ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 117.
தூக்கம் களைந்து எழுந்தாள் துகிரா. ஆனால் அவளால் அசைய கூட முடியவில்லை. அப்படியொரு இறுக்கம். மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள். பிரதீப் ஆழ்ந்த உறக்கத்தில் அவளை அவன் மார்பினுள் புதைத்தவாறு அணைத்து இருந்தான்.
அவள் நெகிழ்ந்து அவனை பார்த்துக் கொண்டு, என்னுடைய வெகுநாட்கள் ஒரே தனிமை தான். என்னருகே யாருமே எப்பொழுதும் இருந்ததேயில்லை. சாப்பிட, தூங்க, நேரம் செலவழிக்க யாருமில்லாது அவதி பட்டு போனை எனக்குள் திணித்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
ஆனால் என் வாழ்வில் திடீர் சூரியனாய் வந்துட்டீங்க. உங்களுக்கு என்னை பிடிக்கும்னு நான் நினைத்து கூட பார்க்கவில்லை. முதல் முறை பார்த்த போது ஆன்ட்டியிடம் உங்களை கிராமத்து காட்டான் என்று கூட திட்டினேன் ஜானுவால்.
ஆனால் அதே ஜானு மீது நீங்க வைச்சிருந்த பாசம் என்னை மெய் சிலிர்க்க செய்தது. என்னுடன் இது போல் யாருமில்லை என்று ஏக்கம் கூட வந்தது. எனக்கு ஒன்று என்றால் ஜில்லா வருவான் தான். ஏனோ நான் அவனுக்கு பாரமாக இருப்பது போல் கூட தோன்றும் .ஆனால் அன்று அவர்கள் கடத்திய போது நீங்கள் மட்டும் தான் கண் முன் தெரிஞ்சீங்க. உங்களுக்கு நான் பாரமாக இருக்க மாட்டேன் என்று உங்களது காதலால் தெரிந்தது. நான் உங்களுடன் வந்தது சரியா? தவறா? என்று கூட தெரியவில்லை. என்னால் மீண்டும் அவர்கள் வெளியே வந்து, உங்களை தொல்லை செய்தால் என்ன செய்வது? கஷ்டமா இருக்கு கண்ணீர் வடித்து, பின் அதை தொட்டுப் பார்த்து எனக்கும் உங்களை பிடித்து விட்டது. உங்களது இந்த நேசம் என் உயிருள்ளவரை தொடருமா? உண்மையாக நான் படித்து முடிக்கும் வரை நீங்கள் காத்திருப்பீங்களா? அவள் பரிதவிப்புடன் அவனை மேலும் இறுக்கினாள்.
கண்டிப்பாக என்று பதில் வந்தது பிரதீப்பிடமிருந்து. சட்டென நிமிர்ந்து அவனை பார்த்தாள்.அவன் அவளை பார்த்து குறும்புடன் கண்ணடித்தான்.
அவள் வேகமாக பதறி எழுந்தாள். அவளை நிறுத்தி மீண்டும் அவனுக்குள் புதைத்துக் கொண்டு, பதறாதே! எனக்கு ஒன்று மட்டும் கூறு? என்னுடன் நான் உன்னை அழைத்து வந்தது தவறு என்று நினைக்கிறாயா?
இல்லை. நான் அப்படி கூறவில்லை.அவர்களால் உங்களுக்கு மீண்டும் பிரச்சனை வருமோ? என்று பயந்து தான் கூறினேன்.
நான் நேரடியாகவே கேட்கிறேன்? நம் வயது வித்தியாசம் அதிகம் என்பதால் தான் உன்னிடம் பேசவே தயங்கினேன். எனக்கு நிறைய சொத்து, நிலம், தொழிற்சாலைகள், எஸ்டேட் உள்ளது. ஆனால் யாரிடமும் சரியாக பேசிக் கொள்ள மாட்டேன் என்று அவனான சொந்த விசயம், ஜானு பற்றி பேசி விட்டு, இப்பொழுது உனக்கு என்னை பிடிக்குமா?
எனக்கு தேவையான முக்கியமான சில விசயங்கள் உங்களிடம் உள்ளது. அது உங்களது சொத்து அல்ல. உங்களது காதல், பாசம், நிமிர்வு, ஊருக்குள் உங்களுக்குள்ள மரியாதை அனைத்தும். அதை விட என்று அவனது தலைகேசத்தை களைத்து விட்டு, அவன் ஊரில் உள்ள போது எப்படி இருப்பானோ அதே போல் அவனது முடியை திருத்தி, அவனது சட்டை பட்டனை போட்டு விட்டு, அவனது மீசையை முறுக்கி காட்டி, ஒன்று மட்டும் இல்லையே என்று அவனது பேண்டை பார்த்தாள்.
அவன் சிரிப்புடன், உனக்கு அந்த காட்டானையா பிடித்திருக்கு? குறும்புடன் கேட்டான். அவள் முகம் சுருங்கியது.
நான் தான் சொன்னேன்ல, உங்களை பற்றி தெரியாமல் புரியாமல் பேசியது. அப்படி சொல்லாதீங்க என்று அவளது பட்டு இதழ்களை அவனது கன்னத்தில் அழுத்தினாள்.
அவன் மகிழ்வுடன் அவளை பார்த்தான். நீ சின்ன பொண்ணுன்னு நினைச்சேன். நீ தெளிவா பேசுறியே?
இப்பலாம் ஸ்கூல் படிக்கும் பொண்ணுங்க கூட தெளிவு தான்.
நான் எத்தனை வருடங்களானாலும் உனக்காக காத்திருப்பேன். நீ படித்து முடித்து வா. ஆனால் ஜானுவிற்கு திருமணம் செய்யாமல் என்னால் முடியாதே? அது எங்க ஊர் வழக்கம்.
என்ன? என்று விழித்து, அவள் இப்பொழுது பள்ளி கூட முடிக்கவில்லை. பின் அவள் கல்லூரி முடித்து எப்பொழுது நடக்கும்? என் படிப்பு முடியவே மூன்று வருடமாகும். இதில் அவள் வேறா? என்னால் முடியாதுப்பா. நான் படிப்பை கூட நிறுத்தி விடுகிறேன். நாம திருமணம் செஞ்சுக்குவோமா?
அவன் அவளை கூர்ந்து பார்த்து, நீ நிஜமாகவே படிக்க வேண்டாமா?
ஆமா வேண்டாம். நாம சீக்கிரம் பண்ணிக்கலாமே என்று குலைந்த படி கேட்டாள்.
இல்லைம்மா. பெரியவங்க வச்சிருக்குற முறைகள் அனைத்திற்கும் காரணம் இருக்கும். நாம் மதிப்பு கொடுக்கணும்.
மதிப்பா? யோவ் என்னய்யா பேசுற? அவங்க சொல்ற முறைப்படி எல்லாமே நடக்கணும்னா நாம கிழவன் கிழவி ஆகி விடுவோம். அப்புறம் எப்படியா பிள்ளைகள் வரும்? அவ்வளவு தான்..என்று கிராமத்து பொண்ணு போல பேசி, அவள் உட்கார்ந்தவாறு ஒரு காலை தூக்கி தரையில் ஊன்றி வைத்து விட்டு அதற்குள் மற்றுமொறு காலை சொருகியவாறு தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.
அவளை பார்த்து கலகலவென சத்தமாக சிரித்தவன், ஓ..உனக்கு பிள்ளைகள் தான் பிரச்சனையா? தயார் செய்து விடுவோமா?
அய்யய்யோ, நான் அப்படி கூறவில்லை. உங்கள் அருகே இருந்தால் பாதுகாப்பா இருக்கும்ல.அதை சொன்னேன்.
அப்படித்தானா? வேறேதும் இல்லையா?
இருக்குப்பா..என்று அவளருகே வந்து, எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பிடணுமே?
சாப்பாடு மட்டும் போதும் தானே?
ம்ம்..என்று அவனை நெருங்கி அவனது தடித்த அதரங்களில் ஆழ்ந்த முத்தங்களை கொடுத்து விட்டு, அவனை பார்த்து புன்னகை கலந்த வெட்கத்துடன் வயிற்றை தடவி ரொம்ப பசிக்குதுப்பா? என்றாள்.
அவள் செய்கையை விரும்பி ரசித்தவாறே அவளது கைகளை கோர்த்து அறையை விட்டு வெளியேறினார்கள்.
கல்லூரிக்கு சைலேஷை பார்க்க வந்த அகில், நித்தியை ஒருவன் அழைத்து சென்றான். அவர்கள் சென்ற இடத்தில் அகிலின் மற்ற நண்பர்கள், லயன்ஸ் இசைக்குழு மாணவ, மாணவிகள், சைலேஷ், கல்லூரி முதல்வர், செயலாளர் இருந்தனர்.
அகிலும் நித்தியும் சிந்தனையுடன் நண்பர்களுடன் அமர்ந்தனர்.கல்லூரி முதல் வருட மாணவ, மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சியில் மற்ற நிகழ்ச்சிக்கானவர்களை தேர்வு செய்து விட்டனர். ஆனால் இசைக்குழுவில் யாராவது ஒரு குழுவினர் மட்டுமே பங்கு பெற முடியும். யார் என்று தேர்ந்தெடுக்கவே அப்பொழுது அனைவரும் குழுமி உள்ளனர்.
சைலேஷ் அனைவரையும் கூர்மையாக கவனிக்க, இரு குழுவினரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருந்தனர் நித்தி உட்பட. சைலேஷ் முதல்வரிடம் கண் காட்ட, அவர் ஆரம்பித்தார்.
யார் பங்கு பெறப் போகிறீர்கள்?
லயன்ஸ் குழுவில் விதுனனும்,குக்கூ குழுவில் அகிலும் நாங்கள்.. நாங்கள்.. போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். அதில் அபி மட்டும் சைலேஷை பார்க்க, அவன் உதட்டோரம் சிறு புன்னகை.அதை கவனித்த அபியோ..இவர் இதழ்களில் புன்னகை தவழும் அளவிற்கு இங்கே என்ன நடக்கிறது? என்று சிந்தித்தான்.
முதல்வர் சினத்துடன், நிறுத்துங்கடா? எதற்கெடுத்தாலும் சண்டையா? கடிந்தார்.
சார்..என்று இருவரும் ஒருவாறு அழைக்க சைலேஷ் சத்தமாக சிரித்தான். அனைவரும் அவனை புரியாமல் பார்க்க, நித்தி மட்டும் முறைத்தாள்.
எதுக்கு சார் சிரிக்கிறீங்க? செயலாளர் கேட்க,
குழுவிற்காக சண்டை போட்டனர். ஆனால் நம் முதல்வர் சார் கோபத்தில் ஒன்றாக அதிர்ந்து தானே போனார்கள். இரண்டு குழுவும் சேர்ந்து ஏன் பங்கேற்கக்கூடாது?
நோ என்று அகில் எழுந்தான். விதுனனும் இவர்களுடன் சேர்ந்தா? முடியவே முடியாது.
நீ என்னடா சொல்றது? எங்களால உன்னோடு சேர்ந்து செய்ய முடியாது என்று கவின் சீற்றம் தெறிக்க எழுந்தான்.
இரு குழுவின் வாய்ச்சண்டையும் நீள..செயலாளர் எழுந்து, அதற்கான ஆசிரியரை பார்த்தான். அவர் கைகளை பிசைந்து கொண்டு நின்றார்.
யோவ்..நீயெல்லாம் ஆசிரியரா? என்று அவரை சத்தமிட அவர் தலை கவிழ்ந்து நின்றார். அதை பார்த்த குழுவின் தலைவர்கள் அகிலும் விதுனும்,
எங்க சாரை பற்றி நீங்க பேசாதீங்க? தைரியமாக ஒருவாறு கேட்டனர்.
இதுல மட்டும் ஒத்துமையா இருக்கீங்க? உங்களுக்கு என்ன பிரச்சனை? சைலேஷ் கேட்டான்.
சின்ன பசங்களோட நாங்க சேர்ந்து செய்ய முடியாது சார் என்றான் விதுனன் குழுவிலுள்ள ஒருவன்.
யாரடா சின்ன பசங்கன்ன்னு சொன்ன? அபி கோபப்பட, சைலேஷ் குறுஞ்சிரிப்புடன் அபியை பார்த்து விட்டு, ஓ…சீனியர் ஜூனியர் தான் பிரச்சனையா? கேட்டான்.
இதுல சீனியர் ஜூனியர்லாம் தேவையில்லை. நம் கல்லூரிக்கு வந்த பசங்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக தான் இந்த நிகழ்ச்சியே நடக்கப் போகிறது சைலேஷ் கூற,
நீங்க சொல்றது சரி தான். ஆனால் நாங்க சேர்ந்து செய்ய மாட்டோம் விதுனன் குழுவில் உள்ள பொண்ணு கூற, நித்தியும் எழுந்து, இவளோட சேர்ந்து எங்களால செய்ய முடியாது என்றாள் சைலேஷை முறைத்தபடி.
என்ன பண்ற நித்தி? யாசு அவளருகே கேட்க, நித்தி நேரடியாகவே யாருக்கு பயப்படணும் யாசு? ரெண்டு குழுவும் சேர்ந்து செய்யுங்கன்னு சுலபமாக மத்தவங்க சொல்லிடுவாங்க. ஆனா சீனியர்ன்னு பெரிசா அவங்களோ எல்லாவற்றையும் முடிவெடுப்பாங்க. பிரச்சனை வெடிக்கும். இது தேவை தானா? என்று நித்தி சினமுடன் சைலேஷை பார்த்தபடியே, எங்களால் முடியாது என்று கோபமாக உட்கார்ந்தாள் கொஞ்சம் அலுப்புடன்.
அவளுக்கு பவி, ஸ்ரீ, பிரதீப் அண்ணா பெற்றோர்கள் விபத்து என்று உலன்ற சமயத்தில் இதை பற்றி பேச, அவளுக்கு கோபம் வந்து விட்டது. இவர்களுக்கு சாதகமாக இல்லாமல் சைலேஷ் இருந்தது வேற அவளுக்கு கடுப்பு.
சைலேஷ் பார்வை அவள் மீது கூர்மையுடன் படிய, அதை பார்த்து அகில் அவளது கையை பிடித்து அழுத்தி, அமைதியா இரு என்றான்.
அவள் வேறேதோ சிந்தனையில் இருக்கிறாள் என்று தெளிவாக தெரிந்தது அகில் செய்கையும் பார்த்தவனுக்கு.
இன்று வெள்ளிக்கிழமை. இரண்டு நாட்கள் கல்லூரி விடுமுறை. புதன் கிழமை நிகழ்ச்சி நடக்கும். செவ்வாய்கிழமை உங்களுக்கான போட்டி என்றான் சைலேஷ்.
போட்டியா? லயன்சில் ஒரு பொண்ணு கேட்க, ஆமாம் போட்டி. அதை வைத்து தான் யார் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்வது என்பது தெரியும்? சைலேஷ் கூறினான்.
யார் எங்களை தேர்வு செய்வார்கள்? ஒருவன் கேட்க, அது ரகசியம் என்று விளையாட்டு தனமாய் கூறிய சைலேஷை , லயன்சில் இருக்கும் பொண்ணுங்க ஆவென்று அவனை பார்த்தனர். அதை பார்த்த நித்தி அவர்களை முறைத்துக் கொண்டிருந்தாள்.
ஓ.கே. ஆல் தி பெஸ்ட் பசங்களா முதல்வர் கூற, அவருக்கு நன்றி கூறி விட்டு வெளியே வந்தனர்.
லயன்சில் இருக்கும் பொண்ணு, என்னம்மா நித்யஸ்ரீ எங்க மீது இவ்வளவு பயமா?
பயமா? நான் எதுக்கு பயப்படணும்?நித்தி கேட்டாள்.
அதான் சொன்னீயே? எங்களை சேர்த்தால் உன்னால் எதையும் செய்ய முடியாது என்று.
நான் அந்த பொருளில் கூறவில்லை.
பிரச்சனைக்கு பயப்படும் பிள்ளைக்கு எதற்கு இசை? ஏளனமாக நித்தியிடம் பேச,
பிரச்சனைக்கு நான் பயப்படுவதா? கண்டிப்பாக இல்லை என்று அந்த பொண்ணை நெருங்கிய நித்தி, நீ என்னை விட பெரியவள் என்று மரியாதையாக பேசினால் நீ அதிகமா பேசுற? அவளது கையை முறுக்கி அவளது முதுகு பக்கம் வளைத்தாள்.
அனைவரும் பதறி வந்து தடுக்க, இங்க பாரு ஏற்கனவே செம்ம டென்சன்ல இருக்கேன். இதே மாதிரி பேசுன? உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது என்று கத்தினாள்.
நித்தி..சும்மா இரு..என்று அகில், கவின், அபி அவளை பிடிக்க, அந்த பொண்ணு அடங்காது சும்மா வெறும் வாயிலே வடை சுடாதே கேலி செய்தாள்.
பசங்களை பிடித்து தள்ளிய நித்தி, வாடி பார்த்துடலாம். நான் கையை முறுக்கியது வலிக்கவில்லை போல என்று சீற்றத்துடன் அவளை நோக்கி வந்தாள் நித்தி. யாசு அவளை தடுத்து, வா..போகலாம் என்று கூற,
அந்த பொண்ணு யாசுவை பயந்தாங்க்கோலி என்று கிண்டல் செய்தனர். மேலும் கோபமடைந்த நித்தி,என்னோட ப்ரெண்டை என்னடி சொன்ன?
நீ தான்டி கோழை? அவளருகே வந்து அவளது முடியை பிடித்து இழுத்து சண்டையிட்டாள்.இருவரும் அலங்கோலமாக இருக்க, கவின் அகில் இருவரும் அவளை பிடித்து இழுத்தனர். அபி அந்த பொண்ணுங்களிடம் வந்து,
கோழை என்பது இதில் ஒன்றுமில்லை. யார் வெற்றியடைவோம்? என்று பார்க்கலாம் என்று சொடக்கு போட்டு விட்டு செல்ல,
இதை பார்த்த கல்லூரி முதல்வரும், செயலாளரும்.. அடேங்கப்பா..என்னோட பொண்டாட்டிக்கே டஃப் கொடுப்பாங்க போல பேசிக் கொண்டே செல்ல, சைலேஷ் சிரிப்புடன் அவளை பார்த்துக் கொண்டு சென்றாலும் அவளுக்கு ஏதோ மனது சரியில்லை என்பதை உணர்ந்து வருத்தமடைந்தான்.
அர்ஜூன் அறைக்கதவை திறந்து வெளியே வந்தான்.ஸ்ரீயும் தாரிகாவும் அவனிடம் வர, அவன் முகம் வெளுத்து இருந்தது. அவர்களை கண்டு கொள்ளாமல் அவன் செல்ல. இருவரும் முன் வந்து, ஏதும் பிரச்சனையா? விசாரித்தனர்.
அதை உங்க கிட்ட சொல்ல தேவையில்லை. நான் பார்த்துக் கொள்வேன் என்று முகம் கடுகடுக்க பேசி விட்டு சென்றான். ஸ்ரீயிம் முகம் வாடியது.
விடு ஸ்ரீ. அவனுக்கு தருண் சீனியர் அடிபட்டது கூட கஷ்டமா இருக்கலாம். அவன் செல்லட்டும் தாரிகா கூறிக் கொண்டிருக்க, பிரதீப்பும் துகிராவும் வந்தனர். அவர்களிடம் பேசிக் கொண்டே சாப்பிட எடுத்து வந்தனர் தோழிகள் இருவரும்.
வெளியே சென்ற அர்ஜூன் நேராக பவதாரணியின் வீட்டிற்கு சென்றான். அவர்கள் வீட்டில் அமைதி நிலவ, பவியோ அவளுடைய பெற்றோர்களை கண்டு கொள்ளாமல் ஜூலியை கையில் வைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.