அத்தியாயம் 4

 

அன்று ஒரு சனிக்கிழமை. சனிக்கிழமை வந்தாலே மிதுர்லாஷினியின் கோபம் மேகம் மறைத்த சூரியனைப் போல் கொஞ்சம் காணாமல் தான் போகிறது. காரணம் நாளை ஞாயிறு அல்லவா. ஞாயிறு ஒரு நாள் தானே வீட்டில் இருக்க முடியும். வீட்டு வேலைகள் தலைக்கு மேல் இருந்தாலும் வீட்டில் இருப்பதே மேல், நிம்மதி என்று நினைக்கும் ரகம் அவள். ஆகையால் சனி அன்று சண்டைக்கு லீவு.

அவள் அமைதியாக இருந்தாலும் சில நேரம் தாசந்தன் வாயைக் விட்டு வம்பை விலை கொடுத்து வாங்கி கொள்வதும் உண்டு. அது அவனது தலையெழுத்து.

சனிக்கிழமை காலையிலேயே கணவனோடு மல்லுக்கட்டாமல் வேலைகளை முடித்தவள் டே கேயார் சென்டருக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல தயார் செய்து கொண்டிருந்தாள்.

காரியாலயம் செல்ல தயாராக வந்த தாசந்தனும் தனக்கான உணவு கட்டப்படாமல் இருக்கவே, இந்த ஏழு வருட திருமண வாழ்க்கையில் பாடம் கற்றவனாக மிதுவிடம் கேள்வி கேட்டால் காலையிலே ஒரு சண்டை வந்துவிடும் என்று தனக்கான உணவை கட்டிக்கொண்டு அமைதியாக கிளம்பி விட்டான்.

இவன் காரியாலயம் வடக்கே என்றால், இவள் வேலை செய்யும் வங்கி தெற்கே இருந்தது. இருவரும் இரு திசையில் செல்ல வேண்டும். குழந்தைகளை எந்த டே கேயார் சென்டரில் விடுவது? எந்த மாதிரியான சென்டரில் விடுவது என்ற குழப்பம் வேலைக்கு செல்லும் எல்லா பெற்றோர்களுக்கும் போல் இவர்களுக்கும் எழுந்தது.

இளையவன் சாஸ்வின் பிறக்கும் வரையில் மூத்தவன் சைத்ரனை அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட வீட்டார் நடத்தும் ஒரு தனியார் டே கேயார் சென்டரில் தான் விட்டிருந்தாள் மிது. சாஸ்வின் பிறக்கும் பொழுது சைத்ரனுக்கு மூணு வயது. அவன் பாலர் பள்ளி செல்ல வேண்டும். இருவரையும் ஒரே இடத்தில் சேர்த்தால் தானே தனக்கு வேலை மிச்சம் என்று எண்ணி விசாரித்தவளுக்கு நகரத்தில் உள்ள கிட்ஸ் டே கேயார் சென்டர் மிகவும் பிடித்துப் போனது.

மிது வேலை பார்க்கும் வங்கிக்குச் செல்லும் வழியிலையே இருந்தமையால் வேலைக்கு செல்லும் போது குழந்தைகளை விட்டுச் செல்வது இவளுக்கு இலகுவாக இருந்தது. 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான குழந்தைகளை தனியாகவும், 3-5 வயது குழந்தைகளுக்கு பகல்நேரப் பராமரிப்போடு காலையில் எழுத வாசிக்கவென பாலர் வகுப்பு பாடங்களோடு, கைவினை பொருட்கள் செய்வது, விளையாட்டு என மூளை திறனை அதிகப்படுத்தும் செயற்பாடுகள் இருக்கவே மிதுர்லாஷினி மனமகிழ்வோடு அந்த குழந்தை பராமரிப்பு மையத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் சேர்த்து விட்டு நிம்மதியாக வேலைக்கு சென்று, வரலானாள்.

என்ன ஒன்று சில மையங்களை போல் வார இறுதி அல்லது பிற விடுமுறை நாட்களில் பணியாளர்கள் மற்றும் முதலாளிகளின் தேவைகளின் அடிப்படையில்  இந்த மையம் செயல்படுவதில்லை என்ற ஒரே குறை தான். அப்படி செயல்படுவதாயின் ஞாயிறு அன்றும் குழந்தைகளை விட்டுவிட்டு கணவனோடு ஊர் சுற்ற கிளம்பி விடுவாளோ, என்னவோ. அப்படியாவது கணவனோடு நேரம் செலவிட்டிருந்தால்? இருவருக்கிடையிலும் சுமுகமான உறவு இருந்திருக்குமோ? அவன் மீது கோபம் குறைந்து இருக்குமோ? என்னவோ!

சில மையங்களில் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி குழந்தைகளை கவனித்துக் கொள்ளுவதாயின் கூடிய கட்டணம் செலுத்த வேண்டும். மூத்தவன் சைத்ரனை அந்த தனியார் பராமரிப்பு மையத்தில் விட்டு விட்டு எத்தனை நாட்கள் தாசந்தனோடு வெளியே சென்றிருப்பாள். நேரம் சென்று வந்து பணமும் செலுத்தி இருக்கின்றாள்.

இளையவன் சாஸ்வின் பிறந்த பின்னால் அவளால் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடியவில்லையே என்ற கோபம். கணவனோடு நேரம் செலவிட முடியவில்லையே என்ற கோபம். கணவன் கண்டு கொள்வதில்லையே என்ற கோபம். அவன் புரிந்து கொள்வதில்லையே என்ற கோபம். இவ்வாறான வகை வகையான கோபங்களை தான் அவள் தாசந்தனின் மீது காட்டிக் கொண்டிருக்கின்றாள். அது அவனுக்கு தான் புரிவதில்லை. காரணம் புரியாமல் ஆராய்ச்சியில் மட்டும் இறங்குகின்றான்.

அவள் கோபமும் நியாயமானது தான். கல்லூரி நாட்களில் காதலிக்கும் பொழுது அவள் கேளாமலையே அவளுக்காக எல்லாவற்றையும் செய்தான்.

மழை வரும் முன்னே குடையோடு வந்து நின்றிருப்பான். அவனால் வர முடியாவிட்டால் “குடையெடுத்து வந்தாயா?” என்று அக்கறையாக அலைபேசி அழைப்பு விடுப்பான். இவனால் அவளோடு செல்ல முடியாவிட்டால் “இன்று மழை வரும் போல் தெரிகிறது குடையை மறக்காமல் எடுத்துக் கொண்டு போ” என்ற செல்ல மிரட்டல் விடுப்பான்.

அவளுக்கு மாலை வகுப்பு இருந்தால், அவள் பசியாக இருப்பாளேயென்று கையேடு அவளுக்கு பிடித்தமான உணவை வாங்கி வந்து விடுவான். “சாப்பிட்டால் தூக்கம் வரும். படிக்க முடியாது” என்று புலம்புபவளை பார்த்து இவன் “தூங்கினாலும் பரவாயில்லை, உன் வயிறு வாடக்கூடாது” என்று அவளை சாப்பிட வைக்காமல் அங்கிருந்து நகர மாட்டான்.

பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மிது தூங்கி விடுவாள். எவ்வளவு நேரமானாலும் அவளை எழுப்பாமல் அங்கேயே அமர்ந்து அவளை மடியில் கிடத்தி அவள் தூங்கி எந்திரிக்கும் வரையில் காத்திருப்பான். எத்தனை தடவை அவனது கால்கள் மரத்துப் போய் இருந்திருக்கும்? ஒரு தடவையாவது முகம் சுளிக்காமல் அவள் கண்விழித்ததும் முகம் மலர்வான்.

“என்ன எழுப்பி இருக்கலாமே” என்று மிது தான் கண் கலங்குவாள்.

“உனக்காக இதை கூட செய்ய மாட்டேனா? அவளைப் பார்த்து புன்னகைத்தவாறே வசனம் பேசுவான் தாஸ்.

இவ்வாறு அவளுக்காக எல்லாம் செய்தவனுக்கு இன்று அவளுக்காக எதையும் செய்ய நேரமில்லையென்றால் அவளுக்கு கோபம் வருமா? வராதா?

விடுதியில் தங்கியிருப்பவன் போல் அவளுக்கு சில உதவிகளை செய்து கொடுக்கிறான். அவனது எல்லா தேவைகளையும் இவள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றான். காதலிருந்தும் அவளை புரிந்துகொள்ளாமல் தாசந்தன் இருக்க, அவன் மீது கோபத்தை இழுத்துப் பிடித்தவாறு மனம் திறவாமல் இருக்கின்றாள் மிது. என்று இருவரும் மனம் விட்டு பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்வார்களோ!

தாசந்தனுக்கு நேரமின்மைக்கு காரணம் பதவி உயர்வு. இளையவன் சாஸ்வின் கிடைத்த பொழுது தான் அவனுக்கு பதவி உயர்வு கிடைத்தது. பதவி உயர்வு, கூடிய சம்பளம் கிடைக்கும் என்ற பொழுது இளையவன் சாஸ்வின் பிறந்த நேரம் என்று கணவனும் மனைவியும் கொண்டாடி தீர்த்தார்கள்.

தாசந்தனுக்கு பதவி உயர்வு கிடைத்ததும் கிடைத்தது, வேலையும் அதிகம். வீட்டுக்கு வரவும் நேரமானது. என்னதான் அவன் வேலையை காரணம் சொன்னாலும் மிது சமாதானமாகாததற்கு காரணம் இளையவன் சாஸ்வின் என்றால் பொய்யில்லை. சிணுங்கிவாறே அவள் தோளை விட்டு இறங்காமல் அவளை படுத்தி எடுக்கலானான் சின்னவன்.

சின்னவன் உடம்புக்கு முடியாமல் இருக்கிறானோ? சொல்ல முடியாத வலியால் சிணுங்குகிறானோ என்று மருத்துவமனையை நாடினால், குழந்தைக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று மருத்துவ அறிக்கைகள் கூற, குழந்தை இரவில் மட்டும் ஏன் சிணுங்குகிறது என்று இருவருக்கும் புரியவேயில்லை.

அதான் குழந்தைக்கு ஒன்றுமில்லையே என்று தாசந்தன்  குழந்தையின் சத்தத்தில் தூங்க பழகியிருக்க, நிம்மதியாக தூங்கியும் போனான். அன்னையான மிது தினம் தினம் தூங்க முடியாமல் அவதியுரலானாள்.

தூங்க முடியாத கோபம். தன்னையும் கண்டு கொள்வதில்லை. குழந்தையையும் கண்டு கொள்வதில்லை என்ற கோபம் கூட தாசந்தனின் மீது மிதுவுக்கு இருக்கிறது. தாசந்தனை சார்ந்திருக்காமல் அவளே குழந்தைகளை பார்த்துக் கொள்ளலானாள்.

குழந்தைகளை டே கேயார் சென்டரில் விடுவது, அழைத்து வருவது அவளது பொறுப்பானது. எக்காரணத்தைக் கொண்டும் தாசந்தனிடம் அந்த வேலையை கொடுக்க அவள் விரும்பவில்லை. குழந்தைகளின் விஷயத்தில் அவன் பொறுப்பில்லாதவன் என்றே கணித்தாள் மிது.

அவள் வேலைக்கு செல்லும் வழி என்பதால் இவனும் பொறுப்பை அவளிடமே கொடுத்து விட்டதோடு அவள் சரியாக செய்வாள் என்ற நிம்மதியில் அவளிடம் எந்த கேள்வியும் கேட்பதில்லை. அது கூட மிது அவன் மேல் கோபம் கொள்ள காரணமாகத்தான் அமைந்தது.

“ஒருத்தி தனியாக குழந்தைகளை பார்த்துக்கிறாளே வீட்டுக்கு வந்து சேர்ந்தாலான்னு போன் பண்ணி கேட்கத் தோணாதா? லவ் பண்ணும் போது மட்டும் அன்பே, ஆருயிரே என்று கொஞ்ச வேண்டியது. பொண்டாட்டியா வந்த உடனே கண்டும், காணாதது போல வாழ வேண்டியது. என்ன ஜென்மமோ” அவனை மனதுக்குள் வசை பாடியவள் கோபத்தை வேறு விதமாகத்தான் காட்டலானாள்.

தான் சொல்லித்தான் அவன் தந்தையின் கடமைகளை செய்ய வேண்டுமா? தந்தையுடைய பொறுப்புகளை செய்ய வேண்டுமா? தானாக வரவேண்டும். அவனாக உணர வேண்டும் என்று கோபமும் அவன் மீது மிதுவுக்கு இருந்தது.

அவனிடம் பேசுவதை விட அமைதியாகவே இருப்பது சிறந்தது. அவன் பேசினாலே எரிச்சலாக உணர்கிறாள். இப்படியே சென்றால் விவாகரத்து செய்து கொள்ளலாமா என்று இவளே கேட்டு விடுவாளோ என்ற அச்சம் இவளுக்குள் எழுந்தமையால் அவனிடம் பேசுவதை குறைத்தாள். ஆனால் சண்டை என்று வரும் பொழுது வாங்கு வாங்க என்று அவனை வெளுத்து வாங்குவாள்.  

பொறுமையாக இரு என்று சொல்லி அவளது மூளை அவளுக்கு எடுத்துரைத்தாலும், அவள் பொறுமை அவளிடம் இருந்து அந்த கணம் பறந்து விடுகிறது. அக்கணம் அவன் முன்னிலையில் கோபம் மட்டும் தான் வந்து நிற்கிறது. என்ன சொல்கிறோம்? என்ன செய்கிறோம்? என்று தன் நினைவில்லாமலேயே செய்து விடுகிறாள். அவள் செய்தவற்றுக்கு வருத்தப்படுவதும் இல்லை. அதற்குக் காரணம் அவன்தானே என்று அதற்கும் அவன் மீது கோபம் கொள்வாள். அதனாலேயே இருவருக்கிடையிலும் பிரச்சினையும் ஓயவில்லை சண்டைக்கும் குறைவில்லை.

எவ்வளவு சண்டை போட்டாலும் இவள் விவாகரத்தை பற்றி பேச மாட்டாள். அவனை விவாகரத்து செய்துவிட்டு இவள் குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியாக என்ன செய்வாள்? துணைக்கு அவளுடய குடும்பம் இல்லை. சொந்தபந்தங்களும் இல்லை. எவ்வளவு சண்டை போட்டாலும் அவளுக்கு அவன் மட்டும்தான். அவனுக்கும் இவள் மட்டும் தான்.

இவள் பேசினால் தானே பிரச்சினை தீரும். கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு அமைதியாக இருந்தால், இவள் மனதில் என்ன இருக்கிறது? எதற்காக கோபம் கொள்கிறாள் என்று அவனுக்கு எப்படி தெரியும்? இவள் சொன்னால் தானே தெரியும்.

நீ பேசினாலே எனக்கு கோபம் வருகிறது என்பவளிடம் அவனும்தான் எப்படி பேசுவது? பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்வார்களா? பிரிந்து செல்வார்களா? என்ன தான் நடக்குமோ!

தாஸ் தனது இரு சக்கர வண்டியை கிளப்பும் நேரம் மிது செல்லும் ஆட்டோ வந்து நிற்கவும் சரியாக இருந்தது. தனக்கு நேரமாவதால் அவன் அவளிடம் விடைபெறாமலே கிளம்பி சென்று விட்டான்.

“தடிமாடு… போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போறான்னு பாரு? எருமை. அவங்க அம்மா சோத்த போட்டு வளர்த்தாங்களா? இல்ல புண்ணாக்க ஊட்டி வளர்த்தாங்களான்னு தெரியல.  ரெண்டு பசங்களோட நான் கதவ பூட்டிட்டு கிளம்பணுமே கொஞ்சம் பசங்களையும் பையையும் ஆட்டோல ஏத்தி விட்டு போகணும் என்று தோணுதா? ரெண்டு நிமிஷம் செலவு செஞ்சு ஏத்தி விட்டுட்டு போன ஐயாவோட வண்டி போக ரோட்டில் இடம் கொடுக்க மாட்டாங்க இல்ல” கணவனை வாய்க்குள்ளேயே வசை பாடியவாறு இளையவன் சாஸ்வினை இடுப்பில் கிடத்தியவள் கதவை பூட்டிவிட்டு, மூத்தவன் சைத்ரனை கையோடு அழைத்து வந்து ஆட்டோவில் இருத்தி அலைப்பேசியையும் அவன் கையில் கொடுத்து ஆட்டோ ஓட்டுனரிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு பையை எடுக்க சென்றாள்.

சாஸ்வினின் துணிகள் மற்றும் உணவு ஒரு பையிலும், சைத்ரனின் புத்தகங்கள், துணிகள், உணவு ஒரு பையிலும் வைத்திருந்தாள். இரண்டு பைகளையும் எடுத்துக்கொண்டு வந்து ஆட்டோவில் வைத்து இவள் ஏறி அமரும்போது இடுப்பில் இருந்த இளையவன் மடிக்கு தாவி இருந்தான்.

மூத்தவன் சைத்ரனின் கையில் அவளுடைய அலைபேசி இருந்தமையால் அவன் சமத்தாக ஆட்டோவில் அமர்ந்திருக்க, டே கேயார் சென்டரை அடையும் வரையில் அவனால் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. இல்லையென்றால் ஆட்டோவில் இருந்து வெளியே கையை நீட்டுவதும், ஆடுவதும் பாடுவதும் என்று அட்டகாசம் செய்வான்.  இளையவனை மடியில் வைத்துக்கொண்டு அவனை சமாளிப்பது மிதுவுக்கு பெரும்பாடாக இருக்கும்.

பணியாளர்களோடு குழந்தைகள் இருவரும் இப்பொழுது நன்கு பழகி விட்டிருந்தமையால் இன்முகமாகவே சைத்ரன் இறங்கி ஓடி இருக்க, சாஸ்வினை கொடுத்தவள் பைகளையும் கொடுத்துவிட்டு விடை பெற்றாள்.

மலையேறி இறங்கியது போல் மூச்சு வாங்கியவள் அதே ஆட்டோவில் அவள் வேலை செய்யும் வங்கிக்கு கிளம்பினாள்.

நாளை ஞாயிறு விடுமுறை தினம் என்பதினாலையே இன்று வங்கி பரபரப்பாக இருக்கும். முயன்ற மட்டும் வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று மிது மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க, மூன்று மணியளவில் அவளது அலைபேசி அடித்தது.

வீட்டிலிருந்தால் வங்கியில் இருந்து தான் அழைப்பார்கள். வங்கியில் இருக்கும் பொழுது கணவனா அழைக்கப் போகிறான் என்று இவள் கண்டு கொள்ளாமல் வேலையை பார்க்க, அலைபேசி விடாது ஒளித்தது. {சைலன்ட்ல தானே போட்டு இருக்கா}

டே கேயார் சென்டரின் என் மின்னவும் என்ன ஏதோ என்று அலைபேசியை காதுக்கு கொடுத்தாள். மறுமுனையில் கூறிய செய்தியை கேட்டு திகைத்தவள் எழுந்து நின்று விட்டாள்.

அவளது மூத்த மகன் சைத்ரனை காணவில்லை என்ற செய்தியை தான் அந்த அலைபேசி அழைப்பு சுமந்து வந்திருந்தது.

“என்ன சொல்றீங்க? விளையாடுறீங்களா?” அவளால் அந்த பெண்மணி கூறியதை நம்பக்கூட முடியவில்லை. அவர்களை நம்பித்தானே அவள் பிள்ளையை ஒப்படைத்து விட்டு நிம்மதியாக வேலை பார்க்கின்றாள். காணவில்லை என்றால் என்ன அர்த்தம்? எப்படி காணாமல் போனான்? அன்னையாக பதறியவள் மேலாளரிடம் கூறிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

டே கேயார் சென்டரை அடையும் வரையில் அவர்களை தொடர்பு கொண்டு “கண்ணாமூச்சி விளையாடுறேன்னு எங்கையாச்சும் கபோர்டுல ஒளிஞ்சிகிட்டானா தெரியல. தெரியாம யாராவது மூடிட்டாங்களான்னு பாருங்க” எத்தனை சம்பவங்களை ஊடகங்களில் காண்கிறாள்.

“எங்கேயாச்சும் ஏறி தூங்கிட்டான்னு தெரியல நல்லா பாருங்க”

“இந்த இடத்துக்கு போக வாய்ப்பே இல்லை. போக முடியாது என்று நீங்கள் நினைக்கிற எல்லா இடத்திலேயும் பாருங்கள்” அச்சமும் அழுகையுமாக பேசியவளுக்கு தாசந்தனுக்கு விஷயத்தை கூற வேண்டும் என்ற எண்ணம் வரவேயில்லை.

ஒருவாரு மிது டே கேயார் சென்டரை வந்து சேர்ந்தாள். அவர்கள் குழந்தையை எல்லா இடத்திலும் தேடி விட்டதாக கூறிய பின்னும் இவள் ஒரு முறைக்கு இரண்டு முறை தேடிப் பார்த்து விட்டாள்.

“சைத்ரன் வெளிய போகவும் வாய்ப்பில்லையே. அப்போ எப்படி காணாமல் போனான்? உங்களை நம்பி தானே குழந்தையை ஒப்படைச்சேன். உங்கள்ள யாராச்சும் என் பிள்ளையை கடத்தி வெச்சிருக்குறீங்களா?” அவர்களையே சந்தேகப்பட்டாள் மிது.

குழந்தைகளை பராமரிப்பது அவ்வளவு இலகுவான காரியமா? பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் பொழுதே எந்தவிதமான குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்ற போலிஸ் அறிக்கை இருந்தால் மட்டும்தான் இங்கே வேலை கொடுக்கப்படும். அது மட்டுமா? இப்பொழுது சீசீடிவியும் இருக்க, குழந்தைகளை மட்டுமின்றி பணியாளர்களும் கண்காணிக்கப்படுகிறார்கள். அப்படி இருக்க குழந்தையை கடத்த அவர்கள் துணிய மாட்டார்கள்.

தங்கள் மீது பழி வந்ததும் “போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துடலாம்” என்றார் சைத்ரனை பார்த்துக்கொள்ள பொறுப்பாக இருந்த பெண்மணி.

“மேம் சாருக்கு போன் பண்ணோம். போன் எடுக்கல. நீங்க இன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா? போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க சாரும் வந்தா நன்றாக இருக்கும்” என்றார் டே கேயார் சென்டரின் பொறுப்புதாரி.

வேலையில் இருக்கும் பொழுது அலைபேசியை சைலன் மூட்டில் வைப்பது வழக்கம் தான். மூன்று மணிக்கு குழந்தை காணாமல் போனதாக தனக்கு அலைபேசி அழைப்பு விடுத்து தான் இங்கு வந்து சேர்ந்து குழந்தையை தேட ஆரம்பித்து இப்பொழுது மணி 5 ஆகிறது. ஒருவன் மிஸ்ட் கால் பார்க்க மாட்டானா? பார்த்து என்ன? ஏது என்று அலைபேசி அழைப்பு விடுத்து விசாரிக்க மாட்டானா?

டே கேயார் சென்டரில் இருந்து அலைப்பேசி அழைப்பு வந்தது என்னவோ தெரியல என்று தன்னை அழைத்து கூறியிருக்க வேண்டாமா? அவ்வளவு அலட்சியம். கோபமாக கணவனை அழைத்தாள்.

மிது அழைக்கும் பொழுது தாஸ் வேலையாகத்தான் இருந்தான் அவன் வேலை முடிய ஏழு மணியாகும். வீடு வர மேலும் அரை மணித்தியாளங்கள் போகும்.

முதல் அழைப்பிலேயே அவன் எடுத்திருந்தால் அவள் கோபப்பட்டு இருக்க மாட்டாள். மூன்றாவது அழைப்பில் தான் அவன் அலைபேசியை காதில் வைத்திருந்தான். இது போதுமே இவளுக்கு, கண்ணா பின்னாவென்று அவன் காது ஜவ்வு கிழியும் வரையில் கத்தலானாள்.

“அடியேய் வேலையில் இருக்கும் போது போன் பண்ணாதே என்று உனக்கு எத்தனை தடவை சொல்லுறது? இப்போ என்ன உலகம் அழிஞ்சு போச்சா? எதுக்கு இப்போ கத்துற?” அவள் அருகில் இல்லை என்ற தைரியத்தில் அவனும் குரலை உயர்த்தினான்.

“நீ வேலையில இருக்கேன்னு எனக்கு தெரியாதா? நான் உன் கூட கொஞ்சவா பல தடவை போன் பண்ணேன்? போன் பண்ணா எடுக்க மாட்டியா? அப்படி என்ன ஆபீஸ்ல கிழிக்கிற” என்று அவனை கிழித்தாள் அவன் மனையாள்.

“போன் பண்ணி விஷயத்தை சொல்லாம கண்டதையும் பேசி என் உசுர வாங்கு” என்று இவன் அவளை திட்டவும், மிரட்டவும், அதட்டவும் ஆரம்பித்தான்.

அவன் அதட்டினால் தானே இவளுக்கு அழுகை வந்து விடுகிறது. “சைத்ரன காணோம். எங்க போனான்னு தெரியல. காணலன்னு சொல்றாங்க. கடத்திட்டாங்கன்னு தெரியல. தொலைஞ்சு போயிட்டான். நீ வா போலீஸ் கம்பிளைன்ட் கொடுக்கணும்” அழுதவாறே கதறினாள்.

“ஒன்னு கோபத்துல கத்து. இல்ல கண்ணீரோட கதறு” முணுமுணுத்தவன் “பக்கத்துல யாராச்சும் இருந்தா போனை கொடு” என்றான். ஒண்ணும் இல்லாததற்கு மிது அழுது கரைவதாகத்தான் நினைத்தான் தாஸ்.  எதையும் சாதாரணமாக சொல்லி அவளுக்கு பழக்கம் இல்லையே என்பதுதான் அவளைப் பற்றிய அவனது கணிப்பு.

இரண்டு மணித்தியாலங்களாக குழந்தையை காணவில்லை என்றதும் தான் “மிது நீ போலீஸ் ஸ்டேஷன் வந்துடு. நான் உடனே வரேன்” என்றவன் பதறியவாறு கிளம்பினான்.

மிது காவல் நிலையம் சென்று அரைமணித்தியாலயம் கடந்த பின் தான் தாஸ் வந்து சேர்ந்தான்.

“சைத்ரன் காணாம போயிட்டான்னு சொல்லி இவங்க போன் பண்ணி இருக்காங்க. போன கூட அட்டென்ட் பண்ணல. எனக்கு போன் பண்ணட்டும் நான் பார்த்துக்கட்டும் சொல்லி என் தலைல எல்லாத்தையும் கட்டு. இப்போ குழந்தை காணாமல் போச்சுன்னு தெரியும் தானே. தெரிந்தும் ஆடி, அசஞ்சி வார. குழந்தை காணாம போயிட்டான் என்று சொல்லியும் உனக்கு அக்கறை இல்லல” ஏற்கனவே அவன் பொறுப்பில்லாதவன் என்ற விம்பம் இருக்க, அவன் மீது எரிந்து விழுந்தாள்.

“என்னடி நீ… நீ எங்க இருந்து வந்த? நான் எங்க இருந்து வர? கொஞ்சம் யோசிச்சு பேசு?” முகம் இறுகியவாறு வண்டியிலிருந்து இறங்கினான் தாஸ்.

“என்ன பிரச்சினை?” கண்களில் மாட்டியிருந்த கூலரை கழட்டியவாறே அவர்களின் எதிரே வந்து நின்றான் இன்ஸ்பெக்டர் பாரிவள்ளல்.

மிதுவை உற்றுப் பார்த்தவன் “நீ மிதுர்லாஷினி இல்ல. ஹேய்… எப்படி இருக்க? என்ன தெரியலையா? நான் பாரிவள்ளல்” என்று உதடுகள் விரிய புன்னகைத்தான்

“யார் இவன்? தன்னை இவனுக்கு எப்படித் தெரியும்” என்று மிது யோசனையாக அவனை ஏறிட்டாள்.

அவன் பெயரை கேட்ட உடனே தாசந்தனுக்கு அவன் யாரென்று புரிந்து போனது. அவன் மிதுவுக்கு அவள் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை.

“கிரகம். எந்தன் நேரத்தில ரியூனியன் ஆகுறாங்க” பாரிவள்ளலை முறைத்தவன் மிதுவை இழுத்து தன் பக்கம் நிறுத்திக் கொண்டான்.

“எதுக்கு இவன் இப்படி பண்றான்?” என்று கணவனை முறைத்தாள் மிது.

அதை பார்த்து குறும்பாக பாரிவள்ளல் புன்னகைக்கும் போதே “சைல்ட் மிஸ்ஸிங் கேஸ் சார்” என்று அவனுக்கு சல்யூட் வைத்தார் ஏட்டு ஏகாம்பரம்.

“எப்போது இருந்து காணோம்? அனானிமஸ் கால் வந்ததா? சீசீடிவி செக் பண்ணிங்களா??” பாரிவள்ளல் கேள்விகளை தொடுத்தான்.

“இப்போதான் சார் கம்ப்ளைன்ட் கொடுத்தாங்க” என்றார் ஏட்டு ஏகாம்பரம்.

“குழந்தைக்கு என்ன வயசு? உங்க பிரச்சினையால வீட்ட விட்டு ஓடிட்டானா?” மிதுவும், தாஸும் முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்து புன்னகையோடு கேட்டான் பாரிவள்ளல்.

“மூணு வயசு சார்” இருவரும் பதறியவாறு கூறினர்.

 “குழந்தையை கடத்தி இருந்தா இந்நேரத்துக்கு உங்களுக்கு போன் வந்திருக்கும். காணாமல் தான் போயிருப்பான்” என்ற பாரிவள்ளல் அவர்களை அழைத்துக் கொண்டு சென்டரில் உள்ள சீசீடிவியை பார்வையிட சென்றான்.