*20.1*

“என்ற மேல இம்புட்டு ஆசை வச்சிட்டுதான் சுத்தல்ல வுட்டியா?” முகம் கொள்ளா புன்னகையுடன் அவள் டேட்டூவில் முத்தம் வைத்து நிமிர்ந்தவன் அவள் கன்னம் கடிக்க, சுயம் பெற்றவள் தீச்சுட்டது போல் நடுங்கி அதிர்ந்து அவனை உதறித் தள்ளியிருந்தாள்.

உடன் ‘அன்புக்கு துரோகம் செய்ய முடியாது’ என்று ஓயாது பிதற்றுபவளை குழப்பத்துடன் பார்த்த அஞ்சன் அவள் தோளை பற்றி உலுக்க தவிப்பு, தயக்கம், துக்கம், இயலாமை என கலவையான உணர்வுகளை தாங்கி விழித்து நடுங்க, புரியாது பார்த்தான் அஞ்சன்.

“என்னாச்சு?”

“…”

“கண்ணு என்னாச்சு?” கண்ணு என்ற விளிப்பில் கேவலொன்று வெடித்துக் கிளம்ப, கரம் குவித்து முகத்தை அதில் மறைத்துக்கொண்டாள் கீர்த்தி.

அவளின் செயலில் என்னவோ ஏதோ என்று பதறிய அஞ்சன் குவிந்த அவளது கரங்களை தனக்குள் பத்திரப்படுத்திக்கொண்டு, “உனக்கு வோணாம்னா வோணாம் கண்ணு. இப்படி அழாத.” 

பரிதவிப்புடன் அஞ்சன் அவளை அமைதிப்படுத்த முயல அது அவளது குற்றவுணர்ச்சிக்கு தூபமிட்டது. மின்விசிறி தன் முழு வேகத்தில் சுழன்றாலும் அவள் தேகம் முழுதும் வியர்த்து வழிந்தது. கேவிய கேவலில் அவள் உடல் குலுங்கி தூக்கிப்போட, அவளை நெருங்கி அணைக்க நீளும் கரங்களை கடினப்பட்டு தன்னுடன் வைத்துக்கொண்டான் அஞ்சன். உடன் தன் நெருக்கம்தான் அவளை அலைக்கழித்து அச்சப்படுத்துகிறது என்ற எண்ணத்தில் அவளிடமிருந்து விலகி தள்ளி அமர்ந்தான்.

“நான் கிட்ட வரலை கண்ணு நீ அழாத.” அத்தனை கரிசனம், தவிப்பு அவன் குரலில்.

அவனின் அக்கறையில் இதற்கு மேல் முடியாது என்று தொய்ந்தவள் வழியும் விழிநீருடன் அவனை ஏறிட்டு, “இந்த டேட்டூ உங்க அன்புக்கு தகுதியானது இல்லை.” என்க, விளங்காத பார்வை அவனிடம்.

“இது… இது உங்களை பாக்குறதுக்கு முன்னாடி போட்டது…”

“…”

குறிப்பு கொடுத்தும் தெளிவின்றி விழிப்பவனைக் கண்டு கீழ்உதட்டைக் கடித்து குனிந்தவள் விரல்களை இறுகக்கோர்த்து பிரித்தாள். படிக்காது சென்று பரீட்சை எழுதிய காலங்களில் கூட இத்தனை பயம் அவளை தின்றதில்லை. ஆனால் இன்று கணவனாவன் மனம் உடையப்போகிறது என்று தெரிந்தும் அவளால் உண்மையை மறைத்து போலியாய் ஒரு வாழ்க்கையை துவங்கித் தொடர விருப்பமில்லை. 

அருணின் பக்கங்கள் அவள் வாழ்க்கை ஏட்டில் புரட்டி படித்து முடித்து கசக்கி தூக்கி எறிந்த ஒன்று. அப்படி வேண்டாம் என்று தூர எறிந்ததின் தடயத்தை கணவன் அவனுக்கானது என்று எண்ணுவதை நினைத்தாலே அவளுடல் குற்றவுணர்வில் சிலிர்த்து அடங்க, தைரியம் வரப்பெற்றவளாய், 

“உலகம் ரொம்ப சின்னது… வேண்டாம்னு ஓடுனாலும் அது நமக்கு முன்ன வந்து நின்னு வாழ்க்கையை இத்தனை சிக்கலாகும்ன்னு முதல்லயே தெரிஞ்சிருந்தா கல்யாணத்துக்கு முன்னாடி அருண் மேல ஆசைப்பட்டிருக்க மாட்டேன்.” 

ஒருவழியாய் சொல்லிவிட்ட நிம்மதியில் கீர்த்தி உதட்டை குவித்து அடிவயிற்றிலிருந்து காற்றை வெளியே தள்ளி குனிந்து கொள்ள, மூச்சு விடவும் மறந்திருந்தான் அஞ்சன்.

“அந்த A… நான் இல்லை… அருணா? எந்த அருண்?” அவள் சொல்லிய செய்தி அவன் மூளைக்குள் இறங்கி மெல்ல சிந்தையில் பதிய, கேள்வி அனிச்சையாய் வந்தது அவனிடமிருந்து.

மீண்டும் பல்லிடுக்கில் அவள் இதழ்கள் கடிபட சிரம் தாழ்த்தியவள், “உங்க பிரெண்ட்டுனு உங்ககூட சுத்துற துரோகிதான்.”

கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்ததும் மூடிய அஞ்சனின் இதழ்கள் பிரியவே இல்லை காலைவரை. உண்மையை போட்டுடைத்த திருப்தி இருந்தாலும் அதற்கான எதிர்வினை எப்படி இருக்கும் என்ற யோசனையுடன் டேட்டூ போட்ட தன்னை நிந்தித்தபடி அமர்ந்துவிட்டாள் கீர்த்தனாவும்.

இருவரின் மனமும் ரணத்தை சுமந்து அதை குணப்படுத்தும் வழியை நாடாது, பட்ட காயத்தையே மீண்டும் மீண்டும் குத்தி அதில் உப்பிட்டு தகித்துக்கொண்டிருந்தனர். பழனியின் கூர்பார்வையிலிருந்து தப்பிக்க அஞ்சன் வீட்டிலிருந்து இருவரும் உடனே கிளம்பி திருப்பூர் வந்துவிட்டனர். அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் விடுவிடுவென குளியறைக்குள் புகுந்து குளித்து தயாராகி வந்தவள் காலை உணவும் உண்ணாது மதியத்திற்கு எதுவும் செய்யாது தன் கைப்பை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

அறையிலிருந்து அவள் கிளம்பி வரும்போதே வேகமாய் வாயில் கதவை அடைத்தபடி வழிமறித்தவன், “உன்ற விருப்பப்படி அவன்கிட்ட வுட்டுட்டு வந்தேனே எதுக்குடி திரும்ப வந்த?” என்று குறுக்கே நிற்க, தணல் பார்வை பெண்ணிடம். 

“முறைச்சா தழைஞ்சி உன்ற காலடியில கிடப்பேன்னு எண்ணமோ? அப்படியெல்லாம் எண்ணம் இருந்தா பெட்ரோல் ஊத்தி கொளுத்திடு… நீ முறுக்குறதை கண்டு இன்னமும் ஏமாந்துட்டு இருக்க பழைய அஞ்சன் இல்லை நானு…”

“நீங்க பழையபடி இல்லைனு சொல்லித்தான் தெரியனுமா என்ன? அதான் உங்க சுயரூபத்தை காமிச்சிட்டீங்களே…”  என்று அசராது பதில் கொடுத்தாள் அவளும்.

“உன்ற குட்டு வெளிப்பட்டுடுச்சுனு என்னை குற்றவாளியாக்க பாக்காத.”

“நான் சொல்லலைன்னா உங்களுக்கு எதுவுமே தெரிஞ்சிருக்காது.” அலட்சியமாய் அவள் மொழியவும் அவனது புஜங்கள் இறுகி நரம்புகள் புடைத்து வெளியே முறுக்கித் தெரிந்தது.

“சொல்லாம தான இத்தனை நாள் ரெண்டு பேரும் என்றகூடவே இருந்து ஏமாத்திருக்கீங்க…”

“முதல்ல அவனை நம்பி… இப்போ உங்களை நம்பி நாந்தான் ஏமாந்து என் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்குறேன். தள்ளுங்க வேலைக்குப் போகணும் நானு.” என்று இரண்டடி அவள் முன்னெடுக்க அஞ்சன் நகராது சட்டமாய் நின்றான்.

“ம்ச்… என்ன வேணும் உங்களுக்கு?”

என்ன வேண்டுமென்று அவனுக்கே தெரியாத போது என்ன பதில் சொல்வான் அஞ்சன். குழப்பம் தாங்கி அவள் எதிரே இறுகி நின்றான். அனைத்திலும் தான் முதன்மையாய் இருக்க வேண்டுமென்று சிறு வயதிலிருந்து ஏங்கித் தவித்த விஷயங்கள் யாவும் தற்போது ஒன்றுமே இல்லை என்பது போல் நேசம் வைத்து வாழ்க்கையின் பற்றுக்கோளாய் நினைத்த அவனின் சரிபாதியான மனையாளே அவனுக்கு குழி பறித்த உணர்வு.

நெஞ்சுக்கூட்டின் ஒவ்வொரு அணுவும் முள்ளில் கிழிபட்டது போல் வலிக்க, தான் அனுபவிக்கும் வலியை வேதனையை அவளுக்கும் கொடுத்துவிட வேண்டுமென்ற வேகம் மட்டுமே அவனிடம்.

“நான் வேலைக்கு போய்ட்டு வரேன் அதுக்குள்ள என்ன வேணும்னு யோசிச்சு வைங்க.” என்று கீர்த்தி அவனை தள்ளிவிட்டு வெளியேற முற்பட, பற்களை நறநறவென கடித்தபடி அவள் கையை பற்றி இழுத்தவன்,

“என்ற சரிபாதி என்னை மாதிரிதான் இருப்பான்னு நினைச்சு ஏமாந்து போனது நானு… ஆனா நான் உன்னை ஏமாத்துன மாதிரி பேசுற?” ஏமாற்றத்தின் உச்சத்தில் அஞ்சனின் குரல் உச்சாணிக்கொம்பில் அமர்ந்துகொள்ள,

“நான் உங்களை ஏமாத்திட்டேன்னு நீங்க நினைக்குற வரைக்கும் என் மனசும் என்னோட நிலைமையும் உங்களுக்கு புரியாது.” என்றாள் அவன் விழியை நேராய் சந்தித்தபடி.

செய்வதையும் செய்துவிட்டு எந்த குற்றவுணர்வும் இல்லாமல் சரிக்கு சரி பேசி என் முன்னாலே நிற்பாளா என்ற எண்ணம் அவனை ஆட்கொள்ள எரிச்சல் மிகுந்தது, “உன்ற முகம் பாத்தே உனக்கு புடிக்காத எல்லாத்தையும் ஒதுக்குனேன்ல நீ இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ… போடி இங்கிருந்து என் கண்ணு முன்னால நிக்காத…” 

“சந்தேகப்படுற புருஷன் முன்னாடி நிக்கணும்னு எனக்கொன்னும் ஆசையில்லை.” பட்டென்று சொன்னவள் வெட்டும் பார்வை பார்த்து அவனை இடித்துவிட்டு வெளியேற, வெறி ஏறி நின்றான் அஞ்சன். 

‘உள்ளதை சொன்னா சந்தேகப்படுறேனா?’ என்று கோபத்தில் கனன்றவன், ஆவேசத்தில் விரல்களை மடித்து அழுத்தம் கொடுத்து காற்றில் ஒரு குத்துவிட்டு காலால் தரையை உதைத்தான். 

நெஞ்சம் தடதடக்க வேக மூச்சுகள் எடுத்தவன் ஆவேசம் குறையாதவனாய் வீட்டை சுற்றி சுற்றி வந்தான். என்ன சுற்றியும் அவளது கடந்தகாலம் எப்படிப்பட்டதாய் இருந்திருக்கும் என்றதிலேயே மனம் உழன்றது.

பெண் பார்த்த படலம் பின் அவள் மீது நேசம் பொங்கிய நாட்களில் நான் அவளின் அருகாமையை எதிர்பார்த்து ஏங்கித் தவித்தது போல் அவனை எண்ணி இவள் ஏங்கித் தவித்திருப்பாளோ? தான் அவளிடம் பேச விழைந்தது போலத்தானே அவனிடம் இழைந்திருப்பாள் இவள்? எங்கெல்லாம் சென்றிருப்பார்களோ? பச்சைகுத்துமளவுக்கு அவர்களின் உறவு இருந்திருக்கிறது என்ற எண்ணமே வேப்பங்கொழுந்தை மென்றது போல் கசந்தது.

அவனின் காதலி என் மனைவியா? என்று தோன்றிய நொடி அருணை துண்டுத்துண்டாய் வெட்டிப்போடும் வேகம். அந்த வெறியை பிடித்துவைக்காமல் வீட்டின் கதவை சத்தத்துடன் பட்டென சாற்றிய அஞ்சன் தன் வண்டியை கிளப்பிக்கொண்டு அருணைத் தேடி திரும்ப ஊருக்குச் சென்றான்.

வேலை நேரத்தில் வேலைக்குச் செல்லாது இவன் எதற்கு இங்கு வருகிறான் என்ற யோசனையுடன் செங்கல் சூளையினுள் நுழையும் தன் தம்பியை பார்த்தவாறு சூளை அலுவலகத்தின் வாயிலில் நின்றான் சுவாமிநாதன். தன்னையே கேள்வியுடன் பார்த்து நிற்கும் அண்ணனை கவனியாது வண்டியை சடன் ப்ரேக்கிட்டு நிறுத்திய அஞ்சன் இறங்கி விடுவிடுவென உள்ளே சென்று பார்வையை நாலாபக்கமும் சுழல விட்டான்.

தம்பி பின்னோடே வந்த சுவாமிநாதன் கேள்வியுடன் அவனை நெருங்கி, “டேய் அஞ்சு என்னாச்சு? இந்த நேரத்துல இங்க வந்திருக்க?”

“எங்க அவன்?”

“ஆரு?”

“அந்த துரோகி…”

“துரோகியா ஆரை கேக்குற?”

“அந்த ***பய அருண் எங்க?”

அஞ்சனின் விளிப்பில் அதிர்ந்த அண்ணன்காரன் அவன் கைப்பற்றி தன் அறைக்கு இழுத்துச் சென்றான். அண்ணன் பிடியில் திமிறியபடி நடந்த அஞ்சன் ஒருகட்டத்தில் சுவாமிநாதனின் கையை உதறிவிட்டு, “அவன் எங்கன்னு கேட்டேன்.” என்று முறைத்து நிற்க,

“வேலை செய்யுற இடத்துல வந்து என்ன அக்கப்போரு பண்ணிக்கிட்டு இருக்க?”

“அவன் எங்கன்னு கேட்டேன்.” அஞ்சன் அழுத்தமாய் மீண்டும் கேட்டு நிற்க, என்ன விஷயம் என்று புரியவில்லை என்றாலும் நிலைமையை சமாளிக்கும் பொருட்டு,

“திருப்பூருக்கு போக சொன்னேன் ஆனா ஏதோ முக்கியமா பேசணும் சூளைக்கு வரேன்னு சொன்னான்.” என்றான் சுவாமிநாதன்.

“ஓ… இங்கிட்டு தான் வரானா… வரட்டும்…” என்றபடி கால் மேல் கால் போட்டமர்ந்து ஆத்திரம் கலந்த பகைமையுடன் அஞ்சன் அடக்கப்பட்ட மூச்சுகளை இழுத்து வெளியிட, ஏதோ பிரச்சனை என்பது பிடிபட அது என்னவென்று பிடிபடவில்லை அண்ணனுக்கு.