வானவில் கோலங்கள்-1

அத்தியாயம் 1

பச்சைப்பசேல் என்றிருந்த வயல்வெளியில் ஆட்கள் தங்கள் களைப்பு தீர, பாடல்களை பாடிக்கொண்டே களை எடுத்துக் கொண்டிருக்க, மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் சக்திதரன். நெடுநெடுவென்ற உயரத்தில், லேசாக முறுக்கிய மீசையுடன், வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வரப்பில் நடந்து கொண்டிருந்த சக்தியிடம், “என்ன தம்பி…. கல்யாண சாப்பாடு எப்ப போட போறீக?” என களை எடுத்துக்கொண்டிருந்த பெண்மணி ஒருவர் கேட்க, “சாப்பாடு வேணும்னா போடுறேன். அதுக்காக நான் கல்யாணம் கட்டிக்கணுமா?” என கேட்டுக் கொண்டே சக்தி கடந்து செல்ல, “முகத்துல கல்யாண ரேகை ஓடுதே. எப்படியும் சித்திரையில் கல்யாணம் நடக்கும் பாருங்க” என பதில் பேசினார் அந்தப் பெண்மணி.

“அது சரி… எல்லாருக்கும் கையில் ரேகை ஓடும். எனக்கு முகத்திலேயே ரேகை ஓடுதா? அப்படியே இவனுக்கும் கல்யாணம் எப்பன்னு பாத்து சொல்லுங்க” என பக்கத்தில் நின்றிருந்த பழனிவேலை கான்பித்துக் கேட்க, “இவன் மொகர கட்டைக்கு இந்த செம்மத்துக்கு கல்யாண ராசியே இல்லை” என்றார் அந்தப் பெண்மணி.

“ஏய் கெழவி என்ன ரவுசு பண்றியா?” என கோபமான பழனிவேல் கேட்க, “எலேய்…. யாரைப் பாத்துலே கெழவின்னு சொல்றே. எம்மட புருசனுக்கு தெரிஞ்சுது உன் சோளி அம்புட்டுதான்” என பதிலுக்கு அவரும் உக்கிரமாக, “வேலையை முடிச்சுட்டு உங்க சண்டையை வச்சுக்கங்க. இப்போ வேலைய பாருங்க” என சக்தி சமாதானப்படுத்த, தற்காலிகமாக இருவரும் சண்டையை ஒதுக்கிவைத்துவிட்டு வேலையை கவனிக்கலாயினர்.

சக்தியின் கைப்பேசி ஒலியெழுப்ப எடுத்துப் பார்த்தான். அவனது அன்னை அனுசுயாதான் அழைத்தார். எடுத்துப் பேச, “சக்தி கண்ணு உன் அப்பத்தா காலையிலிருந்து ஒண்ணுமே சாப்பிடலடா. அழுதுகிட்டே உக்காந்து கெடக்காங்க. நீ கொஞ்சம் வாயேன்” என்றார் அவர்.

சக்தியும் பழனிவேலிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான். சக்திக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வருடா வருடம் இந்த நாளில் அவனுடைய அப்பத்தா அன்னபூரணி இப்படித்தான் அன்னம் ஆகாரம் எதுவும் இல்லாமல் அழுது கொண்டே இருப்பார். இன்று அவருடைய இளைய மகள் தேவியின் நினைவு தினம்.

புல்லட்டை வெளியில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் செல்ல, சக்தியின் தாத்தா விஸ்வநாதன் மரத்தாலான சாய்வு நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்திருந்தார். அவரை கடந்து உள்ளே செல்ல, அன்னபூரணி தேவியின் புகைப்படத்திற்கு கீழே சுருண்டு படுத்து கிடந்தார். சக்தி வந்து விட்டதைப் பார்த்த அனுசுயா ஒரு கோப்பையில் பசும்பாலை கொண்டு வந்து கொடுக்க, “அப்பத்தா எழுந்திரு, எனக்கும் நினைவு தெரிஞ்சதிலிருந்து பார்க்கிறேன், இப்படித்தான் இந்த நாள்ல எதுவும் சாப்பிடாம அலும்பு பண்ணுற. நீ சாப்பிடாம இருந்தா அத்தை திரும்ப வந்துடுமா? எழுந்திரு இந்தப் பாலையாவது குடி” என்றான்.

எழாமலேயே அன்னபூரணி படுத்தே இருக்க, பாலை அங்கிருந்த மேசையில் வைத்தவன், தன் பாட்டியை அப்படியே தூக்கி நாற்காலியில் அமர வைத்தான்.

“எலேய் என்னை விடுடா” என அன்னபூரணி கூச்சலிட, அப்பொழுதுதான் வீட்டிற்குள் நுழைந்த, சக்தியின் அப்பா வீரவேலும், சத்தியின் அண்ணன் குருபரனும் என்னவோ ஏதோவென்று உள்ளே ஓடி வர, சக்தி அன்னபூரணிக்கு பாலை வலுக்கட்டாயமாக கொடுத்துக் கொண்டிருந்தான்.

“விடுடா நானே குடிக்கிறேன்” என அவரே வாங்கி அருந்த, “கிழவிக்கு இவன்தான் சரியான ஆளு” எனக் கூறினான் குருபரன்.

“ஐயோ கிழவின்னு சொல்லாதீங்க… அம்மாச்சி சண்டைக்கு வந்திடப் போகுது” என்றாள் குருபரனின் மனைவி வளர்மதி. அவளருகில் நின்றிருந்தாள் குருபரன் வளர்மதி தம்பதியினரின் மூன்று வயது மகள் பிரதீபா.

விஸ்வநாதன் அன்னபூரணி தம்பதியினருக்கு மூன்று மக்கள். மூத்தவர் வீரவேலுக்கு தன்னுடைய தங்கை மகள் அனுசுயாவையே மணமுடித்து வைத்திருந்தார் விஸ்வநாதன். இரண்டாவது மகள் மணிமேகலையை அதே ஊரிலிருந்த இன்னொரு தங்கை மகன் தங்கதுரைக்கு மணமுடித்து வைத்திருந்தார். மூன்றாவது மகள்தான் தேவி. அற்ப ஆயுளில் இந்த உலகை விட்டு சென்று விட்டாள்.

மணிமேகலையின் மூத்த மகள்தான் வளர்மதி. அவருக்கு இன்னொரு மகள் இருக்கிறாள். பெயர் சுகன்யா. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். படிப்பு முடிந்ததும் அவளையும் தன் அண்ணன் வீட்டிற்கே மருமகளாக்கிவிட வேண்டும் என்று ஆசை வைத்திருந்தார் மணிமேகலை.

மணிமேகலை தங்கதுரை இருவரும் மதியச் சாப்பாட்டிற்காக உள்ளே வந்தனர். இன்று தேவிக்கு திதி என்பதால், பூஜை முடித்து மதிய சாப்பாட்டுக்கு வரும்படி அவர்களை அழைத்திருக்க இருவரும் வந்திருந்தனர். பாவாடை தாவணியில், பற்கள் தெரியாமல் அழகாக சிரித்துக் கொண்டிருந்த தேவியின் புகைப்படத்தின் முன் நின்று, “எப்படியெல்லாம் வாழ வேண்டியவ…? இப்படி அவ வாழ்க்கையை அவளே முடிச்சிக்கிட்டாளே” என தன் கணவர் தங்கதுரையிடம் மணிமேகலை புலம்ப, “அவளா முடிச்சுக்கல. அவளை கொன்னுட்டான் அந்த பிரபாகரன் பாவி” எனக் கூறினார் தங்கதுரை.

தங்கதுரையின் வார்த்தைகள் காதில் விழுந்ததும், ஒரு நொடி தான் செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு, மனவேதனையில் அப்படியே நின்ற அனுசுயா, சுதாரித்துக்கொண்டு மீண்டும் விட்ட வேலையை தொடர ஆரம்பித்தார். வேதனை இருக்காதா? தங்கதுரை பாவி என திட்டியது அனுசுயாவின் ஒரே அண்ணன் பிரபாகரனை அல்லவா?

அனுசுயாவுக்கு இதை கேட்டு கேட்டு பழகி விட்டது. தேவியின் இறப்புக்கு தன் அண்ணனை மற்றவர்கள் காரணம் காட்டி பேசும்போதெல்லாம், முதலில் அவர்களுக்கு முன்பே அழுது விடுவார். சிறிது காலம் சென்று, தனியே சென்று அழுவார். போகப்போக அழுவதெல்லாம் இல்லை. கேட்க பழகிக் கொண்டார்.

“அத்தை சமையல் முடிஞ்சிடுச்சே… நான் போய் எல்லாத்தையும் கொண்டு போய் வைக்கவா?” என வளர்மதி கேட்க, “முதல்ல ஒரு இலையில எல்லாம் வச்சி, தேவி ஃபோட்டோ முன்னாடி வை. காக்காவுக்கு வச்சுட்டு, அப்புறமா டேபிள்ல வை” என்றார் அனுசுயா.

தேவிக்கு எல்லாம் படைத்துவிட்டு, தேவியின் புகைப்படம் முன்பு அனைவரும் வணங்கிவிட்டு, ஆண்கள் சாப்பிட அமர, பெண்கள் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

“என்ன அத்தான் சுகன்யா வரலையா?” என தங்கதுரையிடம் கேட்டார் வீரவேல்.

“அவளுக்கு காலேஜ்ல ஏதோ பரிட்சையாம். லீவு போட முடியாதுன்னு சொல்லிட்டா. முதல்ல இவ படிப்பை முடிச்சதும் நல்லபடியா இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்கினாதான் எனக்கு நிம்மதி” என தங்கதுரையை முந்திக்கொண்டு பதிலளித்தார் மணிமேகலை.

தங்கையின் திதியும் அதுவுமாக, மற்றொரு தங்கையின் இந்த பேச்சு வீரவேலுக்கு ரசிக்கவில்லை. இருந்தும் எதுவும் கூறாமல் அமைதியாக சாப்பிட்டார். சக்திதரன் தன் அன்னையைப் பார்க்க, ‘எதுவும் பேசிடாதே’ என கண்களாலேயே கெஞ்சினார் அனுசுயா. பின்னே, சக்தி தெளிவாக சுகன்யாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியிருக்க, அத்தை இவ்வாறு பேசியது கோவத்தை ஏற்படுத்தியது. அவன் மறுப்பு கூறுவது அனைவருக்கும் தெரிந்தாலும், அனுசுயாவைத் தவிர மற்றவர்கள் சக்திக்கே சுகன்யாவை மணம் முடித்துவிட விரும்பியிருந்தனர்.

“பார்த்து வளர்ந்த பெண், எனக்கு மனைவியாக பார்க்க தோணலை” என்ற சக்தியின் காரணத்தை மற்றவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எப்படியும் எல்லோரும் எடுத்துச் சொன்னால் கேட்டுக் கொள்வான் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தனர்.

சுகன்யாவுக்கும் அப்படித்தான். சக்தியை அவளுக்கு மிகவும் பிடிக்கும். தன் விருப்பத்தை அவனிடம் நேரடியாக கூறாவிட்டாலும், தன் அன்னை சிறுவயதிலிருந்தே சக்திக்குதான் நீ என சொல்லி சொல்லியே வளர்த்ததால் மனதில் அவன் மீது ஆசை வளர்த்து வைத்திருந்தாள். சக்திக்கு அவளின் எண்ணம் தெரியாது. சாதாரணமான அக்கறையுடன்தான் அவளுடன் பழகுவான். எந்த சமயத்திலும் அதிகப்படியான உரிமையுடன் நடந்து கொள்ள மாட்டான்.

வளர்மதிக்கும் தன் தங்கையே இந்த வீட்டிற்கு மருமகளாக வரவேண்டும் என்று ஆசை இருந்தது. தன் இறந்துபோன மகளின் நினைவில் இருந்த விஸ்வநாதன் இதைப் பற்றி எந்த கருத்தும் கூறாமல் எழுந்து சென்றுவிட்டார். அவர் சென்ற பிறகு, “அத்தை, எத்தனை தடவை சொல்றது… சுகன்யாவை நான் கட்டிக்க மாட்டேன்னு? அப்படியும் திருப்பி திருப்பி ஏன் அதையே பேசுறீங்க?” எனக் கேட்டான் சக்தி.

“மருமகனே வளர் குரு பார்க்க வளர்ந்த பொண்ணுதானே? அவங்க நல்லபடியா குடும்பம் பண்ணலையா? உன் அத்தை நான் பார்க்க வளர்ந்த பொண்ணு. நாங்க குடும்பம் பண்ணலையா? இவ்வளவு ஏன்? உன் அம்மா உன் அப்பா பார்க்க வளர்ந்த பொண்ணு. அவர் குடும்பம் பண்ணலையா? நீ சொல்றதெல்லாம் ஒரு காரணமா?” எனக் கேட்டார் தங்கதுரை.

“நீங்க நினைக்கிற மாதிரியே நானும் நினைக்கணும்னு என்ன மாமா இருக்கு? என்னால சுகன்யாவை கட்டிக்க முடியாது. இதை பத்தி இனிமேல் பேசாதீங்க” என அழுத்தமாக அவரிடம் கூறியவன் அந்தப் பேச்சை இன்னும் வளர்க்க விரும்பாமல் தன் தந்தையை நோக்கி,

“நம்ம ஊர்ல ஹாஸ்பிடல் இல்லாம எவ்வளவு சிரமமா இருக்கு? இதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணனும்பா. ஒரு அவசரம்னா டவுனுக்குதான் போக வேண்டியிருக்கு. போன வாரம் கூட மாரியப்பனோட அப்பா மாரடைப்பு வந்து செத்துட்டார். சரியான நேரத்துக்கு கொண்டு வரலைன்னு டாக்டர் சொன்னார். இப்படியே எவ்வளவு நாளைக்கு கஷ்டப்படுறது?” என்றான்.

“ம்… ஊருக்கு நல்லது செய்வான்னு காசை கொட்டி அந்தப் பயல படிக்க வச்சார் மாமா. அவர் பிள்ளையை கூட படிக்க வைக்கலை. கடைசியில் அவன் டாட்டா காட்டிட்டு போயிட்டான்” என தர்மதுரை கூறினார்.

“படிப்பு வந்திருந்தா எங்க அப்பாவையும் படிக்க வச்சிருக்க மாட்டாரா தாத்தா” என சக்தி கேட்க, “நீங்க பழசையே பேசாதீங்க மாமா. இப்ப நடக்கப் போறத பேசுங்க” என்றான் குருபரன்.

தங்கதுரைக்கு சிறுவயதிலிருந்தே பிரபாகரன் என்றால் கொஞ்சம் பொறாமைதான். பிரபாகரன் பார்க்கவும் நன்றாக இருப்பார். படிப்பிலும் கெட்டி. விஸ்வநாதனுக்கு பிரபாகரன் என்றால் மிகவும் பிரியம். எடுத்துக்காட்டாக அவனைத்தான் கூறுவார். அதனால் அப்பொழுதிலிருந்தே, பிரபாகரனை அவருக்கு பிடிக்காது. அதனால் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். தன் தாய்க்கு இது எவ்வளவு மன வருத்தத்தை கொடுக்கும் என்றறிந்த அனுசுயாவின் இரு மகன்களும் அவரை பிரபாகரனைப் பற்றி எதுவும் சொல்ல விடாமல் தடுத்துக் கொண்டே இருப்பர்.

“நாம சின்னதா கிளினிக் ஏதாவது கட்டினாலும் இந்த கிராமத்துல யாருடா வைத்தியம் பார்க்க வருவாங்க?” எனக்கேட்டார் வீரவேல்.

“நான் நம்ம டவுன் ஹாஸ்பிடல் பெரிய டாக்டர் மூர்த்திகிட்ட பேசியிருக்கேன். ஞாயிற்றுக்கிழமையில் அவர் வரேன்னு சொல்லியிருக்கார். சர்வீஸ் மைண்ட் உள்ள யாரையாவது அரேஞ்ச் பண்ணித் தர்றேன்னு சொல்லியிருக்கார்” என்றான் சக்தி.

“யாருடா வரப்போறா?” என குருபரன் அலுத்துக் கொள்ள, “முயற்சி பண்ணி பாப்போம் வந்தா நல்லதுதானே?” என்றான் சக்தி.

“சரிடா அப்பாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு, ஊர்ப் பெரியவங்ககிட்டேயும் பேசிட்டு மேற்கொண்டு என்னன்னு பார்க்கலாம்” என்றார் வீரவேல்.

திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் அழகியசூரபுரம் கிராமம்தான் அது. விவசாயம்தான் அங்கே முதன்மைத் தொழில். மாடுகள் பண்ணையும் அங்கு இருந்தது. அந்த ஊருக்கும் ஊரைச் சுற்றியுள்ள சில கிராமங்களுக்கும் மருத்துவ உதவி தேவை என்றால் திருவாரூர் தான் செல்ல வேண்டும். கிராமத்தில் இருந்து திருவாரூர் செல்லவே ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். அவசரத்திற்கு பேருந்துகளும் தொடர்ச்சியாக இருக்காது. அதனால் அவசர சிகிச்சைக்கு வழியின்றி இருந்தது அந்தக் கிராமங்கள். அதற்காகத்தான் மருத்துவ வசதி செய்து தர சக்திதரன் முயன்று கொண்டிருக்கிறான்.

பலமுறை மனுக்கள் கொடுத்தும் பலன் இல்லாததால் தாங்கள் ஏதாவது செய்தால்தான் உண்டு எனக் கருதி தானே களத்தில் இறங்கி விட்டான்.

தங்கதுரையும் அதே ஊரில்தான் விவசாயம் பார்த்து வருகிறார். அவருடைய தம்பிகள் இருவர் முறையே தில்லைநாயகம் மற்றும் சங்கரமூர்த்தி திருவாரூர் சென்று அங்கேயே குடியேறி விட்டனர். அங்கேயே பல தொழில்கள் இருக்க விவசாயத்தை விட்டு விட்டனர். தங்கதுரை மட்டும் சொந்த ஊரிலேயே இருந்தார். ஏதாவது விசேஷங்களில் தன் தம்பிகளை சந்தித்துக் கொள்வதோடு சரி. மற்றபடி தன் மாமா விஸ்வநாதன் குடும்பத்துடன் தான் அதிக ஒட்டுதலுடன் இருப்பார்.

சக்திதரன் ஒரு விவசாயி. விவசாயத்தில் அதிக ஈடுபாடு இருந்ததால் இளநிலை படிப்போடு நிறுத்திக் கொண்டான். இயற்கையாக பல உத்திகளை கையாண்டு, ஈடுபாட்டுடன் விவசாயம் செய்து வருகிறான். மாட்டுப் பண்ணையும் இருந்தது.

சென்னையில் இருந்த அந்த பங்களாவின் தோட்டத்தில் அமர்ந்திருந்த பிரபாகரனை பின்னாலிருந்து அவர் கழுத்தை கட்டிக் கொண்டாள் அவரது செல்லமான இளையமகள் மதுமிதா.

“என்னாச்சு டாடி? ஏன் டல்லா இருக்கீங்க? மயூரி கல்யாணத்த பக்கத்துல வச்சிக்கிட்டு ஏன் இப்படி இருக்கீங்க? மயூரி நம்மளை எல்லாம் விட்டுட்டு போகப் போறான்னு சோகமா?” எனக் கேட்டாள் மது.

“என்னோட மகளுக்கு கல்யாணம். எனக்கு இருக்கிற ஒரே சொந்தம் என் தங்கச்சிதான். அவ கூட வர முடியாம என் மகள் கல்யாணம் நடக்க போகுதேன்னுதான் வருத்தமாக இருக்கு” என்றார் பிரபாகரன்.

அவர் முன்னால் வந்தமர்ந்தாள் மதுமிதா. மாநிறத்திற்கும் சற்று கூடுதலான நிறத்தில், சராசரி உயரத்துடன், இறகு போல வெட்டப்பட்ட கூந்தல் அலையலையாய் காற்றில் பறக்க, ஜீன்ஸ் பேண்ட்டும், இளம் சிவப்பு நிற சட்டையும் அணிந்த மதுவின் முகத்தைப் பார்த்தார் பிரபாகரன்.

பிரபாகரன், அவரது மனைவி சுஜாதா இருவருமே மருத்துவர்கள். பிரபாகரன் பொதுநல மருத்துவர். சுஜாதா அறுவை சிகிச்சை நிபுணர். சொந்தமாக மருத்துவமனையும் இருக்கிறது. மூத்தமகள் மயூரி குழந்தைகள் நல மருத்துவர். அவள் அம்மாவின் செல்லம். மயூரிக்கு அஜய் என்ற காது-மூக்கு-தொண்டை நிபுணருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்த திருமணத்திற்குதான் தன் தங்கை அனுசுயாவால் வர முடியவில்லையே என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்தார் பிரபாகரன்.

மதுமிதாவிடம் எப்பொழுதுமே ஒரு நேர்மறை ஆற்றல் இருக்கும். பிரபாவுக்கு மது செல்ல மகள் மட்டுமல்ல, நல்ல தோழியும் கூட. பிரபாகரனுக்கும் சுஜாதாவுக்கும் அடிக்கடி வரும் சண்டையை தீர்த்து வைப்பதே மதுமிதாதான். புத்தி சாதுரியம் மிக்க மதுமிதா ஆறு மாதங்களுக்கு முன்புதான், மருத்துவ படிப்பு முடித்துவிட்டு, அவர்களுடைய மருத்துவமனைக்கே சென்று கொண்டிருக்கிறாள்.

“உங்க பொண்ணு கல்யாணத்துக்கு உங்க சிஸ்டர் வரணும் அவ்வளவுதானே?” எனக்கேட்டாள் மதுமிதா.

“ஆமாம்” என்றார் பிரபாகரன்.

“நீங்களே நேரடியா போய் இன்விடேஷன் வச்சி வாங்கன்னு கூப்பிடுங்க, வந்திடுவாங்க” என்றாள் மதுமிதா.

“போகலாம்னு சொல்றியா?” எனக் கேட்டார்.

“உங்க தங்கச்சி, உங்க பொண்ணு மயூரியோட கல்யாணத்துக்கு வரணும்னா நீங்க போய்தான் ஆகணும். யோசிக்காதீங்க போங்கப்பா” என்றாள் மதுமிதா.

“ரெண்டு பேரும் இங்கதான் இருக்கீங்களா? நல்லதா போச்சு. ஒரு முக்கியமான விஷயம் பேசனும்” என வந்தமர்ந்தார் சுஜாதா.

என்ன என்பது போல இருவரும் அவரைப் பார்க்க, “அஜயோட ஃப்ரண்ட் கௌசிக் நேத்து என்னை வந்து பார்த்தார்” என்றார் சுஜாதா.

“யாரு கௌசிக்?” எனக்கேட்டார் பிரபா.

“அதான் மயூரியோட எங்கேஜ்மெண்ட்க்கு வந்திருந்தாரே கார்டியாலஜிஸ்ட் கௌசிக். மாப்பிள்ளை கூட இன்ட்ரொடியுஸ் பண்ணி வச்சாரே மறந்துட்டீங்களா?” எனக் கேட்டார் சுஜாதா.

நினைவு வந்தவராய் “ஆமாம், அவர் எதுக்கு உன்னை வந்து பார்த்தார்?” எனக் கேட்டார் பிரபா.

“அவர் ஃபங்க்ஷன் அப்போ நம்ம மதுவைப் பார்த்தாராம். ரொம்ப பிடிச்சிருக்காம் மதுவை. கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறார். மதுவுக்கு கௌசிக் குட் சாய்ஸ்” என்றார் சுஜாதா.

பிரபா தன் மகளின் முகத்தைப் பார்க்க ‘வேண்டாம்’ என சாடை காட்டினாள் மது.

“இப்போதானே மயூரிக்கு கல்யாணம் பண்ணப் போறோம். அதுக்குள்ள மதுவுக்கு என்ன அவசரம்?” என்றார் பிரபா.

“ஏன்…? இதுல என்ன தப்பு? வசதி இல்லாதவங்கதான் உடனே உடனே ரெண்டு கல்யாணம் பண்ண முடியாதன்னு தள்ளிப் போடுவாங்க. நமக்கென்ன? நம்ம ஹாஸ்பிடல்ல இப்போ ஒரு கார்டியாலஜிஸ்ட் இருந்தா நல்லதுதானே” எனக் கேட்டார் சுஜாதா.

“நீ நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறியா? இல்லை உன் ஹாஸ்பிடலுக்கு டாக்டர் ரெக்ரூட் பண்றியா?” என்றார் பிரபா.

“இப்படி வில்லங்கமா பேசுறத முதல்ல நிறுத்துங்க. உங்ககிட்ட முதல்ல சொன்னது தப்பு” என்ற சுஜாதா, மதுவைப் பார்த்து “மது கௌசிக் ஈஸ் வெரி ஸ்மார்ட். சின்ன வயசிலேயே கார்டியாலஜிஸ்ட்டா இருக்கார். நீ என்ன சொல்ற?” எனக் கேட்டார்.

“இப்போதானே அம்மா நான் எம்பிபிஎஸ் முடிச்சிருக்கேன். அதுக்குள்ள என்ன அவசரம்? அதோட எனக்கு ரெண்டு பேரும் ஒரே ப்ரொஃபெஷனா இருக்க வேண்டாம்மா. நான் சின்ன பொண்ணா இருக்கும் போதே நீங்க ரெண்டு பேரும் பாட்டிகிட்ட என்னை விட்டுட்டு போயிடுவீங்க. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா? உங்க ரெண்டு பேர் மாதிரி ரோபோட்டிக் லைஃப் எனக்கு வேண்டாம்” என்றாள் மது.

“ஒரு டாக்டர் மாதிரி பேசு மது” என சுஜாதா கண்டிப்புடன் கூற,

“ஏன் டாக்டர்னா ஃபீலிங்ஸ் இருக்கக்கூடாதா? எனக்கு டாக்டர் பையன் வேண்டாம்” என்றாள் மது.

“இப்படி டக்குன்னு முடிவு எடுக்காத. கௌசிக் ரொம்ப நல்ல பையன். நீ பேசிப் பழகுனன்னா கண்டிப்பா உனக்கு ரொம்ப பிடிக்கும். தத்து பித்துன்னு உன் அப்பாவோட சேர்ந்து உளராமல் நான் சொல்றதை கேளு” என்றவர் தன் கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு, “எனக்கு டைம் ஆகுது. நான் கிளம்புறேன்” எனக்கூறி கிளம்பிவிட்டார்.

பிரபாகரன் பாவமாக தன் மகளைப் பார்க்க, சோகமாக மதுவும் தன் அப்பாவைப் பார்த்தாள்.