கோவிலுக்கு செல்லும் முன் தொந்தரவு செய்யாது ஒழுங்காய் இருந்தானே என்ற எண்ணம் எழாமல் இல்லை அவளுக்கு. அவ்வெண்ணம் தோன்றிய நேரம் அருணை வெறுப்பேற்ற எண்ணி அஞ்சனுக்கு தவறான உதாரணம் கொடுத்து தூண்டி விட்டு விட்டோம் என்று உரைத்தது. எடுக்கும் முடிவுகள் யாவும் தவறாக முடிகிறதே. இனி தப்பிக்க வழியே இல்லையா என்று கழிவிரக்கம் சூழ்ந்த கணம் கண்ணீர் கீழறங்கவா என்று விழிகளில் திரண்டு நிற்க, அந்த விழிகளில் முத்தம் வைத்திருந்தான் கணவன்.
“உனக்கு பிடிக்கலைன்னு எங்கிட்ட வாய் திறந்து சொன்னாதான் என்ன கண்ணு? என்னை பாத்தா உன் விருப்பத்தை மீறி பாய்ஞ்சிடுற மாதிரியா இருக்கு?” என்ற கேள்வியுடன் தன்னை பார்ப்பவனை நடுக்கத்துடன் நோக்கினாள் கீர்த்தி. இதுவரை அவன் நடந்துகொண்ட விதம் பாய்வது போலத்தானே இருந்தது என்று அவள் சிந்தை எடுத்துக்கொடுக்க கண்ணீர் வழிந்தது.
அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி அவளை மெத்தையில் நன்றாக படுக்க வைத்தவன் தன் தலைக்கு ஒரு கை கொடுத்து அவளை பார்த்த வண்ணம் ஒருக்களித்துப் படுத்தான்.
“நீ வாய் திறந்து சொல்லாம உன் மனசுல என்ன நினைக்கிறேன்னு எனக்கு புரியாது கண்ணு.” என்றான் பொறுமையாய்.
என்ன சொல்வது என்று புரியாது அவனையே அவள் பார்த்திருக்க,
“நான் கிட்ட வந்தா அழுகுற ஆனா நீயா நெருங்கி வந்து உரிமையா எல்லாம் செய்யுற. நான் என்ன நினைக்குறது கண்ணு?” என்று ஆயாசமாய் கேட்டவன் முதல் முறையாய் அவள் மனதில் பதிந்தான்.
“கண்ணாலம் நடந்த சந்தோஷமே இல்லை. பொழுதுக்கும் ஏதோ அழுத்துற மாதிரி இருக்கு.”
அவன் குரலில் இருந்த இறைஞ்சலோ ஏமாற்றமோ வேதனையோ ஏதோ ஒன்று அவனை கணவன் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தது. அவன் கடத்த வரும் செய்தியும் இறைஞ்சலும் அவளை ஏதோ செய்ய, அவனும் நெருக்கத்தை தவிர்த்து இடைவெளி விட்டு படுத்திருக்க அதிலேயே ஆசுவாசமானவள், “சொன்னா மட்டும் கேட்டூப்பீங்களா?” என்று பேசத் தயாரானாள்.
“நீ என்ன சொல்லி நான் கேக்கல கண்ணு? நீதான் எதுவுமே சொல்லலையே கண்ணு?” இயல்பாய் அவன் கூறினாலும் அது குற்றச்சாட்டாக தோன்றியது பெண்ணுக்கு.
“இதுதான்… இந்த கண்ணு மண்ணுனு கூப்பிடாதீங்கனு சொன்னேன் இப்போ வரை கேக்கல. உங்களுக்கு என்ன பிடிக்குமோ என்ன விருப்பமோ அதைத்தான் செய்றீங்க.” என்று பொறிந்தாள் மனைவி.
ஒவ்வொரு வாக்கியத்திலும் கண்ணு சேர்த்து அழைப்பதே அருணை நினைவில் இருந்து நீக்காது அந்த காதலையும் உயிர்ப்பித்து வைக்க அன்னை சொல்லும்படி அஞ்சனிடம் மனம் லயிக்க மறுக்கும் போது என்ன செய்திட முடியும் பாவையால்.
“உன்னை பார்த்த நாள்லேந்து நீ எனக்கே எனக்குனு வரப்போற எங்கண்ணுன்னு மனசுல பதிஞ்சிடுச்சு. ஆசையாத்தான் கூப்பிடுறேன்… உனக்கு புரியலையா?” தன் அழைப்புக்கான காரணம் உணர்த்தி பின் ஏக்கத்தோடு வினா எழுப்ப,
“நான் முதல் முதலா கேட்ட விஷயத்தை கூட மாத்திக்க முடியலைன்னா நான் பேசி ஒன்னும் ஆகப் போறது இல்லை.” என்று முகம் சுருக்கினாள் கீர்த்தி.
அவள் சொன்ன உடனே எல்லாம் அவன் மாற்றிக்கொள்வேன் என்றிடவில்லை. முகத்தைத் தூக்கினான். என் ஆசையை நிராகரிப்பாயா? என்ற ஆதங்கம் அவனிடம்.
அவனின் சுணங்கிய முகம் கண்ட கீர்த்தி எள்ளலாய் இதழ் வளைத்து, “என்ன மாத்திக்க முடியலையா? இந்த சின்ன விஷயத்தை மாத்த கூட கஷ்டம்னா என் நிலைமையை யோசிச்சு பார்த்து நடந்துக்கோங்க.”
“என்ன நிலைமை?” என்று கேட்டான் பட்டென்று.
அவனின் கேள்வியில் திடுக்கிட்டு நிதானித்த கீர்த்தி இருக்கும் நிலையும் நடைபெறும் உரையாடலையும் உணர்ந்து, “அது… அது… எல்லாம் சீக்கிரம் நடந்துடுச்சு… இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ற ஐடியா இல்லை. அம்மா தனியா இருக்காங்க…” என்று ஏதேதோ சொன்னாள்.
“இதெல்லாம் நீ முன்னாலேயே சொல்லி இருந்தா நல்லா பழகின பொறவு கூட கண்ணாலம் பண்ணி இருக்கலாம். நீதான் சரியா பேசவே இல்லை.” துவங்கிய குற்றச்சாட்டிலேயே மீண்டும் வந்து நின்றது.
‘ஒன்னு பேசணுங்குறான் இல்லை ஒட்டிக்க வரான்.’ என்று சுணங்கியவள் காதல் வந்த பின் தானும் அருணிடம் பேசவும் அவனிடம் உரிமை பாராட்டவும் எத்தனை ஆசை கொண்டோம் என்றதை மறந்துவிட்டிருந்தாள். அது காதல் படுத்தும் பாடு என்று எங்கனம் அவள் புரிந்து கொண்டு அஞ்சனை ஏற்க? ஆனால் அஞ்சன் விடவில்லை. அவனே துவங்கினான் பேச்சை.
“என்ன அமைதியாகிட்ட? எனக்கு உங்கிட்ட நிறைய நிறைய சொல்லணும். இம்புட்டு நாளும் எனக்குன்னு உரிமையானதா எதுவும் இல்லை. எல்லாத்தையும் எல்லாரோடையும் பகிர்ந்துக்கோணும். ஆனா நீ அப்படி இல்லை. கடைசி வரைக்கும் எனக்கே எனக்காக எங்கூட வரப்போற எங்கண்…” கண்ணு என்று அழைக்க வந்தவன் சுதாரித்து அந்த விளிப்பை தவிர்த்துத் தொடர்ந்தான்,
“எனக்கு எல்லாமே என்ற அண்ணனுங்களோடது தான் இதுவரை. அவனுங்க போட்டிருக்குற உடுப்பு சின்னதானா அதை உடனே எனக்கு கொடுத்துடுவாங்க. எனக்குன்னு புதுசா எதுவுமே கிடைக்காது எல்லாமே அவனுங்களுக்கு போனதுல மீதிதான். வருஷத்துல தீபாவளி பொறந்தநாள் இந்த ரெண்டு நாளுக்கு மட்டுந்தான் எனக்கு புது உடுப்பு எடுத்து கொடுப்பாக…
ஸ்கூலுக்கு அம்மா கிளப்பிவிடும்னு ஆசையா அது மூஞ்சை பாத்தா என்ற பெரியண்ணன் வந்து என்னை கிளப்பிவிடுவான் எனக்கு செம்ம காண்டாகும். எங்கேயாவது அப்பா கூட போகலாம்னா அண்ணனுங்க ஆராவது தான் அழைச்சிட்டு போயி வாங்கி கொடுப்பானுங்க. அவனுங்க படிக்குற பள்ளிக்கூடத்துல படி அவனுங்க படிச்ச காலேஜுல படி அவனுங்க கிட்ட வேலை கத்துகிட்டு அவனுங்க கூட சேர்ந்து வேலை பாருனு எப்போதும் அவனுங்க புராணம் தான்… எனக்கு என்ன விருப்பம்னு ஒருத்தரும் கேட்டதில்லை. என்னோடது இதுன்னு எனக்கு உரிமையானது எதுவும் இல்லை.
ஆனா நீ… அம்மா தான் உன்ற போட்டோ காமிச்சுச்சு. அப்போலேந்து உன்ற கை கோர்க்க ஆசையா இருக்கு கண்ணு…” என்றவன் பேச்சோடு அவள் கரத்தை தன் மற்றொரு கரத்தால் பிடித்தான்.
“நீ எனக்கு மட்டுந்தான்… நீதான் எனக்கு எல்லாம் பாத்து பாத்து செய்யணும். நானும் உன்னை நல்லா பாத்துப்பேன் ஆருக்கும் கொடுக்க மாட்டேன்.” அதுவரை தெளிந்த நீரோடையாய் பேசிக்கொண்டிருந்தவன் இறுதியில் சிறுபிள்ளையென அவளை ஒண்டி அவள் தோளில் தலை சாய்த்திருந்தான்.
அவள் விருப்பத்தை பகிரவில்லை என்றால் என்ன? இந்த திருமணத்தில் என்னுடைய எதிர்பார்ப்பு இதுதான் என்று தன்னுடைய பிரியத்தை ஏக்கத்தை பகிர்ந்திருந்தான் அஞ்சன். அவனின் பேச்சை புருவம் முடிச்சிட கேட்டுக்கொண்டிருந்த கீர்த்தி இறுதியில் அவன் தன் தோளில் தலை வைத்து ஒண்டவும் அவனை விலக்கத் தோன்றாமல் அப்படியே படுத்திருந்தாள்.
‘என்ன இப்படி பேசுறான்? கூடப்பொறந்த அண்ணங்க மேலேயே பொறாமைப்படுறானா?’ என்ற நோக்கில் அவள் யோசனை சென்றது.
‘நான் என்ன கடையில வாங்குற பொருளா என்னை கொடுக்க மாட்டேன்னு சொல்றான்… நாந்தான் எல்லாம் செய்யணுங்குறான். அவனுக்கு வேலை செய்யத்தான் என்னை கல்யாணம் கட்டிக்கிட்டானாக்கும். பேசு பேசுனு அவன்பாட்டுக்கு பேசிட்டே இருக்கான். எப்படியோ இன்னைக்கு தப்பிச்சாச்சு நாளைக்கு என்ன செய்வான்? அமைதியா இருப்பானா இல்லை சீண்டி நம்மள கடுப்பேத்துவானா? இப்படியே எவ்வளவு நாளுக்கு சமாளிக்கிறது? அடுத்து என்ன பண்றது?’ மேலும் அவள் யோசனைகளை நீள, அது எதிலும் அருண் இல்லை. அஞ்சன் மட்டுமே.
வெற்றிகரமாய் அவள் நினைவுகளை அவ்விரவு முழுதும் அவன் ஆக்கிரமித்திருப்பது தெரியாது அவள் தோளில் சாய்ந்த சில நிமிடங்களில் நிம்மதியாய் உறங்கியிருந்தான் அஞ்சன்.
அதை உணர்ந்த கீர்த்தி அவனை தள்ளி படுக்க வைத்து லைட்டை அணைத்து அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள். உறக்கம் வர மாட்டேன் என்று போக்கு காட்ட, புரண்டு புரண்டு படுத்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாது மெத்தையை விட்டு கீழே வெறும்தரையில் படுக்க சில நிமிடங்களில் உறங்கிப் போனாள்.
வெண்கதிர்கள் கண்ணை கூசாத வண்ணம் தேகத்தை உரச, அஞ்சன் தான் முதலில் கண் விழித்தான். விழித்தவன் அருகில் கீர்த்தியைத் தேட வெறும் தரையில் படித்திருக்கும் அவளைக் கண்டதும் இரவில் பேசியது நினைவு வர உடன் அவள் பகிர்ந்ததும் அவளின் ஒதுக்கமும் மனதை சோர்வாக்க சில நொடிகள் அமைதியாக சிந்தனையில் உழன்றான். பின் ஏதோ முடிவெடுத்தவனாய் அவளை நெருங்கி தோள் தட்டி எழுப்பி,
“எழுந்திருச்சு மெத்தையில படுத்துக்கோ கீர்த்தி… நான் கிளம்புறேன்.” என்று எழ, கண்களைக் கசக்கியவள் இருக்கும் இடம் உணர்ந்து வேகமாக அமர்ந்து அறையை நோட்டமிட்டாள். அறை முழுதும் கிடத்தப்பட்டிருந்த ரோசா இதழ்கள் காய்ந்திருந்தது. நிமிர்ந்து அஞ்சன் புறம் பார்வை செலுத்த அவன் தலை கோதி தன்னை சரி செய்து கொண்டிருந்தான்.
எங்கே போகிறான் என்ற கேள்வி உதித்தாலும் வாய் திறந்து கேட்கவில்லை.
நேற்று வாங்கி வந்திருந்த புது உடுப்பையும் துண்டையும் எடுத்துக்கொண்டு அறைக் கதவை திறந்து அவன் வெளியே செல்ல, கீர்த்தி அவன் சொன்னது போல் மெத்தையில் படுத்துக்கொண்டாள்.
கதவு திறக்கப்படவும் கீர்த்தி வருவாள் என்ற எதிர்பார்ப்போடு சமையலறையில் இருந்து தலை நீட்டி எட்டிப்பார்த்த கமலம் அஞ்சன் வரவும் அவனுக்கு காபி கலந்துவிட்டு மகள் அறைக் கதவை தட்டினார். அது திறக்கப்படாமல் போகவும் ஒரு நொடி தயங்கி பின் தானே கை வைத்து கதவை தள்ளியவர் உள்ளே செல்ல அறையின் கோலத்தில் புருவம் ஏறி இறங்கி முகத்தில் புன்னகை அரும்பியது.
“ஏய் கீர்த்தி… மாப்பிள்ளை எழுந்து குளிக்க போயிட்டாரு நீ இன்னும் தூங்கிட்டு இருக்க… எழுந்திருடி…” என்று நின்ற இடத்திலிருந்தே சத்தம் போட, கீர்த்தி காதை பொத்தி திரும்பிப்படுத்தாள்.
தலையில் அடித்துக்கொண்டவர் அவளை நெருங்க தயங்கி அருகில் இருந்த ஒரு துண்டை எடுத்து சுருட்டி அவள் மீது வீசினார். சுளீரெனே தன் முகத்திலே விழுந்த துண்டை தூக்கி தூர எரிந்தபடி எழுந்த மகளோ அன்னையை எரித்துவிடும் கோபத்துடன் முறைத்தாள்.
“என்ன வேணும் உனக்கு? தூங்க விடாம இம்சை பண்ற?”
“மாப்பிள்ளை எழுந்தாச்சு நீ இன்னும் தூங்கிட்டு இருக்க… அவருக்கு முன்ன எழுந்திருக்கலைனாலும் அவரோட எழுந்து அவருக்கு தேவையானதை செய்யலாம்ல…”
“ஆமா… பெரிய மகாராஜா அவரு எழுந்ததும் அவர் பின்னாடியே சுத்தி தேவையானது எல்லாம் செய்யுறதுக்கு… இதுக்குத்தான் என்னை கல்யாணம் பண்ணி வச்சியா?” என்று வாக்குவாதம் செய்தபடி மெத்தையிலிருந்து எழுந்து வந்தாள்.
“ஏய் என்னடி பேசுற? அவருக்கு இங்க புதுசு… எதுவும் தெரியாது நீதான் ஒத்தாசையா இருக்கணும்.”
“மாப்பிள்ளை மேல ரொம்பத்தான் கரிசனம் உனக்கு.”
“எல்லாம் ஒரு சுயநலம் தான். நீ அவரை கவனிச்சிக்கிட்டா அவரும் உன்னை கவனிச்சிப்பாரு…”
“அம்மணி என்னை கவனிக்கலைனாலும் நான் அம்மணியை கவனிச்சிப்பேன்… கீர்த்தி எனக்கு ரொம்ப முக்கியம்.” என்ற குரலில் திடுக்கிட்டு தாயும் சேயும் ஒன்று போல அறை வாசலில் நின்ற அஞ்சன் புறம் பார்வை செலுத்தினர்.
அவனின் வருகையை எதிர்பார்க்காத கமலமோ விழித்து, “நீங்க பேசுங்க… நான் காபி எடுத்துட்டு வரேன்.” என்று அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் செல்வதையே பார்த்து நின்றவன் கீர்த்தியின் கணைப்பில் அவள் புறம் கவனம் திருப்பினான்.
“இப்படி ரூம் முழுக்க பூவை கொட்டி வச்சிருக்கீங்களே யார் சுத்தம் பண்றது இது எல்லாத்தையும்?”
வேறு எதுவும் பேசுவாள் என்ற அவன் எதிர்பார்ப்புக்கு எதிர்பதமாய் அவள் சுத்தம் செய்வது பற்றி பேச எரிச்சல் வந்தது அஞ்சனுக்கு.
“அந்தியில நீ நினைச்சது தானே நடந்தது அப்போ நீதான் சுத்தம் பண்ணனும்.” என்று அலட்சியமாய் சொன்னவன் தான் உடுத்தியிருந்த முந்தைய நாள் துணியை சுருட்டி ஒரு பையில் வைத்தான்.
அவனின் அலட்சியத்தில் தூண்டப்பட்டவள், “எங்கம்மாட்ட நான் கவனிச்சிப்பேன் பாத்துப்பேன்னு எல்லாம் பேசுன இப்போ இப்படி பேசுற… எல்லாம் ரீலா?” என்று அவனிடம் மல்லுக்கு நிற்க, வேகமாய் அவளை நெருங்கி இருந்தவன் அவள் கரம் பற்றி அருகில் இழுத்து,
“கவனிச்சிக்கிட்டதால தான் ராத்திரி உன்னை சும்மா விட்டேன்…” என்க, தன்னை விட நெடுநெடுவென வளர்ந்து நிற்பவனை நிமிர்ந்து பார்த்தாள் கீர்த்தி.
“இப்படி பாக்காத அப்புறம் கவனிக்காம ஏதாவது பண்ணிடுவேன். நீ இங்கேயே இரு நான் அந்திக்கு வந்து அழைச்சிட்டு போறேன்…” என்று அவளை விடுவித்தவன் பையை எடுத்துக்கொண்டு விடுவிடுவென வெளியேறி கமலத்திடம் காபி வாங்கி பருகிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
“சாப்பிடாம இவ்வளவு காலையில எங்க போறாருனு ஏதாவது கேட்டியாடி?” என்ற தாயின் கேள்விக்கு கீர்த்தியிடம் பதில் இல்லை.
“ஏன்டி இப்படி இருக்க? உன் வாழ்க்கையில நீயே மண்ணை வாரி போட்டுக்காதடி… யாரோ மாதிரி அவர் எங்க போறாரு சாப்புடுறாரா இல்லையானு எதையும் கண்டுக்க மாட்டேங்குற…” என்ற கமலத்தின் புலம்பல் அந்த நாள் முழுதும் நீடித்தது.
“சும்மா என்னைய மட்டும் சொல்லாத… புடிச்சு தானே கட்டிக்கிட்டாரு… அப்போ அவருதான் என்கிட்ட எங்க போறேன்னு அக்கறையா சொல்லிட்டு போயிருக்கனும்… நான் சாப்பிட்டேனான்னு போன் போட்டு கேட்டிருக்கணும்… அவரே எதுவும் செய்யல சும்மா என்னை பேசாத…” என்று கடுப்படித்தாள் மகளும்.
அவளுக்கு எங்கே தெரியும் அவன் செய்த களேபரத்தில் வீடே புரட்டி போட்டபடி இருக்க அவனுக்கு அலைபேசியை எடுக்கவெல்லாம் நேரமில்லை என்று…
ஆனால் வெயில் தாள மாலை குருங்கையிடம் இருந்து வந்த அழைப்பில் கீர்த்தியின் முகம் சுருங்கிவிட்டது. பின்னே புதிதாய் அடியெடுத்து வைத்த புகுந்த வீட்டில் அவளிடம் தோழி போல் பழகும் குருங்கையே பேச்சில் பேதம் காட்டி குற்றம் சாட்டும் விதமாய் பேசிட என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாது குழம்பினாள் கீர்த்தனா.