திங்கட்கிழமை காலையில் செங்கதிர் பத்திரிகை நிறுவனத்தின் அலுவலகம் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. தர்ஷினி தனது கட்டுரையுடன் துணை ஆசிரியர் அறைக்கு சென்றாள். தன்னுடைய மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டே ஒரு நிமிடம் தர்ஷினியை பார்த்த சாம்பசிவம் இருக்கையில் அமரச் சொன்னார்.
அவரிடம் தான் கொண்டு வந்திருந்த ஃபைலை நீட்டினாள் தர்ஷினி. கையில் வாங்கிக் கொண்டவர் ஊன்றிப் படித்தார். இரண்டு நிமிடங்கள் கூட இருக்காது, “என்னம்மா இது?” எனக் கேட்டார்.
திருவொற்றியூரில் இருக்கிற ஒரு கெமிக்கல் ஃபேக்டரி பத்தின ஆர்டிகல் சார். இந்த ஃபேக்டரியில் வர கழிவுகள் கடலில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படுது. இதை தடுக்காம விட்டா கொஞ்ச வருஷத்துல இன்னும் பெரிய பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கு. இதைப் பற்றி சமூக ஆர்வலர் சத்ரியன் பெரிய ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டு இருக்கிறார். அதுமட்டுமில்லை…” என தர்ஷினி பேசிக்கொண்டிருக்க,
“ஸ்டாப் இட் பிரியதர்ஷினி. இந்த நியூஸ் எல்லாம் போட்டா யார் படிப்பா?” எனக் கேட்டார் சாம்பசிவம்.
“மக்கள் எதை படிப்பாங்க எதை படிக்க மாட்டாங்கன்னு நம்மளாவே எதையாவது யோசிச்சுகிட்டு, இதை மாதிரி முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்தாமல் இருக்க கூடாது சார்” என்றாள் தர்ஷினி.
“என்ன பண்றதும்மா…. மக்களோட மென்டாலிட்டியைதான் நான் சொல்றேன். இன்னும் பெரிய பிரச்சனை எதுவும் ஆகலைல்ல. ஆகட்டும்… இப்போ இந்த நியூஸை போட்டா நாலுவரி படிச்சு பார்த்துட்டு அடுத்த நியூஸுக்கு போவாங்க. இது இன்னும் பெரிய பிரச்சினை ஆகி பெரிய லெவல்ல சேதாரம் ஏற்படும் போது நியூஸ போட்டா எல்லாரும் படிப்பாங்க. அப்போ போட்டுக்கலாம்” என்றார் சாம்பசிவம்.
“தப்பு நடக்கும்போது அதை அப்பவே மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுறது நம்மளோட கடமை இல்லையா?”
“அய்யோ என்னமா நீ காலையிலேயே…. இந்த கடமை எல்லாம் நாம சரியா செஞ்சா நம்ம பத்திரிக்கையோடு சர்குலேஷன் எப்படி அதிகரிக்கும்? மக்களை கவர மாதிரி நியூஸ் போடணும். இப்ப பாரு…” என்றவர் இன்டர்காம் மூலமாக வினித்குமாரை உள்ளே அழைத்தார்.
வினித்குமார் உள்ளே வரவும் “நியூஸ் ரெடியா?” என அவனைப் பார்த்து கேட்டார்.
“ரெடி சார். ஆக்டர் ஆஷிஷ்குமாரும், ஆக்டரஸ் டினு கபூரும் லாஸ்ட் இயர் மேரேஜ் பண்ணிட்டாங்களே… அவங்க டிவோர்ஸ் இன்னைக்கு தீர்ப்பாகிடும் சார். அவங்க காதல் லைஃப், கல்யாணம், ரெண்டு பேருக்குள்ள நடந்த பிரச்சனை இதை எல்லாம் விலாவரியா ரெடி பண்ணிட்டேன் சார்” எனக் கூற சிரிப்புடன் தர்ஷினியை நோக்கிய சாம்பசிவம் “மக்கள் இந்த நியூஸை ஆர்வமாக படிப்பாங்களா? இல்லை இதை படிப்பாங்களா?” எனக் கேட்டார்.
“நீங்க இப்படியே நியூஸ் போட்டு போட்டு மக்களை பழக்கி வச்சிருக்கீங்க. நியூஸ் பேப்பர்ல உள்ளதை ஒரு வரி விடாமல் படிக்கிறவங்க கூட இருக்காங்க. மக்களுக்கு இந்த ஃபேக்டரியால ஏற்படுற விளைவுகளை பத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தனும். மக்கள் புரட்சி ஏற்பட்டாதான் இந்த ஃபேக்டரியை இழுத்து மூட முடியும்” என்றாள் தர்ஷினி.
“நீ இந்த நியூஸை போட்டதும் அதை படிச்சு பார்த்துட்டு மக்கள் புரட்சி பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. அதைப் பார்த்துட்டு அரசாங்கம் உடனே இந்த ஃபேக்டரிய இழுத்து மூடிடும். அதானம்மா நீ சொல்ல வர்றது….?” என ஏகத்துக்கும் நக்கலாக கேட்டார் சாம்பசிவம்.
“எல்லாமே உடனே நடந்துடாது சார். ஆனா ஒருநாள் கண்டிப்பா நடக்கும்” என்றாள்.
“போதும் தர்ஷினி, போய் ஏதாவது சென்சேஷனல் நியூஸ் இருந்தா கொண்டுட்டு வா. இப்ப என் நேரத்தை வேஸ்ட் பண்ணாம கிளம்பு” என அவள் கொடுத்த ஃபைலை அவளிடமே நீட்டினார் சாம்பசிவம். வாங்கிக் கொண்டவள் எரிச்சலுடன் வெளியே வந்தாள்.
ஆற்றாமையுடன் அவள் இருக்கையில் வந்தமர்ந்தாள் தர்ஷினி. “என்னாச்சு?” என நசீர் கேட்க உதட்டை ஒரு பக்கமாய் வளைத்து, இடவலமாக சோர்வுடன் தலையாட்டினாள் தர்ஷினி.
அவளது இருக்கையை நோக்கி வந்தான் வினித்குமார். “நான் கூட வந்த புதுசுல இப்படிதான் நியூஸ் கொண்டு வந்துக்கிட்டு இருந்தேன். எல்லாம் ரிஜெக்ட்தான் ஆச்சு. அப்புறம் நான் என் மென்டாலிட்டியை மாத்திக்கிட்டேன். சில சமயங்கள்ல என்னடான்னு சலிப்பா கூட வருது. சீக்கிரமா நீயும் மாறிடுவ” என்றான்.
“விடு தர்ஷினி, முதல்ல இந்த ஆள இங்கே இருந்து தூக்கணும். சர்குலேஷன் இன்கிரிஸ் பண்றேன் பண்றேன்னு சொல்லிக்கிட்டு யூஸ்லெஸ் நியூஸ் எல்லாம் தேடி பிடிச்சு போடுறார். செங்கதிர் பத்திரிக்கைக்கு இருக்க நல்ல பேரே இவரால் கெடப் போகுது” என்றான் நசீர்.
“அப்படியா….? செங்கதிர் பத்திரிக்கைக்கு வெளியில நல்ல பேரு வேற இருக்கா?” என ஆச்சரியமாய் கேட்ட வினித்குமார், தர்ஷினியை பார்த்து, “நீ வேணா இந்த நியூஸை யூட்யூப்ல அப்லோட் செய் தர்ஷினி” என்றான்.
“நான் போட்டா அதை எத்தனை பேரு பார்ப்பாங்க? இதைக்கூட யாராவது ஒரு செலிபிரிட்டி சொன்னாதான் மக்கள் கவனிச்சு பார்ப்பாங்க” என கவலையாக கூறினாள் தர்ஷினி.
“விடு இதை பேசுறதுக்கு ஒரு செலிபிரிட்டியை பிடிச்சிடுவோம்” என்றான் நசீர்.
யோசனையாகவே இருந்தாள் தர்ஷினி.
மாலையில் தர்ஷினி வீடு செல்லும் போது அவளது அன்னை பத்மினி வீட்டில் இல்லை. தங்கை சுபாஷினி சீருடை கூட மாற்றாமல் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து இருந்தாள்.
“அம்மா எங்கடி?” எனக் கேட்டாள் தர்ஷினி.
“அம்மாவும், லட்சுமி அத்தையும் ஸ்ரீ ஸ்ரீ ரூபானந்த சுவாமிகளின் தரிசனத்துக்காக போயிட்டாங்க” என்றாள் சுபாஷினி.
அவள் கூறிய விதம் தர்ஷினிக்கு சிரிப்பை வரவழைத்தது. “இவங்க ரெண்டு பேருக்கும் எத்தனை தடவை சொல்றது… இந்த மாதிரி சாமியாருங்கள நம்பாதீங்கன்னு…” என அலுத்துக் கொண்டவள், தேநீர் போட்டு வந்து தங்கையிடம் கொடுத்து, தான் வரும் வழியில் வாங்கி வந்திருந்த சூடான வடைகளையும் கொடுத்தாள்.
அவள் குடித்து கொண்டிருக்கும்போதே, ஒரு பையுடன் அவளிடம் வந்தாள்.
“ஃப்ளாஸ்க்ல டீ வச்சிருக்கேன். வடையும் இருக்கு. கொண்டு போய் ரம்யா வீட்ல கொடுத்துவிட்டு வா. பாவம் அவங்களும் பசியோட இருப்பாங்க. உன்னை மாதிரியே அவளும் ஒரு சோம்பேறிக் கழுதை” என்றாள் தர்ஷினி.
“எனக்கு டயர்டா இருக்கு. நீயே போய் கொடு” என்றாள் சுபாஷினி.
“போக்கா… அங்க நான் போனேனா உடனே திரும்பி வரமாட்டேன். நாளைக்கு டெஸ்ட் வேற இருக்கு. மார்க் குறைஞ்சு போனா அம்மாகிட்ட திட்டு வாங்காம காப்பாத்தி விடுறியா?” என விழி விரித்து சுபாஷினி கேட்க, அவளை முறைத்துவிட்டு அவளே பையைக் கையில் எடுத்துக்கொண்டு, “ஒழுங்கா ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு உக்காந்து படி” எனக் கூறிவிட்டு சென்றாள்.
தர்ஷினி நினைத்ததுபோலவே ரவியும் ரம்யாவும் சீருடை கூட கலையாமல் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து இருக்க, இன்பா அவனது அறையில் ஏதோ சட்டப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான்.
“சோம்பேறிக் கழுதைகளா…” என தர்ஷினி வசைபாட, “உனக்காகத்தான் அக்கா வெயிட்டிங். எப்படியும் நீ டீயும் ஸ்நாக்ஸ்ம் எடுத்துட்டு வருவேன்னு தெரியும். அதுக்கப்புறம் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணலாம்னு இருந்தோம்” என கூறிக்கொண்டே கோப்பைகளையும் தட்டுகளையும் எடுத்து வந்தாள் ரம்யா.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று, ஸ்ரீ ரூபானந்த சுவாமிகளை தரிசிக்க லட்சுமியும் பத்மினியும் காஞ்சிபுரம் சென்றுவிடுவார்கள். அந்த நாள் மட்டும் இல்லை, மற்ற நாட்களில் கூட எப்பொழுதாவது இவர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில், தர்ஷினி இவ்வாறு செய்வது வழக்கம்தான்.
அந்தத் தெரு பாதுகாப்பானது என்பதாலும், பக்கத்துவீட்டில் ரஹீம் பாய் குடும்பம் இருப்பதாலும், பயமின்றி இவ்வாறு சென்றுவிடுவார்கள். காலையிலேயே இன்பாவிடம் லட்சுமி கூறி விடுவதால் அன்று மட்டும் இன்பா சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்து விடுவான். அவனுக்கும் இவர்கள் சாமியாரை பார்க்க செல்வது பிடிக்காதுதான். சிலமுறை கூறியும் இருக்கிறான். அவர்கள் கேட்பதாக இல்லை.
நான்கு கோப்பைகளில் தேநீர் ஊற்றி 4 தட்டுகளில் இரண்டு இரண்டு வடைகளாக வைத்து சட்னியையும் வைத்த தர்ஷினி ஒரு தேநீர் கோப்பையையும் தட்டையும் எடுத்து ரம்யாவிடம் நீட்டி “போ காட்டுப்பூச்சிகிட்ட கொடுத்திடு” என்றாள்.
“அப்படியே நீ காட்டுப்பூச்சின்னு சொன்னதையும் சொல்லவா?” என ரம்யா கேட்டாள்.
“சொல்லேன், எனக்கென்ன பயமா?” என்றாள் தர்ஷினி.
ரம்யா இன்பாவிடம் கொடுத்துவிட்டு மறக்காமல் அவள் காட்டுப்பூச்சி என்று சொன்னதையும் கூறிவிட்டுதான் வந்தாள்.
“சாப்பிடுற வரைக்கும்தான் டிவி. அப்புறம் ஒழுங்கா போய் படிங்க” என கூறிக் கொண்டே தேநீரைப் பருகிக் கொண்டே தர்ஷினி அவர்களுடன் அமர்ந்து டிவி பார்க்கலானாள்.
நகைச்சுவை நடிகர் லிங்கேஷின் காமெடிகள் ஓடிக்கொண்டிருக்க மூவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அறையிலிருந்து காலிக் கோப்பையுடன் வெளியே வந்த இன்பா தர்ஷினியின் தட்டில் இருந்த வடையை அவள் கவனிக்காத போது எடுத்துக் கொண்டான். அவன் எடுத்த பிறகுதான் கவனித்தாள் தர்ஷினி.
“முடியாது, ஒழுங்கா என் வடையைக் கொடு” என தர்ஷினி மிரட்ட ஒரே வாயில் வடையை சாப்பிட்டு முடித்த இன்பா, அவளது தட்டில் இருந்த மற்றொரு வடையையும் கையில் எடுத்துக் கொண்டான்.
“நீ காட்டுப்பூச்சி இல்லடா, காண்டாமிருகம்” என தர்ஷினி கத்த, கையில் இருந்த வடையை ஒரு கடி கடித்தவன், “போனா போகுது… சாப்பிடு இந்தா” என தான் கடித்த வடையை அவளிடம் நீட்டினான்.
“ச்சீய்…. உன் எச்சிலை சாப்பிடுறதுக்கு பாய்சனே பரவாயில்லை” என்றாள் தர்ஷினி.
“தர்பூசணிக்கு வடை போச்சே” எனக்கூறிக் கொண்டு வடையை சாப்பிட்டுக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் இன்பா.
“சேச்சே…. சாரி கேட்டு அதனால உன் அண்ணன் எச்சில் வடை எனக்கு ஒன்னும் வேண்டாம்” என கூறிவிட்டு இருவரது தட்டுகளையும் பார்த்தாள். தட்டுகள் எப்பொழுதோ காலியாகி இருந்தன.
“சதிகார கும்பல்டா நீங்க எல்லோரும். வாங்கிட்டு வந்த எனக்கே வடை இல்லாம பண்ணிட்டீங்க இல்ல” என நொந்து கொண்டாள் தர்ஷினி.
டிவி பார்த்துக் கொண்டிருந்த ரம்யா “எவ்ளோ சூப்பர் காமெடியன். இப்போவும் இவர் காமெடிதான் எல்லோருக்கும் இஷ்டம். இவர் திரும்பி நடிக்க வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்…?” என்றாள்.
நடிகர் லிங்கேஷ் வடசென்னை பகுதியை சேர்ந்தவன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடிக்க வந்த லிங்கேஷ் விரைவிலேயே நகைச்சுவையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தான். ஹீரோக்களுக்காக படம் பார்க்கும் இளைஞர்கள் மத்தியில் லிங்கேஷ்க்காக படம் பார்க்கும் ஒரு கூட்டமே இருந்தது. ஒரு வருடத்தில் வெளிவந்த மிகப் பெரிய நடிகர்கள் படங்கள் எல்லாவற்றிலுமே லிங்கேஷ் நடித்திருந்தான்.
லிங்கேஷின் டைமிங் காமெடி மிகவும் புகழ்ந்து பேசப்பட்டது. அவனுடைய கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் தவம் இருந்தார்கள். இந்த நிலையில் லிங்கேஷ் தன் மனைவியையும் பத்து வயது நிரம்பிய தன் ஒரே மகனையும் விபத்தொன்றில் பறிகொடுக்க, அன்றிலிருந்து சினிமா வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி விட்டான். அவனைப் பற்றிய செய்திகள் வெளியில் வருவதில்லை. அவன் போதைக்கு அடிமையாகி விட்டதாக சில புரளிகள் உலவிக் கொண்டிருக்கின்றன.
இன்று கூட பல ஃபேஸ்புக் மீம்ஸ்கள் லிங்கேஷின் காமெடியை வைத்தே வருகின்றன. யூட்யூபில் இவனுடைய நகைச்சுவை காட்சிகள் மீண்டும் மீண்டும் ரசித்துப் பார்க்கப்படுகின்றன.
ரவியின் அருகில் வந்தமர்ந்த இன்பா, “படிக்காம என்னடா ரெண்டு பேரும் டிவி முன்னாடி உட்கார்ந்து இருக்கீங்க?” எனக் கேட்டான்.
“ஒரு டென் மினிட்ஸ் அண்ணா. லிங்கேஷ் காமெடி மட்டும் பார்த்துட்டு படிக்க போறோம். ரிலாக்ஸா இருக்கும்” என ரம்யா கெஞ்சுவது போல கேட்க,
“இவன் சரியான குடிகாரன்” என்றான் இன்பா.
“அவரைப் பத்தி எதுவும் தெரியாமல் புரளி எல்லாம் வச்சு நீயா அடிச்சு விடாத” என்றாள் தர்ஷினி.
“நான் ஒன்னும் அடிச்சிவிடல. போன மாசம் பெரிய ஸ்டார் ஹோட்டலோட பார்ல சண்டை போட்டு ஒரு பெரிய பிசினஸ்மேனோட பையனை அடிச்சிட்டான். அந்த பிசினஸ் மேன் எங்க கிளையண்ட்” என்றான் இன்பா.
“இதெல்லாம் நடந்திருந்தா எவ்ளோ பெரிய நியூஸ் தெரியுமா? எல்லா சேனல்ஸ்லையும் இதுதான் ஓடிக்கிட்டு இருந்திருக்கும்” என்றாள் தர்ஷினி.
“அப்படி இந்த விஷயம் லீக் ஆகாம இருக்க, அடி வாங்கின பையனோட அப்பா எவ்ளோ செலவழிச்சிருக்கான் தெரியுமா?”
“அடியும் கொடுத்துட்டு, தரக்குறைவா பேசினான்னு அந்தப் பையன் மேல கம்ப்ளைன்ட்டும் ரெஜிஸ்டர் பண்ணிட்டான் லிங்கேஷ். உடனே மாமா கிட்ட அந்த பிசினஸ்மேன் போன் பண்ணி சொல்லிட்டார். மாமாதான் ரெண்டு பேருக்கும் மத்தியில் சமரசம் பண்ணி இதை ஒன்னும் இல்லாம செய்தார்” என்றான் இன்பா.
“அண்ணா இதெல்லாம் உண்மையா?” எனக் கேட்டான் ரவி.
“நான் கூட இருந்து எல்லாத்தையும் பார்த்தேன்டா. எல்லாம் உண்மைதான். நீ உடனே உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்காத” என்றான்.
“நீங்க சமரசம் பண்ணினதும் லிங்கேஷ் உடனே ஒத்துக்கிட்டானா?” எனக் கேட்டாள் ரம்யா.
“அவனுக்கு மாமாவை ரொம்ப பிடிச்சுப் போச்சு. மாமா பேசின விதம் அப்படி…. நீங்க என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க, நான் செய்றேன் அப்படின்னு சொன்னான்னா பார்த்துக்கோயேன்” என்றான் இன்பா.
“ஹை… அப்படின்னா மாமாகிட்ட சொல்லி நாம எல்லாரும் ஒருமுறை அவனை போய் பார்ப்போமா?” என ஆவலாக ரம்யா கேட்க,
“எதுக்கு…? ரெண்டு பேரும் டிவிய ஆஃப் பண்ணிட்டு போய் படிங்க” என கண்டிப்புடன் கூறினான் இன்பா.
இருவரும் எழுந்து சென்றுவிட, தன் குரலை செருமினாள் தர்ஷினி.
“குதிரை இப்ப ஏன் கனைக்குது?” எனக் கேட்டான் இன்பா.
“இன்பா…” என குரலில் தேனொழுக அழைத்தாள் தர்ஷினி.
“உன் டோனே சரியில்லையே எதுவும் வில்லங்கமா கேட்கப் போறியா?” எனக் கேட்டான் இன்பா.
“இல்லையே…” என்றவள் “நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்” என்றாள்.
“என்ன?”
“ஆக்டர் லிங்கேஷை செங்கதிர் பத்திரிகைக்காக நான் ஒரு இன்டர்வியூ பண்ணனும். நீதான் எப்படியாவது அரேஞ்ச் பண்ணி கொடுக்கணும்” என்றாள்.
“அதானே பார்த்தேன்… நரி ஏன் சிரிக்குதுன்னு இப்பதானே தெரியுது?”
“நான் என்ன நரியா….?”
“சேச்ச… நரி இல்லை குள்ளநரி”
“விளையாட்டு போதும். உன்னால செய்ய முடியுமா? முடியாதா?”
“உனக்கு செஞ்சா எனக்கு என்ன யூஸ்?”
“நான் வேணும்னா இதுவரைக்கும் நான் பண்ணியதுக்கு எல்லாம் சாரி கேட்கிறேன்” என்றாள் தர்ஷினி.
“சாரி கேட்டா சரியா போச்சா?”
“வேற என்ன பண்ணனும்?”
“ம்… நல்ல கேள்வி, நீ லிங்கேஷை மீட் பண்ணணும்னா இந்த ஒரு வாரம் என் சொல் பேச்சு கேட்டு நடக்கணும். அதுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே” என்றான் இன்பா.
அவனது உள்குத்து புரியாமல் சரி என தலையாட்டினாள் தர்ஷினி.