*19*

பொட்டு தூக்கமின்றி அந்த இரவு எப்படி கழிந்தது என்று இருவருக்குமே தெரியவில்லை. சுவரோடு ஒண்டியவள் ஒண்டியபடியே இருக்க, அதிர்வில் அஞ்சன் மறுபுறம் சுவரில் சாய்ந்து வெறித்தபடி அமர்ந்திருந்தான். 

அவள் சிதறடித்திருந்த மெய் அவனை சுக்கு நூறாக உடைத்து துவம்சம் செய்திருக்க சிந்தை தன் சக்தி இழந்திருந்தது. காலைக்கடமைகள் அழைக்கும் வரையுமே இருவரும் நகரவில்லை.

இலகுவான உடைக்கு மாறி தன்னை சுத்தப்படுத்தி வந்தவள் இருவருக்குமாய் காபி போட்டு தயக்கத்துடன் அவனிடம் நீட்ட, வெறித்த பார்வையை பதிலாய் தந்தவன் விடுவிடுவென அவளைக் கடந்து குளியலறை சென்று குளித்து வந்தான். 

வந்தவன் அவளை ஏறெடுத்தும் பார்க்காது, “கிளம்பு.” என்க, 

திகிலடைந்த கீர்த்தி, “எங்… எங்க?”

“…”

அவனின் அமைதியிலிருந்து எதையும் கணிக்க முடியாவிட்டாலும் அவ்வளவு எளிதில் எதுவும் சரியாகப்போவதில்லை என்று புரிந்தது.

அவள் நகராது இருப்பதை கண்டு அவளை உறுத்து நோக்கியவன், “கிளம்புன்னு சொன்னேன்.” 

என்றும் இல்லாத அளவுக்கு அவன் குரல் உயர, திடுக்கிட்டு விழித்த கீர்த்தி அடி மேல் அடி வைத்து அவனை நெருங்க, அவளை அருகே வரவிடாமல் விருட்டென வெளியேறி வண்டியை முறுக்கி ஓயாது ஹாரன் அடித்தான். அவனது அவசரத்தில் பதறியடித்து ஓடியவள் வீட்டை பூட்டி சாவியை பர்சில் திணித்தபடி அவன் பின் ஏறிக்கொள்ள, வாகனம் அக்காலை வேளையில் கண்மண் தெரியாமல் பறந்தது.

‘எங்கே அழைத்துச் செல்கிறான்? இவ்வளவு கோபமா? எப்படி இவனை மலையிறக்கப் போகிறேன்?’ பயபந்து தொண்டைக்குழியில் மட்டுமில்லாது தேகம் முழுதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க, நடுக்கத்துடனே செல்லும் பாதையை கவனித்தாள் கீர்த்தி. 

அது கோவை செல்லும் வழி. ஊருக்கு போகிறோமா? எதற்கு இப்போது? இரவிலிருந்து எதுவும் பேசவில்லையே? இவர் மனதில் என்ன ஓடுகிறது? கேள்விகள் மட்டுமே அவளிடம். பதில் சொல்ல வேண்டியவனோ வண்டியை எங்கும் நிறுத்தாது ஒரே முறுக்கில் ஒரு வீட்டின் முன் நிறுத்தியிருந்தான்.

எங்கு வந்திருக்கிறோம் என்று அவள் பார்க்க, “இறங்கு.” என்றான் அவன்.

அவன் பேச்சுக்கு செவி சாய்த்த வண்ணம் அவள் இறங்கிட, அவளை அழுத்தமாய் பார்த்தவன், “இங்குட்டு இருக்க முடியாம தான எல்லாம்… இனி இருக்கலாம்.” 

என்ன சொல்கிறான் இவன்? மனதில் இருந்த கேள்வியை வார்த்தையாய் வடிக்கும் முன்னமே கிளம்பியிருந்தான் அங்கிருந்து. அவன் தனித்து விட்டுச் சென்றதில் விக்கித்து நின்றாள் கீர்த்தி. 

நடப்பவை புரியாது மனம் படபடக்க, உடல் நடுங்கி தூக்கிப் போட்டது.  பயத்தில் அலைபேசி கூட எடுத்து வராதது நினைவு வர, காலைக் குளுமையிலும் வியர்வை மொட்டுக்கள் அரும்பி இதயம் படபடத்தது. எங்கே இருக்கிறோம் என்று மெல்ல விழிகளை சுழலவிட்டாள்.

குண்டும் குழியுமாய் இருந்த அத்தெரு முழுதும் கூரை வீடுகள் சில, ஷீட் போட்ட வீடுகள் சிலது என்று அங்கங்கு வீடுகள் ஒழுங்கற்று இருக்க, தவிப்பு மறைந்து தெரியாத இடத்தில் இப்படி விட்டுச் சென்றுவிட்டானே என்ற கோபம் எட்டிப்பார்த்தது.

மணமாகும் முன் மணவாளனாய் ஒருவனை நினைத்து மனதை தொலைத்தது அவ்வளவு பெரிய பிழையா என்ன? 

தொலைத்ததை எண்ணி நொந்து வெந்து திருந்தி இருப்பதை இழந்துவிடக் கூடாது என்ற முனைப்பில் அவனுடன் ஒன்ற நினைத்தால் அதையும் முழுமனதாய் ஏற்க முடியாது போக, உண்மையை உரக்க உரைப்பதில் தான் நிம்மதி என்ற உந்துதலில் அனைத்தையும் அவள் சொல்லி ஆசுவாசப்பட்டிருக்க, அதற்கான பிரதிபலன் இதுவா என்றிருந்தது அவளுக்கு.

கோபமாய் முகத்தை காட்டினால் பொறுத்திருப்பேனே என்று எண்ணுகையில்,

“நீங்க எங்க இங்க?” பின்னிருந்து ஒலித்த அக்கேள்வியில் திரும்பாமலேயே யாரென்று தெரிந்தது கீர்த்திக்கு. 

சில மாதங்கள் முன் வரை இதம் பரப்பிய அக்குரல் இன்று அவள் சகலத்தையும் நடுங்கச் செய்தது. 

தன் வீடு முன் நிற்கும் கீர்த்தியை அதிர்வுடன் நோக்கியபடி முள்வேலிக் கதவை திறந்து கொண்டு வந்த அருண், “இவ்ளோ காலையில இங்குட்டு இருக்கீங்க? ஆரோட வந்தீங்க? எதுக்கு வந்தீங்க?” 

அவன் கேள்விகளை அடுக்க, அவனை நோக்கி திரும்பியவளுக்கு நொடியில் புரிந்து போனது அது அவன் வீடென்று. அஞ்சன் சொல்லிச் சென்ற வார்த்தைகளின் அர்த்தமும் மெல்ல விளங்க, ஐயோ என்றானது கீர்த்திக்கு.

கணவன் தன்னை தவறாய் புரிந்து கொண்டுவிட்டான் என்ற தவிப்பில் தலையை இடவலமாய் ஆட்டியவள் அங்கிருந்து கிளம்பிட நினைக்க, வழி தெரியாத ஊரில் அலைபேசியும் இன்றி எங்ஙனம் செல்ல? துக்கம் சூழ்ந்து தொண்டை அடைத்தது. 

அவள் முகம் பேசிய மொழி அவனையும் தொற்றிக்கொள், “என்னாச்சு? அவன் எங்க?”

“உன்னோட கோழைத்தனம் என்னை எங்க கொண்டு வந்து விட்டிருக்கு பாரு…” ஆதங்கத்துடன் அவனை ஏறிட்டவள் விழியில் தேங்கிய நீரை புறங்கையால் துடைத்து விம்மினாள். 

அஞ்சனுடன் நன்றாக வாழ்ந்து காட்டுகிறேன் பார் என்று முன்பு சபதம் எடுக்காத குறையாக அருணிடம் பேசிய பேச்சுக்கள் வேறு நினைவு அடுக்கின் மேல் வந்து அவள் கண்ணீரை கூட்ட, தன் நிலை எண்ணி கழிவிரக்கம் பெருகியது. அது கோபமாய் உருமாறி தன் வாழ்வில் இருக்கும் இரு ஆண்கள் மீதும் சகட்டு மேனிக்கு பரவியது.

“எங்கம்மா சொன்னதை நீங்க ரெண்டு பேருமே நிரூபிச்சிட்டீங்க. நீ காதலிச்சு ஏமாத்துன அவன் உண்மை தெரிஞ்சதும் விட்டுட்டான். உங்க பாசம் நேசம் எல்லாம் உங்க இஷ்டத்துக்கு நாங்க ஆடுற வரைக்கும் தான்ல… நீங்க காத்திருக்க சொன்னா காத்திருக்கணும். என்னை விட்டுட்டு அவனை ஏத்துக்கோன்னா ஏத்துக்கணும். மொத்தத்துல நீங்க ஆட்டிவைக்கிற பொம்மையா இருக்கணும்.” 

“விட்டுட்டானா?” அதிர்ந்து விழித்தான் அருண். உண்மை தெரிந்து விட்டதா? நெஞ்சுக்குழி வேகமாய் ஏறி இறங்க, நெஞ்சை நீவிவிட்டுக்கொண்டான்.

“உன் ஒருத்தனால மூணு பேரு மனசும் செத்து போச்சு. இப்போ சந்தோஷமா?” என்று அவன் மீது எரிந்து விழுந்தவள் விடுவிடுவென நடக்க, அவள் பின்னே ஓடினான் அருண்.

“என்னாச்சு? அவன்கிட்ட பேசவா?” என்று தவிப்புடன் அவளிடம் வினவ, சட்டென நின்றவள் சுற்றுப்புறம் பார்த்தாள்.

வீட்டு வாயிலை மொழுகியபடி ஓரிருவர் அவர்களை நோட்டமிட்டு சென்றனர். அவர்களின் கண்களுக்கு பேசுபொருளாக மாற விரும்பாதவள்,

“பஸ் ஸ்டாண்ட் இங்கிருந்து எவ்ளோ தூரம்?” அவனை பார்ப்பதை தவிர்த்து வினவ,

“எதுக்கு பஸ்ல? நான் அஞ்சன் வூட்டுல கொண்டாந்து வுடுறேன். பக்கத்து தெரு தான்…” என்றவனை கொன்றுவிடும் ஆவேசத்தோடு முறைத்தாள். 

“புருஷன் விட்டுட்டான் அதை சரி பண்ணி கொடுன்னு உங்கிட்ட வரணும்னுங்குற அவசியம் எனக்கு இல்லை. இங்கிருந்து போகத்தான் வழி தெரியலையே ஒழிய என் வாழ்க்கையை பாத்துக்க எனக்குத் தெரியும். நீ… நீ பண்ணதெல்லாம் போதும்… உன்னை விரும்புன பாவத்துக்கு எவ்ளோ முடியுமோ அவ்ளோ நோகடிச்சுட்ட… உன் பிரெண்டா இருந்த பாவத்துக்கு அவருக்கும் நல்ல பரிசு கொடுத்துட்ட…” சுற்றம் மறந்து குமுறினாள் கீர்த்தி.

“தப்பு தான்… இங்கிட்டு நின்னு பேச வேணாம்…” என்றவனுக்குமே அவளை எங்கு அழைத்துச் செல்வது என்ற குழப்பம். 

பக்கத்து தெருவில் தான் அஞ்சன் வீடு இருக்கிறது. இந்த நேரத்தில் அவளை அவன் அழைத்துச் சென்றால் தேவையற்ற பேச்சுக்கள் வரும். ஊருக்குள்ளும் இவளுடன் இப்படி தனித்து நின்று பேசுவது நாகரிகமாய் இருக்காது. என்ன செய்வது என்று அவன் தவித்து நிற்க, அவள் நிற்கவில்லை. மனம் உந்திய திசையில் பாதங்களை செலுத்தினாள்.

பக்கத்து தெருவில் தானே வீடு என்றான்… நாமே தேடி சென்றுவிடலாம். தெருவுக்குள் நுழைந்து விட்டால் போதும் வீடு அவளுக்கு அடையாளம் தெரிந்துவிடும். மணமாகி ஓரிரு நாட்கள் மட்டுமே அவள் இங்கு இருந்தமையால் அவ்வூர் பற்றி பெரிதாய் தெரியவில்லை. மற்றபடி வீடு ஓரளவுக்கு நினைவில் இருந்தது. அஞ்சனை மனதில் அர்ச்சித்தபடி கிளை தெருவுக்குள் நுழையப் போக, பின்னோடே வந்த அருண் வீட்டிற்கு வழி சொன்னான்.

“நேரா முட்டுச் சந்து போயி இடக்கால திரும்பினா வலப்பக்கம் அஞ்சாவது வூடு.” என்றவனை கண்டுகொள்ளாது அவன் சொல்லிய திசையில் காலை எட்ட வைத்து நடந்தாள் கீர்த்தனா.

செல்லும் அவளையே தவிப்புடன் பார்த்தபடி நின்ற அருணுக்கு நெஞ்சம் அடைத்தது. அஞ்சனுக்கு தெரியாதவரை கீர்த்திக்கு இழைத்த துரோகம் மட்டும் நொடிக்கு நொடி நினைவு வந்து வதைத்திருக்க, தற்சமயம் அஞ்சனை நினைத்தாலே கலங்கியது மனம். நேசித்தவள் இப்படி போக்கிடம் தெரியாது திக்கற்று தன் வீடு முன் நிற்க, அவளை தவற விட்டிருக்க கூடாதோ என்ற எண்ணம் ஆழியென ஆர்ப்பரித்து அவன் மனதை அரித்தது. 

தற்போது இருக்கும் வீட்டை இன்னும் சற்று விசாலமாய் வசதியாய் மாற்றி அவளை மனைவியாய் அழைத்து வரவேண்டும் என்று எண்ணிய கணங்கள் யாவும் அவனைப் பார்த்து கைகொட்டி சிரிப்பது போலிருந்தது. முள்வேலி கொண்டு கைகள் கட்டப்பட்டு எதுவும் செய்ய இயலா தன் நிலையை எண்ணி விழியோரம் நீர் கசிந்து கன்னத்தில் இறங்கியது.

அதே உவர்நீர் கீர்த்தியையும் விட்டுவைக்காது ஆக்கிரமித்துக்கொள்ள தொண்டைக்குழியை வேதனை அடைத்தது. பிடித்தம், நேசம், காதல் என்று வார்த்தைகளை சிதறடித்த இரு ஆண்மகனுமே தன்னை நிற்கதியில் விட்டுவிட்டார்களே என்ற ஆதங்கம் கரை சேர வழியறியாது கண்ணீராய் வெளியேறியது. 

தாய் பேச்சை கேட்டிருக்க வேண்டும்… நேசம் வைக்க துணை தேடியிருக்க கூடாது என்று அழுத்திச் சொன்னது மூளை. இனி யோசித்து என்ன பயன்? சிக்கலான வாழ்க்கையை சீர் செய்வதா… அஞ்சனை என்னவென்று சமாதானம் செய்வது? அடுத்து எப்படி அனைத்தையும் நகர்த்துவது என்று ஒன்றும் புரியாது வழிந்த நீரை துடைத்தபடி மாமியார் வீடு வந்து சேர்ந்தாள்.

வாயிலில் அஞ்சன் வண்டி நிற்கவும் கழிவிரக்கம் பின்சென்று கோபம் கொப்பளித்து பொங்கியது. அதே வேகத்துடன் உள்ளே நுழைந்தவள் எதையும் கண்டுகொள்ளாது அவர்களின் அறைக்குச் செல்ல, அவளின் வருகையை அதிர்வுடன் பார்த்த பரிமளம் கணவரை தேடிச் சென்று பிடிபிடியென பிடித்துவிட்டார்.

“அப்பன் இல்லாத வூட்ல பொண்ணு எடுக்க வோணாமுன்னு சொன்னேன் கேட்டீகளா? இப்போ என்ற புள்ளை தான் நிம்மதி இல்லாம தவிக்குறான்.”

கொல்லை புறத்தில் களையெடுத்துக் கொண்டிருந்தவரிடம் இப்படி வந்து பொறிய, தலையும் புரியாது வாலும் புரியாது நெற்றி சுருக்கிய பழனி, “என்னத்தை உளறிட்டு கிடக்க? ஆரு கஷ்டப்படுறா இப்போ?”

“வேற ஆரு நம்ம அஞ்சுவை தான்…”

“அவனுக்கு என்ன? கீர்த்தி பொண்ணு அவங்க அம்மா வூட்டுக்கு தான போயிருக்குனு சொன்னான்…” என்று யோசித்தார் பழனி.

“விடியாலேயே ஒத்தையா வந்து நிக்கும் போதே என்ற மனசுல பட்டுச்சு எதுவோ சரியில்லைன்னு. அம்மா வூட்டுல இருக்கிற பொண்ணு கண்ணுல தண்ணிய வச்சிக்கிட்டு பின்னாடியே வந்து நிக்குது. கண்ணாலம் ஆகி ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள இப்படின்னா என்னத்தை நினைக்குறது? கண்ணாலம் ஆனதுலேந்து அஞ்சுகூட கடமைக்கு இருக்குற மாதிரி தான் மூஞ்சை வச்சிட்டு இருப்பா உங்க மருமவ… இப்போ என்ன பண்ணி வச்சாளோ… நல்லா தேடிப் புடிச்சிருக்கீங்க பாருங்க… நாளே நாள்ல தனியா பிரிச்சி கூட்டிட்டு போனா இப்போ தனியா வந்து நிக்குறான் என்ற மவன்.” என்று புலம்ப பழனிக்கும் யோசனை தான்.

மற்ற மருமகள்கள் துடுக்காய் பேசினாலும் குடும்பத்துடன் இணக்கமாகவே இருக்கின்றனர். ஆனால் கீர்த்தி வந்த நாளிலிருந்து ஒட்டாமல் பட்டும்படாமல் இருப்பதை சிரத்தை எடுத்து கவனித்திருக்க வேண்டுமோ என்று எண்ணம் தோன்ற மனைவியிடம் எதுவும் பேசவில்லை.

“என்ன பேசாம இருக்கீக… நான் வோணாம்ன்னு சொல்லியும் இந்த பொண்ணை தான் கட்டணும்னு புடிவாதமா நின்னு ஏதேதோ சொல்லி அஞ்சுவையும் சமாளிச்சு சாதிச்சிபுட்டு இப்போ இப்படி இருந்தா என்ன அர்த்தம்.”

“அஞ்சுக்கு ஜாதகத்துல தோஷம் இருக்குன்னு தெரியாதா உனக்கு? கீர்த்தனா ஜாதகம் மட்டும் தான் பொருந்துச்சி… கட்டி வைக்காம பொறவு என்ன பண்றது… மத்த எல்லாருக்கும் பொருத்தம் பாத்துதான கண்ணாலம் பண்ணோம் எல்லாம் நல்லாத்தான இருக்காங்க. இவங்களும் இருப்பாங்க… நீ வுடு நான் பாத்துக்கிறேன். மருமவகிட்ட அவதிப்பட்டு மூஞ்சை காட்டாத.” என்ற கணவரை முறைத்துவிட்டு பரிமளம் உள்ளே சென்றார். 

பழனிக்கு ஜோசியத்தை தாண்டி உள்ளுணர்வு சொல்வது தான் வேதவாக்கு. அப்படி கீர்த்தனா தன் மகனுக்கு சரியாக பொருந்துவாள் என்ற தன் முடிவு பொய்க்காது என்று திண்ணமாய் நம்பினார். அதன் பொருட்டு அமைதி காக்க முடிவெடுக்க, அவர் மகனுமே அமைதி மார்க்கத்தை கையிலெடுத்தான்.

அறைக்குள் ஆவேசமாக நுழைந்த கீர்த்தி வெறுந்தரையில் மேற்கூரையை வெறித்தபடி படுத்திருந்த அஞ்சனைக் கண்டதும் சற்று நிதானித்தாள். 

“எதுக்கு என்னை அப்படி விட்டுட்டு வந்தீங்க?” அடக்கப்பட்ட கோபத்துடன் அவள் வினவ, அவன் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

“…”

“உங்களைத்தான் கேக்குறேன் என்னை அம்போன்னு அங்க இறக்கி விட்டுட்டு இங்க வந்து படுத்திருக்கீங்க? என்ன நினைச்சுகிட்டு என்னை அங்க விட்டீங்க?”

“…”

“பேசக்கூட முடியாதா? பிடிக்காதவளா ஆகிட்டேன்ல?” 

“…”

“அப்படி என்ன பண்ணிட்டேன்னு இப்படி இருக்கீங்க? நான் என்னமோ அவன்கூட வாழ ஆசைப்பட்ட மாதிரி அவன் வீட்டு வாசல்ல விட்டுட்டு போறீங்க… உங்களை ஏத்துக்க சிரமப்பட்டேன் தான் அதுக்காக உங்க கையால தாலி வாங்கிட்டு அவன்கிட்ட போக நினைக்குற அளவுக்கு தரங்கெட்டவ இல்லை நானு…” 

என்னை விட்டுவிட்டாயே என்று கோபத்தில் துவங்கிய பேச்சு அவன் கண்டுகொள்ளாது போகவும் தன்னை நிரூபித்து விட வேண்டுமென்ற வேகத்தில் அவள் பேச்சுக்கள் அமைய, அசைவேனா என்று படுத்திருந்தான் அஞ்சன். அவளும் விடுவதாய் இல்லை.

“அவன் மேல விருப்பப்பட்டதை சொல்லாதது தப்புதான்… அதுக்காக இப்படி… இப்படி என்னை அவன்கிட்ட போக சொல்வீங்களா? நேத்தி உங்ககூட அப்படி இருக்க… ஆசைப்பட்டுட்டு இன்னைக்கு அவன் முன்னாடி என்னை நிறுத்தி… கூசுது எனக்கு… அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன் நானு?” 

அருணை மறந்து அஞ்சனை கணவனாய் ஏற்று வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்ல அவளே உவந்து முதல் படி எடுத்து வைத்திருக்க, அஞ்சன் அவளை அழைத்துச் சென்று அருண் வீட்டில் விட்டுச் சென்றதை ஏற்க இடம் கொடுக்கவில்லை அவள் தன்மானம். 

“என்னோட அன்புக்கு நியாயம் கிடைக்கலைனு மருகிட்டு இருந்தப்ப நானே அதை உங்களுக்கு செய்றேன்னு தோணுச்சு. உங்க அன்பு களங்கமாகிட கூடாதுனு தான் நான் உண்மையை சொன்னேனே ஒழிய அவன்கூட திரும்ப வாழணும்னு எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. பொய்யான வாழ்க்கை வாழ என் மனசு இடம் கொடுக்கல… குற்றவுணர்ச்சியோட உங்களை நெருங்க முடியாம நான் தவிச்ச தவிப்பு… எல்லாத்தையும் உங்ககிட்ட முன்னமே சொல்லி இருக்கணும்… ஆனா சத்தியமா அவன் உங்க பிரெண்டு… உங்களுக்குள்ள பழக்கம்னு எல்லாம் எனக்குத் தெரியாது… நான்… எதையும் வேணும்னு மறைக்கல…”

தன்னை உணர்த்திவிடும் வேகத்தில் வார்த்தைகளை கோர்த்து வரிகளை வரிசையின்றி பேச, விருட்டென எழுந்த அஞ்சன் விரைவாய் அவளை நெருங்கி அவள் கரத்தை அழுந்தப் பற்றினான்.

“அவன் மனசுல இல்லாமத்தான் அங்குட்டே பச்சைக்குத்தி வச்சிருக்கியோ… கண்ணாலம் கட்டுன பொறவும் மறக்க முடியாம அவனை நினைச்சி என்கூட இருந்திருக்க…” 

வார்த்தைகள் அவன் பல்லிடுக்கில் கடிபட்டு வர அவனது பிடியும் அவளது மணிக்கட்டில் தன் தடத்தை பதித்தது. சந்தேகம் கொண்டு அவன் சுமத்தும் பழியில் மனதின் வலி பெரியதாய் இருக்க தேகத்தில் விழுந்த அச்செல்லாம் அவள் கருத்தில் பதியவே இல்லை.

“இல்லை… அது… அப்படியில்லை. டேட்டூ தெரியாம… முன்னாடி ஏதோ கிறுக்குத்தனமா பண்ணது… சத்தியமா நீங்க கேக்குற வரை அது என் நியாபகத்துலேயே இல்லைங்க…”

“எந்நேரமும் அவனையே நினைச்சி வாழ்ந்துட்டு இருந்தா எல்லாம் எப்படி வரும்? என்ன பத்தி தெரிஞ்சும் ரெண்டு பேரும் ஒட்டுக்கா என்னை ஏமாத்தி இருக்கீங்க… எனக்கு புடிக்காதுன்னு தெரிஞ்சும்… அதுவும் அன்னைக்கு கோவில்ல என்னலாம் பண்ணுன… அத்தனையும் நடிப்பு அவனை நினைச்சிகிட்டு என்கிட்ட இழஞ்சியா?” 

தெரிந்தே ஏமாற்றி விட்டோம் என்ற குற்றசாட்டை மறுப்பதற்குள் அவன் வீசிய அடுத்த கேள்வியில் வாயடைத்து நின்றாள். அவன் கேட்பது உண்மைதானே… அன்று கோவிலில் அருணை வெறுப்பேற்ற அஞ்சனை நெருங்கியது நடிப்பு தானே? அந்த குற்றச்சாட்டிற்கு என்ன காரணம் சொல்லி தன்னை நியாயப்படுத்த முடியும் என்று அவள் தலை குனிந்து விட, அழுந்த அவள் தாடை பற்றி நிமிர்த்தியவன்,

“உன் பின்னாடி சுத்தி கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன்னு உன்னை தொந்தரவு பண்ணி புடிவாதமா நின்னேனாடி? அவனை புடிச்சிருக்குனா அவனை கட்ட வேண்டியதுதானே… எதுக்குடி என்னை கட்டி அவனை நினச்சுக்கிட்டு… ச்சை… இப்படி வேஷம் போட்டு எதுக்கு என்ன ஏமாத்துன? என்னைத்தான் கட்டணும்னு நான் கேட்டேனா? நான் கேட்டேனா?” 

வெறி பிடித்தவன் போல் நரம்புகள் புடைக்க உக்கிரமாய் நின்றவனை காண கீர்த்திக்கு அச்சம் பிறந்தது. உடன் சொற்களின் அழுத்தத்தோடு அவன் கரமும் அவள் தேகத்தை பதம்பார்க்க, வலியில் முகம் சுருக்கி முனகினாள் கீர்த்தனா. அதில் அவன் அழுத்தம் இன்னும் கூடித்தான் போனது.

“அன்னைக்கு அவன் வூட்டுக்கு வந்தப்போ என்னை பால் வாங்க அனுப்பிட்டு ரெண்டு பேரும் ஒட்டுக்கா சேர்ந்து என்ன பிளான் பண்ணீங்க? என்ன பேசுனீங்க?”

தன்னை அருணுடன் சேர்த்து வைத்து அவன் வீசிடும் வார்த்தைகள் யாவும் அவளை வால் கொண்டு அறுக்க, ஆவேசத்துடன் அவனைத் தள்ளியவள், “சந்தேகப்படுறீங்களா?” என்று கத்த,

“நீ பண்றது எல்லாம் அப்படித்தான் இருக்கு.” என்று கர்ஜித்தான் அவனும்.

“உங்களை என்னமோன்னு நினைச்சேன்… ஆனா…” நிறுத்தி நிதானமாய் அவனை உறுத்துப் பார்த்தவள், “இதுக்கு மேல பேச ஒண்ணுமில்லை…” என்று அறையிலிருந்து வெளியேற, பழனி பின் கட்டிலிருந்து உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது.

கீர்த்தி அவரைக் கண்டு சங்கடமாய் நிற்க, அவளை சமீபித்திருந்தவர், “ரெண்டு பேரும் கலைச்சி தெரியுறீங்க… ஒரு வாரம் இங்க இருந்துட்டு போங்க…”

“இல்லை… இல்லை மாமா… என்னோட திங்ஸ் கொஞ்சம் இங்க இருந்துச்சி அது அவசரமா தேவைப்படுது அதை எடுக்கத்தான் வந்தேன்…” திக்கித்திணறி சமாளித்தவள் சற்று தெளிந்து, “ஒரு ஆடரை முடிக்க இப்போ ப்ரொடக்ஷன் தீவிரமா போயிட்டு இருக்கு. லீவு போட முடியாது.” அசராது அவள் பொய்யுரைக்க, யோசனையாய் பார்த்தவர் எதுவும் சொல்லும் முன் அஞ்சன் அறையிலிருந்து பின்னோடே வந்தான்.

“ரெண்டு பேரும் சாப்புட்டு போங்க…” மகனை ஊடுருவும் பார்வை பார்த்தபடி பழனி சொல்ல, எரிச்சலாய் உதட்டை சுழித்த அஞ்சன் கண்டுகொள்ளாது வெளியே செல்ல எத்தனிக்க,

“நேரமே வந்து மருமவளை வேலைக்கு கூட்டிப்போ…” என்றார் பழனி விடாது. இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சனை என்பது அவர்களை பார்த்ததும் புரிந்துவிட, அதை சரிசெய்துவிடும் முனைப்பு அவரிடம்.

அஞ்சன் எதுவும் பேசாது அங்கிருந்து நகர,

“அவருக்கு இங்க வேலை இருக்கு மாமா… நானே போயிப்பேன்… பஸ் எத்தனை மணிக்கு வரும்னு மட்டும் சொல்லுங்க.” என்று கீர்த்தி அஞ்சனுடன் போக விரும்பாது பழனியிடம் முறையிட, நெற்றி சுருக்கிய அஞ்சன் வரவழைத்த புன்னகையுடன்,

“உன்னை அழைச்சிட்டு போறத விட வேற என்ன பெரிய வேலை இருக்கப்போவுது கண்ணு… கிளம்பு போவலாம்.” என்று கீர்த்தியை நேருக்கு நேராய் பார்த்துச் சொல்ல, தலை சுற்றியது கீர்த்திக்கு. 

உள்ளே அப்படி பேசிவிட்டு இப்போது இப்படி வலிய வந்து புன்னகைக்கிறானே என்று அவள் யோசிக்க,

‘உன்னை அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டேன்.’ என்ற தொனியில் வஞ்சம் கொண்டு மனைவியை பார்த்து வைத்தான் அஞ்சன்.