கிழக்கே உதிக்கும் சூரியன் தன் செங்கதிர்களால் இந்த பூமித்தாயை நிரப்பி தன் கடமையை செவ்வனே செய்து நிற்க, வத்தலகுண்டின் ஊர் மக்கள் காலை எழுந்து எப்போதும் போல் பரபரப்பாக தங்கள் அன்றாட பணிகளை செவ்வனே செய்ய துவங்கினர்.
அந்த ஊரின் சலசலப்புக்கு சற்றும் சம்பந்தம் இன்றி சித்தார்த்தின் வீடு மட்டும் அமைதியாய் இருந்தது. வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் முதல் நாள் இரவு நடந்ததை எண்ணி கவலையில் இருக்க, நம் வீராவின் மனதோ எப்போதும் போல் சற்று வித்தியாசமாக சிந்தித்தது.
அங்கு நடப்பது ஒன்றும் புரியாதிருந்தாலும், அவர்களை சுற்றி எதுவோ ஒன்று நடக்கிறது. அதுவும் அது தவறாகவே நடக்கிறது என அடித்து கூறியது அவள் மனது.
‘இங்க நடக்குறது எதுவும் சரியில்லையே. நம்மல சுத்தி என்னதான் நடக்குதுன்னும் ஒன்னும் புரியல. நாம தெரியாம இந்த ஊருல வந்து குடும்பத்தோட மாட்டிக்கிட்டமா’
வீராவின் மனது தன் இஷ்டத்துக்கு பயத்தை ஏற்றிவிட, சிந்தனையில் தன் தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டாள். அந்நேரம் என பார்த்து சித்து மெதுவாக பூனை நடைப்போட்டு வந்து அவள் அருகே அமர்ந்தான்.
இன்று கதிர் அவன் அத்தை அலமேலுவுடன் தோப்பிற்கு போனது அவனுக்கு சாதகமாய் போய்விட அப்படியே வீராவின் ரூமுக்குள் தஞ்சம் புகுந்துவிட்டான் அரவிந்தின் அருமை புதல்வன். இப்படி நேரம் பார்த்து அவன் வந்திருக்க, அவன் வந்ததை கூட கவனியாது வீரா இன்னும் யோசனையிலே இருக்க கடுப்பாகிவிட்டான் பையன்.
“நான் வந்ததை கூட கவனிக்காம இருக்கா, வீரா! வீராம்மா! என் செல்லாக்குட்டி” என அவளை பிடித்து உலுக்கியே தன்னை பார்க்க செய்தான் சித்து.
“வீரா என்னடி இது காலையிலே கனவா, என்ன உன் கனவுல கரெக்ட்டா இந்த மாமன் என்டரி தந்தனா. அதான் நான் வந்ததை கூட கவனிக்காம உக்காந்திருக்கியா?”
எப்போதும் போல் விளையாட்டாய் சித்து கேட்டதற்குகூட எந்த பதிலும் கூறாது அவனை ஒருமாதிரி பார்த்து
“சித்து நான் விளைய்டுற மூட்ல இல்ல. பிளீஸ் என்ன வம்புக்கு இழுக்காதீங்க” என ஆரம்பத்திலே எண்ட் கார்டை போட்டுவிட்டாள் அவன் அழகு காதலி.
“என்னடி செல்லம்! என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு தான் உன் தம்பி கதிர் இல்லாம தனியா இருக்கியேன்னு ரொமான்ஸ் பண்ண வந்தா, இப்புடி மூட் ஆஃப் பண்ற”
கட்டிலில் அமர்ந்திருந்த வீராவின் கையில் தன் கையை கோர்த்து அவளை தன்மீது சாய்ந்தபடி முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு பேசிவைத்தான் சித்து.
சித்துவின் சலிப்பான பேச்சுக்கும் அவன் செய்கைக்கும் அவன் முகத்திற்கும் சற்றும் சம்மந்தமே இல்லாது இருக்க வீராவுக்கு அவனின் சிறுபிள்ளை தனத்தில் சிரிப்புதான் வந்தது. இருந்தும் இங்கு நடக்கும் நிகழ்வுகள் அவளின் நினைவிற்கு வர பெருமூச்சே வந்தது அவளுக்கு.
“ப்ச் அதெல்லாம் ஒன்னும் இல்ல சித்து. இது வேற யோசனைங்க”
பேச்சை பாதியில் நிறுத்திய வீரா எதோ யோசித்துவிட்டு “சித்து நாம ஊருக்கு வந்து ஒரு மாசம் ஆகப் போகுதுதானே. எப்பதான் திரும்ப சென்னை போகப்போறோம். அங்க எல்லாம் போட்டது போட்டபடி விட்டுட்டு வந்துட்டோம்ல. அதான் கேக்குறேன் நீங்க எதாவது அதப்பத்தி யோசிச்சீங்களா” என சுத்தி வளைக்காது நேராக விஷயத்திற்கு வந்தாள் வீரா.
இங்கு எதுவோ பெரிதாக நடக்கப் போவதாய் அவள் உள்மனம் கூற ஊரை காலி செய்து கிளம்பிவிடலாம் என்ற முடிவை வீரா எடுத்திட்டாள். அதற்காக சித்துவிடம் வீரா கேட்டு வைக்க
“என்னடி எதுவும் தெரியாத மாதிரியே கேக்குற. நான் பிசுனஸ் தொடங்க ஊருல இருக்க சொத்தை பளட்ஜ் பண்ண உன் மாமனார் விடமாட்டேன்னு அலும்பு பண்றாரு. அதனால தானே இவ்ளோ தூரம் வந்தோம். இப்ப எல்லாம் நடக்கப்போற நேரத்தில போலாமான்னு கேக்குறியே செல்லம் என்ன ஆச்சு உனக்கு”
சித்து லைட்டாக தன் சோக கதையை அவிழ்த்து விட “ப்ச் உங்க கதை எல்லாம் புரியுது சித்து. ஆனா நாம அந்த மலைய விட்டுட்டு வேற லேண்ட சேல் பண்ணிட்டு சட்டுப்புட்டுன்னு இந்த ஊரை காலிப்பண்ணிட்டு கிளம்பிடலாமா.
இல்ல ஊருக்கு போய் அங்க இருக்க லேண்ட் புரோக்கர் வச்சு நாம இந்த லேண்ட சேல் பண்ணலாமா. எனக்கு என்னவோ இங்க நடக்கிறது எதுவும் சரியாவே படலப்பா. நீங்களும் வந்ததுல இருந்து பாக்குறீங்கல வீட்டுக்கு திருடன் வரது ஊரே பொதையல் எடுக்க போறதுன்னு என்னன்னமோ நடக்குது. இதனால நம்ம உயிருக்கு எதுவும் பிரச்சினை வந்துட்டா என்ன பண்றது. எனக்கு உண்மையாவே பயமா இருக்குங்க”
வீரா தன் மனதில் இருந்த பயத்தையும் கூறிவிட்டாள். அவள் சொன்னதை கேட்டு சித்து யோசித்து பார்க்க, அவனுக்கு வீரா சொன்னதில் இருந்த உண்மை புரிய தான் செய்தது.
பெரிய புதையல் இருக்கிறது, அதுவும் இவர்கள் இடத்தில் என இவர்கள் கிளப்பி விட்ட புரளியில் சிக்கி இப்போது முழித்து கொண்டிருப்பதும் நம் சித்து அண்ட் கோ தான்.
“நீ சொல்றதும் சரி தான்டி பணத்துக்காக எவனாச்சும் நம்மல எதாவது பண்ணிட்டா என்ன பண்றது. இவ்ளோ சொத்து இருந்தும் அப்புறம் நம்மால அனுபவிக்க முடியாம போயிருமே. அப்புறம் என் அப்பங்கூட சேர்ந்து நாமளும் கம்பெனி குடுக்குற மாதிரி ஆகிடும். சரி யோசிக்கிறேன்”
இப்படி கூறி சற்று யோசித்த சித்து “வீரா செல்லம் நாம வேணா இப்படி பண்ணலாம்டா. இப்ப முடிஞ்ச அளவு எதாவது பணத்தை தேத்திட்டு ஊரை காலிப்பண்ணிடலாம். சென்னை போய்ட்டு அங்க இருக்க ஆட்கள புடிச்சுகூட கொஞ்ச நிலத்தை மட்டும் வித்துட வேண்டியதுதான். அதை வச்சு நான் என்னோட பிசினஸ ஸ்டார்ட் பண்ணிக்கிறேன்”
கடைசியாக ஒரு முடிவுக்கு வந்த சித்து இன்னும் இரண்டு நாளில் ஊரை விட்டு ஓடிவிடலாம் என்ற முடிவிற்கு இறுதியாக வந்துவிட்டான் அவன் தந்தையிடம்கூட கேட்காமல். குழம்பி போயிருந்த வீராவின் முகம் இப்போதுதான் தெளிவானது.
“இப்பதான்பா என் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் சித்து” என்ற வீரா தானாகவே சித்துவை அணைத்துக் கொண்டாள்.
காதலி கூறுவதை கேட்டால் இப்படி கேட்காமல் எல்லாம் கிடைக்கும் என தற்போது உணர்ந்த சித்து மனதிற்குள் ஒரு குத்தாட்டம் போட்டபடி இதுதான் சாக்கென்று தானும் வீராவை நன்கு அணைத்துக் கொண்டான். இப்படி இவர்கள் இங்கு பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்க, இதையெல்லாம் ஒட்டுக் கேட்டு வைத்த பொம்மைக்கு பகீர் என்றது.
“ஐயையோ என்ன இந்த பைத்தியக்காரன் ஊரை விட்டு போற முடிவுக்கு வந்துட்டான். இதுக்குமேல தாமதிச்சா நாம இவ்ளோ நாள் கஷ்டபட்டது எல்லாம் வீணாப்போயிருமே” புலம்பியது பொம்மை.
“ம்ம்ம்… போறபோக்கு ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல. இதுல நாம வேலைய இன்னும் இழுக்கப்போட்டா அவ்ளோதான் என் ஆயுசு இந்த பூமியாலையே முடிஞ்சு போயிரும். நாளைக்கு நல்ல நெறஞ்ச பவுர்ணமி நாளு. நம்ம வேலைக்கு ஏத்த நாளு. இன்னைக்கு நைட்டே வேலைய ஆரம்பிச்சா நாளைக்கு எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சிடலாம்”
தனக்குள் அவசர அவசரமாக கணக்கை போட்ட பொம்மை ஒரு முடிவை எடுத்தவுடன் மெல்ல தலையை திருப்பி தன் கண்களை கூர்மையாக்கி நோட்டம் விட்டபடி
“இந்த இத்துப்போன பக்கிக ரெண்டு எங்க போச்சுதுங்க. இந்த வெலங்காதவனுங்க வச்சு என்னத்த செய்ய. இருந்தாலும் இவனுங்கள விட்டாலும் நமக்கு இப்ப வேற ஆளு இல்லையே. என்ன பண்ணி தொலைக்க” என மாதவனையும் சங்கரையும் கழுவி ஊற்றியது.
அப்படியே ஊருக்குள் சிவனே என ஒரு மரத்தடியில் தங்கள் தலைவிதியை நொந்த படி அமர்ந்திருந்த அந்த இருவரையும் அலேக்காக தூக்கி ஏரில் பறக்கவிட்டு படாரென வீட்டுற்குள் இழுத்துப்போட்டது பொம்மை தன் வேலையை ஆரம்பிக்க.
இங்கு இப்படி நடக்க, அங்கு கேசவனோ இரவு நடந்த நிகழ்வுகளை முழுதாக அறியாமல் தன் ஆட்களை மீண்டும் போலீஸ் பிடித்து சென்ற கடுப்பில் பீபி ஏறிப்போய் சுற்றிக் கொண்டிருந்தார்.
“யோவ் கணக்கு, அங்க என்னதான்யா ஆச்சு? போற பயலுவ பூரா ஒன்னு செத்து போறானுவ, இல்ல போலீஸ்க்கு போறானுவ. அவனுங்ககிட்ட பேசுனியா? அங்க என்னதான் நடந்து தொலச்சுதான்”
ஆக்ரோசமாக கத்திய கேசவனை பார்த்து தயங்கிய கணக்கு, “ஐயா அது வந்துங்க…” என்று இழுக்க
“இந்தா அந்தான்னு இழுக்காம சட்டுனு சொல்லுயா”
“ஐயா போலீஸு ஸ்டேஷன்ல இருக்க நம்ம ஆளுங்க பேய் அடிச்சிது அது இதுன்னு அந்த ரெண்டு திருடனுங்க சொன்னதையே தானுங்க சொல்லுறாங்க”
கேசவனுக்கு தயங்கியபடி அவரின் கணக்கு பதில் கூறி வைக்க, இன்னும் வெறியானார் கேசவன்.
“ஐயா! நான் ஒன்னு சொல்லுவேன். நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாது” ஒரு முன்னறிவிப்போடு கணக்கு ஆரம்பிக்க அவர் என்ன சொல்லப் போகிறார் என கேசவனும் கவனித்தார்.
“ஐயா அது வந்துங்க அந்த வீடு ஒருமாதிரின்னு ஊரே பேசுது. அதுமட்டும் இல்லாமங்க நம்ம ஆளுகளே இத்தினி பேரு இவ்ளோ சொல்றப்ப எனக்கும் அதுதான் உண்மையா இருக்குமோன்னு தோனுதுங்க. அந்த வீட்டுல பேய் இருக்குமோன்னு எனக்கும் தோனுங்கய்யா”
சற்று பயத்துடனே கணக்கு கூறி நிறுத்த அவரை கொலை வெறியோடு முறைத்து பார்த்த கேசவன்
“யோவ் கணக்கு வாய மூடுயா. அவனுங்க தான் ஏதோ புத்திக் கெட்டுப் போய் பேசுறானுங்கனா நீயும் அதையே பேசாதையா” கணக்கிடம் கத்தி விட்டவர்
‘இதுக்குமேல இவனுகல நம்புனா ஒன்னு நான் தெருவுக்கு போவனும், இல்ல போலீஸ் ஸ்டேஷனுக்கு போவனும். நாமளே நேரா கோதாவுல எறங்க வேண்டியதுதான். இன்னைக்கு ராவுக்கு நானே அந்த வீட்டுக்குள்ள போறேன். என்னதான் நடக்குதுன்னு பாத்துப்புடுவோம்’
இதற்கு மேல் அமைதியாய் இருந்தால் அவர் நினைத்த காரியம் கெட்டுவிடும் என்று உணர்ந்து, தானே ஸ்ரைட்டாக அந்த வீட்டிற்குள் போக முடிவெடுத்து விட்டார், அங்கு ஒளிந்திருக்கும் மர்மத்தை அறியாது.
“கணக்கு இதுக்கு மேல அந்த ஒன்னுத்துக்கும் ஒதவாத பயலுவ நம்பி புரயோஜனம் இல்ல. நீ ஒரு பத்து ஆளுங்கல மட்டும் தயார் பண்ணி வை. இன்னைக்கு ராத்திரி நானே அந்த வீட்டுக்குள்ள போறேன். அந்த பத்து ஆளுங்கல கூட்டிட்டு நீயும் வந்துரு அங்க என்னதான் இருக்குன்னு ஒரு கை பாத்துப்புடலாம்”
கேசவன் வீரமாய் வசனம் பேசி வைத்து முன்னே செல்ல ‘இந்தாலு வேற என்னையும் வர சொல்லுறாரே. அங்க போனவன் எவனும் முழுசா வந்ததில்லையே. ஐயோ கருப்பா இந்தாலுட்ட இருந்து மொதல்ல என்ன காப்பாததுப்பா’ என கணக்கு தன் மைண்ட் வாய்சில் அலறியபடி பின்னால் சென்றார்.
– ரகசியம் தொடரும்