வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-23
218
ஹாய்…ப்ரெண்ட்ஸ்…
உங்களுக்கு என் இரவு வணக்கம்…
இதோ இன்றைய எபிசோடு 23
தாரிகா வீட்டை அடைந்தவுடன் செவிலியர் கொடுத்த மருந்தை அவளுக்கு ஸ்ரீ கொடுத்தாள். அனைவரும் வெளியே இருந்தனர்.தாரிகாவை தூங்க வைத்து விட்டு ஸ்ரீ வெளியே வந்தாள். அனைவரும் அவளை சூழ்ந்து, கவலைப்படாதே! ஒரு மாதம் தானே சீக்கிரம் ஓடி விடும் என்றனர். ஜிதினும் நிவாசும் அவளை ஒருவாறு பிடித்து இழுத்தனர்.
என்னை விடுங்கடா என்றாள் அயர்வாக, ஜிதின் மீண்டும் அவளை இழுத்து செல்ல, நிவாசும் அவர்களை பின் தொடர்ந்தான்.
ஒரு மாத காலம் வீட்டில் எப்படி தனியாக இருப்பாய்? என்னுடைய தோழி ஒரு பெண்ணிடம் கூறுகிறேன் அவளுடன் தங்குகிறாயா? ஜிதின் கூறினான்.
பெண் தோழியா? எங்களுக்கு தெரியாத பெண்ணா?
ரொம்ப யோசிக்காதேடா நிவி.வேலைக்கார கண்ணம்மா பொண்ணு மகிழினி தான்.
என்னை அவ்வாறு அழைக்காதே! நிவாஸ் சண்டையிட, ஸ்ரீ வீட்டின் பக்கம் செல்லலாயினாள்.
மீண்டும் அவளை பிடித்து, கூறாமல் செல்கிறாய்? கையை ஜிதின் பிடிக்க, பைத்தியம் போல் கலகலவென சிரித்தாள் . பின் கோபமாக ஜிதினிடம் நீ என்னை காக்க பார்க்கிறாயா? உன்னால் தான் நான் அனைத்தையும் இழந்து விட்டேன் அழுது கொண்டு அவனை தள்ளினாள்.
ஸ்ரீ…..நீ…எதை…..எதை……கூறுகிறாய்? தயங்கிக் கொண்டே ஜிதின் கேட்க,அவளது மனஓட்டத்தில் கயல் விழி பேசியது ஓடியது.அவன் அண்ணனாயினும் அவனை தான் மணந்து கொள்ள வேண்டும். இனி எல்லாம் அவனோடு தான். இது உன் அம்மாவிற்கு நான் கொடுக்கும் தண்டனை. நீ அனுபவித்தே ஆக வேண்டும்.
ச்சே…..என்றாள் ஜிதினை பார்த்து, அவன் குற்றவாளி போல் நிற்க, நிவாஸ் எதுவும் புரியாமல் ஜிதினருகே வந்து, அவளை எனக்கு தெரியாமல் ஏதும் செய்து விட்டாயா? பதறினான். ஜிதின் அமைதியாக காருக்கு செல்ல, நிவாஸ் ஸ்ரீயிடம் வந்து, நீ அவனிடம் என்ன கூறினாய்? கேட்க, காரில் அமர்ந்திருந்த ஜிதினை பார்த்து வேகமாக அவனருகே சென்று, காரிலிருந்து இறங்க கோரினாள்.
அவன் இறங்கியவுடன் அவனது கையை பிடித்துக் கொண்டு யாருமில்லாத இடத்திற்கு அழைத்து சென்றாள். இருவரும் சற்று நேரத்தில் வந்தனர். அவன் முகம் முழுவதும் வெறுமை. தாங்க முடியாத வலி கண்ணில் தெரிந்தது. நிவாசை பார்த்த ஜிதின் அவனை அணைத்துக் கொண்டு அழுதான். பின் காரில் அங்கிருந்து அகன்றான்.
என்ன செய்தாய் அவனை? அவன் உருக்குலைந்தது போல் இருக்கிறான் ஸ்ரீயிடம் வினவ, தாரிகாவை பார்க்க வேண்டும் என்று சென்று விட்டாள். நிவாஸ் அகில் நண்பர்களிடம் வந்து, அவள் ஏதோ பெரிய விசயத்தை மறைப்பது போல் உள்ளது. இரண்டு நாட்களாக அவள் சரியில்லை. மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டுவது போல் உள்ளது. ஜிதினை இவ்வளவு வெறுமையாக கண்டதேயில்லை உள்ளூற குழம்பினான். நண்பர்கள் நடந்ததை கவனித்துக் கொண்டு தான் இருந்திருப்பார்கள். ஸ்ரீயும் உள்ளே செல்லும் முன் அகிலையே பார்த்தவாறு சென்றிருப்பாள்.
அவன் பதிலளிக்காமலிருக்க,பின் அவனால் தான் ஸ்ரீயை ஓரளவாது புரிந்து கொள்ள முடியும் என்றான் அகில்.
ஒத்து கொள்கிறாயா? புரிந்து கொண்டால் நல்லது தான் என்றாள் நித்தி.
அவள் உன்னுடைய காதலை ஏற்று பின் பிரச்சனை என்றால் அர்ச்சுவை தான் அழைப்பாயா? நித்தி சுருக்கென கேட்டு விட, அவன் தயங்கி விட்டு, அதற்குள் அவளை புரிந்து கொள்ள முயல்வேன் என்றான்.
அவள் சிரித்து விட்டு, அப்படியா? கேலியுடன் கூற, உன் நகைப்பு போதும் நித்தி எரிச்சலாக உள்ளது அகில் கூறினான்.
அவள் கோபமாக தள்ளி அமர, கவின் அவளருகே வந்தான். யாசு நித்திக்கு போன் செய்யவே அவள் எடுத்தாள்.யாசு உனக்கு தெரியுமா? எங்களுடைய ஜூனியருக்கு கவினை பிடித்திருக்கிறது. உண்மையான காதல்…எனக்கும் அவளை பார்த்தவுடன் பிடித்து விட்டது என கவினை வைத்துக் கொண்டே கூற, அவன் நித்தியிடம் பைத்தியம் மாதிரி பேசாதே! கண்ணாலே எச்சரித்தான். அவள் விடாமல் அவளே அவனுக்கு சரியானவள். கவின் எனக்கு வாங்கி கொடுத்த பச்சை கலர் கௌவுனை அவனே அவளுக்கு கொடுத்தான்.
நான் கிளம்புகிறேன் என்றான் கவின். பேசுவதை நிறுத்தி விட்டு சத்தமாக போடா…….உன்னை யார் அழைத்தார்கள்? தாரிகாவும் உன்னை வர வேண்டாம் என்று தான் கூறினாள் போய்விடு….கத்தினாள்.
அதை பார்த்து சிரித்தபடி இன்பா சைலேஷை பார்த்து புன்முறுவல் செய்தாள். அவன் நித்தி அருகே வந்து அமர்ந்தான்.அவள் பதறிக் கொண்டு எழுந்தாள். அவன் சிரித்துக் கொண்டே, நான் உன்னிடம் பேச வேண்டும் என்றான்.
என்னால் முடியாது என்று அகிலையும் அபியையும் பார்த்தாள்.
அதான் சார் உன்னிடம் பேச வேண்டும் என்கிறாரே! பேசேன்…. அபி கூறிக் கொண்டே சிரிக்க,அகிலும் சேர்ந்து கொண்டான். அவள் பல்லை கடித்துக் கொண்டு,உங்களை அப்புறம் பார்த்துக் கொள்கிறேன் என்றாள்.
சற்று நேரம் போதும் சைலேஷ் கூற, சற்று நேரம் தானாம்…இருவரும் கிண்டல் செய்தனர். இன்பா அவர்கள் முன் வந்து நிற்க,அபியின் கண்கள் திண்டாடியது. இதை கண்ட அகில் அவனது கையை பற்றினான்.
மேடம், மறைக்கிறீர்கள்?அகில் கூறினான்.
அங்கே உட்கார்ந்தால் இவர்கள் சரியாக தெரியவில்லை. அதனால் தான் இங்கே வந்தேன் என்று அபி அருகே அமர்ந்தாள் இன்பா. நித்தி வேகமாக எழ தவறி சைலேஷ் மடியிலே உட்கார்ந்து விட்டாள்.
படத்தை விட நன்றாக ஓட்டுகிறீர்களே! இன்பாவும் அவர்களுடன் சேர, இன்பாவின் அருகாமை அபியை ஏதோ செய்தது உணர்ந்தவனாய், நான் போன் பேச வேண்டும் செல்ல, அகிலும் அவன் பின்னே சென்று
என்னடா, மேடம் மீது காதலா?
அதெல்லாம் இல்லைடா…. ஆனால் அவர்கள் அருகே வந்ததும் மூச்சு விட முடியவில்லை என்றான்.
இது கண்டிப்பாக காதல் தான் மனதினுள் நினைத்தான் அகில்.ஒருவாறு சமாளித்து விட்டு நித்தியும் அவர்களிடம் வந்தாள் மூச்சிறைத்தவாறு.
டேய்….அவங்க நம்மை விட மூன்று வருடம் பெரியவர்கள் நித்தி சொல்ல,அதனால் என்ன நித்தி! நம்ம சச்சின், தனுஷ்லாம் அவர்களை விட பெரியவங்களை தானே திருமணம் செய்து கொண்டார்கள்.
ஹே,…நான் அப்படியெல்லாம் யோசிக்கவே இல்லை கூறினான் அபி.
ஆஹா…..நல்லா தெரியுது டா உன் மூஞ்சியை பார்த்தாலே…. இவர்கள் பேசிக் கொண்டே வெளியே வந்தனர்.கவின் சுவற்றில் சாய்ந்த படி நின்று கொண்டிருந்தான்.
நீ இன்னும் செல்லவில்லையா? எதற்காக நிற்கிறாய்? போக வேண்டியது தானே! நித்தி முறைத்த வண்ணம் கேட்டாள்.
நான்….கவின் சிந்தித்தான்.
நீ எனக்காக இங்கே இருக்க தேவையில்லை. கிளம்பு.
நான் ஒன்றும் உனக்காக இருக்கவில்லை முணுமுணுத்தான் கவின்.
என்ன கூறினாய்? அவனருகே நித்தி வந்தாள்.
நான் இன்னும் அவளிடம் மன்னிப்பு கேட்காமல் எப்படி செல்வது?
மன்னிப்பு மட்டும் தானா? அவள் கேட்க, கவின் அமைதியாகவே இருந்தான். அங்கே வந்த பைக்கில் இருந்து அர்ச்சு வர, அவனை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தனர். சைலேஷிற்கு தான் அர்ச்சுவை தெரியுமே! இன்பாவிடம் அறிமுகப்படுத்தினாள் நித்தி.
அர்ச்சுவை பார்த்ததும் உள்ளிருந்து நிவாஸ் வந்தான்.அகில் அவனை குறுகுறுவென பார்த்தான்.
சீனியர் ஏன் அப்படி பார்க்கிறீர்கள்?நிவாஸ் கேட்க, ஒன்றுமில்லை சமாளித்தான் அகில்.
எதற்கு அழைத்தாய்? அகிலிடம் கேட்டான்.
அவள் மருத்துவமனையில் உன்னிடம் எந்த அங்கிளை பற்றி பேசினாள்?
அர்ச்சு நிவாசை பார்த்து விட்டு, ஸ்ரீ …பெயர் வைத்து கூறாமல் நடந்ததை கூறு….சைலேஷும் இன்பாவும் கூட கவனித்துக் கொண்டிருந்தனர்.
அர்ச்சு தயங்க….வா என்று தனியே அழைத்தான் அகில்.
எங்களுக்கு தெரியக்கூடாத விசயமா என்ன? சைலேஷ் வினவ, அர்ச்சு அங்கேயே உட்கார்ந்தான்.
நம் ஊரிலிருந்து அவள் சென்ற பின், அங்கே இருக்க முடியாமல் தான் இங்கே வந்தேன். அம்மா வீட்டில் இரண்டு நாட்கள் தான் இருந்தேன். ஆனால் அவர்களுக்கு என்னை சந்திக்க கூட நேரமில்லை. தேவையான வசதிகளை ஆட்கள் மூலம் செய்து கொடுத்தார். அம்மாவை பார்க்க முடியாமல் கோபமாக தனியொரு வீட்டில் தான் தங்கி படித்தேன். என்னுடன் படித்தவனால் தான் எனக்கு அந்த பழக்கமே வந்தது.அவளை மறக்க முடியாமல் யார் துணையுமில்லாமல் தவித்தேன்.அம்மாவின் செகரட்டரி தான் அடிக்கடி எனக்கு தேவையானதை செய்து கொடுப்பார். பள்ளி முடிந்து ஒவ்வொரு தெருவாக அவளை தேடி சுற்றினேன். ஒரு முறை நான் அவள் வீட்டின் முன் தான் இருந்திருக்கிறேன்.அவளை பார்க்கவில்லை. அவளும் அவளது குடும்பமும் அங்கே தான் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது.
ஆனால் அவளது அப்பா என்னை பார்த்து பேச முயற்சி செய்திருக்கிறார். நான் அவரை பார்க்காமல் சென்று விட்டேன். நான் சென்ற சற்று நேரத்தில் அவரது உயிர் பிரிந்து விட்டது.அவரை அவர்கள் கொன்றிருக்கிறார்கள். என்ன நடந்தது? ஏதும் புரியவில்லை.ஆனால் அவர்களை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்றான் சினத்துடன்.
இதை வைத்து தான், அவள் அன்று என்னிடம் பேசினாள்.நண்பர்கள் சூழ்ந்து அணைத்துக் கொண்டு ஆறுதலளித்தனர்.
நானும் ஏதாவது முயன்றிருந்தால் இப்பொழுது ஆன்ட்டி, அங்கிளையும் காப்பாற்றி இருக்கலாம். அவளை பிரிந்த வருத்தத்திலே இருந்து தவறு செய்து விட்டேன் அகில் கூற, அர்ச்சு கண்ணை துடைத்து விட்டு, நான் அதையும் செய்தேன் அர்ச்சு கூறினான்.
என்ன செய்தாய்?
அவளை ஊருக்கு அழைத்து செல்வது தெரிந்து, அங்கிளிடம் எங்கே செல்கிறீர்கள்? அன்றே அவரிடம் விசாரித்தேன். அவர் கூறவேயில்லை. அவர்கள் செல்வது உன் அம்மா, அப்பாவிற்கும் பிடிக்கவில்லை என்று தெளிவாக தெரிந்தது. அகிலை பார்த்தான் அர்ச்சு.
நிவாசிற்கு தெளிவாக புரிந்தது. தன்னுடைய ஸ்ரீ, சித்தி, சித்தப்பாவை தான் கூறுகிறான்.
என்னுடைய அம்மா, அப்பா கூட இதை வைத்து தான் அவளது பெயரை கூறி சண்டை போட்டார்களோ அகிலும் கூற,
அப்படியென்றால் அந்த ஊருக்கு சென்றால் பிரச்சனை வரும் என்று தெரிந்து தான் சென்றார்களோ! அன்று நீ கேட்டு எதையும் கூறாத அங்கிளே உன்னிடம் பேச நினைத்திருக்கிறார் என்றால் அவருடைய மகளுக்கு……அபி வீட்டருகே பார்க்க, ஸ்ரீயும் நின்று கேட்டுக் கொண்டிருந்ததை பார்த்து திகைத்தான்.
கொலையா? அந்த பெண் உங்களது தோழியா? அவர்களை கண்டு விட்டீர்களா? இன்பா கேட்க, அபி கூற முடியாமல் விழித்தான்.
கார் ஓசை கேட்டு அனைவரும் வாயிலை நோக்க, ஆதேஷ் காரிலிருந்து வந்தவன் அர்ச்சுவை பார்த்து,
அண்ணா, எப்படி இருக்கிறீர்கள்? பார்த்து வெகு நாட்களாகி விட்டதே, ஓடி வந்து அவனை அணைத்தான்.அர்ச்சு முகம் மாறியது.
நீங்கள் எவ்வளவு பெரிய ஆளுடைய பிள்ளை. இவ்வளவு சாதாரணமாக இருக்கிறீர்கள்? உங்களை பார்த்து எனக்கு பொறாமையாக உள்ளது என்றான்.
அனைவரும் ஆர்வமுடன் பார்க்க, உனக்கு என் மீது பொறாமையா?
நான் தான் உன் மீது பொறாமையில் இருக்கிறேன். உன் அம்மா சும்மாவா? கம்பெனியில் எத்தனை கிளைகள் உள்ளது? அதையும் கவனித்து உன்னையும் கவனித்துக் கொள்கிறாரே! நீ அதிர்ஷ்டசாலி தான் அர்ச்சு கூறினான்.
அட, நீங்கள் என்ன சும்மாவா? ” கிரேட் பிஸினஸ் வுமன் கமலி மேடம்” மகனாயிற்றே! ஆதேஷ் கூற,
என்ன அவர்களது மகனா நீ? சைலேசும், இன்பாவும் வாயை பிளந்து கொண்டு, எங்களது மிகப் பெரிய ரோல் மாடல் என்று இருவரும் ஒருவாறு கூறினார்கள்.
இன்பா அர்ச்சு அருகே வந்து, உன் அம்மாவை பற்றி கூறேன் துளைத்து அவள் கேட்க, கோபமாக கத்தினான் அர்ச்சு.
அவர்களை பற்றி பேசுவதாக இருந்தால், என்னிடம் யாரும் பேச வேண்டாம் அவன் வெளியேற, தாரிகாவும் ஸ்ரீயும் உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.மற்றவர்கள் அர்ச்சு பின் செல்ல, அபி அவர்களிடம் வந்து,
இப்பொழுது தானே அவனது அம்மாவை பற்றி கூறினான். பிஸினஸில் அவர்கள் வெற்றியை தொட்டிருக்கலாம்.ஆனால் சொந்த வாழ்வில் அனைத்தையும் இழந்து விட்டார்கள். யாருமில்லாமல் அவன் வேதனைப்பட்டிருப்பான் கூறி விட்டு அவனும் அங்கிருந்து சென்றான். சைலேசும் இன்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆதேசிற்கும் இப்பொழுது தான் அர்ச்சுவின் நிலை புரிந்தது.