தர்ஷினி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடித்து விட்டு விடுமுறையில் இருந்தாள். தினமும் சைக்கிளில் குங்ஃபூ வகுப்புக்கு சென்றுவிட்டு சைக்கிளிலேயே வீட்டுக்கு திரும்பி விடுவாள். அன்று காலையில் இருந்தே அடி வயிறு லேசாக வலிப்பது போலவே தர்ஷினிக்கு இருந்தது. பொதுவாகவே தர்ஷினி உடல்நிலை சரியில்லை என்றாலும் சோம்பி உட்கார்ந்து விட மாட்டாள். அன்றும் அதைப்போலவே, வலியை பெரிதுபடுத்தாமல் வகுப்புக்கு சென்று விட்டாள்.
வகுப்பு முடித்து கிளம்பும் சமயத்தில், அசௌகர்யமாக உணர்ந்தாள். வீட்டிற்கு சீக்கிரம் சென்று விடுவோம் என நினைத்துக்கொண்டே வேகமாக சைக்கிளை மிதித்து வந்து கொண்டிருக்க பாதிவழியில் அவளது சைக்கிள் டயர் பங்க்சர் ஆனது. வண்டியை விட்டு கீழே இறங்கியவள், எதையோ உணர்ந்து தன் ஆடையின் பின்னால் பார்த்தாள்.
பத்மினி ஏற்கனவே தர்ஷினிக்கு விளக்கமாக கூறி இருந்ததால், அவள் பூப்படைந்து விட்டதை உணர்ந்து கொண்டாள். ஒருவித பயமும் பதட்டமும் சூழ்ந்து கொண்டது. இந்த ஆடையுடன் எப்படி வீட்டிற்கு செல்வது என அங்கேயே நின்று சுற்றும் முற்றும் பார்த்தாள். ஆள் அரவம் அதிகம் இல்லாவிட்டாலும், யாராவது வந்து போய் கொண்டுதான் இருந்தனர். இன்னும் கொஞ்சம் தூரம் சென்றால் மெயின் ரோடு வந்துவிடும். அதைத் தாண்டிதான் வீட்டிற்கு செல்ல வேண்டும். தர்ஷினி தைரியமானவள்தான் என்றாலும், அந்த சமயத்தில் அழுகை வருவது போல் இருந்தது. ஏனோ எல்லோரும் தன்னையே கவனிப்பது போல இருக்க, கண்ணீர் முட்டிக் கொண்டு வெளியில் வந்துவிட்டது.
“தர்ஷினி” என இன்பா அழைக்கும் குரல் அவளுக்கு பின்னால் இருந்து கேட்டது. இன்பா அவனுடைய பைக்கை சர்வீஸுக்கு கொடுத்துவிட்டு, மாலையில் வாங்கிக் கொள்வதாகக் கூறிவிட்டு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தான். தூரத்திலிருந்தே தர்ஷினியை பார்த்துவிட்டான். இவள் ஏன் தனியாக நிற்கிறாள் என யோசித்துக்கொண்டே அருகில் வர, அவளது நிலையையும் உணர்ந்து கொண்டான்.
தர்ஷினி இன்பாவை பார்த்ததும் இன்னும் பதட்டமானாள். இன்பா நெருங்கிவர, தர்ஷினி பின்னால் ஓரடி எடுத்து வைத்தாள். கால் இடரி விழப்போனவளை இன்பா பிடித்துக்கொண்டான்.
“பயப்படாத. நான் இருக்கேன்” என்றான். சைக்கிள் பங்க்சர் ஆகி இருப்பதை கவனித்தான்.
“நீ இங்கேயே நில்லு. நான் ஆட்டோ பிடிச்சிட்டு வரேன்” என்றான். தர்ஷினி அழ ஆரம்பித்து விட்டாள்.
“அழாத தர்ஷினி… உனக்கு ஒன்னும் இல்லை. இப்போ வீட்டுக்கு போயிடலாம்” என்றான்.
“நான் எப்படி இப்படியே வருவேன்?” என கேட்டு தேம்பலானாள்.
தன் சட்டையை கழற்றியவன் அவளது இடுப்பில் சட்டையின் கை பகுதி வயிற்றுப் பக்கத்தில் வருமாறு கட்டிவிட, அவளது பின் பகுதி முழுவதையும் சட்டை மறைத்துக் கொண்டது.
“பயப்படாம இங்கேயே இரு. அந்த முக்கத்துல ஆட்டோ நிக்கும். நான் போய் அழைச்சிட்டு வந்திடுறேன்” எனக்கூறியவன் இரண்டு நிமிடங்களில் ஆட்டோவுடன் வந்தான். ஆட்டோகாரர் அவனையும் அவளையும் வித்தியாசமாக பார்க்க, “அவ என் அத்தை பொண்ணு, சைக்கிளில் வரும்போது டிரஸ் கிழிஞ்சிடுச்சு” என்றான்.
அவளை அழைத்து வந்து ஆட்டோவில் ஏற்றினான். சில நிமிடங்களில் வீடு வந்து விட இருவரும் இறங்கிக் கொண்டனர்.
“ நீ வீட்டுக்கு போ. உன் சைக்கிளை சரி பண்ணி ஈவ்னிங் கொண்டு வந்து தரேன்” என்றான். சரி என தலையாட்டி விட்டு தர்ஷினி வீட்டிற்குள் செல்ல, அவள் செல்லும் வரையில் அங்கேயே நின்றான்.
அந்த நேரத்தில் இன்பா செய்த உதவி ஆழமாக தர்ஷினியின் மனதில் பதிந்து விட்டது. அதற்குப் பின்னர் என்றுமே இன்பா அந்த நிகழ்ச்சியை பற்றி எதுவும் சொன்னது கிடையாது. வழக்கம்போல அவளிடம் கிண்டல் செய்து கொண்டுதான் இருப்பான். இவளும் பதிலுக்கு ஏதாவது செய்வாள்.
தர்ஷினி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது, அந்த வருட தீபாவளியை கொண்டாட குடும்பங்கள் தயாராகிக் கொண்டிருந்தன. முருகேசன் அப்போதெல்லாம் வெளிநாட்டில்தான் இருந்தார். பத்மினி தன் மகளுக்கு பட்டுப்பாவாடை தாவணி வாங்கி கொடுத்திருந்தார்.
தீபாவளி அன்று பட்டுப்பாவாடை தாவணியில் வலம் வந்தாள் தர்ஷினி. பிள்ளைகள் எல்லோரும் சாரங்கபாணி வீட்டிற்கு வெளியில் வெடிகள் வெடித்துக் கொண்டிருந்தனர். பெரியவர்களும் அங்குதான் இருந்தனர். இன்பா மட்டும் வீட்டின் உள்ளே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான்.
சாரங்கபாணி நீளமான மூங்கில் குச்சியின் முனையில் ஆணி அடித்து வெடி வெடிப்பதற்காக பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒன்று கொடுத்திருந்தார். அந்த ஆணியில் ஊசி பட்டாசை சொருகி, எரியும் மெழுகுவர்த்தியில் காட்டி, மூங்கில் குச்சியை கையில் பிடித்துக்கொண்டே வெடி வெடித்துக் கொண்டிருந்தனர்.
தர்ஷினியின் மெழுகுவர்த்தி முழுவதும் உருகி விட்டது. புதிய மெழுகுவர்த்தி எடுப்பதற்காக வீட்டின் உள்ளே சென்றாள். இன்பாவை கடந்து உள்ளே சென்று மெழுகுவர்த்தியை எடுத்துக் கொண்டாள். மெழுகுவர்த்தியை ஏற்றி எடுத்துச் செல்வோம் என்று, தீப்பெட்டி வைத்து ஏற்றி விட்டாள். வெளியே செல்ல நினைக்கையில், அங்கிருந்த பலகாரங்கள் அவளது ஆசையை தூண்டியது.
எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தியை ஓரமாக வைத்தவள், ஒரு கையில் முறுக்கையும் இன்னொரு கையில் அதிரசத்தையும் எடுத்தாள். ஆசையாக சுவைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தாவணி பறந்து வந்து மெழுகுவர்த்தியில் பட தீப்பிடித்துக் கொண்டது. எதேச்சையாக உள்ளே எட்டிப்பார்த்த இன்பா, “தர்ஷினி…” என கத்திக் கொண்டே உள்ளே ஓடி வந்தான்.
அப்பொழுதுதான் தர்ஷினிக்கும் தன் தாவணியில் நெருப்பு பற்றியது தெரிந்தது. தர்ஷினி பயந்து போய் நிற்க, இன்பா அவளது தாவணியை அவளிடமிருந்து பறித்து எறிந்தான். அவள் பாவாடையிலும் தீப்பிடித்து கொண்டது. தன் கைகள் கொண்டு இன்பா அணைக்க முற்பட, இன்பாவின் சட்டையில் தீப்பிடித்தது.
அருகில் இருந்த தண்ணீர் குடத்தை எடுத்து, தர்ஷினியின் மேல் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தான். தன் கை கொண்டு தன் சட்டையை தட்டி, அந்த தீயையும் அணைத்தான். எல்லாம் சில நொடிகளில் நடந்து முடிந்திருந்தது.
“உனக்கு ஒன்னும் ஆகலையே…?” என தர்ஷினியிடம் இன்பா கேட்க, இட வலமாக தலையை ஆட்டினாள்.
சத்தம் கேட்டு எல்லோரும் உள்ளே வர, அதற்குள் இன்பாவே தீயை அணைத்து முடித்திருந்தான்.
பத்மினி தன் மகளை கட்டிக் கொண்டார். தர்ஷினிக்கு எந்த தீக்காயமும் ஏற்படவில்லை. இன்பாவுக்குதான் இடது பக்க மார்பில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது.
அன்று ஏற்பட்ட அதிர்ச்சியில் சில நாட்கள் இன்பாவிடம் பேசாமலே இருந்தாள். தர்ஷினிக்கு அவன் முன்பு செல்லவே தயக்கமாக இருந்தது. அப்பொழுது நடந்த தேர்வில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாள். பத்மினி லட்சுமியிடம், “எப்பவும் இப்படி கம்மியா மார்க் வாங்க மாட்டா. ஒருமாதிரியாவே இருக்கா. அவர் வேற இல்லை. இவளை என்ன பண்றதுன்னே தெரியலை” என புலம்பிக் கொண்டிருந்தார். இதை காதில் வாங்கிய இன்பா, தர்ஷினியின் வீட்டிற்கு சென்றான்.
தர்ஷினி அவளது அறையில் அமர்ந்து, புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு, மனதில் எதுவும் பதியாமல் எதையோ யோசித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். திடீரென இவன் வரவும், பதட்டமாகி எழுந்து நின்றாள்.
“ஏய்… ஏண்டி இப்படி அப்நார்மலா பிஹேவ் பண்ற? இதுக்கு முன்ன நான் இங்க வந்ததே இல்லையா?” என கேட்டான்.
பதில் கூறாமல் கையில் இருந்த புத்தகத்தை நெஞ்சோடு அணைத்தபடி நின்றிருந்தாள்.
“என்ன தர்ஷினி உனக்கு பிரச்சனை? மார்க்ஸ் எல்லாம் ரொம்ப குறைஞ்சிட்டதா அத்தை சொல்லிக்கிட்டு இருந்தாங்க? ஸ்கூல்ல யாரும் எதுவும் வம்பு பண்றாங்களா?” எனக் கேட்டான்.
தலையை மட்டும் இல்லை என்பதாக ஆட்டினாள்.
“என்னடி ஆச்சு உனக்கு? ஏன் என்கிட்ட பேசவே மாட்டேங்குற. என்ன பிரச்சினைன்னு சொல்லு. எதா இருந்தாலும் பரவாயில்லை. நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். சரி பண்ணி தரேன்” என்றான்.
அப்பொழுதும் அமைதியாக நின்றிருந்த தர்ஷினியிடம், “இப்ப சொல்ல போறியா… இல்லையா?” என கொஞ்சம் கண்டிப்புடன் கேட்டான்.
“இல்ல… என் தாவணியில் நெருப்புப் பிடிச்சு… அதை எடுத்து விட்டிட்டியா…? அப்புறம் தண்ணிய வேற என் மேல ஊத்தி விட்டுட்ட. பாவாடையும் எரிஞ்சு போய்… அப்படி உன் முன்னால நின்னது எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு… உன்னை ஃபேஸ் பண்ண கஷ்டமா இருக்கு. எப்பவும் போல பேச முடியலை. ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கு” என்றாள்.
“லூசு… நான் உன்னை தப்பா எல்லாம் பார்க்கலடி” என்றான்.
சட்டென நிமிர்ந்த தர்ஷினி, “நீ பார்த்தன்னு நான் சொல்லல. உன் முன்னாடி நான் அப்படி நின்னது எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சுன்னுதான் சொன்னேன். நீ மட்டும் அப்போ அங்க இல்லைன்னா… இன்னைக்கு நான் இல்லை. உன்கிட்ட தேங்க்ஸ் சொல்லனும்னு நிறைய முறை நினைச்சேன். ஆனா உன் கிட்ட பேசவே தயக்கமாக இருந்தது” என்றாள்.
“நீ என்னை பார்த்து பதட்டப் படுற அளவுக்கு ஒண்ணுமே நடக்கலை. இதையெல்லாம் நினைச்சு ஏன் இப்படி மனசை போட்டு குழப்பிக்குற? பாரு மார்க்ஸ் எல்லாம் குறைஞ்சு போச்சு” என இன்பா பேசிக்கொண்டிருக்க தலைகுனிந்து கேட்டுக் கொண்டிருந்தாள். “என்னை நிமிர்ந்து பாரு தர்ஷினி” என்றான்.
தர்ஷினி அவனைப் பார்க்க, “நீ இப்படி இருக்கிறது நல்லாவே இல்லை. எனக்கு பிடிக்கவே இல்லை. எப்பவும் போல, என் கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டு இரு. இல்லன்னா எதையோ மிஸ் பண்றது மாதிரியே இருக்கு. எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லு. உன் மனசுலேயே எதையாவது வச்சிக்கிட்டு, இப்படி நீ இருக்கிறது உனக்கு செட் ஆகவே இல்லை. எப்பவும் போல இருக்கியா?” எனக் கேட்டான்.
“ஏன் நீ முறுக்கு அதிரசம் எதையும் திங்கிறதே இல்லையா? போன வாரம் அத்தைகிட்ட ஆசை ஆசையா, சீப்பு முறுக்கும், பயறு உருண்டையும் சாப்பிட கேட்டேன். எல்லாத்தையும் நீயே தின்னு முடிச்சிட்டதா சொன்னாங்க. நீதான் தீனிப் பண்டாரம், நான் இல்லை” என்றாள்.
சட்டென அவள் கையில் இருந்த புத்தகத்தை பறித்தவன், “ என் கிட்ட பேசுனதுக்கு சாரி சொல்லிட்டு இதை வாங்கிட்டு போ” எனக்கூறி அங்கிருந்து நடந்து சென்றான்.
“அதை நீயே வச்சுக்கோ. அது என் புக் கிடையாது. நசீரோடது” என்றாள்.
“ரொம்ப நல்லதா போச்சு. முன்ன ஒரு தடவை அவன்தானே நான் சினிமாவுக்கு போனத போட்டோ புடிச்சி உன்கிட்ட கொடுத்தான். நீ அப்பா கிட்ட மாட்டி விட்ட. அவனையும் சேர்த்து அழைச்சிட்டு வந்து சாரி கேளு.. அப்பதான் புக் திரும்ப கிடைக்கும்” எனக் கூறி அங்கிருந்து வெளியேறினான்.
“போடா காட்டுப்பூச்சி… நான் சாரி எல்லாம் ஒன்னும் கேக்க மாட்டேன்” என்ற தர்ஷினியின் குரல் வெளியில் சென்று கொண்டிருந்த இன்பாவின் காதுகளில் விழ, சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றான்.
அதற்குப் பின் எப்போது என்றெல்லாம் இன்பாவுக்கு தெரியவில்லை. ஆனால் தர்ஷினியின் இருப்பை தன் மனம் நாடுவதையும், அவள் அருகில் இருக்கும் போது மனம் உற்சாகமாக இருப்பதையும் உணர்ந்து கொண்டான். அதனாலேயே அவளிடம் அத்துமீறி வம்பு செய்வான். சில சமயங்களில் தர்ஷினியும் தன்னை உரிமையாக நோக்குவதாக அவனுக்கு படும். ஆனால் அவளிடம் எதுவும் கூறியது கிடையாது.
தர்ஷினி தன் தோழிகளுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அவர்கள் ஏதாவது காதல் என்று பேசினாலே, இன்பாவின் உருவம்தான் அவளுக்குத் தோன்றும். ஆரம்பத்தில் தன் மனதை அடக்க முயன்றாள். ஒரு கட்டத்தில் அவன் தன்னை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டது புரிந்து, மனதை அடக்க வில்லை. அவனை காதலிப்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க ஆரம்பித்தாள்.
தர்ஷினி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், புதிதாக அந்த மாடப்புறா ரஹீம் பாயின் வீட்டிற்கு வந்தது. எப்பொழுதும் போல தர்ஷினியையே பெயர் வைக்க ரஹீம் பாய் கூற, அந்த மாடப்புறாவுக்கு இன்பாவின் பெயரை வைக்க தர்ஷினி ஆசைப்பட்டாள். ஆனால் வெளிப்படையாக அவன் பெயரை வைத்தால் எங்கே எல்லோரும் கிண்டல் செய்வார்களோ என பயந்தாள். அதுவும் இன்பா என்ன நினைப்பானோ என நினைத்தே, இணையத்தின் உதவிகொண்டு ஃபெலிஸ் எனும் பெயரை மாடப்புறாவுக்கு சூட்டினாள்.
அதற்கு பின்னர் இன்பா தர்ஷினியை காதலித்தாலும் வம்பு செய்வதை நிறுத்தவில்லை. தர்ஷினியும் பதிலடி கொடுப்பதை நிறுத்தவில்லை.
இன்பா இந்த தொழிற்சாலை சம்பந்தப்பட்ட வழக்கை ஏற்றுக் கொண்டதில் தர்ஷினிக்கு மிகவும் வருத்தம். மேலும் தன்னுடைய தொழிலில் ஏதாவது சாதித்துவிட்டு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் எண்ணி இருந்தாள். அதனாலும், இன்பா மீது கோபத்தில் இருந்ததாலும் திருமணம் வேண்டாம் என்றாள்.
இவன் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும் என்பதற்காகவே ஃபெலிஸை விரும்புவதாக அவனிடம் கூறி வெறுப்பேற்றினாள்.
அவர்களது அறைக்கு வந்த இன்பா, கதவை தாழிட்டு, “தர்ஷினி” என அழைத்தான். தலையணையில் முகம் புதைத்து படுத்திருந்த தர்ஷினி எழுந்து அமர்ந்தாள். தன் இரு கைகளையும் விரித்து அவளை நோக்கி நீட்டியவன், “என்கிட்ட வாடி” என்றான்.
எழுந்து ஓடிச்சென்று இன்பாவின் மார்பில் தஞ்சம் புகுந்தாள் தர்ஷினி. அவளை அணைத்துக் கொண்டவன், முன்னுச்சியில் மென்மையாக முத்தமிட்டான்.
அவன் அழைத்ததும், மனம் கட்டுக்குள் இல்லாமல், அவனிடம் வந்துவிட்ட தர்ஷினி, இப்போது அவனிடமிருந்து விலகிச்செல்ல பார்த்தாள்.
“ப்ளீஸ்டி… எனக்கு நம்மளை பத்தி எவ்ளோ கனவு தெரியுமா? இப்படி நீ மனசு கஷ்டப்படும் போது என் நெஞ்சில சாச்சிக்கிட்டு உனக்கு ஆறுதலா இருக்கணும் அப்படின்னு எல்லாம் நினைச்சிருந்தேன். என்னை விட்டு தள்ளிப் போகாத டி” என்றான்.
“போடா உனக்கு மட்டும்தான் ஆசையா…? எனக்கு இல்லையா?”
“அப்புறம் என்னடி?”
“நீ தப்பு பண்ற”
“அது தப்பு சரி என்கிற பேச்சுக்கே நான் வரலை. அந்த கேஸ் வேண்டாம்ன்னு மாமாகிட்ட சொல்லிட்டேன். போதுமா?” என்றான்.
நம்ப முடியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளின் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு, “உண்மையாடி… இப்பதான் சொல்லிட்டு வரேன்” என்றான்.
“வக்கீல் பொய் சொல்ல மாட்டியே…?” எனக் கேட்டாள்.
“வக்கீல் இன்பா பொய் சொல்வானா இருக்கும். தர்ஷினியோட இன்பா தர்ஷினிகிட்ட பொய் சொல்ல மாட்டான்” என்றான்.
தர்ஷினி தனது அணைப்பை இறுக்கி, “ஐ லவ் யூ டா” என்றாள்.
“அவ்வளவுதானா?” எனக் கேட்டான்.
“வேற என்ன வேணும்?”
இன்பா என்ன வேண்டும் என சொல்ல வாய்திறக்க, அவனின் கைப்பேசி ஒலித்தது. மேஜையில் இருந்த அவனது கைப்பேசியை எடுத்து பேசினான். அவனது அன்னைதான் அழைத்திருந்தார்.
“என்னம்மா..?” எனக் கேட்டான்.
“நீ ரூமுக்குள்ள போய் எவ்வளவு நேரம் ஆகுது…? பக்கு பக்குன்னு இருக்குடா. அவளை எதுவும் பண்ணிடாதே” என்றார்.
“ஏம்மா உன் மருமகளுக்கு குங்ஃபூ எல்லாம் தெரியும். உனக்கு தெரியுமா.. தெரியாதா? அவ என்னை எதுவும் பண்ணாம இருந்தா அதுவே பெரிய விஷயம்” என்றான்.
“போதும் கதவை திறந்திட்டு வெளியில வாங்க” என்றார்.
“இன்னைக்குதான் அம்மா அவ சமாதானம் ஆகி இருக்கா…”
“டேய்…” என அவனை பேசவிடாமல் அதட்டினார்.
“என்னம்மா…?”
“இன்னைக்கு நாள் நல்லா இல்லை. நீ கதவை திற” என்றார்.
“நீ வை” என எரிச்சலுடன் கைப்பேசியை வைத்துவிட்டு படுக்கையில் அமர்ந்து கொண்டான். தர்ஷினியை ஏக்கமாக பார்த்தான்.
“என்னாச்சுடா…? அத்தை என்ன சொன்னாங்கன்னு இப்போ மூஞ்சிய தொங்க போட்டு இருக்க?”
“இன்னைக்கு நாள் நல்லா இல்லையாம்” என்றான் சோகமாக.
சிரித்துக்கொண்டே தர்ஷினி கதவை திறக்க செல்ல, அவளை இழுத்து படுக்கையில் தள்ளினான். அவள் அருகில் படுத்தவன், “ஒரு முத்தமாவது கொடுத்துட்டு போடி” என்றான்.
“கண்ணை மூடு” என்றாள்.
ஆசையாக இன்பா கண்களை மூட, எழுந்துகொண்ட தர்ஷினி கதவை திறந்து கொண்டு வெளியில் ஓடி சென்று விட்டாள்.
“இப்படி தவிக்க விடுறாளே…?” என புலம்பினான் இன்பா.
தர்ஷினி அடுக்களைக்கு செல்ல லட்சுமியும் பத்மினியும் நின்றுகொண்டிருந்தனர்.
கிளம்புவதற்காக தர்ஷினி அறைக்கு செல்ல போக, “இரு அந்த பய வெளியில் வரட்டும்” என்றார் லட்சுமி.
“அவன் நான் உள்ள போனா திரும்ப வருவான்” என்றாள் தர்ஷினி.
“நீ உள்ள போய் கதவை தாள் போட்டுக்கோ” என கூறி சிரித்தார் லட்சுமி.
இன்பா வெளியே வர, தர்ஷினி உள்ளே சென்றாள். அவள் உள்ளே சென்றதைப் பார்த்தவன், மெல்ல எழுந்து அவனும் செல்ல பார்க்க, அவனது காதைப் பிடித்து திருகினார் லட்சுமி.
“போ… பின்கட்டில் இருக்கிற பாத்ரூமுக்கு போய் குளிச்சிட்டு கிளம்பு” என்றார்.
“என் டிரஸ் எல்லாம் உள்ள இருக்குமா” என்றான்.
“கவலைப்படாத… எல்லாம் நான் எடுத்து வச்சுட்டேன்” என்றார் லட்சுமி.
தன் அன்னையை முறைத்துக்கொண்டே குளிக்க சென்றான்.
பிரபஞ்சன் தனது வீட்டில் கோபமாக அமர்ந்து இருந்தார். தன் மனைவி பூரணியிடம், “அவனை ஒரு பெரிய லாயர் ஆக்கணும்னு நான் முயற்சி பண்ணினா… கொஞ்சம் கூட அவனுக்கு பொறுப்பு கிடையாது. இப்போ திடீர்னு இந்த கேஸ்ல இருந்து விலகிக்கிறதா சொல்றான். என்ன நினைச்சுகிட்டு இருக்கான் அவன்? வரட்டும் இன்னைக்கு” என கூறிக் கொண்டிருந்தார்.
“ம்ஹூம்… நான் காதல் மன்னனா மறினாலும் இவ மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி பண்றாளே… ரொம்ப கஷ்டம். ஆனா இஷ்டமான கஷ்டம்” என முணுமுணுத்து சிரித்துக் கொண்டே தன் மாமாவை காணச் சென்றான் இன்பா.