சொறசொறப்பான பாறை சுவர்கள், அதில் ஆங்காங்கே சிறு ஓட்டையில் தீப்பந்தம் சொறிகியிருக்க, அந்த பந்தத்தின் வழியே நல்ல வெளிச்சமாய் இருந்தது அந்த இடம்.
அந்த பந்தம் இல்லையென்றால் நல்ல கும்மிருட்டாய் இருக்கும் என பார்த்தாலே கண்டுக் கொள்ளலாம். இப்போது சற்று சுற்றி பார்த்தால் தெரிந்தது அது ஒரு குகையென.
இந்த காலத்தில் இப்படி ஒரு இடமா என நாம் ஆச்சரியப்படும் போதே சில நபர்கள் அங்கு நம் சித்து அண்ட் கோவை கட்டி வைத்துவிட்டு சென்றிருக்க,
யாரும் இன்னும் மயக்கத்திலிருந்து எழவில்லை. அதேநேரம் இவர்கள் எதற்கு இங்கு வரவைக்கப்பட்டனர் என தெரியவில்லையே, பார்ப்போம் என்னதான் நடக்கபோகிறதென.
“ஐயோ! அம்மாஅஅ.. என்ன இது உடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி இப்புடி வலிக்குது. ஆஆஆ.. தலை என்ன வின் வின்னுனு தெரிக்குது”
மெல்லிய குரலில் முனகியபடி உடலை நெளித்து வளைத்து மீதமிருந்த மயக்கத்தையும் விரட்டியபடி எழுந்தான் அரவிந்தின் தவப்புதல்வன் சித்து.
அவன் தலையில் நச்சுனென்று அடித்ததால் தான் இப்படி தலை உடல் எல்லாம் வலிக்கிறது என அப்போதுகூட உணரவில்லை அந்த அரைவேக்காடு. மயக்கம் கலைந்த சற்று நேரம் கழித்தே அவனுடைய சுற்றுப்புறத்தை நன்கு கவனித்தான்.
“என்னடா இது நாம பெட்ரூம்ல தானே நைட் படுத்து தூங்குனோம். இது என்ன இடம்னே தெரில, எதோ குகை மாதிரி இருக்கு. இங்க எப்புடி வந்தோம்”
சத்தமாக புலம்பியபடி தன் கையை தலைக்கு கொண்டுப் போக பார்க்க, கையை அசைக்க முடியவில்லை. அப்போதுதான் புரிந்தது அவனை யாரோ கடத்திவந்து கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள் என.
அதிர்ந்து போனவன், மீண்டும் தன்னை சுற்றி பார்க்க, அவன் மட்டுமில்லாது வீரா, கதிர், அவன் அத்தை அலமேலு, மாமா கார்மேகம் என அனைவரும் இருக்க
“குடும்பத்தோட கடத்திருக்கானுங்க, யாரு பாத்த வேலைடா இது. ஏய் யாராவது இருக்கீங்களா. யாருடா எங்களை கடத்திட்டு வந்து கட்டிப்போட்டு வச்சிருக்கறது. நான் தூங்கிட்டு இருந்த நேரத்தை யூஸ் பன்னி எல்லாரையும் தூக்கிட்டு வந்துட்டீங்க, அதான் என்ன பத்தி உங்களுக்கு ஒன்னும் தெரியலை. இப்ப கண்ணு முழிச்சிட்டேன் தைரியம் இருந்தா வெளிய வாங்கடா.
எவ்ளோ நேரம் இந்த சிங்கத்தை சிறு கூண்டுல அடச்சு வைப்பீங்க. சிங்கம் கூண்ட உடைச்சிட்டு வெளிய வந்தே தீரும்டா. என் கட்ட மட்டும் இப்ப அவுத்து விடல இந்த இடத்துல ஒரு பிரளையமே வெடிக்கும்டா”
தன்னை சுற்றி யாரும் இல்லை என்ற தைரியத்தில் ஆஉவென தன் இஷ்டம் போல் சித்து கத்தி கொண்டிருக்க
“தா ச்சை வாய மூடுடா என் வென்று. தொடப்பகட்டைக்கு பேரு பட்டுக்குஞ்சம்னு சும்மாவா சொன்னாங்க. சிங்கமாம்ல சிங்கம் இதை சிங்கம் மட்டும் கேட்டா உன்னை செருப்பு பிய்ய பிய்ய அடிக்கும்டா” என பழக்கப்பட்ட கரகர குரல் ஒன்று கேட்க சைடு வாக்கில் இருந்து வந்தது.
குரல் வந்த திசை பக்கம் தன் தலையை திருப்பி பார்த்தான் நம் நாயகன். அங்கே ஒரு அசிங்கமான கோலத்தின் இல்லை இல்லை அலங்கோலத்தின் நடுவில் நம் நாயகனை பெத்த ரத்தினம் காலை ஆட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார்.
“நைனா நீயா…!”
அதிர்ச்சியில் ஆந்தைப்போல் கண்கள் விரிய, வாயை பிளந்தான் மகன். சித்துவின் வாய் பேச்சை நிறுத்தியிருக்க மூளையோ அதற்கு மாறாய் அதிவேகமாய் வேலை செய்தது. முடிவில் அவன் கண்கள் இப்போது தன் தந்தையை சந்தேகக் கண்ணோடு பார்த்து வைக்க, வாயோ
“யோவ் நைனா என்னயா இது எல்லாம் உன் வேலைதானா. நான் அப்பவே நெனச்சேன்யா, இந்த மாதிரி கோக்குமாக்கான வேலை எல்லாம் உன் ஒருத்தனாலதான் பாக்க முடியும்னு. இப்ப எதுக்குயா எல்லாரையும் இங்க இழுத்துட்டு வந்து கட்டிப்போட்டு வச்சிருக்க”
கோவத்தில் சித்து காட்டுகத்து கத்த, அரவிந்தோ கூலாகவே இருந்தார். சித்து பேசி முடிக்கட்டும் என நினைத்தாரோ என்னவோ, மகன் பேசி முடித்தவுடன் தந்தை ஆரம்பித்தார்.
“என்ன பேசி முடிச்சிட்டியா மை சன். இப்ப நான் சொல்றதை கேக்குறியா. முதல்ல நீ சொன்ன பாத்தியா அது எதுவும் உண்மையில்லை. என் குடும்பத்தை நானே கடத்த நான் என்ன லூசாடா.
அதுபோக இந்தா கீழ இருக்கு பாத்தியா இந்த கோலத்துல இருந்து எந்திரிக்க முடியாம நானே காலைல இருந்து கெடக்குறேன். இதுல நான்தான் உங்கள எல்லாம் கடத்த போறனா வயித்தெரிச்சல கெளப்பாதடா”
அரவிந்த் தன் வாயிற்குள் எதையோ அரைத்துக் கொண்டே கடுப்பில் பேச, ‘இந்தாளுக்கு எங்க போனாலும் திங்க தீனி மட்டும் எப்புடி கிடைக்குது’ என அவர் பேசியதை விடுத்து அவர் கையில் இருக்கும் தீனியயை அவர் மகன் குறி வைத்தான்.
“நைனா எனக்கு ஒரு டவுட்டு. நீ இங்க வந்து மாட்டிக்கிட்டேன்னு சொல்ற. ஆனா எப்புடியா நீ எங்க போனாலும் திங்கறதுக்கு மட்டும் கரெக்டா உன் கைக்கு கெடைக்குது. என்ன இவனுக்கு எதுவும் தெரியாது நம்ம கலர் கலரா என்ன ரீல் சுத்துனாலும் நம்புவான்னு அடிச்சு விடுறியா” நியாயமாய் தான் கேட்டு வைத்தான் மகனும்.
“ப்ச் இவன் ஒருத்தன். என்கூட சோத்துக்கு சண்டைக்கு வரதே இவனுக்கு பொலப்பா போச்சு” சத்தமாய் புலம்பி சலித்துக் கொண்ட அரவிந்த்
“டேய் நா பெத்த கூறுகெட்ட குக்கரு! என்ன எதோ ஒரு சக்தி இங்க அடைச்சு வச்சிருக்குடா. நானும் காலைல இருந்து ஏதேதோ செஞ்சு பாக்குறேன் இந்த எடத்தை விட்டு வெளியே வரவே முடில. அதான் இதுக்குள்ளையே உருண்டுட்டு இருக்கேன். ஆனா ஒன்னுடா அது நல்ல சக்தினு நெனைக்கிறேன். ஏன்னா நான் திங்க கேக்குறதை எல்லாம் அது டான் டான்னு கொண்டு வந்து குடுக்குதுடா. சோ நீ கவலைப்படாத மவனே நமக்கு டைம்க்கு கேக்குற டிஸ் எல்லாம் வந்துரும். சாப்டுட்டு ஜாலியா இருக்கலாம்”
தின்பதற்கு நல்ல சோறு தீனி என வகைவகையாய் போட்டதால் தன்னை அடைத்து வைத்திருந்த பொம்மைக்கு நல்ல சக்தி என அரவிந்த் சர்ட்டிபிகேட் வாசிக்க,
“யோவ் யோவ் தகப்பா உனக்கு அறிவு இருக்கா இல்லையாயா. உன்ன காலைல இருந்து இங்க அங்க அசைய விடாம மந்திரம் போட்டு வச்சிருக்காங்க. திங்க சோறு போடவும் தப்பிக்க கூட பாக்காம நல்லா வயிறு முட்ட தின்னுட்டு விருந்து கொண்டாடிட்டு இருந்துருக்க.
நானே நம்ம குடும்பத்தை பார்சல் கட்டி தூக்கிட்டானுங்களேன்னு பதறி போய் இருந்தா, நீ என்னமோ என்னையும் மாமியார் வீட்டுக்கு வந்த மாதிரி விருந்து கொண்டாட சொல்ற. உன் மனசுல என்னதான்யா நினைச்சிட்டு இருக்க”
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சித்து வெறியாகிவிட்டான் அவன் தந்தையின் பேச்சில். பின்னே இருக்காதா அரவிந்திற்கு வேணால் இது அவருக்கு நன்கு தெரிந்த ஊராக இருக்கலாம், ஆனால் நம் சிட்டியில் வளர்ந்த சித்துவிற்கோ வந்ததிலிருந்து நடந்ததை பார்த்ததில் இது படு பயங்கர ஊராகதான் தெரிந்தது.
இதில் குடும்பத்துடன் அதுவும் அரவிந்தின் ஆவியையே ஒருவர் கேட்ச் பிடித்து அடைந்திருக்கிறார் எனில் நமது நிலைமை கவலைக்கிடம் என நினைத்து விட்டான். இவர்களை எல்லாம் ஆட்டி வைப்பது மனிதன் அல்ல ஒரு பொம்மை என தெரிந்தால், அதுவும் இவர்களை போல் ஒரு மொக்கை பீஸ்தான் என தெரியும் போது சித்துவின் நிலை என்ன ஆகுமோ.
“சரி அதைவிட்டுட்டு, உன்னை என்னை நம்ம எல்லாரையும் இங்க கட்டி போட்டு வச்சது யாரு அதையாவது சொல்லித்தொல”
“ஐம் வெரி சாரி மை சன். நானும் ரொம்ப நேரமா அதையும் டிரை பண்ணி பாத்துட்டேன், என்னை கடத்துனது யாருனே கண்டுபிடிக்க முடியல. என் சக்திய மீறின பெரிய சக்தியா இருக்குடா மவனே”
அரவிந்த் பாவமாய் கையை விரித்துவிட, ‘இதுக்குமேல இந்த ஆள நம்புனா கதைக்கு ஆவாது கூண்டோட பரலோகம் போக வேண்டியதுதா. நாமளே எதாவது முயற்சி பண்ணுவோம்’ என நினைத்த சித்து தன் கையில் கட்டப்பட்டிருந்த கயிரை அவுக்க பார்க்க
ம்ஹூம் அதுவோ ஒரு இஞ்ச் கூட அசையவில்லை. ‘என்னடா பரமேந்திரா இது நமக்கு வந்த சோதனை’ என குழப்பத்தில் சித்து சோர்ந்து போய் அமரும் நேரம் வீரசுந்தரி மயக்கத்திலிருந்து எழுந்து விட்டாள்.
சித்துவை போல் அவளும் தன்னை சுற்றி கவனித்துவிட்டு, அவர்கள் கடத்தப்பட்டதை உணர்ந்தவள்
“சித்து இது என்ன இடம், எப்படி நாம இங்க வந்தோம்?”
படங்களில் எப்போதும் கேட்படும் டயலாக்கை வரிமாறாமல் வீராவும் அப்படியே கேட்டு வைத்தாள். சித்துவும் அவன் எழுந்தது முதல் இப்போதுவரை அவன் கண்டவற்றை அவளிடம் கூற, வீரா அரவிந்தை அப்போதுதான் கவனித்தாள்.
வீரா சித்து கேட்ட அதே கேள்வியை கொஞ்சம் மாற்றி கேட்டு வைக்க, தற்போதும் அப்பாவி போல் கையை விரித்தார் அரவிந்த்.
எங்கே இருக்கோம் எப்படி வெளியே போவது என எதுவும் தெரியாமல் சித்து வீரா இருவரும் முழிக்க, அரவிந்த் அதை பற்றி கவலைப்பட்டதுப் போல் எல்லாம் தெரியவில்லை. அவர் எப்போதும் போல் ஹாயாகவே அமர்ந்திருந்தார்.
அதேநேரம் தன் கையில் கட்டியிருந்த கயிற்றை அசைத்து பார்த்த வீரா, ஏதேதோ செய்து இரண்டு நிமிடத்திற்குள் அவிழ்த்துவிட்டாள்.
பெண் தானே என சற்று அசால்ட்டாக அந்த மாதவனின் அப்பரசென்டீஸ் வீராவை குறைத்து மதிப்பிட்டு கயிற்றை ஏனோதானோவென கட்டி சென்றிருக்க, அது அவள் கையை இரண்டு அரக்கு அரக்கியதில் பிய்த்துக் கொண்டு வந்துவிட்டது.
“வாவ் வீராம்மா சூப்பர்மா. மயக்கத்திலிருந்து எழுந்திருச்ச உடனே கை கட்டையெல்லாம் கழட்டி போட்டுட்ட. பாருடா என் உதவாக்கரை மவனே, என்ற மருமவட்ட இருந்து இதெல்லாம் கத்துக்கோ”
சித்துவை டம்மி பீசாக்காக்கும் வேளையில் அரவிந்த் கால இடம் பார்க்காது இறங்கிவிட
“யோவ் தகப்பா அந்த கோலத்துல அடைபட்டு கெடக்குறப்பக்கூட உன் வாய் அடங்கமாட்டேங்குதுல. நீ இப்புடியே பேசிட்டு இருந்த உன்ன அடச்சு வச்ச அந்த மந்திரவாதியோ இல்ல வேற எந்த சக்தியோ அதை வச்சே உன்ன ஜென்மத்துக்கும் இந்த இடத்தைவிட்டு நகரவிடாம நானே செஞ்சிருவேன் பாத்துக்க”
சித்து தன் பங்கிற்கு அவனும் ஆரம்பித்துவிட்டான். இத்தனை நாட்களில் இவர்களை அடக்கும் விதம் தெரிந்து வைத்திருந்த வீராவோ
“ரெண்டு பேரும் வாய மூடுங்க. முதல்ல இங்கயிருந்து தப்பிச்சு போவோம். மீதிய எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்” என டைமிங்கில் இருவரையும் ஆஃப் செய்துவைத்தாள்.
சித்துவின் கட்டை அவிழ்த்துவிட்டு கதிரை சென்று அவள் பார்க்க மற்ற இருவரையும் சித்து சென்று பார்த்தான். மயக்கத்திலிருந்து மற்ற மூவரும் எழுந்தபின் இவர்கள் இருவரும் தங்களுக்கு தெரிந்தவற்றை நடந்ததை கூறி அங்கிருந்து அனைவரையும் கிளப்ப முற்பட்டனர்.
இவர்கள் யாரும் அங்கே ஒரு மூலையில் மயக்கத்தில் கிடந்த கேசவனை கவனிக்கவில்லை. எனவே இவர்கள் மட்டும் வெளியே கிளம்ப பார்த்தனர்.
ஆனால் இவர்கள் வந்ததிலிருந்து இப்போதுவரை செய்த அனைத்தையும் அரவிந்தின் கோலத்திற்கு அருகிலேயே இருந்த பொம்மை படம் பார்ப்பதைப்போல் பார்த்து என்ஜாய் செய்ததை யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லைதான்.
பார்க்க குளவிகல் போல் இருந்தாலும், குத்துகல்லை போல் நச்சென ஸ்ராங்காய் பேஸ்மெண்ட் போட்டு அமர்ந்திருருக்கும் நம் பொம்மையை தான்டி எல்லோரும் எப்படி வெளியே போக போகிறார்கள் என பார்க்கலாமே!