மணிப்புறாவும் மாடப்புறாவும்-19

அத்தியாயம் 19

அன்று இன்பா வீடு திரும்ப தாமதமானது. ஒரு வழக்கு சம்பந்தமாக விவரங்கள் சேகரிக்க சென்றிருந்தான். வீடு திரும்பும்போது பதினொன்றை தாண்டி விட்டது. தர்ஷினி மட்டும் விழித்துக்கொண்டு காத்திருந்தாள்.

அவனிடம் ஆசையாக தர்ஷினி ஏதோ சொல்லப்போக, “உனக்கு தூக்கம் வந்ததுன்னா தூங்குடி. நான் சாப்பிடுக்குறேன். ரொம்ப அலைச்சல்… குளிச்சிட்டுதான் சாப்பிடுவேன், லேட்டாகும்” என்றான்.

“இவ்வளவு நேரம் முழிச்சிட்டு இருந்த எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் முழிச்சிட்டு இருக்க தெரியாதா?” எனக் கேட்டாள் தர்ஷினி.

“உன் இஷ்டம்” என மட்டும் கூறிவிட்டு குளியலறை சென்று விட்டான். குளித்து வந்த பின்னும் அவளை சரியாக கவனிக்காமல் ஏதோ யோசனையிலேயே இருந்தான். அவள் பரிமாறும் பொழுதும் ஒன்றும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டான்.

“உன் யோசனை எல்லாம் எங்க இருக்கு?”எனக் கேட்டாள் தர்ஷினி.

“நாளைக்கு கேஸ் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்” என்றான்.

“ஒரு அஞ்சு நிமிஷம் என் கூட பேசணும்னு உனக்கு தோணலையா?” என கேட்டாள்.

“என்னடி இது? இது மாதிரி எல்லாம் நான் கேட்டா எனக்கு நீ அட்வைஸ் பண்ணுவ. இன்னைக்கு என்ன உல்டாவா நீயே கேட்குற?” என்றான்.

“இப்ப எல்லாம் நீ என் கூட ஒழுங்கா டைம் ஸ்பெண்ட் பண்றதே இல்லை” என்றாள்.

சிரித்தவன், “ஒரு நாலஞ்சு நாளா லேட்டா வந்தா உடனே அபாண்டமா பேசாத. கேஸ் சம்பந்தமா கொஞ்சம் வேலை. நாளைக்கு ஃப்ரீ ஆயிடுவேன்” என்றவன் சாப்பிட்டு முடித்து எழுந்து கொண்டான். அறைக்குப் போய் கையில் சட்ட புத்தகத்துடன் அமர்ந்து, அடுத்த நாள் வழக்குக்கு குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தான்.

எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு உள்ளே வந்தவள் அவன் கையிலிருந்த புத்தகத்தை வெடுக்கென பிடுங்கினாள்.

இன்பாவுக்கு கோபம் வந்துவிட்டது. “எந்த வகையிலடி சேர்த்தி நீ? ஒருசமயம் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேச வேண்டியது. இன்னொரு சமயம் விளையாட்டு பண்றேன்னு இர்ரிடேட் பண்ண வேண்டியது. கொடு புக்கை” என அவள் கையிலிருந்து வாங்கி கொண்டவன் மீண்டும் அமர்ந்துகொண்டான்.

இன்பாவுக்கு முதுகை காட்டிக்கொண்டு படுக்கையில் படுத்துக்கொண்டாள். புத்தகத்தை விரித்தவனுக்கோ மூளை வேலை செய்ய மறுத்தது. மூடி வைத்தவன் தர்ஷினியை பார்த்தான். எழுந்து சென்று அவளருகில் அமர்ந்து கொண்டான்.

“சாரிடி நாளைக்கு கேஸ் இருக்கு. நான் அதுக்கு பிரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்கேன். நீ இப்படி டிஸ்டர்ப் பண்ணவும் கோபம் வந்துட்டு” என்றான்.

“போ போ…, நான்தான் உன்னை இர்ரிடேட் பண்றேனே…? அப்புறம் எதுக்கு என்கிட்ட பேசுற? நீ போய் நல்லா பிரிப்பேர் பண்ணு” என்றாள்.

“எங்கேயிருந்து பண்ண..? கொஞ்சம் சிரிச்ச முகமா இருடி. இல்லேன்னா நாளைக்கு ஜட்ஜ்கிட்ட போய் நின்னு ஏதாவது உளறிட்டு வருவேன்” என்றான். திரும்பி அவன் முகம் பார்க்க படுத்துக் கொண்டவள், “சரி இப்போ போய் படி, நாளைக்காவது ஒரு அரை மணி நேரம் எனக்குன்னு ஒதுக்கு” என்றாள்.

“பைத்தியம்… என்னடி அரைமணிநேரம்…? என் வாழ்நாள் முழுசும் உனக்குதான். அதுக்காக வேலையும் பார்க்கணும்தானே…? நீ புரிஞ்சுப்பதானே…? நீயே எத்தனை நாள் உன் வேலைக்காக லேட் நைட் வரை ஒர்க் பண்ணியிருக்க.. நான் டிஸ்டர்ப் பண்ணினா உனக்கு கோபம் வரும்தானே?” எனக் கேட்டான்.

“சரி போடா காட்டுப்பூச்சி…. காதுல ரத்தம் வருது” என்றாள்.

“இப்பதான் நீ என் செல்ல தர்பூசணி…” என அவளது நெற்றியில் முட்டியவன், எழுந்து சென்று மீண்டும் சட்ட புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டான்.

அடுத்த நாள் மாலையில் விரைவாகவே வீடு வந்து விட்டான். இவன் வந்தபிறகுதான் தர்ஷினி வந்தாள். வழக்கில் வெற்றி பெற்றிருந்த சந்தோஷத்தில் இருந்தான் இன்பா.

“எங்கேயாவது வெளியில் போகலாம் வாடி” என அழைத்தான் இன்பா.

“இல்லடா எனக்கு டயர்டா இருக்கு இன்னொரு நாள் போகலாம்” என்றாள்.

சில நாட்களுக்கு முன்பு அவள் அழைத்து வெளியில் இவன் வராது போனதால் இவ்வாறு பழி வாங்குகிறாள் என நினைத்துக் கொண்டான்.

“அம்மா இன்னைக்கு சமைக்க வேண்டாம் கடையில வாங்கிக்கலாம்” என்றான் இன்பா.

“ஏண்டா?” எனக்கேட்டார் லட்சுமி.

“டெய்லியும்தான் செய்றீங்க… இன்னைக்கு ஃப்ரீயா இருங்க” என்றான்.

“இல்லை.. எனக்கு கடை சாப்பாடு வேண்டாம். சிம்பிளா இட்லியும் சட்னியும் செய்துக்கலாம்” என்றாள் தர்ஷினி.

“என்னடி இது அதிசயமா இருக்கு? இந்நேரம் அது வேணும் இது வேணும்னு கேட்பேன்னு நினைச்சேன்” என இன்பா கூற “அதானே…” என்றார் லட்சுமி.

“உங்களுக்கு வேணும்னா வாங்கிக்குங்க. எனக்கு இட்லி போதும்” என்றாள்.

இன்பா நேற்று தான் கோவப் பட்டதற்கு இவ்வாறு செய்கிறாள் என நினைத்துக்கொண்டான்.

“அவளுக்கு வேணாம்னா யாருக்கும் வேண்டாம். நீ இட்லியே செய்மா” எனக்கூறி ஹாலிற்கு வந்து விட்டான்.

“என்ன சொல்லிட்டேன்னு இப்படி பண்றா?” என நினைத்துக் கொண்டிருந்தான். பஷீரை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்றான். இவன் திரும்ப வருவதற்குள் சாப்பிட்டு விட்டு படுக்கச் சென்று விட்டாள் தர்ஷினி. எல்லா நாளும் இரவில் சேர்ந்து சாப்பிடுவது இல்லை என்றாலும் இருவரும் வீட்டில் இருந்தால் கண்டிப்பாக அவனுடன் சேர்ந்துதான் சாப்பிடுவாள். இன்பா வீட்டில் இருந்தால் அவனை விட்டுவிட்டு தர்ஷினி சாப்பிட்டதே இல்லை. இன்பாவுக்கு கோபமாக வந்தது. சாப்பிட்டுவிட்டு அவனும் அறைக்குள் சென்றான்.

படுக்கையில் கால்நீட்டி அமர்ந்திருந்தாள் தர்ஷினி. அவளை முறைத்துக் கொண்டே வேண்டுமென்றே கையில் புத்தகத்துடன் நேற்று போலவே அமர்ந்துகொண்டான். இப்போது தர்ஷினிக்கு கோபமாக வந்தது. எதுவும் சொல்லாமல் படுக்கையில் படுத்து விட்டாள்.

படுத்தவளுக்கு தூக்கம் வருவேனா என்றது. இன்பாவும் இவளைப் பார்ப்பதாக இல்லை. ‘அவன் என்ன சொன்னாலும் சரி பார்த்து விடுகிறேன்’ என மனதிற்குள் நினைத்தவளாய் எழுந்து சென்று அவன் கையிலிருந்த புத்தகத்தை பிடுங்கினாள்.

“அறிவில்ல உனக்கு? நேத்துதானே சொன்னேன்” என சீறினான் இன்பா.

“என்ன சொன்ன? இன்னைக்காவது ஒரு அரைமணிநேரம் தான்னு சொன்னதுக்கு என் வாழ்நாளே உனக்குதான்னு டயலாக் எல்லாம் பேசிட்டு இன்னைக்கும் இப்படி பண்ணினா என்ன அர்த்தம்?”

“நேத்து சண்டைக்கு நேத்தே உன்னை சமாதானப் படுத்திட்டேன்தானே? நீ மட்டும் இப்பவும் அதையே பிடிச்சிகிட்டு நின்னீனா..?”

“நான் என்ன பண்ணினேன்?”

“வெளில போலாம்னு கூப்பிட்டேன். வர மாட்டேன்னு சொல்லிட்ட. கடையில சாப்பாடு வாங்க வேண்டாம்னு சொன்ன. நான் வரதுக்குள்ள என்னை விட்டுட்டு சாப்பிட்டு, எனக்கு முன்னாடி தூங்கவும் வந்துட்ட”

“எனக்கு டயர்டா இருந்துச்சு டா அதான் வெளியில வரலைன்னு சொன்னேன். ரொம்ப பசி. அதான் சாப்பிட்டேன். டயர்டா இருந்தாலும் நீ வர வரையிலும் தூங்காம வெயிட் பண்ணிக்கிட்டுதானே இருந்தேன்?”

“கொஞ்ச நேரம் பசி பொறுக்க முடியாதா உனக்கு? அப்படி என்னடி பசி?”

“ஈவ்னிங் வந்து ஒரு டீ மட்டும் தான் குடிச்சேன். ரொம்ப பசி அதான் சாப்பிட்டேன். அதைப் பெரிய குத்தம் மாதிரி நீ பேசுற… நான் என்ன தனியாளா? உன் பிள்ளை என் வயித்துல இருக்கு. அப்போ அதிகமாக பசிக்கும்தானே? “எனக் கேட்டாள்.

ஒரு நொடி திகைத்து போனவன், “உண்மையாவாடி…?” என கேட்டுக் கொண்டே எழுந்து அவளை தன்னோடு அணைக்க செல்ல, அவனிடமிருந்து விலகி புத்தகத்தை கையில் கொடுத்து, “இதைச் சொல்லத்தான் ஒரு வாரமா ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். நேத்துக்கூட உன்னை டிஸ்டர்ப் பண்ணினேன். சொல்லிட்டேன்… இப்போ நீ படி” எனக்கூறி படுத்துக்கொண்டாள்.

இன்பாவின் மனம் உருகி விட்டது. அருகில் வந்தமர்ந்து அவளது வயிற்றில் கை வைக்க தள்ளிவிட்டாள். “ஹே… ப்ளீஸ்டி… நமக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆனதிலிருந்து ரெண்டு பேரும் முறைச்சுக்கிட்டு நிறைய நல்ல தருணங்களை இழந்துட்டோம். இந்த நொடி எனக்கு திரும்ப கிடைக்குமா? என் பொண்டாட்டி என் பிள்ளை வயித்துல இருக்குன்னு சொல்றப்போ எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? கோபப்பட்டு இதை ஸ்பாயில் பண்ணாதம்மா. எழுந்திரு… ப்ளீஸ்… ப்ளீஸ்டி” என்றான்

பிகு பண்ணாமல் எழுந்து அமர்ந்து கொண்டாள்.

“எப்போ தெரிஞ்சது?” என கேட்டான்.

“ஒன் வீக் ஆயிடுச்சு” என்றாள்.

“அப்பவே ஏன் சொல்லலை?”

“எப்ப பாரு… நீ கேஸ் டென்சன்லேயே இருந்த. நீ டென்ஷன் மூட்ல இருக்கும்போது சொல்ல பிடிக்கலை. அப்படியும் நேத்து ஈவ்னிங் ஆபீஸ்ல நல்லா வாமிட் பண்ணிட்டேன். உன் கிட்ட சொல்லி உன் தோளில் சாய்ஞ்சுக்கனும் போல இருந்துச்சு. அதான் நேத்து சொல்ல ட்ரை பண்ணினேன். நீ கேட்குற மூட்ல இல்லை. சரி இன்னைக்கு சொல்லலாம்னு பார்த்தா இன்னைக்கும்…”

“சாரிடி… ஒரு வாரமா என்கிட்டே சொல்லாம இதை மனசுலயே வச்சுக்கிட்டு இருந்தியா? எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நம்ம வாழ்க்கையில எவ்வளவோ வெற்றி வந்தாலும் அப்பா ஆகப் போறேன் அப்படிங்கிற சந்தோஷம் எதுக்கும் ஈடு இணை இல்லை. தேங்க்ஸ்டி தர்பூசணி” என்றவன் அவளை அணைத்துக்கொண்டான்.

“நீ தர்பூசணின்னு சொல்லி சொல்லி நான் அப்படியே ஆக போறேன்” என்றாள்.

சிரித்துக் கொண்டவன், “ஹாஸ்பிடல் போனியா?” எனக் கேட்டான்.

“ஒரு வாரம் முன்னாடியே நானே செக் பண்ணிட்டு ஹாஸ்பிடல் போயும் கன்ஃபார்ம் பண்ணிட்டேன்”

“தனியாவா போன?”

“உனக்கு ஃபோன் பண்ணி வெளிய போலாம் வான்னு கூப்பிட்டேன். நீதான் பிஸின்ணு சொல்லிட்ட. சரி கன்ஃபார்ம் பண்ணிப்போம்னு தனியாவே போயிட்டேன்.

“அதுக்குதான் அன்னைக்கு வெளியில் போலாம்னு கூப்பிட்டியா? விஷயத்தைச் சொல்லி கூப்பிடுறதுக்கு என்ன?”

“ஓஹோ விஷயத்தைச் சொன்னா மட்டும் சார் பிஸியா இருந்திருக்க மாட்டீங்களோ….?”

“இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டுகிட்டே இரு. என்ன சொன்னாங்க டாக்டர்?”

“எல்லாம் நார்மலா இருக்குன்னு சொன்னாங்க. சரி… எனக்கு கால் வலிகுது. எங்க கால் பிடிச்சு விடு” என கூறி அவனிடமிருந்து விலகி கால்களை நீட்டி அமர்ந்து கொண்டாள்.

இன்பா கால்களை அழுத்த, தர்ஷினி சத்தமாக சிரித்தாள்.

“எதுக்குடி சிரிக்கிற?”

கால்களை மடக்கி வைத்துக் கொண்டவள் “கால் வலி எல்லாம் இல்லை சும்மா சொன்னேன். பொண்டாட்டி பிரக்னண்ட் ஆனாதான் நீங்க எல்லாம் கவனிப்பீங்க இல்ல…?” எனக் கேட்டாள்.

“நீ பிரகனண்ட்ன்னு சொன்னது பொய் இல்லையே…?” என இன்பா கேட்க தர்ஷினி முறைத்தாள்.

“முறைக்காதடி… நீ எதுல விளையாடுவன்னு எனக்கு தெரிய மாட்டேங்குது” என்றான்.

“இன்பா…” என கிறக்கமாக அழைத்தாள்.

“என்னடி…?”

“என்கிட்ட வாயேன்” என்றாள்.

“கிட்டதானே இருக்கேன்”

“இன்னும் கிட்ட…”

அவளை தன் மடியில் அமர்த்தி வைத்துக்கொண்டவன் “இந்த கிட்டக்க போதுமா?” எனக் கேட்டான்.

வாகாய் அவன் மடியில் அமர்ந்துகொண்டு, அவன் கழுத்தைச் சுற்றி தன் இரு கைகளையும் கோர்த்து கொண்டவள் “ம்ஹூம்… போதாது. இன்னும் கிட்டக்க” என்றாள்.

“நீ இப்படி எல்லாம் பேசாதடி… நான் கொஞ்சம் கொஞ்சமா என் கண்ட்ரோலை இழந்துட்டு வரேன்” என்றான்.

சிரித்தவள் அவன் தலைமுடிக்குள் கை விட்டு அலைந்தாள்.

“என்னம்மா…?”

“தெரியலை.. ரொம்ப… ரொம்ப… ரொம்ப…. சந்தோஷமா இருக்கேன்” என்றாள்.

தர்ஷினியின் சந்தோஷம் இன்பாவின் இதயத்தை நிறைத்தது.

சரவணனுக்கும் சுப்ரியாவிற்கும் கல்யாணத்திற்கு பிறகு வரும் முதல் சண்டை. கோவமாக கத்திக் கொண்டிருந்தான் சரவணன்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர், அவருக்கு கீழ் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ய, அந்தப் பெண் அதிகாரி கமிஷனரிடம் புகார் அளித்துவிட்டார். இந்த விஷயம் வெளியில் தெரியாமல் டிபார்ட்மெண்ட் உள்ளேயே விசாரணை நடந்து கொண்டிருந்தது. இதைப்பற்றி எதேச்சையாக சுப்ரியாவிடம் சரவணன் கூறியிருந்தான்.

‘பெண்களுக்கு எதிராக காவல்துறையில் அதிகரித்து வரும் குற்றங்கள். எத்தனை உயர் பதவியில் இருந்தாலும் பெண்களை இன்னும் போகப் பொருளாகவே பார்க்கும் ஆண்கள்’ என அந்த உயர் அதிகாரியின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பத்திரிகையில் எழுதி விட்டாள்.

“நான் என் பொண்டாட்டிகிட்ட சொன்ன விஷயம் பத்திரிக்கையில எப்படி வந்தது?” என கோபமாக கேட்டான் சரவணன்.

“நான் டைரக்டா எதுவும் எழுதலை”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”

“உண்மையைத் தானே எழுதினேன்”

“தாராளமா உண்மையை எழுது. நான் உன்கிட்ட பகிர்ந்துகிட்ட விஷயத்தை எப்படி எழுதலாம்?”

“நீங்க எழுதக்கூடாதுன்னு ஒன்னும் சொல்லலை”

“நீ இதைப்போய் எழுதுவன்னே நான் நினைக்கல. இனிமே என் பொண்டாட்டிகிட்ட பேசும்போது யோசிச்சி யோசிச்சுதான் நான் பேசணுமா? நீ என்ன பண்ணி இருக்கேன்னு தெரியுதா? நான் உன்கிட்ட பர்சனலா சொன்ன விஷயத்தை என்னோட அனுமதி இல்லாம எனக்கு தெரியாம உன் நியூஸ் பேப்பரில் எழுதி இருக்க. உண்மை எழுதுறேன்னு உன் புருஷன் உன் மேல வச்சிருந்த நம்பிக்கையை கொன்னுருக்க”

அவன் பேசிய வார்த்தைகளின் வீரியம் தாங்க முடியாமல், சுப்ரியாவின் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது. சரவணனுக்கு கைபேசியில் அழைப்பு வர, எடுத்துக்கொண்டு பால்கனி சென்றான்.

தான் செய்த தவறு சுப்ரியாவுக்கு புரிந்தாலும், அதற்காக சரவணன் கூறிய வார்த்தைகளை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவ்வளவு கடினமான வார்த்தைகளை என்னைப்பார்த்து கூறி விட்டானே என மனம் நொந்து போனாள். உடலின் சக்தி எல்லாம் வற்றிப் போனது போல இருந்தது.

திடீரென வெளிச்சம் குறைந்து தெளிவில்லாமல் இருந்தது அந்த இடம். யார் உருவமோ நிழலாக தெரிந்தது. தரையில் ரத்த வெள்ளமாக இருக்க யாரோ விழுந்து கிடந்தார்கள். உற்று நோக்க மூச்சு பேச்சில்லாமல் தர்ஷினி கிடந்தாள்.

“சுப்ரியா… சுப்ரியா…” என சரவணன் உலுக்க சுப்ரியா கண்ட காட்சி கலைந்து போனது. சரவணன் மீது சாய்ந்து கொண்டவள் ஓவென்று கதறி அழ ஆரம்பித்தாள். “அழாத. இனிமே இப்படி பண்ணாத. நானும் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன். கோபம் வந்தா இப்படிதான் யோசிக்காம ஏதாவது சொல்லிடுவேன். சாரி… அழாதம்மா ப்ளீஸ்” எனக்கூறி அவளைத் தேற்றினான்.

அவளோ சரவணனை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டு அழுது கொண்டே இருந்தாள். தன்னிடமிருந்து அவளை விலக்கி, “அதான் சாரி சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன? அழாத” என்றான்.

“தர்ஷினி… தர்ஷினி…. இறந்து போய் கீழே கிடக்கிற மாதிரி பார்த்தேன்” என திக்கித் திணறி கூறிவிட்டாள். கேட்ட சரவணனும் அதிர்ந்து போனான்.