சிவாய நம:
ஸ்ருதிபேதம்
அத்தியாயம் 1
சரி? தவறு?
நிர்ணயிப்பது யார்?
காலமா? மனிதனா?
மாலை விளக்கு வைக்கும் நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லி இருக்கின்றதாம், அத்தை கோவிலுக்கு கதா காலட்சேபம் கேட்கவென, பேத்தி ப்ரித்வியுடன் செல்லும்போது முணுமுணுவென சொல்லிச் சென்றார். இதோ என கணவன் போல், அவசியமென்றால் இருபத்திநான்கு மணி நேரமும் வேலை பார்க்கும் பல்லாயிரக்கணக்கான பொறியாளர்கள். அந்தி சாய்ந்த நேரத்தில், அகால நேரங்களில் உணவெடுத்துக்கொள்கிறார்கள். இதை சாஸ்திர தர்மம் ஒப்புமா?
சமையலறையில் பாலைக் காய்ச்சியவாறே மனதுக்குள் இதைத்தான் நினைத்துக் கொண்டு இருந்தாள் ஸ்ருதி. இந்த தர்ம சாஸ்திரங்கள் வகுக்கப்பட்டபோது மின்சாரம், கணினி இருந்திருக்குமா?, சுழற்சி முறையில் பணி, உலக நேரத்திற்கு ஏற்றாற்போல் வேலை அட்டவணை இருந்திருக்குமா? இதெல்லாம் வாய்ப்பில்லை எனும்போது அன்று வகுத்த தர்ம சாஸ்திரங்கள் இன்றும் செல்லுபடியாகுமா? ம்ம்.. என்று யோசித்துக் கொண்டே அடுப்பை அணைத்து, அடுக்களை மேடையில் எடுத்து வைத்திருந்த டபராவில் சூடான பாலை விட்டு டிக்காஷனை கலந்தாள்.
அவளை பின்னாலிருந்து பாத்துக்க கொண்டே வந்த ராகவ், “என்ன பலமா யோசனை? .. ஹால்ல இருந்து ரெண்டு தடவ கூப்பிட்டேன்.. பதிலே காணோம்”, அலமாரியை திறந்து சர்க்கரை எடுத்து மனைவியின் கையில் கொடுத்தபடி கேட்டான்.
‘வீட்டில் இருந்தால் இவருக்கு பத்து நிமிடம் கூட பேசாமல் அமைதியாய் இருக்க முடியாது’, என்ற எண்ணம் கணவனது முகம் பார்த்ததும் எழ.. இதழ்க்கடையில் நகையோடு குறும்பாய் அவனைப் பார்த்து, ” ம்ம். கொஞ்ச நேரம் முன்ன நீங்க பண்ணினது சரிதானா? அஸுர சந்தியா வேளைல கூடாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்களே? அதப் பத்திதான் யோசிச்சுட்டு இருந்தேன்”, என்றாள் ஸ்ருதி, காபியில் சர்க்கரையை கலந்து அவனிடம் நீட்டியபடி .
குழப்பமாக மனைவியை திரும்பிப் பார்த்தவன், அவள் கிண்டல் பார்வை உணர்ந்து, கப்பை கையில் வாங்கி நுரையோடு ஒரு மிடறு குடித்துவிட்டு, அவளைப் பார்த்து முறுவலித்தபடி, “கொஞ்ச நேரம் முன்ன அப்படி என்ன தப்பா பண்ணிட்டேன்?”, என்று கேட்டு புருவம் உயர்த்தியவன், “சாப்பிட மட்டும்தான செஞ்சேன்?, அதையா பெரியவங்க தப்புன்னு சொல்லிருக்காங்க?’, காபியை ஒரு மிடறு அருந்தி, “இன்ஃபாக்ட் நான் பண்ற எதுவுமே தப்பில்லைடி”, என்றான் மனைவியிடம் குறும்பாக.
பதிலாக ஸ்ருதி சிரித்து, கைகளைக் கட்டியபடி சமையல் மேடையில் சாய்ந்து கொண்டு தலையசைத்து கேள்வியாக (கேலியாக?) “ஆஹா..ன்?” என்றாள். ஆமோதிப்பதாக தலையசைத்து, காஃபியின் அடுத்த மிடறு குடித்து, “பசித்துப் புசி…. அதே பெரியவங்க சொன்னதுதான்.. அதாவது எப்போ பசிச்சாலும் …”, என்ற குறுஞ்சிரிப்போடு ஆரம்பிக்க.. “போதும் போதும் சாமி… உங்ககிட்ட பேசினா நேரம் போறதே தெரியாது.” என்று ஸ்ருதி, சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஹாலில் கடிகாரம் ஏழு மணி அடித்து ஓய்ந்தது.
” அச்சோ, ஏழாயிடுச்சுங்க. மோட்டார் போட்டு ஒரு மணி நேரமாச்சு, போயி ஆப் பண்ணுங்க”, காஸ் அடுப்பின் மேலிருந்த சிம்னியில் பொருந்தியிருந்த கடிகாரம் பார்த்து சொல்ல…
ராகவ் அதற்குள் அவனது கப்பினை காலி செய்து கிட்சன் மேடையில் வைத்து, “யா.. ஆஃப் பண்ணிட்டு ஆபிஸ் கிளம்பறேன்.”, என்று ஸ்ருதியிடம் சொல்லியபடி வீட்டின் வெளியே இருந்த மோட்டார் ரூம் சென்று ஒடிக்கொண்டிருந்த மோட்டாரை அனைத்தான். வீட்டினுள் நுழைந்து கூடத்தை அடைந்த ராகவ், 34 அகவை நிரம்பிய மின் பொறியாளன். தமிழக மின்பகிர்மானத் துறையில் வேலையில் இருப்பவன். ப்ரித்வி என்ற நான்கு வயது பிள்ளையின் தகப்பன். வசிப்பது நங்கநல்லூர் பிரதான சாலையில். அப்பா காலத்தில் வாங்கிய மனையுடன் கூடிய ஓட்டு வீட்டை, இவன் தலையெடுத்து கீழே இரண்டு மேலே இரண்டு போர்ஷன்கள் என்று விஸ்தீரணமாக கட்டி, மாடியில் உள்ள ஒரு வீட்டில் தன் குடும்பத்துடன் வளமாக வாழ்ந்து வரும் மத்தியதர குடும்பஸ்தன்.
மின்பகிர்மான சப்-ஸ்டேஷன் ஆப்பரேட்டர் ஒருவர், பழுது ஒன்று குறித்து பேசும்போது அதுகுறித்து மிகவும் கவலை கொள்ள, துணை மின் பொறியாளரான ராகவ், இதோ அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான்.
நேரம் பார்த்தவன், காலுறையை மாறிக்கொண்டே, “ஸ்ருதி. டைமாச்சு, கிளம்பட்டா?”, என்று இரைந்தான். அறையிலிருந்து, ராகவ் எப்போதும் மறந்து செல்லும் கைகுட்டையை எடுத்து வந்தவள், அதை அவனது பேண்ட்-ல் திணித்துவிட்டு “ஏன் கத்தறீங்க?, வந்துட்டேதான இருக்கேன்?”, வாய் பதில் பேசினாலும், கை அனிச்சையாக செருப்பு வைக்கும் அலமாரியில் இருந்து, அவனது ஷுக்களை எடுத்து பாலிஷ் போட்டது.
அதை அவளிடம் இருந்து பிடிங்கி, “இத நான் பாக்கறேன், பர்ஸ்ல வெறும் அறுநூறு ரூபாய்தான் இருக்கு. கேஷ் கொடு”
“உங்க கார்ட்தான் இருக்கில்ல? ATM-ல எடுத்துக்கோங்க. இல்லேன்னாலும், அறநூறுக்கு மேல என்ன செலவு வரப்போகுது?”
எப்போதும் வீட்டில் கைச்செலவிற்கு என்று தனியாக ரொக்கம் கொடுத்து வைப்பவன் ராகவ், வீட்டு வாடகை, இதர வருமானங்கள் எல்லா மேற்பார்வையும் அவனுடையதே. ஸ்ருதி ஒரு வீட்டுப் பறவை. காய்கறிக்கு மட்டும் எதிரில் இருக்கும் அங்காடியை நாடுவாள்.
எத்தனையோ முறை நகராட்சி வரி செலுத்துதல், குறைந்தது வங்கி பண பரிவர்த்தனை குறித்தாவது கணவன் தெரிந்துகொள்ள சொல்லியும், “அந்த தலைவலில்லாம் எனக்கு வேணாம், நீங்களே பாருங்க” என்று பணப் பொறுப்புக்கள் அனைத்தையும் ராகவ் தலையில் கட்டிவிடுவாள். தவிரவும், அதிலே அவளுக்கு நாட்டமில்லை. ஆன்லைனில் எப்போதாவது வாங்கும் பொருளுக்கு கூட வீட்டில் இருந்து பணம் கொடுப்பாளே அன்றி, இணைய பண பரிவர்த்தனை செய்ய மாட்டாள்.
மறுப்பு கூறும் மனைவியை முறைத்தவாறே ஷுக்களை அணிந்துவிட்டு, “ஏய்.. ATM போகல்லாம் நேரமில்லைடி. ஒரு டூ தவுசன்ட் கொடு, டெரகோட்டா ஸ்டால்-ல ரெண்டடி உயர ராதா கிருஷ்ணன் பொம்மை சொல்லி வச்சிருக்கேன். வழில போகும்போது கேஷ் குடுத்துட்டேன்னா, ஊருக்கு போயி எடுத்திட்டு வர்றேன்னு சொல்லி இருக்கான். வந்ததும் வீட்ல கொண்டாந்து குடுத்துடுவான்”, என்றான் ராகவ்.
“ம்ப்ச். இப்போ எதுக்கு ராதா கிருஷ்ணன்?, வீட்ல இருக்கற சுவாமி-ல்லாம் போதாதா?”
“மட்டி, இது சுவாமியோட வைக்கறதுக்கு இல்ல, அது ஃபவுன்டைன்-னோட இருக்கிற ஷோ பீஸ். இங்க ஹால்ல உள்ள நுழைஞ்சதும் கண்ல படறா மாதிரி வைக்கணும்”, முடிவெடுத்தனாக பதில் வர..
வெட்டிச் செலவு இது என்ற பாவனையில் ஓரப்பார்வையோடு, “சரீ… ராதா கிருஷ்ணன்… ? என்ன ஸ்பெஷல்?”, என்று கேட்டு கையோடு இரண்டாயிரம் ரூபாயும் கணவனிடம் கொடுத்தாள், ஸ்ருதி.
“ம்ம். கொஞ்சநாள் முன்ன விஷால் வீட்ல ஷோ கேஸ்-ல பாத்தேன். நல்லா இருந்தது, எங்க வாங்கின?-ன்னு கேட்டேன், நம்ம ரெகுலர் கடைலதான்னு சொன்னான். அவங்க மிஸ்ஸர்ஸ் நந்தினி இருக்காங்கல்ல? அவங்க தான் சுவாரசியமா ஒரு தகவல் சொன்னாங்க. ராதா கிருஷ்ணன் ரெண்டு பேரும் soul-mate ஆம், ராதையோட மூச்சுக்காத்து கிருஷ்ணன், அதுமாதிரி கிருஷ்ணனோட எனர்ஜி ராதை-ன்னு”
“அப்பறம் நெட்-ல தேடினப்போ தான் தெரிஞ்சது, கோகுலத்த விட்டு கிருஷ்ணன் போனதுக்கப்பறம் அவங்க ரெண்டு பேரும் நேர்ல பாத்துக்கிட்டதே இல்ல. இருந்தாலும் அவங்கதான் பெஸ்ட் சிம்பல் ஆஃப் லவ். அது நம்ம வீட்ல இருக்கணும்னு தோணுச்சு. இங்கதான் அழகா ஒரு ஸ்டாண்ட் போட்டு வைக்கப் போறேன்.”, ஹாலின் மறுகோடி சுவரை கை காண்பித்து சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தான். கூடவே நடந்த மனைவியிடம் போகிற போக்கில், “அப்பறம் அதுக்கு ஹாண்ட் கார்வ்ட் உட்டன் ஸ்டாண்ட் கூட ஆன்லைன்ல புக் பண்ணிட்டேன், அடுத்த வாரம் வந்துடும்”, என்று சொல்லி ஸ்ருதி பதில் பேசும் முன், கார் செல்லும் வழியான பெரிய இரும்பு கேட்-டை திறந்து, தனது காரை வெளியே எடுத்து அலுவலகம் கிளம்ப, அவன் பின்னே வந்து வாசலில் கண்டனப் பார்வையுடன் நின்ற ஸ்ருதியிடம் மையலாய் சிரித்து தலையசைத்து விடைபெற்றான்.
‘வெட்டிச் செலவு பண்ணிட்டு சிரிப்பு வேற? வீட்டுக்கு வாங்க வச்சிக்கறேன்”, செல்லமாக மனதுக்குள் கணவனை வைது, இரும்புக் கதவை மூடிவிட்டு அவளது வீட்டுக்கு அருகே காலி நிலமாக இருக்கும் ஐந்து கிரவுண்ட் மனையில் காடு போல வளர்ந்திருந்த வேம்பு, நாவல் மரங்களில் இருந்து வந்த சிலு சிலுவென்ற காற்றை அனுபவித்தவாறே வீட்டினுள் சென்றாள், ஸ்ருதி.
அடுத்த அரை மணி நேரத்தில் அத்தை ப்ருத்வி இருவரும் வீட்டிற்கு வர, அத்தை சமையலுள் வந்தவாறே கேட்டார், “யாராவது போன் பண்ணினாங்களா ஸ்ருதி?”
“இல்லையேத்த, ஏன் கேக்கறீங்க?”
“கோவில்ல ஒருத்தங்க காலியாயிருக்கற நம்ம கீழ் போர்ஷன அவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு வாடகைக்கு கேட்டாங்க, சொன்னேன், இன்னும் எதோ விபரம் கேட்டாங்க, நீங்க வேணும்ன்னா வீட்டுக்கு போன் பண்ணி தெரிஞ்சிக்கோங்க-ன்னு, நம்ம வீட்டு நம்பரை கொடுத்தேன்”
“ம்ம். அவங்க நம்பரையே குடுத்திருக்கலாமில்லத்த? அவர்ட்ட யாராவது கேட்டிருக்காங்களான்னு கூட எனக்கு தெரியாது”
“இதெல்லாம் தெரிஞ்சிக்க வேணாமா நீ? என்ன பொண்ணோ போ, எனக்கு அவன் நம்பர் சட்டுன்னு ஞாபகம் வரல, அதான் வீட்டு நம்பர் கொடுத்தேன்””, என்று மருமகளை நொந்து கொண்டவர், தனக்குத்தானே, “சாமி கும்பிடப் போனா அங்க இந்தம்மா வந்து தொணதொணன்னு ஒரே சுயபுராணம், எப்போவும் ப்ரித்வியோட சொல்ற சிவபுராணம் முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சு”, சடைத்தபடி, “எனக்கு கஞ்சி குடுத்துடும்மா, நான் படுக்கப்போறேன்”, என்றார்.
அவரது இரவு உணவு மோர் விட்டு கலந்த கோதுமை ரவை கஞ்சி மட்டுமே. இட்லி போன்ற இலகு ஆகாரங்கள் எடுத்துக்கொள்ள ஒரு நாள் ஸ்ருதி மிகவும் வற்புறுத்த, “சன்யாசி பசிக்குத்தான் சாப்பிடணும், ருசிக்கு இல்ல”, என்று முடித்துவிட்டார்.
ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த கஞ்சியில் தாளித்துப் போட்டு, மோர் விட்டு கலந்து அவரிடம் கொடுத்தாள், கூடவே மகளுக்கும் உணவினை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள். ஹாலில் ப்ரித்வி யின் பொம்மைக் கார் அக்கக்காக பிய்த்து போடப்பட்டிருந்தது. உபயம் மகள்.
“ப்ரிக்குட்டி, ஒழுங்கு மரியாதையா இந்த காரை செட் பண்ணி வை, இல்லன்னா, அம்மா டஸ்ட் பின்-ல போட்டுடுவேன். அப்பறம் அப்பாவை உனக்கு எதுவுமே வாங்கி தர விடமாட்டேன்”, என்று அவள் இருந்த அறைக்கு குரல் கொடுத்தாள்.
அங்கிருந்து இருந்து சத்தம் வராததால், எட்டி பார்க்க, அங்கே பீன் பாக் (bean bag) -இல் ஜிப்-க்கு மாற்றாக இருந்த வெல்க்ரோ-வை தனது இரு குட்டி விரல்களால் பிரித்து, பீன்பாகின் உள்ளிருந்த சிறு சிறு தெர்மோகோல் உருண்டைகளை எடுத்து கட்டில் முழுவதையும் குட்டி குட்டி வெள்ளை பந்துகளால் நிறைத்திருந்தாள் சுட்டி.
சுறுசுறுவென கோபம் எட்டிப் பார்க்க, “அடியேய்.. என்ன பண்ணிட்டு இருக்க?”, என்றதும், சட்டென ப்ரித்வி திரும்பிப் பார்த்து, தன் வெண்முத்துப் பற்கள் தெரிய மோகனமாக புன்னகை செய்ய, மனதில் சின்னதாக முளைத்த கோபம் சின்னவளின் மயக்கும் புன்னைகையில் திகைத்து நின்றது.
சிலருக்கு எப்போதும் சிரிப்பது போன்ற முகம் இயற்கையாகவே அமையப்பெறும். ஆனால் ஸ்ருதியின் கணவன் ராகவ்-க்கோ, முகம் மட்டுமல்ல கண்கள், உதடு அனைத்துமே நான் புன்னைக்க தயார், என்பது போலவே இருக்கும். மகளுக்கும் அதே குறும்பு கூத்தாடும் கண்கள் இருக்க, சின்னவளின் முகத்தில் கொண்டவனைக் கண்டாள் பெண்.
மாயலாடி [மாயலாடி – ராகவ் மகளை அழைக்கும் செல்லப்பெயர். சேட்டை அதிகம் செய்த கிருஷ்ணனுக்கு மாயலாடி என்று ஒரு பெயர்], செல்லமாக மகளை மனதுள் வைதுகொண்டே ஆனாலும் முகத்தை கடினமாக வைப்பதுபோல நடித்து, “இப்போ இதெல்லாம் எடுத்து பீன் பாக் உள்ள போடல…?, பனிஷ்மென்ட் தான். ஒரு மணி நேரம் ஆடாம அசையாம இதே இடத்துல உக்காரவைச்சிடுவேன், அம்மா சாப்பாடு ஊட்டறேன், கொட்டியிருக்கிற எல்லாத்தையும் ஒண்ணா திரட்டு”, என்று கண்டிப்பான குரலில் கூற,
“எஸ் மாம்..”, என்று உடனே சொன்னாள் ப்ரித்வி. அடுத்த பதினைந்து நிமிடங்கள் உணவு உண்ணுவதிலும் இடத்தை சுத்தம் செய்வதிலும் கழிய, அந்நேரத்தில் வீட்டின் தொலைபேசி ஒலித்தது.
ஸ்ருதி ப்ரித்விக்கு உணவு கொடுத்த தட்டத்தை எடுத்து கிட்சன் சிங்க்-கில் போட்டு வேகமாக வந்து தொலைபேசியை எடுத்து “ஹலோ” என்றாள்.
“ஹலோ, மிஸ்ஸர்ஸ். ராகவ்?”
“யெஸ்?”, அடுக்களையில் இருந்து வேகமாக வந்ததால் ஸ்ருதிக்கு சற்று மூச்சு வாங்கியது.
தயக்கமாக ஒரு ஆண் குரல், “மேம், ஒரு ஆக்சிடென்ட்”
“ஹா.. யாருக்கு?என்னாச்சு?”
“வந்து உங்க ஹஸ்பெண்ட்க்கு. மிஸ்டர் ராகவை ஹாஸ்பிடல்ல -ல சேர்த்திருக்கோம்”
“வாட்?”, செய்தி புரிந்து மூளை அதிர்வுகளை பதிவு செய்ய, ஆனாலும் மனம் அதை ஏற்க மறுத்து, தகவலை மீண்டும் உறுதி செய்துகொள்ள அனிச்சையாக, “என்னது?” என்றாள் ஸ்ருதி.
“இங்க சப்-ஸ்டேஷனுக்குள்ள வந்து வண்டிய வச்சிட்டு வரும்போது எதிர்பாராம ஒரு விபத்து, நீங்க இங்க வரீங்களா?”
“அவருக்கு ஒண்ணுமில்லையே?, நல்லாத்தானே இருக்காங்க?”, பதட்டமாக ஸ்ருதி கேட்டாள்.
“ப்ளீஸ் நீங்க வாங்க சொல்றோம்” , எந்த உத்தரவாதமும் இல்லாமல் போன் வைக்கப்பட, முகம் வெளுத்து கால்கள் நடுங்க செய்வதறியாது திகைத்து நின்றாள், ஸ்ருதி.