வேலை முடித்து வந்து தன் வீட்டுக் கதவை தட்டிய மகளை வாஞ்சையுடன் அழைத்துக்கொண்டவர் அவள் வந்த காரணம் தெரிந்த பின் பதறிவிட்டார்.
“என்ன சரியில்லை? என்னோட சாய்ஸ் தப்பாகிடுச்சுனு நீ கை காட்டுனவரை கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா பாரு அருமை பெருமைனு நீ வக்காலத்து வாங்குன உன் மாப்பிள்ளை சாயம் வெளுத்துடுச்சு.” என்று மூச்சு வாங்கி ஓய்ந்து போனவளாய் சுவரில் சாய்ந்தமர்ந்தாள்.
“அவர் நிலைமையில யாரா இருந்தாலும் அப்படிதான் நடந்துக்குவாங்க கீர்த்தி.” மாப்பிள்ளைக்கு உண்மை தெரிந்துவிட்டது இனி மகளின் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற பதட்டம் உள்மனதில் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது கோபித்து தன் வீடு வந்திருக்கும் மகளை சமாதானம் செய்யவே முயன்றார் கமலம்.
“அவரு சந்தேகப்படுறத நியாப்படுத்துறியா?”
“நியாப்படுத்தல… அவர் பக்கம் இருக்குற நியாயத்தையும் பாருன்னு சொல்றேன்.” என்றதும் மெளனமானாள் கீர்த்தி.
“நம்பி ஏமாந்ததோட வலி என்னையும் உன்னையும் தவிர வேற யாருக்குடி அதிகம் தெரியப்போகுது?” என்றவர் முகம் இறுகி, “உன்னை யாருடி பச்சையெல்லாம் குத்த சொன்னது? அவ்ளோ ஏத்தமா சுத்தியிருக்க… கல்யாணமாகாத பொண்ணு செய்யுற வேலையா இது?” எப்படி உண்மை தெரிந்தது என்று விவரித்த கீர்த்தி மேலோட்டமாய் பச்சைகுத்தியதையும் சொல்லியிருக்க அன்னைக்கு அதில் அடைக்க முடியாத ஆத்திரம்.
“ம்மா… அதெல்லாம் முடிஞ்சி போன விஷயம்.”
“என்ன முடிஞ்சிச்சு? எங்கிருந்து உனக்கு இந்த தைரியம் வந்துச்சு? நிரந்தரமாகாத ஒரு உறவை நம்பி எப்படி நீ இதெல்லாம் பண்ண?”
“நிரந்தரமாகிடும்னு நினைச்சு பண்ணிட்டேன்…” திருமணதிற்கு பின் அருணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்ற ஆசையில் அன்று டேட்டூ குத்தியதை நினைவுகூர்ந்து விரக்தியாய் சொன்ன கீர்த்தி, “போன வருஷம் புதுசா பார்லர் ஒன்னு ஓபன் பண்ணப்போ டேட்டுக்கு ஆஃபர் போட்டிருந்தாங்க. பிரென்ஸோட சேர்ந்து ஜாலியா குத்திகிட்டேன். இப்படி எல்லாமே தலை கீழா மாறும்னு எனக்கெப்படி தெரியும்?” என்றிட,
“அப்போ தெரியாது சரி ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி ரெண்டு மாசம் இருந்துச்சேடி அப்போயாவது ஏதாவது பண்ணி தொலைச்சிருக்கலாம்ல. இப்படி அழிக்க முடியாத வடுவா மாப்பிள்ளை மனசுல பதிய வச்சிட்டியே. இதை மறந்து எப்படிடி ஏத்துப்பாரு.”
“டேட்டூ போட்டு ரொம்ப நாளாச்சுமா… அதை தனியா கவனிச்சுக்கிற காலம் எல்லாம் தாண்டிடுச்சு. உடம்பில இருக்குற தழும்பு மச்சம் மாதிரி அதுவும் பழகிடுச்சி. பெருசா நியாபத்துலேயே இல்லை.” என்று காரணம் சொன்னவள் சோர்வாய் கண்மூடினாள்.
“வீட்டுக்கு கிளம்புடி… மாப்பிள்ளை தேடப்போறாரு.” என்ற அன்னைக்கு ஏளனச் சிரிப்பை உதிர்த்தவள், “இங்க இருந்தா நீ துரத்துர அங்க போனா அருணோட சேர்த்து வச்சி பேசுற பேச்சு துரத்துது.”
“ஆனா நீ சொன்னது உண்மைமா. ஆம்பளைங்க எல்லாருமே ஒன்னு தான். நாந்தான் புரிஞ்சிக்காம இருந்துட்டேன். அவங்க இழுக்குற இழுப்புக்கு நாம போனா நம்மள தலைல தூக்கி வசிக்குறாங்க இல்லைனா பொட்டுனு கீழ போட்டு உடைச்சிடுறாங்க. அவங்களுக்குள்ளேயும் ஒரு சுயநலமிருகம் இருக்கு. அது வெளிய வர்றதும் வராததும் சூழ்நிலையை பொறுத்து…”
“என்னடி பேசுற நீ? நம்ம எல்லார்க்குள்ளேயும் தான் சுயநலம் இருக்கு. அருணை பாத்து நான் பேசினதும் அவன் உன்னை விட்டது தப்புன்னா அதை மாப்பிள்ளை வீட்ல சொல்லாம கல்யாணம் பேசி முடிச்சது நம்மளோட சுயநலம்.
நம்ம மேல தப்பு இருக்கு கீர்த்தி. நீதான் தான் நம்ம நிலைமையை புரிய வைக்கணும். சொல்லாம எப்படி புரியும் அவருக்கு?” என்ற கமலம் ஆதரவாய் மகளை மடி சாய்த்தார்.
“போனது போகட்டும் கீர்த்தி. அவர் கோபத்துல பேசுறதை பெருசு பண்ணாம உன் நிலைமையை புரிய வை.”
“கெஞ்ச சொல்லல… உன் தரப்பு நியாயத்தை நிதானமா சொல்லுன்னு சொல்றேன்.”
“சொன்னா கேக்குற நிலைமையில அவர் இல்லைமா.”
“கேக்குற வரை சொல்லு.” என்ற கமலம் மகளை நிமிர்த்தி, “இவ்வளவு நாள் அருணை பத்தி மாப்பிள்ளைக்கு எதுவும் தெரியாது நீயும் பட்டும்படாம அவர்கிட்ட பழகுன… இப்போ நீயே எல்லாத்தையும் சொல்லிட்ட. அவர் ஒதுங்கி போகவும் இதுதான் சாக்குன்னு தள்ளி இருந்திடலாம்னு இருக்கியா?”
“ம்மா…”
“சொல்லு கீர்த்தி… ஒரேடியா தள்ளி இருந்திடலாம்னு தான் இங்க வந்தியா?” என்று கண்டிப்பாய் கேட்க, மறுப்பாய் தலையசைப்பு பெண்ணிடம்.
“வாயை திறந்து சொல்லு.” என்று அழுத்தம் கொடுக்க, ஆழ மூச்சிழுத்தவள் சில நொடிகள் கழித்து மெளனம் கலைத்தாள்.
“புடிக்கலைன்னு தள்ளி இருந்தாலும் கிடைச்சிருக்கிறதை ஏத்துக்கிட்டு வாழணும்னு என்னை நானே மாத்திக்கிட்டு இருக்கும் போது உண்மையை சொல்ல வேண்டிய சூழ்நிலை. சொல்லிட்டேன். ஆனா அதை அவரு திரும்பத் திரும்ப சொல்லிக்காட்டுறது புடிக்கலமா. ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்றவள் விழிகளில் நீர் திரண்டு நின்றது.
“உனக்கு வலிக்குற மாதிரிதான் அவருக்கும் வலிக்கும் கீர்த்தி. நீ கோபத்துல இங்க வந்துட்ட அவரு அதை காமிக்கத் தெரியாம சொல்லிக்காட்டுறாரா என்னமோ…”
“நீ அவருக்கே சப்போர்ட் பண்ணு.”
“அப்படியில்லைடி… அவரோட வாழணும்னு ஆன பிறகு விலகி நிக்க காரணம் தேடாம சேர பாக்கணும். முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். இனிமே என்ன பண்றதுனு பாரு.” என்று ஒருவாறு மகளை தேற்ற, புறங்கை கொண்டு கண்ணை துடைத்தவள்,
“இன்னைக்கு இருந்துட்டு நாளைக்கு போறேன்.”
“மாப்பிள்ளைக்கு கோபம் அதிகமாகிடப்போகுது. நீ கிளம்பு.” தவிப்பு கமலத்திடம்.
மனதோடு சேர்த்து உடலும் சோர்வாக, “நீயும் என்னை படுத்தாதமா… நேத்திலேந்து தூக்கமே இல்லை. இதுக்கு மேல வீட்டுக்கு போயி அவரை சமாளிக்க முடியாதுமா. அவருக்கு மெசேஜ் போட்டுறேன்.” அசதியாய் சொன்ன கீர்த்தி அஞ்சனுக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு இரவு உணவு கூட உண்ணாமல் அப்படியே படுத்துவிட்டாள்.
ஆழ்மனதில் அஞ்சன் தான் அனுப்பிய குறுந்தகவலை பார்த்தவுடன் சினத்தில் இங்கேயே வந்து தாம்தூமென குதித்து எப்படியும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவான் என்ற எண்ணம் தோன்ற, அந்த தைரியத்தில் கண் அயர்ந்தாள். ஆனால் உறங்கியபடியே காலை எழவும் மெல்லிய அதிர்வு தோன்றி மறைந்தது.
வேகமாக அலைபேசி எடுத்து அஞ்சன் எதுவும் செய்தி அனுப்பியிருக்கிறானா என்று பார்த்தாள். அந்த வாட்சப் தகவல் இன்னும் அவனால் படிக்கப்படவில்லை என்று காட்ட பயபந்து தொண்டையில் உருண்டு மேலெம்பியது. தான் சொல்லிய நிதர்சனம் நினைவு வரும் போதெல்லாம் தனக்கு அழைத்து தொந்தரவு கொடுத்தவன் இரவு கண்டிப்பாய் அழைப்பான் என்ற எண்ணத்தில் இருந்தாள். அது பொய்க்கவும் சட்டென எழுந்த கீர்த்தி தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு,
“நான் கிளம்புறேன்மா…” என்று நிற்க, எப்படியோ மகள் வாழ்க்கை மலர்ந்தால் சரியென்றே எண்ணத்தில் தடுக்காது அனுப்பி வைத்தார்.
ஓட்டமும் நடையாய் ஆட்டோ பிடித்து வீடு வந்தவள் அழைப்பு மணி அடிக்கலாம் என்று சுவிட்சில் கை வைக்கும் போது கதவு சரியாக மூடப்படாது இடுக்கு தெரிய, கைவைத்து கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவள் விழிகள் கணவனைத் தேடியது.
வீடே நிசப்தமாய் இருக்க திடுமென வந்து ஒட்டிக்கொண்ட அச்சத்தை துணைக்கு வைத்துக்கொண்டபடி தங்கள் அறைக்குள் நுழைய காலில் அவனின் அலைபேசி தட்டுப்பட்டது.
‘என்ன உடைஞ்சிக்கிடக்கு?’அதை கையில் எடுத்தபடி வீடு முழுவதுமாய் அஞ்சனைத் தேட அவன் அங்கிருப்பதற்கான அறிகுறி சிறிதும் தென்படவில்லை.
‘எங்க போயிருப்பாங்க? போன் வேற உடைஞ்சிருக்கு? எங்கன்னு தேடுறது?’ என்று யோசித்தபடி வீட்டை ஒரு சுற்று சுற்றி வந்தாள்.
‘கோவத்துல போனை தூக்கி போட்டிருப்பாங்க… வேறெதுவும் இருக்காது. எங்க போயிடப் போறாங்க பக்கத்துல இருப்பாங்க வந்துடுவாங்க.’ என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லி அவனுக்கு காத்திருக்க அவன் வருவதாய் காணோம். அலுவலுக்கு நேரமாகிட உடைந்த அவன் அலைபேசியும் அவ்வீட்டின் வெறுமையும் கண்டவள் அன்று வேலைக்கு விடுப்பு சொல்லிவிட்டு வாயிலில் பார்வை பதித்த வண்ணம் அமர்ந்துகொண்டாள்.
இடையில் பசி வயிற்றை கிள்ள அஞ்சனுக்கும் சேர்த்தே சிற்றுண்டி செய்து உண்டு அவன் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தாள். கடிகாரத்தின் பெரிய முள் சுழன்று ஒவ்வொரு முறை பன்னிரெண்டை தொட்டு பிரியவும் பதட்டம் பல்கிப் பெருகியது.
அந்தி சாய்ந்தும் அவன் வராமல் போக பீதியுடன் அன்னையை அழைத்தவள், “ம்மா… அவரு வீட்டுக்கு இன்னும் வரல. போனும் இல்லை அவர்கிட்ட. பயமா இருக்குமா.”
“வேலை முடியாம இருக்கும் எட்டு தானே ஆகுது.”
“இல்லம்மா, இந்த நேரத்துக்கு எப்போதும் வீட்டுக்கு வந்துடுவாரு.”
“இன்னும் கொஞ்ச நேரம் பாக்கலாம் கீர்த்தி. அப்படியும் வரலைனா என்ன செய்யுறதுனு யோசிப்போம்.” என்ற கமலத்திற்கும் யோசனைதான். மனம் லேசாக மறுத்து ஏதோ சரியில்லை என்று உணர்த்த மகளிடம் அதை மறைத்து ஆறுதலாய் பேசி வைத்தவர் தன் அண்ணனுக்கு அழைத்து விஷயத்தை பகிர்ந்தார்.
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள நம்ம நுழைய முடியாது. அவங்களா சரியாகிடுவாங்க.” காதல் விவகார பிரச்சனையில் தான் மூக்கை நுழைப்பது சரிப்பட்டு வராது என்று கழன்று கொண்டார் அவர்.
இரண்டு மணி நேரம் கழித்து கீர்த்தி மீண்டும் அன்னையை அழைத்து அஞ்சன் இன்னும் வரவில்லை என்று அழ அவருக்குமே என்ன செய்வது என்று தெரியாத நிலை. எப்படி இதை கையாள்வது என்று குழம்பினாலும் மகளை தனியே விட மனமின்றி அப்போதே ஆட்டோ பிடித்து மகள் வீட்டுக்கு வந்துவிட்டார்.
இருவருக்கும் தூங்கா இரவாகியிருந்த அந்த இரவு எப்போது முடியும் என்ற கவலையுடனும் பயத்துடனும் கடத்தினர். மறுநாள் காலை வாசலில் ஏதோ வண்டி சத்தம் கேட்கவும் அஞ்சனாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு கீர்த்தி வேகமாய் உள்ளிருந்து வந்து எட்டிப்பார்க்க, ஆட்டோவிலிருந்து இறங்கினார் பழனிவேல். நலம் விசாரிப்புகளுடன் உள்ளே நுழைந்தவர் பார்வை கமலத்தை கண்டு யோசனையாகி பின் மகனைத் தேடியது.
அருண் இதுதான் என்று போட்டுடைக்கவும் மகனின் மனம் எந்தளவு வேதனைப்பட்டிருக்கும் என்று உணர்ந்தமையால் அவனைக் காண வந்திருந்தார். மகன் மருமகள் உறவு தற்சமயம் சீராய் இருக்கிறதா என்று கண்டுகொள்ளவும், பிரச்சனை இருந்தால் அதை கலைந்துவிடும் வேகத்தில் வந்திருந்தவர் மகன் கண்ணில் படாமல் போக கீர்த்தியை கேள்வியாய் பார்த்தார்.
அவரின் பார்வை உணர்ந்தவளுக்கு தொண்டை அடைத்து வார்த்தை வர மறுத்தது. விஷயம் சம்பந்திக்கு தெரிந்துவிட்டால் கீர்த்தியை எப்படி நடத்துவார்கள் என்று ஐயத்தில் கமலமும் தயங்கி கைபிசைந்து நின்றார். இருவரின் தவிப்பும் சங்கடமும் அகத்தில் தெரிய, பழனி மெளனம் களைந்து வாய் திறந்தார்.