மாலை நேரம் ஆறை தாண்டி சில நொடிகள் ஆகியிருக்க, தோப்பின் வழியே மதுமிதா முன்னால் நடக்க சக்தி பின்னால் சென்று கொண்டிருந்தான்.
“இதெல்லாம் உங்களோடதா சக்தி?” என மது கேட்க, “ம்” என்று மட்டும் பதில் அளித்தான்.
“பெரிய பண்ணையார்தான் நீங்க” என மது சொல்ல, சக்தி பதிலெதுவும் சொல்லவில்லை.
“என்னாச்சு ஏன் அமைதியா வர்றீங்க?” என திரும்பிப் பார்த்து கேட்டாள் மது.
“உங்க அப்பா அம்மா எங்க இருக்காங்க?” என அவளது கேள்விக்கு பதிலளிக்காமல் அவளையே கேள்வி கேட்டான்.
“அதான் சொன்னேனே” என்றாள் மது.
“உங்க அப்பா பேரென்ன?” என சக்தி கேட்கவும், குரலை செருமிக் கொண்டவள், “ கொஞ்சம் தாகமா இருக்கு” எனக்கூறி “என்ன கேட்டீங்க?” என்றாள்.
“உங்க அப்பா பேரென்னன்னு கேட்டேன்”
“பிரபு… பிரபுதான் என் அப்பா பேர்” என்றாள்.
“ஓஹோ… அம்மா பேரு?”
“சுமித்ரா” என்றாள்.
“ம்…” என்றவன், “உங்களுக்கும் வேற ஏதாவது பேர் இருக்கா?” எனக் கேட்டான்.
“இல்லையே… என் பேரு மதுமிதா. சுருக்கமா மதுன்னு கூப்பிடுவாங்க. ஏன் கேட்கிறீங்க?” என்றாள்.
அவள் பதில் கூறும் போது அவளது தடுமாற்றத்தையும், கண்களில் தெரிந்த கள்ளத் தனத்தையும் கண்டு கொண்டான் சக்தி.
“இல்ல பிரபாகரன், பிரபு அப்படின்னு உங்க அப்பாவுக்கு ரெண்டு பேர். சுஜாதா, சுமித்ரா அப்படின்னு உங்க அம்மாவுக்கும் ரெண்டு பேர். அதான் உங்களுக்கும் வேற பேர் ஏதாவது இருக்கான்னு கேட்டேன்” என சக்தி கூற, விக்கித்துப் போய் சிலையென நின்றாள் மது.
“உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?” என உள்ளடங்கிய குரலில் மது கேட்க,
“உன் அப்பா உன் அக்காவோட கல்யாண பத்திரிக்கை கொடுத்துட்டுப் போனார். அதுல உன்னோட பேர் இருக்கு. நீ தாத்தாகிட்ட உன் பெத்தவங்கள பத்தி சொல்லும்போது தடுமாறின. இப்போ கூட உன்கிட்ட திருட்டுத்தனம் தெரிஞ்சது. அதான் கண்டுபிடிச்சிட்டேன்” என மரியாதையை கைவிட்டு ஒருமையிலேயே பேசினான்.
மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியிட்டவள், “சோ உங்களுக்கு நான் யாருன்னு தெரிஞ்சிடுச்சு?” என்றாள்.
“யாருன்னு தெரிஞ்சுட்டு. ஏன் வந்தேன்னுதான் தெரியலை. சொல்லு… எதுக்காக இங்க வந்திருக்க?” என கோவத்துடன் கேட்டான் சக்தி.
எல்லாவற்றையும் அவனிடம் கூறிவிட்டாள் மது.
“அப்போ உன் கல்யாணத்தை தள்ளி போடத்தான் இங்க வந்திருக்கியா?”
“அதுக்காக மட்டும்தானா நான் உண்மையாகவே பெங்களூரு போயிருப்பேன். எங்க அப்பா விருப்பப்படி இந்த ஊருக்கு மெடிக்கல் சர்வீஸ் செய்யனும்னுதான் இங்க வந்தேன்” என்றாள்.
“நீ சொல்றது எல்லாம் உண்மைதானே? இல்ல… வேற எதுவும் உள்நோக்கம் இருந்தா இன்னைக்கே பொட்டி படுக்கையெல்லாம் கட்டிட்டு கிளம்பிடு. உன் நல்லதுக்குதான் சொல்றேன்” என்றான்.
இடுப்பில் கைவைத்து முறைத்தவள், “காலையில என்னை நல்லா சைட் அடிச்சிட்டு, இப்போ டெரர் லுக் கொடுக்கறீங்களே… நீங்க ஹீரோவா இல்லை வில்லனா?” எனக் கேட்டாள்.
“இந்த விளையாட்டுப் பேச்செல்லாம் வேண்டாம்” என்றான் சக்தி.
“எது விளையாட்டுப் பேச்சு? உண்மைய சொல்லுங்க. என்னை பார்த்ததிலிருந்து என்னையவே நீங்க சைட் அடிக்கல?”
“அது… அது… பொண்ணுங்க பார்க்க கொஞ்சம் அழகா இருந்தா, பசங்க பார்க்கதானே செய்வாங்க?”
“அதுக்குப் பேர்தான் சைட்”
“நீ யாருன்னு எனக்கு அப்போ தெரியாது. பேச்சை மாத்தாதே. நீ வேற எதுவும் நோக்கத்தோடு வந்திருந்தீன்னா இன்னைக்கே கிளம்பிடு” என்றான்.
“வேற எனக்கு என்ன உள்நோக்கம் இருக்கப் போகுது? ஓ… இப்படி நினைச்சுட்டீங்களோ?”
“எப்படி?”
“என் அத்தை மகனை கரெக்ட் பண்ணி கல்யாணம் செஞ்சுக்க வந்திருக்கேன்னு…” என மது தோரணையாக கேட்க, சக்தியின் முகத்தில் கடுமை மறைந்து, கொஞ்சம் வெட்கமும், கொஞ்சம் அசடும் வழிய ஆரம்பித்தது.
“பார்க்க ஜம்முன்னு நல்லாதான் இருக்கீங்க. ஆனா உங்களோட டெரர் லுக் எனக்கு பிடிக்கல. அதனால உங்கள கல்யாணம் பண்ணிக்கனும்கிற ஐடியாவை நான் கைவிட்டுட்டேன். சோ… இப்போதைக்கு ஒரு டாக்டரா மட்டும்தான் இங்கே இருக்கப் போறேன்” என மது கூறினாள்.
கொஞ்சம் ஏமாற்றமாய் உணர்ந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல், “சென்னையில பிறந்து, வளர்ந்து டாக்டருக்கு படிச்ச உனக்கு இந்த காட்டானை கட்டுற ஐடியா எல்லாம் இருக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும். உண்மையாவே நல்ல எண்ணத்தோட வந்திருந்தா சரி. நீ யாருன்னு உண்மை என் தாத்தாவுக்கு தெரிஞ்சா உடனே அனுப்ப சொல்லிடுவார். அதனால உண்மை தெரியாம பார்த்துக்கோ. என் அம்மாவுக்கு கூட தெரிய வேண்டாம்” என்றான்.
அவன் சொன்ன மற்றவற்றை விட்டு விட்டு, “அதென்ன உங்களை காட்டான்னு சொல்லிக்கிறீங்க? அப்படியெல்லாம் இல்லை” என்றாள் மது.
” அதெல்லாம் இல்லை, எல்லா பொண்ணுங்களுக்கும் முதல்ல ஒரு பையன்கிட்ட இருந்து அவனோட நல்ல கேரக்டர்தான் பிடிக்கும். கேரக்டர் பிடிச்சுப் போச்சுன்னா உருவத்தை எல்லாம் பார்க்க மாட்டாங்க. எவ்ளோ அழகா இருந்தாலும் கேரக்டர் சரியில்லன்னா பிடிக்காது. நீங்களா இப்படித்தான்னு நினைச்சுக்கிட்டா நாங்க என்ன பண்றதாம்?”
“அப்புறம் க்ளீன் ஷேவ்தான் அழகு, அதுதான் பிடிக்கும்ன்னு இல்லை. ரெண்டு நாள் ஷேவ் பண்ணாம, லேசா முறுக்கு மீசை வச்சுக்கிட்டு வேஷ்டியை மடிச்சு கட்டிக்கிட்டு கொஞ்சம் விரைப்பா நடக்கிற பசங்கள கூட பொண்ணுங்களுக்கு பிடிக்கும்” என மது கூற,
“அப்போ உனக்கு என்னை பிடிச்சிருக்கா?” என மெல்ல அவள் மனம் அறிய கேட்டான் சக்தி.
“அப்படி எல்லாம் சொல்ல முடியாது. ஆனா இப்போதைக்கு பிடிக்காம ஒன்னும் இல்லை” என்றாள் மது.
அவளது பதிலிலும் கூறிய விதத்திலும் சிரித்த சக்தி, “சுண்டெலி மாதிரி இருந்துகிட்டு என்னமா வாய் அடிக்கிற?” எனக் கேட்டான்.
“யார் சுண்டெலி நானா?” என ரோஷமாக மது கேட்க, “பின்ன இல்லையா? என் பக்கத்துல வந்து நின்னுப் பாரு. உனக்கே தெரியும்” என்றான்.
“நீங்க பனை மரம் மாதிரி வளர்ந்துட்டு, என்னை ஒன்னும் சுண்டெலின்னு சொல்ல வேண்டாம்” எனக்கூறி வேகமாக நடக்க ஆரம்பித்தாள். சிரித்துக்கொண்டே அவளை தொடர்ந்தான் சக்தி.
வீடும் வந்துவிட, வெளியில் மின் விளக்கை ஒளிரச் செய்தவள், “பொன்னுத்தாயி வந்துடுவாங்களா?” எனக் கேட்டாள்.
“வந்துடுவாங்க. நைட் சமையல் செஞ்சுட்டு உன்கூடவே தங்கிக்குவாங்க. எதுவும்னா எனக்கு கால் பண்ணு” எனக் கூறினான்.
“நான் யாருன்னு தெரியிற வரை நீங்க வாங்க போங்கன்னு மரியாதையா பேசிட்டு, இப்போ என்னை நீ வா போன்னு பேசுறீங்க” என்றாள்.
“அப்போ நீ டாக்டர்”
“இப்பவும் நான் டாக்டர்தான்”
“வெறும் டாக்டர் மட்டும் இல்லை என் மாமன் மகளாச்சே… வாங்க போங்கன்னு எல்லாம் கூப்பிட மாட்டேன். அதோட நீ என்னைவிட சின்ன பொண்ணுதானே” எனக் கேட்டான்.
“நீங்க கூடதான் எனக்கு அத்தை பையன். அப்போ நான் உங்களை எப்படி கூப்பிடுறதாம்?” எனக் கேட்டாள்.
“நான் உனக்கு முறைப்பையன். அதனால மாமா, அத்தான்,மச்சான் இப்படி உனக்கு பிடிச்ச மாதிரி எப்படி வேணா கூப்பிட்டுக்கோ” எனக் கூறிக் கொண்டே சக்தி வண்டியை எடுக்க,
“முறைப்பையா நான் யாருன்னு வேற யார்கிட்டயும் சொல்லிடாதீங்க?” என்றாள் சத்தமாக.
வண்டியில் ஏறி அமர்ந்தவன், “என் மாமன் பெத்த மகராசியே… நீ என்னை எப்படியும் கூப்பிட வேண்டாம். இப்ப சத்தம் போட்டு ஊரைக்கூட்டாம உள்ள போ” எனக் கூறி, சிரித்துக் கொண்டே அங்கிருந்து வண்டியில் புறப்பட்டான்.
“ம்… பரவாயில்லை இன்ட்ரஸ்டிங்காதான் இருக்கான்” என வாய்விட்டு கூறியவள் உள்ளே சென்றாள்.
சிறிது நேரத்தில் பொன்னுத்தாயி வந்துவிட இரவு உணவு முடித்துவிட்டு கூடத்திலேயே படுத்துக்கொண்டாள். மது அவளது அறைக்கு சென்றாள். ஜன்னல் வழியாக குளிர்ந்த காற்று வீச, மின்விசிறியை அணைத்தவள் படுத்துக்கொண்டாள்.
நேரம் ஒன்பதுதான் ஆனது. இந்த நேரத்தில் எல்லாம் மது உறங்கியதே இல்லை. சில சமயம் பத்தை கடந்த பிறகுதான் இரவு உணவே இருக்கும். பகலில் தூங்கியதாலும் புது இடம் என்பதாலும் உறக்கம் வராமல் தன் கைப்பேசியை பார்த்துக் கொண்டே படுத்திருந்தாள். தன் தந்தையிடமிருந்து அழைப்பு வர பேசினாள். சக்திக்கு உண்மை தெரிந்துவிட்டதை கூறினாள்.
“உன்னால ஒரு நாள் கூட அவன்கிட்ட தாக்குப்பிடிக்க முடியலையா?” என சிரித்துக் கொண்டே கேட்டார்.
“மதுமிதான்னு என் பொண்ணு மட்டும்தான் இருப்பாளா? வேற யாரும் மதுமிதாங்கற பேர்ல டாக்டரா இருக்கக் கூடாதா? அவன் சந்தேகப்பட்டு கேட்டா நீ சமாளிக்க தெரியாம மாட்டிகிட்டியே. என் மருமகன்கிட்ட உன் சாமர்த்தியம் பலிக்கலைன்னு சொல்லு” என்றார் பிரபா.
“போதும் உங்க மருமகன் பெருமை. உண்மை தெரிஞ்சதும் என்னை எப்படி முறைசார் தெரியுமா?”
“என்னது உன்னையவே முறைச்சானா? பெரிய ஆளா இருப்பான் போலயே”
“ஆமாம் பெரிய ஆள்தான். இன்னைக்கு ஒரு மாட்டுக்கு எவ்வளவு அழகா பிரசவம் பார்த்தார் தெரியுமா? கொஞ்சம் கூட பதட்டமே இல்லை. சோ கூல். உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறம் கூட முதல்ல கோவப்பட்டாலும் அப்புறமா மாமா பொண்ணுன்னு பாசமாதான் பேசினார்” என்றாள் மது.
மதுவின் குரல் பேதத்தில் ஒரு நொடி புருவம் சுருக்கியவர், பின் “நீ கேட்டதெல்லாம் ரெடி பண்ணிட்டேன். நாளைக்கே திருவாரூர் வரை வந்துடும். அதுக்கப்புறம் சக்தியை வாங்கிக்க சொல்லு” என்றார்.
“இவ்ளோ சீக்கிரமா அரேஞ் பண்ணிட்டீங்களா?”
“அப்புறம் அதை விட எனக்கு வேறென்ன வேலை?” என்றார் பிரபாகரன்.
“சரிப்பா அம்மா எதுவும் கேட்டாங்களா?”
“உன் அம்மாதானே… உன் மேல கொஞ்சம் வருத்தத்திலதான் இருக்கா. அவளுக்கு எப்படியாவது இந்த வருஷமே கௌசிக்கை அவ ஹாஸ்பிடல்ல பெர்மனண்ட் கன்சல்டன்ட்டா ஆக்கணும். அந்தக் கவலை” எனக் கூறினார்.
கௌசிக்கின் பேச்சைத் தவிர்த்தவள் “மயூரி எப்படி இருக்கா? இங்க வந்ததுக்கு அப்புறம் என்கிட்ட பேசவேயில்லை. மதியம் கால் பண்ணினேன். எடுக்கல. திரும்பக் கூட கூப்பிடலை” என பேச்சை மாற்றினாள்.
“அப்படியா, பிஸியா இருந்திருப்பா. நாளைக்கு என்னன்னு கேட்கிறேன்” என்றவர் இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு கைப்பேசியை வைத்தார்.
இன்னும் உறக்கம் வராமல் இருந்தவள், சக்தியிடம் பேசலாமா வேண்டாமா என பட்டிமன்றம் வைத்து, பேசலாம் என அவளது மனம் தீர்ப்பு கூற, அவனது எண்ணிற்கு அழைத்தாள்.
நல்ல உறக்கத்தில் இருந்தவன் கைப்பேசியின் ஒலி கேட்டு அதில் மதுவின் எண்ணைப் பார்த்து பதறிப்போய் அழைப்பை ஏற்றான்.
“என்ன முறைப்பையா தூங்கிட்டீங்களா?” எனக் கேட்டாள் மது.
“ஏய் சுண்டெலி இந்த நேரத்தில் தூங்காம என்ன பண்ற? நான் பயந்து போயிட்டேன் தெரியுமா?” என்றான்.
“ஏன் பயப்படனும்?”
“ஊரே தூங்கிட்டு இருக்கும்போது, திடீர்னு நீ கால் பண்ணினா பயம் வரத்தானே செய்யும்”
“பொதுவா இந்த நேரத்துல எல்லாம் நான் தூங்க மாட்டேன். இன்னும் லேட்டாதான் தூங்குவேன்” என்றாள்.
“இப்போ தூங்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்க?”
“ம்… உங்களைத்தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்” என மது கூற, கைப்பேசியை ஒரு நொடி காதிலிருந்து எடுத்துப் பார்த்தவன் சிரித்துக்கொண்டே தன் முறுக்கிய மீசையை அனிச்சையாய் முறுக்கி, “அப்படியா?” எனக் கேட்டான்.
“ஆசைதான், நாளைக்கு ஹாஸ்பிடலுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் அப்பா அனுப்பி வைக்கிறார். திருவாரூர் வரை வந்துடுமாம். நீங்க போய் எடுத்துட்டு வந்திடுங்க. அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்” என்றாள்.
“இதை சொல்லத்தான் இந்த நேரம் கூப்பிட்டியா? நம்புற மாதிரி இல்லையே. இந்த மாமாவோட பேச ஆசைப்பட்டுதானே கூப்பிட்ட?”
“ஹலோ மிஸ்டர் சக்தி… இதை சொல்லத்தான் கூப்பிட்டேன். வேற எதுவும் இல்லை” என சொன்ன மதுவுக்கும் இலேசாக சிரிப்பு வந்தது.
“ஆமாம்… ஆமாம்… ரொம்ப… ரொம்ப முக்கியமான விஷயம். நாளைக்கு காலையில பொறுமையா கூட சொல்ல முடியாத அவசரமான விஷயம். ராத்திரி 11 மணிக்கு ஃபோன் பண்ணி என் தூக்கத்தை கலைச்சு சொல்லவேண்டிய தலைப் போகிற விஷயம்” என நக்கலாகக் கூறினான்.
“ஆமாம் அப்படித்தான், நான் வைக்கிறேன்” என வைத்தவள், “ஐயோ மது… இந்த பல்பு உனக்கு தேவையா?” என தன் ஆள்காட்டி விரலை தன் முகத்தைப் நோக்கி நீட்டி கேட்டவள் குப்புற படுத்துக் கொண்டாள்.
“என்னடா சக்தி இது? உன் மாமன் மகளுக்கும் உன்னை மாதிரியே, உன் மேல ஒரு இது இருக்கும் போலயே…” என வாய்விட்டுக் கூறியவன், மல்லாக்க படுத்து மெதுவாக சுழலும் மின்விசிறியை பார்த்துக் கொண்டே படுத்திருந்தான்.
இருவரும் இதுவரை இல்லாத புதுவித உணர்வில் உறக்கத்தை தொலைத்து விழித்துக்கொண்டே கனவில் மிதந்தனர்.