“சரி, மதுவுக்கு பேசி, இன்னொரு டாபிக் ரெக்கார்டிங் செய்து குடுங்க. நான் ரெக்கார்ட் செய்யறேன்.”, என்று ஆதி மதுவை மீண்டும் பேச்சில் இழுத்து வந்தான்.
“ நீ திரும்பி வந்தப்பறம் நான் ரெண்டு தரம் கூப்பிட்டேன் ஆதி. அவ எடுக்கலை. திரும்ப கூப்பிடுவான்னு பார்த்தா, கூப்பிடலை. சரி இனி தொந்தரவு செய்ய வேண்டாம்னு விட்டுட்டேன்.”
“எல்லாம் தெரியும் அந்த மண்ணாந்திக்கு. இன்னிக்கு உன் ப்ளான் என்ன?
“இப்பத்தான் பூந்தமல்லி பாஃக்ட்ரி கிளம்பறேன்.”
“சரி, போற வழியில அவளை போன்ல பிடிக்கற. அம்மா உங்கிட்ட அவளைபத்தி விசாரிச்சதா சொல்ற.”, என்றவன் மேலும் சில பல கட்டளைகளையிட்டு வைத்தான்.
காலை உணவு முடிந்தும் அலுவலகம் கிளம்பவில்லை ஆதி. வீட்டிலிருந்து வேலை செய்வதாக சொல்லவும், ப்ரபாகர் சீக்கிரமே கிளம்பினார். அவர் சென்றதும்,
“அம்மா, இன்னிக்கு உங்களுக்கு கிளாஸ் இருக்குல்ல? நான் ட்ராப் செய்யறேன்.”. என்றான் ஆதி.
“என்னப்பா திடீர்னு?”
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். போற வழியில பேசிக்கலாம்.”
“இன்னிக்கு ஒரு அரை மணி நேரம் லேட்டாத்தான் ஆரம்பிக்குது ஆதி. இப்பவே பேசலாம். என்ன சொல்லு? “, சரஸ்வதி மகனை ஆராய்ச்சியாய்ப் பார்த்தபடி கேட்டார்.
சோஃபாவில் அம்மாவின் அருகே அமர்ந்தவன், அவர் கைகளை தன் கைகளுக்குள் பிடித்தபடி, அவர் கண்களை நோக்கி, “அம்மா, எனக்கு மதுவை ரொம்பப் பிடிச்சிருக்கு. கல்யாணம் செய்துக்கணுங்கற அளவுக்கு.”
சரஸ்வதியின் கண்களில் ஒரு நிமிடம் சந்தோஷ மின்னல் தோன்றினாலும் உடனே, “அவளுக்கு?”
“ஹ்ம்ம்… அவளுக்கும் பிடிச்சிருக்கு, ஆனா பிடி குடுத்துப் பேச மாட்டேங்கறா. உங்ககிட்ட சொன்ன மாதிரி என் வேலை நேரம், அப்பாக்கு மனோகர் மாமாவை பிடிக்காததுன்னு காரணம் அடுக்கறா.”
“மா… நான் என் வேலை பளுவை கம்மி செய்திருக்கேன். அப்படியெல்லாம் ஆபீசே கதின்னு இருக்கறதில்லை. அவ எங்கூட ஆபிஸ் வந்தாலும் வேண்டாம்னு சொல்லப் போறதில்லை யாரும். இதில்லை காரணம்.”
“அவங்க அப்பா அம்மா வாழ்க்கையைப் பார்த்து ரொம்பவே பயந்திருப்பா ஆதி. அவளுக்கு நீதான் நம்பிக்கை குடுக்கணும்.”, சரஸ்வதி ஆறுதலாய் சொல்லவும்,
“அவளுக்கே என் மேல நம்பிக்கை வரணும்மா. நான் அவ அப்பா மாதிரியா இல்லை அவதான் அவங்க அம்மா மாதிரியா? எதுக்கிந்த அனாவசிய பயம்?”
“ஆதி! உன்னோட குழந்தை பருவம் ரொம்ப சந்தோஷமா இருந்தது. நானோ உங்கப்பாவோ உனக்கான எல்லா விஷயத்திலும் உன் கூடவே இருந்திருக்கோம். உனக்கு இதெல்லாம் சாதாரணமாத் தெரியலாம். அவளுக்கு அப்படியில்லை. அவ உணர்வுகளை நீ மதிக்கலைன்னா இப்பவே இப்படியே விலகிடு.”, கோபமாய் சரஸ்வதி சொல்லவும்,
“ம்மா..”, திகைப்பாய்ப் பார்த்தான் ஆதி.
“நிஜமாத்தான் சொல்றேன் ஆதி. உனக்கு மனைவியா வரவ மேல ஆசை பாசம் இருக்கறதெல்லாத்தையும் விட அவ உணர்வுகளுக்கு உங்கிட்ட மதிப்பு இருக்குன்னு தெரியணும். அதை உங்கிட்ட பகிரிந்துக்கற உரிமை இருக்குன்னு தெரியணும். அதுதான் ஒரு பெண்ணுக்கு பெரிய நம்பிக்கை கொடுக்கும். சும்மா லவ் சொல்லிட்டு அஞ்சு வருஷம் கழிச்சு ஒருத்தரை ஒருத்தர் வேத்து மனுஷனாட்டம் ட்ரீட் செய்தா வாழ்க்கை கசந்துடும்.”, அவனுக்கு புரிய வைத்துவிட துடிப்புடன் பேசினார் சரஸ்வதி.
“அப்படியில்லை மா. அவ சொன்னதை புரிஞ்சிகிட்டுத்தான் என் வேலை நேரம் சரி செய்தேன். அடுத்து அப்பாவை எப்படி சரி செய்யறதுன்னுதான் யோசிக்கறேன்.”, ஆதி விளக்கவும்,
“முதல்ல நல்லாத்தான் பேசிகிட்டு இருந்தாங்க இரண்டு பேரும். அப்பவே மதுவோட அப்பா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருந்தார். அப்போல்லாம் உங்கப்பா அது பத்தி பெருசா கண்டுகிட்டது இல்லை. இரண்டு பேரும் ஒண்ணாத்தான் ஜெர்மனிகூட போனாங்க ஒரு வாட்டி. “, சரஸ்வதி நினைவு கூர்ந்து சொல்ல,
“இது எப்ப?”, ஆச்சரியமாய்க் கேட்டான் ஆதி.
“அது ரொம்ப வருஷம் இருக்கும். உனக்கு ஒரு பத்து வயசிருக்கும்னு நினைக்கறேன். அதுக்கப்பறம் என்ன நடந்துச்சோ? இப்ப பாட்டி சாவுல கூட ரெண்டு பேரும் பேசிக்கவேயில்லை.”
“ஹ்ம்ம்…”
“உன்னால முடியலைன்னா நான் பேசறேன் உங்கப்பாகிட்ட. இப்ப ப்ரச்சனை அதில்லை. மது முழு மனசா உங்கிட்ட மதுவை சம்மதம் சொல்ல வை. உணர்வு பூர்வமா ரெண்டு பேரும் ஒரு அலைவரிசைல இல்லன்னா, மத்திம வாழ்க்கை வறண்டு போயிரும் ஆதி. “
“அது ஏன்மா மத்திம வாழ்க்கைன்னு சொல்றீங்க?”
“முதல் பத்து வருஷம் பிள்ளை பேறு, குழந்தை வளர்ப்புன்னு ஓடிடும் ஆதி. அப்பறம்தான் ரெண்டு பேருக்கும் தங்களுக்குன்னு கொஞ்சம் நேரம் கிடைக்கும். அப்ப ஒரு ஒட்டுதல் இல்லைன்னா, அப்படியே தனித் தனி தீவா நின்னுடுவோம். நெறி தவறிப்போறதெல்லாம் இந்த இடைவெளி அதிகரிக்கறப்போதான். எவ்வளவுதான் வாழ்க்கை பிசியா இருந்தாலும் அந்த உணர்வு அலைவரிசை ரெண்டு பேருக்குள்ளையும் ஓடிகிட்டு இருந்தா எப்பவும் ஒருத்தர் மேல் ஒருத்தர் பிடிப்பு இருக்கும். அதுக்குன்னு பெருசா கூட மெனக்கெட வேண்டாம். அடுத்தவங்க பிடித்தம் பார்த்து சின்ன சின்ன விஷயம் செய்தாக் கூட உயிர்ப்போட வெச்சக்கலாம்.“, பேசிக்கொண்டே போனவர், சட்டென சிரித்து,
“போ…உங்கிட்டயே லெக்சர் குடுக்க ஆரம்பிச்சுட்டேன்.”, என்றார்.
“இதுவும் இன்ட்ரெஸ்டிங்காத்தான் சொன்னீங்கம்மா. நான் கண்டிப்பா யோசிக்கறேன். ஆனா மது உங்க மருமகளா வரது உங்களுக்கு சந்தோஷம்தானே?”, ஆதி தலை சாய்த்துக் புன்சிரிப்புடன் கேட்க,
“எனக்கு சந்தோஷம்தான்டா. அதைத்தான் நான் குன்னூர்லயே கேட்டேன். நீங்க ரெண்டு பேரும்தான் பிடியே குடுக்கலை.”, அவன் தலை கலைத்து எழுந்து கொண்டார்.
“என்னை விட்டுட்டு நீ ஆபிஸ் போ. பத்து நிமிஷத்துல நான் கிளம்பி வரேன்.”, என்று செல்லவும், ஆதியும் கிளம்பப் போனான்.
போகும் வழியில், “அம்மா, இன்னிக்கு மது போன் செய்வா உங்களுக்கு. செய்யும் போது, சபரிகிட்ட அவளைப் பத்திக் கேட்டதா சொல்லுங்க. நாம் பேசிகிட்டதா காட்டிக்க வேண்டாம். நீங்க உங்க லெக்சர் பத்தி பேச கூப்பிட்டதாவே இருக்கட்டும். “
“அது அவ கேக்கறதைப் பொருத்து ஆதி. ஆனால் உன் விருப்பம் நீ சொல்லாம அவகிட்ட நான் சொல்லமாட்டேன். அது மட்டும்தான் உறுதி குடுப்பேன்.” என்று கூறிவிட்டார் சரஸ்வதி.
மதியம் மூன்றரை மணி போல மதுவிடமிருந்து போன் வந்தது சரஸ்வதிக்கு.
“ஹலோ..”
“அத்தை… நான் மது பேசறேன். எப்படி இருக்கீங்க?”, சற்று தயங்கி வந்தது மதுவில் குரல்.
“ஹான்… எல்லாரும் நல்லாருக்கோம் அத்தை. வந்து… சாரி …உங்க போன் பார்த்து நான் திரும்பக் கூப்பிடாதது தப்புதான்.”, வருத்தமாய்க் கூறினாள் மது.
“ஏன் மது கூப்பிடலை?”
“இல்லை அத்தை. நான் கொஞ்சம் குழப்பத்தில இருந்தேன். “
“இப்ப குழப்பம் தீர்ந்துடுச்சா மது?”
“அத்தை…”, தயக்கமாய் மது இழுக்க…
“மது… உனக்கும் ஆதிக்கும் இடையில எதுவும் மனஸ்தாபம்னா, அவனைப் பத்தி நாம் பேச வேண்டாம். உங்க இடையில நான் வரமாட்டேன். இல்லை அவனைக்கொண்டு நாம் பேச வேண்டாம்னு நீ நினைச்சா, சொல்லும்மா. தப்பில்லை.”
“அச்சோ…அப்படியெல்லாம் இல்லை அத்தை. நாம் பேசலாம். எது பத்தி வேணாலும் பேசலாம்.”, அவசரமாய் ஒப்புக்கொடுத்தாள் மது.
“ஓஹ்… அப்போ ஆதிக்கு இப்ப ஒரு புது ஹாபி வந்திருக்கு. அதைப் பத்தி சொல்லட்டுமா?”, சரஸ்வதி சிரிப்புடன் கேட்க,
தன்னையும் மீறி ஆவல் உந்த, “என்ன ஹாபி அத்தை?”, என்றாள் குரலிலும் ஆர்வம் தெரிய.
கேட்க மிகவும் சந்தோஷமாயிருந்தது மதுவிற்கு. அதையே கூறவும் செய்தாள்.ஆனாலும் தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை என்று மனதோரம் கொஞ்சம் வலித்தது. ‘நீ அவனை தட்டி கழிச்சதுக்கப்பறம் இதையெல்லாம் எதிர்பார்க்காதே மனமே’, என்று அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக்கொண்டாள்.
பேச்சு அதன்பின் சரஸ்வதியின் சொற்பொழிவு பக்கம் சென்றது. முடிவில் ஆன்-லைனில் அவர் பேசவும், கம்ப்யூட்டர் திரையை முதியோர் இல்ல டீ.வியில் இணைத்து, அனைவரும் பார்க்க ஏதுவாக செய்து, அதில் அவர் பேச, லைவ்-ஷோவாக நடத்தலாம் என்று முடிவு செய்தார்கள்.
“சபரி பெங்களூரு வந்ததும் செய்யலாம்மா. நான் ஆதிகிட்ட பேசறேன். நீ டாபிக் அனுப்பு.”, என்று பேசிவிட்டு வைத்தார்.
சரஸ்வதியிடமிருந்து போன் வரவும், தான் இருந்த மீட்டிங்கை விட்டு , “யூ கேரி ஆன். வில் பீ பாக்.”, என்று எழுந்து வெளியில் வந்தான்.
“ஹலோ சொல்லுங்கம்மா. மது பேசினாளா? என்ன சொன்னா?”
“மூச்சு விடுடா. பேசினா. முதல்ல கொஞ்சம் தயக்கமாத்தான் பேசினா. திரும்ப கூப்பிடாததுக்கு சாரி கேட்டா.”
“ஓஹ்.. என்னைப் பத்தி எதுவும் கேட்டாளா?”, ஆர்வம் அவனையும் மீறி குரலில் வெளிப்பட்டது.
“உன்னைப் பத்தியும் பேசினோம். உன் புது ஹாபி பத்தி சொன்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டா.
“ஏன்மா சொன்னீங்க?”
“ஏன் சொல்லக் கூடாது? அவ மூலம் வந்த ஒரு நல்ல பழக்கம். அதுக்கான க்ரெடிட் அவளுக்கு போகறதுதானே நியாயம்?”
“இல்லை… அது… நான் சொல்லலாம்னு இருந்தேன்.”
“நீ யோசிச்சு, மீன மேஷம் பார்த்து சொல்ற வரைக்கும் நான் சொன்ன விஷயம் அவளை கொஞ்சம் சந்தோஷமா வெச்சிக்கும். அவ குழப்பத்துல இருந்ததா சொல்றா. அது உன்னாலன்னும் போது, இன்னுமே தீர்ந்திருக்காதுன்னுதான் தோணுது. ரொம்ப நாள் கடத்தாதே ஆதி. அவ்வளவுதான் சொல்வேன்.”, கறாரய் ஒலித்தது சரஸ்வதியின் குரல்.
“ம்ம்.. பேசினோம். அதெல்லாம் நீ வீட்டுக்கு வந்தப்பறம் பேசிக்கலாம். இப்ப உன் வேலையைப் பார்.”, என்று வைத்துவிட்டார்.
மறு நாள் காலை நேரத்துப் பரபரப்பில் அலுவலகத்தில் இருந்தான் ஆதி. இன்டெர்காமில் ஒலித்த ரிசப்ஷனிஸ்ட் குரல், “சர், மிஸ்டர். மனோகர் சென்னையிலிருந்து, பெர்சனல் சொன்னார். கனெக்ட் செய்யவா?”
மதுவின் அப்பா என்றதும் துணுக்குற்றான். அவனுக்கு ஏன் அதுவும் ஆபிஸ் நம்பரில், காலைப் பொழுதில் என்று எண்ணம் ஓடினாலும், “கனெக்ட் “, என்றான்.
“ஹலோ ஆதி, வேலை நேரத்தில தொந்தரவு செய்யறேன். சாரிப்பா. உன் மொபைல் நம்பர் தெரியாது. அதான்.”, என்றார் மனோகர்.
“பரவாயில்லை மாமா. மதுகிட்ட இருக்குமே என் நம்பர்?”
ஆதியின் கேள்வியை உள்ளுக்குள் மெச்சியவர், “ஹ்ம்ம்… அவளுக்குத் தெரியாமத்தான் உனக்கு போன் செய்யறேன்.”, என்று அவன் கேட்க்காமல் கேட்ட கேள்விக்கும் சேர்த்து பதில் அளித்தார்.
“என்ன விஷயம் மாமா. மது ஓகேதானே?”, கொஞ்சம் கவலை எட்டிப்பார்த்ததோ குரலில்? மனோகரால் உறுதியாய் சொல்ல முடியவில்லை.
“அவள் எதுவோ நினைச்சு மறுகறா ஆதி. நான் கேட்டதுக்கு எதுவும் சரியா பதில் சொல்லலை. உனக்கெதுவும் தெரியுமா?”, என்றார் மனோகர்.
‘என்கிட்டயேவா?’, என்று நினைத்த ஆதி, ‘மாமா இது அவ பர்சனல். நான் என்ன சொல்ல? நீங்க அவகிட்டதான் கேட்கணும்.”, நழுவினான்.
“ஆதி, இந்த பிஸ்னஸ் டாக் வேண்டாம். நான் உங்க ரெண்டு பேரோட குன்னூர் போட்டோஸ் பார்த்தேன். அவ உன்னை விரும்பறாளா? நீ முடியாதுன்னு சொன்னியா?”, பொறுமையின்றி உடைத்துக் கேட்டார்.
“போட்டோஸ் பார்த்தேன்னு சொன்னீங்க. உங்களுக்கு எப்படி தோணுது? ஒரு பொண்ணை ஆசை காட்டி கழட்டி விடற மாதிரி தெரியறேனா?”, குரலில் கொஞ்சம் காரம் வந்திருந்தது ஆதியிடம்.
“அதை நம்ப முடியாமத்தான் உன் கிட்ட நேரடியா கேட்கறேன் ஆதி. என்ன ப்ரச்சனை உங்க இரண்டு பேருக்கும்? “
மனோகர் அப்படி சொன்னதும், சற்று இறங்கி வந்தவன், “எனக்கும் இஷ்டம்தான். ஆனா மது தள்ளிப் போறா. எங்கப்பா உங்களை மரியாதையா ட்ரீட் பண்ணமாட்டார். என்னை கல்யாணம் செய்தால், பெண்ணுக்காக உங்க மரியாதை குறைவை நீங்க பொறுத்துப் போகணும். முடியாதுங்கறா. இந்த மாதிரி சில கண்டிஷன்ஸ். “
“அட கிறுக்குப் பெண்ணே…”, வாய்விட்டே கூறினார் மனோகர். “அதுக்காக அவளை அப்படியே விட்டுட்டியா ஆதி. எடுத்து சொல்ல மாட்டியா?”
ஊஃப் என்று ஊதியவன், “ மாமா இது மட்டுமில்லை அவ ப்ரச்சனை. ஆனா அவ சொன்னதை சரி செய்தாதான் நான் அடுத்து யோசிக்க முடியும். முதல்ல, எங்க ரொட்டீன் வாழ்க்கைக்கு திரும்பினா இந்த ஈர்ப்பு எல்லாம் மறைஞ்சிடும்னு சொன்னா. அதனால அவளுக்கு முதல்ல புரியட்டும்னுதான் விட்டு வெச்சிருக்கேன்.”
“உங்கப்பனை எப்படி சரி கட்டறதுன்னு எனக்குத் தெரியும். நான் அடுத்த வீக்கெண்ட் பெங்களூரு வரேன். ஞாயிறு அவன் கிளப்புக்கு வருவாந்தானே?”
“ஆமாம்.”
“அங்க வெச்சி பேசிக்கறேன். அவன் கோவத்துனால எனக்கென்னன்னு விட்டிருந்தேன். எப்ப அது என் பொண்ணு ஆசைக்கு இடையில வருதோ, அதை சரி செய்துடறேன்.”
‘அடப் பாவி மனுஷா, மலையப் பொறட்டணும்னு நெனைச்சா, நான் பார்த்துக்கறேன்னு ஈசியா சொல்றார்’, என்று நினைத்த ஆதி, “சரி மாமா. இதை நீங்க சால்வ் செய்துட்டீங்கன்னா, மிச்சம் நான் பார்த்துக்கறேன்.”, என்று உறுதியளித்தான் ஆதி.
“சரி உன் மொபைல் நம்பர் குடு. ஞாயிறு, உங்கப்பா கிட்ட பேசிட்டு நான் உனக்கு போன் செய்யறேன்.”, என்று வாங்கிக்கொண்டு வைத்தார்.