மணிப்புறாவும் மாடப்புறாவும்-4

அத்தியாயம் 4

நகைச்சுவை நடிகர் லிங்கேஷை நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்து தருவதாக இன்பா கூறியதில் மிகவும் மகிழ்ந்து போயிருந்தாள் தர்ஷினி. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இன்று காலையில் கூறுவதாக இன்பா சொல்லியிருந்ததால், காலையில் ஆறு மணிக்கெல்லாம் இன்பாவை சந்திக்க வந்துவிட்டாள் தர்ஷினி.

வெளியில் நின்று கொண்டிருந்த லட்சுமியிடம் “இன்பா எங்க அத்தை?” என கேட்க, கலவரத்துடன் தர்ஷினியை பார்த்தார் லட்சுமி.

“அய்யோ அத்தை பயப்படாதீங்க. இன்பா இப்போ என் ஃப்ரெண்ட் ஆயிட்டான். எனக்கு ஹெல்ப் எல்லாம் பண்றான் தெரியுமா?” என அவரிடம் சொன்னாள்.

தர்ஷினி இன்பாவை தேடிக்கொண்டு வீட்டின் உள்ளே செல்ல, தினசரி படித்துக் கொண்டிருந்த சாரங்கபாணியும், லட்சுமியும் ஏதோ அதிசயத்தை பார்த்தவர்கள் போல பார்த்தார்கள்.

“அடடே…. எவ்ளோ சின்சியரா இருக்க? உன்னோட சின்சியாரிட்டிய பார்த்து எனக்கு அப்படியே புல்லரிக்குது…. போ…” என்றான் இன்பா.

பெருமையாக இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்ட தர்ஷினி, “சொல்லு இன்பா நான் என்ன செய்யணும்?” என சிரித்த முகத்துடன் கேட்டாள். ஒரு பிளாஸ்டிக் வாளியை எடுத்து வந்து நீட்டினான் இன்பா.

மெலிதாக வாடை வர முகம் சுளித்துக்கொண்டே என்னவென தர்ஷினி பார்க்க வாளி முழுவதும் இன்பாவின் அழுக்கு சாக்ஸுகள்.

“என்ன இது?”

“என்னோட அழுக்கு சாக்ஸ்”

“இது எதுக்கு?”

“நீ முன்ன ஒரு தடவை என் சாக்ஸ் எல்லாத்தையும் தண்ணீயில முக்கி வச்சியே நினைப்பு இருக்கா?”

எதுவும் சொல்லாமல் ஆம் என்பதாய் தலையை மட்டும் ஆட்டினாள் தர்ஷினி.

“ம்…. முக்கி வச்சதோடு போயிட்டியே…. அதான் இப்ப இதையெல்லாம் நீயே உன் கையால துவைச்சி தந்திடு. போ போ.. நேரமாகுது” என்றான் இன்பா.

“அவ்ளோதானா…? நானும் நீ பெருசா வேற எதுவும் கேட்டுடுவியோன்னு நினைச்சுட்டேன். கொடு வாஷிங் மெஷின்ல போட்டா கால்மணி நேரத்தில துவைச்சிடும்” என கூறிக்கொண்டே வாளியை கையில் வாங்கினாள்.

“இல்லடா செல்லம், எனக்கு வாஷிங் மெஷின்ல துவைச்சா பிடிக்காது. உன் கையாலேயே துவச்சுடு” என்றான்.

கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு வாளியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். வீட்டின் பக்கவாட்டில் தண்ணீர் குழாய் போடப்பட்டு துவைப்பதற்கு என சலவைக்கல் இருந்தது. முகம் சுளித்துக் கொண்டே தர்ஷினி துவைக்க ஆரம்பித்தாள்.

“என்னடா இதெல்லாம் ஏன் தர்ஷினி செய்றா?” எனக்கேட்டார் லட்சுமி.

“ம்… வேண்டுதல், நீ கொஞ்சம் உள்ள போ” என்றான் இன்பா.

தர்ஷினி துவைக்க அருகில் நாற்காலி போட்டு கொண்டு அவளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தான் இன்பா.

துவைத்து முடித்து காய வைத்தாள் தர்ஷினி. கைகளில் சோப்பு போட்டு அலம்பி கொண்டு வந்தவள் “செஞ்சு முடிச்சுட்டேன்” என்றாள்.

“அப்புறம் என்ன பண்ற…? ஈவினிங் வந்து இதையெல்லாம் அயர்ன் பண்ணி வச்சுடு” என்றான்.

“எந்த ஊர்ல சாக்ஸ் அயர்ன் பண்ணி போடுவாங்க?”

“நான் போடுவேன்”

“செஞ்சுத் தொலைக்கிறேன்” என பல்லை கடித்தாள் தர்ஷினி.

“அப்புறம் நான் சொல்ற வேலையெல்லாம் சிரிச்ச முகத்தோட செய்யணும் தர்பூசணி” என இன்பா கூற, அவனது தர்பூசணி எனும் அழைப்பில் கோபம் வந்தாலும் “ஈ……” என இளித்து வைத்தாள்.

“இப்போ நான் கிளம்பட்டுமா?” என பவ்யமாய் தர்ஷினி கேட்க,

“ம்… போ” என்றான் இன்பா.

‘இதையெல்லாம் நோட் பண்ணி வச்சிக்கிறேன். இதுக்கெல்லாம் சேர்த்து வச்சி உன்னை அழ விடல நான் தர்ஷினி இல்லை’ என மனதிற்குள் சபதம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள் தர்ஷினி.

தன் சோகத்தை தர்ஷினி நசீரிடம் கூற சத்தமாக சிரித்தான் நசீர்.

“இப்படி இன்பா அண்ணாவோட வலையில மாட்டுன எலியாகிட்டியே செல்லம்” என்றான் நசீர்.

“காரியம் ஆகணுமேன்னு அவனை பொறுத்துப் போறேன். இது மட்டும் நல்லபடியா முடியட்டும்…. அப்புறம் இருக்கு அவனுக்கு” என்றாள் தர்ஷினி.

“அப்போ கொஞ்ச நாளைக்கு எங்களுக்கு எல்லாம் நீயும் அண்ணனும் செம எண்டர்டெய்ன்மெண்ட் தரப் போறீங்கன்னு சொல்லு” என்றான்.

மாலையில் அவளது சாக்ஸுகளை மறக்காமல் அயர்ன் செய்துகொண்டு இருந்தாள் தர்ஷினி.

வீட்டிற்கு வந்த இன்பா “பரவாயில்லையே ரொம்ப… ரொம்ப… சின்சியரா இருக்க… ஐ அப்ரிஷியேட் யுவர் சின்சியாரிட்டி” என்றான்.

“ம்… முடிஞ்சிட்டு” என்றாள் தர்ஷினி.

“குட், நாளைக்கு என்ன பண்றேன்னா….?”

“என்னது நாளைக்குமா….?”

“நாளைக்கு மட்டும் இல்லை தர்பூசணி. ஒரு வாரம். டெய்லி ஒரே டாஸ்க் இல்லை. டிஃபரண்ட் டிஃபரண்ட் டாஸ்க்” என்றான் இன்பா.

‘இவன் பிக்பாஸ் கூட பார்க்குறது இல்லையே….! இப்படி டாஸ்க் கொடுத்து என் உயிரை வாங்குறானே…’ என மனதிற்குள் புலம்பியவளாய் “நாளைக்கு என்ன செய்யணும்?” எனக் கேட்டாள்.

“எத்தனை நாள் என் அம்மா எனக்கு எடுத்து வச்சிருக்கிற ஸ்பெஷல் சாப்பாட்டை நீ தின்னுட்டு என்னை வெறும் சோறு தின்ன வச்சிருப்ப…? அன்னைக்கு கூட நூரு அம்மா பண்ணின கோலா உருண்டை எல்லாத்தையும் எனக்கு ஒன்னு கூட வைக்காமல் மொத்தமா முழுங்குனீல…?”

“அதுக்கு…?”

“நாளைக்கு நீயே உன் கையால எனக்கு லஞ்ச் ரெடி பண்ணி தர்ற” என்றான்.

“நான் ஆஃபீஸ் போக வேண்டாமா?”

“அது உன் பிரச்சனை…..” என இழுத்தவன், “வேணுமுன்னா உனக்காக கொஞ்சம் கன்சிடர் பண்றேன்” என்றான்.

“நீயும் கொஞ்சம் நல்லவன்தான். என்னென்ன வேணும்னு சொல்லு. எல்லாத்தையும் ஓட்டல்ல ஆர்டர் பண்ணி வாங்கி தந்திடுறேன்” என்றாள் தர்ஷினி.

“ஓட்டல் சாப்பாடு என் வயித்துக்கு ஒத்துக்காதுடா செல்லம். அதனால நீ காலையிலேயே வந்து சமைச்சுட்டு அப்புறமா ஆஃபீஸ் போ. நான் மதியம் சூடு பண்ணி சாப்பிட்டுக்குறேன்” என்றான்.

தர்ஷினி இன்பாவை முறைக்க, “தர்பூசணி என்னை பார்த்து முறைக்கிற மாதிரி இருக்கே….” என்றான்.

“இல்லையே… நாளைக்கு என்னென்ன சமைக்கலாம்ன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்” என்றாள் தர்ஷினி.

“அந்தக் கஷ்டமே உனக்கு வேண்டாம். நானே மெனு தரேன்” என்றவன் வரிசையாக மெனுவை ஒரு தர்ஷினிக்கு தலை சுற்றுவது போல இருந்தது.

“அப்புறம்… சாப்பாடு சாப்பிடுற மாதிரி இருக்கணும். காரம், உப்பு எல்லாம் கரெக்டா இருக்கனும். இந்த பேதி மாத்திரையை கலக்கிறது மாதிரி சில்லித்தனமா ஏதாவது பண்ணின….” என இன்பா மிரட்டுவது போல கூறினான்.

“காலையில வர்றேன்” எனக்கூறி சென்றுவிட்டாள் தர்ஷினி.

“ஏண்டா இப்படி அவளை டார்ச்சர் பண்ற?” என லட்சுமி இன்பாவை திட்ட, “அவ என்னனென்ன பண்ணி இருப்பா…? ஒரு வாட்டியாவது நீ எனக்கு சப்போர்ட் பண்ணி இருப்பியா? இப்போ எனக்கு நல்ல சேன்ஸ் கிடைச்சிருக்கு. நான் விடமாட்டேன்” என்றான்.

தர்ஷினி அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் வந்து விட்டாள். ஆறு மணிக்கு மேல்தான் இறைச்சிக் கடைகள் திறக்கும் என்பதால் மற்றவற்றை நறுக்கி தயார் செய்து வைத்தாள். இறைச்சிக் கடையில் வேலை பார்த்த பையனிடம் பணம் கொடுத்து அவனையே சுத்தம் செய்து தரச்சொல்லி வாங்கி வந்தாள். சமையலறைக்குள் லட்சுமியை செல்ல அனுமதிக்கவில்லை இன்பா.

ஒருவழியாக சமைத்து முடித்து தர்ஷினி வெளியே வர, உள்ளே சென்று பார்த்த லட்சுமி “ஐயோ…” என அலறி விட்டார். பயந்துபோய் இன்பா உள்ளே சென்று பார்க்க, தர்ஷினி சமையலறையை அலங்கோலப் படுத்தி வைத்திருந்தாள்.

எங்கே தன்னை சுத்தமும் செய்ய சொல்லி விடுவானோ என பயந்து போய் தர்ஷினி இன்பாவை பார்க்க, நல்லவேளையாக அவன் அவ்வாறு எதுவும் சொல்லவில்லை.

“எனக்கு ஆஃபீஸ் போகணும். நான் கிளம்புறேன்” என கூறிவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி சென்று விட்டாள் தர்ஷினி.

“எந்த வீட்டுக்கு போய் எந்த மாமியாரை கஷ்டப்படுத்தப் போறாளோ?” என வாய்விட்டே புலம்பினார் லட்சுமி.

“புலம்பாதே… இந்த காலத்துல மருமகளுங்க சமைக்கிறதே பெருசு. இப்படி சமைக்க தெரிஞ்ச பொண்ணு கிடைக்குறதுக்கு எந்த மாமியாருக்கு கொடுத்து வச்சிருக்கோ…” என்றான் இன்பா.

அவன் காதை பிடித்து திருகியவர், “இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தீன்னா தர்ஷினி மாமியார் இல்ல… அவ புருஷன்தான் கஷ்டப்படனும், சொல்லிட்டேன், பார்த்துக்கோ” என்றார்.

“அதையெல்லாம் அவ புருஷன் பார்த்துப்பான். நீ கவலைப் படாதே” என்றான்.

“இவ்வளவையும் சுத்தம் பண்ணவே எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா?” என புலம்பினார் லட்சுமி.

“சும்மா புலம்பாதம்மா. அதான் உனக்கு லஞ்ச் செஞ்சு கொடுத்துட்டாதானே. அந்த வேலை மிச்சம்தானே” என்றான் இன்பா.

“டேய்… நீ அவளை பழி வாங்குறியா…? இல்லை என்னை பழிவாங்குறியா?” எனக்கேட்டார் லட்சுமி.

“உன்னைப் போய் பழி வாங்குவேனா?” என கேட்டுக்கொண்டே அவள் சமைத்து வைத்ததை எடுத்து ஒரு வாய் சுவைத்துவிட்டு அம்மாவுக்கும் ஊட்டி விட்டான்.

“டேய் நல்லா சமைச்சு இருக்காடா” என லட்சுமி பெருமையாக கூறினார்.

“பின்ன…? சாப்பாடு… சாப்பாடுங்கிற விஷயம் அவ நாடி நரம்பெல்லாம் ஊறிப்போயிருக்கிற விஷயம்மா…” என இன்பா கூற இருவரும் சேர்ந்து சிரித்தனர்.

இப்படி பலவாறாக பலவிதமான டாஸ்க்குகளை இன்பா கொடுக்க சளைக்காமல் எல்லாவற்றையும் செய்தாள் தர்ஷினி. இன்னும் இரண்டு நாட்கள்தான் லங்கேஷை சந்திக்க இருந்தன.

“நீ என்ன பண்ற… நாளைக்கு ஈவினிங் ஷோ டிக்கெட் எடுத்துட்டு வந்து என்னை பிக்கப் பண்ணிக்கிற. டிக்கெட் செலவுலேயிருந்து ஸ்னாக்ஸ் செலவு வரை எல்லாம் உன்னோடதுதான்” என நாளை தான் வெளிவரும் புதுப் படம் ஒன்றின் பெயரைக் கூறி தர்ஷினியின் இரத்த அழுத்தத்தை தாறுமாறாக உயர வைத்தான்.

“என்ன விளையாடுறியா? நீ சொல்ற படம் நாளைக்குதான் ரிலீஸ் ஆகுது. டிக்கெட் கிடைக்கிறதெல்லாம் அவ்ளோ ஈஸி இல்லை” என்றாள்.

“அப்படியா… அப்ப சரி” என இன்பா கூற, “நாளைக்கு ஈவினிங் ரெடியா இரு” என கூறி விட்டு சென்றாள் தர்ஷினி.

அவளது அலுவலகத்தில் அந்த படத்தை பார்த்து விமர்சனம் எழுத இரண்டு டிக்கெட்டுகள் வினித்குமாருக்கு கிடைத்திருந்தது. இதை அறிந்து கொண்ட தர்ஷினியும் நசீரும் டிக்கெட்டுகளை பெற வினித்குமாரிடம் மன்றாடிக் கொண்டிருந்தனர்.

தன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் கொடுக்க வேண்டும் எனக் கூறி பேசிப்பேசியே அவனிடமிருந்து டிக்கெட்டுகளை வாங்கி விட்டான் நசீர்.

நசீரின் வீட்டிலிருந்து வாரம் ஒருமுறை பிரியாணி எடுத்து வர வேண்டும் என்ற உடன்படிக்கையுடன் வினித்குமாரும் டிக்கெட்டுகளை கொடுத்துவிட்டான்.

“என் ஃப்ரெண்டு எப்படியும் ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துடுவான். என்னைவிட அவன் நல்லா விமர்சனம் எழுதுவான். அவன் கிட்ட கேட்டு நான் எழுதிக்குறேன்” என கூறிவிட்டான் வினித்குமார்.

இன்பாவை தனது ஆக்டிவாவில் ஏற்றிக்கொண்டு சினிமாவுக்கு அழைத்துச் சென்றாள் தர்ஷினி. அந்த நடிகரின் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு இதுவரை தர்ஷினி வந்ததே இல்லை. அவளால் படத்தை பார்க்கவே முடியவில்லை. ரசிகர்கள் படத்தை பார்க்க விட்டால்தானே. இடைவேளையில் அவன் கேட்ட ஸ்னாக்ஸ்களை க்யூவில் நின்று வாங்கி கொடுத்தாள். எப்போதடா படம் முடியும் என்று ஆகிவிட்டது தர்ஷினிக்கு.

படம் முடிவடைந்து திரும்ப வரும் வழியில், “தர்பூசணி என் மேல கோவமா?” எனக் கேட்டான் இன்பா.

டன் கணக்கில் அவன் மேல் கோவம் இருந்தாலும், காரியம் ஆக வேண்டியதை நினைத்துக்கொண்டு, “கோவமா…? எனக்கா…? உன் மேலயா…? சேச்ச…” என சிரித்துக்கொண்டே கூறினாள் தர்ஷினி.

“நம்பிட்டேன்… நம்பிட்டேன்…” என்றான் இன்பா.

“நம்பிடு… நம்பிடு…” என்றாள் தர்ஷினி.

“சரி நாளைக்கு காலையில ஷார்ப்பா 9 மணிக்கு ரெடியாகிடு. லிங்கேஷ் பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கேன்” என்றான்.

“ஏன் லேட்டா போனா உள்ள விட மாட்டாரா?” என கேட்டாள்.

“உள்ள விடுவாங்க. நீ இன்டர்வியூ பண்ண முடியாது. பார்ட்டி மட்டையாகிடும்” என்றான்.

“ஓகே ஓகே. நானும் நசீரும் கரெக்டா வந்திடுவோம்” என்றாள்.

“நசீர் எதுக்கு?”

“ஃபோட்டோஸ் எடுக்க வேண்டாமா?”

“இங்க பாரு அழைச்சுட்டு மட்டும்தான் போவேன். அவர் இன்டர்வியூக்கு எல்லாம் ஒதுக்குவாரான்னு தெரியாது. ஒத்துக்க வச்சி இன்டர்வியூ பண்ண வேண்டியது உன் சாமர்த்தியம்” என்றான்.

“நீ அழைச்சுட்டு மட்டும் போ. மீதியை நான் பார்த்துகிறேன்” என்றாள்.

“உனக்கு ஓவர் கான்ஃபிடென்ஸ்” என்றான்.

“பின்ன உன்னையவே என் வழிக்கு கொண்டு வந்துட்டேன். ஓவர் கான்ஃபிடென்ஸ் இல்லைன்னா எப்படி?” எனக் கேட்டாள்.

“நாளைக்கு பார்க்கிறேன்டி உன் டகால்டி வேலையை” என இன்பா கூற, வீடும் வந்துவிட்டது.

“நல்லா பாரு, இப்ப இறங்கிக்க” என்றாள் தர்ஷினி.

இறங்கிக் கொண்டவன் “நீ போ” என்றான். அவனை கடந்து தர்ஷினி செல்ல பின்னாலேயே நடந்து சென்றான் இன்பா. வண்டியை நிறுத்தி விட்டு காலிங்பெல்லை தர்ஷினி அழுத்த, அவளது அன்னை தாமதமாக வந்ததற்கு அர்ச்சனை செய்து கொண்டே கதவை திறந்து விட்டு உள்ளே சென்றார். உள்ளே செல்லப் போனவள் ஒரு நொடி நின்று திரும்பிப் பார்க்க, கேட்டிற்கு வெளியில் இன்பா நின்றுகொண்டிருந்தான்.

“என்ன?” என தர்ஷினி கேட்க,

“ஒன்னும் இல்ல… சும்மா வாக்கிங்” என வாயசைத்தான் இன்பா.

“போடா காட்டுப்பூச்சி” எனக் கூறிவிட்டு உள்ளே சென்றாள் தர்ஷினி.

சிரித்துக் கொண்டே,’லூசு கொஞ்சமாச்சும் என் மனசு புரியுதா பாரு இதுக்கு?’ என புலம்ப,

‘நீ பார்க்குறதெல்லாம் எம் என் நம்பியார் வேலை… இதுல அவளுக்கு உன் மனசு என்னடா புரியும்? ஒழுங்கா இனி வம்பு பண்றத விட்டுட்டு, ஜெமினி கணேசனா மாறு’ என அவன் மனசாட்சி கூற,

‘அப்படிங்குற… டிரை பண்றேன்’ என மனதிற்கு பதில் அளித்து விட்டு தன் வீட்டிற்கு நடந்து சென்றான் இன்பா.