“அஞ்சு எங்க? வெளில போயிருக்கானா?” 

“இல்…லை.”

“போன் போட்டு கூப்புடுமா.” என்றதும் கேவல் வெடித்தது கீர்த்தியிடம்.

பழனி அதிர்ந்து விழிக்க, கமலம் மகள் அருகில் செல்ல மடங்கி அமர்ந்து முகத்தை கைகளில் புதைத்துக்கொண்டு வெடித்து அழுதாள் கீர்த்தி.

“நேத்திலேந்து எங்க போனாங்கன்னே தெரில. பயமா இருக்கு எனக்கு. நான்தான தப்பு பண்ணேன் நான் போறேன். அவரை கூட்டிட்டு வந்துருங்க மாமா…” என்று திக்கித்திணறி அவள் பேசியதில் விஷயம் பிடிபட்டுவிட, தந்தை நெஞ்சம் படபடத்தது.

“போன் போட்டிங்களா?” பதட்டத்துடன் வந்த அவரது கேள்விக்கு கீர்த்தி அவனின் உடைந்த போனை கொண்டு வந்து கொடுக்க, அதை கையில் வாங்கியவர்,

“ஆர்கிட்டேயும் சொல்ல வோணாம். நான் பாத்துக்குறேன்.” என்றவர் கமலம் புறம் பார்வை வீசி, “கூட இருந்து பாத்துக்கோங்க.” வேறேதும் கேட்கவுமில்லை என்ன செய்யப்போகிறார் என்று சொல்லவுமில்லை. பிரச்சனையை கையிலெடுத்துக்கொண்ட பழனி அமைதியாய் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

‘இவருக்கும் தெரிந்திருக்குமோ?’ என்ற எண்ணம் கமலத்திடம் இருந்தாலும் எதையும் வெளிக்காட்டாது மகளை தேற்றும் வேலையில் இறங்க சற்று நேரத்தில் சமாதானமானாள் கீர்த்தி.

“கார்மெண்ட்ஸ் போகலையா கீர்த்தி?” பெயருக்கு உண்டுவிட்டு சுவரில் சாய்ந்து அமர்ந்த மகளை உசுப்ப, மறுப்பாய் தலையசைப்பு அவளிடம்.

“இப்டியே இருந்தா எல்லாம் சரியாகிடுமா? போய் குளிச்சிட்டு வேலைக்கு கிளம்பு கீர்த்தி.”

“…”

“உன் மாமனார் பாத்துக்குறேனு சொல்லி இருக்காருல்ல கூட்டிட்டு வந்துருவாரு.”

“அவர் வரட்டும் அப்புறம் போறேன்.” என்று கீர்த்தி காத்திருக்க அந்த நாள் அத்தனை எளிதில் வரவில்லை.

மூன்று நாள் பொறுத்துப் பார்த்தவள் மாமனாருக்கு அழைத்துக் கேட்க,

“விசாரிச்சிட்டு இருக்கோம்.” என்று மொட்டையாய் பதில் வந்தது.

தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் கீர்த்தி. எங்கு சென்று தேடுவது, யாரைக் கேட்பது, அவன் எங்கு சென்றிருக்க கூடும் என்று எந்த அனுமானமும் இல்லாது போக அவனைப் பற்றி தனக்கு எதுவுமே தெரியவில்லை என்பதில் மருகியது நெஞ்சம்.

“சீக்கிரம் வந்துடுவார்.” என்று சமாதானம் போல் சொன்ன கமலத்திற்கும் நெஞ்சம் படபடத்தது. காலம் தாழத்தாழ அஞ்சனின் உறவுகளுக்கு விஷயம் கசிந்து நாளை மகளின் வாழ்க்கையும் மரியாதையும் கேள்விக்குறி ஆகிடுமோ என்ற பதட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது.

அருகில் இருந்து நெருக்கம் காட்டி பின் தள்ளி நின்று நேசம் வெளிப்படுத்திய போது கூட அவள் அகத்தை தொட முடியாது தோல்வியை சந்தித்திருந்தவன், அவனின் பிரிவின் மூலம் அவளின் நினைவடுக்கை நிரந்தரமாய் களவாடியிருந்தான் அஞ்சன்.

“எனக்கு அவரைப்பத்தி எதுவுமே தெரிலமா. ஆனா எனக்காக எல்லாம் பாத்து பாத்து செய்வாரு. நான் கேக்கலைனாலும் அவரை பத்தி தெரிஞ்சிக்கணும்னு அவரே அவருக்கு புடிச்சது புடிக்காதது செய்ய நினைக்கிறது எல்லாம் சொன்னப்போ அலட்சியமா இருந்துட்டேன்.” என்று அவ்வப்போது புலம்பினாள் கீர்த்தி.

“பழக்கம் இல்லைனாலும் எனக்காக ஹெல்ப் பண்ண வந்தாரு.” என்பாள் அன்னை சமைக்கும் போது சமையலறையைக் காட்டி…

“கார்மெண்ட்ஸ் போயிட்டு வீட்டு வேலையோட துணியும் துவைக்க முடியலைன்னு சொன்னதும் உடனே வாஷிங் மெஷின் வாங்கி கொடுத்தாரு.” குளித்து வந்தவுடன் தினம் இந்த வார்த்தைகள் தவறாது அவளிடமிருந்து வெளிப்பட்டுவிடும்.

“எனக்கு புடிக்கலைன்னு  முகத்தை பாத்தே கண்டுபுடிச்சி அதை ஒதுக்கிடுவாரு.” என்று அனுதினமும் அவனின் புராணம் பாடினாள் கீர்த்தி.

“மனசுல இருக்கறதை சொல்லுன்னு கேட்டுட்டே இருப்பாரு நாந்தான் சொல்லாம தப்பு பண்ணிட்டேன். நான் ஏமாந்துட்டேனு எப்படி சொல்லுவேன்?” என்ற மகளின் தவிப்பைக் கண்டு தன்னைத்தானே நொந்துகொண்டார் கமலம். அருணிடமிருந்து மகளை பிரிக்காதிருந்திருக்கலாமோ இந்த சிக்கல் வராது இருந்திருக்குமோ என்ற எண்ணம் கூட அவரை வாட்டியது சில நாட்களாய்.

அம்மா மகள் இருவரும் இயல்பை தொலைத்து இறுக்கத்துடன் ஏதோ பெயருக்கு சமைத்து உண்டு உறங்கி எழ, பத்து நாட்கள் கடந்தும் அஞ்சனைப் பற்றிய தகவலில்லை. 

இதற்கு மேல் வீட்டிற்குள் அடைந்துக்கொண்டு தானே வந்துவிடுவான் இல்லை மாமனார் கண்டுபிடித்து அழைத்து வந்துவிடுவார் என்ற நம்பிக்கை எல்லாம் மரித்துவிட, ஏதாவது செய்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் வேலைக்கு கிளம்பினாள் கீர்த்தி. வேலை நேர இடைவெளியில் குருங்கைக்கு அழைத்தவள் முதலில் தயங்கி பின் விஷயத்தை பகிர்ந்துவிட,

“கொழுந்தனார் இத்தனை நாள் வூட்டுக்கு வரலையா?” என்று அவள் அதிர,

“ப்ளீஸ் அக்கா… உங்களை விட்டா எனக்கு வேற யாராலயும் உதவ முடியாது.” என்று கரகரப்புடன் கீர்த்தி கெஞ்ச,

“இதுல நான் சொல்லவோ செய்யவோ எதுவுமில்லை கீர்த்தி.” என்று மறுத்தாள் குருங்கை. உண்மையை முதலிலேயே கூறியிருக்கலாம் அதை விடுத்து இந்த பெண் இப்படி செய்துவிட்டாளே என்று கீர்த்தியின் மீது வருத்தம் அதிகமிருந்தது குருங்கைக்கு.

“உங்ககிட்ட அவரு நல்லா பேசி நான் பாத்திருக்கேன். உங்களுக்கு அவரு எங்க போயிருப்பாருனு ஐடியா இருந்தா சொல்லுங்க. நான் தேடிக்குறேன்.” என்றதற்கு குருங்கை அமைதியாய் இருக்க,

“அவர் பிரெண்ட்ஸ் யாரவது தெரியுமா உங்களுக்கு?”

“அருணோட நல்லா பழகுவாரு.” என்று தயக்கத்துடன் குருங்கை சொல்ல, அமைதி கீர்த்தியிடம்.

“மாமா பாத்துப்பாங்க கீர்த்தி. கொழுந்தனார் வந்ததும் எப்படி சரி பண்றதுனு யோசி.” 

அவளுக்கு இருந்த ஒரே நம்பிக்கை குருங்கை மட்டுமே. அவளும் கைவிரித்துவிட, தீர்வு கிடைக்காமலே அழைப்பு முடிந்தது உவப்பாய் இல்லை கீர்த்திக்கு. அருணின் உதவியை நாட மனம் இடம் கொடுக்கவில்லை. 

மேலும் ஒரு வாரம் சென்றிருக்க, “திருப்பூரில கொழுந்தனாரை பாத்து பேசுனதா என்ற வூட்டுக்காரர் சொல்றாரு கீர்த்தி. அங்குட்டு தான் இருக்காரு கொழுந்தனாரு.” என்ற செய்தியுடன் குருங்கையிடமிருந்து அழைப்பு வந்தது.

“இங்கேயா?” கீர்த்தியிடம் பதட்டம் ஒட்டிக்கொள்ள அவனை தேடிச் செல்ல உந்தியது மனம்.

“ஆமா கீர்த்தி. இங்க வூட்டுல ஆருக்கும் கொழுந்தனார் போனது தெரில. எதேச்சையா இவரு பாத்து பேசி இருக்காரு. ஏதோ கார்மண்ட்ஸ்ல பாத்து பேசுனேனு சொன்னாங்க. வேலை விஷயமா கார்மெண்ட்ஸ் வந்ததாராம் கொழுந்தனார்.” என்று அவள் தகவல் தந்ததுதான் தாமதம் கீர்த்தியின் பொழுது ஒவ்வொரு நாளும் கார்மெண்ட்ஸ் வாயிலில் துவங்கி அந்தி வரை அங்கேயே கழிந்தது.

ஆம் மருத்துவ விடுப்பு எடுத்தவள் தினம் ஒவ்வொரு கார்மெண்ட்ஸ் சென்று அங்கு வாயிலை ஒட்டிய இடத்தில் எங்காவது நின்றுகொண்டு வாயிலில் விழி பதித்திருப்பாள். இங்காவது அவன் கண்ணில் சிக்கிட மாட்டானா என்று ஏக்கம் நிறைந்த பார்வையோடு தினம் வெவ்வேறு இடங்கள் சென்று கொண்டிருந்தாள். 

மாமனாருக்கும் அவன் இருப்பு பற்றி தகவல் கொடுக்க, அவரோ சென்ற வாரம் வரை ஈரோட்டில் இருப்பதாய் தகவல் வந்து அங்கு தேடிக் கொண்டிருந்ததையும் பின் திருப்பூருக்கு வந்துவிட்டது தெரிந்து அவனைத் தேட ஆள் அனுப்பி இருப்பதையும் சொல்ல, விரைவில் அவனை கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை அவளை சோர்வடைய விடாமல் தெம்பாய் வைத்திருந்தது.  

அன்றும் எங்கு செல்ல வேண்டுமென்று கூகிள் உதவியை நாடியபடி வேகமாய் உணவு உண்ண,

“இன்னைக்கு நானும் வரேன் கீர்த்தி. இப்படி நீ தனியா போயி தேடுறது எல்லாம் பாதுகாப்பு இல்லை.” என்று தோசை எடுத்து வந்து நின்றார் கமலம்.

“பாதுகாப்பா இருக்கிற இடத்துல தான் தேடுறேன்மா… கூட்டமா இருக்குற ஏரியாவா தான் போய்ட்டு இருக்கேன். தனியா ஊர் விட்டு இருக்கிற இடமெல்லாம் மாமாவை பாக்க சொல்லி இருக்கேன்.”

“தனியா போகாத அவ்வளவுதான். யாருக்கு எப்போ எது நடக்கும்னே தெரியாத காலத்துல நீ இப்படி போறது நல்லா இல்ல. சரியும் இல்லை. நீ இப்படி தேடுறது உன் மாமனாருக்குத் தெரியுமா?”

“தெரியாது. என் பிரெண்டை விட்டு தேடுறேனு சொல்லி இருக்கேன். நீ எதுவும் உளறி வைக்காத. அவரை பாத்துட்டா போதும் எல்லாம் மாறிடும். மாத்திடுவேன்.” திண்ணமாய் வந்தது அவளது வார்த்தைகள்.

“அதுக்கு நீ நல்லா இருக்கனும். தனியா போய் மாட்டிக்காத நானும் வரேன் அவ்வளவுதான்.” என்றவரை மறுக்க முடியாமல் ஆட்டோ பிடித்து முக்கிய பகுதியில் இருந்த கார்மெண்ட்ஸ் அழைத்துச் சென்றாள்.

அங்கே இருந்த செக்யூரிட்டியிடம் அவனை பற்றி விசாரித்துவிட்டு அருகில் இருந்த டீக்கடையில் டீ குடிக்க அமர்ந்தார்கள். கீர்த்தியின் விழிகள் அந்த கார்மெண்ட்ஸின் நுழைவுவாயிலை விட்டு அகலாது பதிந்திருக்க, கமலத்தின் பார்வை மகளிடம். 

அவனில்லாத இந்த இருபது நாட்களில் மகளிடம் லேசான இளைப்பு தெரிந்தது போல் இருந்தது அந்த அன்னைக்கு. முன்பிருந்த அசட்டுத்தனமும் ஆத்திரமும் அடங்கி தன் தேவை உணர்ந்து தெளிவு பிறந்திருந்தது. தெளிவு அகத்திலும் பிரதிபலிக்க அந்த இக்கட்டிலும் அவள் வாழ்க்கை எண்ணி நிம்மதி மூச்சு விடமுடிந்தது கமலத்தால்.

டீ தயாராகிவிட்ட அழைப்பு வர அதை எடுக்க எழுந்த கமலத்தை தள்ளிக்கொண்டு கீர்த்தி ஓட, புரியாத பதட்டத்துடன் மகள் பின் ஓடப்பார்த்தவர் மருமகனைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டார்.

பார்வை மறைக்கும் விழி நீரை துடைத்தபடி அஞ்சனை நோக்கி ஓடியவள் வேகமாய் அவன் கைப்பற்றி நிறுத்தினாள்.

“வீட்டுக்கு வாங்க.” என்கையிலே வெடித்து எழுந்தது கேவல்.

கண்ணீருடன் தன் கைப்பற்றி இருக்கும் மனைவியை அதிர்வுடன் பார்த்தவன் இருக்கும் இடம் உணர்ந்து தன் கரத்தை உருவிக்கொண்டு அவளை திரும்பியும் பாராது நடக்கத் துவங்கினான். அவனின் விலகல் அவளை கலவரப்படுத்த, பின்னோடே ஓடியவள் அவன் புஜத்தில் கரம் கோர்த்து நிறுத்தி மன்றாடும் தொனியில் மீண்டும் வீட்டுக்கு அழைக்க, இம்முறை அவளை விலக்க முடியவில்லை அவனால். சாலை ஓரம் அவளை நகர்த்திச் சென்றவன் இறுகிய முகத்தோடு, “எதுக்கு இப்படி ரோட்டுல அழுது அக்கப்போர் பண்ணுற?”

“ப்ளஸ் வீட்டுக்கு வாங்க.”

“எந்த வூட்டுக்கு?”

“நம்ம வீட்டுக்கு.” 

“நமக்குன்னு ஏதாவது இருக்க என்ன?”

“ஏன் இப்படி பேசுறீங்க?”

குரல் உடைந்து கன்னம் முழுதும் இஷிய கண்ணீரோடு நிற்கும் அவளை அழுத்தமாய் பார்த்தவன், “அவனை மறக்க முடியாம என்னை தள்ளி வச்சிட்டு இப்போ இப்படிலாம் பேசுனா எல்லாம் இல்லைனு ஆகுமா?”

“இல்லைனு நான் சொல்லலையே. எனக்கு வாய்ப்பே குடுக்காம என்னை விட்டு போனா என்னை எப்படி நான் புரிய வைக்க முடியும்?” அழுகுரலோடு ஒலித்த அவளது வார்த்தைகளுக்கு அவனிடம் எதிர்வினை இல்லை.

“திடீர்னு நடந்த எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு பழகிக்கத் தெரியாம ஏதேதோ பண்ணிட்டேன். தப்பு தான். வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம்.”

“எதுக்கு வரணும்?”

“எனக்காக வாங்க.” 

“…”

“நமக்காக வாங்க.”

இறங்கி வராது தன் பிடியிலே நிற்பவனை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாது கண்ணீருடன் விழித்த கீர்த்தி, “டாட்டூ அழிக்க டாக்டர் கிட்ட போய்ட்டு இருக்கேன்.”

“அந்த டேட்டூவை அழிச்சிடுவ ஆனா மனசுல இருக்கறதை எப்படி அழிப்ப?” வலி நிறைந்த சொற்களை வலிமையற்றதாய் மாற்றத் தெரியாத கீர்த்தி தோல்வியை ஒத்துக்கொண்டது போல் தளர்ந்துவிட, அவளின் தளர்வை சகிக்கமுடியாத அஞ்சன்,

“வூட்டுக்கு போ. அந்தி சாய்ஞ்சதும் வரேன்.” என்றிட, வர்ணஜாலம் பூசிக்கொண்டது கீர்த்தியின் வதனம்.