அத்தியாயம் 5

பாரிவள்ளனின் துரிதான நடவடிக்கையால் குழந்தை சைத்ரன் உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டான்.

டே கேயார் சென்டரில் உள்ள குழந்தைகளோடு பந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சைத்ரன், பந்து தூரப்போய் விழவும் அதை எடுக்க சென்றவன் அங்கே மரக்கறிகளைக் கொண்டு வரும் வண்டியில் பந்தோடு ஏறி இருக்கிறான். அவனை கவனிக்காமல் வண்டிக்காரன் வண்டியை எடுத்து சென்றமையால்தான் குழந்தை டே கேயார் சென்டரிலிருந்து காணாமல் போய் இருக்கின்றான்.

ஓட்டுநர் வண்டியை சமயக்கட்டு பக்கம் நிறுத்தியது மட்டுமல்லாது, மழை தூறியதால் பொருட்களை இறக்க வண்டியை சற்று உள்ளே நுழைத்து தான் வண்டியை நிறுத்திருக்கிறான். அதனால் சீசீடிவியில் குழந்தை வண்டிக்குள் ஏறியது பதிவாகி இருக்கவில்லை.

அதுவும் குழந்தை சீசீடிவி இருக்கும் பக்கம் வராமல் மறுபக்கமாக வந்து ஏறி இருக்கிறான்.

டே கேயார் சென்டரில் இருந்து குழந்தை தனியாக வெளியே செல்ல வாய்ப்பில்லை. யாரும் கடத்தி இருக்கவும் இல்லை. கடத்தி இருந்தால் பெற்றோருக்கு அலைபேசி அழைப்பு விடுத்து பணம் கேட்டு மிரட்டி இருப்பார்களே என்று வேறு கோணத்தில் விசாரித்தவன் குழந்தையை கடைசியாக யார் பார்த்தார்கள்? எத்தனை மணிக்கு பார்த்தார்கள்? சுமாராக எத்தனை மணியில் இருந்து குழந்தை காணாமல் போனான் என்றெல்லாம் கவனத்தில் கொண்டு தான் இந்த வண்டியை சந்தேகப்பட்டு தேடிச் சென்றிருந்தான் பாரிவள்ளல்.

ஓட்டுனரின் கன்னத்தில் பளார் என்று ஒரு அடியை கொடுத்த பாரிவள்ளல் “ஏன்டா… ஒரு குழந்தை வண்டிக்குள்ள ஏறி இருக்கு. அது தெரியாம வண்டியை ஓட்டிக்கிட்டு போயிருக்க. பின்னாடி எந்த சத்தமும் வரலையா? நீ ஓட்டுன ஓட்டுல குழந்தை விழுந்து அடிபட்டு ஏடா, கூடமாக ஏதாவது ஆகி இருந்தா?”

“ஐயோ… சார் நான் ஹெட்போன் போட்டுக்கிட்டு பாட்டு கேட்டுகிட்டே” என்று அவன் காரணம் கூறியதில் மீண்டும் அறைந்தான்.

 “இது வேறயா? உனக்கு லைசன் கொடுத்தவன சொல்லணும்” ஓட்டுனரை திட்டிவிட்டு அடுத்த செய்ய வேண்டியதை கவனிக்கலானான். 

குழந்தை கிடைத்த பின்னும் மிது அழுது கொண்டிருக்க, தாஸ் சாஸ்வினை கையில் வைத்துக்கொண்டு அவளை சமாதானப்படுத்த முடியாமல் பார்த்திருந்தான்.

டே கேயார் சென்டரில்  உள்ளவர்களையும் சத்தம் போட்ட பாரிவள்ளல் மிதுவை தன்னோடு தன் வண்டியில் செல்ல அழைத்தான்.

“உங்க உதவிக்கு ரொம்ப நன்றி சார். உங்களுக்கு சிரமம் வேண்டாம். நாங்க கிளம்புறோம்” மிது பதில் சொல்லும் முன் முந்திக் கொண்டு பதில் சொன்னான் தாஸ்.

“கல்யாணமாகாதவனுக்கு ஆயிரம் கவலை கல்யாணமானவனுக்கு ஒரே கவலை இவனுக்கும் அதே கவலை. இவன் பொண்டாட்டிய பத்தின கவலைப் போல” என்று உள்ளுக்குள் புன்னகைத்த பாரிவள்ளல் கிண்டலாக எதுவும் பேசவில்லை. இப்பொழுதுதான் குழந்தையை தொலைத்து கண்டு பிடித்திருக்கிறார்கள். இப்பொழுது இருக்கும் மனநிலையில் கிண்டலாக பேசினால் அது குத்தலாக சொல்வது போல் தான் தோன்றும்.

ஆதலால் இன்முகமாகவே “எப்படி போவீங்க மிஸ்டர் தாசந்தன்? உங்க பைக்லயா? இத்தனை பையோட நாலு பேரும் பைக்ல கண்டிப்பா போக மாட்டீங்கல்ல. நீங்க பைக்ல போவீங்க. உங்க பசங்களும், வைப்பும் ஆட்டோல போவாங்க அதுக்கு அவங்க பசங்களோட என் கூட வரட்டும்” என்றான்.

பாரிவள்ளல் சொன்னது மறுக்க முடியாத உண்மை. அதற்காக தனது மனைவியையும் குழந்தைகளையும் அவனோடு அனுப்ப முடியுமா?

“இல்ல சார் வேண்டாம்” என்று புன்னகைத்தவாறு கடுமையாக மறுத்தான் தாஸ்.

மிதுவுக்கு பாரிவள்ளல் யார் என்றே தெரியவில்லை. காரணம். அவன் பெயர் தெரியுமே தவிர போட்டோவில் கூட பார்த்ததில்லை. ஏழு வருடங்களுக்கு முன் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையின் பெயர் அவளுக்கு இப்பொழுது ஞாபகத்தில் இருக்குமா? சுத்தமாக நினைவில் இல்லை.

“அதான் சார் சொல்லுறார் இல்ல. எங்களுக்காக அவரே வந்து சைத்ரன கண்டுபிடிச்சு கொடுத்தது மட்டுமல்லாமல் பாதுகாப்பாக வீட்டிலேயே விடுறார் என்று சொல்லுறாரே. வளமையாக நானும் பசங்களும் ஆட்டோல தானே போறோம். வண்டியில ஏத்தியாவது விடுறியா? இன்னைக்கு காலையில கூட கண்டுக்காம தானே போன. சைத்ரன் காணாம போனத சொல்ல சென்டர்ல இருந்து எத்தனை வாட்டி போன் பண்ணி இருக்கிறாங்க. அப்படி என்ன வேலை உனக்கு? உனக்கு பேச இஷ்டம் இல்லன்னா எனக்காவது போன் பண்ணி சொல்லணும். நான் போன் பண்ணா கூட நீ எடுக்கிறதில்ல. யாருக்காக சம்பாதிக்கிற? எனக்காகவும் பசங்களுக்காகவும் தானே. நீ பண்ணுறதெல்லாம் பார்த்தா அப்படி இல்ல, நீ உனக்காக மட்டும் வாழ்றது போல தான் தெரியுது”

“என்னடி பேசுற? எதுக்கு தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்க?” தாசந்தனக்கு மிதுவின் கோபம் புரியவில்லை. பாரிவள்ளலின் முன் அவள் பேசுவதும் பிடிக்கவில்லை. அதற்காக அவளிடம் அவனால் கோபப்படவும் முடியவில்லை. இவன் கோபப்பட்டு பேசினால், அவள் எங்கே இருக்கிறோம் என்று மறந்து மேலும் பேசி விடக்கூடும். அது பாரிவள்ளக்கு இன்னும் சாதகமாக அமைந்து விடும். என்று அஞ்சியவன், பல்லை கடித்து கோபத்தை அடக்கி, பொறுமையாக “முதல்ல வா வீட்டுக்கு போலாம். பசங்க பயந்து போய் இருக்காங்க. பசியில இவன பாரு சிணங்கி கிட்டே இருக்கான்” என்றான்.

 “பால் புட்டி பைல தானே இருக்கு. எடுத்து அவன் வாயில வைக்கக் கூட நான் வரணுமா?” உன் கூட பேசி பிரயோஜனம் இல்லை என்பது போல் கணவனை நன்றாக முறைத்தவள், பாரிவள்ளலை பார்த்து “வாங்க சார் போலாம்” என்று அவன் வண்டியில் ஏறி இருந்தாள் மிது.

பாரிவள்ளல் எதுவும் பேசவில்லை. அவள் ஏறும் பொழுதே பைகலை ஏற்றியவன் தாசந்தனிடம் சாஸ்வினை வாங்கி மிதுவிடம் கொடுத்தவன் அவனது வண்டியை கிளப்பி இருந்தான், தன் பேச்சை மீறி செல்லும் மிதுவை முறைக்க முடியாமல் விழி பிதுங்கி நின்ற தாஸ் அமைதியாக அவர்களை பின் தொடர்ந்தான்.

வீட்டை அடைந்ததும், எங்கே வாயிலை முற்றாகத் திறந்தால், பாரிவள்ளல் வண்டியை உள்ளே கொண்டு வந்து நிறுத்திவிட்டு உரிமை கொண்டாட வீட்டுக்குள் வந்து விடுவானோ என்று அஞ்சிய தாஸ், வாயிலில் வண்டியை நிறுத்தியவன் சைத்ரனை இறக்கி, பைகளையும் இறக்கிவிட்டு மிது இறங்கி கொண்டதும் “ரொம்ப நன்றி சார்” என்று பாரிவள்ளலை அங்கிருந்து அனுப்ப முயன்றான்.

தாஸை கண்டு கொள்ளாது “என்ன மிது உனக்காக இவ்வளவு பண்ணி இருக்கேன் ஒரு கப் காபி கூட கொடுக்க மாட்டியா?” என்று கண்சிமிட்டிப் புன்னகைத்தான் பாரிவள்ளல்.

தாஸ் கடுப்பாக அவனை முறைத்துக் கொண்டு இருக்க,, “என்ன இவர் உரிமையாக ஒருமையில் பேசுகிறார்?” என்று புரியாமல் அவனைப் பார்த்தாள் மிது. அவன் மீது அவளுக்கு சந்தேகமும் வரவில்லை. அவன் பேச்சை ஆராய்ச்சி செய்யும் மனநிலையிலும் அவள் இல்லை. அதையும் தாண்டி அவள் உயிரைத் தேடித் தந்தவன் அல்லவா எதை பற்றியும் யோசிக்காமல் “உள்ள வாங்க…” என்றாள்.

தாசந்தனால் மனைவியை முறைக்க மட்டும் தான் முடிந்தது. எங்கே அவள் அழைத்தவுடன் பாரிவள்ளல் உள்ளே வந்து விடுவானோ என்று வாயிலை அடைத்தது போல் நின்றிருந்தான்.

தாஸின் சைகைகள் சிறுபிள்ளைதனமாக இருக்க பாரிக்கு சிரிப்பாக இருந்தது “இப்போ நீயே டயர்டாக இருப்ப. நான் நாளைக்கு வரேன். இன்னும் உனக்கு நான் யார் என்று தெரியாதா? சரிதான் போ. உன் அக்காவ தான் என் அண்ணன் கல்யாணம் பண்ணி இருக்கான். அந்த வகையில் நாம சொந்தக்காரங்க. நான் உனக்கு மாமா தான். ஓகே பாய்” என்று அவளிடம் இருந்து விடைபெற்றுச் சென்றான் பாரிவள்ளல்.

“அவனுக்கு இவளோட புருஷன் நான் இங்க நிற்கிறது கண்ணுக்குத் தெரியலையா?” தாஸால் முணுமுணுக்கத்தான் முடிந்தது.

அது மிதுவின் காதில் தெளிவாக விழுந்தது. கூடவே பாரிவள்ளல் யார் என்று ஞாபகமும் வர தாஸை சட்டென்று ஏறிட்டாள். கடுகடுவென இருக்கும் கணவனின் முகம் பார்க்க அவளுக்கு சிரிப்பாக இருந்தது. அவனை கண்டு கொள்ளாது வீட்டுக்குள் சென்றவள் குழந்தைகளை கவனிக்கலானாள். அதன் பின் தூங்கும் வரை வேலைகள் அவளை இழுத்துக் கொண்டன.

அன்று ஞாயிற்றுக்கிழமை அல்லவா வளமை போல் தாஸ். பொருட்கள் வாங்க வெளியே கிளம்பி சென்றிருந்தான். நேற்று குழந்தை காணாமல் போய் கிடைத்திருந்தான். இல்லை என்றால் இன்றைய நாள் எவ்வாறெல்லாம் கடந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கயிலையே அவனுக்கு அச்சமாக இருந்தது. கண்டுபிடித்து கொடுத்த பாரிவள்ளலுக்கு நன்றி கூட கூறவில்லை. அவனை நினைக்கையில் கசந்தது.

“திருமணமான புதிதில் என்றோ ஒரு நாள் அந்த ஸ்வேதா தியேட்டரில் வைத்து தன்னை விரும்புவதாக கூறி சென்றாள். அதை அறிந்து கொண்டு இந்த மிது என்னை இந்த பாடு படுத்துகிறாளே. அந்த ஸ்வேதா அதைப்பற்றி பேசியதோடு சரி அதன்பின் அவளை நான் பார்க்கவும் இல்லை அவள் என்னை சந்திக்க முயற்சி செய்யவும் இல்லை. அதற்கே அவள் எவ்வளவு பேசுகிறாள். அவளுக்குப் பார்த்த மாப்பிள்ளை அந்தப் பாரிவள்ளல் வீடு வரை வந்து சென்றான். நான் ஏதாவது கேட்டேனா? பேசினேனா?” கோபத்தில் பொரிந்தவாறு வீடு வந்தான்.

மிது அவனை பேசுவதற்கு காரணமே அவன்தான். அவன் தானே அவளிடம் கூறினான் “உன்னை திருமணம் செய்வதற்கு பதிலாக சுவேதாவை திருமணம் செய்திருந்தால், நான் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருந்திருப்பேன். கோடியிலும் புரண்டு இருப்பேன்” என்றிருந்தானே! அதை எல்லாம் மறந்து வீட்டில் அவளுக்குப் பார்த்து மாப்பிள்ளை பாரிவள்ளல் நேரில் வந்து நின்றதும் வயிறெறிந்தான்.

இவன் வாயிலை திறந்து கொண்டு உள்ளே நுழையும் பொழுதே சிரிப்பு சத்தம் தெருவறை கேட்டது. அது வேறு யாருமல்ல பாரிவள்ளல் தான்.

“வந்துட்டானா… காலங்காத்தால வந்துட்டான் போல காபி குடிக்க. அடுத்தவன் பொண்டாட்டி கையால காபி கொடுத்தா தான் குடிப்பாணுங்க போல. வீட்டில பொண்டாட்டி கிட்ட வேலையே வாங்க மாட்டான் போல. எனக்கும் அமைஞ்சிருக்காளே என்கிட்ட வேலை வாங்க ஒருத்தி” எரிச்சலை செருப்பை கழட்டிய விதத்தில் காட்டினான்.

“என் புருஷனுக்கு எங்க நேரம் இருக்கு பசங்களோட விளையாட? அவனுக்கு அவனோட வீடியோ கேம் விளையாடவே நேரம் பத்தல” என்று சத்தமாக சிரித்தாள் மிது.

தாசந்தன் உள்ளே நுழைவதை பார்த்தும் மிதுவின் சிரிப்பு சத்தம் அடங்கவில்லை.

“இவ ஒருத்தி என்னை டேமேஜ் பண்றதுலையே குறியா இருக்கா” மனைவியை முறைத்தவன் வாங்கி வந்த பையே அவள் கையில் கொடுத்துவிட்டு “எப்போ வந்தீங்க சார்” என்று பாரிவள்ளலை ஏறிட்டான்.

“என்ன இன்னமும் சார் என்று கூப்பிடுற? உறவுமுறைல நான் உனக்கு அண்ணன். அண்ணன் என்று கூப்பிடு. இல்ல பேரை சொல்லிக் கூப்பிடு” சாஸ்வினை தூக்கிக் கொண்டிருந்த பாரிவள்ளல் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டவாறே சிரித்தான்.

அவன் எதற்காக சிரிக்கிறான் என்று அறியாமல் குழந்தையும் அவன் முகத்தைப் பார்த்து சிரித்தது. அதை பார்த்து தாசந்தனின் மூளை சூடானது மட்டுமல்லாது வயிறு வேறு கப கபவென எரிய ஆரம்பித்தது.

குழந்தையை வாங்க கையை நீட்டியவாறே “நாம என்ன அடிக்கடியா சந்திக்க போறோம்? எப்பயாச்சும் வெளியில சந்திக்க போறோம். அதுவும் நீங்க யூனிபார்மில் இருப்பீங்க. அப்ப நான் உங்கள உரிமையா ஒருமையில் பேசுவது நல்லா இருக்காதே. பாக்குறவங்க தப்பா நினைப்பாங்க”

என் வீட்டுக்கு இனிமேல் வராதே என்று சொல்ல முடியாது. வெளிப்படையாக அவ்வாறு கூறினால் அவன் மனைவியே இவன் முன்னிலையில் தன்னை பேசுவாளே. அதனால் நாம் அடிக்கடி சந்தித்துக் கொள்ள அவசியம் இல்லை. தேவையும் இல்லை அது அனாவசியம். நீ எனக்கு உறவும் இல்லை. நண்பனும் இல்லை. சகோதரனும் இல்லை என்று அவனை தூர நிறுத்தியே பேசினான் தாசந்தன்.

தாசந்தன் கூறியதன் அர்த்தம் போலீசான பாரிவள்ளலுக்கு புரியாமலா இருக்கும்? புன்னகையில் பேச்சையே ஒதுக்கியவன் குழந்தையை கொடுக்காமல் தன்னோடு அணைத்துக் கொண்டு “எத்தனை நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் இப்படி தனியாக இருக்க போறீங்க சொந்தபந்தத்தோடு சேர்ந்து வாழனும் என்று எண்ணம் இல்லையா? ஊருக்குத்தான் போக மாட்டீங்க. போன் பண்ணி கூட பேச மாட்டீங்களா?” பாரிவள்ளல் ஒரு அர்த்தத்தில் கேட்க குறுக்கிட்டாள் மிது.

“அதை ஏன் கேக்குறீங்க மாமா. எங்க வீட்ல இருந்து யாரும் பேச மாட்டாங்க. நான் போன் பண்ணாலும் எடுக்க மாட்டாங்க. இவன் வீட்ல இருந்து இவன் தங்கச்சி மட்டும் பேசுவா, அதுவும் பணம் போட சொல்லி. இவன் பேசினா பேசுவாங்களோ, என்னமோ. என் முன்னிலையில் இவன் இதுவரைக்கும் இவன் வீட்டுக்கு பேசினதே இல்லை” தனக்குத் தெரியாமல் கணவன் அன்னையோடு செல்லம் கொஞ்சுகிறானோ என்ற பார்வையோடு அவனை முறைத்தவாறு சிரித்தாள்.

“என்னது மாமாவா?” மனைவியின் அழைப்பில் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றிருந்தவன் அவள் பேச்சில் எரிச்சல் அடைந்தான்.

“கல்லூரி நாட்களில் காதலிக்கும் பொழுது மாமா மாமாவென்று தன்னை ஆசையாக அழைத்தவள், திருமணமான புதிதில் தாஸ் மாமா என்று அன்பாக அழைத்தாள். இப்பொழுதெல்லாம் “டேய் தாஸ்” என்று மட்டும் தான் அவள் வாயிலிருந்து வருகிறது. மாமா என்ற அவளது கொஞ்சலான அழைப்பு எங்கே சென்றது என்று கூட தெரியவில்லை. அது இவனிடம் சென்று விட்டதா? அப்போ இவள் அன்பு? என் மீது இருந்த காதல்? அதுவும் இவனுக்கா?” தாஸின் மனம் நொடியில் எதை எதையும் சிந்திக்க அவனை சொடக்கிட்டு அழைத்திருந்தான் பாரிவள்ளல்.

“என்ன தம்பி. என்ன யோசிக்கிற? ஊருக்கு போனா வீட்ல சேர்ப்பாங்களா? மாட்டாங்களா? என்று யோசிக்கிறீயா? நேத்து அம்மா போன் பண்ணும் போது உங்கள பத்தி சொன்னேன். தீபாவளிக்கு வரும்போது உங்களையும் கூட்டிகிட்டு வரும்படி தான் சொன்னாங்க. வந்தா எங்க தங்குறது என்றெல்லாம் யோசிக்காதீங்க. தங்கத்தான் எங்க வீடு இருக்கே. மிதுவுக்கு அது அக்கா வீடு. உனக்கு அண்ணன் வீடு தயங்காம எங்க வீட்ல தங்கலாம் சரியா”

“என்னது.. இவன் வீட்ல இவன் கூட தங்குகிறதா? வேற வினையே வேண்டாம்” என்று பாரிவள்ளலை முறைத்தான் தாஸ்.

“நீங்க மட்டும் சொன்னா போதுமா மாமா. என் கூட பொறந்தவ சொல்ல வேண்டாமா? அவ என் கூட பேசுவாளோ, என்னவோ இதுல நாங்க வந்து உங்க வீட்ல தங்கினா அவளுக்கு சங்கடமாக இருக்கும். அவ எதுவும் சொல்லலன்னாலும் எங்க வீட்டு ஆளுங்க அவள பேசுவாங்க. அதனால அவளுக்கு நிம்மதி இல்லாம போகும் எங்களால அவளுக்கு வீண் பிரச்சனை தானே” என்றாள் மிது.

பாரிவள்ளல் மறுத்துப் பேசும் முன் மனைவியின் பேச்சுக்கு ஒத்தூதினான் தாஸ்.

“எங்க மேல இருக்கிற கோபத்துல போற, வார இடத்துல எல்லாம் நின்னு திட்டினா ஏத்துப்போம். உங்க வீட்டுக்கே வந்து திட்ட ஆரம்பிச்சா… அது உங்க அப்பா, அம்மாக்கு நல்லதில்ல. எங்களுக்காக அவங்க பேச, நாங்க பேச என்று பேச்சு நீண்டு அடிதடியில கூட முடியலாம். அவ்வளவு தூரம் போகலைனாலும், எங்க அம்மாவ வேணாம்னு சொன்னது போல இவ அக்காவையும் ஒதுக்கிட்டா… அதுவும் நம்மளால ஒதுக்கிட்ட அதையே காரணமாக வெச்சி நம்மள குடும்பத்துல சேர்த்துக்கவே மாட்டாங்க. நீங்க எங்களுக்காக யோசிச்சி, எங்களுக்கு நல்லது பண்ணுறது என்று நினைச்சி, கடைசியில் எங்களால் உங்க குடும்பத்துக்கு பிரச்சினை வந்துடும்” என்று நீளமாக பேசி விளக்கம் கொடுத்து பாரிவள்ளலின் வீடு செல்வதை தடுக்கலானான் தாஸ்.

மிது சொல்வது சரிதான் என்று தாஸ் கூறியிருந்தாலே மிதுவுக்கு அவன் மேல் சந்தேகம் வந்திருக்கும். அவன் என்று அவள் செல்வதை ஒத்துக் கொண்டிருக்கின்றான். அவன் சொல்வது உண்மை என்று ஆராய்ச்சியில் எல்லாம் அவள் இறங்கவில்லை. கணவன் சொல்வது சரிதான் என்று அவனுக்காக பரிந்து பேசவுமில்லை. என்றும் இல்லாமல் தன் கணவன் தான் சொல்வதைக் கேட்டு அதற்கேற்பது போல் பேசினால் சந்தேகம் வருமா? வராதா? மனைவியான மிதுவுக்கும் தன் கணவன் மீது அவ்வாறானதொரு சந்தேகம் தான் வந்தது.

“இரு இரு. ஊருக்கு போக மாட்டேன் என்று சொல்லல. அக்கா வீட்டில… அதாவது பாரி மாமா வீட்டில தங்க முடியாது என்று தான் சொல்லுறேன்” என்றாள் மிது.

“இப்ப என்ன ஊருக்கு போக வேண்டி அவசியம் வந்தது?” கடுப்பானான் தாஸ்.

“இந்த இரண்டு குழந்தைகளுக்காகவும் தான் சொல்லுறேன். இந்த குழந்தைகள சொந்தபந்தங்கள் யார் என்றே தெரியாம வளர்க்க போறீங்களா?” குறிக்கிட்டான் பாரிவள்ளல்.

“நான் என்ன ஒரேயடிய எல்லாத்தையும் விட்டுட்டு ஊருக்கே போய் தங்கலாம் என்றா சொல்லுறேன்? இந்த தீபாவளிக்கு ஊருக்கு போயிட்டு வரலாம் என்று தான் சொல்லுறேன்” கணவனை முறைத்தாள் மிது.

“போய் எங்க தங்குறது? உன் வீட்டிலையா என் வீட்டிலையா? போன உடனே சிவப்பு கம்பளம் விரிச்சி, பூ தூவி, மாலை போட்டு வர வேட்பாங்க பாரு” பாரிவள்ளலை முறைத்தவாறே கூறினான் தாஸ். திருமணமாகி ஏழு வருடங்களில் ஊருக்கு செல்ல வேண்டும் என்று வராத எண்ணம் இவன் வந்து பேசியதால் தானே மிதுவுக்கு வந்திருக்கிறது என்ற கோபம் தான் அவனை முறைக்க காரணம்.

“தங்குறது தான் பிரச்சினை என்றால் அதுக்கு நான் ஏற்பாடு பண்ணிக் கொடுக்கிறேன்” என்று வள்ளல் ஆரம்பிக்கவும்

குறுக்கிட்ட தாஸ் “அதான் சொன்னோமே” என்று அவனை வெளிப்படையாகவே முறைதான்.

“எதுக்கு இப்போ அவரை முறைக்கிற?” மிது கணவனை முறைக்க,

“அட முதல்ல என்ன பேச விடுங்கப்பா….” என்ற வள்ளல்.  உங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் போக முடியாது. எங்க வீட்டிலயும் தங்க வேணாம். வாடகைக்கு ஒரு வீடு பார்த்துக் கொடுக்கிறேன். என் ஃப்ரெண்ட் வீடு. என் ஃப்ரெண்ட் என்று கூட யாருக்கும் தெரியாது. வாடகைக்கு தானே இருக்க போறீங்க. யாரும் எதுவும் கேட்க முடியாது” தெளிவாக கூறி முடித்தான்.

எத்தனை வருடங்களுக்குப் பின் ஊருக்கு செல்ல போகிறோம், சொந்தபந்தங்களை பார்க்க போகிறோம் என்றதில் முகம் மலர்ந்தாள் மிது.

ஆனால் தாஸுக்கு அவ்வாறு இல்லை. இவன் சொல்லியா ஊருக்கு செல்ல வேண்டும்? இவன் திட்டம் போட்டுக் கொடுத்தா ஊருக்கு செல்ல வேண்டும்? இவன் வாடகைக்கு வீடு பார்த்து கொடுத்தா ஊருக்கு சென்று தங்க வேண்டும்? என்றெல்லாம் நினைக்கையில் கடுப்பாக இருந்தது. அதை முகத்தில் காட்டக் கூட முடியவில்லை. ஏதாவது பேசினால், அவன் மனைவி பேசுவாள். என்ன செய்வது? ஊருக்கு செல்வதை எவ்வாறு தடுப்பது என்று தான் அவன் சிந்தனையில் ஓடலானது.