கண் முன்னால் நிற்கும் உருவத்தை திறந்த வாய் மூடாமல் பார்த்த சித்துவிறகு, மூளையில் டொய்ங்கென ஒரு அலார மணி அடித்தது.
     அவன் மூளையின் ஓரத்தில் இருந்த ஒரு சிறிய நினைவை அவன் தூசு தட்ட, அப்போதுதான் அந்த புகைப்படத்தை அவர்கள் இருந்த பெரிய வீட்டில் எங்கோ ஓர் சந்தில் போட்டோவோடு ஒரு போட்டோவாக இந்த கிழவியின் போட்டோவும் இருந்தது மண்டைக்குள் ஃபிளாஷ் ஆகியது.
     “யோவ் நைனா இந்த பல்லு போனா கெழவி யாருயா. உன் அந்த பெரிய வீட்ல இந்த கெழவியோட போட்டவ பார்த்தா மாதிரியே இருக்கு. நீ என்னவோ ரொம்ப நாள் பழகினாப்ல நீயான்னு பட டைட்டில் எல்லாம் சொல்லிட்டு இருக்க. இங்க என்னதான்யா நடக்குது”
     ‘எவன் ஊட்டு சண்டைல எவன்டா சிக்கி செதையறது. பிசினஸ் பண்ண காசுக்கு ஆசைப்பட்டு இங்க வந்து இப்படி எசக்கு பிசக்கா மாட்டிக்கிட்டமே’ என புலம்பியது சித்துவின் மனம். பாவம் அவனும் அந்த வீட்டில் ஒரு ஆள் என்பதை வசதியாய் மறந்துபோய் விட்டான் போலும்.
     “டேய் மவனே! அந்த அந்த கெழவி என்ற அப்பன பெத்தவ. என்ற அப்பத்தாடா”
    முகத்தில் பயத்தை வழியவிட்டு அரவிந்த் சொல்வதை கேட்டு, ‘இந்த கெழவிக்கு எதுவோ பெரிய எஸ்டிடி இருக்கும் போலையே நைனாவே தெனறுறாரு. என்னவா இருக்கும்’ என சித்துவின் மனதுக்குள் பெரிய கேள்வி ஒன்று கிளம்பியது.
     இதற்கு இடையில் இந்த கண்ணாத்தா பேய் பொம்மையிலிருந்து கிளம்பியதை பார்த்ததில், ஏற்கனவே பயத்தில் பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருந்த காலமேகம் ‘இதுக்கு மேல முடியாது ஆத்தா!’ என சொல்வதை போல் பொத்தென மயங்கி விழுந்தார்.
     “டேய் மச்சான் உன்ற அப்பா மயக்கம் போட்டுட்டாருடா”
     அவர் விழுந்ததை கண்டு சங்கருதான் அலறினான். ஊரிலே பெரிய மனிதராய் வலம்வந்திருந்த காலமேகம் இவ்வளவு பயந்த சுபாவம் கொண்டவர் என்பதே இப்போதுதான் அங்கிருந்தவர்களுக்கு புரிய
     “ஐய்யையே! உன்ற தகப்பரு நமத்துபோன புசுவானம் போலடே. இந்தாளுக்கா இத்தினி நாளு நாம பயந்து கெடந்தோம்”
     காலமேகம்தான் மயங்கிவிட்டாரே என சங்கர் தன் இஷ்டத்துக்கு அவரை கலாய்த்து தள்ள, மாதவன் வெளியே சொல்லவில்லை என்றாலும் அவன் மனதுக்குள்ளும் ‘அப்ப நம்ம அப்பரு சரியான டம்மி பாவாவா’ என்ற எண்ணமே.
     “ஐயோ என்னங்க! உங்களுக்கு என்ன ஆச்சு. என் சாமி இப்புடி மயங்கிபுட்டீகளே. நீங்க இல்லாம நான் இந்த உலகத்துல இருந்த என்ன பண்ண போறேன்”
     காலமேகத்திடம் காற்று வேகத்தில் ஓடிவந்த அலமேலு வேறு ஒருபுறம் கதறி பெர்பாமன்சை போட, “இந்த அம்மா வேற நேரம் காலம் தெரியாம ஒப்பாறி வைக்குது. அந்தாளு மயங்கிதானே கெடக்காறு” கடுப்பில் பெருமூச்செறிந்த மாதவன் முணுமுணுத்து வைத்தான்.
     “ஹாஹா…. ஏ விசாலம் ஒரு காபி கொண்டாடி”
     இந்த கலவரங்களுக்கிடைய அந்த இடத்தின் ஓரத்தில் இருந்து ஒரு கரகர குரல் கேட்க ‘இப்ப யாருயா அது’ என மொத்த கூட்டமும் திரும்பி பார்க்க, கெழவி பேயிடம் தர்மடி வாங்கி கிழிந்த பார்சலாய் கிடந்திருந்த கேசவன் அவர் வீட்டில் தூங்கி எழுந்ததைப்போல் காபி கேட்டுக்கொண்டே மயக்கதிலிருந்த எழுந்திருந்தார்.
     “யாருடா இது நான்சிங்ல பேசுறது” சித்தார்த் கடுப்பில் மீண்டும் கத்தி வைக்க, அனைத்து கலவரங்களையும் பார்த்து கோபத்தின் உச்சிக்கே சென்ற கண்ணாத்தா பேய்
     “எலேய் நிறுந்துங்கடா. எல்லா பயலும் என்னவே நெனச்சிக்கிட்டு இருக்கீய. இது பழங்கால கெழவி பேயி இதால என்ன பண்ணிபுட முடியும் அப்புடினுதானே. இப்ப காட்டுறேன்டா நான் யாருன்னு”
     கண்ணாத்தா பேய் எபெக்ட் கொடுத்து கத்தியிதில் ஒருநிமிடம் அனைவரும் கப்சிப் ஆகிவிட, ஏற்கனவே தன்னிடம் அடிவாங்கி பிஞ்ச நாராய் கிடந்த மற்றும் அங்கு இருப்பதிலே டம்மி பீசான கேசவனை செலக்ட் செய்த பொம்மை காற்றில் தன் கையை நீட்டி மேலே தூக்கியது. அப்படியே திரும்பி பார்த்தால் கேசவன் அந்தரத்தில் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்.
     “இனிமே யாராவது பேசுவீக, பேசுனா இந்த நெளம தான்டி” என அக்மார்க் வில்லியாக பேய் மிரட்ட, கேசவனோ இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பிடித்தால் நிச்சயம் பரலோகத்தில்தான் பப்பரப்பான்னு கிடப்பார் என்ற நிலையில் காற்றில் கையை காலை நீட்டி அந்த பேயுடன் போராடிக்கொண்டிருந்தார்.
     நிலைமை தலைக்கு மேல் போனதை புரிந்து கொண்ட வீரசுந்தரி, இனி நம்மால் எதுவும் செய்ய முடியாது அந்த கெழவி சொல்வதை செய்தால்தான் முழுசா தப்பிக்க முடியும் என புரிந்துக் கொண்டாள்.
     “பாட்டி பாட்டி நீங்க அவரை விடுங்க. பாவம் செந்துற போறாரு. நீங்க என்ன சொன்னாலும் நாங்க செய்யறோம். என்ன செய்யுறோம் தானே சித்து”
     சித்துவையும் தன் துணைக்கு இழுத்து வீரா கேட்டு வைக்க, நடந்ததை பார்த்து அதிர்ச்சியில் நின்றிருந்த சித்து வீரா என்ன கேட்கிறாள் என்றுகூட புரியாது மண்டையை எல்லா பக்கமும் ஆட்டி வைத்தான்.
     ‘அப்படி வாங்கடா செல்லங்களா. கொஞ்ச மெரட்டுனாதேன் என் வழிக்கு வருவீகன்னு தெரிஞ்சிருந்தா இவ்ளோ நேரம் உங்கட்ட என் ஜீவனே விட்டு கத்தியிருக்க மாட்டேனாடா’ மனதிற்குள் எண்ணிய கண்ணாத்தா வெளியே முகத்தை கர்வத்தோடு வைத்தபடி கேசவனை விட்டது.
     கேசவனோ உசுரு தப்பிச்சா போதுமடா சாமி என சுவரோடு சுவராக பல்லியைபோல் பதுங்கி விட்டார். எல்லோரும் தன்னை பயத்தோடு பார்ப்பதை கண்டு பெருமூச்செறிந்த பேய் தான் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தது.
     “செல்லங்களா! யாரும் என்னைய பாத்து பயப்படாதீய. நான் உங்களை எல்லா ஒன்னு பண்ண மாட்டேன். நான் இப்புடி பண்ணவும் ஒரு பெரிய காரணம் இருக்கு, அது என்னான்னு நான் சொன்னா நீங்களே நான் சொல்றது செஞ்சுட்டு போவீக”
     கண்ணாத்தா பெரிய பில்டப்போடு ஆரம்பிக்க “அப்படி என்ன பொல்லாத காரணம், இப்படி சொந்த குடும்பத்தையே கடத்தி கொண்டாந்து ஒரு குகைல போடுற அளவுக்கு” என இடையில் நாராசமாய் எகிறினான் சித்தார்த்.
     என்னதான் இருந்தாலும் அரவிந்தின் பிளெட் இல்லையா கொஞ்சம் எகிறதானே செய்யும். சித்து எகிறிக் கொண்டு வந்ததில் அவனை பார்த்து முறைத்த கண்ணாத்தா பேய்
     “எலேய் அரவிந்து மவனே! உனக்கு தான் நான் மொதல்ல சொல்லுதேன். நான் இப்ப பேச ஆரம்பிச்சு முடிக்கிற வரை உன் வாயி கழுதைய மூடிக்கிட்டு நிக்கிற. இல்ல உனக்கு பதிலா உன் கூட இருக்கருவல எதாவது பண்ணி உட்டுருவேன் பாத்துக்க” சித்துவை அடக்கும்வழி தெரியாது முன்னதாகவே ஒரு வார்னிங்கை விட்டது.
     “ஏன் சித்து கொஞ்ச நேரம் பேசாமதான் இருக்களேன், அந்த பாட்டி என்னதான் சொல்ல போறாங்கனு கேப்போம்”
     வீரா சற்று கடினமாக கடிந்து கொண்ட பிறகே, வாசய்க்குள்ளே எதையோ முணுமுணுத்தவாறு அமைதியானான் சித்தார்த். எல்லா தொல்லையும் முடிந்த நிம்மதியில் கண்ணாத்தா தன் ஃபிளாஷ் பேக்கை எடுத்துவிட தொடங்கியது.
     “சுமார் ஒரு நூறு வருஷம் இருக்கும், என் ஊரு இந்தா இருக்கானே கேசவன் இவன் ஊருதேன். எலேய் அரவிந்தா உன்ற தாத்தா என்னைய அவ்ளோ சீரும் செறப்புமா கல்யாணம் கட்டி இந்த ஊருக்கு கூட்டி வந்தாவ. அப்பவும் இந்த ஊருல பெரிய வூடு நம்ம வூடுதேன். சும்மா ஜம்முன்னு மாஸா இருக்கும்”
     அந்த நாள் நினைவுக்கு சென்று கெழவி ரீவைண்ட் செய்ய, அந்த கெழவி பேசும் ஒவ்வொரு டயலாக்குக்கும் கவுண்டர் சித்து மட்டுமின்றி அரவிந்தின் வாய் நுனி வரை வந்துவிட்டது. ஆனால் எங்கே இவர்கள் இடையில் பேசி பேய் மற்றவர்களை ஒரு காட்டு காட்டி விடுமோ என ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு நின்றிருந்தனர். பழையதை நினைவு கூர்ந்ததில் அன்றைய காலத்துக்கே கண்ணாத்தா பேய் சென்றுவிட்டது.
     அப்போது எல்லாம் வீதியில் கண்ணாத்தா தன் கணவரோடு போகும்போது, ஊரே இவர்களை தான் வாயை பிளந்துக் கொண்டு பார்க்கும். இவர்கள் ஜோடி பொருத்தத்தைதான் ஊர் வாயை பிளந்து பார்த்தது என எண்ணினால் அதுதான் தவறு.
     கண்ணாத்தா அந்த காலத்திலையே மார்டன் மங்கை. ஒருமுறை தங்கள் ஊரை சுற்றி பார்க்க வந்த வெள்ளைக்கார பெண்மணியிடம் அது இதுவென பேசி அவள் வைத்திருந்த மேக்கப் செட்டை ஆட்டைப் போட்டுவிட்டது.
     அடிக்கும் கலரில் கண்ணை பறிக்கும் அடர் நிற உடைகள், இதில் அறைகுறை மேக்கப் அறிவை வைத்து இருக்கும் பவுடரை எல்லாம் மூஞ்சியில் அப்பிக் கொண்டு திரிவதில் கண்ணாத்தாவை அடித்துக் கொள்ள முடியாது.
     இதில் ஹைலைட் என்னவென்றால் இந்த அலங்கோலத்தை பார்த்தே இந்த கண்ணாத்தாவிடம் குப்புர விழுந்திருந்தார் அரவிந்தின் தாத்தா. இந்த கிறுக்கு புத்தியே சற்றும் மாறாமல் அரவிந்தின் ஜீனுக்குள் அப்படியே நுழைந்திருக்கிறதென பாவம் அவருக்கே தெரியவில்லை.
     இப்படி ஏகபோகமாய் கண்ணாத்தாவின் வாழ்வு போய்க் கொண்டிருக்கும் போதுதான் கண்ணாத்தா கருவுற்றிருந்தாள். பத்தே மாதத்தில் அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்க, ராஜமரியாதைதான் கண்ணாத்தாவுக்கு.
     நாட்கள் இப்படி போய்க் கொண்டிருக்கும் போதுதான், ஒரு நாள் கண்ணாத்தாவையும் அவளின் கணவனையும் அவர் தந்தை ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டுமென அமர வைத்திருந்தார்.
     ‘என்னா விஷயமா இருக்கும். மாமா எதுக்கு இப்புடி எதையோ யோசிட்டு உக்காந்துக்காவ. வயசாகி போயிட்டுன்னு சொத்தப்பூரா நமக்கே தரபோறதா பேசதேன் வரசொல்லிருப்பாவளோ, இருந்தாலும் இருக்கும். அவருட்ட இருக்க பொட்டி வேற பெருசா இருக்குதே.
     அப்புடி மட்டும் எல்லா கெடச்சா இன்னும் பத்து செட்டாவது அந்த வெள்ளக்கார அம்முணி தந்த பவுடர் டப்பாவ வாங்கிப்புடனும், இருக்கறதும் வேற முடிய போவுது. அதுபோவ அந்த சீலக்காரன வரச்சொல்லி புதுப்புது நெறத்துல இன்னும் ஒரு ஐம்பது சீலை துணிமணியவாச்சு வாங்கி வச்சிக்கிடலாம். ஆத்தி இனி இந்த எல்லா சொத்துக்கும நாமதேன் ராணியா’
     மனதிற்குள் ஒரு பெரிய படத்தை ஓட்டி கண்ணாத்தா, ‘காசு பணம் துட்டு’ என உள்ளே ஒரு குத்தாட்டமும் போட்டு விட்டது கெழவி‌ வரப்போகும் டுவிஸ்டை அறியாது. தன் மாமனார் என்ன சொல்ல போகிறாரோ என அவர் வாயையும் அவர் முன்னால் இருந்த பெட்டியையும் ஆர்வமாக பார்த்து நின்ற நேரம்
     அவர் தன் முன்னாலிருந்த பெட்டியில் திறக்க அதனுள் இன்னொரு பெட்டி இருந்தது. அதையும் திறக்க இன்னொரு பெட்டி. இப்படி மூன்று பெட்டிகளை அவர் வரிசையாய் திறக்க, குழம்பிப்போய் பார்த்திருந்தனர் கண்ணாத்தாவும் அவள் கணவனும்.
     கடைசியாக அந்த பெட்டியிலிருந்து நாலாக மடிக்கப்பட்டிருந்த ஒரு பேப்பரை எடுத்து கொடுத்தார் அந்த மனிதர்.
     ‘என்னடா இது பத்திரம் காசு பணம்னு கத்தையா அள்ளி குடுப்பாருன்னுட்டு பாத்தா இந்த காதிதத்த எடுத்து நீட்டுறாரு. என்னடா இது என் கனவு எல்லாம் கனவாவே போயிருமோ’
     கண்ணாத்தாவின் கண்ணுக்கு தன்னை நோக்கி வந்த பவுடர் டப்பாவும் துணிகளும் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளி போவதைப் போல் தோன்ற அழும் நிலைக்கே சென்றுவிட்டாள்.
     அடுத்ததாக அவள் மாமனார் வேறு ஒரு பெரிய ஆட்டம் பாமை தூக்கி போட்டார். அதை கேட்டு கண்ணாத்தாவின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டது. அப்படி கண்ணாத்தாவையே கதறவிட்ட அந்த பேப்பரில் இருப்பது என்னவோ!
-ரகசியம் தொடரும்