பிரபஞ்சன் இன்பாவுக்காக காத்துக் கொண்டிருந்தார். வேறு வழக்கு சம்பந்தமாக பஷீர் ஏற்கனவே நீதிமன்றம் சென்று இருந்தான். இன்பா மட்டும் மாமாவின் வீட்டிற்கு சென்றான்.
“வாடா பெரிய மனுஷா…” என அவனை வரவேற்கும் பொழுதே அவருடைய குரலில் நக்கல் வழிந்தது. சிரித்துக்கொண்டே அவர் அருகில் வந்தமர்ந்தான்.
“நீங்க கோவமா இருப்பீங்கன்னு தெரியும் மாமா. உங்களுக்கே தெரியும்… இந்த ஃபேக்டரி க்ளோஸ் பண்ணினதுல தர்ஷினிக்கும் பங்கு இருக்கு. அவ இந்த ஃபேக்டரி திரும்பத் திறக்கக் கூடாதுங்கிறதுல ரொம்ப உறுதியா இருக்கா. நான் இந்த கேஸை எடுத்து நடத்துறது அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கலை. எங்களுக்குள்ள பிரச்சனை ஆகுது மாமா. அதான் நான் விலகிக்கிறேன்னு சொன்னேன்” என மிகவும் பொறுமையாக அவரிடம் கூறினான்.
“எப்போ இருந்துடா வீட்டு பொம்பளைங்க கருத்தை எல்லாம் வேலையில கேட்க ஆரம்பிச்ச? இப்படி எல்லாம் வேலை விஷயத்தில் பொண்டாட்டியை தலையிட விட்டா சீக்கிரம் நீ காணாமல் போய்டுவ” என்றார்.
“எல்லா விஷயத்துலயும் இல்லை மாமா. இந்த விஷயத்துல தான் அவ இப்படி பண்றா. எனக்கு வேற வழி தெரியலை” என்றான்.
“இப்படி சொல்ல உனக்கு அசிங்கமா இல்லை. நான் என்ன பண்றேன் ஏது பண்றேன்னு உன் அத்தைக்கு தெரியுமா? கட்டுன புதுசுல இப்படிதான் பொண்டாட்டி பேச்சுக்கு ஆடத் தோணும். போகப் போக அதுவே பெரிய வினையாகிடும். நீ அதுக்கெல்லாம் இடம் தராதே. உன்னை என்னோட வாரிசா நினைச்சுக்கிட்டு இருக்கேன். பெரிய ஆளா ஆக்கணும்னு கனவு கண்டுகிட்டு இருக்கேன். இதை நீதான் நடத்துற” என்றார்.
“இல்ல மாமா எனக்கு வேண்டாம் இந்த கேஸ்” என்றான்.
“உன்னை லா காலேஜ்ல சேர்த்துவிட்டவன்டா நான். படிச்சி முடிச்சதுக்கு அப்புறம் உன்னோட வளர்ச்சிக்கு எது சரி, எதை பண்ணனும் எதை பண்ணக்கூடாதுன்னு ஒண்ணு ஒண்ணா உனக்கு சொல்லி கொடுத்தவன். என் பேச்சுக்கு மரியாதை இல்லையா?”
“மரியாதை இல்லாம நான் என்ன பண்ணினேன் மாமா? இந்த விஷயத்தை விட்டுடுங்க”
“ஓஹோ… உன்னை அந்தளவுக்கு மாத்தி வச்சிருக்காளா உன் பொண்டாட்டி? பெரிய ஆளா இருப்பா போல…” என்றார்.
“மாமா ப்ளீஸ். என்னைப்பத்தி என்ன வேணா பேச உங்களுக்கு உரிமை இருக்கு. அவளை எதுவும் சொல்லாதீங்க. உங்ககிட்ட அவளுக்காக இந்த கேஸை விடுறேன்னு சொன்னது என் தப்புதான். இப்போ எனக்கே வேணாம்னு தோணுது”
“அப்படியே என்னை விட்டுட்டு போயிடலாம்னு தோணுமே…?”
“மாமா…” என தயங்கியவன், “உங்களை விட்டுட்டு போகணும்னு எனக்கு எண்ணம் இல்லை. ஆனா உங்க நிழல்லேயே இருக்கவும் ஆசை இல்லை. நான் தனியா பிராக்டீஸ் பண்ணலாம்னு இருக்கேன்” என்றான்.
“பரவாயில்லையே… உனக்கு உன் பொண்டாட்டி நல்லா சாவி கொடுத்து அனுப்பபியிருக்கா போல”
“திருப்பி சொல்றேன் மாமா… அவளை எதுவும் சொல்லாதீங்க. அவளை என்ன சொல்லவும் உங்களுக்கு உரிமை கிடையாது” என்றான்.
“பலே பலே… வளர்த்த கடா மார்ல பாயும்னு சொல்லுவாங்க கேள்விப்பட்டிருக்கிறாயா…? அது நீ தாண்டா. நன்றி இல்லாதவன். உன்னைப் போய் உன் அத்தை அவ மகன் மாதிரின்னு சொல்லிக்கிட்டு திரியுறா… நான் மட்டும் என்ன…? இத்தனை வருஷம் அந்த நினைப்புலதானே இருந்தேன். எனக்கு நல்ல பாடம் கத்து கொடுத்திட்ட. நீ கிளம்பு. இனி திரும்ப வராத” என்றார்.
“கோவப்படாதீங்க மாமா. என்னைக்கும் நான் உங்க பிள்ளைதான். வேற யாராவது உங்களை பத்தி சொன்னாலும் நான் கோவப்படுவேன் தான். ஏன் தர்ஷினி உங்களைப் பத்தி பேசினாலும் நான் கேட்டுக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். நான் பேசினது உங்களுக்கு தப்பா தெரிஞ்சா மன்னிச்சிடுங்க” என்றான்.
“வெளியில போடா” என உறுமினார் பிரபஞ்சன்.
பிரபஞ்சனின் குணம் இன்பாவுக்கு நன்றாக தெரியும். அவர் சொல்வதுதான் நடக்க வேண்டும் என்று நினைப்பவர். அது நடக்காவிட்டால் கட்டுக்கடங்காமல் கோவம் வரும். ஓரளவுக்கு எதிர்பார்த்தே வந்ததால் இன்பா பெரிதாக ஒன்றும் தளர்ந்து விடவில்லை. போகப் போக சரியாகிவிடும் என்ற எண்ணத்துடன், கிளம்பும் போதும் அவர் கால்களைத் தொட்டு கும்பிட்டு விட்டு, “வரேன் மாமா” எனக்கூறிவிட்டுதான் கிளம்பினான்.
காவல்நிலையத்தில் அமர்ந்திருந்தாள் சுப்ரியா. அப்பொழுதுதான் உள்ளே நுழைந்த சரவண பாண்டியன் அவனது அறைக்கு சென்றான். கான்ஸ்டபிளை அழைத்து, சுப்ரியாவை உள்ளே வருமாறு கூறினான். சுப்ரியா உள்ளே வந்தாள். அவள் இங்கே அவனை எதிர் பார்க்கவில்லை போலும். முகமே காட்டிக் கொடுத்தது.
“உட்காருங்க” என்றான்.
‘அன்னைக்கு நீ வா போன்னு பேசிட்டு இன்னைக்கு என்ன மரியாதை எல்லாம் பலமா இருக்கு?’ என்ற யோசனையுடனே நன்றி உரைத்துவிட்டு அமர்ந்தாள்.
“என்ன விஷயமா என்னை பார்க்க வந்திருக்கீங்க?” என சிரித்த முகத்துடன் கேட்டான்.
“உங்களை பர்சனலா எல்லாம் பார்க்க வரலை” என்றாள். இன்னும் மலர்ந்து சிரித்தவன், “நான் எங்க பர்சனலா பார்க்க வந்திருக்கீங்கன்னு சொன்னேன். சொல்லுங்க என்ன விஷயம்?” என கேட்டான்.
“நான் குடியிருக்கிற அப்பார்ட்மெண்ட்க்கு போறதுக்கு முன்னாடி ஒரு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்கும். நேத்து எங்க அப்பார்ட்மெண்ட் சேர்ந்த காலேஜ் படிக்கிற ஒரு பொண்ணுகிட்ட சிலபேர் மிஸ் பிஹேவ் பண்ணியிருக்காங்க. அந்த இடத்துல பாதுகாப்பு இல்ல” என்றாள்.
“இல்ல சார். கம்ப்ளைன்ட் கொடுக்க எல்லாம் அந்த பொண்ணு வீட்ல தயாரா இல்லை”
“அப்பார்ட்மெண்ட் அப்படின்னு சொல்றீங்க? அங்க அசோசியேசன் எல்லாம் இல்லையா? இப்படி இருக்கிறப்ப அவங்களே பொதுவா ஏதாவது பெட்டிசன் கொடுத்திருக்கலாமே..?” எனக் கேட்டான்.
“இதுவரை யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடக்கலை. இந்த பொண்ணு வீட்டிலேயும் அவங்ககிட்ட இந்த பிரச்சனை பத்தி எல்லாம் சொல்லலை. அந்தப் பொண்ணு எனக்கு கொஞ்சம் பழக்கம். அதனால எனக்கு தெரிஞ்சது. திருப்பி இது மாதிரி ஏதாவது ப்ராப்ளம் வர வாய்ப்பிருக்குன்னு எனக்கு பட்டது. அதான் இங்க வந்தேன்” என்றாள்.
“சரி நான் பார்த்துக்குறேன்” என்றான்.
“தேங்க்யூ சார்” எனக் கூறிவிட்டு அவள் எழ, “அந்த அம்மாவைப் பார்த்து சாரி கேட்டுட்டேன்” என்றான். சுப்ரியா சந்தேகமாய் அவனைப் பார்க்க, அவன் கைப்பேசியை எடுத்து அந்த அம்மாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியைக் காட்டினான்.
சிரித்த முகத்துடன் அந்த அம்மா பக்கத்தில், அன்று அவன் அணிந்திருந்த அதே உடையுடன் நின்றுகொண்டிருந்தான். அன்றே சென்று மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
“பரவாயில்லையே.. தப்புன்னு தெரிஞ்சும் மன்னிப்பெல்லாம் கேட்குற போலீஸ் கூட தமிழ்நாட்டுல இருக்காங்க” என்றாள்.
“போலீஸ்னாலே கெட்டவங்களா? கண்டிப்பா நிறைய நல்ல போலீஸ் இருக்காங்க. நானும் அதுல ஒருத்தன்” என்றான்.
“அப்படி இருந்தா ரொம்ப சந்தோஷம். நான் வரேன்” என திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
“என்னங்க வேற எதுவும் சொல்லாம போறீங்க?” என கேட்டான்.
“வேற என்ன சொல்லணும்?”
“சரி போங்க” என்றான். சுப்ரியா சென்று விட்டாள். அவள் தன் கண்களில் இருந்து மறையும் வரை அவளையே பார்த்து இருந்தான் சரவணன்.
மாலையில் சுப்ரியா வீடு திரும்பும்போது, அந்த ஆள் அரவமற்ற சாலையில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காவலுக்கு நின்று கொண்டிருந்தார். புதிதாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது.
‘நாம சொன்னதும் உடனே செஞ்சு வச்சிருக்கான். நல்லவனா இருப்பான் போலவே…’ என நினைத்துக்கொண்டே வீட்டிற்கு சென்றாள்.
மாலை 5 மணிக்கு அடையாரில் இருந்த செங்கதிர் பத்திரிக்கை அலுவலகத்தின் வெளியில் தன் வாகனத்தை நிறுத்தினான் இன்பா. தர்ஷினிக்கு அழைத்தான்.
அழைப்பை ஏற்ற தர்ஷினி “சொல்லு” என்றாள்.
“என்னடி சொங்கி மாதிரி சொல்லு அப்படிங்கிற..? ஒரு கிக்கே இல்லை” என்றான்.
“நான் மூட் ஆஃப்ல இருக்கேன் இன்பா. நீ என்னன்னு விஷயத்தை சொல்லு” என்றாள்.
“காலையிலேயே என்னடி சொன்னேன்? ரெடியா இரு ஈவினிங் வருவேன்னு சொன்னேன்ல…”
“கிளம்ப வேண்டியதுதான். நீ எங்க இருக்க?”
“உன்னை முத முதல்ல வெளியில அழைச்சிட்டு போறேன்னு சொல்லி இருக்கேன். உனக்கு எந்த ஃபீலிங்ஸ்மே இல்லையா?”
“நான்தான் மூட் ஆஃப்னு சொன்னேன்ல… அதான். நீ எங்க இருக்க?”
“உன் ஆஃபீஸ்க்கு வெளியில”
“சரி நில்லு வந்துடுறேன்” என்றாள்.
அவன் இங்கு இருப்பதாக கூறவும், ‘அப்படியா… வந்துட்டியா..? இங்கு இருக்கியா…?’ என ஆச்சரியமாக அல்லது உற்சாகமாக கேட்பாள் என இன்பா நினைத்தால், தர்ஷினியோ சாதாரணமாக பேசினாள். 5 நிமிடங்களில் வெளியில் வந்தாள் தர்ஷினி.
முகத்திலும் மகிழ்ச்சி தென்படவில்லை. இன்பாவுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
“ஏண்டி இன்னைக்கு காலையிலதானே உன் லவ்வ வாயை திறந்து சொன்ன? எனக்கு உன் நினைப்பாவே இருக்கு. நீ என்னடான்னா….? உனக்கு கொஞ்சம் கூட எந்த ஃபீல்மே இல்லையா?”
அவன் இவ்வாறு பேசிய பிறகுதான் லேசாக தர்ஷனிக்கு சிரிப்பு எட்டிப்பார்த்தது. “நம்ம ஒரே வீட்லதானே இருக்கோம். அப்புறம் என்ன வெளியில மீட் பண்ணனும் உனக்கு?” என வேண்டுமென்றே கேட்டாள்.
“ஒரே வீட்டுல…? நீ வீட்டுக்கு வந்ததும் உன் மாமியார் நான் உன்னை கடிச்சி தின்றது மாதிரி ரூமுக்கு அனுப்ப மாட்டாங்க. அதனால்தான் இந்த வெளில போற பிளான். அவன் அவன் காலையில லவ் சொல்லிட்டு, சாய்ந்தரம் டேட்டிங் போறாங்க. என் பொண்டாட்டி நீ. வெளியில வாடின்னா ஆயிரத்தெட்டு கேள்வி கேடட்குற…” என்றான்.
“சரி என் வண்டியை என்ன பண்றது?”
“இங்கேயே கிடக்கட்டும். நாளைக்கு வந்து எடுத்துக்கலாம்” என இன்பா கூற, அவனுடன் புறப்பட்டாள் தர்ஷினி. திருவான்மியூர் பீச்சுக்கு அழைத்துச் சென்றான். இருவரும் மணலில் அமர்ந்து கொண்டார்கள்.
“ சொல்லு… உனக்கு ஏன் மூட் ஆஃப்?”
“ரூபானந்த சாமியார் பத்தியும் அந்த ஆளு ஆசிரமத்தை பத்தியும் ஆர்டிகல் ரெடி பண்ண சொன்னாங்க. என்னை அந்த ஆசிரமத்தில் நிறைய இடத்துக்கு பார்க்க அலோவ் பண்ணவே இல்லை. எனக்கு ஏதோ வித்தியாசமா பட்டது. அந்தாளு சாமியார்ன்கிற பெயரில் ஏதோ திருட்டுத்தனம் செய்றார். அங்க ஏதோ பெருசா தப்பு நடக்குது. இதையெல்லாம் எழுதிக் கொண்டு போய் கொடுத்தா, என் எடிட்டர் திருப்பி என்கிட்டயே கொடுத்துட்டு, நான் சொல்ற மாதிரி ரெடி பண்ணி தான்னு சொல்லிட்டார். அந்த சாமியாரை பத்தி ஆஹா ஓஹோ ன்னு புகழ்ந்து எழுத சொல்கிறார். ஐ ஆம் ஃபெட் அப் வித் ஹிம்” என்றாள்.
ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தான் இன்பா.
“என்ன ஒன்னும் சொல்லாம அமைதியா இருக்க?” என கேட்டாள் தர்ஷினி.
“உன் செங்கதிர் பொய் செய்திதான் போடுவாங்கன்னு சொன்னா உனக்கு கோவம் வரும். உடனே என்கிட்ட சண்டைக்கு வருவ” என்றான்.
தர்ஷினி கடலைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“இங்க பாரு தர்ஷினி. அந்த சாமியார் கிட்ட ஏதாவது பணம் வாங்கியிருப்பாங்க. அப்போ அந்தாள பத்தி புகழ்ந்துதானே எழுத சொல்லுவாங்க. நீ அந்தப் பத்திரிகையில் வேலை பார்க்கிற. நீ நினைக்கிறத செய்ய முடியலைன்னா… எங்க செய்ய முடியுமோ அங்கே வேலையை மாத்திக்கோ. இவங்களுக்காக காம்ப்ரமைஸ் பண்ணி, நீ நினைச்சத செய்ய முடியாம, பிடிக்காததை செஞ்சு உன்னை நீ தொலைச்சிடாதே” என்றான்.
“ஈவ்னிங் செம காண்டுல இருந்தேன். இப்ப உன்கிட்ட பேசனதுக்கு அப்புறம் பெட்டரா ஃபீல் பண்றேன்” எனக்கூறி கொஞ்சம் அவனை நெருங்கி அமர்ந்தாள்.
‘இப்பதான் என் தர்பூசணிக்கு மண்டையில பல்பு எரியுது’ என நினைத்துக்கொண்டே, இன்பாவும் அவளை நெருங்கி அமர்ந்தான்.
“காலையில உன் மாமாகிட்ட சொல்ல போறேன்னு போனியே… என்னாச்சு?” என கேட்டாள்.
காலையில் நடந்ததை அப்படியே கூறினான்.
“அவர் ஏன் இவ்வளவு தீவிரமாக இருக்கிறார்? பிள்ளைகளும் இல்லை. யாருக்காக இவ்வளவு சொத்து சேர்க்கிறார்? சொத்து இல்லை.. பாவம் சேர்க்கிறார். சரியான பொய் மூட்டை அவர்” என்றாள்.
“அவரைப் பத்தி தப்பா எல்லாம் பேசாதடி. எனக்கு கோவம் வரும்” என்றன்.
“உண்மையை சொன்னா உனக்கு கோபம் வருமா?”
“அவர் எவ்ளோ இன்டலிஜென்ட் தெரியுமா? அவர்கிட்ட இருந்து எவ்வளவு விஷயம் கத்துக்கிட்டு இருக்கேன் தெரியுமா?”
“நிறைய ஃபிராடுத்தனம் கத்து வச்சிருக்கேன்னு சொல்லு. எப்படியோ அவர்கிட்ட இருந்து வந்துட்டல்ல. அவர்கிட்ட இருந்து என்னத்த கத்துக்கிட்டியோ… எனக்கு தெரியாது. ஆனா அதை நல்லதுக்கு மட்டும் பயன்படுத்து” என்றாள்.
“இங்க பாருடி… ரெண்டு பேரும் வேற வேற ப்ரொஃபஷன்ல இருக்கோம். ரெண்டு பேருக்குமே நம்ம வேலையில பிடிக்காத விஷயம் இருக்கலாம். அதையெல்லாம் குடும்பத்துக்குள்ள கொண்டு வராம பார்த்துக்குவோம். இல்லனா நமக்குள்ள வீணா சண்டை வரும்” என்றான்.
“எனக்கு பிடிக்காததை செஞ்சா நான் கேட்பேன்” என்றாள்.
“நல்லா கேளு. ஆனா என் தொழிலில் தலையிடாத. மத்தபடி உனக்கு பிடிக்காததை நான் செய்ய மாட்டேன்” என்றான்.
“சரியான ஆளுடா நீ. கழுவுற மீனில் நழுவுற மீனு”
“உனக்கு உதாரணம் கூட சாப்பாட்டு மேட்டர் தானா..?”
“ஆமாம்… வந்து எவ்வளவு நேரம் ஆகுது… எனக்கு ஏதாவது வாங்கி தந்தியா? போ போ… பேல் பூரி, மாங்கா சுண்டல், வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, வறுத்த சோளம், ஸ்பிரிங் பொட்டேட்டோ ரோல்…” என அடுக்கிக் கொண்டே போனாள்.
“என் வயிறு தானே..? உனக்கு என்ன கவலை? போ போய் வாங்கிட்டு வா” என்றாள்.
“உன் வயிறா..? இனிமேல் நீ எனக்குதாண்டி சொந்தம். நீ முடியாம படுத்திட்டா இன்னும் ஒரு வாரம் தள்ளிப் போய்டும்” என்றான்.
“என்ன தள்ளிப்போகும்?”
“தீனி பண்டாரம். எனக்கும் உனக்கும் இன்னும் ஃபர்ஸ்ட் நைட் நடக்கலை. நினைப்பு இருக்கா…?”
“ச்சீய்… எப்ப பாரு உனக்கு அந்த நினைப்பு தானா…?”
“என்னடி…? என்னை என்னமோ லோஃபர் மாதிரி பேசுற? கட்டுன பொண்டாட்டிக்கு எத்தனை மச்சம் இருக்குனு இன்னும் தெரிஞ்சுக்காம இருக்கேன். இதை நெனச்சா எனக்கு எவ்வளவு அசிங்கமா இருக்கு தெரியுமா?”
“நாமலே நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணி வச்சிடலாம். என் மேலேயும் கொஞ்சம் பாவப்படு” என்றான்.
“பார்க்கிறேன். நீ போய் சாப்பிட நான் சொன்னது எல்லாம் வாங்கிட்டு வா” என்றாள்.
“திங்குறதுலேயே இருக்கா” எனக் கூறிக் கொண்டே சென்றான். சுண்டலும் சோளமும் மட்டும் வாங்கி வந்தான்.
“என்னடா இது? எத்தனை பஜ்ஜி சொன்னேன்.. ஒன்னு கூட இல்லை”
“இதை சாப்பிடு டி. நான் வீட்ல சொல்லி டெய்லி பஜ்ஜி போட்டு தர சொல்றேன்” என்றான்.
“நீ இப்படி எல்லாம் பண்ணினா உன் கூட இனிமே வெளியில் வர மாட்டேன்”
“பரவாயில்லை வீட்டிலேயே இருக்கலாம்” எனக் கூறி கண் சிமிட்டினான்.
“வெவ்வவெவ்வெ…” என பழிப்பு காட்டிவிட்டு சுண்டலையும் சோளத்தையும் கொறிக்க ஆரம்பித்தாள் தர்ஷினி.
பின்னர் இருவரும் காலாற நடந்தார்கள். இன்பாவின் பேச்சில் வித்தியாசம் இருந்தது. புது மனைவியிடம் அதுவும் காதல் மனைவியிடம் காதல் கணவன் பேசுவது போலவே அவன் பேச்சு இருந்தது. ஆனால் தர்ஷினி எப்போதும் போலவே பேசிக்கொண்டிருந்தாள்.
‘லூசு கொஞ்சமாவது நான் சொல்றது புரிஞ்சுக்குதா? இதை வச்சிகிட்டு நான் என்ன செய்ய போறேனோ… தெரியலை’ என மனதிற்குள் புலம்பினான் இன்பா.
அவள் கையை பிடித்து கொண்டு, “தர்ஷினி…” என ஆழ்ந்த குரலில் அழைத்தான்.
என்ன என்பது போல தர்ஷினி பார்த்தாள்.
“நீ என் கூட இல்லாம இருக்குற கடைசி இரவு இதுவாதான் இருக்கணும்” என் கண்களில் காதலை நிரப்பி கூறினான்.
அவனை உற்று நோக்கியவள், “போடா காட்டுப்பூச்சி” என்றாள்.
ஆர்வமாக அவள் என்ன சொல்ல போகிறாள் என பார்த்திருந்த இன்பாவின் முகபாவனைகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
அவன் முகத்தைப் பார்த்து கல கலவென சிரித்தாள் தர்ஷினி.