சூரிய தேவனவன் தன் காதலியாம் ஆழ்கடலுடன் சங்கமம் ஆகி சில மணி நேரம் கடந்திருக்க, தென்றல் காற்று சில்லென சற்று வேகத்துடனே அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது.
அதை வைத்து அப்போது இரவு நேரம் மணி ஒரு பத்து இருக்கும் என கூறலாம். நன்கு இருட்டியிருந்த அந்தகார வேளையில் அந்த பரந்து விரிந்த தென்னந்தோப்பின் நடுவே ஒரு கூட்டம் கூடியிருந்தது.
அதிலும் அந்த பெரிய தோப்பின் மத்தியில் ஓட்டு வீடு ஒன்று அம்சமாய் நடுவே வீற்றிக்க, சுற்றிலும் மரங்கள் என அந்த இடமே அச்சத்தை தருவதாய் இருந்தது. அந்த அச்சத்திற்கு மேலும் வலு சேர்ப்பதை போல் அங்கு இரண்டு தடியர்கள் வேறு நின்றிருந்தனர்.
அங்கே சூழ்ந்திருந்த அந்த ஆட்களுக்கும் அமானுஷ்யத்திற்கும் சற்றும் சம்மந்தமே இன்றி இரண்டு சிறிய உருவங்கள் நடுங்கியபடி மண்டியிட்டு இருந்தன. அது வேறு யாரும் இல்லை நம் அரவிந்த் வீட்டிற்கு திருட வந்த அதே இரண்டு திருடர்கள் தான்.
போலீஸுடன் கோர்ட்டுக்கு போகும் வழியில் லாவகமாக எஸ்கேப் ஆகி வெளியே வந்தவர்கள், அவர்களுக்கு அந்த வேலையை தந்திருந்த பெரிய மனிதரிடம் மாட்டியதில் முழித்தபடி நிற்கின்றனர்.
“ஐயா நீங்க எங்களை இன்னும் கதற கதற அடிச்சாலும் நடந்ததை எங்களால மாத்தி சொல்ல முடியாதுங்க. அந்த வீட்டுல எதோ பேயோ பிசாசோ இருக்குதுங்க. அதை மட்டும் எங்களால சொல்ல முடியுங்க”
அழுதபடி அதில் ஒருவன் புலம்ப, தன் நெற்றியை கோபமாக தோய்தபடி நின்றார் அந்த பெரிய மனிதர். இவரை பற்றி கூறவேண்டும் என்றால் சொல்லிக் கொள்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.
பெயர் கேசவன், பக்கத்து ஊரில் பஞ்சாயத்து போர்டு பிரசிடென்டாக உள்ளார். நம் அரவிந்தின் பால்யவயது நண்பன். ஒரே பள்ளியில் அரவிந்துடன் ஒன்றாக படித்தவர்தான் இந்த கேசவன்.
அப்போதிருந்தே அரவிந்த் செல்வ செழிப்போட வாழ்வதை பொறாமையுடன் பார்த்து வைத்தாலும் வெளியே நல்லவர் போல் அரவிந்துடன் நட்புடன் இருந்தார் கேசவன். இன்னும் சொல்லப்போனால் அரவிந்த் சித்துவின் அம்மாவை காதலித்தபோது அவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என அரவிந்தின் தந்தை இந்த காதலை ஒப்புக்கொள்ள மாட்டார் என வாண்டட்டாக அரவிந்தை அவர் காதலியுடன் வண்டியில் ஏத்தி இந்த ஊரை விட்டு பேக்கப் செய்ததே நம் கேசவன் தான்.
இதை வைத்து அவருக்கு நண்பன் மீது அவ்வளவு பாசம் என்று யாரும் தப்பாக எண்ண வேண்டாம். காதலித்த பெண்ணோடு வேறு ஊருக்கு சென்று அரவிந்த் கஷ்டப்படட்டும் என்ற நல்லெண்ணமே.
இப்படிப்பட்டவர் ஊருக்கு முன்னால் மிகப்பெரிய நல்லவர் என்ற போர்வையில் தனக்கு ஆபத்து வராத வகையில் லட்சலட்சமாய் சம்பாதித்து கொண்டுதான் இருக்கிறார்.
என்னதான் இப்போது லட்சங்களில் மனிதர் புரண்டாலும் இன்னும் அரவிந்தின் கோடிக்கணக்கான சொத்துக்களின் மீதுள்ள மோகம் கேசவனுக்கு குறையவில்லை. சிறு வயதில் அரவிந்தோடு அவர் வீட்டிற்கு சென்ற போது எதேச்சையாக அவர் கண்டுப்பிடித்த ஒரு விஷயமே இப்போது அவரை பல வேலைகளை செய்ய வைக்கிறது.
இதுநாள் வரை பேய் கதையை பரப்பி அரவிந்தின் வீட்டின் பக்கம் யாரையும் அண்டவிடாது அடிக்கடி தன் ஆட்களை அங்கு அனுப்பி வைத்து, ஒரு பொருளை எடுத்துவர சுதந்திரமாய் செயல்பட்டு கொண்டிருந்தார் கேசவன். அப்படி உள்ளே போன யாரும் உயிருடன் இதுவரை வெளியே வந்ததில்லை என்பது தனிக்கதை.
ஆனால் இப்போது சித்து வந்தபின் அந்த வீட்டிற்குள் நுழைந்தவர்கள் பிடிபட்டது அவருக்கு தலை வேதனையை கொடுக்க, இதில் இந்த திருடர்கள் கூறும் கதை வேறு அவருக்கு மேலும் எரிச்சலையே கிளப்பியது.
“ஏய் என்னங்கடா கதை கதையா விடுறீங்க. ரொம்ப நாளா பூட்டி இருந்த அந்த வீட்டுல பேய் இருக்கு பூதம் இருக்குன்னு கதை கெளப்பிவிட்டதே நானுதான். என்கிட்டையே அதை திருப்பி விட பாக்ககுறீங்க. என்ன பாத்தா உங்க ரெண்டு பேருக்கும் எப்புடி தெரியுது?”
வந்ததில் இருந்தே பேய் கதையை மாற்றி மாற்றி இரண்டு திருடர்களும் கூற கடுப்பில் கத்திய கேசவன்,
“டேய் இவனுக்கு ரெண்டு பேரும் அங்க என்ன நடந்ததுன்னு எல்லா உண்மையையும் சொல்லாம இங்கருந்து முழுசா வெளியே போவகூடாது” என அந்த தடியண்களிடன் கட்டளை பிறப்பித்துவிட்டு, அவர் அருகே நின்றிருந்த தன் கணக்கிடம் எதோ முணுமுணுத்து சென்றார் அவர்.
அவர் அப்படி எந்த விஷயத்தை எதேச்சையாக கண்டுபிடித்தார் என பொறுத்திருந்து பார்ப்போம். இப்போ நம்ம அரவிந்த் அண்ட் கோ சித்து ரூமில் ஒரு மீட்டிங்கை போட்டு என்ன செய்கிறார்கள் என பாக்கலாம் வாங்க!
இரவின் நிசப்பத்தம் அந்த அறை முழுவதும் நிரம்பி இருக்க சித்து அண்ட் கோவும் யோசையில் திசைக்கு ஒவ்வொருவராய் ஒவ்வொரு டிசைனில் அமர்ந்திருக்க, நேரம் நடுநிசியை தொட்டுவிட்டது.
“ஒரு வேளை நாம நமக்கு தெரியாமையே பெரிய தப்ப பண்ணிட்டோமாடா மவனே?”
கட்டிலின் ஒருபுறம் இருந்த சோஃபாவில் அமர்ந்து கையில் ஒரு தட்டு மிக்சரை வைத்து கரக் முரக் என நொறுக்கியபடி அரவிந்த் கேட்க
“அதைதான் நானும் யோசிக்கிறேன் நைனா. கம்முன்னு இருந்த ஊரை கொல்லை கூட்டமா மாத்தி நமக்கு நாமே செல்ஃப் ஆப்பு வச்சுகிட்டோமோ”
கட்டிலின் மறுபுறத்தில் இருந்த சேரில் சாய்ந்தமர்ந்து விட்டத்தில் இருந்த லைட்டை பார்த்து புலம்பி கொண்டிருந்தான் சித்து. இவர்களின் நடுவே இருவர் பேசுவதையும் பார்த்துபடி கட்டிலில் வீரா அமர்ந்திருக்க கதிர் தூங்கி கொண்டிருந்தான்.
ஊருக்குள் நடந்த விஷயங்கள், அதோடு தான் பார்த்தது என அனைத்தையும் அரவிந்த் தன் மகன் மருமகளிடம் பகிர, இப்போது இதென்னடா புது பிரச்சினை என யோசனையில் இருக்கின்றனர் நம் குரங்கு கூட்டம்.
“ஷப்பா அந்த மலைய விக்க தங்கம் இருக்கு வைரம் இருக்குன்னு புரளிய கிளப்புனா, இங்க என்னென்னமோ நடக்குதே. அப்போ நான் இந்த ஜென்மத்துல சொந்த பிஸ்னஸ் பண்ண முடியாதா. ஐயோ…”
சித்துவுக்கு பணம் வருமா வராதா இல்லை மொத்தமா போயிருமா என ஒவ்வொரு நிமிடமும் நெஞ்சு பக்கு பக்கென அடித்தது. இருவரின் புலம்பல்களையும் பார்த்து கடுப்பாகி வீரா உட்கார்ந்திருந்தாள். அப்போது அவளுக்கும் பெரிதாய் எந்த ஐடியாவும் தோன்றாது போகவே கண்ணத்தில் கை வைத்துபடி அமைதி காக்க, கரக் முரக் என அரவிந்த் மிக்சர் திண்ணும் சத்தமே அந்த அறையில் கேட்டபடி இருந்தது.
‘என்ன பண்ணலாம்’ என வீராவின் மனம் யோசித்த அதே நேரம், படக்கென ஒரு சத்தம் அந்த வீட்டின் பின்வாசல் பக்கம் கேட்டது. அப்படியே பின்வாசல் கதவும் மெல்ல திறக்கப்பட்டது. அன்றுபோல் இன்றும் தான் தேடும் பொருளை எடுக்க கேசவனே ஒரு நான்கு தடியர்களை அனுப்பி வைத்திருந்தான்.
யாருக்கும் தெரியாமல் இந்த நால்வரும் மெல்ல சின்ன சத்தம் கூட செய்யாது நடந்து வர அதை கணநேரத்தில் கண்டுவிட்டது நம் பொம்மை.
“அடேய் திருட்டு ராஸ்கோல்வலா! திரும்ப திரும்ப வரீகளா. வாங்கடா வாங்க எத்தனை பேரு வந்தாலும் சும்மா எம்.சி.ஆரு கணக்கா நான் நின்ன எடத்துல இருந்தே தட்டி தூக்குவேன். வாங்கடா வாங்க”
அந்த தடியர்களை பார்த்து ஒரு பஞ்சை வைத்துவிட்டு அவர்கள் ஆவலாய் வரவேற்று எப்போதும் போல் சிறப்பாய் விருந்து வைத்தது நம் பொம்மை. எங்கிருந்து அடிவிழுகிறது தங்களுக்கு என்ன ஆகிறது என ஒன்றும் புரியாமல் அந்த தடியர்களும் இடியென விழுந்த பொம்மையின் அடிகளை வாங்கி தொண்டை கிளிய கத்தி வைத்தும் வீட்டிலிருந்த மற்றவர்களுக்கு எதுவும் கேட்கவில்லை.
நால்வரையும் அடித்து துவம்சம் செய்த பின்னர், அரவிந்தின் ரூமில் அதாவது பொம்மை இருந்த ரூமில் அவர்களை தள்ளி கதவை அடைத்து தன் தோளில் அடித்து “சபாஸ்” என தன்னை தானே பாராட்டியது பொம்மை. அதன்பின் டொக்கு டொக்கென சித்து இருந்த ரூமின் கதவை தட்டிவிட்டு அமைதியானது.
காந்தியின் மூன்று குரங்குகளை போல வீரா சித்து அரவிந்த் மூவரும் யோசனையில் அமர்ந்திருந்த நேரம் அறை கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்க,
“நைனா வீரா வெளிய எதோ சத்தம் கேக்குதுல்ல. வாங்க போய் என்னன்னு பாக்கலாம்” என சித்து மற்றவரோடு வெளியே சென்றான்.
இவர்கள் சென்ற நேரம் சரியாக அரவிந்தின் ரூமிலிருந்து சத்தம் வர “மகனே என் ரூமுல இருந்துதான்டா சத்தம் ஹெவியா வருது. சீக்கிரம் கதவை திறடா என்னான்னு பாப்போம்” பரபரப்பாகி விட்டார் அரவிந்த்.
“ஒரு நிமிஷம் இரு நைனா” சத்தத்தை கேட்டு சற்று யோசித்த சித்து வேகமாய் வீட்டினுள் தேடி ஒரு கிரிக்கெட் பேட்டை தூக்கி வந்தான்.
“உள்ள சவுண்ட் அதிகமா வருது நைனா நம்ம சேப்டி முக்கியம்ல அதான் இந்த பேட்ட வெப்பனா யூஸ் பண்ணலான்னு எடுத்துட்டு வந்தேன்” என ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தபடியே சித்து கதவை திறக்க அதிர்ந்து விட்டான்.
அன்று வந்த திருடர்கள் பிஞ்சு பீசு போயி எந்த நிலையில் கிடந்தார்களோ, அதற்கு சற்றும் குறையாது இன்று வந்தவர்களும் கிடந்தார்கள். ஆனால் நம் சித்து அவர்கள் இருந்த நிலையை குறித்தெல்லாம் யோசிக்கவே இல்லையே. அவர்களின் சைசை பார்த்தவுடன் பட்டென மீண்டும் கதவை அடைத்து வைத்தான்.
“வீரா சீக்கிரம் போலீஸ்க்கு போனை போடுடீ. நாலு பேரு தடி தடியா உள்ள கெடக்குறானுங்க” என்ற சித்துவின் அலறலில், ஏதோ ஒரு சந்தேகம் மனதில் தோன்றியதையும் ஒதுக்கி விட்டு வீரா போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டாள்.
ஆனால் அவள் மனதில் இங்கு நடக்கும் இந்த விசித்திரம் எல்லாம் ஒரு நீள ரயில்வண்டியைப் போல மனதிற்குள் வந்தபடியேதான் இருந்தது.
சித்து போட்டு சத்தத்தில் வீட்டிலிருந்த அவன் அத்தை மாமா என அனைவரும் எழுந்து வந்துவிட்டனர். அவர்களுக்கும் இப்படி மீண்டும் திருடர்கள் வீட்டிற்கு வந்தது அதிர்வை தந்தது. அந்த நேரம் போலீஸ் வர அந்த நால்வரையும் பிடித்து கொடுத்துவிட்டு வீட்டின் மத்தியில் அனைவரும் அமர்ந்துவிட்டனர்.
“என்னய்யா சித்து என்னதான் ஆச்சு” என அலமேலு பதறிப்போய் கேட்டார்.
சித்து நடந்தவற்றை அவர்களிடம் கூற கார்மேகம் அவற்றை கேட்டுவிட்டு “இனி ராத்திரிக்கு காவலுக்கு ஆளு போட வேண்டியதுதான் தம்பி. ஊருல எல்லா பயலும் அந்த மலைல பொதையலு இருக்குன்னு என்னன்னமோ பண்ணிட்டு இருக்கானுவ. அதனால நாம பாதுகாப்பா இருக்க காவலுக்கு ஆளு போட்டுப்புடுவோம் தம்பி” என்றிட்டார்.
பின்னர் கார்மேகமும் சில நாட்களாக ஊரில் நடப்பதை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார். இப்படி வீட்டிற்கு இரண்டு முறை வரும் அளவு யாருக்கோ துணிச்சல் வந்திருக்கிறது என்றால், வீட்டில் இருக்கும் நபர்களை காயப்படுத்தவும் அவர்கள் தயங்க மாட்டார்கள் என எண்ணியே இந்த முடிவை எடுத்தார் அவர்.
சித்து கையில் இருந்த பேட்டை பார்த்து அவன்தான் அந்த தடியர்களை அடித்தது என கார்மேகமும் அலமேலுவும் நினைத்திருக்க, உண்மையை அறிந்த மாதவனும் சங்கரும் பொம்மை அவர்களை உற்று உற்று பார்ப்பதை கண்டு பயத்தில் நின்றிருந்தனர்.
இந்த லிஸ்டில் மீதமிருந்த அரவிந்தும் சித்தும் யோசிக்க மறந்தததை நம் வீரா யோசிக்க துவங்கினாள். அதாவது இப்படி வரும் திருடர்களை யார் இப்படி மரண அடி அடிப்பதென.
-ரகசியம் தொடரும்