மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த நடிகர் லிங்கேஷின் அந்த பெரிய பங்களா. வாட்ச்மேனிடம் பிரபஞ்சனின் கார்டை இன்பா நீட்ட, இன்டர்காமில் பேசிவிட்டு கேட்டை திறந்து விட்டான் வாட்ச்மேன். வெளியே இருந்த அந்த தோட்டத்தை தாண்டி வீட்டை சென்று அடையவே ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டியிருந்தது.
வியந்து பார்த்துக் கொண்டே, இன்பா, தர்ஷினி, நசீர் மூவரும் வீட்டை வந்தடைந்தனர். யாரோ வந்து உபசரித்தார்கள். மூவருக்கும் பழச்சாறு வழங்கப்பட்டது. 15 நிமிட நேர காத்திருப்புக்கு பின்னர் நடிகர் லிங்கேஷ் வந்தான்.
40 வயதில் இருந்தாலும் வயதுக்கு மீறிய முதிர்ந்த தோற்றம். கண்களின் சிவப்பு பயம் கொள்ள செய்வதாய் இருந்தது. முன் தலை வழுக்கை விழுந்திருந்தது. இன்னும் தன் நகைச்சுவையால் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகன் லிங்கேஷ் இவன்தானா என தர்ஷினியும் நசீரும் வியப்பாய் பார்த்திருந்தனர். முதல் முறை அவனை பார்த்த பொழுது இன்பாவுக்கு கூட அப்படித்தான் இருந்தது. இப்போது அந்த வியப்பு இல்லை.
இன்பாவை ஏற்கனவே லிங்கேஷ் பார்த்திருந்ததால் அவனை நன்றாக தெரிந்திருந்தது. லிங்கேஷ் வந்ததும் மூவரும் எழுந்து நின்றார்கள்.
“உட்காருங்க… ப்ளீஸ் எல்லாரும் உட்காருங்க” எனக் கூறி தானும் அமர்ந்து கொண்டான் லிங்கேஷ்.
“பிரபஞ்சன் சார் என்னோட ஃபேன்ஸ்ன்னு சொன்னார். நீங்க என்னடான்னா பத்திரிகைக்காரங்கல கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கீங்க?” என முகத்தில் சற்று கடுமையுடன் கேட்டான் லிங்கேஷ்.
“ஏன் சார் பத்திரிக்கையிலே வேலை பார்க்கிறவங்க உங்க ஃபேன்ஸா இருக்கக் கூடாதா?” எனக் கேட்டாள் தர்ஷினி.
“ஆமாம் சார், நான் எல்லாம் உங்களோட பெரிய ரசிகன்… இல்லையில்லை வெறியன்…” என்றான் நசீர்.
லிங்கேஷின் முகத்தில் பெருமை தாண்டவமாடியது. நசீர் வரிசையாக அவன் நடித்த திரைப்படங்களின் பெயர்களைக் கூறி, அதில் வந்த நகைச்சுவை காட்சிகளை கூறி, “சான்சே இல்ல சார். எப்போ டல்லா ஃபீல் பண்ணினாலும் இதையெல்லாம் பார்த்தா போதும். உடனே எனர்ஜி வந்திடும்” என்றான்.
‘இவனா பேசுறானா…? இல்லை இவ ட்ரெயினிங் கொடுத்து அழைச்சிட்டு வந்திருக்காளா?’ என பார்த்துக் கொண்டிருந்தான் இன்பா.
“நாங்க மட்டும் இல்லை சார். உங்களோட டை ஹார்ட் ஃபேன்ஸ் லட்சக்கணக்கான பேர் இருக்காங்க. நீங்க ஃபீல்ட விட்டுப் போய் கிட்டத்தட்ட ஆறேழு வருஷம் ஆயிடுச்சு. உங்களைப் பத்தி எந்த டீடெயில்ஸ்ம் யாருக்கும் தெரியாது. எங்க செங்கதிர் பத்திரிக்கைக்கு ஒரு இண்டர்வியூ கொடுத்தீங்கன்னா உங்க ஃபேன்ஸ் எல்லாரும் சந்தோஷப்படுவாங்க” என்றாள் தர்ஷினி.
“சாரி நான் எந்த இன்டர்வியூவும் கொடுக்கிறது இல்லை” என எழுந்துகொண்டான் லிங்கேஷ்.
“உங்களைப் பத்தி தப்பு தப்பா நிறைய ரூமர்ஸ் வருது. இந்த பேட்டி மூலமா எல்லாத்துக்கும் ஒரு ஃபுல் ஸ்டாப் வைக்கலாம்” என்றாள் தர்ஷினி.
லிங்கேஷ் அவனை பற்றி வெளியில் உலவி வரும் செய்திகளை அறிந்து வைத்திருந்தான். சொல்லப்போனால் அவை யாவும் புரளி என்று சொல்லிவிட முடியாது. உண்மையும் இருக்கத்தான் செய்தது.
“உங்களுக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு. இந்த பேட்டி மூலமா மக்கள் மனசுல அந்த இமேஜை தக்க வச்சுக்கலாம்” என்றாள் தர்ஷினி. இன்பா எதிலும் பட்டுக் கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, பேசிப்பேசியே அவனை ஒத்துக்கொள்ள செய்துவிட்டாள் தர்ஷினி.
பேட்டி ஆரம்பமானது. ரெக்கார்டரை ஆன் செய்து வைத்துக்கொண்டு பேட்டி எடுத்தாள் தர்ஷினி. அரை மணி நேரத்தில் பேட்டி நிறைவடைந்தது. நசீர் ஃபோட்டோ எடுக்க கேட்க, கண்களுக்கு கூலர்ஸ்ம், தலைக்கு தொப்பியும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்தான் லிங்கேஷ்.
ரெக்கார்டரை கைப்பையின் உள்ளே பத்திரப்படுத்திய தர்ஷினி,
“உங்ககிட்ட ஒரு பைவ் மினிட்ஸ் பர்சனலா பேசலாமா?” எனக் கேட்டாள்.
வெகு வருடங்களுக்கு பிறகு அவனுடைய திரைத்துறை வாழ்க்கையை பகிர்ந்து கொண்டதாலோ என்னவோ லிங்கேஷின் மனம் லேசாக இருக்க “சொல்லுங்க” என்றான்.
“இந்த உலகத்தில இருக்கிற எல்லா உயிரும் ஏதோ ஒரு காரணத்துக்காகதான் படைக்கப்பட்டிருக்கு. என்னோட பிறப்புக்கு, உங்களோட பிறப்புக்கு இன்னும் விலங்குகள், பறவைகள் புழு, பூச்சி எல்லாத்தோட பிறப்புக்குமே ஒரு ரீசன் இருக்கும். உங்க பிறப்புக்கு என்ன ரீசன்னு நான் நினைக்கிறேன் தெரியுமா? மக்களை சிரிக்க வச்சு எண்டர்டெயின்மெண்ட் பண்றது. எத்தனை லட்சக்கணக்கான மக்களோட மன அழுத்தத்துக்கு நீங்க மருந்தா இருக்கீங்க தெரியுமா?”
“இதையெல்லாம் விட்டுட்டு உங்களை நீங்களே இப்படி அழிச்சிக்கிறது சரியா? ஒருத்தவங்க இறப்புக்கு பின்னாடி அவங்க என்ன ஆகுறாங்கன்னு விஞ்ஞானம் இன்னும் கண்டுபிடிக்கலை. ஒருவேளை அவங்களால நம்ப பார்க்க முடிஞ்சதுன்னா… உங்களோட இந்த நிலையை பார்த்து கண்டிப்பா உங்க மனைவியும் மகனும் சந்தோஷப்பட மாட்டாங்க. அஃப்கோர்ஸ் நாங்களும் சந்தோஷப்படலை” என்றாள்.
லிங்கேஷ் அமைதியாக உட்கார்ந்திருந்தான். தர்ஷினி தன்னுடைய கைப்பேசியை எடுத்து ஒரு காணொளி காட்சியை காட்டினாள்.
“என்ன இது?”
“நீங்க பிறந்து வளர்ந்த இடத்தில இந்த அஜந்தா கெமிக்கல் ஃபேக்டரி இருக்கு” என்றவள் அந்த தொழிற்சாலை பற்றியும் அதன் கழிவுகளால் ஏற்படும் விளைவுகளை பற்றியும் விளக்கினாள். சமூக ஆர்வலர் சத்ரியன் எழுதிய ஆய்வுக் கட்டுரையை காட்டினாள்.
“இதைப் பத்தி நீங்க பேசினீங்கன்னா மக்களுக்கு அவார்னஸ் கிடைக்கும். ஈசியா எல்லோருக்கும் ரீச் ஆகும். இது நான் உங்ககிட்ட கேட்கிற உதவி இல்லை. இது உங்களோட கடமை” என பேசிவிட்டு அவன் முகத்தை பார்த்தாள்.
இன்பாவும் நசீரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களிடம் முன்பே இதைப் பற்றி தர்ஷினி எதுவும் கூறவில்லை. லிங்கேஷ் என்ன சொல்லப் போகிறான் என ஆர்வமாக மூவரும் பார்க்க,
“இப்பவே பேசுறீங்களா?” என ஆர்வத்துடன் கேட்டாள் தர்ஷினி.
“நல்லது ஏதாவது பண்ணனும்னு முடிவு பண்ணிட்டா உடனே பண்ணிடனும். இல்லன்னா மனசு மாறிடும்” என சிரித்தான் லிங்கேஷ்.
பத்து நிமிடங்களில் பேச வேண்டியதை தர்ஷினி எழுதித்தர, வாங்கிக்கொண்ட லிங்கேஷ் 5 நிமிடங்களில் தயார் என்றான்.
அவனுடைய பாணியில் நகைச்சுவை கலந்து, சொல்ல வேண்டியதை ஐந்து நிமிட காணொளியில் சொல்லிவிட்டான். ஒருமுறை ஓட்டிப் பார்த்த தர்ஷினி, உடனே யூடியூபில் பதிவேற்றமும் செய்து விட்டாள்.
இவர்கள் மூவரும் கிளம்ப, “தேங்க்ஸ்… தேங்க்ஸ் ஃபார் யுவர் அட்வைஸ்” என தர்ஷினியிடம் கூறி வழியனுப்பி வைத்தான் லிங்கேஷ்.
‘தன்னிடம் வம்பு செய்து கேலி பேசும் சிறிய பெண் அல்ல இவள். எவ்வளவு தெளிவு. அவளின் பேச்சில் எத்தனை முதிர்ச்சி’ என பெருமையாக தர்ஷினியைப் பார்த்தான் இன்பா.
ஆறு வருடங்களுக்கும் மேலாக, லிங்கேஷ் பற்றிய எந்த தகவலும் இல்லாமல், யூடியூபில் அவன் பேசிய காணொளி வரவும், சில மணி நேரங்களிலேயே அந்த காணொளி ட்ரெண்டிங் ஆனது. செய்தி சேனல்களில் மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டப்பட்டது. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவற்றிலும் பகிரப்பட்டது. பல செய்தி சேனல்கள் அந்த தொழிற்சாலை இருக்கும் இடத்தில் முகாமிட்டு செய்திகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தன.
ஏற்கனவே அந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த மக்கள், தொழிற்சாலை கழிவுகள் மூலமாக ஏதாவது உடல் உபாதைக்கு ஆளாகிக் கொண்டுதான் இருந்தனர். அவர்களுடைய முக்கிய தொழில் மீன் பிடித்தல்தான். இந்த தொழிற்சாலையை மூட வேண்டும் என்று அங்குள்ள மக்கள் தொலைக்காட்சி மூலமாக அரசுக்கு கோரிக்கை வைத்துக்கொண்டிருந்தனர்.
இதை இப்படியே விட்டால் மக்கள் புரட்சி ஏற்பட போகும் அபாயம் இருப்பதாக அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை செய்ய, சுற்றுப்புற சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சிபாரிசின் பெயரில் 10 நாட்களில் தற்காலிகமாக அந்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.
தொலைக்காட்சியில் அது பற்றிய செய்தி ஓடிக் கொண்டிருக்க பிரபஞ்சன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மனைவி பூரணி, “என்ன டிவி முன்னாடி அப்படியே உட்கார்ந்து இருக்கீங்க… கோர்ட் கிளம்பலையா?” எனக் கேட்டார்.
“ம்…ம்… போகணும்” என்று மட்டும் சொன்னார். இன்பாவும் பஷீரும் உள்ளே வந்தனர்.
“மாமா நியூஸ் பார்த்திங்களா…? எல்லாம் தர்ஷினியோட வேலை” என பெருமையாக கூறினான் இன்பா.
“அப்படியா…? தர்ஷினி என்ன பண்ணினா?” எனக்கேட்டார் பூரணி.
இன்பா விளக்கமாக சொல்ல, “பரவாயில்லையே தர்ஷினிய என்னமோன்னு நினைச்சேன். கலக்கிட்டா” என சிரித்த முகத்துடன் கூறி உள்ளே சென்றார் இன்பாவின் அத்தை பூரணி.
“இன்பா இந்த ஃபேக்டரிய மூடி சீல் வச்சுட்டாங்க இல்லை” எனக் கேட்டார் பிரபஞ்சன்.
“ஆமாம் மாமா” என்றான் இன்பா.
“சும்மா சின்ன சின்ன கேஸா பார்த்துகிட்டு இருந்த. இப்ப பெரிய கேஸ் உனக்கு வரப் போகுது. இந்த ஒரு கேஸ் போதும் நீ ஃபேமஸ் ஆகுறதுக்கு” என்றார் பிரபஞ்சன்.
“என்ன இந்த கெமிக்கல் ஃபேக்டரி கேஸ்லையா?” என தயக்கத்துடன் கேட்டான் இன்பா.
“ஆமாம்” என்றார் பிரபஞ்சன்.
“மாமா இந்த ஃபேக்டரி கழிவுகளால நிறைய ஆபத்துன்னு….” என இன்ப சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனை தடுத்து நிறுத்தினார் பிரபஞ்சன்.
“இங்க பாரு இன்பா. நீ ஒரு லாயர். குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி ஒரே திசையில் பார்க்கக்கூடாது. ஒரு விஷயத்தில் இருக்கிற சாதகம் பாதகம் எல்லாத்தையும் அக்குவேறு ஆணிவேரா அலசி ஆராயனும். இந்த ஃபேக்டரி மூடுனதனால எத்தனை ஒர்க்கர்ஸோட வேலை போயிடுச்சு தெரியுமா? அவங்களோட வாழ்வாதாரம் என்ன ஆகிறது? ஒரு இன்டஸ்ட்ரிய கிளோஸ் பண்ணும் போது கவர்மெண்ட்க்கு எவ்ளோ இழப்பு தெரியுமா? இதையெல்லாம் பாரு. அதுமட்டும் இல்லை இந்த கேஸ்க்காக மணிஷ் பாண்டே நமக்கு கொடுக்கிற ஃபீஸ் எவ்வளவு தெரியுமா? நான் கைட் பண்றேன். நீதான் நடத்துற” என்றார்.
இன்பா அப்பொழுதும் தயக்கத்துடனே பார்க்க,
“ஒரு தவறு நடந்த உடனே அதை மூடிட்டா பிரச்சனை சரியாகுமா? இது ஏதோ அஜாக்கிரதைல்ல நடந்திருக்கு. எல்லாத்தையும் சரி செஞ்சுடுவாங்க. நீ முதல்ல கேவியட் மனு இன்னைக்கே மனிஷ் பாண்டே சார்பில் கோர்ட்டில் அப்ளை பண்ணு. கேஸ் ஹியரிங் வரும்போது நீதான் எடுத்து நடத்துற” என குரலிலே ஒரு கண்டிப்புடன் கூறினார்.
அன்று மாலையில் இன்பாவும் பஷீரும் வீட்டில் இருக்க, இனிப்புடன் உள்ளே வந்தாள் தர்ஷினி. இருவரிடமும் இனிப்பு டப்பாவை நீட்டினாள்.
“ஸ்வீட் கொடுக்கிற அளவுக்கு இன்பாவுக்கு என்ன?” எனக் கேட்டான் பஷீர்.
“லிங்கேஷ் பார்க்க இன்பாதான் ஹெல்ப் பண்ணினான். அதனாலதான் என்னால இன்டர்வியூ பண்ண முடிஞ்சது. அது மட்டும் இல்லை, அஜந்தா கெமிக்கல் ஃபேக்டரி க்ளோஸ் பண்றதுக்கு பேசிக்கா இருந்ததே லிங்கேஷ் பேசின வீடியோதான். எல்லாத்துக்கும் காரணம் இன்பாதானே… இன்னொன்னும் இருக்கு” என்றவள் தன் கைப்பையில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து காட்டினாள்.
“இதென்ன?” எனக் கேட்டான் பஷீர்.
“ஆக்டர் லிங்கேஷ் எனக்கு நன்றி சொல்லி அவர் கைப்படவே அவருடைய லெட்டர் பேட்ல எழுதி சைன் பண்ணி கொடுத்திருக்கார்” என்றாள்.
இன்பா கையில் வாங்கிப் பார்த்தான். தன் பிறப்பிற்கான காரணத்தை அறிந்து கொண்டதாகவும், அதை உணர உதவி செய்த சகோதரிக்கு நன்றிகள் எனவும் அதில் எழுதப்பட்டிருந்தது. விரைவில் புதிய பட அறிவிப்பு வரும் எனவும் குறிப்பிட்டிருந்தான். பஷீரும் வாங்கிப் பார்த்தான்.
“எப்படி…?” என கண்களில் பெருமை மிளிர தர்ஷினி கேட்க, “அப்போ உனக்கு மட்டும் லிங்கேஷ் படத்துக்கு பிரிவ்யூ ஷோவுக்கு ஸ்பெஷல் பர்மிஷன் கிடைக்கும் போல” என்றான் இன்பா.
“அப்படி மட்டும் கிடைச்சது… உன்னையும் அழைச்சிட்டு போறேன். பொழச்சிப் போ” என்றாள்.
பின் தான் கொண்டு வந்திருந்த, மற்றொரு பையை எடுத்தாள். அதிலிருந்து பெரிய புத்தகம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“என்னோட புக். நான் காணோம்னு ஒன் வீக்கா தேடிக்கிட்டு இருந்தேன். இது உன்கிட்ட எப்படி?” எனக் கேட்டான் இன்பா.
“எனக்கு என்ன எல்லாம் டாஸ்க் கொடுத்து கடுப்பேத்தின… அதுக்கு பழிவாங்க நான்தான் எடுத்தேன். இதை இப்போதைக்கு உன்கிட்ட கொடுக்கிறதா ஐடியாவே இல்லை. ஆனா இப்போ நான் ஹேப்பி மூடுல இருக்கேன். அதனால தரேன். வாங்கிக்க” என்றாள்.
முறைத்துக் கொண்டே இன்பா வாங்கி வைத்தான்.
பையிலிருந்து புத்தம்புதிய வெள்ளை சட்டை ஒன்றை எடுத்தாள்.
“ஹேய்… இது என்னோட ஷர்ட்” என்றான்.
“டெய்லி குப்பை எடுக்க வர அண்ணா, புது துணி ஏதாவது இருந்தா கொடுன்னு கேட்டார். அவருக்கு கொடுக்குறதுக்காக எடுத்தேன். நேத்து சுபாஷினி கூட சண்டை போட்டேன்னு அப்பா திட்டினார். இன்னைக்கு காலையில அவரோட சட்டையை எடுத்துக் கொடுத்துட்டேன். இப்போதைக்கு இதுக்கு வேலை இல்லை. நீயே வச்சுக்கோ” என்றாள்.
“இந்த ஷர்ட்டோட விலை தெரியுமாடி உனக்கு?” என கேட்டுக் கொண்டே அதையும் கையில் வாங்கியவன் “என் ரூமுக்கு போய் இன்னும் என்னென்ன காணோம்னு பார்க்கணும்” என்றான்.
“அவசியம் இல்லை இன்பா. இது ரெண்டு மட்டும்தான் எடுத்தேன்” என கூறிக்கொண்டே பையிலிருந்து பாலிதீன் பையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளை சீனியை எடுத்து தந்தாள்.
“இது எதுக்குடி?”
“அம்மா ரேசன்ல வாங்கி வச்சிருந்த சீனி. அப்பாவுக்கு சுகர் இருக்குன்னு அவங்க யூஸ் பண்றது இல்லை. நாட்டு சர்க்கரைதான்”
“என் அப்பாவுக்கும் சுகர் இருக்குடி”
சிரித்த தர்ஷினி, “ஐயோ இன்பா… இது யூஸ் பண்றதுக்காக கொண்டு வரலை. வீட்டுல இருந்தா எனக்கு மனசு மாறினாலும் மாறிடும். அதான் இங்க இருக்கட்டும்னு எடுத்துட்டு வந்தேன்”
“என்ன மனசு மாறும். புரியற மாதிரி சொல்லு” என்றான் பஷீர்.
“இவன் என்னை ஓவரா டார்ச்சர் பண்ணினானா… அதான் இவன் பைக்கோட பெட்ரோல் டேங்கில் கொட்றதுக்காக…” என தர்ஷினி கூறவும், “இன்னும் என்னென்னடி பிளான் பண்ணி வச்சிருக்க. எல்லாத்தையும் சொல்லு” என்றான் இன்பா.
பஷீர் அந்த புத்தகத்தையும் சட்டையையும் பையிலேயே மீண்டும் வைத்து “இந்த சுகரையும் இதிலேயே வச்சி பத்திரமா வச்சுக்க. உனக்கு தேவைப்படும் தர்ஷினி” என்றான்.
தர்ஷினி பஷீரை குழப்பமாக பார்க்க, தொலைக்காட்சியை ஆன் செய்து செய்தி சேனலை வைத்தான் பஷீர். அஜந்தா தொழிற்சாலை உரிமையாளர் மணிஷ் பாண்டே சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
“இதென்ன?” எனக்கேட்டாள் தர்ஷினி.
“கோர்ட்ல வரப்போற தீர்ப்புனாலே பாதிப்பு ஏற்படும்ன்னு நினைக்கிற நிறுவனமோ இல்லை தனியாளோ இல்ல ஒரு அமைப்போ, எங்களை கலந்தாலோசிக்காமல் தீர்ப்பு சொல்ல கூடாதுன்னு முன்னெச்சரிக்கை மனு கொடுக்கிறது” என்றான்.
“நல்லா கலந்து ஆலோசிச்சிட்டு தீர்ப்பு சொல்லட்டும். சத்ரியன் சார் பொதுநல வழக்கு போட்டிருக்கிறார். கண்டிப்பா எல்லா ஆதாரமும் அவங்களுக்கு எதிரா இருக்கும். அவங்க பக்கம் தீர்ப்பு ஆகாது. நீங்க என்ன நினைக்கிறீங்க?” என பஷீரிடம் கேட்டாள் தர்ஷினி.
பஷீர் இன்பாவின் முகத்தை பார்க்க, “உங்களை கேட்டா நீங்க ஏன் அவன் மூஞ்சிய பார்க்கிறீங்க?” என்றாள் தர்ஷினி.
“அவங்க சார்பில் இன்பாதானே வாதாட போறான். என்னை விட அவனுக்குதான் இதைப் பற்றி அதிகம் தெரிஞ்சிருக்கும்” என்றான் பஷீர்.
“விளையாடாதீங்க அண்ணா” என்றாள் தர்ஷினி. பஷீரின் பார்வையே அவன் விளையாடவில்லை என்பதை தர்ஷினிக்கு உணர்த்த, இன்பாவைப் பார்த்து,
“அண்ணா சொல்றது உண்மையா?” எனக் கேட்டாள்.
இன்பா வாயை திறந்து பேசாமல் ‘ஆமாம்’ என்பது போல மேலும் கீழுமாய் தலையாட்ட கோவமாய் அங்கிருந்து வெளியேறினாள் தர்ஷினி.
“நில்லுடி” என கத்திக்கொண்டே அவள் பின்னால் ஓடினான் இன்பா.
தர்ஷினி வெளியே சென்று கேட்டை திறக்க முயல, அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான்.
பிரபஞ்சன் இந்த வழக்கை எடுத்து நடத்துவதற்காக கூறிய காரணங்களை அவளிடம் கூறி, “இந்த கேஸை எடுத்து நடத்தி ஜெயிச்சா எனக்கு நல்ல க்ரோத் கிடைக்கும்” என்றான்.
“தப்புக்கு துணை போய்தான் நீ வளரணுமா?” எனக் கேட்டாள்.
“தப்பா ரைட்டான்னு நீ முடிவு பண்ணாத. ஒரு ஃபேக்டரியை திடீர்னுன்னு மூடுனா எவ்ளோ பாதிப்புகள் ஏற்படுது தெரியுமா உனக்கு? கண்டிப்பா எல்லாத்தையும் சரி செஞ்சுடுவாங்க. நான் எந்த தப்பும் செய்யலை” என்றான்.
“இது தப்புதான் இன்பா. வொர்க்கர்ஸ்க்கு வேலை போச்சுன்னா வேற வேலை தேடிக்கலாம். ஆனா இந்த ஃபேக்டரியில் இருந்து வர்ற கெமிக்கல் வேஸ்ட்னால ஏற்படும் பாதிப்புகள் ரொம்ப பெருசு. நீ சொல்ற மாதிரி அவங்களால சரி செய்ய முடியாது. ஐ வாஷ் மாதிரி கொஞ்ச நாளைக்கு சரி செஞ்ச மாதிரி காட்டுவாங்க. நீ இந்த கேஸ் எடுத்து நடத்தாத ” என்றாள்.
“உன் வேலையில இதை செய் செய்யாதேன்னு நான் சொல்றேனா…? என் வேலையிலையும் நீ தலையிடாதே” என்றான் இன்பா.
அவனிடமிருந்து தன் கையை விலக்கியவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
“என்னடி ஒன்னும் சொல்லாம போற”
“உன்கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை. இனிமே என்கிட்ட நீ பேசாத” எனக் கூறி அவனது பதிலுக்கு காத்திராமல் வேகமாக நடந்து சென்றாள் தர்ஷினி.
“என்கிட்ட பேசாம நீ இருந்துடுவியா?” என சத்தமாக இன்பா கேட்க, திரும்பிப் பார்க்காமல் சென்று அவளது வீட்டை வந்தடைந்தாள் தர்ஷினி.
“போடி போ.. நீயா திரும்பி வருவ” என கூறிக்கொண்டே வீட்டின் உள்ளே சென்றான் இன்பா.
இருவரில் யார் யாருடைய வழிக்கு செல்லப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியானது.