அத்தியாயம் 14 2
காலிங் பெல் சப்தம்கேட்டு கதவைத் திறந்த பாமா,”ம்ம். யார் வேணும்?”, என்று எதிரிலிருந்தவனைப் பார்த்துக் கேட்டார்.
“நா சுகுமாரன், இங்க வீடு வாடகைக்கு இருக்குன்னு சொன்னாங்க. பக்கத்துல கேட்டேன். இங்கதான் பேசணும்னு சொன்னாங்க”, என்றான்.
“ஹ்ம்ம். கொஞ்ச நேரம் இருங்க,கேட்டுட்டு வர்றேன்”, என்றவர் உள்ளே சென்று ஸ்ருதியின் அறைக் கதவை கொஞ்சமாக திறத்து பார்த்தார்.
அவளது அறையில் கட்டிலில் இரு குழந்தைகளும் நல்ல தூக்கத்தில் இருந்தனர். அவர்கள் அருகே கால்நீட்டி அமர்ந்திருந்த ஸ்ருதி காதில் ஹெட் போனோடு யூ ட்யூபில் என்னவோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
கதவு திறப்பதை பார்த்த ஸ்ருதி, கேள்வியாக பாமாவைப் பார்க்க.., ‘ஒரு நிமிஷம் வெளியே வாங்க’ என்பது போல பாமா சைகை செய்தார். கட்டிலில் இருந்து எழுந்த ஸ்ருதி, சின்னவனுக்கு அணைவாக ஒரு தலையணையை வைத்து, ஸ்ரீகுட்டியின் அருகே அவளது கரடி பொம்மையை வைத்து விட்டு வெளியே வந்தாள்.
“என்ன விஷயம்?”,
“உங்களை பாக்க யாரோ வந்திருக்காங்க. வீடு வாடகைக்கு வேணுமாம்”
‘கீழே இருக்கும் இரண்டு போர்ஷனிலும் ஆட்கள் உள்ளனர். அப்போது மேல் போர்ஷனை யாரேனும் கேட்கிறார்களோ?’ என யோசித்தவள், “ம்ம்.சரி, நா பாக்கறேன்”,என்று சொல்ல,
“வீடுதான காமிக்கணும்?, நா வேணா போட்டுமா ஸ்ருதி?”, என்றார் பாமா.
“ம்ம். சரி,வீட்டை காமிச்சிடுங்க, அவங்களுக்கு பிடிச்சிருந்தா மத்ததை பேசலாம்”, என்று விட்டு எதிர் போர்ஷனின் சாவியை பாமாவிடம் கொடுத்து, “அத்தை எங்க?”, என்று கேட்டாள்.
“மாத்திர போட்டு ரூம்ல தூங்கிட்டு இருக்காங்கமா”
இத்தனை நாள் மருத்துவமனையில் இருந்தது, படிகள் ஏறி இறங்கியது மற்றும் கார் பிரயாணம் போன்றவை அவருக்கு சோர்வை தந்திருக்கும் என்று ஊகித்து, “ஓஹ். சரி, நீங்க போய்ட்டு வந்துடுங்க”, என்று பாமாவிடம் சொல்லிவிட்டு,அவர் வெளியே சென்றதும் சற்றே நலுங்கியிருந்த தனது புடவையை சரி செய்து கொண்டாள். பாமா வரும்வரை கூடத்தில் இருக்கலாமென்று எண்ணி தொலைக்காட்சியை ஓடவிட்டு அங்கிருந்த ஒரு குஷன் இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
பத்தி நிமிடங்களில் பாமா வர, ஸ்ருதி ஏதும் கேட்கும்முன் அவராகவே,”அவருக்கு வீடு பிடிச்சிருக்காம், மேற்கொண்டு பேசலாமானுன்னு கேக்கறாங்கமா”
“இருக்காங்களா?”
“ஆமாம்மா, வெளிய வெயிட் பண்றாங்க”
“சரி உள்ள வர சொல்லுங்க”, என ஸ்ருதி சொன்னதும், வெளியே நின்று கொண்டிருந்த அம்மனிதனை பாமா உள்ளே அழைத்தார் .
கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் வந்த சுகுமாரனைக் கண்டதும்..,ஸ்ருதியின் முகத்தில் குழப்ப ரேகை படிந்தது. ‘இவனை கீழே பார்த்தோமே? ஈஸ்வரி கூட இவனிடம் என்னவோ பேசினளே?’. “நீங்க ஈஸ்வரியோட…?”
“ஆமாங்க. ஈஸ்வரி என் வொய்ப்”, என்றான் அவன்.
‘ஈஸ்வரி ஹஸ்பென்ட்ன்னா அப்போ தனியா வீடு எதுக்கு?’ மனதில் ஓட.. “அப்ப வீடு ..?”, என்று இழுத்தாள் ஸ்ருதி.
“எனக்குத்தாங்க. ஈஸு டெலிவரி முடியுமட்டும் எங்க ஆளுங்க இங்க வந்து போக இருப்பாங்க. அதனால அவங்களுக்கு வசதியா இருக்கட்டும்னு… வீடு குறைஞ்சது ஏழெட்டு மாசத்துக்காகவாவது தேவைப்படும்ங்க. நா வேணா ஒரு வருஷ வாடகையை இப்பவே குடுத்தடறேன்”, என்றான்.
ஸ்ருதிக்கு இன்னமும் குழப்பம் தெளியவில்லை. ‘ஈஸ்வரி இவனிடம் கோபமாகப் பேசினாள் அல்லவா? ஆனால் கணவன் மனைவி சண்டை எத்தனை நாள் நீடிக்கும்? இவன் சொல்வதும் சரிதானே? டெலிவரி என்றால் ஆட்கள் வரப் போக இருப்பார்கள்தானே? அதிலும் முதல் பிரசவமாயிற்றே?’,என்று தோன்றியது. எதற்கும் அத்தையிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு முடிவு சொல்வோம் என்று நினைத்தாள்.
தன் யோசனையிலிருந்து சுகுமாரனிடம் கவனத்தைத் திருப்பிய ஸ்ருதி, “நீங்க நாளைக்கு வர்றீங்களா?, நா பேசிட்டு சொல்றேன்”, என்றாள்.
ஸ்ருதியின் பதிலில் கொஞ்சமாய் முகம் சுருங்கயவன், தயங்கியவாறே, “மேடம், நீங்க என் மச்சான் வீட்ல கேக்கப் போறீங்களா?”, என்று கேட்டான்.
” ? “, பதில் சொல்லாமல் புருவம் உயர்த்தி கேள்வியாக சுகுமாரனைப் பார்த்தாள் ஸ்ருதி.
“நீங்க எங்க அத்தை கிட்ட என்னப்பத்தி கேளுங்க, மத்தபடி என் வொய்ப் கிட்டயோ அதுலயும் குறிப்பா அந்த யோகிட்ட மட்டும் கேக்காதீங்க. கேட்டீங்கன்னா என்னை உள்ளவே சேக்காதீங்கன்னு சொல்லுவாங்க”, என்று சொல்லிவிட்டு, தன்னிச்சையாக கையசைத்து, “அவருக்கு பெரிய நாட்டாமைன்னு நினைப்புங்க. புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ள எல்லாம் தலைய குடுத்துட்டு..”, அதீத மனஉளைச்சலில் படபடத்தான். தொடர்ந்து.., தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “அந்தாளுக்கு பயந்து எனக்கு வீடு தரக்கூடாதுனு முடிவெடுத்துடாதீங்க மேம்”, என்றான்.
‘பயந்தா? அதுவும் அந்த ஆளுக்கா..? ‘, “ஏன் உங்களுக்கும் அவருக்கும் ஏதாவது பிரச்சனையா?”
“அட அதெல்லாமில்லீங்க, அவரு கொஞ்சம் பெரியதனமான ஆளுங்க. ஆனா பாருங்க, தங்கச்சி விஷயம்னு வந்தா போதும். அவருக்கு நியாய அநியாயமெல்லாம் தெரியாம போயிடும். அய்யா அவ உங்க தங்கச்சி மட்டுமில்ல,என் பொண்டாட்டியும் கூட ன்னு அவர் காதுக்குள்ள போயி கத்தனும்போல இருக்கும். அவர்ட்ட கத்திட்டு நா என் பொண்டாட்டி கிட்ட பேசிட முடியும்ன்னு நினைக்கறீங்க? அவ்ளதான். அவங்கண்ணன எதித்து பேசிட்டா நா இருக்கிற திசையை கூட பாக்க மாட்டா”
“இத்தனை நாபொறுமையா இருந்துட்டேன், ஆனா, இனிமே முடியாதுங்க. வீட்டுக்குள்ள இருந்து ஆயிரம் சண்டை போட்டுக்கலாங்க, வீட்டை விட்டு வெளிய வரலாமா? அதும் நா ஊர்ல இல்லாத நேரமா பாத்து சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்துட்டாங்க. ஊருக்கே நியாயம் பேசறவரு.. இப்படி பண்லாங்களா? பாக்கலாம் நானா அவரான்னு. கூடவே இருந்து அப்பப்ப தலைல நாலு குட்டு வச்சா சரியாகிடும்”, என்றவன்.. மிகக் கவலையாக, “எங்க அத்த குடும்பம் மாறி எங்க ஃபாமிலி சிதறாம இருக்கணும்னு நினைக்கறேன் மேம்”, என்றான் அந்த சுகுமாரன்.
‘ஹ்ம்ம் இந்த வசந்தம்மா குடும்பம் இங்க திடீர்னு வந்தது க்கு இப்படியொரு பின்னணி இருக்கா? அத்தை குடும்பம் சிதறி போச்சா? யாரை சொல்றான்? வசந்தம்மாவையா? இவன் அந்த சண்டியருக்கு குட்டு வைப்பானாமா? நல்லாருக்கே’, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வரையறையின்படி ஸ்ருதிக்கு இந்த மனிதனைப் பிடித்திருந்தது. கூடவே ஒளிவு மறைவின்றி பேசும் அவனது குணமும். ஆயினும்.., ‘இருக்கிற தொல்லை போதாதுன்னு இவனுக்கு வேற வீட குடுத்து வம்பை விலைக்கு வாங்கறதா?’ என்ற எண்ணமும் தோன்ற, “அத்தை கிட்ட கேட்டு சொல்றேங்க”, என்றாள் பிடி கொடுக்காமல்.
ஆனால் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக, “சரிங்க நா வெயிட் பண்றேன்”, என்றான் அவன்.
‘ஹ்ம்ம். சரிதான், வீடு இல்லன்னா போமாட்டான் போல இருக்கே?’ “ம்ம். உக்காருங்க. உங்க பேரு?”, கேட்டாள் ஸ்ருதி.
நாற்காலியில் அமர்ந்தபடி, “ஜீவசுகுமாரன்”, என்று அனிச்சையாக சொல்லி, “இல்லல்ல சுகுமாரன்தான்”, என்றான் அவசரமாக.
‘இதென்னடா இது பேரை சொல்றதுக்கே தடுமாட்டமா இருக்கே?’, என்பது போல ஸ்ருதி அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, “பாமாக்கா..”, என்று கூப்பிட்டாள்.
அவர் வரவும்.., “இவருக்கு குடிக்க ஏதாவது குடுங்க, தோ வர்றேன்”, என்று அத்தையின் அறைக்குச் சென்றாள்.
பத்து நிமிடம் பொறுத்து ஸ்ருதி வெளியே வந்து அவனைப் பார்த்து, “எங்களுக்கு ஏதும் தொந்தரவு வரக்கூடாதுனு அத்த சொல்றாங்க”
“அய்ய, அதெல்லாம் ஒண்ணும் வராதுங்க.”
“அட்வான்ஸ் வாடகை எவ்ளோன்னு..”
“ஆங். தெரியும்ங்க. அஞ்சு மாச அட்வான்ஸ், மாச வாடகை.. பதினைஞ்சாயிரம், அதானங்க?”, என்று முடித்தான் சுகுமாரன்.
“எப்படி தெரியும்?”
“இல்ல. பக்கத்து வீட்ல சொன்னாங்க. அதான்..”
“எந்த பக்கத்து வீடு..?”, கேள்வியில் சந்தேகம் தொக்கி நின்றது.
“இங்க இடது பக்கம்.. பச்சை கலர் புடவை கட்டிட்டு ஒருத்தங்க..”
“யாரு ? நந்தினின்னு சொன்னாங்களா..?”
“ஆங். இருக்கலாங்க. ஆனா பேரு தெரிலைங்க.. ஆக்சுவலா இதே தெருல வீடு கிடைச்சா நல்லா இருக்கும்னு தேடிட்டே போனேன். ஒரு லேடி ஒருத்தங்க வெளிய நின்னாங்க, அவங்க கிட்ட கேட்டதுக்கு இந்த பிளாட்-லேயே ஒரு வீடு காலியா இருக்குன்னு சொன்னாங்க. அதான் விடக்கூடாதுனு உடனே இங்க வந்துட்டேன்”
“ஓஹோ?”
“வந்து உங்களுக்கு ஜி பே இருக்குங்களா?”
“ம்ம். இருக்கு”
“அமௌன்ட் ட்ரான்ஸ்பெர் பண்ணிடலங்களா?”
“ம்ம்.”
“நம்பர் சொல்லுங்க..?”
ஸ்ருதி கொஞ்சம் தயங்கியவாறே தனது அலைபேசி எண்ணை சொன்னாள். தொடர்ந்து, “பட் ரெண்ட்டல் அக்ரீமெண்ட் நாளைக்குத்தான் ரெடி பண்ண முடியும்”
“ஆங். அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லீங்க, இல்லன்னா ஒரு அம்பது ரூபா ஸ்டாம்ப் பேப்பர் இருந்தா குடுங்க. இப்பவே எழுதிக் குடுத்தடறேன்.”
“இல்ல.. அது எப்படி.. என்ன வாசகம் போட்டு எழுதணும்னு…”, என்று இழுத்தாள் ஸ்ருதி.
“அட நல்லா தெரியும்ங்க. நான் லாயர்ங்க.”, என்று சொன்னான் அந்த சுகுமாரன்.
“ஓஹ். நீங்க வக்கீலா?”
“ஆமா ஸ்ருதி அவரும் வக்கீல்தான்”, என்று சொல்லியபடி பர்வதம்மா தனது அறையில் இருந்து வெளியே கூடத்திற்கு வந்தார்.
அவர் வந்ததும் எழுந்து நின்ற சுகுமாரன், “வணக்கங்க”, என்றான்.
“வணக்கம்ப்பா. உக்காரு. நீதான் ஈஸ்வரி வீட்டுக்காரரா?”
“ம்ம். ஆமாங்க”
“வசந்தி உன்னைப்பத்தி நிறைய சொல்லியிருக்காங்க”, என்று அவன் அருகே இருந்த இருக்கையில் பர்வதம் அமர்ந்துகொண்டார்.
தலை தாழ்த்தி மெல்ல சிரித்த சுகுமாரன் வாஞ்சையோடு, “அத்தைக்கு நான்னா ரொம்ப பிடிக்கும்ங்க.”, என்று சொன்னவன், “ஹ்ம்ம். பேச்சுவாக்கில ஏதோ சொல்லப்போயி.. இப்படி..”, என்று வருத்தமாக ஆரம்பித்து, ஸ்ருதியும் பாமாவும் அங்கு இருப்பதால் நிறுத்தினான்.
பர்வதம் ஆறுதலாக, “எல்லாம் சரியா போயிடும். கவலைப்படாதப்பா”, என்றார்.
ஒரு பெருமூச்சு விட்டு தனது அலைபேசியை எடுத்து, ஸ்ருதிக்கு இணைய பண பரிவர்த்தனையை செய்தான். “அட்வான்ஸ் அனுப்பிட்டேங்க, செக் பண்ணிக்கோங்க.”
“ம்ம்”, என்று விட்டு தனது பேசியில் ஜி பே அறிவுப்பு ஏதேனும் வந்துள்ளதா என்று பார்த்தாள். பணம் வரவில் வந்ததாக அலைபேசி காண்பிக்க, “நா ஸ்டாம்ப் பேப்பர் இருக்கான்னு பாக்கறேன். நீங்க அக்ரீமெண்ட் கொடுத்துட்டே போங்க”, என்று விட்டு உள்ளே சென்று விட்டாள்.
முக்கியமான பத்திரங்கள் வைக்கும் பீரோவின் அடி அடுக்கில் தேட, சில நிமிடங்களில் ஸ்டாம்ப் பேப்பர் கிடைத்தது. ஸ்ருதி அதை எடுத்து பாமாவிடம் குடுத்து அனுப்பிவிட்டு, சினுங்க ஆரம்பித்த குழந்தையின் அருகே அமர்ந்து மெல்ல தட்டிக் குடுத்தாள்.
**************
இரண்டு மணி நேரம் பொறுத்து, சுகுமாரன் தனது அலைபேசியை எடுத்து மிகவும் தெரிந்த எண்ணை அழுத்தினான். “மச்சான், நீங்க சொன்னா மாதிரியே வீடு பிடிச்சிட்டேன். அடுத்து…?”
“……”
“அடுத்த வாரம் இங்க பில்டிங்க்கு பிளான் போட்டுருக்கானே அந்த பில்டரோட பேச ஆரம்பிக்கலாமா?”, என்று கேட்டான் சுகுமாரன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&
நட்புகளே..
ரொம்ப ரொம்ப பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சிக்கோங்க. தாமத பதிவுகள்.. தொடர்ச்சியான பண்டிகைகள், மாளையபக்ஷம், இதோ அடுத்து நவராத்திரின்னு நேரம் ஓடுது. கூடவே சொந்தங்கள், விருந்தாளிகள், அலுவக வேலைன்னு சுத்திட்டே இருக்கேன்.
இவ்ளோ வேலை வச்சிக்கிட்டு நீயெல்லாம் ஏன்மா எழுதறேன்னு கேட்டா என்ன சொல்றது? இதைத்தான் எனக்கு நானே அப்பப்ப கேட்டுக்கறேன். ‘என்ன பண்றது? பிடிச்சிருக்கேன்னு மட்டும்தான் பதில் வருது.
வாசகர்களுக்கு நா நியாயம் பண்ணலைதான். அதனால தயவு செய்து காத்திருக்க முடியாதவங்க பெரிய மனசு பண்ணி கதை முடிஞ்சதும் படிக்க ஆரம்பிங்கப்பா. மன்னிச்சிக்கோங்க மக்களே.