுக்கு என்னோட வலி புரியாது. உங்களை ஆரு இதுல எல்லாம் தலையிட சொன்னா?” என்று தந்தையிடம் எகிறினான்.
“நான் தலையிடாமா வேறு ஆரு பூந்து மூக்கனாங்கயிரு கட்டுவா? நான் பாத்து கட்டி வச்ச கண்ணாலாம்ல இது. இதுல இருக்குற பிசகு பிழையெல்லாம் சரி பண்ற முழு உரிமை எனக்கு இருக்கு. அந்த பய எல்லாத்தையும் சொன்னான். தப்பாவே இருக்கட்டும் கோச்சிக்கிட்டு வூட்டை வுட்டு போறதெல்லாம் என்ன பழக்கம்? அவன்தான் கூறுகெட்டதனமா இந்த புள்ளைக்கு துரோகம் பண்ணிட்டானா நீ என்ன பண்ணி இருக்கனும், அந்த பிள்ளைக்கு அரவணைப்பா இருந்திருக்கணும். நீ அரவணைச்சா திருப்பி அது உன்னை அரவணைச்சிட்டு போகுது. அதை பண்ணாம வூட்டை வுட்டு போறானாம்… இன்னும் நீ போனது ஆருக்கும் தெரியாது. தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமுல்ல?”
‘என்ன ஆக்கிடப்போகுது? என் மனசு ஒடஞ்சிபோனதோட இதெல்லாம் பெருசில்லை.’ என்று நெஞ்சை நிமிர்த்தி நின்ற மகனின் தோளை அழுத்தி விட்டவர்,
“உன்ற அம்மாவுக்கு தெரிஞ்சாலே அறுத்து வுட்டுருவா…” என்றார்.
என்ன சொல்கிறார் என்று கணவனும் மனைவியும் அவரையே பார்க்க,
“உங்க உறவை அறுத்து வுட்டுருவாங்க அதுதான் வேணுமா உங்களுக்கு?” என்று பொதுவாய் சொன்னவர் மகனிடம் அழுத்தமாய் பார்வை பதித்து, “என்ன அறுத்து வுட்டுறலாமா?” என்க, அஞ்சனின் நெஞ்சம் நூறு மைல் ஓட்டமெடுத்து நின்றது போல் படபடத்தது. கீர்த்தியின் நிலையை சொல்லவும் வேண்டாம். உயிரை கையில் பிடித்து கணவனை விட்டு விழி அகற்றாது துடித்து நின்றாள்.
“உன்ற தாத்தா சொத்து நிறைய சேர்த்து வச்சிருந்தாலும் ஒரு கட்டத்துல எல்லாம் நட்டத்துல கைவிட்டு போற நிலைமை வந்துச்சு. சில சொத்துக்களை வித்து சரிகட்டுனோம் அப்படியும் நிலைமை கைமீறி போகக்கூடாதுனு பாத்து பாத்து செலவு பண்ண வேண்டிய நிலைமை. நீங்க வூட்டுல அஞ்சு பேரு அஞ்சு பேருக்கும் எல்லாமும் புதுசா வாங்கித்தர முடியாத சூழ்நிலை.
கணவனின் அதிருப்தி பார்வையில் வாய் திறந்தாள் கீர்த்தி, “குடும்ப சூழ்நிலைனு இப்போ சொல்ற நீங்க முன்னாடியே இவர்கிட்ட சொல்லிருந்தா இவரும் புரிஞ்சிருப்பாரு மாமா.”
“பாத்துக்கடா… உனக்காகதான் பேசுது. இனிமேலாவது புழைச்சிக்க… ம்மாடி தண்ணி கொண்டா…” என் கடமை முடிந்தது என்பது போல் தண்ணீர் வாங்கிப் பருகியவர் சொல்லிக்கொண்டு கிளம்ப, கதவடைத்து வந்த கீர்த்தி ஆறிப்போயிருந்த காபியை சூடு செய்து எடுத்து வந்து கொடுத்தாள்.
“எனக்குன்னு பாத்து பாத்து செய்வேன்னு நான் காத்துக்கிடந்த காலத்துல இதெல்லாம் செஞ்சிருந்தா எல்லாம் சரியாகியிருக்குமோ என்னமோ?” அவள் காபி சூடு செய்து எடுத்து வந்ததை சுட்டிக்காட்டி அவன் சொல்ல,
“நீங்க நினைச்சா இப்போகூட எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்.” என்றாள் கீர்த்தி.
சடசடவென கொட்டிவிட்டு சென்ற மழை போல் தந்தையின் சொற்கள் கனன்று கொண்டிருந்த அவனின் ரணத்தை ஆற்றுப்படுத்தியிருக்க, சற்றே நிதானம் எட்டிப்பார்த்தது அவனிடம்.
சூடான காபியை ரசித்து உள் இறக்கியவன் நேரமெடுத்து யோசனையுடன் அதை குடித்து முடித்தான். அவன் குடிக்கும் வரை அமைதியாய் இருந்த கீர்த்தி,
“இனிமே என்னை விட்டு போக மாட்டீங்கள்ல?” என்று எதிர்பார்ப்போடு கேட்க, அவளை நிமிர்ந்து பார்த்தவன்,
“வேற வழி இருக்கா என்ன? உன்னை விட்டு தூர போனாவாவது உன்னோட துரோகம் மறக்கும்னு நினைச்சேன், முடியல… மண்டைக்குள்ள இருந்துட்டு குடையுற. நீ எப்படி வேற வழி இல்லாம என்னை சகிச்சிக்கிறியோ அதையே நானும் பழகிக்குறேன். நானும் உன்னை சகிச்சிக்குறேன்.” என்றதோடு எழுந்து அறைக்குள் சென்றவன் தலையணை எடுத்து வந்து ஹாலில் போட்டு படுத்துவிட்டான்.
அவனையே கண்ணீரோடு பார்த்தவள் இதுவும் கடந்து போகும். நேரம் கூடி வந்தால் வசந்த காலம் வீசும் என்ற நம்பிக்கையோடு இரவு உணவு செய்து தானும் உண்டு அவனையும் உண்ண வைத்து உறங்க அழைத்தாள்.
“அந்த ரூமுக்கு வந்தா உன் டேட்டூ தான் நியாபகம் வருது பரவாயில்லையா?” என்று அவன் கேட்டு வைக்க, அறையிலிருந்த மற்றொரு தலையணை எடுத்து வந்து அவனருகில் ஹாலிலே படுத்துவிட்டாள் கீர்த்தியும்.
அவள் பக்கத்தில் வந்து படுக்கவும் அஞ்சன் திரும்பி அவளுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டான். ஜன்னல் வழியே வந்த தெருவிளக்கின் ஒளியில் அவன் முதுகை வெறித்த கீர்த்தி அவன் தோளில் கைவைக்க கையை உயர்த்தி பின் தயக்கத்தில் தன்னையே கட்டிக்கொண்டு கண்களை மூடினாள். அவள் கை உயர்த்தியது நிழலாய் அஞ்சனின் பார்வை வட்டத்தில் விழ பெருமூச்சிழுத்து விட்டவன் உருண்டு மல்லாக்க படுத்துக்கொண்டான். அவளை அணைக்க பரபரத்த கையை தனக்குள்ளே அடக்கி தூக்கத்தில் புரள்வது போல் மெல்ல நகர்ந்து அவள் தோள் உரசி இமை மலர்த்தினான்.